கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு கற்பித்தவை
“அவர் நகரம் நகரமாகவும் கிராமம் கிராமமாகவும் சென்று கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்து . . . வந்தார்.”—லூக்கா 8:1.
நமக்கு முக்கியமானதாயும், மனதுக்குப் பிடித்தமானதாயும் இருக்கிற விஷயங்களைப் பற்றிப் பேச நாம் விரும்புகிறோம். இயேசு சொன்ன விதமாக, “இருதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது.” (மத்தேயு 12:34) அவர் தம்முடைய ஊழியத்தில் பேசிய விஷயங்களைக் கவனிக்கையில், கடவுளுடைய அரசாங்கமே அவருக்கு முக்கிய விஷயமாய் இருந்ததென்ற முடிவுக்கு நாம் வரமுடியும்.
கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? அது கடவுளால் நியமிக்கப்பட்ட ஓர் அரசர் ஆட்சி செய்யும் ஓர் அரசாங்கம் ஆகும். இயேசு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எல்லாரிடமும் கற்பித்தார்; அதுவே அவருடைய செய்தியின் மையப்பொருளாக இருந்தது. அந்த அரசாங்கத்தைப் பற்றி நான்கு சுவிசேஷப் புத்தகங்களிலும் 110-க்கும் அதிகமான முறை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தையும் அது செய்யவிருப்பதையும் பற்றிய நிறைய விஷயங்களை இயேசு வார்த்தைகளால் மட்டுமே அல்ல, தம்முடைய செயல்களாலும் கற்பித்தார்.
அதன் அரசர் யார்? கடவுளுடைய அரசாங்கத்தின் அரசர் மனிதரால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறவர் அல்ல. மாறாக, அவர் கடவுளால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இயேசு கற்பிக்கையில், தாமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த அரசர் என்பதை வெளிப்படுத்தினார்.
வாக்குறுதி அளிக்கப்பட்ட மேசியா அழியாத ஓர் அரசாங்கத்தின் அரசராக இருப்பார் என பைபிள் தீர்க்கதரிசனங்கள் முன்னறிவித்திருந்ததை இயேசு அறிந்திருந்தார். (2 சாமுவேல் 7:12-14; தானியேல் 7:13, 14; மத்தேயு 26:63, 64) அவர் தம்மை முன்னறிவிக்கப்பட்ட மேசியா என வெளிப்படையாக அறிவித்ததையும் நினைவுபடுத்திப் பாருங்கள். இதன் மூலம் தாம் கடவுளால் நியமிக்கப்பட்ட அரசர் என ஒப்புக்கொண்டதை வெளிக்காட்டினார். (யோவான் 4:25, 26) அப்படியானால், அவர் அநேக முறை “என்னுடைய அரசாங்கம்” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியது பொருத்தமானதே.—யோவான் 18:36.
அந்த அரசாங்கத்தில் தம்முடன் சேர்ந்து ஆட்சி செய்வதற்கு மற்றவர்களும் இருப்பார்கள் என இயேசு கற்பித்தார். (லூக்கா 22:28-30) அவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பதால் அவர்களை “சிறுமந்தை” என அவர் அழைத்தார். “உங்களிடம் அரசாங்கத்தைக் கொடுக்க உங்கள் தகப்பன் அங்கீகரித்திருக்கிறார்” என்று அவர்களைக் குறித்துச் சொன்னார். (லூக்கா 12:32) 1,44,000 பேர் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்யும் பாக்கியத்தைப் பெறுவார்கள் என பைபிளின் கடைசிப் புத்தகம் காட்டுகிறது.—வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1.
அந்த அரசாங்கம் எங்கே அமைந்திருக்கிறது? ரோம ஆட்சியாளரான பொந்தியு பிலாத்துவிடம் “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்திற்குரியதல்ல” என்று இயேசு சொன்னார். (யோவான் 18:36) கிறிஸ்துவை அரசராகக் கொண்ட கடவுளுடைய அரசாங்கம் மனித பிரதிநிதிகள் மூலம் ஆட்சி செய்யாது. கடவுளுடைய அரசாங்கத்தை “பரலோக அரசாங்கம்” என இயேசு அடிக்கடி குறிப்பிட்டார்.a (மத்தேயு 4:17; 5:3, 10, 19, 20) ஆகவே, கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்திலிருந்தே ஆட்சி செய்யும்.
