இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் | சாராள்
கடவுள் இவளை “இளவரசி” என்று அழைத்தார்
வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, சாராள் தொடுவானத்தைப் பார்க்கிறாள். இவள் கொடுத்த ஞானமான ஆலோசனைகளின்படி, வேலைக்காரர்கள் எல்லாரும் சந்தோஷமாகவும் மும்முரமாகவும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். கடின உழைப்பாளியான சாராள் தன் வேலைகளை ஏற்கனவே முடித்துவிட்டாள். சாராள் தன் கைகளை மென்மையாகத் தேய்ப்பதையும், வலியைப் போக்க மெதுவாக உருவிவிடுவதையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் எல்லாரும் இப்போது ஒரு கூடாரத்தில் தங்கியிருக்கிறார்கள். இவ்வளவு நேரம், அந்தக் கூடாரத்தில் இருக்கிற ஒரு கிழிசலைத் தைப்பதிலேயே அவள் மூழ்கியிருந்தாள். வெள்ளாட்டு ரோமத்தாலான துணியில் செய்யப்பட்ட அந்தக் கூடாரம், வெயிலாலும் மழையாலும் வெளுத்துப்போயிருந்தது. இத்தனை காலம் நாடோடிகளாக வாழ்ந்து வந்ததை இது சாராளுக்கு ஞாபகப்படுத்தியது. பகல் போய்விட்டது, இப்போது வெளிச்சம் பொன்னிறத்தில் மின்னுகிறது. காலையில் ஆபிரகாம்a போகும்போது அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது, அதே பாதையை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். பக்கத்திலிருக்கிற மலையில் அவளுடைய கணவனின் உருவம் தெரிந்தபோது, அவளுடைய முகத்தில் சிரிப்பு மலர்கிறது.
ஆபிரகாமும் அவருடைய பெரிய குடும்பமும், யூப்ரடிஸ் ஆற்றைக் கடந்து கானானுக்கு வந்து பத்து வருஷங்கள் ஆகிவிட்டன. இந்த மாபெரும் பயணத்தில், சாராள் ஆபிரகாமுக்கு ஆதரவாக இருந்திருக்கிறாள். தாங்கள் எங்கே போகிறோம் என்பது சாராளுக்குத் தெரியாது. ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு சந்ததியையும் தேசத்தையும் உருவாக்க வேண்டும் என்பது யெகோவாவுடைய நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் தன் கணவனுக்கு ஒரு பங்கு இருக்கிறது என்பது மட்டும் அவளுக்குத் தெரியும். கடவுளுடைய நோக்கத்தில் சாராளுக்கு என்ன பங்கு இருந்தது? அவளுக்கு இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்கவே இல்லை. அதுமட்டுமல்ல, சாராளுக்கு இப்போது 75 வயதும் ஆகிவிட்டது. ‘நான் ஆபிரகாமுக்கு மனைவியா இருந்தா, யெகோவாவோட நோக்கம் எப்படி நிறைவேறும்?’ என்று அவள் ஒருவேளை யோசித்திருக்கலாம். இதை நினைத்து அவள் கவலையாக இருந்திருந்தாலோ அல்லது பொறுமையை இழந்திருந்தாலோ அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
கடவுளுடைய வாக்குறுதிகள் எப்போது நிறைவேறும் என்று நாமும் சில நேரங்களில் யோசிக்கலாம். பொறுமையாக இருப்பது, அதுவும், நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் நிறைவேறும்வரை பொறுமையாக இருப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இந்தப் பெண்ணின் விசுவாசத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
“யெகோவா எனக்குக் குழந்தை பாக்கியம் தரவில்லை”
