உங்கள் எதிர்காலத்தை விதி தீர்மானிக்கிறதா?
நீங்கள் மரணம் ஏற்பட்டிருக்கக்கூடிய விபத்தினின்று தப்பித்துக் கொண்டால் விதியால் சலுகைக்காட்டப்பட்டதாய் உணர்வீர்களா? அல்லது சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்ததற்காக நன்றி உணர்வுடனிருப்பீர்களா?
ஞானியாகிய சாலொமோன் சொன்னார்: “நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச் செயலும் [சமயமும் எதிர்பாராத சம்பவமும், NW] நேரிட வேண்டும்.” (பிரசங்கி 9:11) எவ்வளவு அடிக்கடி எதிர்பாராதது நடக்கின்றது! வெற்றி பெறக்கூடிய விளையாட்டு வீரன் காயமடைகின்றான், தோல்வியடையக் கூடியவன் வெற்றி பெறுகின்றான். எதிர்பாராத ஒரு விபத்து, ஒரு நேர்மையான வியாபாரிக்கு பொருளாதார அழிவைக் கொடுத்து, நேர்மையில்லாத அவருடைய போட்டியாளனைப் பணக்காரனாக அனுமதிக்கிறது. சாலொமோன் இந்த முறைகேடுகளுக்கு விதியை காரணங்காட்டுகிறாரா? இல்லவே இல்லை. இவைகள் வெறுமென ‘சமயமும் எதிர்பாராத சம்பவங்களும்’ ஏற்படுவதன் விளைவுகள் ஆகும்.
இயேசு கிறிஸ்து இதுபோன்ற ஒரு குறிப்பைச் சொன்னார். அவருக்கு செவிசாய்த்துக்கொண்டிருந்தவர்கள் பொதுவாக அறிந்திருந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு இயேசு கேட்டார்: “சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டு பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?” (லூக்கா 13:4) இயேசு இந்த மரணங்களுக்காக விளக்கமுடியாத விதியையோ அல்லது கடவுளுடைய சித்தத்தையோ குற்றப்படுத்தவில்லை, அன்றியும் பலியானவர்கள், மற்றவர்களைவிட ஏதோவொரு விதத்தில் கண்டிக்கப்படத்தக்கவர்களென்றோ அவர் நம்பவில்லை. இந்த சோக விபத்தானது வெறுமென சமயம் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதற்கு மற்றுமொரு உதாரணமாகும்.
நம்முடைய மரணத்தின் நேரத்தைக் கடவுள் முன்குறிக்கின்றார் என்ற கருத்துக்கு பைபிள் எந்த இடத்திலும் ஆதரவு கொடுக்கவில்லை. “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு, நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு,” என்று பிரசங்கி 3:1, 2 சொல்வது உண்மையே. எனினும் சாலொமோன், அபூரண மனிதகுலத்தைப் பாதிக்கின்ற, பிறப்பு மற்றும் இறப்பின் தொடர்ச்சியான சுழற்சியைப் பற்றியே வெறுமென பேசிக்கொண்டிருக்கிறார், நாம் பிறக்கிறோம், காலம் வரும்போது, பொதுவாக எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலத்தை அடையும்போது—அநேகமாக 70 அல்லது 80 வருடங்களுக்குப் பின்—நாம் இறக்கிறோம். இருந்தாலும், ஒரு விவசாயி “நடுவதற்கு” அல்லது “நட்டதைப் பிடுங்குவதற்கான” நொடியை தீர்மானிப்பது எவ்விதம் முன்குறிக்கப்படுவதில்லையோ, அவ்வாறே மரணத்தின் சரியான நொடியும் முன்குறிக்கப்படுவதில்லை.