பூமியில் தம்முடைய காலம் முடிந்த பிறகு, பரலோகத்திற்குத் திரும்பிச் செல்லும் திட நம்பிக்கை இயேசுவுக்கு இருந்தது. அதனால்தான், தம்மோடு ஆட்சி செய்யப்போகிறவர்களுக்கு அங்கே ‘ஓர் இடத்தைத் தயார்படுத்தப்போவதாக’ அவர் சொன்னார்.—யோவான் 14:2, 3.
அந்த அரசாங்கம் என்ன செய்கிறது? “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்பட வேண்டும்” என்று கடவுளிடம் ஜெபிக்கும்படி தமக்குச் செவிகொடுத்தவர்களுக்கு இயேசு கற்பித்தார். (மத்தேயு 6:9, 10) கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்பட்டு வருகிறது. பூமியைக் குறித்த கடவுளுடைய நோக்கம், அவரது அரசாங்கத்தின் மூலமே நிறைவேற்றப்படுகிறது. அதற்காக, அந்த அரசாங்கம் பூமியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
அந்த அரசாங்கம் பூமியில் என்ன செய்யும்? கெட்ட காரியங்களை வேண்டுமென்றே செய்து வருகிறவர்களைக் கடவுளுடைய அரசாங்கம் துடைத்தழித்துவிடும் என இயேசு கற்பித்தார். (மத்தேயு 25:31-34, 46) அப்படியென்றால், எல்லா விதமான ஊழல்களும் துன்மார்க்கமும் முடிவுக்கு வரும். இந்தப் பூமியில், “சாந்தகுணமுள்ளவர்கள்,” நீதியுள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்,” சமாதானம் பண்ணுகிறவர்கள் ஆகியோரே நிறைந்திருப்பார்கள் என இயேசு கற்பித்தார்.—மத்தேயு 5:5-9.
உண்மையுள்ள அந்த மக்கள் மாசுபட்ட பூமியில் வாழ வேண்டியிருக்குமா? வேண்டியிருக்காது! கடவுளுடைய அரசாங்கத்தின்கீழ் பூமியில் வியத்தகு மாற்றங்கள் நிகழும் என இயேசு வாக்குறுதி அளித்தார். அவருக்கு அருகே கழுமரத்தில் ஏற்றப்பட்டிருந்த மனிதன், “இயேசுவே, நீங்கள் ஆட்சிக்கு வரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினான். அதற்கு இயேசு, “உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்றார். (லூக்கா 23:42, 43) ஆம், கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமி முழுவதையும் ஏதேன் தோட்டத்தைப் போல ஒரு பூஞ்சோலையாக மாற்றும்.
அந்த அரசாங்கம் மனிதகுலத்திற்கு வேறு என்ன செய்யும்? இயேசு, கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும் என்ற வாக்குறுதியை அளித்ததோடு, அது என்ன செய்யும் என்பதைச் செயலிலும் காட்டினார். அவர் அநேகரை அற்புதமாகச் சுகப்படுத்தினார்; இவ்வாறு, சீக்கிரத்தில் தம்முடைய ஆட்சியின்போது பெரியளவில் செய்யப்போவதைச் சிறியளவில் செய்து காட்டினார். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட சுவிசேஷப் பதிவு இயேசுவைப் பற்றி இவ்வாறு கூறுகிறது: “அவர் கலிலேயா முழுவதும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்பித்தார்; கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுடைய எல்லா விதமான நோய்களையும் உடல் பலவீனங்களையும் போக்கினார்.”—மத்தேயு 4:23.
