கடவுளுடைய சுயாதீனப் புதிய உலகத்தை வாழ்த்தி வரவேற்றல்
“அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.”—வெளிப்படுத்துதல் 21:4.
1, 2. யார் ஒருவரே உண்மையான சுயாதீனத்தைக் கொண்டுவர முடியும்? அவரைப் பற்றி பைபிளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
தீர்க்கதரிசியாகிய எரேமியா பின்வருமாறு சொன்னதன் உண்மையைச் சரித்திரம் நிரூபித்திருக்கிறது: “மனுஷனுடைய வழி அவன் வசத்தில் இல்லை . . . தன் நடையை நடத்துவது நடக்கிறவன் வசத்தில் இல்லை.” யார் ஒருவரே மனிதனின் நடையைச் சரியான முறையில் வழிநடத்த முடியும்? எரேமியா தொடர்ந்து சொல்வதாவது: “யெகோவாவே, என்னை சிட்சியும் [திருத்தும், NW].” (எரேமியா 10:23, 24, தி.மொ.) ஆம், யெகோவா ஒருவரே, மனித குடும்பத்தைத் தொல்லைப்படுத்தும் பிரச்னைகளிலிருந்து விடுவித்து உண்மையான சுயாதீனத்தைக் கொண்டுவர முடியும்.
2 தம்மைச் சேவிப்போருக்கு சுயாதீனத்தைக் கொண்டுவர யெகோவாவுக்கு இருக்கும் ஆற்றலைப் பற்றி பைபிளில் பல உதாரணங்கள் இருக்கின்றன. “வேதவாக்கியங்களின் மூலமாயுண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் எதிர்நோக்கும் நம்பிக்கையை நாம் அடையும்படி முன் எழுதப்பட்டவைகளெல்லாம் நமக்குப் போதனையாகவே எழுதப்பட்டன.” (ரோமர் 15:4, தி.மொ.) பொய் வணக்கத்துக்கு எதிராக யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளுங்கூட பதிவுசெய்யப்பட்டுள்ளன, இவை, “காரிய ஒழுங்குமுறைகளின் முடிவுகள் நம்மீது வந்து சேர்ந்திருக்கிற நமக்கு ஓர் எச்சரிப்”பாகவும் சேவிக்கின்றன.—1 கொரிந்தியர் 10:11, NW.
தம்முடைய ஜனத்தை விடுவிப்பது
3. யெகோவா தம்முடைய ஜனத்தை எகிப்திலிருந்து விடுதலையாக்குவதற்குரிய தம்முடைய ஆற்றலை எவ்வாறு காட்டினார்?
3 பொய் மதத்துக்கு எதிராக தண்டனைத்தீர்ப்பை நிறைவேற்றி தம்முடைய சித்தத்தைச் செய்வோரை விடுவிப்பதற்கான கடவுளின் ஆற்றலுக்கு ஒரு முன்மாதிரி, அவருடைய பூர்வ கால ஜனம் எகிப்தில் அடிமைத்தனத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோது நிகழ்ந்தது. யாத்திராகமம் 2:23-25 பின்வருமாறு கூறுகிறது: “அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது. தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்”டார். சர்வவல்லமையுள்ள கடவுள், எகிப்தின் பொய்க் கடவுட்கள்மீது தம்முடைய உயர்மேன்மையை அச்சுறுத்தும் வகையில் வெளிக்காட்டி, அந்தத் தேசத்தின்மீது பத்து வாதைகளைக் கொண்டுவந்தார். ஒவ்வொரு வாதையும் எகிப்தின் ஒவ்வொரு கடவுளை மதிப்பிழக்கச் செய்து, அவை பொய்க் கடவுட்கள், தங்களை வணங்கின எகிப்தியருக்கு உதவிசெய்ய முடியாதெனக் காட்டும்படி கருதப்பட்டது. இவ்வாறு கடவுள் தம்முடைய ஜனத்தை விடுவித்து, பார்வோனையும் அவனுடைய சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் அழித்தார்.—யாத்திராகமம், 7-லிருந்து 14 வரையான அதிகாரங்கள்.
