மேலான அதிகாரங்களுக்கு நம்முடைய சம்பந்தப்பட்டக் கீழ்ப்படிதல்
“எனவே நீங்கள் கீழ்ப்பட்டிருப்பதற்கு கண்டிப்பான காரணம் இருக்கிறது.” —ரோமர் 13:5, NW.
1. நாசிய மேலான அதிகாரங்களின் கரங்களில் யெகோவாவின் சாட்சிகள் என்ன கடுமையான அனுபவங்களைக் கொண்டிருந்தனர்? இவை “தீமை செய்ததற்காக” அனுபவிக்கப்பட்டதா?
ஜனவரி 7, 1940 அன்று ஃபிரான்ஸ் ரீட்டரும் ஆஸ்த்ரியாவைச் சேர்ந்த மற்ற ஐந்து இளம் மனிதரும் தலைவெட்டும் இயந்திரத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டார்கள். அவர்கள் பிபல்ஃபோர்ஷெர், யெகோவாவின் சாட்சிகள். அவர்கள் மரித்ததற்குக் காரணம், ஹிட்லர் அரசுக்காக போராயுதங்களை ஏந்திட அவர்கள் மனசாட்சி அனுமதிக்கவில்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது தங்களுடைய விசுவாசத்துக்காக மரித்த ஆயிரக்கணக்கான சாட்சிகளில் ரீட்டர் ஒருவராவார். இன்னும் அநேகர் அநேக ஆண்டுகள் கான்சன்ட்ரேஷன் முகாம்களில் சகித்திருக்கவேண்டியிருந்தது. அவர்கள் “தீமை செய்ததற்காக” நாசிய மேலான அதிகாரங்களின் “பட்டயத்”தால் துன்பம் அனுபவித்தனரா? (ரோமர் 13:4) நிச்சயமாகவே இல்லை! இவர்கள் அதிகாரங்களின் கைகளால் துன்பம் அனுபவித்தபோதிலும், இந்தக் கிறிஸ்தவர்கள் ரோமர் 13-ம் அதிகாரத்தில் காணப்படும் கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள் என்பதைப் பவுல் மேலும் கூறிய வார்த்தைகள் காண்பிக்கின்றன.
2 ரோமர் 13:5-ல் அப்போஸ்தலன் எழுதுகிறான்: “நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படிய வேண்டும்.” அதிகாரம் “பட்டயத்தை” ஏந்தியிருப்பதுதானே அதற்குக் கீழ்ப்படிந்திருப்பதற்கு நல்ல காரணம் என்பதாகப் பவுல் முன்னதாகச் சொன்னான். என்றபோதிலும் இப்பொழுது அவன் ஒரு பலமான காரணத்தைக் கொடுக்கிறான்: மனச்சாட்சி. நாம் கடவுளை ஒரு “சுத்தமான மனச்சாட்சியோடே” சேவிக்க முனைகிறோம். (2 தீமோத்தேயு 1:3) நாம் மேலான அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. நாம் கீழ்ப்படிவதற்குக் காரணம் கடவுளுடைய பார்வைக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறோம். (எபிரெயர் 5:14) ஆம், நம்மைப் பார்ப்பதற்கு எந்த ஒரு மனிதனும் அங்கு இல்லாதிருந்தாலும், நம்முடைய பைபிள் அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட மனச்சாட்சி அதிகாரத்துக்குக் கீழ்ப்படிய நம்மைத் தூண்டுகிறது.—பிரசங்கி 10:20-ஐ ஒப்பிடவும்.
“இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள்”
3, 4. யெகோவாவின் சாட்சிகள் எதற்குப் பெயர் பெற்றவர்களாயிருக்கின்றனர்? கிறிஸ்தவர்கள் ஏன் வரிகளைச் செலுத்த வேண்டும்?
3 ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நைஜீரியாவில் வரி செலுத்துவதன்பேரில் கலகங்கள் ஏற்பட்டன. அநேக உயிர்கள் கொல்லப்பட்டன, அதிகாரங்கள் இராணுவத்தைப் பயன்படுத்தின. ராஜ்ய மன்றத்தில் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது இராணுவ வீரர்கள் உள்ளே பிரவேசித்து, அந்தக் கூட்டத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல வற்புறுத்தினார்கள். அது யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு பைபிள் படிப்புக் கூட்டம் என்பதை அறிய வந்த இராணுவ அதிகாரி உடன் வந்திருந்த வீரர்களைப் புறப்படச் சொல்லி, “யெகோவாவின் சாட்சிகள் வரி எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அல்ல,” என்றார்.