எகிப்திலிருந்து கொஞ்ச காலத்துக்கு முன்புதான் இந்தக் குடும்பம் வந்திருந்தது. (ஆதியாகமம் 13:1-4) பெத்தேல் அல்லது லஸ் (கானானியர்களால் லஸ் என்று அழைக்கப்பட்டது.) என்ற இடத்துக்குக் கிழக்கே இருந்த மலைகளின் உச்சியில் இவர்கள் கூடாரம்போட்டு தங்கியிருந்தார்கள். இந்த உயரமான இடத்திலிருந்து, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தை சாராள் பார்த்தாள். அங்கே கானானியர்களுடைய கிராமங்களும், தொலைதூர நாடுகளுக்குப் போகும் சாலைகளும் இருந்தன. இருந்தாலும், சாராளுடைய சொந்த ஊரான ஊர் போல எதுவுமே இருக்க முடியாது. ஊர் என்ற மெசொப்பொத்தாமியா நகரம் 1,900 கி.மீ. (1,200 மைல்) தூரத்தில் இருந்தது. அந்தச் செல்வ செழிப்பான நகரத்தில் கடைவீதிகளும் சந்தைகளும் நிறைய இருந்தன. சாராள் தன் ஊரில் இருந்த சொந்தக்காரர்களையும் வசதியான வீட்டையும் விட்டுவிட்டு வந்திருந்தாள். அவளுடைய வீட்டில் உறுதியான கூரை போடப்பட்டிருந்தது, உறுதியான சுவர்களும் இருந்தன. தண்ணீர் வசதிகூட இருந்தது! ஒருவேளை, சிறுவயதில் தான் வசதியாக வாழ்ந்ததை நினைத்து சாராள் கிழக்கை நோக்கி ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தால், அவளைத் தேவப் பக்தியுள்ள பெண் என்று நம்மால் சொல்ல முடியாது!
சுமார் 2,000 வருஷங்களுக்குப் பிறகு, கடவுளுடைய சக்தியால் சாராள் மற்றும் ஆபிரகாமுடைய விசுவாசத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் என்ன எழுதினார் என்று கவனியுங்கள். “தாங்கள் விட்டுவந்த இடத்தை அவர்கள் நினைத்துக்கொண்டே இருக்கவில்லை; அப்படி நினைத்துக்கொண்டே இருந்திருந்தால், அங்கே திரும்பிப்போக அவர்களுக்கு வாய்ப்பு இருந்திருக்கும்” என்று அவர் எழுதினார். (எபிரெயர் 11:8, 11, 15) சாராளோ, ஆபிரகாமோ தங்களுடைய கடந்தகால வாழ்க்கையை நினைத்து ஏங்கவில்லை. ஒருவேளை அவர்கள் அப்படி யோசித்திருந்தால், தங்கள் ஊருக்கே திரும்பிப் போக வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்திருப்பார்கள். அப்படிப் போயிருந்தால், ஊர் நகரத்தில் யெகோவா கொடுத்த அருமையான வாய்ப்பை அவர்கள் இழந்திருப்பார்கள். மனிதர்களுடைய ஞாபகத்திலிருந்தும் அவர்கள் மறைந்திருப்பார்கள். ஆனால், அவர்களுடைய உற்சாகமூட்டும் விசுவாசம் பல லட்சக்கணக்கான ஆட்களின் இதயங்களைத் தொட்டிருக்கிறது.
சாராள் கடந்த காலத்தைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்காமல், எதிர்காலத்தைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தாள். கூடாரங்களைப் பிரிப்பது, அதை மறுபடியும் போடுவது, மந்தைகளைக் கூட்டிக்கொண்டு போவது என்று, சாராள் ஆபிரகாமுக்கு உறுதுணையாக இருந்தாள். பிற்பாடு வந்த சவால்களையும், மாற்றங்களையும்கூட அவள் சகித்தாள். ஆபிரகாமுக்கு தான் கொடுத்த வாக்குறுதியை யெகோவா மறுபடியும் ஞாபகப்படுத்தினார். ஆனால், சாராளைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை!—ஆதியாகமம் 13:14-17; 15:5-7.
