விதியில் நம்பிக்கை வைக்கும்படி பைபிள் கற்பிக்கிறதா?
நற்பெயருக்கு அவமதிப்பு! பழிதூற்றுதல்! சமுதாயத்தில் மதிப்புக்குரிய நபர் ஒருவர் தன் நற்பெயர் அல்லது நன்மதிப்பு பொய்யான அறிக்கையால் கெடுக்கப்பட்டதைக் குறித்து அறிய வரும்போது, அவர் விஷயங்களை சரிசெய்வதற்கு கட்டாயப்படுத்தப்படுவதாக உணருகிறார். அவர் அந்த அவமதிப்புக்கு பொறுப்பாய் இருந்தவர்களுக்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கையும்கூட எடுக்கலாம்.
விதியின் பேரில் நம்பிக்கை உண்மையில் சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு எதிரான பழிதூற்றுதல் ஆகும். மனிதவர்க்கத்தை அல்லல்படுத்தும் எல்லா சோக நிகழ்ச்சிகளுக்கும், எதிர்பாரா இடையூறுகளுக்கும் கடவுள் தனிப்பட்டவிதமாய் பொறுப்புள்ளவராக இருக்கிறார் என்று விதி என்னும் அந்த கோட்பாடு உரிமை பாராட்டுகிறது. நீங்கள் விதியின் மீது நம்பிக்கை வைத்திருந்தால், சர்வலோக பேரரசர் பட்டியல் ஒன்றை தொகுத்து வைத்திருக்கிறார் என்றும் அது பின்வரும் காரியங்களை வாசிப்பது போல் இருக்கிறது என்றும் நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்: ‘இன்று ஜான் கார் விபத்தில் காயமடைவான், ஃபட்டுவுக்கு மலேரியா காய்ச்சல் வரும், மமடுவின் வீடு புயலினால் அழிக்கப்படும்’! அப்படிப்பட்ட ஒரு கடவுளை சேவிப்பதற்கு நீங்கள் உண்மையில் தூண்டப்பட முடியுமா?
‘ஆனால் நம்முடைய இன்னல்களுக்கு கடவுள் பொறுப்புள்ளவராய் இல்லையென்றால், பின்னே யார் அவற்றிற்கு பொறுப்பாளி?’ என்று விதியின் பேரில் நம்பிக்கை வைத்திருப்போர் கேட்கின்றனர். முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த யூஸ்மான் என்ற இளம் மனிதன் இதைக் குறித்து தானாகவே சிந்தித்துப் பார்த்தான். ஆனால் உண்மையைக் கண்டுபிடிக்க அவன் ஊகிக்கவோ அல்லது கற்பனை செய்யவோ வேண்டிய அவசியமிருக்கவில்லை. கடவுள் தம்முடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளில் காணப்படும் போதனைகளின் மூலம் தம்மீது ஏற்பட்டுள்ள இந்தப் பழிதூற்றுதலை துடைத்தழித்திருக்கிறார் என்பதை அவன் கற்றறிந்தான். (2 தீமோத்தேயு 3:16) அப்படியென்றால் இந்தப் பொருளின் பேரில் பைபிள் என்ன சொல்கிறது என்பதை நாம் சிந்திப்போம்.
யார் பொறுப்பாளி?
வெள்ளங்கள், புயல்கள், நிலநடுக்கங்கள்—இப்படி திடீரென நேரிடும் அழிவுகள் பெரும்பாலும் கடவுளின் செயல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும், அப்படிப்பட்ட பேரழிவுகளை கடவுள் உண்டாக்குகிறார் என்று பைபிள் குறிப்பிடுவதில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கில் சம்பவித்த ஒரு சோக நிகழ்ச்சியை சிந்தித்துப் பாருங்கள். திடீரென்று நேரிட்ட இந்த அழிவிலிருந்து தப்பிப்பிழைத்த ஒரே நபர் அளித்த அறிக்கையை பைபிள் நமக்கு இவ்வாறு சொல்கிறது: “வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி [பெரும்பாலும் மின்னலை அர்த்தப்படுத்தும் எபிரெய சொல்] விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது.”—யோபு 1:16.
