“உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாதிருங்கள்”
“பிதாக்களே, உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாதிருங்கள்.” இவ்விதமாக அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார். (எபேசியர் 6:4, NW) மேற்கத்திய நாடுகளில், தொழில்மயமாக்கப்பட்ட சமுதாயத்தின் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படும் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளை தயவாய் நடத்துவது எப்போதும் எளிதாக இருப்பதில்லை. மேலும் வளர்ந்துவரும் தேசங்களில் பிள்ளை வளர்ப்பு இதைவிட குறைவான ஒரு சவாலாக இல்லை. உண்மைதான், மேற்கத்திய நாடுகளைவிட வாழ்க்கையின் வேகம் குறைவானதாக இருக்கலாம். ஆனால் நீண்ட காலமாக நிலைத்துவந்திருக்கும் பழக்கங்களும் பாரம்பரியங்களும் நிச்சயமாகவே பிள்ளைகளுக்கு ஏமாற்றத்தை உண்டுபண்ணி, அவர்களைக் கோபப்படுத்தக்கூடிய வழிகளில் அவர்களை நடத்த பெற்றோர் மீது செல்வாக்கு செலுத்தக்கூடும்.
வளர்ந்துவரும் சில தேசங்களிலுள்ள பிள்ளைகள் அங்கீகாரம் மற்றும் மரியாதையின் ஏணியில் அடிமட்டத்தில் வைக்கப்படுகின்றனர். ஒரு சில கலாச்சாரங்களில் பிள்ளைகள் மிரட்டலாகவும் அதிகாரத் தோரணையிலும் உத்தரவிடப்படுகிறார்கள், கூக்குரலிடப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஒரு பிள்ளையிடம் பெரியவர் ஒருவர் தயவான ஒரு வார்த்தையைச் சொல்வதைக் கேட்பது அரிதாக இருக்கலாம். “தயவுசெய்து” மற்றும் “நன்றி” போன்ற மரியாதைக்குரிய வார்த்தைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தகப்பன்மார்கள் முரட்டுத்தனமான கைகளோடு தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கலாம்; கடினமான வார்த்தைகளுக்கு, நோவுதரும் அடிகள் மேலும் வலிமையைக் கூட்டுகிறது.
ஒரு சில ஆப்பிரிக்க கலாச்சாரங்களில், ஒரு பிள்ளை தானே சொந்தமாக முன்வந்து பெரியவர் ஒருவருக்கு வாழ்த்துதல் சொல்வதும்கூட பொருத்தமற்றதாக கருதப்படுகிறது. தங்கள் தலைகளில் பாரமான சுமைகள் அழுத்திக்கொண்டிருக்க, பெரியவர்களின் ஒரு தொகுதிக்கு வாழ்த்துச் சொல்ல அனுமதிக்காக பொறுமையாக இளைஞர்கள் காத்திருப்பதைக் காண்பது இங்கு வழக்கத்துக்கு மாறாக இல்லை. பெரியவர்கள், தங்களுக்கு வாழ்த்துச் சொல்ல அவர்களை அனுமதிக்கும் வரையில் காத்திருக்கும் இளைஞர்களை கண்டும் காணாதது போல இருந்து வெட்டிப்பேச்சில் ஈடுபட்டுக்கொண்டிருப்பர். அந்த வாழ்த்துதல்கள் சொல்லப்பட்ட பின்னரே பிள்ளைகள் கடந்து போக அனுமதிக்கப்படுவர்.
வறுமை, பிள்ளைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் மற்றொரு காரியமாகும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தையும் பள்ளிப் படிப்பையும் இழந்து சித்தாள்களாக சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள். வீட்டிலும்கூட நியாயமற்ற மிகுதியான வேலை பளு பிள்ளைகள் மீது வைக்கப்படலாம். கிராமப்புறப் பகுதிகளிலுள்ள குடும்பங்கள் பெரிய பட்டணங்களிலுள்ள உறவினர்களிடம் படிப்புக்காக தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கையில் அவர்கள் அநேகமாக உண்மையான அடிமைகள் போன்றே நடத்தப்படுகிறார்கள். நிச்சயமாகவே இப்படியெல்லாம் மோசமாக நடத்தப்படுவது பிள்ளைகளை கோபப்படுத்துகிறது!
