உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 8/8 பக். 5-8
  • தலைவிதியைத் தேடி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தலைவிதியைத் தேடி
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • விதியின் ஜனனம்
  • பூர்வீக எகிப்தில் விதியின் கைவண்ணம்
  • கிரீஸ் மற்றும் ரோம்
  • விதியைப் பற்றி “கிறிஸ்தவனின்” வாதம்
  • பிரபலமான நம்பிக்கை
  • தலைவிதியா தற்செயலா?
    விழித்தெழு!—1999
  • விதி உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • விதியில் நம்பிக்கை வைக்கும்படி பைபிள் கற்பிக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • விபத்துகள்—முன்விதிக்கப்பட்டதா அல்லது சூழ்நிலைமைகளா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 8/8 பக். 5-8

தலைவிதியைத் தேடி

விதியின் மீதுள்ள நம்பிக்கை ஏன் இந்தளவு பரவியிருக்கிறது? வாழ்க்கையின் புரியாப்புதிர்களை விடுவிப்பதற்கு சரித்திரம் முழுவதுமாக மனிதர்கள் முயற்சி செய்திருக்கின்றனர். அதேபோல் தற்போது நிகழும் நிகழ்ச்சிகளில் ஏதாவது நோக்கம் இருக்க வேண்டும் என்று அவற்றை கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர். “இத்தருணத்தில்தான் ‘கடவுள்’ ‘தலைவிதி’ ‘தற்செயல்’ போன்றவை காட்சியில் வருகின்றன. நடக்கும் செயலைப்பொறுத்தே அவை சக்திவாய்ந்த நபரிடமிருந்தா, ஒழுங்கமைக்கப்பட்ட சக்தியிலிருந்தா, அல்லது எந்த ஒழுங்கும் இல்லாத ஒன்றிலிருந்து” வந்ததா என்பது விளங்கும் என்று சரித்திராசிரியர் ஹெல்மர் ரிங்கரன் குறிப்பிடுகிறார். சரித்திரத்தில் விதியைப் பற்றியும் முன்குறிப்பதைப் பற்றியும் நம்பிக்கைகளும், புராணங்களும், கட்டுக்கதைகளும் ஏராளம் ஏராளம்.

அசீரியர்களைப் பற்றி விளக்குவதில் நிபுணரான சரித்திராசிரியர் ஸான் பாட்டேரோ இவ்வாறு சொல்கிறார்: “நம்முடைய கலாச்சாரம் முழுவதுமே மெசப்பட்டோமிய நாகரிகத்தின் அடிப்படையிலேயே உருவாகியிருக்கிறது.” பூர்வீக மெசப்பட்டோமியாவில் அல்லது பாபிலோனில்தான் பின்வரும் அத்தாட்சிகள் கிடைத்ததாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகிறார். “மனிதகுலத்தின் மிகப்பழமையான மத அமைப்பு மற்றும் இயற்கையைக் கடந்த தெய்வீக விஷயங்களைப் பற்றிய குறிப்புகளை இவர்களிடம்தான் கண்டுபிடிக்க முடிந்தது; இவர்கள்தான் அப்படிப்பட்ட சக்திக்கு பிரதிபலிப்பவர்களாகவும் அதைப் பற்றி சிந்திப்பவர்களாகவும் இருந்தனர்.” விதியைப் பற்றிய ஆரம்பம் மெல்ல எட்டிப்பார்ப்பதை நாம் இங்கேதான் கவனிக்கிறோம்.

விதியின் ஜனனம்

தற்போது ஈராக் என்று அழைக்கப்படும் தேசத்தில்தான் பாழடைந்த மெசப்பட்டோமியாவின் இடிபாடுகள் இருக்கின்றன; அவ்விடத்தில் பொறிக்கப்பட்ட மனிதவர்க்கத்தின் மிகப்பழைய எழுத்துக்களை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். சுமேரிய, அக்காடிய, பிரபலமான பாபிலோன் ஆகிய நாகரிகம் வளர்ந்த இடங்களில் ஜனங்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் உதவுகின்றன; இந்தக் கல்வெட்டுகளில் ஆப்புவடிவ எழுத்துக்களில் (cuneiform) தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. புதைபொருள் ஆராய்ச்சியாளர் சாமுவேல் கிரேமர் சுமேரியர்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: அவர்கள் “மனிதர் படும் துன்பத்தைப் பற்றி கவலையடைந்தனர்; முக்கியமாக, துன்பத்துக்கான காரணங்களை விளங்கிக்கொள்ள முடியாதபோது கலங்கினர்.” இவற்றிற்கான விடையை அவர்கள் தேடியதன் விளைவால் பிறந்ததுதான் விதி என்ற கோட்பாடு.

புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஜோன் ஓட்ஸ் எழுதிய பாபிலோன் என்ற புத்தகத்தில், “பாபிலோனில் வாழ்ந்த ஒவ்வொரு நபரும் தனக்கென்று தனிப்பட்ட கடவுளை அல்லது பெண் தெய்வத்தை வணங்கினர்” என்று குறிப்பிடுகிறார். “தனிப்பட்ட விதத்திலும் தொகுதியாகவும் மனிதவர்க்கம் முழுவதன் தலைவிதியையும்” கடவுட்களே தீர்மானித்தனர் என்பதே பாபிலோனியர்களின் நம்பிக்கை. “உலகத்தை ஆளும் கடவுட்களே, தீவினை, பொய், வன்முறை ஆகியவற்றை நாகரிகத்தின் பாகமாக திட்டமிட்டு நிறுவினர்” என்று சுமேரியர்கள் நம்பியதாக கிரேமர் குறிப்பிடுகிறார். விதியின்மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை, மதிப்பு வாய்ந்ததாக இருந்தது; அது பட்டிதொட்டியெல்லாம் அறியப்பட்டிருந்தது.

கடவுளின் திட்டத்தை அறிந்துகொள்வதற்கு குறி சொல்லுதல் பயன்படும் என்று பாபிலோனியர்கள் நம்பினர். இதை “தெய்வங்களோடு தொடர்புகொள்ளும் உத்தி” என்று நம்பினர். குறிசொல்லுதல் என்றால், எதிர்காலத்தை முன்னறிவிப்பதற்காக பொருட்களையும் சம்பவங்களையும், கவனித்து, அவற்றை புரிந்துகொண்டு விளக்குவதே. இதற்காக, கனவுகள், மிருகங்களின் செயல்பாடுகள், அவற்றின் உள்ளுறுப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. (எசேக்கியேல் 21:21; தானியேல் 2:1-4, ஒப்பிடவும்) எதிர்காலத்தை முன்னறிவிப்பதாக நம்பப்பட்ட, எதிர்பாராத மற்றும் வழக்கத்திற்கு மாறான நிகழ்ச்சிகளை களிமண் பலகைகளில் கருத்தாய் பதிவு செய்தனர்.

பிரென்ச் கல்விமான் எட்வார் டார்ம் பூர்வீக நாகரிகங்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மெசப்பட்டோமிய சரித்திரத்தை நாம் தோண்டித் துருவி ஆராயும்போது அதன் எல்லா பதிவுகளிலும் முன்னறிவிப்பவர்களைப் பற்றியும் குறிசொல்லுதலைப் பற்றிய குறிப்புகளையும் எக்கச்சக்கமாகக் காண்கிறோம்.” குறிசொல்லுதல் என்பது அவர்கள் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ஒரு அம்சம். இதனால்தான் பேராசிரியர் பொட்டேரோ இவ்வாறு சொல்கிறார் “கண்ணில் தெரியும் எல்லா பொருட்களையும் குறிசொல்லும் ஆய்வுக்கு பயன்படுத்த முடியும் . . . இதற்கு முழு பிரபஞ்சமுமே அத்தாட்சி அளிப்பதாகவும், அதைக் கவனமாக ஆய்வு செய்வதன் மூலம், எதிர்காலத்தைப் பற்றி ஓரளவிற்கு தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவர்கள் நினைத்தனர்.” ஆகவே, மெசப்பட்டோமியர்கள் எதிர்காலத்தைப் பற்றி முன்னுரைப்பதற்கு ஜோதிடத்தை மலைபோல் நம்பியிருந்தனர்.​—⁠ஏசாயா 47:⁠13-ஐ ஒப்பிடுக.