இயேசு பல விதங்களில் மக்களைச் சுகப்படுத்தினார். அவர் ‘பிறவிக் குருடனுக்குப் பார்வை அளித்தார்.’ (யோவான் 9:1-7, 32, 33) அருவருக்கத்தக்க தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மனிதனை அவர் மென்மையாகத் தொட்டு சுகப்படுத்தினார். (மாற்கு 1:40-42) ‘காதுகேளாதவனும் திக்குவாயனுமான ஒருவன்’ அவரிடம் கொண்டுவரப்பட்டபோது ‘காதுகேளாதவர்களைக் கேட்க வைக்கவும் பேச முடியாதவர்களைப் பேச வைக்கவும்’ தம்மால் முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார்.—மாற்கு 7:31-37.
கடவுளால் நியமிக்கப்பட்ட அரசர், மரித்தோரைக்கூட உயிர்த்தெழுப்பும் வல்லமையைப் பெற்றிருந்தார். மரித்தோரை இயேசு உயிரோடு எழுப்பிய மூன்று சம்பவங்கள் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர், ஒரு விதவையின் ஒரே மகனையும் 12 வயதுள்ள ஒரு சிறுமியையும் தம்முடைய உயிர் நண்பர் லாசருவையும் உயிர்த்தெழுப்பினார்.—லூக்கா 7:11-15; 8:41-55; யோவான் 11:38-44.
கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களுக்குக் காத்திருக்கிற அருமையான எதிர்காலத்தைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் மூலமாக இயேசு இவ்வாறு முன்னறிவித்தார்: “இதோ! கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்.” (வெளிப்படுத்துதல் 1:1; 21:3, 4) கண்ணீரோ வேதனையோ மரணமோ இல்லாத ஓர் உலகைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்! அப்போது, கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலும் செய்யப்பட வேண்டுமென்ற ஜெபம் முற்றிலுமாய் நிறைவேறும்.
கடவுளுடைய அரசாங்கம் எப்போது வரும்? தம்முடைய ‘பிரசன்னம்’ என்று இயேசு அழைத்த ஒரு முக்கியக் காலக்கட்டத்தில் அவரது ஆட்சி துவங்கும் என அவர் கற்பித்தார். அரசதிகாரத்தோடு தாம் பிரசன்னமாகும் காலப்பகுதியின் ஆரம்பத்தைச் சுட்டிக்காட்டும் விலாவாரியான அடையாளங்களை இயேசு முன்னறிவித்தார். போர்கள், பஞ்சங்கள், பூகம்பங்கள், கொள்ளைநோய்கள், பெருமளவு அக்கிரமங்கள் என உலகெங்கும் துன்பங்கள் நிறைந்த காலப்பகுதியாக அது இருக்குமென சொன்னார். (மத்தேயு 24:3, 7-12; லூக்கா 21:10, 11) இயேசு முன்னறிவித்த இந்த அம்சங்களையும் இன்னுமநேக அம்சங்களையும், குறிப்பாக முதல் உலகப் போர் ஆரம்பித்த வருடமான 1914-லிலிருந்து கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ஆகவே, இயேசு இப்போது அரசராக ஆட்சி செய்து வருகிறார். அந்த அரசாங்கம் பூமியில் ஆட்சியைத் துவங்குவதற்கும் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்குமான காலம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது.b
வரவிருக்கிற கடவுளுடைய அரசாங்கம் தனிப்பட்ட விதமாக உங்களுக்கு எவ்விதத்தில் பயனளிக்கும்? அது, இயேசுவின் செய்திக்கு நீங்கள் எப்படிப் பிரதிபலிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததே. (w10-E 04/01)
[அடிக்குறிப்புகள்]
a “பரலோக அரசாங்கம்” என்ற சொற்றொடர் மத்தேயு சுவிசேஷத்தில் சுமார் 30 தடவை காணப்படுகிறது.
b கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் வரவிருப்பதைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்வதற்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில், “நாம் ‘கடைசி நாட்களில்’ வாழ்கிறோமா?” என்ற தலைப்பிலுள்ள 9-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.