இந்த திகிலடைந்த மனிதன் கடவுளே அந்த அக்கினிக்கு பொறுப்பாளி என்று ஒருவேளை நினைத்திருந்தாலும், அவர் அதற்கு பொறுப்பாளி அல்ல என்று பைபிள் காண்பிக்கிறது. நீங்களே யோபு 1:7-12-ஐ வாசித்துப் பாருங்கள்; அந்த மின்னல் கடவுளால் அல்ல, ஆனால் அவருடைய எதிராளியாகிய பிசாசாகிய சாத்தானால் உண்டானது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்! எல்லா எதிர்பாரா இடையூறுகளுமே சாத்தானின் நேரடியான செயல்கள் அல்ல. கடவுளை குற்றப்படுத்துவதற்கு எந்தக் காரணமுமில்லை என்பது தெளிவாயிருக்கிறது.
உண்மையில், காரியங்கள் தவறாக நடக்கையில் அதற்கான காரணம் பெரும்பாலும் ஜனங்களே. பள்ளியில், வேலை செய்யுமிடத்தில், அல்லது மனித உறவுகளில் தோல்வியுறுதல் போன்றவை முயற்சியும் நல்ல பயிற்றுவிப்பும் குறைவுபடுவதனால் அல்லது ஒருவேளை மற்றவர்கள் பேரில் கரிசனை காண்பிப்பதில் குறைவுபடுவதனால் விளைவடையலாம். அதேபோல், நோய்கள், விபத்துக்கள், மரணங்கள் ஆகியவை கவனக்குறைவின் விளைவுகளாக இருக்கலாம். வாகனங்களை ஓட்டுகையில் வெறுமனே ஒரு சீட் பெல்ட்டை அணிந்துகொள்வது, ஒருவர் கார் விபத்தில் உயிரிழக்கும் சாத்தியத்தை பெருமளவில் குறைத்துவிடுகிறது. மாற்றியமைக்க முடியாத “விதி” விஷயங்களை கட்டுப்படுத்திக் கொண்டிருந்ததென்றால், ஒரு சீட் பெல்ட் எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணாது. சரியான மருத்துவ கவனிப்பும் சுகாதார ஏற்பாடுகளும்கூட உரியகாலத்திற்கு முன்பே இறந்து போகும் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்கின்றன. “கடவுளின் செயல்கள்” என்று பொதுவாக வகைப்படுத்தப்படும் சில பேரழிவுகளும்கூட உண்மையில் மனிதனுடைய செயல்களாக இருக்கின்றன—பூமியை மனிதன் மோசமாக நிர்வகிப்பதன் காரணமாக பரம்பரையாக விட்டுச்சென்றிருக்கும் விசனகரமான காரியங்களே அவை.—ஒப்பிடுக: வெளிப்படுத்துதல் 11:18.
“சமயமும் எதிர்பாரா சம்பவங்களும்”
காரணங்கள் தெளிவாக இல்லாமலிருக்கும் அநேக வருத்தந்தரும் சம்பவங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் பைபிள் பிரசங்கி 9:11-ல் (NW) என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள்: “நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் எதிர்பாரா சம்பவங்களும் நேரிட வேண்டும்.” ஆகையால் விபத்துக்களுக்கு சிருஷ்டிகர் காரணமாய் இருக்கிறார் அல்லது விபத்துக்களுக்கு உட்படுபவர்கள் ஏதோ ஒரு வழியில் தண்டிக்கப்படுகின்றனர் என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
இயேசு கிறிஸ்துதாமே விதியைப் பற்றிய விளக்கத்துக்கு எதிராக தர்க்கித்தார். தமக்குச் செவிகொடுத்து கேட்டுக்கொண்டிருந்தவர்கள் நன்றாக அறிந்திருந்த சோக நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, இயேசு கேட்டார்: “சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (லூக்கா 13:4, 5) கடவுள் குறுக்கிட்டதால் அந்தப் பேரழிவு ஏற்படவில்லை, ஆனால் ‘சமயமும் எதிர்பாரா சம்பவமுமே’ அதற்கு காரணம் என்று இயேசு தெளிவாக கூறினார்.