உண்மையில், ஒருவர் உரிய காலத்திற்கு முன்னால் சாகக்கூடும் என்று சாலொமோன் பின்னர் சொல்கிறார்: “மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்கு முன்னே நீ ஏன் சாகவேண்டும்?” (பிரசங்கி 7:17) ஒருவருடைய மரணத்தின் நேரம் மாற்றமுடியாதபடி முன்குறிக்கப்பட்டிருந்தால் இந்த அறிவுரைக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? எனவே பைபிள் விதிக் கொள்கையைத் தள்ளிவிடுகிறது. இந்தப் புறமதக் கருத்தைத் தங்களுடையதாக்கிக் கொண்ட விசுவாச துரோக இஸ்ரவேலர், கடவுளால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டனர். ஏசாயா 65:11 சொல்கிறது: “ஆனாலும் கர்த்தரை [யெகோவாவை, NW] விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து, காத் என்னும் தெய்வத்துக்குப் [அதிர்ஷ்ட தெய்வத்துக்கு, NW] பந்தியை ஆயத்தம் பண்ணி, மேனி என்னும் தெய்வத்துக்குப் [விதியின் தெய்வத்துக்கு NW] பானபலியை நிறைய வார்க்கிறவர்களே.”
அப்படியென்றால், விபத்துகளுக்கும் எதிர்பாரா இடையூறுகளுக்கும் விதியையோ அல்லது அதைவிட மோசமாகக் கடவுளையோ காரணமாக்குவது எவ்வளவு முட்டாள்தனம்! “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” என்று சொல்கிறது பைபிள். மனிதரின் அவலநிலையின் படைப்பாளராக அவரைக் குற்றப்படுத்துவது இந்த அடிப்படை உண்மைக்கு முரணாக உள்ளது.—1 யோவான் 4:8.
எதிர்காலத்துக்கான கடவுளுடைய நோக்கங்கள்
ஆனால் இரட்சிப்புக்கான நம்முடைய வாய்ப்புகள் பற்றியது என்ன? தவிர்க்க முடியாத விதி நம்முடைய வாழ்வைக் கட்டுப்படுத்தவில்லை என்பதால் நாம் நோக்கமற்று செயலற்று இருக்க வேண்டும் என்பதை அது அர்த்தப்படுத்துமா? நிச்சயமாகவே இல்லை, ஏனெனில் கடவுள் மனிதவர்க்கத்தின் பொதுவான எதிர்காலத்தை நிர்ணயித்திருக்கிறார். பைபிள் “நீதி வாசமாயிருக்கும்” “ஒரு புதிய பூமியின்” சிருஷ்டிப்பைப் பற்றி பேசுகிறது.—2 பேதுரு 3:13.
இதைச் செய்துமுடிப்பதற்கு, கடவுள் மனிதகுலத்தின் காரியங்களில் நேரடியாக தலையிடுவார். விஷயம் தெரியாது, இது நடப்பதற்காக நீங்கள் இந்த ஜெபத்தை மனப்பாடமாக ஒப்பிப்பதன் மூலம் ஜெபித்திருக்கலாம்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10) இந்த ராஜ்யம், பரலோகங்களில் நிறுவப்பட்டுள்ள ஓர் உண்மையான அரசாங்கம். இது வருவதற்காக ஜெபிப்பதினால், பூமியின் மேல் இன்றைய அரசுகள் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டை அவர்களிடமிருந்து அந்த ராஜ்யம் எடுத்துக் கொள்வதற்காக நீங்கள் ஜெபிக்கிறீர்கள்.—தானியேல் 2:44.
