உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 12/15 பக். 21-24
  • “இராயருக்கு அபயமிடுகிறேன்”!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “இராயருக்கு அபயமிடுகிறேன்”!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கிளாடியஸ் லைஸியஸின் சிறைக்காவலில்
  • தேசாதிபதியாகிய ஃபிலிக்ஸ் தீர்ப்பளிக்க தவறுகிறார்
  • பொர்க்கியு பெஸ்துவின்கீழ் ஏற்பட்ட திருப்புகட்டம்
  • நீதிமன்ற வழக்கின் முடிவு
  • யெகோவாவின் ராஜ்யத்தைத் தைரியமாகப் பிரசங்கித்தல்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • “ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!”
    கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
  • “தைரியமாயிரு!”
    கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
  • ‘திடன்கொண்டு’ முழுமையாய் சாட்சிகொடுத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 12/15 பக். 21-24

“இராயருக்கு அபயமிடுகிறேன்”!

தற்காப்பற்ற ஒருவரை கலகக்கார கும்பலை சேர்ந்தவர்கள் பிடித்து அடித்துநொறுக்க ஆரம்பித்தனர். அவர் மரணத்திற்கு பாத்திரமானவர் என நினைத்தனர். அவர் கொல்லப்படவிருந்த தறுவாயில் போர்ச் சேவகர்கள் ஓடிவந்து பெரும் பாடுபட்டு அவரை அந்தக் கொலைவெறி கும்பலின் கைகளிலிருந்து மீட்டுச் சென்றனர். அவர்தான் அப்போஸ்தலன் பவுல். அவரைத் தாக்கியவர்கள் யூதர்கள். பவுல் பிரசங்கித்ததை அவர்கள் கடுமையாய் எதிர்த்தனர், ஆலயத்தை தீட்டுப்படுத்தியதாக அவர்மீது குற்றம் சாட்டினர். அவரை மீட்டு சென்றவர்களோ ரோமர்கள்; தங்கள் படைத்தலைவனாகிய கிளாடியஸ் லைஸியஸின் ஆணையின்படி அப்படி செய்தனர். இந்தக் குழப்பமான சூழ்நிலையில் ஒரு குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்டு பவுல் கைது செய்யப்பட்டார்.

இப்படி கைது செய்யப்படுவதில் தொடங்கின வழக்கை அப்போஸ்தலருடைய நடபடிகளின் கடைசி ஏழு அதிகாரங்கள் சுருக்கமாக விவரிக்கின்றன. பவுலின் சட்டரீதியான பின்னணி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், அவருடைய பிரதிவாதம், ரோமர்களின் தண்டிக்கும் முறைகள் ஆகியவற்றை நாம் புரிந்துகொள்வது இந்த அதிகாரங்களை இன்னும் நன்கு புரிந்துகொள்ள நமக்கு வழிசெய்கிறது.

கிளாடியஸ் லைஸியஸின் சிறைக்காவலில்

எருசலேமில் ஒழுங்கைக் காப்பது கிளாடியஸ் லைஸியஸின் பணிகளில் ஒன்று. அவருடைய மேலதிகாரியான யூதேயாவின் ரோம ஆளுனர் செசரியாவில் தங்கியிருந்தார். பவுலின் விஷயத்தில் லைஸியஸ் எடுத்த நடவடிக்கை, வன்முறையிலிருந்து ஒருவரை பாதுகாத்ததாகவும், அமைதிக்குப் பங்கம் விளைவித்த ஒருவரை காவலில் வைத்ததாகவும் புரிந்துகொள்ளப்படலாம். யூதர்கள் நடந்துகொண்ட விதத்தைக் கண்ட லைஸியஸ் தன் கைதியை அன்டோனியா அரணிலிருந்த போர்ச் சேவகரின் குடியிருப்புகளுக்கு மாற்றினார்.​—⁠அப்போஸ்தலர் 21:⁠27–22:⁠24.