‘அவர்களைக் கோபப்படுத்துவது’ எதை அர்த்தப்படுத்துகிறது
சில பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்தில் விளைவுகளைக் குறித்து சிந்தியாமல் பிரபலமாக இருக்கும் பழக்கங்களின் அலையினால் அடித்துச்செல்லப்பட தங்களை அனுமதித்துவிடுகின்றனர். என்றபோதிலும், நல்ல காரணத்தோடுதானே பிள்ளைகளை கோபப்படுத்தக்கூடாது என்று பெற்றோர்களை கடவுளுடைய வார்த்தை துரிதப்படுத்துகிறது. “கோபப்படுத்தாதீர்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் மூல கிரேக்க சொற்றொடரின் நேர் பொருள், “எரிச்சல் மூட்டாதிருங்கள்” என்பதாகும். (கிங்டம் இன்டர்லீனியர்) ரோமர் 10:19-ல் அதே வினைச்சொல், “எரிச்சல் உண்டாக்குவது” என்று மொழிபெயர்க்கப்படுகிறது.
ஆகவே இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு சொல்கிறது: “உங்கள் பிள்ளைகளை அவர்களுக்கு கோபமூட்டும் வகையில் நடத்தாதிருங்கள்.” அதேவிதமாகவே எருசலேம் பைபிள் சொல்கிறது: “உங்கள் பிள்ளைகளை சீற்றத்துக்கு துரத்தாதீர்கள்.” ஆகவே பைபிள், அபூரணத்தின் காரணமாக கவனக்குறைவில் பெற்றோர் தன் பிள்ளைக்கு ஏற்படுத்தக்கூடிய சிறிய எரிச்சலைப் பற்றி பேசிக்கொண்டில்லை, அல்லது நீதியாக கையாளப்படும் சிட்சையையும் அது கண்டனம் செய்யவில்லை. பரிசுத்த வேதாகமத்தின் பேரில் லான்ஜியின் விளக்கவுரை குறிப்பிடுகிறபடி, “பிள்ளைக்கு வெறுப்பு ஏற்பட்டு, பகைமை, எதிர்ப்பு மற்றும் கசப்புக்கு தூண்டப்படும் வகையில் . . . பிள்ளைகளை பதற்றமுடன், முரட்டுத்தனமாக, சிடுசிடுப்பாக நடத்துவதைப் பற்றியே பைபிள் பேசுகிறது.
கல்விமான் J. S. ஃப்பாரன்ட் குறிப்பிட்ட வண்ணமாகவே: “உண்மையென்னவெனில் பிள்ளைகள் மனிதர்களாக இருக்கின்றனர். தாவரங்கள் தங்கள் சுற்றுப்புறத்துக்கு பிரதிபலிப்பது போல அவர்கள் வெறுமென மந்தமான ஒரு வகையில் பிரதிபலிப்பதில்லை. அவர்கள் எதிர்ச்செயலாற்றுகிறார்கள். அநேகமாக அநியாயமாக நடத்தப்படுவதற்கு எதிர்செயல், ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அழிவில் விளைவடைகிறது. பிரசங்கி 7:7 சொல்கிறது: “இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்.”