கடைசியில், தன் மனதில் இருந்த திட்டத்தைப் பற்றி ஆபிரகாமிடம் பேசுவதற்கு இதுதான் சரியான சமயம் என்று சாராள் நினைத்தாள். அதைப் பற்றி ஆபிரகாமிடம் பேசியபோது, அவளுடைய முகத்தில் இருந்த சோகத்தை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். “யெகோவா எனக்குக் குழந்தை பாக்கியம் தரவில்லை” என்று அவள் ஆபிரகாமிடம் சொன்னாள். பிறகு, தன் வேலைக்காரியான ஆகார் மூலம் ஆபிரகாம் அப்பாவாக ஆக வேண்டும் என்று சொன்னாள். தன் கணவனிடம் அப்படிச் சொன்னபோது அவளுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும் என்பதை உங்களால் யோசித்துப் பார்க்க முடிகிறதா? இது ஒருவேளை, இன்று நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், வாரிசு வேண்டும் என்பதற்காக ஒரு ஆண் மறுமனைவியை வைத்துக்கொள்வது அந்தக் காலத்தில் சாதாரணமாக இருந்தது.b இப்படிச் செய்தால், ஆபிரகாமின் சந்ததி மூலம் ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற யெகோவாவின் நோக்கம் நிறைவேறும் என்று சாராள் நினைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும், மிகவும் கடினமான ஒரு தியாகத்தைச் செய்ய சாராள் தயாராக இருந்தாள். ஆபிரகாம் என்ன செய்தார்? ‘ஆபிராமும் [சாராளின்] பேச்சைக் கேட்டார்’ என்று பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 16:1-3.
சாராள் தன் கணவனிடம் அப்படிக் கேட்டுக்கொள்ளும்படி யெகோவாதான் தூண்டினாரா? இல்லை! அவள் அப்படிக் கேட்டுக்கொண்டது மனித கண்ணோட்டத்தையே வெளிப்படுத்தியது. கடவுள்தான் தன் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று அவள் நினைத்தாள். அவற்றைச் சரி செய்ய வேறு எந்தத் தீர்வையும் அவளால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. தான் எடுத்த முடிவு தனக்கு வலியையும் வேதனையையும் கொண்டுவரும் என்று அவளுக்குத் தெரியும். இருந்தாலும், தன் கணவனிடம் அவள் அப்படிக் கேட்டுக்கொண்டது, அவள் சுயநலமாக நடந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. தங்களுடைய ஆசைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிற இந்த உலகத்தில், சாராளுடைய சுயநலமற்ற குணத்தைப் பார்க்கும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது, இல்லையா? சுயநல ஆசைகளை விட்டுவிட்டு கடவுளுடைய நோக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, நாமும் சாராளைப் போல விசுவாசமாக இருக்கிறோம் என்பதைக் காட்டலாம்.
“நீ சிரித்தாய்!”
சீக்கிரத்திலேயே, ஆபிரகாம் மூலம் ஆகார் கர்ப்பமானாள். அதனால், சாராளைவிட தான் ரொம்ப முக்கியமானவள் என்று ஆகார் நினைத்துக்கொண்டாள். தன் எஜமானியைக் கேவலமாகப் பேசினாள். அப்போது, சாராளுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்! ஆபிரகாமுடைய அனுமதியோடும், கடவுளுடைய உதவியோடும் சாராள் ஆகாரை அவமானப்படுத்தினாள். ஆனால், சாராள் அதை எப்படிச் செய்தாள் என்று நமக்குத் தெரியாது! ஆகாருக்கு இஸ்மவேல் என்று ஒரு மகன் பிறந்தான், அப்படியே வருஷங்களும் கடந்தன. (ஆதியாகமம் 16:4-9, 16) அடுத்த தடவை யெகோவாவிடமிருந்து ஒரு அற்புதமான செய்தி வந்தபோது, சாராளுக்கு 89 வயது, ஆபிரகாமுக்கு 99 வயது!