பவுல் என்ன செய்தார் என்பதை லைஸியஸ் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அந்தக் குழப்பமான சூழலில் அவரால் அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகையால் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக, ‘அவர்கள் பவுலுக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்தரத்தை அறியும்படிக்கு அவரைச் சவுக்கால் அடித்து விசாரிப்பதற்கு’ கட்டளையிட்டார். (அப்போஸ்தலர் 22:24) இது, குற்றவாளிகளிடம், அடிமைகளிடம், இன்னும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க பொதுவாக கையாளப்பட்ட முறை. அதற்கு சிறிய சவுக்கு (ஃப்ளாக்ரம்) பயனுள்ளதாக இருந்திருக்கலாம், ஆனால் அது பயங்கரமான சாதனம். சில சவுக்குகளில், சங்கிலிகளில் பிணைக்கப்பட்ட உலோக குண்டுகள் தொங்கிக் கொண்டிருந்தன. மற்றவற்றில் கூர்மையான எலும்புத் துண்டுகளும் உலோகத் துண்டுகளும் தோல் வாரில் மாறி மாறி இணைத்து முறுக்கப்பட்டிருந்தன. இவை சதையை வரிவரியாக கிழித்து, கடும் வேதனைமிக்க காயங்களை ஏற்படுத்தின.

அப்படிப்பட்ட சமயத்தில், பவுல் தான் ஒரு ரோம குடிமகன் என்பதை தெரிவித்தார். குற்றவாளியாக தீர்க்கப்படாத ரோமனுக்கு சவுக்கடி கொடுக்கக் கூடாது, ஆகையால் பவுல் தன் உரிமைகளுக்காக குரல்கொடுத்தது உடனடியாக பலனளித்தது. ஒரு ரோம குடிமகனை தவறாக நடத்தினால் அல்லது தண்டித்தால் ரோம அதிகாரியின் பதவியே பறிபோகலாம். ஆகவேதான் அப்போதிருந்து பவுல் ஒரு விசேஷ கைதியைப் போல் நடத்தப்பட்டார்; இவ்வாறு, மற்றவர்கள் அவரை வந்து சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.​—⁠அப்போஸ்தலர் 22:​25-​29; 23:​16, 17.

அந்தக் குற்றச்சாட்டுகளைப் பற்றி லைஸியஸ் நிச்சயமற்றவராக இருந்ததால் அந்த அமளிக்கான காரணத்தை அறிய பவுலை ஆலோசனை சங்கத்தில் [சன்ஹெத்ரீனில்] ஆஜர்படுத்தினார். ஆனால் உயிர்த்தெழுதலைப் பற்றிய விவாதத்தின் அடிப்படையில் தான் நியாயந்தீர்க்கப்படுவதாக பவுல் குறிப்பிட்டபோது அது வாக்குவாதத்தைத் தூண்டிவிட்டது. இந்தக் கலகம் முற்றியதால் பவுலை குதறிவிடுவார்களோ என பயந்த லைஸியஸ், மறுபடியும் அவரை அந்தக் கோபாவேசமிக்க யூதரிடமிருந்து மீட்க வேண்டியதாயிற்று.​—⁠அப்போஸ்தலர் 22:⁠30–23:10.

ஒரு ரோம குடிமகனின் மரணத்திற்கு தான் காரணமாயிருக்க லைஸியஸ் விரும்பவில்லை. கொல்வதற்கு சதி நடப்பதை அறிந்தபோது, தன்னுடைய கைதியை உடனடியாக செசரியாவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். கைதிகளை அனுப்பி வைக்கையில், அந்த வழக்கைப் பற்றிய விவர அறிக்கைகளையும் சேர்த்து நீதிமன்ற மேலதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்பது சட்ட விதிமுறை. அந்த விவர அறிக்கைகளில், ஆரம்ப விசாரணைகளின் தீர்ப்புகளும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான காரணங்களும், விசாரணை நடத்தியவரின் கருத்தும் இடம் பெறும். பவுல், ‘அவர்களுடைய வேதத்திற்கடுத்த விஷயங்களைக் குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டவனென்று விளங்கினதேயல்லாமல், மரணத்துக்காவது விலங்குக்காவது ஏற்ற குற்றம் யாதொன்றும் இவரிடத்தில் இல்லை’ என்று லைஸியஸ் அறிக்கை செய்தார்; பவுல்மீது குற்றஞ்சாட்டியவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை தேசாதிபதியாகிய ஃபிலிக்ஸிடம் முறையிடும்படி கட்டளையிட்டார்.​—⁠அப்போஸ்தலர் 23:29, 30.