கடவுளுடைய சிட்சையில் பிள்ளைகளை வளர்த்தல்
சத்தியத்தில் தங்கள் பிள்ளைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிற பெற்றோர், தங்கள் பிள்ளைகளை எவ்வாறு வளர்ப்பார்கள் என்பதை கலாச்சார தராதரங்களும் பாரம்பரியங்களும் மட்டுமே தீர்மானிக்கும்படியாக அனுமதிக்கக்கூடாது. (3 யோவான் 4-ஐ ஒப்பிடவும்.) பிள்ளைகளை கோபப்படுத்துவது குறித்து பெற்றோரை எச்சரித்த பின்பு, பவுல் மேலுமாக சொன்னார்: “யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும் வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4, NW) இவ்விதமாக உள்ளூர் பழக்கங்களுக்கும் கருத்துகளுக்கும் பதிலாக யெகோவாவின் தராதரங்கள் வைக்கப்படுகிறது.
ஒரு சில தேசங்களில் பிள்ளைகளை கீழ்த்தரமானவர்களாகவும் அடிமை வேலையாட்களாகவும் நடத்துவது பொதுவான பழக்கமாக இருந்தபோதிலும், பைபிள் சங்கீதம் 127:4-ல் இவ்விதமாகச் சொல்கிறது: “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் (யெகோவாவால், NW) வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.” ஒரு பெற்றோர் அவருடைய சுதந்திரத்தை துர்ப்பிரயோகம் செய்யும் வகையில் நடத்தினால் கடவுளோடு ஒரு நல்ல உறவை காத்துக்கொள்ள முடியுமா? முடியாது. பெற்றோரின் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக மாத்திரமே பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற கருத்துக்கும் இடமில்லை. 2 கொரிந்தியர் 12:14-ல் பைபிள் நமக்கு இவ்விதமாக நினைப்பூட்டுகிறது: “பெற்றோருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டும்.”
வீட்டிலுள்ள வேலைகளிலும் கடமைகளிலும் பிள்ளைகள் தங்கள் பங்கைச் செய்வதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதல்ல, ஆனால் பிள்ளையின் சொந்தமான மிகச் சிறந்த அக்கறைகள் தாமே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமல்லவா? உதாரணமாக ஆப்பிரிக்காவில் யா என்ற ஒரு கிறிஸ்தவ பெண்ணிடம் அவளுக்கு அவள் பெற்றோர் என்ன செய்யவேண்டும் என்று மிகவும் விரும்புகிறாள் என்று கேட்ட போது அவள் இவ்வாறு பதிலளித்தாள்: “வெளி ஊழிய ஏற்பாடுகள் எனக்கிருக்கும் நாட்களில் என்னுடைய வீட்டு வேலைகள் குறைக்கப்படுவதை நான் விரும்புகிறேன்.” ஆக வீட்டு வேலை சுமையின் காரணமாக ஒரு பிள்ளை பள்ளிக்கோ அல்லது கூட்டத்துக்கோ நேரத்துக்குச் செல்வதைக் கடினமாகக் காணுமேயானால், ஒரு சில மாற்றங்களைச் செய்வது மிகச் சிறந்ததாக இருக்குமல்லவா?
பிள்ளைகளை கையாளுவது கடினமானதாக இருக்கக்கூடும் என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது. பெற்றோர் எவ்விதமாக பழிதூற்றாத அல்லது கோபப்படுத்தாத வகையில் அவர்களை கையாளலாம்? நீதிமொழிகள் 19:11 சொல்கிறது: “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்.” ஆம், முதலாவது தனிப்பட்ட ஒரு நபராக உங்கள் பிள்ளையை புரிந்துகொள்ள நீங்கள் முற்படலாம். ஒவ்வொரு பிள்ளையும் அவனுடைய சொந்த அக்கறைகள், திறமைகள் மற்றும் தேவைகளோடு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இவை யாவை? உங்கள் பிள்ளையோடு பழகி அவனை அறிந்து கொண்டு இந்தக் கேள்விக்கு பதிலை கற்றறிய நீங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்வது, தொழுது கொள்வது, குடும்ப பொழுதுபோக்கில் ஈடுபடுவது—இந்தக் காரியங்கள் பிள்ளைகளோடு நெருங்கிவர பெற்றோருக்கு சந்தர்ப்பங்களை அளிக்கின்றது.
