யெகோவாவின் ராஜ்யத்தைத் தைரியமாகப் பிரசங்கித்தல்!
“தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, . . . தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்தான்.”—அப்போஸ்தலர் 28:30, 31.
1, 2. தெய்வீக ஆதரவுக்கான என்ன அத்தாட்சியைப் பவுல் அப்போஸ்தலன் கொண்டிருந்தான்? என்ன முன்மாதிரியை அவன் வைத்தான்?
யெகோவா எல்லாச் சமயத்திலும் ராஜ்ய அறிவிப்பாளர்களைத் தாங்கிவருகிறார். இது அப்போஸ்தலனாகிய பவுலின் விஷயத்தில் எவ்வளவு உண்மையாயிருந்தது! தெய்வீக ஆதரவையுடையவனாய், அவன் ஆட்சியாளர்கள் முன்பு ஆஜரானான், வன்முறைக் கும்பல்களின் தாக்குதலைச் சகித்தான், மற்றும் கடவுளுடைய ராஜ்யத்தைத் தைரியமாக அறிவித்தான்.
2 ரோமில் ஒரு கைதியாக இருந்தபோதிலும் பவுல் “தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, . . . தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்தான்.” (அப்போஸ்தலர் 28:30, 31) இன்றுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு என்னே ஒரு நல்ல முன்மாதிரி! அப்போஸ்தலருடைய நடபடிகள் என்ற பைபிள் புத்தகத்தின் கடைசி அதிகாரங்களில் லூக்கா அறிக்கை செய்திருக்கும் பவுலின் ஊழியத்திலிருந்து நாம் அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம்.—20:1–28:31.
உடன் விசுவாசிகள் கட்டியெழுப்பப்பட்டனர்
3. துரோவாவில் என்ன நடந்தது? நம்முடைய நாளுக்கு என்ன இணைபொருத்தத்தைக் காணலாம்?
3 எபேசுவில் கலகம் அமர்ந்தபின், பவுல் தன்னுடைய மூன்றாவது மிஷனரி பயணத்தைத் தொடர்ந்தான். (20:1–12) என்றபோதிலும் சீரியாவுக்குப் பயணத்தை ஆரம்பிக்க இருக்கும்போது, யூதர்கள் தனக்கு எதிராக சூழ்ச்சித் திட்டத்தை வகுத்திருப்பது குறித்து அறிய வருகிறான். அதே கப்பலில் தாங்களும் ஏறி பவுலைக் கொல்லுவதற்கு திட்டமிட்டிருக்கக்கூடுமாதலால், அவன் மக்கெதோனியா வழியாய்ச் சென்றான். இன்று யெகோவாவின் சாட்சிகளின் மத்தியில் பயணக்கண்காணிகள் செய்வதுபோல உடன்விசுவாசிகளைப் பலப்படுத்த அவன் துரோவாவில் ஒரு வாரம் தங்கினான். அங்கிருந்து புறப்படுவதற்கு முன் அந்த இரவு பவுல் நள்ளிரவுவரைப் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்தான். ஒரு சன்னலில் உட்கார்ந்துகொண்டிருந்த ஐத்திகு அந்த நாள் வேலை காரணத்தால் அதிகக் களைப்பாக இருந்திருக்கவேண்டும். அவன் தூக்க மயக்கத்தில் சாய்ந்து மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தான், ஆனால் பவுல் அவனை மறுபடியும் உயிருக்குக் கொண்டுவந்தான். இது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்! வரும் புதிய உலகில் இலட்சக்கணக்கானோர் உயிர்த்தெழுப்பப்படும்போது உண்டாகும் மகிழ்ச்சியைக் குறித்து எண்ணிப்பாருங்கள்.—யோவான் 5:28, 29.
4. ஊழியத்தைக் குறித்ததில் பவுல் எபேசு பட்டணத்து மூப்பர்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன?
4 எருசலேமுக்கு பிரயாணமாய்ச் செல்லும் வழியில் பவுல் எபேசுவிலுள்ள மூப்பர்களை மிலேத்துவில் சந்தித்தான். (20:13–21) அவர்களுக்கு “வீடுகள்தோறும்” கற்பித்தது குறித்தும் “தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும்” தான் “யூதருக்கும் கிரேக்கருக்கும் (முழுமையாய், NW) சாட்சியாக அறிவித்தது” குறித்தும் ஞாபகப்படுத்தினான். கடைசியாக மூப்பர்களானவர்கள் மனந்திரும்பி விசுவாசமுடையவர்களானார்கள். இன்று யெகோவாவின் சாட்சிகள் செய்வது போல, அவர்கள் அவிசுவாசிகளுக்கு வீட்டுக்கு வீடு ஊழியத்தின் மூலம் தைரியமாய் ராஜ்யத்தைப் பிரசங்கிக்கும்படி அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களைப் பயிற்றுவித்துக்கொண்டிருந்தான்.