4 அந்த நைஜீரிய சாட்சிகள் பவுலின் இந்த வார்த்தைகளுக்கு இசைவாக வாழ்ந்த பெயரைப் பெற்றிருந்தார்கள்: “இதற்காகவே நீங்கள் வரியையும் செலுத்துகிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவ [பொது, NW] ஊழியக்காரராயிருக்கிறார்களே.” (ரோமர் 13:6) ‘இராயனுடையதை இராயனுக்கு செலுத்துங்கள்’ என்ற விதியை இயேசு அளித்த போது, அவர் வரிகளைச் செலுத்துவதைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். (மத்தேயு 22:21) உலகப்பிரகாரமான அதிகாரங்கள் சாலைகள், காவல் பாதுகாப்பு, நூலகங்கள், போக்குவரத்து முறைகள், பள்ளிகள், தபால் சேவைகள், இன்னும் பல காரியங்களை வழங்குகின்றன. நாம் அடிக்கடி இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்துகிறோம். அவற்றிற்காக வரிகள் மூலம் பணம் செலுத்துவது சரியாகத்தான் இருக்கிறது.
“யாவருக்கும் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்”
5. “யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்” என்ற கூற்றின் அர்த்தம் என்ன?
5 பவுல் தொடர்ந்து கூறுகிறார்: “யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்த வேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்பட வேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.” (ரோமர் 13:7) “யாவருக்கும்” என்ற சொல் கடவுளுடைய பொது ஊழியக்காரராயிருக்கும் எல்லா உலக அதிகாரத்தையும் உட்படுத்துகிறது. விதிவிலக்குகள் எதுவும் இல்லை. நாம் தனிப்பட்ட விதத்தில் விரும்பாத ஓர் அரசியல் ஒழுங்கின்கீழ் வாழ்ந்தாலும், நாம் வரிகளைச் செலுத்துகிறோம். மதங்கள் வரி விலக்குக்குள் வரும் இடங்களில் சபைகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற குடிமக்களைப் போன்று, தாங்கள் செலுத்தும் வரிகளைக் குறைத்திட சட்டப்பூர்வமான என்ன ஏற்பாடுகள் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் எந்தக் கிறிஸ்தவனும் சட்டத்துக்கு முரணாக வரி செலுத்துவதைத் தவிர்க்கக்கூடாது.—மத்தேயு 5:41; 17:24–27.
6, 7. வரிப்பணம் நாம் ஒப்புக்கொள்ளாத ஏதாவது காரியத்துக்குப் பயன்படுத்தப்பட்டாலும் அல்லது அதிகாரம் நம்மைத் துன்புறுத்தினாலும் நாம் ஏன் வரிகளைச் செலுத்த வேண்டும்?
6 என்றபோதிலும், ஒருவேளை ஒரு குறிப்பிட்ட வரி நியாயமற்றதாகத் தென்பட்டால் என்ன. அல்லது வரிப்பணத்தின் ஒரு பகுதி நாம் ஏற்காத ஒன்றுக்கு, அதாவது இலவசக் கருக்கலைப்பு, இரத்த வங்கிகள், அல்லது நம்முடைய நடுநிலைக் கொள்கைகளுக்கு எதிரான திட்டங்கள் ஒன்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றால், அப்பொழுது என்ன? நாம் தொடர்ந்து எல்லா வரிகளையும் செலுத்துவோம். வரிப்பணத்தை தான் எப்படி பயன்படுத்துகிறது என்பதற்குரிய உத்தரவாதத்தை அதிகாரம்தானே ஏற்கவேண்டும். அதிகாரத்தை நியாயந்தீர்ப்பதற்கு நாம் கட்டளையிடப்படவில்லை. கடவுள் தாமே “பூமியின் நியாயாதிபதி,” தங்களுடைய அதிகாரத்தை எவ்விதம் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதற்கான கணக்குத் தீர்ப்பை அரசாங்கங்களுடன் தம்முடைய உரிய காலத்தில் அவர் பார்த்துக்கொள்வார். (சங்கீதம் 94:2; எரேமியா 25:31) அது சம்பவிக்கும் வரை நம்முடைய வரிகளைச் செலுத்திக்கொண்டிருப்போம்.
7 அதிகாரம் நம்மைத் துன்புறுத்தினால் என்ன? அளிக்கப்பட்டுவரும் அனுதின சேவைகளினிமித்தம் நாம் தொடர்ந்து வரிகளைச் செலுத்துவோம். ஓர் ஆப்பிரிக்க தேசத்தில் துன்புறுத்தப்படும் யெகோவாவின் சாட்சிகளைக் குறித்து, சான்பிரான்சிஸ்கோ ஆய்வாளர் சொன்னது: “அவர்களை நீங்கள் முன்மாதிரி குடிமக்களாக மதிக்கலாம். அவர்கள் தவறாமல் வரிகளைச் செலுத்துகிறார்கள், நோயாளிகளைக் கவனிக்கிறார்கள், எழுத்தறிவின்மைக்கு எதிராகப் போரிடுகிறார்கள்.” ஆம், துன்புறுத்தப்பட்ட அந்தச் சாட்சிகள் தங்களுடைய வரிகளை செலுத்தினார்கள்.
