வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஒரு சில பைபிள் மொழிபெயர்ப்புகளில் ஆதியாகமம் 12:19 மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதில் தோன்றுவது போல பார்வோன் உண்மையில் சாராளை திருமணம் செய்தானா?
இல்லை. பார்வோன் சாராளை (சாராயை) தன் மனைவியாக்கிக் கொள்வதிலிருந்து தடுத்துநிறுத்தி வைக்கப்பட்டான். ஆகவே, சாராளின் தன்மானமும் கண்ணியமும் ஆபத்திற்குள்ளாக்கப்படவில்லை.
நிலைமையை அதனுடைய சந்தர்ப்பச் சூழலில் ஆராய்வதன் மூலம் இதைக் காண நாம் உதவப்படுகிறோம். ஒரு பஞ்சத்தின் காரணமாக ஆபிரகாம் (ஆபிராம்) எகிப்தில் சில காலம் புகலிடம் நாடும்படி நிர்பந்தம் ஏற்படுகிறது. தன்னுடைய அழகிய மனைவியின் காரணமாக அங்கே தன்னுடைய உயிர் ஆபத்தில் இருக்கும் என்பதாக அவர் உணர்ந்தார். ஆபிரகாம் இன்னும் சாராளின் மூலமாக ஒரு குமாரனுக்கு தந்தையாகவில்லை, ஆகவே எகிப்தில் அவர் மரிக்க நேரிட்டால் பூமியிலுள்ள குடும்பங்கள் அனைத்தையும் ஆசீர்வதிக்கப் போகிற வித்தின் வம்சாவழி துண்டிக்கப்படும். (ஆதியாகமம் 12:1-3) ஆகவே ஆபிரகாம், சாராளை அவருடைய சகோதரி என்று சொல்லும்படிச் சொன்னார். உண்மையில் அவள் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரியாகவே இருந்தாள்.—ஆதியாகமம் 12:10-13; 20:12.
அவருடைய பயத்துக்கு ஆதாரமில்லாமல் இல்லை. கல்விமான் ஆகஸ்ட் நோபல் விளக்கினார்: “ஆபிரகாம் தான் எகிப்தில் கொலை செய்யப்படாதபடிக்கு சாராயைத் தன் சகோதரியாக அறிமுகப்படுத்திக் கொள்ளும்படியாக கேட்டுக்கொண்டார். அவள் ஒரு திருமணமான பெண்ணாக கருதப்பட்டால், அவளுடைய கணவனும் உரிமைக்காரனுமாயிருப்பவனை கொலை செய்வதன் மூலமாக மாத்திரமே அவளை ஒரு எகிப்தியன் அடைய முடியும்; அவள் ஒரு சகோதரியாக கருதப்பட்டாளேயானால், நட்பான முறைகளின் மூலமாக அவளை சகோதரனிடமிருந்து அடைவதற்கு சாத்தியமிருந்தது.”
என்றபோதிலும் எகிப்திய பிரபுக்கள், பார்வோன் சாராளை திருமணம் செய்து கொள்வது குறித்து ஆபிரகாமோடு எந்த ஒப்பந்தத்திற்குள்ளும் பிரவேசிக்கவில்லை. அவர்கள் வெறுமென அழகிய சாராளை பார்வோனுடைய வீட்டுக்கு கொண்டுவந்தார்கள், எகிப்திய அரசன் அவளுடைய சகோதரனாக கருதப்பட்ட ஆபிரகாமுக்கு வெகுமதிகளைக் கொடுத்தான். ஆனால் இதைத் தொடர்ந்து யெகோவா பார்வோனுடைய வீட்டை வாதைகளால் வாதித்தார். குறிப்பிடப்படாத ஏதோ ஒரு வழியில், உண்மை நிலை வெளிப்படுத்தப்பட்ட போது, அவன் ஆபிரகாமிடம் இவ்வாறு சொன்னான்: “இவளை உன் சகோதரி என்று நீ சொல்ல வேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக் கொண்டிருப்பேனே, இதோ உன் மனைவி; இவளை அழைத்துக் கொண்டு போ.”—ஆதியாகமம் 12:14-19.
