“மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது”
‘திடன்கொண்டு’ முழுமையாய் சாட்சிகொடுத்தல்
கடவுளுக்குக் கீழ்படிந்து நடக்கும் ஓர் ஊழியரை அடித்துக் கொல்ல ஒரு வன்முறைக் கும்பல் தயாராயிருக்கிறது. தக்க தருணத்தில் ரோமப் படைவீரர்கள் அந்தக் கும்பலின் கைகளிலிருந்து அவரை மீட்டு காவலில் அடைக்கிறார்கள். இதனை அடுத்து சுமார் ஐந்து வருடங்களுக்குத் தொடர்ச்சியாகப் பல சம்பவங்கள் நிகழ்கின்றன. இதன் விளைவாக, உயர் பதவியில் இருக்கும் அநேக ரோம அதிகாரிகள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள்.
துன்பத்துக்கு ஆளாகிற இந்த நபர் அப்போஸ்தலன் பவுல். “ராஜாக்களுக்கு” தம்முடைய பெயரை பவுல் (சவுல்) அறிவிப்பார் என சுமார் பொ.ச. 34-ல் இயேசு அவருக்கு வெளிப்படுத்தினார். (அப்போஸ்தலர் 9:15) ஆனால், பொ.ச. 56 வரைக்கும்கூட இது நடக்கவில்லை. அந்த அப்போஸ்தலன் தன்னுடைய மூன்றாம் மிஷனரிப் பயணத்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறார், இப்போது சூழ்நிலைகள் மாறவிருக்கின்றன.
தாக்கப்பட்டாலும் தளர்ந்துவிடவில்லை
பவுல் எருசலேமுக்குச் செல்லும் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். அந்த நகரத்தில் பயங்கரமான துன்புறுத்தல் அவருக்காக காத்திருக்கிறதென சில கிறிஸ்தவர்கள் “ஆவியின் ஏவுதலினாலே” பவுலை எச்சரிக்கிறார்கள். அதற்கு அவர், “எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” என தைரியமாகச் சொல்கிறார். (அப்போஸ்தலர் 21:4-14) அவர் எருசலேமுக்குப் போய்சேர்ந்ததும் அங்குள்ள ஆலயத்திற்குச் செல்கிறார். ஆசியாவிலிருந்து வந்த யூதர்கள் இதைப் பார்க்கிறார்கள். ஆசியாவில் இந்த அப்போஸ்தலனுடைய பிரசங்க வேலை வெற்றி அடைந்ததை அவர்கள் நன்கு அறிந்திருந்ததால் பவுலைத் தொலைத்துக்கட்டும் நோக்கத்தோடு ஒரு கும்பலைத் தூண்டிவிடுகிறார்கள். ரோமப் படைவீரர்கள் விரைந்து சென்று, ஆபத்திலிருந்த அவருக்கு உதவுகிறார்கள். (அப்போஸ்தலர் 21:27-32) இப்படி ஆபத்திலிருந்து விடுவித்தது, எதிர்ப்புக்குரல் எழுப்பும் கூட்டத்தாருக்கும் உயர் பதவியில் உள்ளவர்களுக்கும் கிறிஸ்துவைப்பற்றிய சத்தியத்தை அறிவிக்கும் அரிய வாய்ப்புகளை பவுலுக்குத் தருகிறது. இது எப்படிப் படிப்படியாக நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
எளிதில் சந்திக்க முடியாதவர்களிடம் பிரசங்கித்தல்
காப்பாற்றப்படுவதற்காக அன்டோனியா கோட்டை என அறியப்பட்ட அரணின் படிகளுக்கு பவுல் தூக்கிச் செல்லப்படுகிறார்.a படிகளின் மேல் நின்றபடி அந்த மதக் கும்பலிடம் அவர் உணர்ச்சிபொங்க சாட்சி கொடுக்கிறார். (அப்போஸ்தலர் 21:33-22:21) ஆனால், புறஜாதிகளுக்குப் பிரசங்கிக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதைப் பற்றி சொன்னவுடனே, மீண்டும் எதிர்ப்புக் கிளம்புகிறது. யூதர்கள் அவர்மேல் குற்றம்சாட்டினதற்கான காரணத்தை அறிவதற்காக அவரை சவுக்கால் அடித்து விசாரிக்கும்படி சேனாதிபதி லீசியா கட்டளையிடுகிறார். என்றாலும், தான் ஒரு ரோம குடிமகன் என்று பவுல் சொன்னதும் அடிக்கப்படவில்லை. பவுலின் மேல் யூதர்கள் ஏன் குற்றம் சாட்டினார்கள் என்பதை அறிந்துகொள்ள மறுநாள் லீசியா அவரை ஆலோசனைச் சங்கத்தின் முன்பாக நிறுத்துகிறார்.—அப்போஸ்தலர் 22:22-30.