“பயம்” மற்றும் “கனம்”
8. அதிகாரத்துக்கு நாம் காண்பிக்கும் அந்தப் “பயம்” என்ன?
8 ரோமர் 13:7-ன் “பயம்” கோழைத்தனமான பயம் அல்ல, மாறாக, உலகப்பிரகாரமான அதிகாரத்துக்கு மரியாதைக் காட்டுவது, அதன் சட்டத்தை மீறிட பயப்படுவதாக இருக்கிறது. இந்த மரியாதை உட்பட்டிருக்கும் ஸ்தானத்தின் காரணத்தால் காண்பிக்கப்படுகிறது, எல்லாச் சமயத்திலும் அந்த ஸ்தானத்தைப் பூர்த்தி செய்யும் தனி நபர் காரணமாகக் காண்பிக்கப்படுகிறதில்லை. பைபிள், ரோம பேரரசன் திபேரியுவைக் குறித்துத் தீர்க்கதரிசனமாகப் பேசும்போது, அவனை “அவமதிக்கப்பட்டவன்” என்று அழைக்கிறது. (தானியேல் 11:21) ஆனால் அவன் பேரரசனாக இருந்ததால், ஒரு கிறிஸ்தவன் அவனுக்குரிய பயத்தையும் கனத்தையும் செலுத்த கடமைப்பட்டிருக்க வேண்டியிருந்தது.
9. மனித அதிகாரங்களுக்கு நாம் கனம் செலுத்தும் சில வழிகள் யாவை?
9 கனத்தைக் குறித்ததில், மத ஸ்தானங்களின் அடிப்படையில் சிறப்புப்பட்டங்கள் கொடுக்கக்கூடாது என்ற இயேசுவின் கட்டளையை நாம் பின்பற்றுகிறோம். (மத்தேயு 23:8–10) ஆனால் மதம் சாராத உலக அதிகாரிகளுக்கு வரும்போது, அவர்களைக் கனப்படுத்த எந்தவிதமான சிறப்புப்பட்டங்களையும் பயன்படுத்தி அவர்களை அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பவுல் ரோம அதிபதிகளிடம் பேசுகின்ற போது “கனம்பொருந்திய” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறான். (அப்போஸ்தலர் 26:25) தானியேல் நேபுகாத்நேச்சாரை “என் ஆண்டவனே” என்று அழைத்தான். (தானியேல் 4:19) இன்று கிறிஸ்தவர்கள் “கனம்பொருந்திய” அல்லது “மாண்புமிகுந்த” போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். ஒரு நீதிமன்ற அறைக்குள் நீதிபதி வரும்போது அவர்கள் எழுந்திருக்கலாம் அல்லது ஓர் அரசனுக்கு முன்பு மரியாதையுடன் தலைவணங்குவது வழக்கமாயிருந்தால் அப்படிச் செய்யலாம்.
சம்பந்தப்பட்டக் கீழ்ப்படிதல்
10. மனித அதிகாரம் ஒரு கிறிஸ்தவனிடமிருந்து கேட்கும் காரியத்தில் வரம்புகள் இருக்கின்றன என்பதை இயேசு எப்படி காண்பித்தார்?
10 யெகோவாவின் சாட்சிகள் மனித அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவதால், ஃபிரான்ஸ் ரீட்டரும் மற்ற அநேகரும் ஏன் துன்பப்பட்டார்கள்? ஏனென்றால் நம்முடைய கீழ்ப்படிதல் சம்பந்தப்பட்டதாயிருக்கிறது, அது நம்மிடமிருந்து என்ன கேட்கலாம் என்ற காரியத்தில் பைபிள் வரம்புகள் வைத்திருக்கின்றது என்பதை அதிகாரம் எல்லாச் சமயத்திலும் மதித்துணருவதில்லை. பயிற்றுவிக்கப்பட்டக் கிறிஸ்தவ மனச்சாட்சியை புண்படுத்திடும் ஏதாவது காரியத்தை அதிகாரம் கேட்குமாயின், கடவுள் கொடுத்திருக்கும் வரம்பை அது மீறுவதாயிருக்கும். “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்,” என்று இயேசு சொன்ன காரியத்தில் இது குறிப்பாய்க் காண்பிக்கப்படுகிறது. (மத்தேயு 22:21) கடவுளுக்கு உரியதை இராயன் கேட்கும்போது, கேட்பதற்குக் கடவுளே முதலிட உரிமையைக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
11. மனித அதிகாரங்கள் கேட்கும் காரியத்தில் வரம்புகள் இருக்கின்றன என்பதைக் காண்பிக்கும் என்ன நியமம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது?
