வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
▪எவராவது ஒருவர் மரிக்கையில், அந்தக் குடும்பத்துக்குப் பூக்களைக் கொடுப்பதோ அல்லது சவஅடக்க வீட்டுக்குப் பூக்களை அனுப்புவதோ சரியா?
சில தேசங்களில் அவ்விதமாகச் செய்வது வழக்கமாக இருக்கிறது. ஆனால் சவ அடக்க நிகழ்ச்சியின் போது பூக்களைப் பயன்படுத்துவது சில சமயங்களில் மத சம்பந்தமான பொருளை உடையதாக இருந்திருக்கிறது. ஆகவே, விசேஷமாக பொய் மதத்தோடு இதேவிதமான தொடர்புகளையுடையதாகத் தோன்றும் மற்ற பழக்கங்கள் இருப்பதன் காரணமாகச் சற்று விவரமாக இந்த விஷயத்தை நாம் ஆய்வு செய்வோமாக. மத கலைக்களஞ்சியம் [The Encyclopedia of Religion] (1987)-லிருந்து குறிப்புகளைக் கவனியுங்கள்:
“தெய்வங்கள் மற்றும் தேவதைகளோடு அவற்றின் தொடர்பின் மூலமாக, பூக்கள், பரிசுத்த மண்டலத்தோடு சம்பந்தப்பட்டதாயிருக்கின்றன. ரோமருடைய வசந்த காலம் மற்றும் பூக்களின் தேவதை, பூக்களுக்கு அழகையும் மணத்தையும் கொண்டு வருகிறாள் . . . உணவையும் பூக்களையும் படைப்பதன் மூலம் தெய்வங்களைச் சாந்தபடுத்தவும் வணங்கவும் முடியும்.
“சவ அடக்கச் சடங்குகளோடு பூக்களின் தொடர்பு உலகம் முழுவதிலும் காணப்படுகிறது. கிரேக்கரும் ரோமரும் மரித்தவர்களையும் அவர்களுடைய கல்லறைகளையும் பூக்களால் மூடினர். ஜப்பானில் மரிக்கும் புத்த மதத்தினரின் ஆத்துமாக்கள் ஒரு தாமரையின் மீது உயரத்தில் சுமந்து செல்லப்படுகிறது, கல்லறைத் தோட்டத்தில் கல்லறைகள், செதுக்கி உருவாக்கப்பட்ட தாமரையின் மீது வைக்கப்படுகிறது . . . பரிசுத்தமான மறுமைக்குள் பிரவேசிப்பதை எளிதாக்க டஹிட்டிதகித்தி மக்கள் மரணத்துக்குப் பின் சிற்றிலைகள் சுற்றிய பூச்செண்டை உடலின் அருகே வைத்துப் பின்னர் பூக்களிலிருந்து செய்யப்படும் வாசனை திரவியத்தைப் பிணத்தின் மேல் ஊற்றுகிறார்கள். . . . புனிதமான காலங்களின் போது தூபவர்க்கம் அல்லது வாசனை திரவிய வடிவில் பூக்களும்கூட இடம்பெறக்கூடும்.”
பொய் மதத்தின் சம்பந்தமாக பூக்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதை அறிந்தவர்களாய், ஒரு சவ அடக்க வீட்டுக்குப் பூக்களைக் கொடுக்கவோ அல்லது அனுப்பவோ கூடாது என்பதாக சில கிறிஸ்தவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அவ்விதமாக உணருவது, உலகப்பிரகாரமான வழக்கங்களைத் தவிர்ப்பதற்குரிய ஆசையை பிரதிபலிக்கக்கூடும், ஏனென்றால், இயேசுவை பின்பற்றுகிறவர்கள் “உலகத்தின் பாகமாக” இருக்கக்கூடாது. (யோவான் 15:19) என்றபோதிலும் தொடர்புடைய பைபிள் வசனங்களும் உள்ளூரில் நிலவும் கருத்துகளும் இவ்விஷயத்தைப் பாதிப்பதாக இருக்கிறது.