தன் நண்பன் ஆபிரகாமின் சந்ததியைப் பெருகப்பண்ணுவதாக யெகோவா மறுபடியும் வாக்குக் கொடுத்தார். இதுவரை ஆபிராம் என்று இருந்த பெயரை, இப்போது ஆபிரகாம் என்று மாற்றினார். ஆபிரகாம் என்றால் “திரளான ஜனங்களுக்குத் தகப்பன்” என்று அர்த்தம். அப்போது, முதல் முறையாக, சாராளுடைய பங்கு என்ன என்பதை யெகோவா வெளிப்படுத்தினார். சாராய் என்ற பெயரை சாராள் என்று மாற்றினார். சாராய் என்ற பெயரின் அர்த்தம் “சண்டைக்காரி” என்பதாக இருக்கலாம். ஆனால், சாராள் என்பதற்கு “இளவரசி” என்று அர்த்தம். இந்தப் பெண்ணுக்கு யெகோவா ஏன் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தார்? அதைப் பற்றி அவரே விளக்கினார்: “நான் அவளை ஆசீர்வதித்து, அவள் மூலம் உனக்கு ஒரு மகனைக் கொடுப்பேன். நான் அவளை ஆசீர்வதிக்கப்போவதால், அவளிடமிருந்து தேசங்கள் உருவாகும், ராஜாக்கள் தோன்றுவார்கள்.”—ஆதியாகமம் 17:5, 15, 16.
எல்லா தேசங்களையும் ஆசீர்வதிக்கப்போகும் ஒரு சந்ததியைக் கொண்டுவரப் போவதாக யெகோவா செய்த ஒப்பந்தம் சாராளுடைய மகன் மூலம் நிறைவேறும்! அந்தப் பையனுக்கு ஈசாக்கு என்ற பெயரைக் கடவுள் தேர்ந்தெடுத்தார். அதற்கு “சிரிப்பு” என்று அர்த்தம். யெகோவாவுடைய நோக்கத்தைப் பற்றி தெரிந்துகொண்டபோது, அதாவது யெகோவா சாராளுக்கு ஒரு மகனைக் கொடுக்கப்போவதாக தெரிந்துகொண்டபோது, ‘ஆபிரகாம் சாஷ்டாங்கமாக விழுந்து, சிரிக்க ஆரம்பித்தார்.’ (ஆதியாகமம் 17:17) அவருக்கு ரொம்ப ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.—ரோமர் 4:19, 20.
பிறகு, முன்பின் தெரியாத மூன்று மனிதர்கள் ஆபிரகாமுடைய கூடாரத்துக்கு வந்தார்கள். அப்போது உச்சி வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும், வந்திருந்த விருந்தாளிகளை வயதான அந்தத் தம்பதி உடனே வரவேற்றார்கள். “சீக்கிரம்! மூன்று படி நைசான மாவை எடுத்துப் பிசைந்து, ரொட்டி சுடு” என்று ஆபிரகாம் சாராளிடம் சொன்னார். அந்தக் காலத்தில், உபசரிப்பது என்றால் சாதாரண விஷயம் கிடையாது. ஏனென்றால், அதில் நிறைய வேலை உட்பட்டிருந்தது. எல்லா வேலைகளையும் சாராளையே செய்ய விடாமல், இளம் காளை ஒன்றை அடிப்பதற்கு ஆபிரகாம் வேகமாகப் போனார். சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் இன்னும் நிறைய தயார் செய்தார். (ஆதியாகமம் 18:1-8) அந்த “மனிதர்கள்” யெகோவாவின் தேவதூதர்களாக இருந்தார்கள்! இந்த விஷயத்தை ஞாபகத்தில் வைத்துதான் அப்போஸ்தலன் பவுல் பிற்பாடு இப்படி எழுதியிருக்க வேண்டும்: “உபசரிக்கும் குணத்தை காட்ட மறந்துவிடாதீர்கள்; இந்தக் குணம் இருந்ததால் சிலர் தங்களுக்கே தெரியாமல் தேவதூதர்களையும் உபசரித்தார்கள்.” (எபிரெயர் 13:2) உபசரிக்கும் குணத்தை அருமையான விதத்தில் காட்டிய ஆபிரகாமையும் சாராளையும் உங்களால் பின்பற்ற முடியுமா?