11 இந்த நிலை சீர்கெடச் செய்யும் அல்லது நம்பிக்கைத் துரோகமான ஒன்றா? இல்லவே இல்லை. உண்மையில் பார்க்கப்போனால், அது அதிக நாகரிகமான நாடுகளால் மதித்துணரப்படும் ஒரு நியமத்தின் பொருத்தமாகவே இருக்கிறது. 15-வது நூற்றாண்டில், பீட்டர் வான் ஹேகன்பாச் என்பவன் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் இருந்த ஓர் ஐரோப்பிய பிரதேசத்தின் மீது கொடுங்கோலாட்சி புரிந்து வந்ததால் விசாரணைக்குட்படுத்தப்பட்டான். தன் ஆட்சி முதல்வர் பர்கண்டியின் டியூக்கின் அணைகளையே தான் நிறைவேற்றிவருவதாக தன்னைத் தற்காத்தான். இது மறுக்கப்பட்டது. கொடுமை இழைக்கும் ஒருவர் தன்னுடைய மேலான அதிகாரியின் ஆணைகளைப் பின்பற்றுகிறவராயிருந்தால் தன் செயல்களுக்கு உத்தரவாதமுள்ளவர் அல்ல என்று அந்தச் சமயம் முதல் பல முறை உரிமைப்பாராட்டப்பட்டுவந்திருக்கிறது—குறிப்பாக நியுரம்பர்கில் சர்வதேச தீர்ப்புமன்றத்திற்கு முன் நாசி போர் குற்றவாளிகளால் அவ்விதம் உரிமைப்பாராட்டப்பட்டிருக்கிறது. அந்த உரிமைப்பாராட்டல் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சர்வதேச தீர்ப்புமன்றம் அதன் தீர்ப்பில் பின்வருமாறு சொன்னது: “தனிப்பட்டவர்கள் தனி அரசுகளால் கேட்கப்படும் கீழ்ப்படிதலை உட்படுத்தும் தேசிய கடமைகளையும் கடந்து நிற்கும் சர்வதேச கடமைகள் இருக்கின்றன.”
12 மேலான அதிகாரங்களுக்குத் தாங்கள் மனச்சாட்சியின் அடிப்படையில் காண்பிக்கும் கீழ்ப்படிதலுக்கு வரம்புகள் இருக்கின்றன என்பதைக் கடவுளுடைய ஊழியர்கள் எல்லாச் சமயத்திலும் மதித்துணர்ந்திருக்கின்றனர். எகிப்தில் மோசே பிறந்த அந்தச் சமயத்தின்போது, புதிதாய்ப் பிறந்த எபிரெயரின் ஆண் குழந்தைகள் எல்லாரையும் கொன்றுபோடும்படியாக இரண்டு எபிரெய மருத்துவச்சிகளுக்கு பார்வோன் கட்டளையிட்டிருந்தான். என்றபோதிலும், அந்த மருத்துவச்சிகள் குழந்தைகளை உயிரோடு காப்பாற்றினார்கள். பார்வோனுக்குக் கீழ்ப்படிய மறுத்தது தவறா? இல்லை. கடவுள் அவர்களுக்குக் கொடுத்திருந்த மனச்சாட்சியை அவர்கள் பின்பற்றினார்கள், அதற்காகக் கடவுள் அவர்களை ஆசீர்வதித்தார். (யாத்திராகமம் 1:15–20) இஸ்ரவேல் பாபிலோன் சிறையிருப்பில் இருந்தபோது, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற எபிரெயர்கள் உட்பட தன்னுடைய அதிகாரிகள் தான் தூரா சமபூமியில் நிறுத்திய சிலைக்கு முன்னால் பணியும்படி நேபுகாத்நேச்சார் கட்டளையிட்டான். அந்த மூன்று எபிரெயரும் மறுத்தனர். அவர்கள் செய்தது தவறா? இல்லை, அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படிவது கடவுளுடைய சட்டத்தை மீறுவதாக இருந்திருக்கும்.—யாத்திராகமம் 20:4, 5; தானியேல் 3:1–18.
“அரசராகக் கடவுளுக்குக் கீழ்ப்படிதல்”
13. மேலான அதிகாரங்களுக்கு சம்பந்தப்பட்டக் கீழ்ப்படிதல் காண்பித்தல் சம்பந்தமாகப் பூர்வீகக் கிறிஸ்தவர்கள் என்ன முன்மாதிரியை வைத்தனர்?