5. (எ) பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் விஷயத்தில் பவுல் எவ்விதத்தில் முன்மாதிரியாயிருந்தான்? (பி) ‘மந்தையைக் குறித்து கவனமாயிருக்கும்படி’யான ஆலோசனை மூப்பர்களுக்கு ஏன் அவசியமாயிருந்தது?
5 கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வதில் பவுல் ஒரு சிறந்த முன்மாதிரியாயிருந்தான். (20:22–30) “ஆவியிலே கட்டுண்டவனாய்” அல்லது அதன் வழிநடத்துதலைப் பின்பற்றும் கடமையை உணர்ந்தவனாய், எருசலேமில் கட்டுகளும் உபத்திரவங்களும் தனக்குக் காத்துக்கொண்டிருந்த போதிலும், அப்போஸ்தலன் அங்கு செல்கிறவனாயிருப்பான். அவன் உயிரை மதித்தான், ஆனால் கடவுளுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்ளுதல் தாமே நமக்கு இருப்பதைப் போன்றே அவனுக்கும் மிக முக்கியமான காரியமாயிருந்திருக்க வேண்டும். ‘பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதைக் குறித்தும் கவனமாயிருக்கும்படி,’ பவுல் மூப்பர்களை துரிதப்படுத்தினான். அவன் “போன பின்பு” (அநேகமாய் மரணத்துக்குப் பின்) “மந்தையை . . . கொடிதான ஓநாய்கள்” பரிவுடன் நடத்த மாட்டாது. இப்படிப்பட்டவர்கள் மூப்பர்களிலிருந்தே எழுவார்கள், மற்றும் பகுத்தறிவதில் தேர்ச்சிபெறாதவர்கள் அவர்களுடைய மாறுபாடான போதகங்களை ஏற்றுக்கொள்வார்கள்.—2 தெசலோனிக்கேயர் 2:6.
6. (எ) பவுல் ஏன் மூப்பர்களை கடவுளிடம் தைரியத்துடன் ஒப்படைக்க முடிந்தது? (பி) அப்போஸ்தலர் 20:35-லுள்ள நியமத்தைப் பவுல் எப்படி பின்பற்றினான்?
6 விசுவாசதுரோகத்திற்கு எதிராகத் தங்களைக் காத்துக்கொள்வதில் மூப்பர்கள் ஆவிக்குரியபிரகாரமாய் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டும். (20:31–38) பரலோக ராஜ்யத்தை, “பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் சுதந்திரத்தைப்”, பெற்றுக்கொள்வதற்குத் தங்களுக்கு உதவியாக அமையும் பரிசுத்தப்படுத்தும் வல்லமையுடைய எபிரெய வேத வசனங்களையும் இயேசுவின் போதனைகளையும் அப்போஸ்தலன் அவர்களுக்குக் கற்பித்தான். தனக்கும் தன்னுடைய கூட்டாளிகளுக்கும் தேவையானவற்றை அளித்திட வேலைசெய்ததன் மூலம், மூப்பர்கள் கடின உழைப்பாளிகளாக இருக்கவேண்டும் என்றும்கூட பவுல் உற்சாகப்படுத்தினான். (அப்போஸ்தலர் 18:1–3; 1 தெசலோனிக்கேயர் 2:9) அதுபோன்ற ஒரு வழியை நாமும் பின்பற்றி மற்றவர்கள் நித்திய ஜீவன் அடைவதற்கு உதவுகிறவர்களாயிருந்தால், “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே சந்தோஷம்,” என்ற இயேசுவின் வார்த்தைகளை நாம் போற்றுவோம். இந்தக் கூற்றின் கருத்து சுவிசேஷங்களில் காணப்படுகின்றன, ஆனால் பவுல் மட்டுமே இதை மேற்கோள் காண்பிக்கிறான், ஒருவேளை இதை அவன் வாய்வழியாய் அல்லது ஆவியால் ஏவப்பட்டவனாய் பெற்றிருக்கக்கூடும். பவுல் இருந்தது போலவே நாமும் சுய தியாக உணர்வுள்ளவர்களாயிருந்தால் மிகுந்த மகிழ்ச்சியைக் கண்டடையலாம். ஏன், அவன் அந்தளவுக்குத் தன்னை அர்ப்பணித்தவனாயிருந்ததால், அவனுடைய பிரிவு எபேசு மூப்பர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது!
யெகோவாவின் சித்தம் நிறைவேறட்டும்
7. கடவுளுடைய சித்தத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதில் பவுல் எப்படி ஒரு முன்மாதிரியாக இருந்தான்?