தேசாதிபதியாகிய ஃபிலிக்ஸ் தீர்ப்பளிக்க தவறுகிறார்

மாகாண ஆட்சி பொறுப்பு ஃபிலிக்ஸின் கட்டுப்பாட்டின் கீழும் அதிகாரத்தின் கீழும் இருந்தது. அவர் விருப்பப்பட்டால் உள்ளூர் வழக்கத்தை பின்பற்றலாம் அல்லது சமுதாயத்தில் பிரபலமானவர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் உரிய சட்டப்பூர்வ குற்றவியல் சட்டத்தை பின்பற்றலாம். இது ஓர்டோ அல்லது பட்டியல் என்று அறியப்பட்டது. அல்லது அவர் மாகாண தண்டனை முறை (எக்ஸ்ட்ரா ஆர்டினம்) என்ற முறையை பயன்படுத்தலாம்; தண்டிக்கத்தக்க எந்தக் குற்றத்துக்கும் இதைப் பயன்படுத்தலாம். மாகாண ஆளுநர், ‘ரோமில் வழக்கு எப்படி கையாளப்பட்டது என்றல்ல, ஆனால் பொதுவாக அது எப்படி கையாளப்பட வேண்டும் என்பதற்கே கவனம் செலுத்தும்படி’ எதிர்பார்க்கப்பட்டார். இவ்வாறு பெரும்பாலானவை அவருடைய தீர்ப்புக்கே விடப்பட்டன.

பூர்வ ரோம சட்டத்தின் எல்லா நுட்பவிவரங்களையும் அறிய வழியில்லை, ஆனால் “மாகாண தண்டனை முறையாகிய எக்ஸ்ட்ரா ஆர்டினம் என்பதற்கு ஒப்பற்ற பதிவாக” பவுல் சம்பந்தப்பட்ட வழக்கு கருதப்படுகிறது. தனி நபரின் குற்றச்சாட்டுகளை ஆலோசகர்களின் உதவியோடு ஆளுநர் விசாரிப்பார். குற்றஞ்சாட்டுபவர்களுடன் வாதிட பிரதிவாதி ஆஜர்படுத்தப்படுவார், ஆனால் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பு வாதியினுடையது. தனக்கு சரியெனப்படும் எந்தத் தண்டனையையும் நீதிபதி அளித்தார். அவர் உடனடியாக தீர்ப்பு வழங்கலாம் அல்லது தீர்ப்பை காலவரையின்றி ஒத்திவைக்கலாம். இப்படி ஒத்திவைக்கப்படுகையில், பிரதிவாதி காவலில் வைக்கப்படுவார். ஹென்றி காட்பரி இவ்வாறு சொல்கிறார்: “சந்தேகத்திற்கிடமின்றி, ஏகபோக அதிகாரம் பெற்ற இந்த ரோம தேசாதிபதி, ‘தகாத செல்வாக்குக்கு’ இடமளித்து, லஞ்சம் வாங்கி, ஒருவரை நிரபராதியென தீர்ப்பளிக்கவோ தண்டிக்கவோ வழக்கை ஒத்திவைக்கவோ வாய்ப்பிருந்தது.”

‘யூதருக்குள் கலகம் எழுப்புகிற கொள்ளை நோயாக இருப்பவன்’ என்று சொல்லி, பிரதான ஆசாரியனாகிய அனனியாவும் யூத மூப்பர்களும் தெர்த்துல்லுவும் ஃபிலிக்ஸிற்கு முன்பு பவுல்மீது குற்றஞ்சாட்டினார்கள். “நசரேயருடைய மதபேதத்துக்கு” தலைவன், தேவாலயத்தைத் தீட்டுப்படுத்த முயன்றவன் என்றும் சொன்னார்கள்.​—⁠அப்போஸ்தலர் 24:​1-6.