13 அதுபோல, பேதுருவும் யோவானும் இயேசுவைக் குறித்துப் பிரசங்கிப்பதை நிறுத்தவேண்டும் என்று யூத அதிகாரிகள் கட்டளையிட்டபோது, அவர்கள் கொடுத்த விடை: “தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்.” (அப்போஸ்தலர் 4:19, 5:29) அவர்கள் அமைதியாக இருக்க முடியவில்லை. கிறிஸ்தவ நூற்றாண்டு என்ற பத்திரிகை பூர்வ கிறிஸ்தவர்கள் மனச்சாட்சியின் அடிப்படையில் எடுத்த மற்றொரு நிலைநிற்கைக்குக் கவனத்தைத் திருப்புகிறது. அது சொல்லுகிறது: “பூர்வ கிறிஸ்தவர்கள் படைப்பிரிவில் சேவிக்கவில்லை. ரோலாண்டு பேய்ன்டன் குறிப்பிடுவதாவது, ‘புதிய ஏற்பாட்டுக் காலத்தின் முடிவு முதல் கி.பி. 170–180-க்குரிய பத்தாண்டுகள் வரை கிறிஸ்தவர்கள் படைப்பிரிவில் இருந்தார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை’ (போர் மற்றும் அமைதி குறித்த கிறிஸ்தவ மனநிலைகள் [அபிங்டன், 1960], பக். 67–8). . . . ஜஸ்டின் மார்ட்டர் ‘அதை வன்முறைச் செயல்களிலிருந்து விலகியிருப்பதைக் கிறிஸ்தவர்கள் ஒரு வழியாகத் தெரிந்துகொள்கிறார்கள்’ என்று சுவிஃப்ட் கூறுகிறார்.”
14, 15. மனித அதிகாரங்களுக்கு பூர்வீகக் கிறிஸ்தவர்களின் சம்பந்தப்பட்டக் கீழ்ப்படிதலை உட்படுத்திய சில பைபிள் நியமங்கள் யாவை?
14 பூர்வ கிறிஸ்தவர்கள் ஏன் போர் வீரர்களாக சேவிக்கவில்லை? ஒவ்வொருவரும் கடவுளுடைய வார்த்தையையும் சட்டங்களையும் கவனமாகப் படித்து, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனச்சாட்சியின் அடிப்படையில் தன்னுடைய சொந்த தீர்மானத்தை எடுத்தனர். அவர்கள் நடுநிலை வகித்தார்கள், “உலகத்தின் பாகமானவர்கள் அல்ல,” அவர்களுடைய நடுநிலை உலக போராட்டங்களில் எந்த ஒரு பக்கத்தையும் தெரிந்துகொள்வதைத் தடை செய்தது. (யோவான் 17:16, NW; 18:36) மேலும் அவர்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள். (2 தீமோத்தேயு 2:19) தேசத்துக்காகத் தங்களுடைய உயிரை அர்ப்பணித்தால், கடவுளுக்கு உரியதை இராயனுக்குக் கொடுப்பதை அர்த்தப்படுத்தியிருக்கும். மேலும், அவர்கள் ஒரு சர்வதேச சகோதரத்துவத்தின் பாகமாக அன்பில் ஒன்றாய்க் கட்டப்பட்டிருந்தார்கள். (யோவான் 13:34, 35; கொலோசெயர் 3:14; 1 பேதுரு 4:8; 5:9) ஓர் உடன் கிறிஸ்தவனைக் கொல்லும் சாத்தியம் இருக்கும் போராயுதங்களை அவர்கள் நல்மனச்சாட்சியின் அடிப்படையில் எடுக்கமுடியவில்லை.
15 இதோடுகூட, பேரரசர் வணக்கம் போன்ற பிரபலமாயிருக்கும் மத ஆசரிப்புகளிலும் கிறிஸ்தவர்கள் கலந்துகொள்ள முடியாதிருந்தது. இதனால், அவர்கள் “விசித்திரமான மற்றும் ஆபத்தான மக்கள்” என்று நோக்கப்பட்டனர், “மற்ற மக்கள் இயல்பாகவே அவர்களை சந்தேகித்தனர்.” (W. A. ஸ்மார்ட் எழுதிய பைபிள் இன்னும் பேசுகிறது) கிறிஸ்தவர்கள் ‘எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படவும்’ வேண்டும் என்று பவுல் எழுதிய போதிலும், யெகோவாவுக்கு அதைக்காட்டிலும் மேன்மையான பயத்தை அல்லது மரியாதையைக் காண்பிக்க அவர்கள் மறந்துவிடவில்லை. (ரோமர் 13:7; சங்கீதம் 86:11) இயேசு தாமே சொன்னார்: “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் கெஹன்னாவில் அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.”—மத்தேயு 10:28, NW.