அபூரணத்தின் அழிவுண்டாக்கும் பாதிப்புகள்
ஆனால், மரணமும் நோயும் ஏற்படுவதற்கு காரணங்கள் விளக்கமுடியாமல் இருப்பதைப் பற்றியென்ன? மானிடரின் இந்நிலையைப் பற்றி பைபிள் இந்த நேரடியான விவரிப்பை அளிக்கிறது: “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறார்கள்.” (1 கொரிந்தியர் 15:22) நம்முடைய முற்பிதாவாகிய ஆதாம், கீழ்ப்படியாமை என்ற பாதையின் மீது நடைபோட ஆரம்பித்தது முதற்கொண்டு மரணம் மனிதவர்க்கத்தை அல்லல்படுத்தியிருக்கிறது. கடவுள் எச்சரித்திருந்தபடியே, ஆதாம் தன் சந்ததியாருக்கு மரணத்தை விட்டுச் சென்றிருக்கிறான். (ஆதியாகமம் 2:17; ரோமர் 5:12) அப்படியென்றால், கடைசியில், எல்லா நோய்களுக்கும் மூல காரணராயிருக்கும் நம் எல்லாருக்கும் பொதுவான முன்னோன் ஆதாமே. நாம் சுதந்தரித்திருக்கும் பலவீனங்களும்கூட நம் வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் ஏமாற்றங்களுக்கும் தோல்விகளுக்கும் பெரும் காரணமாயிருக்கின்றன.—சங்கீதம் 51:5.
வறுமை என்ற பிரச்சினையை சிந்தித்துப் பாருங்கள். விதியின் மேல் நம்பிக்கை வைத்திருப்போர் வறுமையினால் துன்புறும்போது, தங்களுடைய கஷ்டமான வாழ்க்கையைக் குறித்து ஒன்றும் செய்யாமல் இருந்துவிடும்படி பெரும்பாலும் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். ‘இது எங்கள் விதி,’ என்று அவர்கள் நம்புகின்றனர். ஆயினும், பைபிளோ, விதி அல்ல, மானிட அபூரணமே காரணம் என்று காண்பிக்கிறது. சோம்பேறித்தனத்தின் காரணமாக அல்லது பொருளாதார செல்வங்களை தவறாக நிர்வகித்ததன் காரணமாக, ‘தாங்கள் விதைத்ததை அறுப்பதன்’ மூலம் சிலர் ஏழைகளாக ஆகின்றனர். (கலாத்தியர் 6:7; நீதிமொழிகள் 6:10, 11) எண்ணற்ற இலட்சக்கணக்கானோர் வறுமையில் வாழ்கின்றனர்; ஏனென்றால் அவர்கள் ஆட்சியில் இருக்கும் பேராசையுள்ள மனிதர்களால் மிகுதியான துன்பத்துக்கு ஆளாகிறார்கள். (ஒப்பிடுக: யாக்கோபு 2:6.) ‘ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்,’ என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 8:9) கடவுளையோ அல்லது விதியையோ, எல்லா வறுமைக்கும் காரணம் காட்ட எந்த அத்தாட்சியும் இல்லை.
விதியின் மீது நம்பிக்கை—அதன் பாழாக்கும் பாதிப்புகள்
விதியின் மீது நம்பிக்கை வைப்பதற்கு எதிரான மற்றொரு நம்பவைக்கும் தர்க்கம் என்னவென்றால், விசுவாசிகளின் மீது விதி என்னும் கோட்பாடு கொண்டிருக்கக்கூடிய பாதிப்பு ஆகும். இயேசு கிறிஸ்து சொன்னார்: “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.” (மத்தேயு 7:17) விதி என்னும் கோட்பாட்டின் ஒரு ‘கனியை,’ மக்களின் பொறுப்புணர்வின் மீது அது செல்வாக்கு செலுத்தும் விதத்தை நாம் சிந்திப்போம்.