ஆரம்பத்தில் பவுல்மீது குற்றம் சாட்டியவர்கள், அவர் துரோப்பீமு என்னும் புறதேசத்தானை யூதருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பிரகாரத்திற்குள் அழைத்து வந்ததாக நினைத்தார்கள்.a (அப்போஸ்தலர் 21:​28, 29) உண்மையில், குற்றவாளி துரோப்பீமுவே. ஆனால் பவுல் அழைத்து வந்ததாக யூதர்கள் நியாயம் கற்பித்தால், அது மரண தண்டனைக்குரியதாக புரிந்துகொள்ளப்படலாம். இந்தக் குற்றத்திற்கு மரண தண்டனை அளிக்க ரோமாபுரியும் ஒப்புக்கொண்டதாக தோன்றுகிறது. ஆகவே, லைஸியஸிற்குப் பதிலாக யூத ஆலய காவலர்கள் பவுலை கைது செய்திருந்தால் ஆலோசனை சங்கம் அவர் குற்றத்தை விசாரித்து, பிரச்சினையே இல்லாமல் தண்டனை தீர்ப்பை அளித்திருக்கும்.

யூத மதத்தை, அல்லது சட்டப்படியான மதத்தை (ரிலிஜியோ லிகிட்டா) பற்றி பவுல் போதித்து வரவில்லை என யூதர்கள் விளக்கமளித்தனர். மாறாக அது சட்டவிரோதமானதாகவும் அரசை அடியோடு கவிழ்ப்பதாகவுமே கருதப்பட வேண்டுமென்று குறிப்பிட்டனர்.

மேலும், “பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவ”னெனவும் அவர்கள் பவுலை குறிப்பிட்டனர். (அப்போஸ்தலர் 24:5) “உலக முழுவதிலும் சர்வலோக வாதையை கிளப்பிவிடுவதற்காக” அலெக்ஸாந்திரிய யூதர்களை பேரரசராகிய கிளாடியஸ் சமீபத்திலேயே கண்டனம் செய்திருந்தார். இந்த ஒத்த கருத்து குறிப்பிடத்தக்கது. “கிளாடியஸின் ஆட்சியின்போது அல்லது நீரோவின் தொடக்க ஆண்டுகளின்போது ஒரு யூதருக்கு விரோதமாக சுமத்தப்படுவதற்கேற்ற சரியான குற்றச்சாட்டு இதுவாகவே இருந்தது” என்று சரித்திராசிரியர் எ. என். ஷெர்வன்-உவைட் சொல்லுகிறார். “அந்தப் பேரரசில் யூதர்களுள்ள இடங்களிலெல்லாம் சமுதாய கலகங்களை ஏற்படுத்துவதற்கு இணையானதாக பவுலின் பிரசங்கிப்பை கருதும்படி ஆளுனரை தூண்டுவிக்க யூதர்கள் முயன்று வந்தார்கள். மதசம்பந்த குற்றச்சாட்டுகளுக்காக மட்டுமே குற்றவாளி என ஆளுநர்கள் தீர்ப்பளிக்க மாட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆகையால் அந்த மதசம்பந்தமான குற்றச்சாட்டிற்கு அரசியல் முலாம்பூச முயன்றார்கள்.”

ஒவ்வொரு குறிப்பாக பவுல் தன் விவாதத்தை முன்வைத்து வாதாடினார். ‘நான் எந்தக் கலகத்தையும் ஏற்படுத்தவில்லை. இவர்கள் “மதபேதம்” என்று சொல்லுகிற மார்க்கத்தைச் சேர்ந்தவன் நான் என்பது உண்மைதான். ஆனால் இது யூத பிரமாணங்களைக் கைக்கொள்வதை உட்படுத்துகிறது. ஆசிய யூதர்களில் சிலர் இந்தக் கலகத்தைத் தூண்டிவிட்டார்கள். அவர்கள் ஏதாவது குற்றஞ்சாட்ட விரும்பினால் அதை அவர்கள் இங்கு முறையிட வேண்டும்.’ அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் யூதருக்கு மத்தியிலான மத விவாதமே என அவற்றை பவுல் ஒன்றாக இணைத்துவிட்டார்; இந்த மத விவாதத்தைப் பற்றி ரோமர்களுக்கு அதிகம் தெரியாது. ஏற்கெனவே அதிகாரத்திற்கு அடங்க மறுத்திருந்த யூதர்களை மேலும் கோபப்படுத்த விரும்பாத ஃபிலிக்ஸ் தீர்ப்பை ஒத்திவைத்தார். இதனால் நடைமுறையில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத ஒரு நிலையே ஏற்பட்டது. பவுல்மீது உரிமை கோரிய யூதர்களிடமும் அவரை ஒப்படைக்கவில்லை, ரோம சட்டப்படி அவருக்கு தீர்ப்பளிக்கவும் இல்லை, அவரை விடுதலை செய்து அனுப்பவும் இல்லை. தீர்ப்பளிக்கும்படி ஃபிலிக்ஸை வற்புறுத்த முடியாது. மேலும் யூதர்களின் தயவைப் பெற விரும்பியதோடு, தள்ளிப் போடுவதற்கு மற்றொரு நோக்கமும் அவருக்கு இருந்தது; அதாவது பவுல் தனக்கு லஞ்சம் கொடுப்பாரென எதிர்பார்த்தார்.​—⁠அப்போஸ்தலர் 24:​10-​19, 26.b