இதோடு சேர்த்து பாபிலோனியர்கள் சூதாட்டத்தில் பயன்படுத்தும் பகடைகளையும், பூவா தலையா போடுவதற்கு உபயோகிக்கும் பொருட்களையும் குறிசொல்வதற்கு பயன்படுத்தினர். டெபாரா பெனட், ராண்டம்னஸ் என்ற புத்தகத்தில் இவ்வாறு விளக்குகிறார்: “இப்படிப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதால் மனிதர்களின் தலையீடு ஏதுமின்றி தங்களுடைய சித்தத்தை தெளிவாக எடுத்துச்சொல்ல தெய்வங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.” ஆனாலும் தெய்வங்களின் முடிவுகளை மாற்ற முடியாது என்று எண்ண வேண்டியதில்லை. கடவுட்களிடம் முறையிடுவதன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட, கேடுவிளைவிக்கும் விதியையும் மாற்றுவதற்கு உதவிகிடைக்கும்.

பூர்வீக எகிப்தில் விதியின் கைவண்ணம்

பொ.ச.மு 15-ஆம் நூற்றாண்டில் பாபிலோனியாவிற்கும் எகிப்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. கலாச்சாரக் கொடுக்கல் வாங்கலின்போது விதியைப் பற்றிய மத நம்பிக்கைகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. எகிப்தியர்கள் விதியின் மீதுள்ள நம்பிக்கையை ஏன் ஏற்றுக்கொண்டனர்? இதைக் குறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும், எகிப்திய நாகரிகத்தைப் பற்றிய நிபுணரான சரித்திராசியர் ஜான் ஆர். பேன்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “முன்னறிந்து கூறமுடியாதவற்றையும், துரதிர்ஷ்டம் நிறைந்த சம்பவங்களையும் விளக்கி அதற்குத் தக்கவாறு நடந்துகொள்வதை சுற்றியே எகிப்திய மதம் வளர்ந்திருக்கிறது.”

அவர்கள் வணங்கிய பல்வேறான எகிப்திய தெய்வங்களில் ஐஸிஸ் என்ற எகிப்திய பெண் தெய்வம்தான் “ஜீவனுக்குக் காரணமானவள், விதியையும், தலையெழுத்தையும் வகுப்பவள்”. குறிசொல்லுவதும் ஜோசியம் பார்ப்பதும் எகிப்தியர்களுடைய பழக்கம். (ஒப்பிடுக ஏசாயா 19:3) ஒரு சரித்திராசிரியர் இவ்வாறு விளக்குகிறார்: “கடவுட்களிடம் கேள்வி கேட்பதில் அவர்களுக்கு இருந்த திறமைக்கு எல்லையே இல்லை.” இவ்விதம், பாபிலோனிலிருந்து விதியைப் பற்றிய கருத்தை கடன் வாங்கியது எகிப்திய நாகரிகம் மட்டுமல்ல.

கிரீஸ் மற்றும் ரோம்

மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், “பூர்வீக கிரீஸால் பாபிலோனின் சக்திமிக்க செல்வாக்கிலிருந்து விலகியிருக்க முடியவில்லை” என்பதாக ஜீன் பொட்டேரோ குறிப்பிடுகிறார். கிரீஸில் தலைவிதியைப் பற்றிய நம்பிக்கை ஏன் பிரபலமாக இருந்தது என்பதைப் பற்றி பேராசிரியர் பீட்டர் கிரீன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நிலையில்லா உலகில் தாங்கள் எடுத்த தீர்மானத்திற்கு பொறுப்பை ஏற்றுக்கொள்ள மனிதர்களுக்கு விருப்பமில்லை. ஆகவே, தாங்கள் பொம்மலாட்டத்தில் வரும் சாதாரண பொம்மைகளைப் போல பின்னாலிருந்து இயக்கும் விதியின் விருப்பத்திற்கிசைவாகவே செயல்படுவதாக நினைத்தனர். இது தெய்வங்களால் முடிவு செய்யப்பட்ட நியதி என்றும் தனிப்பட்ட நபர்களின் எதிர்கால வாழ்க்கையை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றும் நம்பினர். அது எந்தளவிற்கு புரியா புதிராக இருக்கிறதோ அதேபோல வளைந்துகொடுக்காததாகவும் இருக்கிறது. ஆகவே ஒருவருக்கு பிரத்யேகமான திறமைகளும் உட்பார்வையும் இருந்தால் விதி நியமித்ததை அது நடப்பதற்கு முன்பாகவே எடுத்துச் சொல்ல முடியும். அது ஒருவர் விரும்பும் செய்தியாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால் முன்பாகவே எச்சரிக்கப்படுவதன் மூலம் ஒருவர் ஜாக்கிரதையாகவாவது இருக்க முடியுமல்லவா.”