தனிப்பட்ட பொறுப்பைக் குறித்து ஓர் ஆரோக்கியமான உணர்வைக் கொண்டிருப்பது முக்கியம். பெற்றோர் தங்கள் குடும்பங்களுக்கு தேவையானதை அளிப்பதற்கும், பணியாளர்கள் தங்கள் பணிகளை கடமையுணர்ச்சியோடு செய்வதற்கும், உற்பத்தியாளர்கள் தரமுள்ள பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் தூண்டுவிக்கும் காரியங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. விதியில் நம்பிக்கை வைப்பது, அந்தப் பொறுப்புணர்வை ஒருவேளை மரத்துப்போகச் செய்யலாம். உதாரணமாக, ஒரு நபரின் காரில் உள்ள ஸ்டியரிங்கில் கோளாறு இருக்கிறது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அவருக்கு பொறுப்புணர்வு மிகவும் முனைப்பாக இருந்தால், தன் சொந்த உயிர் மீதும் தன் பயணிகளுடைய உயிர்களின் மீதுமுள்ள அக்கறையின் காரணமாக அவர் அதை பழுதுபார்த்து விடுவார். மறுபட்சத்தில், விதியில் நம்பிக்கை வைத்திருப்பவரோ, ‘கடவுளுடைய சித்தமாக’ இருந்தால் மட்டுமே விபத்து நேரிடும் என்று காரணம் காட்டி, ஆபத்து எழக்கூடிய சாத்தியத்தை அசட்டை செய்துவிடலாம்!
ஆம், விதியின் பேரில் நம்பிக்கை வைப்பது, கவனமின்மையையும், சோம்பேறித்தனத்தையும், ஒருவருடைய செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பதையும் மேலும் மற்ற ஏராளமான எதிர்மறையான பண்புகளையும் எளிதில் முன்னேற்றுவிக்கலாம்.
கடவுளோடு நாம் வைத்திருக்கும் உறவுக்கு ஒரு தடையா?
எல்லாவற்றைக் காட்டிலும் மிகுதியாக தீங்கிழைக்கும் காரியம் என்னவென்றால், விதியின் பேரில் நம்பிக்கை வைப்பது, ஒரு நபர் கடவுளிடமாக கொண்டுள்ள பொறுப்புணர்வை அல்லது கடமையை மட்டுப்படுத்தக்கூடும். (பிரசங்கி 12:13) “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” என்று சங்கீதக்காரன் எல்லா மனிதவர்க்கத்தினரையும் ஊக்குவிக்கிறார். (சங்கீதம் 34:8) கடவுள் தம்முடைய நற்குணத்தை அனுபவிக்க விரும்புவோருக்கு சில தகுதிகளை அறிவித்துள்ளார்.—சங்கீதம் 15:1-5.
அப்படிப்பட்ட தேவைகளில் ஒன்று மனந்திரும்புதல். (அப்போஸ்தலர் 3:19; 17:30) நம்முடைய தவறுகளை ஒப்புக்கொண்டு தேவைப்படும் மாற்றங்களைச் செய்வது அதில் உட்பட்டிருக்கிறது. அபூரண மானிடர்களாக இருப்பதனால், நாம் அனைவருமே அநேக தவறுகளை செய்கிறோம்; அவற்றிலிருந்து நாம் மனந்திரும்புவது அவசியமாயிருக்கிறது. ஆனால், தான் விதிக்கு கட்டுப்பட்டிருப்பதால், உதவியற்ற நிலையில் இருப்பதாக ஒரு நபர் நம்பினால், மனந்திரும்புவதற்கான தேவையை உணருவதோ அல்லது தன் தவறுகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையை உணருவதோ கடினமாயிருக்கும்.