உயிருள்ளோர் அனுபவிப்பதற்காகப் பூக்கள் கடவுளின் நல்ல ஈவுகளின் பாகமாக இருக்கின்றன. (அப்போஸ்தலர் 14:15–17; யாக்கோபு 1:17) அவருடைய சிருஷ்டிப்பாகிய பூக்களின் அழகு மெய் வணக்கத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஸ்தலத்தில் இருந்த விளக்குத்தண்டு “கேதுரு மரங்களின் மொக்குகளும் . . . பூக்களும்” கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. (யாத்திராகமம் 25:31-34) ஆலயத்திலிருந்த சித்திரவேலைபாட்டில் மலர்ந்த பூக்களும் பேரீந்துகளும் இடம் பெற்றிருந்தன. (1 இராஜாக்கள் 6:18, 29, 32) புறமதத்தினரின் பூ மாலை உபயோகம், மெய் வணக்கத்தார் எப்பொழுதும் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அர்த்தமாகிறதில்லை என்பது தெளிவாக இருக்கிறது.—அப்போஸ்தலர் 14:13.
ஆனால் சவஅடக்க பழக்க வழக்கங்களைப் போன்ற பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் அந்த பொதுவான பிரச்னையைப் பற்றி என்ன? பைபிள் அநேக பழக்க வழக்கங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. அவற்றில் சில மெய் வணக்கத்தாருக்குத் தகுதியற்றதாகவும், மற்றவை கடவுளுடைய மக்களால் பின்பற்றப்படுபவையாகவும் இருக்கின்றன. ஒன்று இராஜாக்கள் 18:28, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு, “இரத்தம் தங்கள் மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொள்ளும்” பாகால் வணக்கத்தாரின் “வழக்கத்தைப்” பற்றி குறிப்பிடுகிறது. இது மெய் வணக்கத்தார் பின்பற்றாத ஒரு வழக்கமாகும். மறுபட்சத்தில் ரூத் 4:7, “மீட்கிறதிலும் . . . உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே” இருந்த “பூர்வ கால வழக்கம்” குறித்ததில் எந்தத் தவறும் இல்லை என்பதாக தெரிவிக்கிறது.
கடவுளுக்கு ஏற்கத்தகுந்த வழக்கங்கள், கண்டிப்பான மத சம்பந்தமான விஷயங்களிலும்கூட ஏற்படலாம். கடவுள் பஸ்கா ஆசரிப்பை விவரித்தபோது, திராட்சரசத்தின் உபயோகத்தை அவர் குறிப்பிடவில்லை, ஆனால் முதல் நூற்றாண்டுக்குள், திராட்சரச கோப்பைகளைப் பயன்படுத்துவது பழக்கமாகிவிட்டது. இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் இந்தப் பழக்கத்தை எதிர்க்கவில்லை. அதில் ஆட்சேபணை எதையும் அவர்கள் காணவில்லை, அதை அவர்கள் பின்பற்றினார்கள்.—யாத்திராகமம் 12:6–18; லூக்கா 22:15–18; 1 கொரிந்தியர் 11:25.
சவ அடக்க பழக்கங்களில் இது இவ்வாறே இருக்கிறது. எகிப்தியர் பழக்கமாக மரித்தோரைச் சுகந்தவர்க்கமிட்டு உடலை பாதுகாத்து வைத்தனர். உண்மையுள்ள கோத்திரப்பிதாவாகிய யோசேப்பு, ‘இது புறமத பழக்கம், ஆகவே எபிரெயர்களாகிய நாம் அதைத் தவிர்க்க வேண்டும்,’ என்பதாக உடனடியாக பிரதிபலிக்கவில்லை. மாறாக, “தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்.” யாக்கோபு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் புதைக்கப்படும்படி அவ்விதமாகச் செய்திருக்க வேண்டும். (ஆதியாகமம் 49:29–50:3) யூதர்கள் பின்னால் உடலைக் குளிப்பாட்டி, மரித்த நாளன்றே அடக்கம் செய்துவிடும் வித்தியாசமான பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டனர். பூர்வ கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட யூத பழக்கங்களை ஏற்றுக்கொண்டனர்.—அப்போஸ்தலர் 9:37.