எதிர்காலத்தைப் பற்றி தனி நபர்களுக்கு தைரியம் அளிப்பதுமட்டுமல்லாமல் விதியின் மீதுள்ள நம்பிக்கை வேறு கொடிய நோக்கங்களை நிறைவேற்றவும் உதவியது. பெரும்பான்மையான ஜனங்களை அடக்கியாள விதியின் மீதுள்ள நம்பிக்கை உதவியது. இதன் காரணமாக சரித்திராசிரியரான எஃப். எச். சேன்ட்பேக் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மக்களை கசக்கிப்பிழியும் அதிகார வர்க்கத்திற்கு, முழு உலகமும் தெய்வீக வழிநடத்துதலால் ஆளப்படுகிறது என்ற நம்பிக்கை சாதகமாக அமைந்தது.”

ஏன்? இதற்கு பேராசிரியர் கிரீன் இவ்வாறு விளக்கமளிக்கிறார்: இந்த நம்பிக்கை “ஒழுக்கம், கடவுள் வணக்கம், மொழி போன்ற விஷயங்களில் அதாவது சமுதாய மற்றும் அரசியல் அமைப்பிற்கு ஒரு அடிப்படையான உரிமையை வழங்கியது. கிரேக்க நாட்டின் அதிகாரவர்க்கம் தாங்களே எப்போதும் அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக திட்டமிட்ட மிக வல்லமையான சூட்சுமமான ஆயுதம் இதுதான். எது நடக்கவேண்டும் என்று முன்பே விதியால் குறிக்கப்பட்டதோ அது நடந்தேயாகவேண்டும்; மனிதவர்க்கத்தின் மீது இயற்கைக்கு கருணை இருப்பதால் எது முன்குறிக்கப்பட்டதோ அது நடந்தே தீரும், நடப்பதும் நன்மைக்காகவே இருக்கும்”. இதன் விளைவாக “இரக்கமற்ற, கொடூரமான சுயநலம்கூட நியாயமானதுதான்” என்று ஏற்றுக்கொள்ளும் நிலை உண்மையில் உருவானது.

விதியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர் என்பது கிரேக்க இலக்கியங்களிலிருந்து தெளிவாகிறது. பூர்வீக இலக்கியங்களில் வரும் காப்பியம், புராணம், சோக நாடகம் ஆகியவற்றில் விதியே பிரதான பாகம் ஏற்றது. கிரேக்க கட்டுக்கதைகளில் மனிதனின் தலைவிதியை மொய்ராய் என்றழைக்கப்பட்ட மூன்று பெண் தெய்வங்கள் பிரதிநிதித்துவம் செய்தன. வாழ்க்கை என்ற நூலை நூற்கும் பெண் தெய்வத்திற்கு கிளாத்தா என்று பெயர். லாக்கஸிஸ் என்ற தெய்வம் வாழ்நாள் எவ்வளவு காலம் நீடிக்கவேண்டும் என்று முடிவு செய்தது. அட்ரோபோஸ் குறிக்கப்பட்ட நேரம் முடிந்ததும் உயிரை எடுக்கும் கடவுள். இதேவிதமாக, பார்க்கை என்றழைக்கப்பட்ட திரித்துவக் கடவுட்களை ரோமர்களும் நம்பினர்.