உபசரிப்பது என்றால் சாராளுக்கு ரொம்ப பிடிக்கும்
சாராள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள் என்ற கடவுளின் வாக்குறுதியை அந்தத் தேவதூதர்களில் ஒருவர் ஆபிரகாமிடம் மறுபடியும் சொன்னார். அப்போது, சாராள் கொஞ்சம் தள்ளி கூடார வாசலில் நின்று அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். வயதான இந்தக் காலத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது சாராளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால், “நான் ஒரு கிழவி, என் எஜமானும் கிழவராகிவிட்டார், இந்த வயதில் எனக்குச் சந்தோஷம் கிடைக்குமா?” என்று தனக்குள் சிரித்துக்கொண்டே சொன்னாள். அதைக் கேட்ட தேவதூதர் அவளைத் திருத்தினார்; “யெகோவாவினால் செய்ய முடியாதது ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டார். பொதுவாக எல்லாரும் பிரதிபலிப்பது போலத்தான் சாராளும் பிரதிபலித்தாள். “நான் சிரிக்கவில்லை” என்று உடனே சொன்னாள். “இல்லை! நீ சிரித்தாய்!” என்று தேவதூதர் சொன்னார்.—ஆதியாகமம் 18:9-15.
சாராள் சிரித்ததால் அவளுக்கு விசுவாசம் இருக்கவில்லை என்று சொல்லிவிடலாமா? இல்லை! “விசுவாசத்தால்தான் சாராள்கூட, வயதானவளாக இருந்தாலும் கர்ப்பமானாள். ஏனென்றால், வாக்குறுதி கொடுத்தவர் உண்மையுள்ளவர் என்று அவள் நம்பினாள்” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:11) சாராளுக்கு யெகோவாவைப் பற்றி தெரியும்; கொடுத்த வாக்கை அவரால் நிச்சயம் நிறைவேற்ற முடியும் என்பதும் நன்றாகத் தெரியும். இப்படிப்பட்ட விசுவாசம் இருக்க வேண்டும் என்று தானே நாம் ஆசைப்படுவோம்! பைபிளின் கடவுளைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படித் தெரிந்துகொள்ளும்போது, சாராளுக்கு இருந்த விசுவாசம் சரியானது என்று நாம் புரிந்துகொள்வோம். யெகோவா உண்மையுள்ளவர், தன்னுடைய ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுபவர். சில சமயங்களில், நாம் ஆச்சரியப்படும் விதத்தில் கடவுள் அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார். நம்மால் நம்ப முடியாத விதத்திலும், ஏன், நமக்குச் சிரிப்பு வரும் விதத்திலும்கூட அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறும்.
“அவளுடைய பேச்சைக் கேள்”
சாராள் அசைக்க முடியாத விசுவாசத்தைக் காட்டியதால் யெகோவா அவளுக்குப் பலனளித்தார்
ஒரு பெண்ணாக இத்தனை காலம் அந்தத் தருணத்திற்காகத்தான் சாராள் ஏங்கிக்கொண்டிருந்தாள். கடைசியில், தன்னுடைய 90-வது வயதில் அது நடந்தது. 100 வயதாக இருக்கும் தன் கணவனுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். கடவுள் சொன்னபடியே ஆபிரகாம் அந்தக் குழந்தைக்கு, ஈசாக்கு அல்லது “சிரிப்பு” என்று பெயர் வைத்தார். “கடவுள் என்னைச் சந்தோஷமாகச் சிரிக்க வைத்திருக்கிறார். இதைக் கேள்விப்படுகிற எல்லாரும் என்னோடு சேர்ந்து சிரிப்பார்கள்” என்று சாராள் சிரித்த முகத்தோடு சொன்னதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும். (ஆதியாகமம் 21:6) யெகோவா தந்த இந்த அற்புதமான பரிசை நினைத்து சாராள் காலமெல்லாம் சந்தோஷப்பட்டிருப்பாள். அதுமட்டுமல்லாமல், பெரிய பெரிய பொறுப்புகளும் சாராளுக்கு இருந்தன.