பொர்க்கியு பெஸ்துவின்கீழ் ஏற்பட்ட திருப்புகட்டம்

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு எருசலேமில், புதிய ஆளுநர் பொர்க்கியு பெஸ்து வந்தபோது யூதர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை மீண்டும் தாக்கல் செய்து பவுலை தங்கள் சட்டத்தின்படி தீர்ப்பு செய்ய வேண்டினார்கள். ஆனால் பெஸ்து பிடிவாதமாக இவ்வாறு பதிலளித்தார்: “குற்றஞ்சாட்டப்பட்ட மனுஷன் குற்றஞ்சாட்டினவர்களுக்கு முகமுகமாய் நின்று, சாட்டின குற்றத்துக்குத் தனக்காக எதிருத்தரவு சொல்ல அவனுக்கு இடங்கிடைக்கிறதற்கு முன்னே, குற்றஞ்சாட்டினவர்கள் பட்சமாய் அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல.” சரித்திராசிரியர் ஹாரி டபிள்யு. டாஷ்ரா இவ்வாறு குறிப்பிடுகிறார்: “சட்டத்துக்குப் புறம்பாக ரோம குடிமகனை கொல்வதற்கு சதி நடப்பதை பெஸ்து உடனடியாக புரிந்துகொண்டார்.” எனவே வழக்கை செசரியாவில் முறையிடும்படி யூதர்களிடம் சொல்லப்பட்டது.​—⁠அப்போஸ்தலர் 25:​1-6, 16.

பவுல், “இனி உயிரோடிருக்கிறது தகாதென்று” அங்கு யூதர்கள் உறுதியாக சொன்னார்கள். எனினும், அதற்கு எந்த அத்தாட்சியையும் அவர்கள் அளிக்கவில்லை. ஆனால் மரண தண்டனைக்குரிய எந்தக் குற்றத்தையும் பவுல் செய்யவில்லை என்பதை பெஸ்து புரிந்துகொண்டார். “தங்களுடைய மார்க்கத்தைக் குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் இன்னும் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக் குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன்பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள்” என்று பெஸ்து மற்றொரு அதிகாரிக்கு விளக்கினார்.​—⁠அப்போஸ்தலர் 25:7, 18, 19, 24, 25.

அரசியல் சம்பந்தமான எந்தக் குற்றச்சாட்டைப் பொறுத்த வரைக்கும் பவுல் நிரபராதியாக இருப்பது தெளிவாக தெரிந்தது. ஆனால், மத சம்பந்தப்பட்ட விவாதத்தில், தங்களுடைய வழக்கு மன்றமே இந்தக் காரியத்தை நியாயம் விசாரிக்க தகுதியுள்ளதென்று யூதர்கள் விவாதித்திருக்கலாம். இந்தக் காரியங்கள் பேரில் தீர்ப்பளிக்கப்படுவதற்காக பவுல் எருசலேமுக்குப் போவாரா? அதற்கு சம்மதமா என பெஸ்து பவுலைக் கேட்டார். உண்மையில் அது பொருத்தமற்ற கோரிக்கையாக இருந்தது. குற்றஞ்சாட்டுபவர்களே நியாயாதிபதிகளாகும் இடத்தில் பவுலை அனுப்புவது அவரை யூதர்களிடம் ஒப்புவிப்பதைக் குறிக்கும். “நான் இராயருடைய நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்பட வேண்டியது; யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, . . . அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது. இராயருக்கு அபயமிடுகிறேன்” என பவுல் சொன்னார்.​—⁠அப்போஸ்தலர் 25:10, 11, 20.