ரோமர்களும் கிரேக்கர்களும் தங்களுக்கு நியமிக்கப்பட்டதாக கருதப்பட்ட தலைவிதியை தெரிந்துகொள்ள அதிக அக்கறையைக் காட்டினர். இதன் காரணமாக அவர்கள் பாபிலோனிலிருந்து ஜோசியத்தையும் குறிசொல்லும் கலையையும் கடன் வாங்கி தங்களுடைய சமுதாயத்தில் அவற்றை உரம்போட்டு வளர்த்தனர். ரோமர்கள் எதிர்காலத்தை முன்னுரைக்கும் சம்பவங்களை போர்டன்டா அல்லது அடையாளங்கள் என்றழைத்தனர். அந்த அடையாளங்கள் அளித்த தகவல்களை ஓமினா என்றழைத்தனர். பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஜோசியம் பார்ப்பது கிரேக்க தேசத்தில் பிரபலமாயிற்று. பொ.ச.மு. 62-⁠ல் பூர்வ கிரேக்க தேசத்தில் ஜாதகம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. கிரேக்க மக்கள் ஜோசியம் பார்ப்பதில் மிக அதிக அக்கறையைக் காண்பித்தனர். “தன்னந்தனியே இருக்கும் ஒரு தீவில் உள்ள ஜனங்களிடம் ஒரு புதிய தொற்று நோய் பரவுவதுபோல கிரேக்கர்கள் மத்தியில் ஜோசியம் பார்ப்பது அதிவேகத்தில் பரவியது” என்று கில்பர்ட் முர்ரே என்ற பேராசிரியர் விளக்குகிறார்.

எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் கிரேக்கர்களும் ரோமர்களும் குறிசொல்பவர்களை அதிகளவில் நாடினர். இவர்கள் மூலமாகத்தான் தெய்வங்கள் தங்களிடம் பேசியதாக நினைத்துக்கொண்டனர். (ஒப்பிடுக அப்போஸ்தலர் 16:16-19.) இப்படிப்பட்ட நம்பிக்கைகளால் என்ன விளைவுகள் ஏற்பட்டன? பர்ட்ரன்ட் ரஸல் என்ற தத்துவஞானி இவ்வாறு சொன்னார்: “நம்பிக்கை இருக்க வேண்டிய இடத்தில் பயம் குடிபுகுந்தது; வாழ்க்கையின் நோக்கமே மற்றவர்களுக்கு ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டும் என்றிருப்பதற்கு பதில் வரவிருக்கும் துன்பத்திலிருந்து தப்பிப்பதே என்று மாறிவிட்டது.” இதைப் போன்ற கொள்கைகள் கிறிஸ்தவ மண்டலத்தில் அதிக குழப்பத்தை ஏற்படுத்தின.

விதியைப் பற்றி “கிறிஸ்தவனின்” வாதம்

விதியைப் பற்றிய நம்பிக்கை நிறைந்த, கிரேக்க மற்றும் ரோம கலாச்சாரத்தின் செல்வாக்கிலிருந்த சமுதாயத்தில்தான் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் வசித்தனர். உதாரணத்திற்கு, அச்சமயம் வாழ்ந்த சர்ச்சின் தந்தை என்றழைக்கப்பட்டவர்கள் கிரேக்க தத்துவஞானிகளான அரிஸ்டாடில் மற்றும் பிளேட்டோவின் தத்துவங்களையே சார்ந்திருந்தனர். அவர்களே முயற்சி செய்து தீர்த்துக்கொள்ள முயன்ற ஒரு பிரச்சினை பின்வருமாறு: எல்லாவற்றையும் அறிந்த, எல்லா வல்லமையும் உள்ள கடவுள் “அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டு . . . அறிவிக்கிறேன்” என்பதாக தெரிவித்திருக்கிறார்; இப்படிப்பட்ட கடவுளுக்கும் அன்பாகவே இருக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் வேற்றுமையை எவ்வாறு தெளிவாக்குவது? (ஏசாயா 46:10; 1 யோவான் 4:8) கடவுளுக்கு ஆதியிலிருந்து அந்தம் வரை எல்லாமே தெரியுமென்றால் அவருக்கு மனிதன் பாவத்தில் விழுவான் என்பதும் அதனால் ஏற்படவிருக்கும் பயங்கரமான விளைவுகளும் தெரிந்திருக்க வேண்டும் என்று தங்களுக்குள் நியாயப்படுத்தினர்.