உங்களுடைய சொந்த எதிர்காலத்தைப் பாதுகாத்தல்
இந்த வியத்தகு நிகழ்ச்சிகள் உங்கள் எதிர்காலத்தை எப்படி பாதிக்குமென்பது, விதியிலோ அல்லது சமயம் மற்றும் எதிர்பாராத சம்பவங்களிலோ சார்ந்து இல்லை, ஆனால் நீங்கள் என்ன வழியைத் தெரிவு செய்கிறீர்கள் என்பதில்தான் சார்ந்துள்ளது. சீலோவாம் கோபுரத்தின் சோக விபத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஓர் அழுத்தமான பாடத்தைக் கற்பிக்க இயேசு அந்தச் சோக நிகழ்ச்சியைப் பயன்படுத்தினார். கோபுரம் சரிந்ததினால் மாண்டவர்கள், அவர்களுக்கு நேரிட்டதிலிருந்து தப்ப முடியவில்லை. மறுபட்சத்தில், இயேசுவுக்கு செவிசாய்த்துக் கொண்டிருந்தோர் தெய்வீக சினத்தினால் விளையும் அழிவைத் தவிர்க்க முடியும். இயேசு அவர்களை எச்சரிக்கிறார்: “நீங்கள் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப் போவீர்கள்.” (லூக்கா 13:4, 5) தெளிவாகவே, அவர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தெரிவு செய்யக்கூடும்.
இதே வாய்ப்பு இன்று நமக்கும் நீட்டப்படுகிறது—நம்முடைய சொந்த இரட்சிப்பு நிறைவேறப் பாடுபடுதல். (பிலிப்பியர் 2:12) “எல்லா மனுஷரும் . . . சத்தியத்தை அறிகிற அறிவை அடைய” தேவன் விரும்புகிறார். (1 தீமோத்தேயு 2:4) மேலும், நாம் ஒவ்வொருவரும் பரம்பரையினாலும், பின்னணியினாலும் ஓரளவு பாதிக்கப்பட்டாலும் கடவுள் தெரிவு செய்யும் சுயாதீனத்தைத் தந்திருக்கிறார்—நம்முடைய வாழ்க்கையை எவ்விதம் நாம் உபயோகிக்க விரும்புகிறோம் என்பதை நிர்ணயிக்கும் சக்தியைத் தந்திருக்கிறார். (மத்தேயு 7:13, 14) நாம் சரியானதையோ அல்லது தவறானதையோ செய்யக்கூடும். நாம் யெகோவா தேவனுடன் சாதகமான நிலைநிற்கையைக் கொண்டு வாழ்வைப் பெறக்கூடும் அல்லது அவருக்கு எதிராகத் திரும்பி சாகக்கூடும்.
அநேகர் கடவுளைச் சாராது வாழ்வதைத் தெரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் உலகப் பொருள், இன்பம் அல்லது புகழ் ஆகியவற்றைத் தேடுவதற்காக தங்கள் வாழ்க்கை முழுவதையும் செலவழிக்கின்றனர். ஆனால் இயேசு எச்சரித்தார்: “பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.” (லூக்கா 12:15) அப்படியென்றால் நம் ஜீவன் எதைச் சார்ந்திருக்கிறது? 1 யோவான் 2:15–17-ல் பைபிள் விவரிக்கிறது: “உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள் . . . ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்து போம், தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”
ஜீவனைத் தெரிந்தெடுத்தல்
நீங்கள் உண்மையிலேயே கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறீர்கள் என்று எவ்வாறு நிச்சயப்படுத்திக் கொள்ளக்கூடும்? இயேசு அறிவித்தார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) பைபிளிலிருந்து வரும் திருத்தமான அறிவு விசுவாசத்திற்கான அடிப்படையைத் தருகின்றது. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6) நீங்கள் அடைய வேண்டிய அறிவானது தடையின்றி கிடைக்கின்றது. ஓர் ஒழுங்கான பைபிள் படிப்பின் மூலமாக லட்சக்கணக்கானோர் அதை அடைய யெகோவாவின் சாட்சிகள் உதவியுள்ளனர்.a
கடவுளைப் பிரியப்படுத்த நீங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். மேற்கொள்ள வேண்டிய கெட்ட பழக்கங்களோ அல்லது நிறுத்தப்பட வேண்டிய ஒழுக்கமற்ற பழக்கங்களோகூட சில இருக்கலாம். உங்களால் மாறவே முடியாது என்பது போல மாற்றங்கள் செய்வதற்கான முயற்சிகளை கைவிட்டுவிடாதீர்கள். காரியங்கள் மாறாது என்ற கருத்து விதியாகிய பொய்க் கோட்பாட்டிலிருந்து பெறப்பட்டதாகும். யெகோவாவின் உதவியுடன் “மனம் புதிதாகி,” “புதிய மனுஷனை” அடைய யாராலும் கூடும். (ரோமர் 12:2; எபேசியர் 4:22–24) கடவுளைப் பிரியப்படுத்தும் உங்கள் முயற்சி கவனிக்கப்படாமல் போகாது. தம்முடைய சித்தத்தைச் செய்கிறவர்களை ஆசீர்வதிக்க அவர் தயாராக இருக்கிறார்.