கடவுளைப் பற்றி சங்கீதக்காரன் சொன்னார்: “ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.” (சங்கீதம் 63:3) இருப்பினும், விதி மீது நம்பிக்கை வைப்பதானது, கடவுளே தங்கள் அவலநிலைக்கு காரணர் என்று கோடிக்கணக்கானோரை நம்பும்படி செய்திருக்கிறது. இயல்பாகவே, இது அநேகரை அவரிடமாக மனக்கசப்படையச் செய்திருக்கிறது; சிருஷ்டிகரோடு உண்மையிலேயே நெருங்கிய உறவை கொண்டிருப்பதற்கான வாய்ப்புக்கு முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறது. உங்களுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் சோதனைகளுக்கும் காரணமாயிருப்பதாக நீங்கள் கருதும் ஒருவர் பேரில் நீங்கள் எவ்வாறு அன்பு காண்பிக்க முடியும்? இவ்வாறு விதி என்னும் கோட்பாடு கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே ஒரு தடையை வளர்க்கிறது.
விதி என்னும் கொடுமையிலிருந்து விடுதலையடைதல்
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இளம் யூஸ்மான் ஒரு சமயம் விதி என்னும் நம்பிக்கைக்கு அடிமைப்பட்டிருந்தான். இருப்பினும், யெகோவாவின் சாட்சிகள், அவனுடைய சிந்தனையை பைபிளின் விளக்கத்துக்கு ஏற்றபடி மதிப்பிடும்படி உதவி செய்தபோது, யூஸ்மான் விதியின் பேரில் நம்பிக்கை வைப்பதை விட்டுவிடும்படி உந்துவிக்கப்பட்டான். உள்ளத்தின் ஆழத்திலிருந்து விடுதலை பெற்ற உணர்வும் வாழ்க்கையின் பேரில் புதிய, உடன்பாடான மனநிலையுமே அதன் விளைவுகளாக இருந்தன. அதிமுக்கியமாக, யெகோவா “இரக்கமும், கிருபையும், நீடியசாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” என்பதை அவன் அறிய வந்திருக்கிறான்.—யாத்திராகமம் 34:6.
கடவுள் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் திட்டமிடவில்லையென்றாலும், எதிர்காலத்திற்காக ஒரு நோக்கத்தை நிச்சயமாகவே கொண்டிருக்கிறார் என்பதையும்கூட யூஸ்மான் உணர ஆரம்பித்திருக்கிறான்.a 2 பேதுரு 3:13 சொல்கிறது: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” வாக்களிக்கப்பட்டிருக்கும் இந்தப் ‘புதிய பூமியின்’ ஒரு பாகமாக என்றென்றும் வாழக்கூடிய நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள யெகோவாவின் சாட்சிகள் லட்சக்கணக்கானோருக்கு உதவியிருக்கின்றனர். அவர்கள் உங்களுக்கும்கூட உதவிசெய்ய விரும்புவர்.
பைபிளின் திருத்தமான அறிவை எடுத்துக்கொள்வதன் பேரில் நீங்கள் முன்னேறுகையில், உங்களால் கட்டுப்படுத்தமுடியாத முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஏதோவொரு விதியின் பேரில் உங்கள் வாழ்க்கை சார்ந்தில்லை என்பதை நீங்கள் மதித்துணர ஆரம்பிப்பீர்கள். பண்டைய இஸ்ரவேலருக்கு மோசே சொன்ன வார்த்தைகள் நன்றாகவே பொருந்தும்: “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன்; ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக.” (உபாகமம் 30:19, 20) ஆம், உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் தெரிவு செய்யலாம். அது விதியின் வசத்தில் இல்லை.
[அடிக்குறிப்பு]
a கடவுளுடைய முன்னறிவைப் பற்றிய முழுமையான கலந்தாலோசிப்புக்கு காவற்கோபுரம் (ஆங்கிலம்), ஜூலை 15, 1984, பக்கங்கள் 3-7-ஐப் பார்க்கவும்.
[பக்கம் 6, 7-ன் படங்கள்]
இந்தப் பேரழிவுகள் ‘கடவுளின் செயல்களாக’ இருக்கவில்லை
[படங்களுக்கான நன்றி]
U.S. Coast Guard photo
WHO
UN PHOTO 186208/M. Grafman