வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஏன் நோவா பேழையிலிருந்து ஒரு காகத்தையும் பின்பு ஒரு புறாவையும் அனுப்பினான்?
பைபிள் நுட்பவிவரமான விளக்கத்தைக் கொடுக்கிறதில்லை. எனினும், நோவாவின் நடவடிக்கையில் ஒரு நியாயமான காரணம் இருப்பதாகத் தோன்றுகிறது.
இந்தப் பூமி, 40 பகல்களும் 40 இரவுகளும் விடாதுபெய்த பெருமழையை அனுபவித்தது, இது ஐந்து மாதங்கள் மலைகளின் உச்சிகளையுங்கூட மூடின பெரும் ஜலப்பிரளயத்தை உண்டுபண்ணினது. பின்பு “பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.” (ஆகியாகமம் 7:6–8:4) பல மாதங்களுக்குப் பின், “மலைச்சிகரங்கள் காணப்பட்ட” பின்பு நோவா “ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.”—ஆதியாகமம் 8:5, 7.
ஏன் ஒரு காகத்தை விட்டான்? இந்தப் பறவை பறப்பதில் வலிமைவாய்ந்தது, மேலும் அது, பிணங்களின் மாம்சம் உட்பட, பல்வேறு உணவுவகைகளை உண்டு பிழைத்திருக்க முடியும். அது திரும்பி வந்துவிடுமா அல்லது ஒருவேளை தண்ணீர்கள் வடிந்து நிலம் தோன்றுகையில் தென்படும் பிணங்களில் மீந்துள்ள மாம்சத்தை உண்டு, பேழைக்கு வராமல் இருந்துவிடுமாவெனக் காண்பதற்கு நோவா அந்தக் காகத்தை வெளியில் விட்டிருக்கலாம். எனினும் அந்தக் காகம் வெளியில் தங்கிவிடவில்லை. அது திரும்பிவந்ததென பைபிள் கூறுகிறது, ஆனால் அது நோவாவிடம் திரும்பிவந்துவிட்டதென அது சொல்கிறதில்லை. ஒருவேளை இன்னும் மூடியிருந்த தண்ணீர்களின்மீது மிதந்துகொண்டிருந்த உணவைக் கண்டுபிடிக்கப் பறந்து சென்றுகொண்டிருக்கையில் இடையிடையே பேழையின்மீது தங்கத் திரும்பிவந்திருக்கலாம்.
பின்னால், நோவா ஒரு புறாவை அனுப்பத் தெரிந்துகொண்டான். நாம் வாசிப்பதாவது: “அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது.” (ஆதியாகமம் 8:9) இது அதன் சொந்த முறையில், அந்தப் புறா, பிரளயத் தண்ணீர்கள் வடிந்துவிட்டதாவெனத் தீர்மானிப்பதற்குச் சேவை செய்யக்கூடுமெனக் குறிப்பாகத் தெரிவிக்கிறது. புறாக்கள் மனிதரிடம் ஓரளவு நம்பிக்கையைக் காட்டுகின்றன. அந்தப் புறா திரும்பி வரும், வெறுமென பேழையின்மீது உட்காருவதற்கல்ல, நோவாவினிடமே திரும்பிவந்துவிடுமென நோவா எதிர்பார்க்க முடியும்.
புறாக்கள் உலர்ந்த தரையின்மீது மாத்திரமே உட்காருமெனச் சொல்லப்படுகிறது, மேலும் பள்ளத்தாக்குகளில் தாழப் பறந்து, தாவரங்களையே உணவாக உண்ணுமென அறியப்பட்டுள்ளது. (எசேக்கியேல் 7:16) கிறிஸ்மெக்கின் விலங்கின வாழ்க்கை என்ஸைக்ளோபீடியா (ஆங்கிலம்) பின்வருமாறு குறிப்பிடுகிறது: “விதைகளையும் பருப்புகளையும் உண்ணும் எல்லா மாடப் புறாக்கள் மற்றும் புறாக்களின் காரியத்தில் உண்மையாயிருப்பதுபோல், பனி [அல்லது தண்ணீர்] ஒரு தினத்துக்குமேல் தொடர்ந்து மூடியிருக்கையில், அவற்றின் இயற்கையான உணவு பெரும்பாலும் தரைமட்டத்தில் இருப்பதால் தீனியளிப்பது கடினமாயிருக்கிறது.” ஆகையால் அந்தப் புறா உலர்ந்த தரையை அல்லது தளிர்க்கும் செடிகளைக் கண்டதன் ஏதாவது அத்தாட்சியை நோவாவுக்குத் திரும்பக் கொண்டுவரக்கூடும். நோவா அதை முதல்தடவை வெளியில் விட்டபோது, அந்தப் புறா வெறுமென அவனிடம் பேழைக்குள் திரும்பிவந்துவிட்டது. இரண்டாவது தடவை, அந்தப் புறா ஓர் ஒலிவ இலையுடன் திரும்பி வந்தது. மூன்றாவது தடவை, அது திரும்பி வரவில்லை, இது நோவா பேழையை விட்டு வெளிச் செல்வது கூடியதாயும் பாதுகாப்பாயும் இருந்ததென்ற அத்தாட்சியைக் கொடுத்தது.—ஆதியாகமம் 8:8-12.
சிலர் இவற்றைத் தற்செயலாக நடக்கும் சிறு நிகழ்ச்சிகளெனக் ஒருவேளைக் கருதலாமெனினும், இந்த விவரப் பதிவு, முழு விளக்கங்களையும் கொடுக்க மட்டுக்குமீறி முயற்சி செய்யாமல், அவ்வளவு திட்டவட்டமாயிருக்கும் இந்த உண்மை, பைபிளின் நம்பத்தக்கத் தன்மையைப் பிரதிபலிக்கிறது. அந்த விவரம் திட்டமிட்டு உருவாக்கினதோ கதை கட்டியமைத்ததோ அல்ல, நேர்மையாய்த் திருத்தமானதென்று ஏற்பதற்கு கூடுதலான காரணத்தை இது நமக்கு அளிக்கிறது. ஒன்றும் விடாத நுணுக்க விவரங்களும் விளக்கங்களும் இல்லாதது, உண்மையான கிறிஸ்தவர்கள், நோவா உயிர்த்தெழுப்பப்பட்டு ஏன் எதற்காக அவ்வாறு செய்தான் என்ற நுட்பவிவரங்களையெல்லாம் நேரில் விளக்கக்கூடியபோது நோவாவிடம் ஆர்வமூட்டும் என்ன காரியங்களை கேட்க எதிர்பார்க்கலாமென்பதற்கும் ஆலோசனை கொடுக்கிறது.—எபிரெயர் 11:7, 39.