விபத்துகள்—முன்விதிக்கப்பட்டதா அல்லது சூழ்நிலைமைகளா?
கவர்ச்சியான இளம் மாடல் பெண்ணாகிய கிறிஸ்டினா சாவ் பாலோ, பிரேசிலில் உள்ள சுறுசுறுப்பான நாவே தெ ஜுயோ அவென்யுவைத் தாண்டும் போது, நெருங்கிக் கொண்டிருக்கும் பேருந்தை கவனிக்கவில்லை. ஓட்டுநர் தன் வண்டியை நிறுத்த இறுதிகட்டத்தில் முயற்சி செய்தும் காலதாமதமாகிவிட்டது. வண்டி மேல் ஏறினதால் கிறிஸ்டினா கொல்லப்பட்டாள்.
பிரேசில் செய்தித்தாளான யு எஸ்டடோ த சாவ் பாலோ-வில் (ஜூலை 29, 1990) இந்தச் சோக விபத்து முதல் பக்க அறிவிப்பைப் பெற்றுக்கொண்டது. ஆனாலும், பிரேசிலில் வருடந்தோறும் நிகழும் 50,000 போக்குவரத்து மரணங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் இத்தகைய விபத்துகளினால் ஆயிரக்கணக்கானோர் முடமாக்கப்பட, மற்றவர்கள் காயமின்றி தப்பிக்கொள்கின்றனர். அவ்வாறிருக்க, ஏன் இந்த இளம் பெண் தப்பிப்பிழைக்கவில்லை? அந்த நாளில் மரிக்க வேண்டுமென அவள் விதிக்கப்பட்டிருந்தாளா?
எண்ணிலடங்காத மக்கள் அப்படித்தான் விவாதிப்பார்கள். ஒருவருடைய மரணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் முன்னமே குறிக்கப்படுகின்றன என்று அவர்கள் விதியில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த நம்பிக்கை “விதியை வெல்ல முடியாது,” “அவனுடைய வேளை வந்துவிட்டது,” அல்லது “எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும்,” என்பன போன்ற சொற்றொடர்களைப் பிறப்பித்துள்ளது. இதுபோன்ற பிரசித்திபெற்ற வார்த்தைகளில் ஏதேனும் உண்மையுண்டா? நாம் வெறுமென விதியின் சதுரங்க ஆட்டத்தில் காலாட் காய்களா?
விதியில் நம்பிக்கை அல்லது எல்லா நிகழ்ச்சிகளும் முன்பே நிர்ணயிக்கப்படுகின்றன என்ற கொள்கை பண்டையக் கால கிரேக்கர் மற்றும் ரோமர்களிடையே நிலவியது. இன்றும்கூட அநேக மதங்களில் அந்த எண்ணம் அழுத்தமாக தங்கியிருக்கின்றது. உதாரணமாக இஸ்லாம், குரானின் வார்த்தைகளைப் பற்றிக்கொண்டிருக்கின்றது: “எந்த ஆத்துமாவும் அல்லாவின் இசைவு இல்லாமலும், நியமிக்கப்பட்ட காலத்தில் இல்லாமலும் மரணமடைய முடியாது.” கிறிஸ்தவமண்டலத்திலும் விதியின் மேல் நம்பிக்கைப் பொதுவாக இருக்கின்றது. மேலும் அது, ஜான் கால்வினால் போதிக்கப்பட்ட முன்விதிக்கப்படுதல் கோட்பாட்டினால் பேணி வளர்க்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு குறிப்பிட்ட விபத்தானது “கடவுளுடைய சித்தம்” என்று துக்கத்திலுள்ள உறவினரிடம் மதகுருக்கள் சொல்வது சாதாரணமாக இருக்கின்றது.
எனினும், விபத்துகள் விதியின் விளைவு என்று நோக்குவது பொதுவான அறிவு, அனுபவம் மற்றும் பகுத்தறிவுக்கு முரண்பட்டு செல்கின்றது. ஒரு காரியம் என்னவெனில், மோட்டார் வண்டி விபத்துகள், தெய்வீகத் தலையீட்டின் விளைவாக இருக்க முடியாது, ஏனெனில் சாதாரணமாக ஒரு முழுமையான ஆய்வானது, பகுத்தறிவுக்குப் பொருத்தமான காரணத்தை வெளிப்படுத்துகின்றது. மேலுமாக, நியாயமான முன்னெச்சரிக்கைகளை எடுத்திருத்தல்—இருக்கையுடன் இணைக்கும் வாரை அணிந்திருத்தல்—மரணத்தை விளைவிக்கும் விபத்துகள் நடப்பதை வெகுவாகக் குறைக்கின்றது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கடவுளுடைய முன்நிர்ணயிக்கப்பட்ட சித்தத்தை எந்தப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையும் உண்மையில் தடுக்க முடியுமா?
எனினும் விதியில் நம்பிக்கை, நம்புகின்றவரை எதிரிடையாக பாதிக்கின்றது. இது, வேகக் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துக் குறிகளை அசட்டை செய்தல் அல்லது மதுபானம், போதை வஸ்துக்கள் ஆகியவற்றின் செல்வாக்கின் கீழ் இருக்கையில் ஓட்டுதல் போன்ற முட்டாள்தனமான செயல்களை உற்சாகப்படுத்தவில்லையா? அதிக முக்கியமாக, விதியில் நம்பிக்கைகொள்வது, விபத்துகளில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் போது, கடவுளைப் பழிப்பதற்குச் சிலரைத் தூண்டுகின்றது. கோபம் மற்றும் செய்வது அறியாத உணர்வில், கடவுள் அக்கறையற்றவர் என்று நிச்சயமாக உணர்வதால் ஒருவேளை அவர்கள் விசுவாசத்தையும்கூட இழக்கக்கூடும். கவிஞர் எமர்ஸன் நன்றாகவே சொன்னார்: “வாழ்க்கையின் மிகக் கசப்பான சோகக் காரியமானது, அறிவிற்குப் பொருந்தாத விதி அல்லது முன்விதிக்கோட்பாட்டில் நம்பிக்கைக் கொள்வதாகும்.”
ஆனால் எதிர்பாராத இன்னல்கள் மற்றும் விபத்துகள் பற்றி பைபிள் என்ன கூறுகின்றது? இவை விதியின் வேலை என்று பைபிள் உண்மையிலேயே போதிக்கின்றதா? மேலுமாக, நம்முடைய இரட்சிப்பிற்கான வாய்ப்புகள் பற்றி அது என்ன சொல்கின்றது? இந்த விஷயத்தில் நாம் ஏதாவது தெரிவைக் கொண்டிருக்கிறோமா? (w91 10/15)
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
“வாழ்க்கையின் மிகக் கசப்பான சோகக் காரியமானது, அறிவிற்குப் பொருந்தாத விதி அல்லது முன்விதிக்கோட்பாட்டில் நம்பிக்கைக் கொள்வதாகும்.”—ரால்ஃப் வால்டோ எமர்ஸன்