உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w92 5/1 பக். 4-7
  • இன்று கள்ளத்தீர்க்கதரிசிகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இன்று கள்ளத்தீர்க்கதரிசிகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ராஜ்யத்தைப் பற்றிய சத்தியம்
  • ஏன் முக்கியமாக இருக்கிறது?
  • கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் மனிதகுலம்
  • கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு கற்பித்தவை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • கடவுளுடைய ராஜ்யம் ஆளுகை செய்கிறது
    நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
  • கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • கடவுளுடைய ராஜ்யம் உங்களுக்கு எதை அர்த்தப்படுத்தக்கூடும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
w92 5/1 பக். 4-7

இன்று கள்ளத்தீர்க்கதரிசிகள்

எரேமியா விக்கிரகாராதனையும் ஒழுக்கக்கேடும் இலஞ்ச ஊழலும் குற்றமில்லா இரத்தஞ் சிந்துதலும் நகரத்தில் சர்வ சாதாரணமாக இருந்த சமயத்தில் எருசலேமில் கடவுளுடைய தீர்க்கதரிசியாக சேவித்தார். (எரேமியா 7:8–11) அந்தச் சமயத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரே தீர்க்கதரிசியாக அவர் இருக்கவில்லை, ஆனால் பெரும்பாலான மற்றவர்கள் தன்னல-நாட்டமுள்ளவர்களாகவும், உண்மையற்றவர்களாகவும் இருந்தார்கள். என்ன வகையில்? யெகோவா அறிவிக்கிறார்: “தீர்க்கதரிசிகள் முதல் ஆசாரியர்கள் மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர். சமாதானமில்லாதிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.”—எரேமியா 6:13, 14.

தேசத்திலிருந்த எல்லா ஊழலின் மத்தியிலும் கள்ளத்தீர்க்கதரிசிகள் காரியங்கள் நேர்த்தியாக இருப்பதாகவும் மக்கள் கடவுளோடு சமாதானமாக இருப்பதாகவும் தோன்றும்படிச் செய்ய முயற்சித்தனர்; ஆனால் அது அவ்விதமாக இருக்கவில்லை. எரேமியா தைரியமாக அறிவித்தது போலவே கடவுளுடைய நியாயத்தீர்ப்பு அவர்களுக்குக் காத்திருந்தது. பொ.ச.மு. 607-ல் எருசலேம் பாபிலோனிய போர் வீரர்களால் தரைமட்டமாக்கப்பட்டு, ஆலயம் அழிக்கப்பட்டு, மக்கள் கொல்லப்பட்ட போது அல்லது தூரயிருந்த பாபிலோனுக்கு கைதிகளாக இழுத்துச் செல்லப்பட்ட போது கள்ளத்தீர்க்கதரிசிகள் அல்ல, மெய் தீர்க்கதரிசியாகிய எரேமியாவே சரி என நிரூபிக்கப்பட்டார். தேசத்தில் விட்டு வைக்கப்பட்ட பரிதபிக்கப்படத்தக்க ஒரு சிலர் எகிப்துக்கு தப்பி ஓடினர்.—எரேமியா 39:6-9; 43:4-7.

கள்ளத்தீர்க்கதரிசிகள் என்ன செய்திருந்தார்கள்? “இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் [யெகோவா, NW] சொல்லுகிறார்.” (எரேமியா 23:30) கடவுளிடமிருந்து வரும் மெய்யான எச்சரிப்புக்கு செவி சாய்ப்பதற்குப் பதிலாக, பொய்களுக்குச் செவிசாய்க்கும்படியாக மக்களை உற்சாகப்படுத்துவதன் மூலம், கள்ளத்தீர்க்கதரிசிகள் கடவுளுடைய வார்த்தைக்கு செவி சாய்ப்பதன் மூலம் வந்திருக்கக்கூடிய பலன்களை திருடியிருக்கிறார்கள். அவர்கள் “தேவனுடைய மகத்துவங்களைப்” பற்றி அல்ல, ஆனால் மக்கள் கேட்க விரும்பிய அவர்களுடைய சொந்தக் கருத்துகளையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். எரேமியாவின் செய்தி உண்மையில் கடவுளிடமிருந்து வந்தது, இஸ்ரவேலர் அந்த வார்த்தைகளைக் கேட்டு செயல்பட்டிருப்பார்களேயானால், அவர்கள் தப்பிப் பிழைத்திருப்பார்கள். கள்ளத்தீர்க்கதரிசிகள் ‘கடவுளுடைய வார்த்தைகளைத் திருடி’ மக்களை அழிவுக்கு வழிநடத்திச் சென்றார்கள். அது, இயேசு தம்முடைய நாளில் இருந்த உண்மையற்ற மதத் தலைவர்களைக் குறித்து சொன்னவிதமாகவே இருந்தது: “அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்கள்.”—அப்போஸ்தலர் 2:11; மத்தேயு 15:14.