ஆரம்பகால கிறிஸ்தவ எழுத்தாளர்களில் அதிகமாக எழுதிய ஆரிஜென் என்பவர், தேர்ந்தெடுக்கும் சுயாதீனம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதே அடிப்படையான விஷயங்களில் ஒன்று என்று விவாதித்தார். “ஒவ்வொருவருக்கும் தேர்ந்தெடுக்கும் சுயாதீனம் இருக்கவே இருக்கிறது என்பதை வேதாகமத்தில் அதிக இடங்களில், மிகத் தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் காணமுடியும்” என்று அவர் எழுதினார்.

நம்முடைய நடத்தையால் ஏற்பட்ட விளைவுகளுக்கு வேறு ஏதோ சக்திதான் காரணம் என்று சொல்வது “எவ்விதத்திலும் உண்மையில்லை, அதை நியாயமாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இதைச் சொல்பவர் சுயாதீனமாக தேர்ந்தெடுக்கும் உரிமையிருக்கிறது என்ற கோட்பாட்டை அழிக்க விரும்புகிறார்” என்று ஆரிஜென் இதைப்பற்றி விளக்குகிறார். எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை கடவுளால் காலவரிசைப்படி அறிந்துகொள்ள முடியும் என்றாலும், அவர்தான் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார் என்றோ அல்லது அது நிகழ்வதற்கான அத்தியாவசியங்களை ஏற்படுத்தினார் என்றோ அவர் மீது புள்ளி குத்த முடியாது என்று அவர் விவாதித்தார். ஆனால் எல்லோரும் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை.

செல்வாக்குமிக்க சர்ச் தந்தை அகஸ்டின் (பொ.ச. 354-430), ஒரு நிகழ்ச்சியில் தெரிவுசெய்யும் சுயாதீனம் வகிக்கும் பங்கைக் குறைப்பதன் மூலம் இவ்விவாதத்தை மேலும் சிக்கலாக்கினார். அவர் கிறிஸ்தவமண்டலத்தில் முன்விதித்தல் என்ற கோட்பாட்டுக்கு இறையியல் அந்தஸ்தை வழங்கினார். இடைக்காலங்களில் அவர் எழுதிய டி லிபரோ ஆர்பிட்ரியோ என்பவைகள்தாம் பிரபலமாக பேசப்பட்டன. இந்த விவாதங்கள் சீர்திருத்த சமயத்தின் போது ஓர் உச்சநிலையை எட்டின; அச்சமயம் கிறிஸ்தவமண்டலத்தில் முன்விதித்தலைப் பற்றிய கோட்பாட்டில் அவர்களுக்குள் ஏராளமான கருத்துவேறுபாடுகள் இருந்தன. a

பிரபலமான நம்பிக்கை

விதியைப் பற்றிய கருத்துக்கள் ஏதோ மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்க வேண்டாம். முஸ்லீம்களும் விதியில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்; ஏனெனில் துன்பநிகழ்ச்சியை எதிர்படும்போது முஸ்லீம்கள் “மெக்டூப்” என்று சொல்கின்றனர்; ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டது என்று இதற்கு பொருள். தனி நபர்கள் தங்களுடைய விதியை மாற்றுவதற்கு முயற்சி செய்யலாம் என்று கிழக்கத்திய நாடுகளில் உள்ள மதங்கள் வலியுறுத்துவது உண்மைதான். ஆனாலும், விதிப்படிதான் நடக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுடைய போதனைகளில் காணலாம்.

உதாரணத்திற்கு இந்து மதத்திலும் புத்த மதத்திலும் சொல்லப்படும் கர்மா என்ற தத்துவம், பூர்வ ஜென்மத்தில் செய்த காரியங்களுக்காக இந்த ஜென்மத்தில் நடக்கும் மாற்ற முடியாத சம்பவங்கள் என்று விளக்கப்படுகிறது. சீனாவில் மிகப் பழமையாக கிடைத்த எழுத்துப்படிவங்கள் ஆமை ஓட்டில் எழுதப்பட்டவை; அவற்றை அவர்கள் குறிசொல்ல பயன்படுத்தினர். அமெரிக்க கண்டங்களில் வசித்த பழங்குடி ஜனங்களின் நம்பிக்கையிலும் விதி தன்னுடைய முத்திரையை பதித்திருந்தது. தனிப்பட்டவர்களின் தலையெழுத்தை கணிப்பதற்காக அஸ்டெக்குகள் பிரத்யேகமான குறிசொல்லும் காலண்டர்களை பயன்படுத்தினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். விதித்த விதியைவிட வேறு எதுவும் நடக்காது என்ற நம்பிக்கை ஆப்பிரிக்காவிலும் சகஜமாகக் காணப்படுகிறது.