2 தீமோத்தேயு 2:22-ல், பவுல் தீமோத்தேயுவிடம் பின்வருமாறு சொன்னபோது மற்றொரு அக்கறையூட்டும் குறிப்பைச் சொன்னார்: “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு.” ஆம் பாலிய பருவம் கொந்தளிப்பான ஒரு காலப்பகுதியாக இருக்கக்கூடும் என்பதை பவுல் புரிந்துகொண்டிருந்தார். குறிப்பிடத்தக்க சரீரப்பிரகாரமான மற்றும் உணர்ச்சி சம்பந்தமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. எதிர்பாலரிடம் கவர்ச்சி வளருகிறது. இந்தச் சமயத்தின் போது, கவலைக்குரிய படுகுழிகளைத் தவிர்ப்பதற்கு இளைஞருக்கு முதிர்ச்சியுள்ள மற்றும் அன்புள்ள வழிநடத்துதல் அவசியமாகும். ஆனால் அவர்கள் ஒழுக்கங் கெட்டவர்கள் போல நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கிறிஸ்தவ மனிதனின் எரிச்சலூட்டப்பட்ட மகள் இவ்வாறு புலம்பினாள்: “நான் வேசித்தனம் செய்யாதிருந்து ஆனால் என் அப்பா அவ்விதமாக என்னை குற்றஞ்சாட்டினால், நான் துணிந்து அதை செய்துவிடுவதே மேல்.” தவறான உள்நோக்கங்களை ஏற்றிச் சொல்வதற்குப் பதிலாக உங்கள் பிள்ளையில் நம்பிக்கையை வெளியிடுங்கள். (2 தெசலோனிக்கேயர் 3:4 ஒப்பிடவும்.) குறை காண்பதற்குப் பதிலாக அன்பாக, உறுதியாக, அவர்களிடத்தில் உங்களை வைத்துக் காண்பவர்களாகவும் பகுத்துணருகிறவர்களாகவும் இருங்கள்.
ஒரு பிள்ளை எதிர்ப்படும் ஒழுக்க சம்பந்தமான ஆபத்துகளை முன்கூட்டியே பெற்றோர் கலந்து பேசுவார்களேயானால், அநேக பிரச்னைகளை தடுத்திட முடியும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பயிற்றுவித்து கடவுளுடைய வார்த்தையை அவர்களுக்கு கற்பிக்கும்படியான பொறுப்பை கடவுள் பெற்றோருக்கு கொடுத்ததை நினைவில் வையுங்கள். (உபாகம் 6:6, 7) அது கணிசமான நேரத்தையும் முயற்சியையும் தேவைப்படுத்தும். ஒரு சில பெற்றோர் பொறுமை இல்லாததன் காரணமாக தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் போதிக்கும் வேலையை நிறைவேற்ற தவறிவிடுவது வருத்தத்திற்குரியதாகும். வளர்ந்துவரும் அநேக தேசங்களில் பெரும் பிரச்னையாக இருக்கும் எழுத்தறிவின்மை மற்ற பெற்றோர்களுக்கு தடையாக இருக்கிறது.
ஒரு சில சந்தர்ப்பங்களில், முதிர்ச்சி வாய்ந்த ஒரு கிறிஸ்தவர் உதவி செய்யும் பொருட்டு அழைக்கப்படலாம். அது குறைந்த அனுபவமுள்ள பெற்றோருக்கு வெறுமென ஆலோசனைகளை வழங்கும் ஒரு காரியமாக இருக்கலாம். (நீதிமொழிகள் 27:17) அல்லது ஒரு குடும்ப பைபிள் படிப்பையே நடத்தி உதவி செய்வதை அது உட்படுத்தக்கூடும். ஆனால் இது பெற்றோரை கடவுளுடைய வார்த்தையை தங்களுடைய பிள்ளைகளுக்கு கற்பிக்கும் உத்தரவாதத்திலிருந்து அவர்களை விடுவிப்பதில்லை. (1 தீமோத்தேயு 5:8) வெளி ஊழியத்தில் தன்னுடைய பிள்ளைகளோடு வேலையைச் செய்யவும், சாப்பாட்டு வேளைகளில் அல்லது மற்ற பொருத்தமான சந்தர்ப்பங்களில் ஆவிக்குரிய விஷயங்களை கலந்து பேசவும் அவர் முயற்சி எடுக்கலாம்.