4. கானானியருக்கு எதிராகக் கடவுள் தம்முடைய நியாயத் தீர்ப்புகளை நிறைவேற்றினது ஏன் அநீதியல்ல?
4 கடவுள் இஸ்ரவேலை கானானுக்குள் கொண்டுவந்தபோது, பேய்களை வணங்கின அதன் குடியிருப்பாளர்கள் அழிக்கப்பட்டு தேசம் கடவுளுடைய ஜனத்துக்குக் கொடுக்கப்பட்டது. சர்வலோக பேரரசராக, யெகோவா தம்முடைய நியாயத்தீர்ப்புகளை இழிவான மதங்களின்மீது நிறைவேற்றுவதற்கு உரிமையுடையவர். (ஆதியாகமம் 15:16) கானானிய மதத்தைக் குறித்து, ஹாலி என்பவர் எழுதின பைபிள் கைச்சுவடி என்ற ஆங்கில புத்தகம் சொல்வதாவது: “கானானிய கடவுட்களின் வணக்கம் . . . மிக அதிக மோசமாய் வரம்பு மீறிய ஆடல் பாடல் கூத்துக் களியாட்டங்கள் அடங்கியதாயிருந்தது; அவர்களுடைய ஆலயங்கள் இழிவான ஒழுக்கக்கேட்டுக்குரிய மையங்களாக இருந்தன. . . . கானானியர்கள், தங்கள் கடவுட்களின் முன்னிலையில், ஒரு மதச் சடங்காக, பாலுறவு ஒழுக்கக்கேட்டு மட்டற்ற நுகர்வில் ஈடுபடுவதன் மூலமும்; பின்பு, இதே கடவுட்களுக்குப் பலியாக, தங்கள் முதற்-பேறான பிள்ளைகளைக் கொலைசெய்வதன் மூலமும் வணக்கம் செலுத்தினார்கள். பேரளவில், கானான் தேசம் ஒருவகையான சோதோம் கொமோராவைப்போல் தேசீய அளவில் ஆகியிருந்ததெனத் தோன்றுகிறது.” அவர் மேலும் கூறுவதாவது: “அத்தகைய பெரும் அருவருப்புக்குரிய இழி ஒழுக்கமும் கொடுமையுமுடைய நாகரிகத்துக்கு மேலும் நீடித்திருக்க ஏதாவது உரிமை இருந்ததா? . . . கானானிய நகரங்களின் இடிந்து பாழ்ப்பட்ட இடங்களில் தோண்டும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கடவுள் அவர்களைச் சீக்கிரமாக அதற்கும் முன்னால் ஏன் அழிக்கவில்லையென அதிசயிக்கின்றனர்.”
5. கடவுள் தம்முடைய பூர்வ ஜனத்தை விடுவித்தது எவ்வாறு நம்முடைய காலத்துக்கு ஒரு மாதிரியாகச் சேவிக்கிறது?
5 பொய் வணக்கத்துக்கு எதிராகக் கடவுள் நடவடிக்கை எடுத்து, தம்முடைய உடன்படிக்கையிலிருந்த ஜனத்தை விடுவித்து, அவர்களுக்கு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அளித்ததைப் பற்றிய இந்த விவரம், வரவிருக்கிற காரியங்களுக்கு ஒரு மாதிரியாகச் சேவிக்கிறது. கடவுள் இந்த உலகத்தின் பொய் மதங்களையும் அவற்றின் ஆதரவாளர்களையும் அழித்து, தம்முடைய தற்கால ஊழியர்களை நீதியுள்ள புதிய உலகத்துக்குள் வரவேற்கவிருக்கும் இந்த மிகச் சமீப எதிர்காலத்தை இது குறித்துக் காட்டுகிறது.—வெளிப்படுத்துதல் 7:9, 10, 13, 14; 2 பேதுரு 3:10-13.
கடவுளுடைய புதிய உலகத்தில் உண்மையான சுயாதீனம்
6. புதிய உலகத்தில் கடவுள் அளிக்கவிருக்கும் அந்த அதிசயமான சுயாதீனங்களில் சில யாவை?