ஆனால் ஒரு சவ அடக்க வழக்கம், அழியாமையுள்ள ஓர் ஆத்துமாவில் நம்பிக்கை போன்ற மதசம்பந்தமான பிழையை அடிப்படையாக கொண்ட அர்த்தமுடையதாக கருதப்பட்டால் அப்போது என்ன? சிலர், “பரிசுத்தமான மறுமைக்குள் பிரவேசிப்பதை எளிதாக்க மரணத்துக்குப் பின் சிற்றிலைகள் சுற்றிய பூச்செண்டை உடலின் அருகே வைத்து, பின்னர் பூக்களிலிருந்து செய்யப்படும் வாசனை திரவியத்தை பிணத்தின் மேல் ஊற்றுகிறார்கள்,” என்பதை என்சைக்ளோப்பீடியாவிலிருந்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒரு வழக்கம் இருக்கக்கூடும் என்பது, கடவுளுடைய ஊழியர்கள் அதைப் போன்ற எதையும் தவிர்த்து ஒதுக்கவேண்டும் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. யூதர்கள் “பரிசுத்த மறுமைக்குள் பிரவேசிப்பதை” நம்பாதபோதிலும் பைபிள் சொல்கிறது: “அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக்கட்டினார்கள்.”—யோவான் 12:2–8; 19:40.
பைபிள் சத்தியத்துக்கு முரணாக இருக்கும் பழக்க வழக்கங்களைக் கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும். (2 கொரிந்தியர் 6:14–18) இருந்தபோதிலும், எல்லா வகையான பொருட்களுக்கும் வடிவமைப்புகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் அல்லது இடத்தில் தவறான அர்த்தம் சொல்லப்பட்டிருக்கின்றன, அல்லது வேத ஆதாரமற்ற போதகங்களோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. விருட்சங்கள் வணங்கப்பட்டிருக்கின்றன, இருதய வடிவம் பரிசுத்தமாக கருதப்பட்டிருக்கிறது, தூபவர்க்கம் புறமத ஆசரிப்புகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது கிறிஸ்தவன் ஒருபோதும் தூபவர்க்கத்தைப் பயன்படுத்தவோ, எந்த ஓர் அலங்கரிப்பிலும் விருட்சங்களைக் கொண்டிருக்கவோ அல்லது இருதய வடிவில் அமைக்கப்பட்ட அணிகலனை அணியவோ கூடாது என்பதை அர்த்தப்படுத்துகிறதா?a அது ஒரு நியாயமான முடிவு இல்லை.
உண்மையான கிறிஸ்தவன் சிந்திக்க வேண்டியவை: ஒரு பழக்க வழக்கத்தைப் பின்பற்றுவது வேத ஆதாரமற்ற நம்பிக்கைகளை அல்லது பழக்கங்களை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதாக மற்றவர்களுக்கு உணர்த்துமா? காலப்பகுதியும் இடமும் பதிலை பாதிக்கக்கூடும். ஒரு பழக்க வழக்கம் (அல்லது ஒரு வடிவமைப்பு) ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவோ அல்லது இன்று வெகுதூரத்திலுள்ள ஒரு தேசத்திலோ பொய் மத பொருளைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால் நேரத்தை எடுக்கும் ஆராய்ச்சிக்குள் போகாமல், உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக் கொள்ளுங்கள்: ‘நான் வாழும் இடத்தில் பொதுவாக நிலவும் கருத்து என்ன?’—1 கொரிந்தியர் 10:25–29 வசனங்களை ஒப்பிடவும்.