இந்த வழக்கு மன்றத்தில் நின்றுகொண்டு, அவருடைய சக யூதர்களுக்கு சாட்சிகொடுக்க இன்னொரு நல்ல வாய்ப்பு பவுலுக்குக் கிடைக்கிறது. அஞ்சாநெஞ்ச சுவிசேஷகராய் உயிர்த்தெழுதலில் தனக்கிருக்கும் நம்பிக்கையைத் தெரிவிக்கிறார். (அப்போஸ்தலர் 23:1-8) ஆனாலும் யூதர்களின் கொலைவெறி தணியவில்லை, அதனால், படைவீரர்களின் கோட்டைக்குள் அவர் கொண்டுசெல்லப்படுகிறார். அன்று இரவில், கர்த்தர் அவரைப் பலப்படுத்தி நம்பிக்கை அளிக்கும் இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்: “திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும்.”—அப்போஸ்தலர் 23:9-11.
பவுலைக் கொலை செய்வதற்குச் சதித்திட்டம் போடப்பட்டிருப்பது தெரியவருகிறது. இதனால், இரகசியமாய் யூதேயாவின் ரோம நிர்வாகத் தலைநகரமான செசரியாவுக்கு அவர் அவசர அவசரமாக அனுப்பிவைக்கப்படுகிறார். (அப்போஸ்தலர் 23:12-24) செசரியாவில் சாட்சிகொடுப்பதற்கு இன்னும் அருமையான வாய்ப்புகள் கிடைக்கின்றன; அங்கே “ராஜாக்களுக்கு” அவர் சாட்சி கொடுக்கிறார். முதலில், தேசாதிபதி பேலிக்ஸிடம் அவர் கொண்டுவரப்படுகையில் தனக்கு எதிராகச் சாட்டப்பட்ட குற்றங்களுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று சொல்கிறார். பிறகு, இயேசுவைக் குறித்தும் நீதி, இச்சையடக்கம் ஆகியவற்றைக் குறித்தும் இனிவரும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் பேலிக்ஸுக்கும் அவர் மனைவி துருசில்லாவுக்கும் பிரசங்கிக்கிறார். என்றாலும், பவுல் இரண்டு வருடங்களுக்கு சிறையில் அடைக்கப்படுகிறார், தனக்கு லஞ்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து பேலிக்ஸ் அப்படிச் செய்கிறார். ஆனால் பவுல் லஞ்சம் கொடுக்கவில்லை.—அப்போஸ்தலர் 23:33-24:27.