இந்த வார்த்தைகளை ரோமர் ஒருவர் சொல்வது எல்லா விசாரணையையும் நிறுத்தி வைத்தது. மேல்முறையீடு (ப்ரோவகாடியோ) செய்வதற்கு அவருக்கிருக்கும் உரிமை “அதிகாரப்பூர்வமானதாயும், பலவற்றை உட்படுத்துவதாயும், வலிமைமிக்கதாயும் இருந்தது.” ஆகவே, விவரங்களை தன் ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்தப் பின்பு, பெஸ்து இவ்வாறு கூறினார்: ‘நீ இராயருக்கு அபயமிட்டாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாய்.’​—⁠அப்போஸ்தலர் 25:​12.

பவுலை அங்கிருந்து அனுப்புவதில் பெஸ்துவுக்கு சந்தோஷம். சில நாட்களுக்குப் பின்பு இரண்டாம் ஏரோது அகிரிப்பாவிடம் அவர் ஒப்புக்கொண்டபடி அந்த வழக்கு அவரை பெரிதும் குழப்பிக்கொண்டிருந்தது. பின்பு பெஸ்து, அந்த வழக்கைப் பற்றிய விவரத்தை பேரரசருக்கு சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. ஆனால் பெஸ்துவுக்கு, அதில் உட்பட்ட குற்றச்சாட்டுகள் புரிந்துகொள்ள முடியாத, கடுஞ்சிக்கலான யூத நியாயப்பிரமாணத்தோடு சம்பந்தமானவையாக இருந்தன. எனினும், அகிரிப்பா அத்தகைய காரியங்களை நன்கு அறிந்தவராக இருந்தார். ஆகையால், அவர் அக்கறை காட்டினபோது, அந்தக் கடிதத்தை எழுத உதவும்படி உடனடியாக கேட்கப்பட்டார். அகிரிப்பாவுக்கு முன்பாக பவுல் பேசிய பேச்சை புரிந்துகொள்ள முடியாத பெஸ்து: “பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது” என்று கூறினார். ஆனால், அகிரிப்பாவோ தெள்ளத் தெளிவாக புரிந்துகொண்டார். “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய்” என்று அவர் சொன்னார். பெஸ்துவும் அகிரிப்பாவும் பவுலின் விவாதங்களைப் பற்றி எப்படி உணர்ந்திருந்தாலும், பவுல் குற்றமற்றவர் என்றும் இராயனுக்கு அபயமிடாதிருந்தால் விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒப்புக்கொண்டார்கள்.​—⁠அப்போஸ்தலர் 25:​13-​27; 26:​24-​32.

நீதிமன்ற வழக்கின் முடிவு

பவுல் ரோமுக்கு வந்து சேர்ந்ததும், யூதரில் பிரதானமானவர்களை தன் பிரசங்கத்தைக் கேட்பதற்காக மட்டுமல்லாமல், தன்னைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்பதை கண்டறிவதற்காகவும் வரவழைத்தார். தன்மீது குற்றம் சாட்டுபவர்களுக்கு இருந்த ஏதாவது உள்நோக்கத்தை அது வெளிப்படுத்தியிருக்கலாம். வழக்கை விசாரிப்பதில் ரோம யூதர்களின் உதவியை நாடுவது எருசலேமிலிருந்த அதிகாரிகளுக்கு புதிய விஷயமல்ல. ஆனால் தன்னைப் பற்றி அவர்களுக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை என்பதை பவுல் கேட்டறிந்தார். விசாரணைக்காக காத்திருக்கையில், பவுல் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கவும் தடையில்லாமல் பிரசங்கிக்கவும் அனுமதிக்கப்பட்டார். இப்படிப்பட்ட தயவைப் பெற்றது, ரோமர்களைப் பொறுத்தவரை பவுல் குற்றமற்றவர் என்பதை அர்த்தப்படுத்தியிருக்கலாம்.​—⁠அப்போஸ்தலர் 28:​17-​31.