ஈசாக்குக்கு 5 வயது இருந்தபோது, அவன் தாய்ப்பாலை மறந்தான். அன்று, ஆபிரகாம் ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்தார். ஆனால், ஏதோவொன்று சரியாக இருக்கவில்லை. ஆகாரின் மகனான 19 வயது இஸ்மவேல், குட்டி ஈசாக்கைக் கேலி செய்வதை சாராள் “கவனித்துக்கொண்டே இருந்தாள்.” அவன் வெறுமனே விளையாட்டுக்காக அப்படிச் செய்தது போல தெரியவில்லை. இஸ்மவேலின் அந்த நடத்தையை, துன்புறுத்தல் என்பதாக அப்போஸ்தலன் பவுல் பிற்பாடு குறிப்பிட்டார். இஸ்மவேல் இப்படி வம்பு பண்ணுவது தன் மகனைப் பாதிக்கும் என்று சாராள் புரிந்துகொண்டாள். ஈசாக்கு வெறுமனே தன் மகன் மட்டும் அல்ல, யெகோவாவுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவனுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது என்று சாராளுக்குத் தெரியும். அதனால், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஆபிரகாமிடம் வெளிப்படையாகப் பேசினாள். ஆகாரையும் இஸ்மவேலையும் துரத்திவிடும்படி சொன்னாள்.—ஆதியாகமம் 21:8-10; கலாத்தியர் 4:22, 23, 29.
ஆபிரகாம் என்ன செய்தார்? “தன்னுடைய மகனைப் பற்றி அவள் இப்படிச் சொன்னது [ஆபிரகாமுக்கு] மிகவும் வேதனையாக இருந்தது” என்று பைபிள் சொல்கிறது. ஏனென்றால், அவருக்கு இஸ்மவேலை ரொம்ப பிடிக்கும். வெறுமனே ஒரு அப்பாவாக மட்டும் அவர் இந்தப் பிரச்சினையைப் பார்த்தார். ஆனால், யெகோவா இந்தப் பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொண்டார். அதனால், அவரே குறுக்கிட்டு ஆபிரகாமிடம் இப்படிச் சொன்னார்: “உன்னுடைய மகனையும் உன்னுடைய அடிமைப் பெண்ணையும் பற்றி சாராள் சொன்னதை நினைத்து வேதனைப்படாதே. அவளுடைய பேச்சைக் கேள். ஏனென்றால், ஈசாக்கின் வழியாக உருவாகும் சந்ததிதான் உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படும்.” ஆகார் மற்றும் இஸ்மவேலுடைய தேவைகள் கவனித்துக்கொள்ளப்படும் என்று யெகோவா ஆபிரகாமுக்கு வாக்குக் கொடுத்தார்.—ஆதியாகமம் 21:11-14.
சாராள் ஆபிரகாமுக்கு உண்மையாக இருந்தாள். அவள் உண்மையிலேயே ஆபிரகாமுக்கு ஒரு பொருத்தமான துணை! தன் கணவனின் காதுகளுக்கு இனிமையாக இருக்கும் விஷயங்களை மட்டுமே அவள் பேசவில்லை. பிரச்சினை வந்தபோது, அதுவும் அவர்களுடைய குடும்பத்தையும் எதிர்காலத்தையும் அது பாதிக்கும் என்று தெரிந்தபோது, அவள் தன் கணவனிடம் வெளிப்படையாகப் பேசினாள். அவள் அப்படிப் பேசியதற்காக அவள் அவமரியாதையாக நடந்துகொண்டால் என்று சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், திருமணமான அப்போஸ்தலன் பேதுரு, கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டிய மனைவி என்று சாராளைப் பற்றி பிற்பாடு குறிப்பிட்டார். (1 கொரிந்தியர் 9:5; 1 பேதுரு 3:5, 6) இந்த விஷயத்தில், சாராள் அமைதியாக இருந்திருந்தால், அவள் உண்மையிலேயே ஆபிரகாமுக்கு மரியாதை காட்ட தவறியிருப்பாள். ஏனென்றால், அது ஆபிரகாமுக்கும் முழு குடும்பத்துக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். தன் கணவனிடம் சொல்ல வேண்டியதை சாராள் மரியாதையோடு சொன்னாள்.