எரேமியாவின் நாளில் இருந்தது போலவே, பைபிளின் கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்வதாக உரிமைப்பாராட்டிக் கொண்டிருக்கும் கள்ளத் தீர்க்கதரிசிகள் இன்று இருக்கிறார்கள்; ஆனால் கடவுள் பைபிளின் மூலமாக உண்மையில் சொல்லுகிறவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகின்ற காரியங்களைப் பிரசங்கிப்பதன் மூலம் அவர்களும்கூட கடவுளுடைய வார்த்தையை திருடுகிறார்கள். என்ன விதத்தில்? ராஜ்யத்தைப் பற்றிய அடிப்படை பைபிள் போதகத்தை ஓர் உரைக்கல்லாக பயன்படுத்தி அந்தக் கேள்விக்கு விடையளிப்போம்.

ராஜ்யத்தைப் பற்றிய சத்தியம்

கடவுளுடைய ராஜ்யமே, கிறிஸ்துவினுடைய போதகத்தின் முக்கிய பொருளாக இருந்தது, இது சுவிசேஷங்களில் நூறுக்கும் மேற்பட்ட தடவைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இயேசு தம்முடைய ஊழியத்தினுடைய ஆரம்பத்தில் இவ்விதமாகச் சொன்னார்: “நான் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்.” தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு அவர் “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று ஜெபிக்கும்படியாக கற்பித்தார்.—லூக்கா 4:43; 11:2.

அப்படியென்றால் ராஜ்யம் என்பது என்ன? தி நியு தேயர்ஸ் கிரேக்க ஆங்கில சொற்களஞ்சியம் பிரகாரம் பைபிளில் “ராஜ்யம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை முதலில் “அரசதிகாரம், ராஜரீகம், ஆட்சியுரிமை, அரசாட்சி”யையும் இரண்டாவதாக, “ராஜாவின் ஆட்சிக்கு உட்பட்ட பிராந்தியத்தையும்” அர்த்தப்படுத்துகிறது. இதிலிருந்து கடவுளுடைய ராஜ்யம் ஒரு ராஜாவால் நிர்வகிக்கப்படும் ஒரு சொல்லர்த்தமான அரசாங்கம் என்ற நியாயமான முடிவுக்கே நாம் வருவோம். இது இப்படித்தானா?

ஆம், இப்படித்தான், மேலும் இயேசு கிறிஸ்துவே ராஜாவாக இருக்கிறார். இயேசுவின் பிறப்புக்கு முன்பே காபிரியேல் தூதன் மரியாளிடம் இவ்வாறு சொன்னான்: “அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய [யெகோவாவாகிய NW] தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.” (லூக்கா 1:32) இயேசு சிங்காசனத்தைப் பெற்றுக்கொள்வது, அவரே ராஜாவாக, அரசாங்க ஆட்சியாளராக இருப்பதை நிரூபிக்கிறது. மேலுமாக ராஜ்யம், சொல்லர்த்தமான ஓர் அரசாங்கமாக இருப்பதை ஏசாயா தீர்க்கதரிசனம் நிரூபிக்கிறது: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். அரசாங்கம் அவர் தோளின் மேலிருக்கும்; . . . அவருடைய அரசாங்கத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.”—ஏசாயா 9:6, 7, கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு.