அந்தச் சிறைக்காவலில் பவுல் மேலும் இரண்டு ஆண்டுகளைக் கழித்தார். ஏன்? அதற்கான எந்த விவரங்களையும் பைபிள் அளிக்கிறதில்லை. பொதுவாக, குற்றஞ்சுமத்தியவர்கள் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்வரை மேல்முறையீடு செய்பவர் சிறைக்காவலில் வைக்கப்பட்டார். ஆனால் எருசலேமிலிருந்த யூதர்கள் அந்த வழக்கின் பலவீனத்தை உணர்ந்திருந்ததினாலோ என்னவோ அங்கு வரவே இல்லை. ஒருவேளை எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலத்திற்கு பவுலின் வாயை அடைக்க அதுவே மிகச் சிறந்த வழியாக இருந்திருக்கலாம். எவ்வாறாயினும் பவுல், விசாரணைக்காக நீரோவின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்; குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார்; கடைசியாக, கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு, தன் மிஷனரி ஊழியத்தை தடையின்றி தொடருவதற்கு விடுதலை செய்யப்பட்டார் என தெரிகிறது.​—⁠அப்போஸ்தலர் 27:⁠24.

சத்தியத்தின் எதிரிகள், கிறிஸ்தவர்களின் பிரசங்க ஊழியத்தை தடை செய்வதற்கு ‘சட்டங்களினால் தீமையைப் பிறப்பிக்க’ நெடுங்காலமாக முயன்றிருக்கிறார்கள். இது நமக்கு ஆச்சரியத்தை அளிக்க வேண்டியதில்லை. இயேசு இவ்வாறு சொன்னார்: “அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்.” (சங்கீதம் 94:20, தி.மொ.; யோவான் 15:20) அதேசமயத்தில், நற்செய்தியை உலகம் முழுவதும் அறிவிப்பதற்கு இயேசு நமக்கு சுதந்திரத்தையும் உறுதியளிக்கிறார். (மத்தேயு 24:14) துன்புறுத்துதலையும் எதிர்ப்பையும் அப்போஸ்தலன் பவுல் எதிர்த்து நின்றது போலவே, இன்றும் யெகோவாவின் சாட்சிகள், ‘நற்செய்திக்கு ஆதரவாக வாதாடி அதை சட்டப்பூர்வமாய் ஸ்தாபிக்கிறார்கள்.’​—⁠பிலிப்பியர் 1:​7, NW.

[அடிக்குறிப்புகள்]

a மிகுந்த கவனமாக உருவாக்கப்பட்ட மூன்று முழ உயரமுள்ள கல் சுவர், புறதேசத்தாருக்கு ஒதுக்கப்பட்ட பிரகாரத்தை உட்பிரகாரத்திலிருந்து பிரித்தது. இந்தச் சுவரில் சீரான இடைவெளிகளில் கிரேக்க மொழியிலும் லத்தீன் மொழியிலும் எச்சரிக்கை வாசகங்கள் சில காணப்பட்டன: “இந்தத் தடுப்பு சுவரையும் பரிசுத்த ஸ்தலத்தைச் சுற்றியுள்ள சுவரையும் தாண்டி அந்நியர் எவரும் உள்ளே பிரவேசிக்காமல் இருப்பார்களாக. மீறி பிரவேசிப்பவர்கள் பிடிபட்டால் அவரே தன் மரணத்தைத் தேடிக்கொள்பவராக இருப்பார்.”

b இது உண்மையிலேயே சட்டவிரோதமான செயல். ஒரு புத்தகம் இவ்வாறு சொல்லுகிறது: “பணம் பறிப்பது சம்பந்தப்பட்ட லெக்ஸ் ரெப்பட்டுன்டாரும் என்ற சட்டத்தின்கீழ், அதிகாரம் செலுத்தும் அல்லது நிர்வகிக்கும் பொறுப்பிலுள்ள எவரும், ஒருவரை சட்டத்தால் பிணைப்பதற்கோ விடுவிப்பதற்கோ கைதியை குற்றவாளியாக தீர்ப்பளிப்பதற்கோ தீர்ப்பளிக்காமல் இருப்பதற்கோ விடுவிப்பதற்கோ லஞ்சத்தைக் கேட்கவும் கூடாது வாங்கவும் கூடாது.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்