நிறைய மனைவிகளுக்குச் சாராளுடைய உதாரணம் ரொம்ப பிடிக்கும். தங்கள் கணவர்களிடம் எப்படி நேர்மையாகவும் மரியாதையாகவும் பேச வேண்டும் என்பதை அவர்கள் சாராளிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். சாராளுடைய விஷயத்தில், யெகோவா குறுக்கிட்டது போல தங்களுடைய விஷயத்திலும் யெகோவா குறுக்கிடுவார் என்று சில மனைவிகள் நினைக்கலாம். எப்படியிருந்தாலும், சாராளுடைய விசுவாசம், அன்பு மற்றும் பொறுமையிலிருந்து அவர்கள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள்.
யெகோவா சாராளை “இளவரசி” என்று அழைத்தாலும், மற்றவர்கள் தன்னை அப்படி நடத்த வேண்டும் என்று சாராள் எதிர்பார்க்கவில்லை
யெகோவாவே சாராளை “இளவரசி” என்று அழைத்தாலும், மற்றவர்கள் தன்னை அப்படி நடத்த வேண்டும் என்று சாராள் எதிர்பார்க்கவில்லை. அவள் 127-வது வயதில் இறந்துபோனபோது, ஆபிரகாம் சாராளுக்காக “துக்கம் அனுசரிக்கவும் அழுது புலம்பவும் ஆரம்பித்தார்.”c (ஆதியாகமம் 23:1, 2) ஆபிரகாம் தன்னுடைய அன்பான ‘இளவரசியை’ பிரிந்து எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்! யெகோவாவும் இந்த உண்மையுள்ள பெண்ணை மரணத்தில் பறிகொடுத்ததை நினைத்து நிச்சயம் வேதனைப்பட்டிருப்பார். பூஞ்சோலை பூமியில் இவளை மறுபடியும் உயிரோடு கொண்டுவருவதற்காக யெகோவா ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார். சாராளுக்கும் அவளுடைய விசுவாசத்தைப் பின்பற்றுகிற எல்லாருக்கும் சந்தோஷமான நித்திய எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது.—யோவான் 5:28, 29. ▪
a இந்தத் தம்பதியின் பெயரை ஆபிரகாம், சாராள் என்று கடவுள் மாற்றும்வரை, இவர்களுடைய பெயர் ஆபிராம், சாராய் என்பதாக இருந்தது. ஆனால் சுலபமாக இருப்பதற்காக, இவர்கள் பொதுவாக அறியப்பட்ட பெயரை நாம் பயன்படுத்துகிறோம்.
b பலரைத் திருமணம் செய்துகொள்வதையும், மறுமனைவிகளை வைத்துக்கொள்வதையும் யெகோவா கொஞ்ச காலத்துக்கு அனுமதித்திருந்தார். ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் அவர் ஆரம்பத்தில் ஏற்படுத்திய ஒழுக்கநெறி. அதைத் திரும்பவும் நிலைநாட்ட இயேசு கிறிஸ்துவுக்கு அவர் அதிகாரம் கொடுத்தார்.—ஆதியாகமம் 2:24; மத்தேயு 19:3-9.
c பைபிளில், பெண்கள் இறந்தபோது அவர்கள் யாருடைய வயதும் பதிவு செய்யப்படவில்லை. சாராளுடைய வயது மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.