16. (எ) மேலான அதிகாரங்களுக்குத் தங்களுடைய கீழ்ப்படிதல் சம்பந்தப்படும் என்ன அம்சங்களில் கிறிஸ்தவர்கள் கவனமாக நிதானித்துச் செயல்படவேண்டும்? (பி) பக்கம் 25-லுள்ள பெட்டி எதை எடுத்துக்காட்டுகிறது?
16 கிறிஸ்தவர்களாக நாம் அதுபோன்ற நிலைமைகளை எதிர்ப்படுகிறோம். விக்கிரகாரதனையின் நவீன அம்சங்களிலும்—ஒரு சிலை அல்லது ஒரு சின்னத்தினிடமாக வணக்கத்துக்குரிய செயல்களில், அல்லது இரட்சிப்பை ஒரு மனிதருக்கோ அல்லது அமைப்புக்கோ உரித்தாக்குவதில் நாம் பங்குகொள்ள முடியாது. (1 கொரிந்தியர் 10:14; 1 யோவான் 5:21) பூர்வீக கிறிஸ்தவர்களைப் போன்று, நம்முடைய கிறிஸ்தவ நடுநிலையை நாம் விட்டுக்கொடுக்க முடியாது.—2 கொரிந்தியர் 10:4 ஒப்பிடவும்.
‘சாந்தமும் ஆழ்ந்த மரியாதையும்’
17. மனச்சாட்சியினிமித்தம் துன்பப்படுகிறவர்களுக்குப் பேதுரு தந்த ஆலோசனை என்ன?
17 மனச்சாட்சியினிமித்தம் நாம் எடுக்கும் நிலைநிற்கையைக் குறித்து அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினான். அவன் சொன்னதாவது: “தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.” (1 பேதுரு 2:19) ஆம், துன்புறுத்தல்களின் மத்தியிலும் ஒரு கிறிஸ்தவன் உறுதியாக நிலைநிற்பது கடவுளுடைய இருதயத்திற்குப் பிரியமாயிருக்கிறது, அதில் கிறிஸ்தவனின் விசுவாசம் பலப்பட்டு புடமிடப்பட்டதாகிறது என்ற கூடுதல் நன்மையும் இருக்கிறது. (யாக்கோபு 1:2–4; 1 பேதுரு 1:6, 7; 5:8–10) பேதுரு மேலும் எழுதியதாவது: “நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து; ஆண்டவராகிய கிறிஸ்துவை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” (1 பேதுரு 3:14, 15, NW) நிச்சயமாகவே உதவியான ஆலோசனை!
18, 19. அதிகாரங்கள் நம்முடைய வணக்க சுயாதீனத்தில் கட்டுப்பாடுகளை வைத்தால் ஆழ்ந்த மரியாதையும் நியாயமான தன்மையும் கொண்ட மனப்பான்மையும் எவ்வாறு உதவியாயிருக்கும்?
18 கிறிஸ்தவர்களுடைய நிலையைத் தவறாகப் புரிந்துகொள்வதால் அல்லது கிறிஸ்தவமண்டலத்தின் மத தலைவர்கள் யெகோவாவின் சாட்சிகளை அதிகாரங்களிடம் தவறாகப் பிரதிநிதித்துவம் செய்திருப்பதால் துன்புறுத்துதல் எழும்பும்போது, அதிகாரங்களிடம் உண்மைகளைத் தெரியப்படுத்துவது அழுத்தத்தை தணிப்பதாயிருக்கும். சாந்தமும் ஆழ்ந்த மரியாதையும் கொண்டிருப்பதால் ஒரு கிறிஸ்தவன் துன்புறுத்துகிறவர்களிடம் சரீரப்பிரகாரமாய் எதிர்த்து போரிடுகிறவனாயில்லை. என்றபோதிலும், தன்னுடைய விசுவாசத்தைத் தற்காத்திட கிடைக்கப்பெறும் எல்லாச் சட்டமுறையான வழிகளையும் பயன்படுத்திக்கொள்கிறான். பின்னர் அவன் காரியங்களை யெகோவாவின் கரங்களில் சமர்ப்பித்துவிடுகிறான்.—பிலிப்பியர் 1:7; கொலோசெயர் 4:5, 6.