இப்போது பேலிக்ஸின் ஸ்தானத்திற்கு பெஸ்து என்பவர் வருகிறார். பவுலைக் குற்றவாளியாகத் தீர்த்து அவரைக் கொல்வதற்கு யூதர்கள் மீண்டும் முயற்சி செய்கிறார்கள். வழக்கு மீண்டும் செசரியாவில் நடக்கிறது, அது எருசலேமுக்கு மாற்றப்படும் ஆபத்தைத் தடுப்பதற்கு பவுல் இவ்வாறு கூறுகிறார்: “நான் இராயருடைய நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கிறேன்; . . . இராயருக்கு அபயமிடுகிறேன்.” (அப்போஸ்தலர் 25:1-11, 20, 21) சில நாட்களுக்குப்பின், பவுல் தன்னுடைய வழக்கை இரண்டாம் ஏரோது அகிரிப்பாவிடம் கூறியபோது, ராஜா இவ்வாறு சொல்கிறார்: “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய்.” (அப்போஸ்தலர் 26:1-28) சுமார் பொ.ச. 58-ல் பவுல் ரோமாபுரிக்கு அனுப்பப்படுகிறார். அங்கே ஒரு கைதியாக, இந்தத் திறமைமிக்க அப்போஸ்தலன் வழிகளைக் கண்டுபிடித்து இன்னும் இரண்டு வருடங்கள் கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கிக்கிறார். (அப்போஸ்தலர் 28:16-31) இறுதியாக பவுல், பேரரசன் நீரோவின் முன்பாக நின்றார் என்றும், குற்றமில்லாதவராக அறிவிக்கப்பட்டு, கடைசியில் ஒரு சுதந்திர மனிதராக தன்னுடைய மிஷனரி ஊழியத்தை மீண்டும் தொடர்ந்தார் என்றும் தெரிகிறது. இவர்களைப்போன்ற முக்கிய பிரமுகர்களிடம் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு இவரைத் தவிர வேறெந்த அப்போஸ்தலர்களுக்கும் இதைப்போன்ற வாய்ப்பு கிடைத்ததாகப் பதிவு இல்லை.
ஒரு சமயம் அப்போஸ்தலர்கள் சிலர் யூத நீதிமன்றத்திற்கு முன்னால் இவ்வாறு அறிவித்தார்கள்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” தன் சக கிறிஸ்தவர்கள் சொன்ன இந்த முக்கிய நியமத்திற்கு இசைவாகவே அப்போஸ்தலன் பவுலும் வாழ்ந்தார் என்பதை மேலே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் காட்டுகின்றன. (அப்போஸ்தலர் 5:29) நாம் பின்பற்றுவதற்கு என்ன ஓர் அருமையான முன்மாதிரி! அவரைப் பிரசங்கிக்க விடாமல் தடுப்பதற்கு மனிதர்கள் விடாப்பிடியாக முயற்சி செய்தபோதிலும், முழுமையாய் சாட்சி கொடுப்பதற்கான கட்டளைக்கு இந்த அப்போஸ்தலன் முற்றிலும் கீழ்படிந்தார். கடவுளுக்கு கீழ்ப்படிவதில் உறுதியாய் இருந்ததால், ‘புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும்’ இயேசுவினுடைய நாமத்தை அறிவிக்கத் ‘தெரிந்துகொண்ட பாத்திரமாகத்’ தன்னுடைய நியமிப்பை நிறைவேற்றினார்.—அப்போஸ்தலர் 9:15.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் 2006-ல், நவம்பர்/டிசம்பர் பக்கத்தைக் காண்க.
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
தன்னைப் பாதுகாத்துக்கொள்வதில்தான் பவுல் ஆர்வமுள்ளவராக இருந்தாரா?
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, ஆசிரியர் மூன்றாம் பென் விதரிங்டன் இவ்வாறு எழுதுகிறார்: “பவுலுடைய கண்ணோட்டத்தில் பார்த்தால் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது முக்கியமான ஒன்றாக இருக்கவில்லை, மாறாக அதிகாரிகளுக்கும், யூதர்களுக்கும் புறஜாதிகளுக்கும் நற்செய்தியைப்பற்றிச் சாட்சி கொடுப்பதே முக்கியமானதாக இருந்தது. . . . உண்மையில் [பவுல் அல்ல] நற்செய்திதான் குற்றவாளிக் கூண்டில் இருந்தது.”