புதிய ஆங்கில பைபிள் மற்றும் வேறு பைபிள் மொழிபெயர்ப்புகள், மேலே கொட்டை எழுத்துக்களிலுள்ள வசனத்தின் பகுதியில், “நான் அவளை மனைவியாகக் கொண்டேனே” என்றோ அல்லது இதுபோன்ற வார்த்தைகளையோ பயன்படுத்துகின்றன. இது கட்டாயமாகவே தவறான மொழிபெயர்ப்பாக இல்லாவிடினும், இப்படிப்பட்ட வார்த்தைகள், பார்வோன் சாராளை உண்மையில் திருமணம் செய்து கொண்டிருந்தான், திருமணம், செய்து முடிக்கப்பட்ட உண்மை என்ற அபிப்பிராயத்தைக் கொடுக்கக்கூடும். ஆதியாகமம் 12:19-ல் கொண்டிருத்தல் என்பதற்குரிய எபிரெய வினைச் சொல், முடிவுறா நிலைகுறித்த வினைச்சொல்லாக இருக்கிறது, இது இன்னும் செய்து முடிக்கப்படாத ஒரு வினையைக் குறிக்கிறது. புதிய உலக மொழிபெயர்ப்பு இந்த எபிரெய வினைச் சொல்லை சந்தர்ப்பச் சூழலுக்கு இசைவாகவும், “இவளை நான் எனக்கு மனைவியாக்கிக் கொள்ள இருந்தேனே” என்பதாக வினைச்சொல்லின் நிலையை தெளிவாக பிரதிபலிக்கும் வகையிலும் மொழிபெயர்க்கிறது.a பார்வோன் சாராளைத் தனக்கு மனைவியாக்கிக் “கொள்ள இருந்த” போதிலும், அதில் உட்பட்டிருந்த எந்த ஒரு செயல்முறையையும் அல்லது சடங்கையும் இன்னும் கொண்டிருக்கவில்லை.—ஆதியாகமம் 3:15; 22:17, 18; கலாத்தியர் 3:16.
ஆபிரகாம் விஷயத்தை இவ்விதமாக அணுகியது குறித்து அடிக்கடி குறைகூறப்பட்டிருக்கிறார், ஆனால் அவர் வாக்குப்பண்ணப்பட்ட வித்தின் நலனுக்காக, இவ்விதமாக எல்லா மனித குலத்தின் நலனுக்காகவே அவர் செயல்பட்டார்.
ஆபத்தானதாக இருந்த இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் ஈசாக்கு ரெபெக்காளை திருமணமான அவள் நிலையை வெளிப்படுத்தாதிருக்கும்படியாகச் செய்தார். அந்தச் சமயத்தில் வித்து வர வேண்டியிருந்த வழியாக இருந்த அவர்களுடைய மகன் யாக்கோபு ஏற்கெனவே பிறந்திருந்தான், அவன் தெளிவாகவே ஓர் இளைஞனாகவும் இருந்தான். (ஆதியாகமம் 25:20-27; 26:1-11) இருந்தபோதிலும், இந்த நேர்மையான தந்திரத்துக்குப் பின்னால் இருந்த உள்நோக்கமும் ஆபிரகாமினுடையதைப் போலவே இருந்தது. ஒரு பஞ்சத்தின் போது ஈசாக்கும் அவனுடைய குடும்பத்தாரும் அபிமெலேக்கு என்ற பெயர் கொண்ட ஒரு பெலிஸ்திய அரசனுடைய பிராந்தியத்திலே குடியிருந்தார்கள். ரெபெக்காள் ஈசாக்குக்கு திருமணமானவள் என்பதை அவன் அறிந்தால் அபிமெலேக்கு ஈசாக்கினுடைய குடும்பத்திலுள்ள அனைவருக்கும் எதிராக ஒரு கொலை வெறியான போக்கை பின்தொடர்ந்திருக்கக்கூடும், இது யாக்கோபுக்கு மரணத்தை அர்த்தப்படுத்தியிருக்கலாம். இந்த விஷயத்திலும்கூட தம்முடைய ஊழியர்களையும் வித்தின் வம்சாவழியையும் பாதுகாக்க யெகோவா தலையிட்டார்.
[அடிக்குறிப்புகள்]
a J. B. ராதர்ஹாமின் மொழிபெயர்ப்பு இவ்விதமாக வாசிக்கிறது: “அவள் என் சகோதரி என்று நீ ஏன் சொன்னாய்; அவளை என் மனைவியாக்கிக் கொள்ள இருந்தேனே?”