7 பவுலின் மூன்றாவது மிஷனரி பயணம் முடிவுக்கு வருகையில் (சுமார் பொ.ச. 56), கடவுளுடைய சித்தத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதில் அவன் நல்ல முன்மாதிரியை வைத்தான். (21:1–14) செசரியாவில் அவனும் அவனுடைய தோழர்களும் பிலிப்புடன் தங்கினார்கள். கன்னிகளாயிருந்த அவனுடைய நான்கு பெண்பிள்ளைகள் பரிசுத்த ஆவியால் சம்பவங்களை முன்னுரைத்தார்கள், “தீர்க்கதரிசனஞ்சொல்லி” வந்தார்கள். அங்கே அகபு என்னும் கிறிஸ்தவ தீர்க்கதரிசி தன்னுடைய கைகளையும் கால்களையும் பவுலின் கச்சையைக்கொண்டு கட்டி, யூதர்கள் அதையுடையவனை எருசலேமில் கட்டி அவனைப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று ஆவியால் ஏவப்பட்டுக் கூறினான். “எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்,” என்றான் பவுல். “யெகோவாவுடைய சித்தம் நடக்கட்டும்,” என்று சீஷர்கள் தங்களைத் திடப்படுத்திக்கொண்டார்கள்.
8. நல்ல ஆலோசனையை ஏற்றுக்கொள்வது நமக்குக் கடினமாயிருப்பதாகக் கண்டால், நாம் எதை நினைவுபடுத்திக்கொள்ளலாம்?
8 கடவுள் தம்முடைய ஊழியத்தின் மூலம் புறஜாதிகள் மத்தியில் என்ன செய்தார் என்று பவுல் எருசலேமிலுள்ள மூப்பர்களிடம் சொன்னான். (21:15–26) நல்ல ஆலோசனையை எடுத்துக்கொள்வது நமக்குக் கடினமாயிருப்பதாக நாம் கண்டால், பவுல் அவற்றை எவ்விதம் ஏற்றான் என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ளலாம். புறஜாதியாரின் நாடுகளிலிருந்த யூதருக்கு அவன் “மோசேயைவிட்டுப் பிரிந்துபோகும்படி” போதித்துக்கொண்டில்லை என்பதை நிரூபிக்க சுத்திகரிப்பு செய்துகொள்ளும்படியும், தனக்கும் மற்ற நான்கு மனிதருக்குமான செலவுகளைத் தானே பார்த்துக்கொள்ளும்படியும் சொன்ன மூப்பர்களின் ஆலோசனைக்குச் செவிகொடுத்தான். இயேசுவின் மரணம் நியாயப்பிரமாணத்தை வழியிலிருந்து விலக்கியபோதிலும், பிரார்த்தனை சம்பந்தப்பட்ட அதன் அம்சங்களைப் பின்பற்றுவதில் பவுல் தவறுசெய்யவில்லை.—ரோமர் 7:12–14.
கலகக்கும்பலின் தாக்குதலின்போதும் ஊக்கமிழக்கவில்லை
9. கலகக்கும்பலின் வன்முறைச் செயல்களைக் குறித்ததில், பவுலின் அனுபவத்திற்கும் இன்றைய யெகோவாவின் சாட்சிகளின் அனுபவத்திற்கும் இடையே என்ன இணைபொருத்தம் இருக்கிறது?
9 கலகக்கும்பலின் வன்முறைத் தாக்குதல் மத்தியிலும் யெகோவாவின் சாட்சிகள் கடவுளுக்குத் தங்கள் உத்தமத்தைக் காத்துவந்திருக்கின்றனர். (உதாரணமாக, 1975 யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தர புத்தகம், பக்கங்கள் 180–90 பார்க்கவும்.) அதுபோலவே சிறிய ஆசியாவிலுள்ள யூதர்கள் பவுலுக்கு எதிராகக் கலகக்கும்பல்களின் தாக்குதலைத் தூண்டினர். (21:27–40) எபேசு பட்டணத்தானாகிய துரோப்பீமுவை உடன் பார்த்த அவர்கள், கிரேக்கரை ஆலயத்திற்குள் கூட்டிச்சென்று அதை தீட்டுப்படுத்தியதாகப் பொய்யாய்க் குற்றஞ்சாட்டினர். பவுல் கொல்லப்படும் நிலையிலிருக்கும்போது, ரோம படைத்துறை அலுவலர் கிலவுதீயு லீசியாவும் அவனுடைய ஆட்களும் அந்தக் கலகக் கும்பலை அடக்கினர்! முன்னறிவிக்கப்பட்டபடி (ஆனால் யூதர்களால் உண்டாக்கப்பட்டது), லீசியா பவுலைக் காவலில் வைத்தான். (அப்போஸ்தலர் 21:11) தேவாலய மன்றத்தையொட்டி அமைந்திருந்த போர்ச்சேவகர் குடியிருப்புக்குக் கொண்டுசெல்லப்படுவதற்கு இருந்தபோது, பவுல் ஒரு தேசவிரோதி அல்ல, ஆனால் ஆலயப்பகுதிக்குள் அனுமதிக்கப்படும் ஒரு யூதன் என்பதை அறியவந்தான். பேசுவதற்கு அனுமதி கேட்டு, பவுல் கூடியிருந்த மக்களிடம் எபிரெயு மொழியில் பேசினான்.