முழு வளர்ச்சி பருவத்தை நெருங்கிவரும் ஓர் இளைஞன் அதிகமான சுதந்தரத்தை இயற்கையாகவே விரும்பக்கூடும். அநேகமாக இது கலகம் என்றோ அல்லது திமிர் என்றோ தவறாக புரிந்து கொள்ளப்படலாம். பெற்றோர் அவனை ஒரு சிறு பிள்ளையைப் போல நடத்தி, அவனுடைய செயல்களில் அதிகமாக சுதந்திரத்தை கொடுக்க மறுப்பதன் மூலம் பிரதிபலித்தால் அது எவ்வளவு எரிச்சலூட்டுவதாக இருக்கக்கூடும்! அவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும்—கல்வி, வாழ்க்கைப்பணி, திருமணம்—அவனோடு அமைதியாகவும், மரியாதைக்குரிய ஒரு முறையிலும் கலந்து பேசாமல் முடிவெடுப்பதும்கூட அதேவிதமாகவே சினமூட்டுவதாக இருக்கும். (நீதிமொழிகள் 15:22) அப்போஸ்தலனாகிய பவுல், உடன் கிறிஸ்தவர்களை “புத்தியிலோ தேறினவர்களாயிருக்கும்”படியாக துரிதப்படுத்தினார். (1 கொரிந்தியர் 14:20) தங்களுடைய சொந்த பிள்ளைகள்—உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாயும்—வளரவேண்டும் என்று பெற்றோர் விருப்பப்பட வேண்டாமா? என்றபோதிலும் ஓர் இளைஞனின் “பகுத்துணரும் ஆற்றல்” “உபயோகத்தால்” மாத்திரமே பயிற்றுவிக்கப்பட முடியும். (எபிரெயர் 5:14, NW) அவைகளை உபயோகிக்க, அவனுக்கு தெரிவு செய்யும் சுயாதீனம் ஓரளவுக்கு வழங்கப்பட வேண்டும்.
கடினமான இந்த நாட்களில் பிள்ளைகளை வளர்ப்பது எளிதல்ல. ஆனால் கடவுளுடைய வார்த்தையை பின்பற்றும் பெற்றோர், தங்கள் பிள்ளைகள், “திடனற்றுப் போகாதபடி” அவர்களை கோபப்படுத்துவதோ அல்லது எரிச்சலூட்டுவதோ கிடையாது. (கொலோசெயர் 3:21) மாறாக அவர்களை அனலோடும், புரிந்துகொள்ளுதலோடும் கண்ணியத்தோடும் நடத்த முற்படுகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் வழிநடத்தப்படுகிறார்கள், துரத்தப்படுவதில்லை; பேணி வளர்க்கப்படுகிறார்கள், அசட்டை செய்யப்படுவதில்லை; அன்பு செலுத்த தூண்டப்படுகிறார்கள், கோபத்துக்கோ அல்லது ஏமாற்றத்துக்கோ தூண்டப்படுவதில்லை. (w91 10/1)
[பக்கம் 31-ன் படம்]
கானாவில் “பல்லாங்குழி” என்ற வீட்டுக்குள் இருந்து விளையாடும் ஒரு விளையாட்டு இந்தப் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளோடு கூட்டுறவு கொள்ள வாய்ப்பளிக்கிறது