அது பொய் மத அர்த்தமுள்ள நன்கு அறியப்பட்ட ஒரு பழக்கமாக இருந்தால், (அல்லது சிலுவை போன்ற ஒரு வடிவமைப்பு) அதை தவிர்த்துவிடுங்கள். ஒரு சிலுவை அல்லது சிவந்த இருதய வடிவிலோ பூக்களை அனுப்புவது, மத சம்பந்தமான உட்பொருளை உடையதாக கருதப்பட்டால் கிறிஸ்தவர்கள் அவ்விதமாகச் செய்யமாட்டார்கள். அல்லது ஒரு சவ அடக்க நிகழ்ச்சியிலோ அல்லது ஒரு கல்லறையிலோ பூக்கள் பயன்படுத்தப்படும் ஒரு முறைப்படியான விதம் உள்ளூரில் மத சம்பந்தமான அர்த்தமுடையதாக இருக்கலாம். ஒரு கிறிஸ்தவன் அதையும்கூட தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரு சவ அடக்கத்தின் போது ஒரு பூச்செண்டை அளிப்பதோ மருத்துவமனையிலுள்ள ஒரு நண்பருக்கு பூக்கள் கொடுப்பதோ தவிர்க்கப்பட வேண்டிய ஒரு மதசம்பந்தமான நடவடிக்கை என்பதாக கருதப்பட வேண்டும் என்று சொல்வதற்கில்லை.b
மறுபட்சத்தில், அநேக தேசங்களில் பூக்களை அளிக்கும் வழக்கம், மிகப்பரவலாகவும் பொருத்தமான தயவாகவும் கருதப்படுகிறது. பூக்கள் ஓரளவு அழகை ஏற்படுத்தி துயரமான சமயத்தை அதிக இன்பமான ஒன்றாக ஆக்கக்கூடும். அவை அநுதாபத்தையும் அக்கறையையும் தெரிவிக்கும் செயலாகவும்கூட இருக்கக்கூடும். மற்ற இடங்களில், வியாதியாயிருப்பவர்களுக்கு அல்லது துக்கத்திலிருப்பவர்களுக்கு ஒருவேளை உணவளிப்பது போன்ற உதாரகுணமுள்ள ஒரு செயலால் இப்படிப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது வழக்கமாக இருக்கலாம். (தொற்காள் மற்றவர்களில் அக்கறையையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி இருந்ததன் காரணமாக அவளுக்காக மற்றவர்கள் காண்பித்த பாசத்தை நினைவு படுத்திப் பாருங்கள். [அப்போஸ்தலர் 9:36–39]) அவ்விதமாகச் செய்வது, பொய் மத நம்பிக்கைகளோடு தெளிவாகவே சம்பந்தப்பட்டில்லாமல் இருந்தால், யெகோவாவின் சாட்சிகளில் சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் நண்பருக்கோ அல்லது ஒரு மரணத்தின் போதோ மனமகிழ்வுத்தரும் பூக்களை அளிப்பது பழக்கமாக இருக்கிறது. மேலும் அவர்கள் தனிப்பட்டவிதமாக, நடைமுறையான செயல்களின் மூலமாக தங்கள் அக்கறையையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திக் காட்டக்கூடும்.—யாக்கோபு 1:27; 2:14–17. (w91 1/15)
[அடிக்குறிப்புகள்]
a புறமதத்தினர், தங்கள் ஆசரிப்புகளில் நீண்டகாலமாகவே பூக்களிலிருந்து செய்யப்படும் தூபவர்க்கத்தை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள், ஆனால் கடவுளுடைய மக்களுக்கு மெய் வணக்கத்தில் தூபவர்க்கத்தை உபயோகிப்பது தவறாக இருக்கவில்லை. (யாத்திராகமம் 30:1, 7, 8; 37:29; வெளிப்படுத்துதல் 5:8) டிசம்பர் 22, 1976, ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில் “அவை உருவவழிபாடு சம்பந்தப்பட்ட அலங்கரிப்புகளா?” கட்டுரையைப் பார்க்கவும்.
b குடும்பத்தின் விருப்பங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும், ஏனென்றால் பூக்களை அனுப்ப விரும்பும் எவரும், அதற்குப் பதிலாக சபைக்கோ அல்லது குறிப்பிட்ட ஓர் அறக்கொடைக்கோ நன்கொடை அளிக்கலாம் என்று சிலர் தெரிவித்திருக்கின்றனர்.