10. பவுலின் பேச்சுக்கு எருசலேமிலுள்ள யூதர்கள் எவ்விதம் பிரதிபலித்தார்கள்? அவன் ஏன் கசையடிக்கு உட்படுத்தப்படவில்லை?
10 பவுல் தைரியமாகச் சாட்சி கொடுத்தான். (22:1–30) தான் ஒரு யூதன் என்றும், வெகுவாக மதிக்கப்பட்ட கமாலியேலால் போதக்கப்பட்டவன் என்றும் தன்னை அறிமுகப்படுத்தினான். ‘அந்த மார்க்கத்தினரை’ துன்புறுத்துவதற்காகத் தமஸ்குவுக்குப் போகும் வழியிலே, மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவைப் பார்த்து பார்வை இழந்தான் என்றும், ஆனால் அனனியா தனக்கு மீண்டும் பார்வைக்குக் கொண்டுவந்தான் என்றும் அப்போஸ்தலன் விவரித்தான். பின்பு ஆண்டவர் பவுலிடம், “நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன்,” என்றார். அந்த வார்த்தைகள் காட்டில் தீப்பொறி போன்றிருந்தது. பவுல் வாழ்வதற்குத் தகுதியானவன் அல்ல என்று கூச்சலிட்டு, ஜனக்கூட்டத்தார் கோபத்தில் தங்கள் மேலங்கிகளை எறிந்து, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருந்தார்கள். எனவே யூதர்கள் ஏன் அவனுக்கு விரோதமாய் இருக்கிறார்கள் என்பதை அவனை அடித்து விசாரிக்கும்படி லீசியா பவுலைப் போர்வீரர் குடியிருப்புக்குக் கொண்டுபோகச் செய்தான். ‘நியாயம் விசாரிக்கப்படாத ஒரு ரோமனை அடிக்கிறது நியாயமா?’ என்று பவுல் கேட்டபோது, (முடிச்சுகள் அல்லது உலோகம் அல்லது எலும்பு பதிக்கப்பட்ட தோல் வாரினால் கொடுக்கப்படும்) கசையடி தவிர்க்கப்பட்டது. பவுல் ஒரு ரோமக் குடிமகன் என்பதை அறியவந்த லீசியா அச்சம்கொண்டு, அவன் ஏன் யூதர்களால் குற்றஞ்சாட்டப்படுகிறான் என்பதை அறிந்துகொள்ள ஆலோசனைச் சங்கத்திற்கு முன் கொண்டுபோனான்.
11. பவுல் எந்தவிதத்தில் ஒரு பரிசேயனாக இருந்தான்?
11 ஆலோசனைச் சங்கத்திற்குமுன் “நல்மனச்சாட்சியோடே தேவனுக்கு முன்பாக நடந்துவந்தேன்” என்று சொல்லி தன் வாதத்தை ஆரம்பித்தபோது, அவனை அடிக்கும்படி பிரதான ஆசாரியனாகிய அனனியா உத்தரவிட்டான். (23:1–10) “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்,” என்றான் பவுல். அப்பொழுது சிலர் “பிரதான ஆசாரியனை வைகிறாயா?” என்றனர். பார்வைக் குறைவினால் பவுல் அனனியாவை அடையாளங்கண்டிருக்கமுடியாது. ஆனால் அந்த ஆலோசனைச் சங்கம் பரிசேயர், சதுசேயர் ஆகியவர்களடங்கியதைக் கவனித்த பவுல், ‘நான் பரிசேயன், உயிர்த்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக் குறித்து நான் நியாயம்விசாரிக்கப்படுகிறேன்,’ என்றான். இதனால் ஆலோசனைச்சங்கம் இரண்டாகப் பிரிந்தது, ஏனென்றால் பரிசேயர்கள் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டிருக்க, சதுசேயர்களோ அதில் நம்பிக்கை கொள்ளவில்லை. கலகம் அதிகமானதால் லீசியா அப்போஸ்தலனை அவர்களிடமிருந்து பத்திரமாகக் கூட்டிச்செல்லவேண்டியதாயிருந்தது.
12. எருசலேமில் தன்னுடைய உயிரைக் கொல்லுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு சதித்திட்டத்துக்குப் பலியாவதிலிருந்து பவுல் எப்படி தப்பினான்?