விதிப்படியே நடக்கும் என்ற கோட்பாடு இந்தளவு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கும்போது, தனக்கு அப்பாற்பட்ட சக்தியை நம்பவேண்டும் என்ற அடிப்படைத் தேவை மனிதனுக்கு இருக்கிறது என்ற விஷயம் தெளிவாகிறது. மனிதனின் மதங்கள் என்ற ஆங்கில புத்தகத்தில் ஜான் பி. நாஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “ஏதாவது ஒரு விதத்தில், மனிதன், தனியே தன் சொந்தக் காலில் நிற்கவில்லை, அவ்விதம் நிற்கவும் முடியாது என்றே எல்லா மதங்களும், ஒப்புக்கொள்கின்றன. அவன், தனக்கு அப்பாற்பட்ட இயற்கையில் நிலவும் சக்திகளுடன் இன்றியமையாத தொடர்புடையவன், அவற்றையே சார்ந்தும் இருப்பவன். மனிதனே தனிப்பட்ட ஒரு சக்தியின் ஊற்றுமூலமாக இல்லை என்பதையும் தன்னால் தன்னந்தனியே நிற்க முடியாது என்பதையும் தெளிவாகவோ அல்லது தெளிவற்ற விதத்திலோ அறிந்திருக்கிறான்.”

கடவுள் மேல் நம்பிக்கை வைக்கவேண்டும் என்ற தேவையோடுகூட நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படை தேவையும் நமக்கிருக்கிறது. ஆனால், எல்லா வல்லமையும் உள்ள ஒரு சிருஷ்டிகர் மீது நம்பிக்கை வைப்பதற்கும், அவர்தான் எல்லாருடைய விதியையும் கட்டுப்படுத்துகிறார் என்று நம்புவதற்கும் இடையில் பெரிய வித்தியாசமிருக்கிறது. நம்முடைய எதிர்காலத்தை வடிவமைப்பதில் நம்முடைய பங்கு என்ன? இந்த விஷயத்தில் கடவுளுடைய பங்கு என்ன?

[அடிக்குறிப்புகள்]

a எங்களது கூட்டுப் பத்திரிகையான காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1995, 3-4 பக்கங்களை பார்க்கவும்.

[பக்கம் 5-ன் படம்]

பொ.ச.மு. 1,000 பாபிலோனிய ஜோசிய காலண்டர்

[படத்திற்கான நன்றி]

Musée du Louvre, Paris

[பக்கம் 7-ன் படம்]

மூன்று தெய்வங்களால் மனிதனுடைய தலைவிதி முடிவு செய்யப்படுகிறது என்று கிரேக்கர்களும் ரோமர்களும் நம்பினர்

[படத்திற்கான நன்றி]

Musée du Louvre, Paris

[பக்கம் 7-ன் படம்]

எகிப்தின் ஐஸிஸ், “விதியையும் தலையெழுத்தையும் வகுப்பவள்”

[படத்திற்கான நன்றி]

Musée du Louvre, Paris

[பக்கம் 8-ன் படம்]

இந்த பெர்சிய பெட்டியில் இராசி மண்டலத்தின் அடையாளங்கள் காணப்படுகின்றன

[படத்திற்கான நன்றி]

Institute of History and Philology, Academia Sinica, Taipei

[பக்கம் 8-ன் படம்]

சீனாவில் ஆமை ஓடுகளில் எழுதப்பட்ட புராதன எழுத்துப்படிவங்கள் குறிசொல்வதற்கு பயன்படுத்தப்பட்டன

[படத்திற்கான நன்றி]

Photograph taken by courtesy of the British Museum

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்