வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஜலப்பிரளயத்திற்குப் பின், பேழையிலிருந்து நோவா ஒரு புறாவை அனுப்பினார், அது “ஒரு ஒலிவ மரத்தின் இலை”யுடன் திரும்பியது. அந்தப் புறாவுக்கு அந்த இலை எங்கிருந்து கிடைத்தது?
“ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன” என பைபிள் கூறுகிறது. (ஆதியாகமம் 7:19) தண்ணீர் வற்ற ஆரம்பித்தபோது, வாரத்திற்கு ஒரு தடவை என மூன்று தடவை நோவா ஒரு புறாவை அனுப்பினார். இரண்டாவது தடவை அந்தப் புறா ‘அதின் வாயில் ஒரு ஒலிவ மரத்தின் இலையை கொத்திக்கொண்டு வந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்து கொண்டார்.’—ஆதியாகமம் 8:8-11.
பூமியில் ஒரு குறிப்பிட்ட பாகம் எவ்வளவு காலத்திற்கு நீரில் மூழ்கியிருந்தது என்பதை இப்பொழுது அறிந்துகொள்ள எந்த வழியுமில்லை, ஏனென்றால் ஜலப்பிரளயத்தால் பூமியின் நிலவியல் அமைப்பே மாறிவிட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், ஏராளமான மரங்கள் அழுகிவிடும் அளவுக்கு பெரும்பாலான பகுதி அநேக நாட்களுக்கு தண்ணீருக்குள் மூழ்கியிருந்திருக்கலாம். என்றாலும், சில மரங்கள் முழுமையாக அழுகிப் போகாமல், தண்ணீர் வற்றியபோது மீண்டும் துளிர்க்க ஆரம்பித்ததாக தெரிகிறது.
ஒலிவ மரத்தைப் பற்றி த நியூ பைபிள் டிக்ஷ்னரி இவ்வாறு கூறுகிறது: “அதை வெட்டிவிட்டால், அவற்றின் வேரிலிருந்து இளம் தளிர்கள் முளைக்கின்றன, அவை கிட்டத்தட்ட ஐந்து புதிய தண்டுகளாக வளரலாம். செத்துவிட்டது போல் காட்சிதரும் ஒலிவ மரங்களும்கூட பொதுவாக இதுபோல முளைவிடலாம்.” “அதன் உயிர்சக்தி அழிக்க முடியாதது போல் தெரிகிறது” என த நியூ ஷாஃப்-ஹெர்ட்சோக் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜியஸ் நாலெஜ் கூறுகிறது. ஜலப்பிரளய தண்ணீரின் உவர்ப்புத்தன்மை, வெப்பநிலை போன்றவை பற்றிய விவரங்கள் இன்று யாருக்குமே தெரியாது. ஆகவே, ஒலிவ மரங்களையும் மற்ற தாவரங்களையும் ஜலப்பிரளயம் எந்தளவுக்கு பாதித்தது என்பதைப் பற்றி நாம் எதுவும் உறுதியாக சொல்ல முடியாது.
ஆனால், உயரமான மலைகளில் நிலவுகிற குளிரை காட்டு ஒலிவ மரங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. இவை பொதுவாக 1,000 மீட்டருக்கும் தாழ்வான பகுதிகளில்—சராசரி வெப்பநிலை பத்து டிகிரி செல்ஷியஸுக்கு மேல் உள்ள பகுதிகளில்—வளருகின்றன. “எனவே, அந்தப் புதிய இலையை பார்த்ததுமே, பள்ளத்தாக்குகளில் நீர் வற்ற ஆரம்பித்திருக்க வேண்டுமென நோவா முடிவு செய்திருக்கலாம்” என த ஃபிளட் ரீகன்ஸிடர்ட் என்ற நூல் கூறுகிறது. மீண்டும் ஒரு வாரம் கழித்து நோவா அந்தப் புறாவை வெளியே பறக்கவிட்டபோது, அது திரும்பி வரவேயில்லை; அதிக தாவரங்கள் வளர்ந்திருந்ததையும் புறா தங்குவதற்கேற்ற இடங்கள் இருந்ததையுமே அது சுட்டிக்காட்டியது.—ஆதியாகமம் 8:12.