12 அடுத்து பவுல் தன்னைக் கொல்லுவதற்குத் தீட்டப்பட்ட சதித்திட்டத்திலிருந்து தப்பினான். (23:11–35) அவனைக் கொலைசெய்யும்வரை புசிப்பதுமில்லை, குடிப்பதுமில்லை என்று நாற்பது யூதர்கள் சபதம் எடுத்தார்கள். பவுலின் உடன்பிறந்தார் மகன் இதை அவனிடமும் லீசியாவிடமும் அறிவித்தான். அப்போஸ்தலன் போர்சேவகரின் காவலோடு யூதேயாவின் ரோம நிர்வாகத் தலைநகராகிய செசரியாவிலிருந்த தேசாதிபதி அந்தோனியஸ் பேலிக்ஸிடம் கொண்டுபோகப்பட்டான். பவுலை விசாரிப்பதாக வாக்களித்த பின்பு, பேலிக்ஸ் அவனை மகா ஏரோதின் மெய்க்காவலர் அரண்மனையில், தேசாதிபதியின் தலைமையகத்தில் காவலில் வைத்தான்.
அதிபதிகளின் முன்னிலையில் தைரியம்
13. பவுல் எதைக்குறித்துப் பேலிக்ஸினிடம் சாட்சி பகர்ந்தான்? விளைவு என்னவாயிருந்தது?
13 அப்போஸ்தலன் தன்மீது கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை உடனே மறுத்து பேசுபவனாகப் பேலிக்ஸிடம் தைரியமாகச் சாட்சி கொடுத்தான். (24:1–27) குற்றஞ்சாட்டிய யூதர்களுக்கு முன்பாக, தான் ஒரு கலகக் கும்பலைக் கூட்டவில்லை என்று பவுல் காண்பித்தான். நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகள் சொன்னவற்றிலும் தான் நம்பிக்கைக் கொண்டிருப்பதாகவும், “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதை” எதிர்நோக்குவதாயும் சொன்னான். பவுல் எருசலேமுக்கு “தர்மப் பணத்தோடு” (இயேசுவின் சீஷர்களுக்கு துன்புறுத்தலின் காரணத்தால் வறுமை ஏற்பட்டிருக்கக்கூடும், அதற்காகக் கொடுக்கப்பட்ட நன்கொடைகள்) சென்றான், மற்றும் அவன் மதசம்பந்தமாகச் சுத்திகரிக்கப்பட்டிருந்தான். பேலிக்ஸ் தீர்ப்பு வழங்குவதைத் தாமதித்தபோதிலும், பின்னர் பவுல் அவனிடமும் அவனுடைய மனைவி துருசில்லாவிடமும் (ஏரோது அகிரிப்பா I-ன் மகள்) கிறிஸ்துவையும், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும் பற்றி பிரசங்கித்தான். இப்படிப்பட்ட பேச்சைக் கேட்டு பயந்து பேலிக்ஸ் பவுலை அனுப்பிவிட்டான். என்றபோதிலும் அப்போஸ்தலனை அநேகந்தரம் அழைத்து, தனக்கு இலஞ்சம் கொடுப்பான் என்று வீணாக நம்பியிருந்தான். பவுல் குற்றமற்றவன் என்பது பேலிக்ஸுக்குத் தெரிந்திருந்தபோதிலும், யூதர்களுடைய தயவைப் பெற்றிடுவதற்காகப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான். இரண்டு ஆண்டுகள் கடந்திட, பேலிக்ஸுக்குப் பின்னர் பொர்கியு பெஸ்து அதிகாரத்துக்கு வந்தான்.
14. பெஸ்துவின் முன்னிலையில் தோன்றிய பவுல் சட்டப்பூர்வமான என்ன ஏற்பாட்டை அனுகூலப்படுத்திக்கொண்டான்? இதில் என்ன இணைபொருத்தத்தைக் காண்கிறீர்கள்?
14 பவுல் பெஸ்துவுக்கு முன்பாகவுங்கூட தைரியமாய்ச் சாட்சி கொடுத்தான். (25:1–12) அப்போஸ்தலன் மரண தண்டனைக்குப் பாத்திரவானாயிருந்தால், அவன் சாக்குப்போக்குச் சொல்லமாட்டான், ஆனால் தயவு தேடி அவனை எந்த ஒரு மனிதனும் யூதரிடம் ஒப்படைப்பதற்கில்லை. ரோம குடிமகனாக (அந்தச் சமயத்தில் நீரோ மன்னனுக்கு முன்னால்) ரோமில் விசாரணைச் செய்யப்படுவதற்கான உரிமையை அனுகூலப்படுத்திக்கொள்கிறவனாய், “நான் இராயருக்கு அபயமிடுகிறேன்!” என்றான் பவுல். மேல் முறையீடுக்கான அவனுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது, முன்னுரைக்கப்பட்ட விதமாகவே பவுல் “ரோமாவிலும் சாட்சிசொல்ல வேண்டும்.” (அப்போஸ்தலர் 23:11, தி.மொ.) யெகோவாவின் சாட்சிகளுங்கூட ‘தற்காத்து நற்செய்தியைச் சட்டப்பூர்வமாய் நிறுவுவதற்கான’ ஏற்பாடுகளை அனுகூலப்படுத்திக்கொள்கின்றனர்.—பிலிப்பியர் 1:7.