இயேசு எங்கே ஆட்சி செய்கிறார்? எருசலேமிலா? இல்லை. தானியேல் தீர்க்கதரிசி இயேசு ராஜ்யத்தைப் பெறும் ஒரு தரிசனத்தைக் கண்டார், அவருடைய தரிசனத்தில் இயேசுவை அவர் பரலோகத்தில் காண்கிறார். (தானியேல் 7:13, 14) இது இயேசு ராஜ்யத்தைப் பற்றி பேசிய விதத்தோடு இசைவாயிருக்கிறது. அவர் அநேக தடவைகள் அதை “பரலோக ராஜ்யம்” என்றழைத்தார். (மத்தேயு 10:7; 11:11, 12) பிலாத்துவுக்கு முன்பாக விசாரணையின் போது, அவனிடமாக இயேசு சொன்ன வார்த்தைகளுக்கும் இசைவாக இது இருக்கிறது: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே. இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.” (யோவான் 18:36) இயேசுவின் ராஜ்யம் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யும் ஒரு மெய்யான அரசாங்கம் என்பதாக உங்கள் மதகுருவோ அல்லது பாதிரியோ உங்களுக்குக் கற்பித்திருக்கிறாரா? அல்லது ராஜ்யம் என்பது வெறுமென உங்கள் இருதயத்தில் இருக்கும் ஏதோவொன்று என்பதாக கற்பித்திருக்கிறரா? அப்படியானால், அவர் கடவுளின் வார்த்தைகளை உங்களிடமிருந்து திருடியிருக்கிறார்.

ராஜ்ய அரசாங்கத்துக்கும் வித்தியாசமான பல வகையான மனித அரசாங்கங்களுக்குமிடையிலான உறவு என்ன? மிர்சா எலியாட்டினால் பதிப்பிக்கப்பட்ட மத கலைக்களஞ்சியம் பிரகாரம் சீர்திருத்தவாதியான மார்டின் லூதர் ராஜ்யத்தைப் பற்றி விவாதிக்கும் போது, “உலகப்பிரகாரமான அரசாங்கமும்கூட . . . கடவுளுடைய ராஜ்யம் என்றழைக்கப்படலாம்” என்று கருத்து தெரிவித்தார். மனிதர்கள் தங்களுடைய சொந்த முயற்சிகளினால், மனித அரசாங்கங்களை அதிகமாக கடவுளுடைய ராஜ்யத்தைப் போல் ஆக்கிவிட முடியும் என்பதாக சிலர் போதிக்கிறார்கள். 1983-ல் உலக சர்ச்சுகளின் குழு இவ்விதமாக உறுதியாகக் கூறியது: “பிரத்தியேகமான சில செயல்களின் மூலமாக சமாதானத்துக்கான நம்முடைய உண்மையான ஆசைக்கு நாம் சான்றளிக்கும் போது, கடவுளுடைய ஆவி, இந்த உலகின் ராஜ்யங்களை கடவுளுடைய ராஜ்யத்துக்கு அருகாமையில் கொண்டு செல்வதற்கு நம்முடைய பலவீனமுள்ள முயற்சிகளை பயன்படுத்த முடியும்.”

ஆனால் கர்த்தருடைய ஜெபத்தில் (பரமண்டல ஜெபத்தில்) இயேசு, தம்மைப் பின்பற்றியவர்களிடம், கடவுளுடைய ராஜ்யம் வருவதாக என்று ஜெபிக்கும்படியாகச் சொன்ன பின்பு தானே “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று ஜெபிக்கும்படியாகச் சொன்னார் என்பதை கவனியுங்கள். (மத்தேயு 6:10) வேறு வார்த்தைகளில், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன் மூலம் மனிதர்கள் ராஜ்யத்தை வரச் செய்வதில்லை. ராஜ்யத்தின் வருகைதானே பூமியின் மீது கடவுளுடைய சித்தம் செய்யப்படும்படியாகச் செய்கிறது. எவ்விதமாக?

தானியேல் அதிகாரம் 2, வசனம் 44-ல் தீர்க்கதரிசனம் என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள்: “அந்த ராஜாக்களின் [முடிவின் காலத்திலுள்ள மனித ஆட்சியாளர்கள்], நாட்களிலே பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார். . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கிவிடும்.” இயேசு தம்முடைய ராஜ்யம் இவ்வுலகத்தின் பாகமாக இல்லை என்று சொன்னது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை! மாறாக ராஜ்யம் இந்த பூமியிலுள்ள ராஜ்யங்களை, அரசாங்கங்களை அழித்து, அவைகளுக்குப் பதிலாக மனிதகுலத்தை ஆளுகைச் செய்யப் போகிறது. மனித குலத்துக்கு கடவுளால்-கொடுக்கப்பட்ட அரசாங்கமாக அது கடவுளுடைய சித்தம் பூமியின் மீது செய்யப்படுவதை நிச்சயப்படுத்திக் கொள்ளும்.