19 ஆழ்ந்த மரியாதை தன்னுடைய மனச்சாட்சியை மீறாமல் ஒரு கிறிஸ்தவன் தன்னாலான மட்டும் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்திருக்க வழிநடத்துகிறது. உதாரணமாக, சபைக் கூட்டங்கள் தடை செய்யப்பட்டால், கிறிஸ்தவர்கள் யெகோவாவின் மேசையில் தொடர்ந்து போஷாக்கைப் பெற்றுக்கொண்டிருக்கும்வகையில் பிறர் கவனத்தை அவ்வளவாய் ஈர்க்காத ஏதாவது ஒரு வழியைத் தெரிந்துகொள்வார்கள். உன்னத அதிகாரியாகிய யெகோவா தேவன் பவுலின் மூலம் நமக்குச் சொல்வதாவது: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபைக்கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்.” (எபிரெயர் 10:24, 25) ஆனால் அப்படிப்பட்ட கூட்டங்கள் விவேகத்தோடு நடத்தப்படலாம். ஒருசிலரே கூடிவருவதாயிருந்தாலும், அப்படிப்பட்ட ஏற்பாடுகளைக் கடவுள் ஆசீர்வதிக்கிறார் என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம்.—மத்தேயு 18:20-ஐ ஒப்பிடவும்.
20. நற்செய்தியை வெளியரங்கமாகப் பிரசங்கித்தல் தடை செய்யப்பட்டால், அந்த நிலைமையைக் கிறிஸ்தவர்கள் எவ்விதம் கையாளலாம்?
20 அதுபோல, நற்செய்தியை வெளியரங்கமாகப் பிரசங்கிப்பதை சில அதிகாரங்கள் தடை செய்திருக்கின்றன. அவர்கள் கீழ் வாழ்கிற கிறிஸ்தவர்கள் உன்னத அதிகாரி இயேசுவின் மூலம் பின்வருமாறு சொன்னதை நினைவில் கொண்டிருக்கிறார்கள்: “சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.” (மாற்கு 13:10) எனவே, தங்களுக்கு என்ன காரியம் ஏற்பட்டாலும் அவர்கள் உன்னத அதிகாரத்திற்குக் கீழ்ப்படிகிறார்கள். முடிந்தபோதெல்லாம், அப்போஸ்தலர்கள் வெளியரங்கமாகவும் வீடுகள்தோறும் பிரசங்கித்தார்கள், ஆனால் மக்களை சென்றடைவதற்கு சந்தர்ப்ப சாட்சியம் போன்ற வேறு வழிகளும் உண்டு. (யோவான் 4:7–15; அப்போஸ்தலர் 5:42; 20:20) அநேக சமயங்களில் பைபிள் மட்டும் பயன்படுத்தப்பட்டால் அதிகாரிகள் பிரசங்க வேலையில் தலையிடுவதில்லை—இது சாட்சிகள் அனைவரும் வேதவசனங்களிலிருந்து நியாயத்தை எடுத்துக்காண்பிக்க நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதைக் காண்பிக்கிறது. (அப்போஸ்தலர் 17:2, 17-ஐ ஒப்பிடவும்.) தைரியமாக, ஆனால் மரியாதையுள்ளவர்களாக இருப்பதன் மூலம் மேலான அதிகாரங்களின் கோபத்தை வருவித்துக்கொள்ளாமலேயே கிறிஸ்தவர்கள் அநேக சமயங்களில் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதற்கு வழியைக் காணக்கூடும்.—தீத்து 3:1, 2.
21. இராயன் துன்புறுத்துவதில் விடாப்பிடியாயிருந்தாலும், கிறிஸ்தவர்கள் என்ன போக்கைத் தெரிந்துகொள்ள வேண்டும்?
21 என்றபோதிலும் சில சமயங்களில் அதிகாரங்கள் கிறிஸ்தவர்களை துன்புறுத்துவதில் விடாப்பிடியாய் இருக்கின்றன. அப்பொழுது தெளிந்த மனச்சாட்சியுடன் சரியானதைச் செய்வதில் நாம் சகித்திருக்கத்தான் முடியும். இளம் ஃபிரான்ஸ் ரீட்டர் ஒரு தெரிவை எதிர்ப்பட்டான்: தன்னுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுப்பது, அல்லது மரிப்பது. அவன் கடவுளை வணங்குவதை நிறுத்தமுடியாததால், அவன் தைரியத்தோடு மரணத்தைச் சந்தித்தான். தான் மரிப்பதற்கு முந்திய இரவு தன்னுடைய தாய்க்கு எழுதினான்: “நாளைக் காலை நான் கொல்லப்பட்டிருப்பேன். கடந்த காலங்களில் எல்லாக் கிறிஸ்தவர்களிடமுமிருந்தவிதமாகவே என்னுடைய பெலன் கடவுளிடமிருந்து உண்டாயிருக்கிறது . . . நீங்கள் மரண பரியந்தம் உறுதியாயிருந்தால், நாம் மறுபடியும் உயிர்த்தெழுதலில் சந்திப்போம்.”