15. (எ) பவுல் அகிரிப்பா அரசனுக்கும் இராயனுக்கும் முன்பாகத் தோன்றிய போது என்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது? (பி) சவுல் எப்படி ‘முள்ளில் உதைக்கிறவனா’யிருந்தான்?
15 வடக்கு யூதேயாவின் ராஜா ஏரோது அகிரிப்பா II (தான் முறைதவறிய பாலுறவு கொண்ட) தன்னுடைய சகோதரி பெர்னீக்கேயாளுடன்கூட செசரியாவிலிருந்த பெஸ்துவைப் பார்க்க வந்தபோது பவுல் பேசுவதைக் கேட்டான். (25:13–26:23) அகிரிப்பாவுக்கும் இராயனுக்கும் சாட்சி கொடுத்ததன்மூலம் அவன் ராஜாக்களுக்குக் கர்த்தருடைய நாமத்தை அறிவிப்பான் என்ற தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினான். (அப்போஸ்தலர் 9:15) தமஸ்குவுக்குப் போகும் வழியில் என்ன நடந்தது என்பதை அகிரிப்பாவுக்கு எடுத்துக்கூறுகிறவனாய், பவுல் “முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்,” என்று இயேசு சொன்னதைக் குறிப்பிட்டான். தாற்றுக்கோலின் முள் குத்தல்களுக்கு எதிர்த்து நிற்கும் ஒரு முரட்டுக் காளை தன்னைக் காயப்படுத்திக்கொள்வதுபோல, கடவுளுடைய ஆதரவைக் கொண்டிருந்த இயேசுவைப் பின்பற்றுவோருக்கு எதிராகப் போராடுவதில் சவுல் தன்னையே காயப்படுத்திக்கொண்டான்.
16. பெஸ்துவும் அகிரிப்பாவும் பவுல் கொடுத்த சாட்சிக்கு எவ்விதம் பிரதிபலித்தார்கள்?
16 பெஸ்துவும் அகிரிப்பாவும் எவ்விதம் பிரதிபலித்தார்கள்? (26:24–32) உயிர்த்தெழுதலைப் புரிந்துகொள்ள முடியாதவனாயும், பவுலின் உறுதியான நம்பிக்கையைக் குறித்து ஆச்சரியப்படுகிறவனாயும், பெஸ்து சொன்னான்: “அதிகக் கல்வி உனக்குப் பைத்தியமுண்டாக்குகிறது.” அதுபோலேவே இன்றும் சிலர் யெகோவாவின் சாட்சிகளைப் பயித்தியக்காரர்கள் என்று சொல்லுகிறார்கள்; “சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுவதில்” பவுலைப்போல் இருக்கிறார்கள். விசாரணையை முடித்த அகிரிப்பா, “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய்,” என்றான், ஆனால் அவன் இராயனுக்கு மேல் மறுவிசாரணைக்கு விண்ணப்பிக்காமல் இருந்திருப்பானானால் அவன் விடுவிக்கப்பட்டிருப்பான் என்றான்.
கடல் அபாயங்கள்
17. பவுலின் ரோமாபுரிக் கடற் பயணத்தில் அவன் எதிர்ப்பட்ட ஆபத்துகளை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்?