இந்த உலகை கட்டுப்படுத்திக்கொண்டிருப்பது யார் என்பதை நாம் சிந்திக்கையில் ராஜ்யம் இத்தனைக் கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்கான காரணம் தெளிவாகிறது. அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார்: “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.” (1 யோவான் 5:19) “பொல்லாங்கன்” பிசாசாகிய சாத்தானாகும், இவனை பவுல், “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுள்” என்றழைத்தார். (2 கொரிந்தியர் 4:4, NW) பிசாசாகிய சாத்தானைக் கடவுளாகக் கொண்டிருக்கும் உலகிலுள்ள நிறுவனங்களை கடவுளுடைய ராஜ்யத்தோடு ஒன்றாக்க எந்த வழியும் இல்லை.

இயேசு அரசியலில் ஈடுபடாமல் இருந்ததற்கு இது ஒரு காரணமாகும். யூத தேசீயவாதிகள் அவரை ராஜாவாக்க முயன்றபோது, அவர் அவர்களை விட்டு விலகிப் போனார். (யோவான் 6:15) நாம் பார்த்த வண்ணமாகவே, அவர் பிலாத்துவிடம் ஒளிவுமறைவில்லாமல் இவ்வாறு சொன்னார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல.” இதற்கிசைவாக தம்மைப் பின்பற்றுபவர்களைக் குறித்து அவர் சொன்னார்: “நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 17:16) ஆகவே இந்தக் காரிய ஒழுங்கு முறைக்குள் சீர்திருத்தம் செய்து கடவுளுடைய ராஜ்ய வருகையை துரிதப்படுத்தலாம் என்றும் அந்த இலக்கை நோக்கி கிரியை செய்யும்படியும் தங்களுடைய மந்தையை ஊக்குவிக்கும் மதத் தலைவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகள் ஆவர். அவர்கள் பைபிள் உண்மையில் சொல்லும் காரியங்களுக்குச் செவி சாய்ப்பதனால் கிடைக்கும் பலன்களைத் திருடிவிடுகிறார்கள்.

ஏன் முக்கியமாக இருக்கிறது?

இவையனைத்துமே வெறுமென அறிவுப்பூர்வமான ஒரு விவாதமாக மாத்திரமே இருக்கிறதா? நிச்சயமாகவே இல்லை. கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய தவறனான போதனைகள் அநேகரை தவறாக வழிநடத்தி, வரலாற்றின் போக்கையும்கூட மாற்றியிருக்கிறது. உதாரணமாக ஒரு ரோமன் கத்தோலிக்க என்சைக்ளோப்பீடியாவான தியோ இவ்விதமாகச் சொல்கிறது: “கடவுளுடைய மக்கள் கிறிஸ்துவின் மூலமாக பூமியின் மீது தோற்றுவிக்கப்படும் கடவுளுடைய ராஜ்யத்தை நோக்கி முன்னேறிச் செல்கிறார்கள் . . . சர்ச், இந்த ராஜ்யத்தின் வித்தாக இருக்கிறது.” கத்தோலிக்க சர்ச் கடவுளுடைய ராஜ்யத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டது, மூடநம்பிக்கைகள் நிறைந்த வரலாற்றின் இடைநிலைக் காலத்தின் போது சர்ச்சுக்கு மிகப் பேரளவான உலகியல் சார்ந்த அதிகாரத்தைக் கொடுத்தது. இன்றும்கூட சர்ச் அதிகார குழு, ஒரு சில அரசியல் அமைப்புகளின் சார்பாகவும் மற்றவற்றிற்கு எதிராகவும் வேலை செய்து உலக விவகாரங்களின் போக்கின் மீது செல்வாக்குச் செலுத்த முற்படுகின்றது.