ஒப்புக்கொள்ளும் விதமாகவே, பைபிளைக் கற்பது உங்களுடைய எல்லா பிரச்னைகளையும் தீர்க்காது. மற்றவர்களைப் போன்று, கடவுளுடைய உண்மை ஊழியர்களும் விபத்துகளுக்கும், எதிர்ப்பான சூழ்நிலைமைகளுக்கும் உள்ளாகின்றனர். எனினும், துன்பத்தைச் சமாளிப்பதற்குக் கடவுளால் ஞானத்தை நமக்குத் தரமுடியும். (யாக்கோபு 1:5) அதோடுகூட, ஒருவருக்குக் கடவுளுடன் ஒரு நல்ல உறவு இருப்பதை அறிவது மகிழ்ச்சியைத் தருகிறது. நீதிமொழிகள் 16:20 சொல்கிறது: “கர்த்தரை (யெகோவாவை, NW) நம்புகிறவன் பாக்கியவான்.”
கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் திரும்ப நிலைநாட்டப்படும் பரதீஸில், இனிமேலும் சமயம் மற்றும் எதிர்பாரா சம்பவங்களினால் பயமுறுத்தப்படுவதாக நாம் உணரமாட்டோம். உண்மையில், இன்று மனிதனுடைய மகிழ்ச்சியைக் கெடுக்கும் எல்லா காரியங்களையும் கடவுள் அகற்றிப் போடுவார். “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்து போயின,” என்று பைபிள் வாக்களிக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:4) விபத்துகளில் மாண்ட கணக்கற்றோர் உயிர்த்தெழுதலை அனுபவிப்பர்.—யோவான் 5:28, 29.
நீங்கள் இந்த மகிமையான எதிர்காலத்தை சுதந்தரிப்பீர்களா? வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே இஸ்ரவேலர் பிரவேசிக்க இருந்த போது மோசே அவர்களிடம் சொன்னார்: “நான் ஜீவனையும், மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன்; நீயும், உன் சந்ததியும் பிழைக்கும்படி நீ ஜீவனைத் தெரிந்து கொண்டு, உன் தேவனாகிய கர்த்தரில் (யெகோவாவில், NW) அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும், தீர்க்காயுசுமானவர்.”—உபாகமம் 30:19, 20.
இல்லை, இரக்கமற்ற விதியின் கைகளிலே நாம் சதுரங்க ஆட்டக் காய்களல்ல. உங்களுடைய எதிர்கால மகிழ்ச்சி, உண்மையில் உங்களுடைய நித்திய எதிர்காலம் உங்கள் கைகளிலிருக்கிறது. ஜீவனைத் தெரிவு செய்யும்படி உங்களை நாங்கள் தூண்டுகிறோம். (w91 10⁄15)
[அடிக்குறிப்புகள்]
a இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதுவதன் மூலம் இப்படிப்பட்ட ஒரு படிப்பு ஏற்பாடு செய்யப்படலாம்.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
புறமதத்தினுடைய விதியைப் பற்றிய பொதுகருத்தை ஏற்றுக்கொண்டதற்காக விசுவாசதுரோக இஸ்ரவேலர் கடவுளால் கடுமையாக கண்டனம் செய்யப்பட்டார்கள்