17 ரோம் பயணம் பவுலைக் “கடல் அபாயங்களுக்கு” உட்படுத்தியது. (2 கொரிந்தியர் 11:24–27) யூலியு என்ற பெயர்கொண்ட ஓர் இராணுவ அதிகாரி செசரியாவிலிருந்து ரோமுக்குப் பயணப்படும் கைதிகளுக்குப் பொறுப்பாளனாயிருந்தான். (27:1–26) அவர்களுடைய கப்பல் சீதோனை அடைந்தபோது, தன்னை ஆவிக்குரிய விதத்தில் ஊக்குவித்த விசுவாசிகளைச் சந்திக்கப் பவுல் அனுமதிக்கப்பட்டான். (3 யோவான் 14-ஐ ஒப்பிடவும்.) யூலியு அந்தக் கைதிகளை சிறிய ஆசியாவிலுள்ள மீறாப் பட்டணத்தில் இத்தாலியாவுக்குச் செல்லும் தானியக்கப்பலில் ஏற்றினான். கடுமையான காற்று இருந்த போதிலும் அவர்கள் லீசியா என்ற கிரேத்தாப் பட்டணத்திற்கு அண்மையில் அமைந்த நல்ல துறைமுகத்தை அடைந்தார்கள். பேனிக்ஸ் என்ற இடத்திற்குச் செல்லப் புறப்பட்ட பின்பு வடகிழக்குச் சூறைக்காற்று கப்பலைத் தாக்கியது. வட ஆப்பிரிக்காவுக்கு அப்பாலமைந்த சிர்திசில் (சொரிமணலில்) தரைதட்டிவிடும் ஆபத்துக்கு அஞ்சி மாலுமிகள் “பாய்களை இறக்கி”னார்கள். கட்டுகள் பிரிந்துவிடாதிருப்பதற்காகக் கப்பலின் கட்டுமானங்களைச் சுற்றி கட்டினார்கள். மறுநாளுங்கூட சூறைக்காற்று கடுமையாக அடிக்க, கப்பலிலிருந்த சரக்குகளைக் கடலில் எறிந்து கப்பலில் பளுவைக் குறைத்தார்கள். மூன்றாவது நாள் அவர்கள் கப்பலின் தளவாடங்களை (பாய்களையும் கூடுதலாயிருந்த பாய்மரத்தையும்) எறிந்தார்கள். நம்பிக்கை இழக்க நேர்ந்த போது, தேவ தூதரில் ஒருவன் பவுலுக்குக் காட்சியளித்து, அவன் பயப்படவேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் பவுல் இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டியிருக்கிறது என்று கூறினான். பயணிகள் அனைவரும் ஒரு தீவில் கரைசேருவார்கள் என்று பவுல் சொன்னது அவர்களுக்கு என்னே ஒரு துயர்த்தீர்ப்பாயிருந்தது!
18. கடைசியில் பவுலுக்கும் அவனுடைய உடன் கடற் பயணிகளுக்கும் என்ன நடந்தது?
18 கப்பற்பயணிகள் உயிர்தப்பினார்கள். (27:27–44) பதினான்காவது நாள் நள்ளிரவில் மாலுமிகள் கரைக்கு அண்மையில் இருப்பதாய் உணர்ந்தார்கள். சப்தங்கள் அதை உறுதிசெய்தது. கப்பல் பாறைகளில் மோதி சேதமடையும் ஆபத்தைத் தப்பிட நங்கூரங்களை இறக்கினார்கள். பவுல் அளித்த ஊக்கத்தால் எல்லா 276 பேரும் உணவருந்தினார்கள். பின்பு கோதுமையைக் கடலிலே எறிந்து கப்பலை இலகுவாக்கினார்கள். பொழுது விடிந்தபோது, மாலுமிகள் நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்று முகமாய் விரித்தார்கள். இருபுறமும் கடல் மோதிய ஓர் இடத்திலே கப்பலைத் தட்டவைத்தார்கள், பின்னணியம் உடைய ஆரம்பித்தது. ஆனால் எல்லாரும் பத்திரமாகக் கரைசேர்ந்தார்கள்.
19. மெலித்தா தீவில் பவுலுக்கு என்ன நேர்ந்தது? அங்கிருந்த மற்றவர்களுக்கு அவன் என்ன செய்தான்?
19 தண்ணீரில் ஊறிய நிலையில் களைப்புற்றவர்களாய் அந்தக் கப்பற்சேதத்திற்குப் பலியான பயணிகள் தங்களை மெலித்தா தீவில் கண்டார்கள். அந்தத் தீவினர் அவர்களுக்குப் “பாராட்டின அன்பு கொஞ்சமல்ல.” (28:1–16) பவுல் நெருப்பின்மேல் விறகுகளை வைத்தபோது, ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. (மெலித்தா தீவில் இப்பொழுது விஷப்பாம்புகள் கிடையாது, ஆனால் இது ஒரு “விஷப் பிராணியாக” இருந்தது.) பவுல் ஒரு கொலைக்காரன், எனவே “பழியானது” இவனைப் பிழைக்கவொட்டாது என்று மிலேத்தியர் எண்ணினார்கள், ஆனால் அவன் செத்து விழாமலிருந்ததை அல்லது வீக்கங்காணாமல் இருந்ததைப் பார்த்த அவர்கள் அவனை ஒரு கடவுள் என்றார்கள். பின்னர் பவுல் மெலித்தா தீவுக்கு முதலாளியாகிய புபிலியுவினுடைய தகப்பன் உட்பட பலரைச் சுகப்படுத்தினான். மூன்று மாதங்கள் கழித்து, பவுலும் லூக்காவும் அரிஸ்தர்க்கும் “மிதுனம்” (கேஸ்டர் மற்றும் போலக்ஸ், மாலுமிகளுக்குத் தயவாய் இருப்பதாகக் கருதப்படும் இரட்டைத் தெய்வங்கள்) சின்னமுடைய ஒரு கப்பலில் அங்கிருந்து புறப்பட்டார்கள். புத்தேயோலி பட்டணத்தை அடைந்ததும் யூலியு தன் ஆட்களுடன் பயணத்தைத் தொடர்ந்தான். பவுல் கடவுளுக்கு நன்றி செலுத்தினான், மற்றும் ரோமாபுரியிலிருந்து வந்த சகோதரர்கள் அப்பியு சாலைவழியே அமைந்த அப்பியுபுரத்திலும் மூன்று சத்திரத்திலும் தங்களைச் சந்தித்தபோது தைரியங்கொண்டான். கடைசியாக, ரோமில் பவுல் ஒரு போர்ச்சேவகனுடைய காவலில் தனித்துக் குடியிருக்கும்படி அனுமதிக்கப்பட்டான்.