கருத்துரையாளர் ஒருவர் பின்வருமாறு சொன்ன போது இன்று மிகப் பரவலாக இருந்து வரும் மற்றொரு கருத்தைக் குறிப்பிட்டார்: “புரட்சியின் வழியே ராஜ்யமாக இருக்கிறது. ஏனென்றால், புரட்சி என்பது சத்திய மனிதர்—இயேசு . . . காந்தி . . . பெரகன்கள் மூலமாக கொடுக்கப்பட்ட ஒரு தெய்வீக சின்னத்தினால் ஊக்குவிக்கப்பட்டு மக்கள் புதிய மானிட ஜாதியாக ஒன்று சேருவதாக இருக்கிறது.” அரசியலில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதன் மூலமாக கடவுளுடைய ராஜ்யம் முன்னேற்றுவிக்கப்பட முடியும் என்று போதித்து, ராஜ்யத்தைப் பற்றிய மெய்யான உண்மைகளை அசட்டை செய்திருப்பது, மதத்தலைவர்களை ஆட்சி பொறுப்புகளுக்கு போட்டியிட வழிநடத்தியிருக்கிறது. அது மற்றவர்களை உள்நாட்டு கிளர்ச்சியில் ஈடுபடவும் கொரில்லா போர்களில் பங்குபெறவும்கூட வழிநடத்தியிருக்கிறது. இவை எதுவுமே, ராஜ்யம் இவ்வுலகத்தின் பாகமல்ல என்ற உண்மைக்கு இசைவாக இல்லை. அரசியலில் அவ்வளவாக ஆழ்ந்துவிடும் மதத் தலைவர்கள், இயேசுவும் அவருடைய உண்மையான சீஷர்களும் இருப்பது போல உலகின் பாகமாக இல்லாதிருப்பதிலிருந்து வெகு தூரத்திலிருக்கிறார்கள். அரசியல் நடவடிக்கைகளின் மூலமாக கடவுளுடைய ராஜ்யம் முயன்று அடையப்படுகிறது என்று கற்பிக்கிறவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளாவர். அவர்கள் ஜனங்களிடமிருந்து கடவுளுடைய வார்த்தையை திருடிவிடுகிறார்கள்.

கிறிஸ்தவமண்டலத்திலுள்ள மதத்தலைவர்கள் பைபிள் சொல்வதை உண்மையில் போதித்திருப்பார்களேயானால், கடவுளுடைய ராஜ்யம் வறுமை, நோய், இன கொடுமை, அநீதி போன்ற பிரச்னைகளை நிச்சயமாகவே தீர்த்துவிடும் என்பதை அவர்களுடைய மந்தை அறிந்திருக்கும். ஆனால் அது கடவுளுடைய உரிய காலத்திலும் கடவுளுடைய வழியிலும் இருக்கும். அது, ராஜ்யம் வரும் போது முடிவுக்கு வரும் அரசியல் அமைப்புகளின் சீர்திருத்தத்தின் மூலமாக இருக்காது. இந்த மத குருக்கள் உண்மையான தீர்க்கதரிசிகளாக இருந்திருப்பார்களேயானால், கடவுளுடைய ராஜ்யம் செயல்படுவதற்கு காத்துக்கொண்டிருக்கையில், இந்த உலகின் நேர்மையின்மை உண்டுபண்ணும் பிரச்னைகளை கையாளுவதற்கு அவர்கள் உண்மையான, கடவுள்-கொடுத்திருக்கும் நடைமுறையான உதவியை காணமுடியும் என்பதை தங்கள் மந்தைக்குக் கற்பித்திருப்பார்கள்.

கடைசியாக, அவர்கள் பூமியின் மீது இத்தனை வேதனையை உண்டுபண்ணுகிற மோசமாகி வரும் நிலைமைகள் பைபிளில் முன்னறிவிக்கப்பட்டுள்ளன என்றும் ராஜ்ய வருகை சமீபித்திருப்பதற்கு அவை அடையாளமாக இருப்பதையும் தங்கள் மந்தைக்கு கற்பித்திருப்பர். ஆம், கடவுளுடைய ராஜ்யம் விரைவில் குறுக்கிட்டு, தற்போதைய அரசியல் அமைப்புமுறைகளை மாற்றிவிடும். அது என்னே ஓர் ஆசீர்வாதமாக இருக்கும்!—மத்தேயு 24:21, 22, 36-39; 2 பேதுரு 3:7; வெளிப்படுத்துதல் 19:11-21.

கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் மனிதகுலம்

கடவுளுடைய ராஜ்ய வருகை மனிதகுலத்துக்கு எதை அர்த்தப்படுத்தும்? ஆம், ஒவ்வொரு நாள் காலையும் நீங்கள் முழு உற்சாகத்தோடும் எழுந்துகொள்வதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? உங்களுக்குத் தெரிந்திருக்கும் எவருமே நோயுற்றோ அல்லது மரித்துக்கொண்டோ இல்லை. மரித்துப் போன உங்களுடைய அன்பார்ந்தவர்களும்கூட, உயிர்த்தெழுதல் மூலமாக உங்களிடம் திரும்பி வந்திருக்கிறார்கள். (ஏசாயா 35:5, 6; யோவான் 5:28, 29) சுயநலமான வியாபாரம் அல்லது ஏறுமாறான பொருளாதார அமைப்புகளினால் உண்டுபண்ணப்படும் பொருளாதார கவலைகள் இனிமேலும் இல்லை. உங்களுக்கு உங்களுடைய சொந்த செளகரியமான வீடும், குடும்பத்தை போஷிப்பதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தையும் விளைவிக்க ஏராளமான நிலமும் இருக்கிறது. (ஏசாயா 65:21-23) எந்த இடத்திலும் பகலிலோ அல்லது இரவிலோ ஒரு நாளின் எந்த நேரத்திலும் தாக்கப்படும் பயமின்றி நீங்கள் நடந்துச் செல்ல முடியும். இனிமேலும் யுத்தங்கள் இல்லை—உங்கள் பாதுகாப்பை அழித்துவிட எதுவுமில்லை. அனைவருமே உங்களுடைய மிகச் சிறந்த நலனில் அக்கறையுள்ளவர்களாக இருப்பர். பொல்லாதவர்கள் இல்லை. அன்பும் நீதியுமே மேலோங்கியிருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு காலத்தை உங்களால் கற்பனைச் செய்ய முடிகிறதா? ராஜ்யம் இத்தகைய ஓர் உலகத்தைத்தானே கொண்டுவரும்.—சங்கீதம் 37:10, 11; 85:10-13; மீகா 4:3, 4.

இது வெறும் ஒரு கற்பனையா? இல்லை. முந்திய பாராவில் மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள், அப்போது அங்கு சொல்லப்பட்டிருக்கும் அனைத்துமே கடவுளின் உறுதியான வாக்குறுதிகளை பிரதிபலிப்பதை நீங்கள் காண்பீர்கள். கடவுளுடைய ராஜ்யம் மனிதகுலத்துக்கு என்ன செய்யக்கூடும் மற்றும் செய்யும் என்பதைப் பற்றிய இந்த மெய்யான காட்சி உங்களுக்கு இதுவரை கொடுக்கப்படாமலிருந்தால் அப்பொழுது எவரோ ஒருவர் கடவுளுடைய வார்த்தைகளை உங்களிடமிருந்து திருடியிருக்கிறார்.

சந்தோஷகரமாக, காரியங்கள் அவ்விதமாக இருந்துவிட வேண்டிய அவசியமில்லை. நம்முடைய நாளில், “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். அப்போது முடிவு வரும்” என்பதாக இயேசு சொன்னார். (மத்தேயு 24:14) நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் பத்திரிகை அந்தப் பிரசங்க வேலையின் ஒரு பாகமாக இருக்கிறது. கள்ளத்தீர்க்கதரிசிகளால் வஞ்சிக்கப்படுவதை தவிர்க்கும்படியாக நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய சத்தியத்தைக் கற்றறிய கடவுளுடைய வார்த்தையை ஆழமாக ஆராய்ந்துப் பாருங்கள். பின்னர், உன்னத மேய்ப்பராகிய யெகோவா தேவனின் ஏற்பாடாக இருக்கும் அந்த ராஜ்யத்துக்கு உங்களைக் கீழ்ப்படுத்துங்கள். உண்மையில் அதுவே மனிதனின் ஒரே நம்பிக்கையாகும். அது ஏமாற்றிவிடாது. (w92 2/1)

[பக்கம் 5-ன் படம்]

மனித அரசாங்கம் கடவுளுடைய ராஜ்யமாகக் கருதப்படலாம் என்று லூதர் கற்பித்தார்

[படத்திற்கான நன்றி]

Courtesy of the Trustees of the British Museum

[பக்கம் 7-ன் படம்]

அன்புள்ள ஒரு மேய்ப்பனைப் போல, யெகோவா, அவருடைய ராஜ்யத்தின் மூலமாக, எந்த மனிதனும் கொண்டுவர முடியாத நிலைமைகளைக் கொண்டு வருவார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்