22. நமக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? அதுவரையும் நாம் எவ்விதம் தொடர வேண்டும்?
22 ஒரு நாள் மனிதவர்க்கம் முழுவதுமே ஒரே சட்டத்தின் கீழ், யெகோவா தேவனுடைய சட்டத்தின் கீழ் இருக்கும். அது வரையுமாக நாம் நல்மனச்சாட்சியில் கடவுளுடைய ஏற்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும், மற்றும் மேலான அதிகாரங்களுக்கு நம்முடைய சம்பந்தப்பட்ட கீழ்ப்படிதலைக் காத்துக்கொள்ள வேண்டும், அதே சமயத்தில் நம்முடைய உன்னத பேரரசராகிய யெகோவா தேவனுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்பட்டிருக்க வேண்டும்.—பிலிப்பியர் 4:5–7. (w90 11/1)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ மேலான அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பதற்குக் கண்டிப்பான காரணம் என்ன?
◻ இராயன் விதிக்கும் வரிகளைச் செலுத்துவதற்கு நாம் ஏன் தயங்கக் கூடாது?
◻ அதிகாரத்துக்கு எப்படிப்பட்ட கனத்தைச் செலுத்த வேண்டும்?
◻ இராயனுக்கு நம்முடைய கீழ்ப்படிதல் ஏன் சம்பந்தப்பட்டதாய் மாத்திரமே இருக்கிறது?
◻ கடவுளுக்கு உரியதை இராயன் வற்புறுத்திக் கேட்பதால் நாம் துன்புறுத்தப்பட்டால், அதற்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
2. மேலான அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பதற்கு நமக்கு என்ன கண்டிப்பான காரணம் இருக்கிறது?
12. அதிகாரங்கள் கேட்கும் நியாயமற்ற காரியங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தவர்களைப் பற்றிய சில வேதப்பூர்வமான உதாரணங்கள் என்ன?
[பக்கம் 27-ன் பெட்டி]
மதித்தல், வணக்கம் அல்ல
ஒரு நாள் காலை வகுப்பு நடந்துகொண்டிருக்கையில், ஆசிரியர் ஒரு மாணவியை வகுப்புக்கு வெளியே ஒருசில நொடிகள் கூட்டிச் சென்றதை, டெரா, ஓர் இளம் கானடா தேசத்து யெகோவாவின் சாட்சி கவனித்தாள். அதைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் டெராவை பள்ளி முதல்வரின் அலுவலகத்திற்குத் தன்னுடன் வரும்படி அமைதியாகச் சொன்னார்.
போன இடத்தில், பள்ளி முதல்வர் மேசையின் மீது கானடா தேசிய கொடி விரிக்கப்பட்டிருப்பதை டெரா கண்டாள். அந்தக் கொடியின் மீது எச்சில் துப்பும் படியாக ஆசிரியர் டெராவிடம் சொன்னார்! டெரா தேசிய கீதத்தைப் பாடுவதில்லை, அல்லது கொடியை வணங்குவதில்லை என்ற காரணத்தால் அவள் அப்படிச் செய்யாமலிருப்பதற்குக் காரணம் இல்லை என்பதாக அவர் சொன்னார். டெரா மறுத்தாள். யெகோவாவின் சாட்சிகள் கொடியை வணங்குவதில்லை என்றாலும், அதை அவர்கள் மதிக்கிறார்கள் என்று விளக்கினாள்.
வகுப்புக்கு வந்ததும், ஆசிரியர் தான் ஒரு பரிசோதனை நடத்தியதாக அறிவித்தார். பள்ளி முதல்வர் அலுவலகத்துக்கு இரண்டு மாணவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கூட்டிச் சென்று, அவர்களைக் கொடியின் மீது எச்சில் துப்பும்படியாகச் சொன்னார். முதல் மாணவர் தேசிய கொண்டாட்டங்களில் கலந்துகொள்கிறவள், ஆனால் அவள் அந்தக் கொடியில் துப்பும்படிச் சொன்னபோது அப்படியே செய்தாள். மாறாக, டெரா தேசிய கீதம் பாடவோ அல்லது கொடியை வணங்கவோ இல்லை; என்றபோதிலும், அவள் இந்த விதத்தில் கொடியை அவமதிக்க மறுத்தாள். சரியான மதிப்பைக் காண்பித்தவள் டெரா என்று அந்த ஆசிரியர் குறிப்பிட்டார்.—1990 யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தர புத்தகம்.