யெகோவாவின் ராஜ்யத்தைத் தொடர்ந்து பிரசங்கியுங்கள்!
20. ரோமில் தங்கியிருந்த தன்னுடைய வாடகைவீட்டில் பவுல் என்ன வேலையில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டுவந்தான்?
20 ரோமிலுள்ள அவனுடைய வாடகைவீட்டில், பவுல் தைரியமாக யெகோவாவின் ராஜ்யத்தைப் பிரசங்கித்தான். (28:17–31) அவன் பிரதானமான யூத மனிதரிடம் பின்ருமாறு சொன்னான்: “இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன்.” அந்த நம்பிக்கை மேசியாவை ஏற்றுக்கொள்ளுவதை உட்படுத்தியது, அதற்காக நாம் பாடுபடவும் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். (பிலிப்பியர் 1:29) யூதர்களில் பெரும்பான்மையினர் நம்பாவிட்டாலும், அநேக புறஜாதியாரும் யூதரில் மீதியானோரும் சரியான மனநிலையைக் கொண்டிருந்தார்கள். (ஏசாயா 6:9, 10) இரண்டு வருடங்களுக்குப் (ஏறக்குறைய பொ.ச. 59–61) பவுல் தன்னிடம் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, “மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.”
21. தன்னுடைய பூமிக்குரிய வாழ்வில் பவுல் கடைசிவரைக்கும் என்ன முன்மாதிரியை வைத்தான்?
21 நீரோ மன்னன் பவுலைக் குற்றமற்றவன் என்று தீர்ப்பளித்து அவனை விடுவித்திருக்கவேண்டும். அதற்குப் பின்பு பவுல் தீமோத்தேயுவுடனும் தீத்துவுடனும் சேர்ந்து தன் வேலையை மீண்டும் தொடங்கினான். என்றபோதிலும், அவன் மறுபடியும் ரோமில் (ஏறக்குறைய பொ.ச. 65-ல்) கைதுசெய்யப்பட்டான், அநேகமாக நீரோ மன்னனின் கைகளில் இரத்தச்சாட்சியாக மரித்திருக்கவேண்டும். (2 தீமோத்தேயு 4:6–8) ஆனால், கடைசிவரைக்கும் பவுல் தைரியமுள்ள ராஜ்ய பிரசங்கியாக ஒரு நல்ல முன்மாதிரி வைத்தான். இந்தக் கடைசி நாட்களில் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் அனைவரும் அதே ஆவியுடன் யெகோவாவின் ராஜ்யத்தைப் பிரசங்கிப்போமாக! (w90 6/15)
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
◻ எபேசு பட்டணத்து மூப்பர்களுக்குப் பவுல் என்ன ஊழிய பயிற்சியை அளித்தான்?
◻ கடவுளுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்பதில் பவுல் எப்படி ஒரு முன்மாதிரியாயிருந்தான்?
◻ கலகக்கும்பலின் வன்முறைச் செயல்களைக் குறித்ததில் பவுலின் அனுபவங்களுக்கும் இன்றைய யெகோவாவின் சாட்சிகளின் அனுபவங்களுக்கும் இடையே ஒத்திருக்கும் காரியங்கள் என்ன?
◻ தேசாதிபதி பெஸ்துவின் முன்னிலையில் இருக்கும்போது, பவுல் என்ன சட்டப்பூர்வமான ஏற்பாட்டை அனுகூலப்படுத்திக்கொண்டான்? இதற்கு இன்று என்ன இணைபொருத்தம் இருக்கிறது?
◻ ரோமில் தங்கியிருந்த தன்னுடைய வாடகைவீட்டில் பவுல் என்ன வேலையில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டுவந்தான்? இப்படியாக என்ன முன்மாதிரியை வைத்தான்?