6 அந்தப் புதிய உலகத்தில், கடவுள் மனித குடும்பத்துக்குத் தாம் நோக்கங்கொண்டிருந்த அந்தச் சுயாதீனத்தின் எல்லா அதிசயமான அம்சங்களையும் அருளி தம்முடைய ஜனத்தை ஆசீர்வதிப்பார். அரசியல், பொருளியல், மற்றும் பொய்மத மூலாம்சங்களால் ஒடுக்கப்படுவதிலிருந்து விடுதலையாகிய சுயாதீனம் அங்கிருக்கும். அங்கே பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையாகி, மக்கள் பூமியில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பை உடையோராய் இருப்பர். “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:29; மத்தேயு 5:5.
7, 8. புதிய உலகத்தில் பரிபூரண உடல்நலத்தைத் திரும்பப் பெறுவதில் என்ன அனுபவம் உண்டாகும்?
7 அந்தப் புதிய உலகம் கொண்டுவரப்பட்டபின் சீக்கிரத்திலேயே, அதன் குடியிருப்பாளர்கள் அற்புதமாய்ப் பரிபூரண உடல்நலம் பெறும்படி செய்யப்படுவர். யோபு 33:25 சொல்வதாவது: “அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.” ஏசாயா 35:5, 6 பின்வருமாறு வாக்குக் கொடுக்கிறது: “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.”
8 முதிர் வயதால் அல்லது உடல்நலக்கேட்டினால் உங்களில் எவராவது உடல்நலிவுற்று நோய்ப்பட்டிருந்தால், புதிய உலகத்தில் ஒவ்வொரு காலையிலும் நீங்கள் நல்ல சுகபலத்துடனும் சுறுசுறுப்புடனும் விழித்தெழும்புவதைக் கற்பனைசெய்து பாருங்கள். உங்கள் தோலில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் நீங்கி அது வழவழப்பாக, ஆரோக்கியமாயுள்ளது—இனிமேலும் தோல்-கழுவுநீர்மங்கள் தேவையில்லை. உங்கள் பார்வை மங்கிய அல்லது குருடான கண்கள் பரிபூரண பார்வை அடைய செய்யப்பட்டிருக்கின்றன—இனிமேலும் மூக்குக் கண்ணாடி தேவையில்லை. முழுதளவில் செவி கேட்கும்படி செய்யப்பட்டுள்ளது—செவி கேட்க உதவின அந்தப் பொறியமைவுகளை எடுத்து எறிந்துவிடுங்கள். நொண்டியான கால்கள் இப்பொழுது உறுதியாயும் முழுமையாயும் இருக்கின்றன—அந்தக் கைத்தடிகளையும், ஊன்று கட்டைகளையும், சக்கரங்களைக் கொண்ட நாற்காலிகளையும் ஒழித்துப்போடுங்கள். இனிமேலும் நோய் கிடையாது—அந்த மருந்துகளையெல்லாம் எறிந்துவிடுங்கள். இவ்வாறு, ஏசாயா 33:24 முன்னறிவிக்கிறது: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” அவன் மேலும் சொல்வதாவது: “சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.”—ஏசாயா 35:10.
9. போர் எவ்வாறு என்றுமாக முடிவுக்குக் கொண்டுவரப்படும்?
9 இனிமேலும் எவரும் போருக்குப் பலிசெலுத்தப்படுவதில்லை. “அவர் [கடவுள்] பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.” (சங்கீதம் 46:9) கடவுளுடைய ராஜ்யத்தின் அரசர், கிறிஸ்து இயேசு, போர்த்தளவாடங்களை மறுபடியும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை, ஏசாயா 9:6 அவரை “சமாதானப்பிரபு” என்றழைக்கிறது. 7-ம் வசனம் பின்வருமாறு மேலும் கூறுகிறது: “அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.”
10, 11. முழுமையான சமாதானம் பூமிக்கு எதைக் குறிக்கும்?
10 போர்த்தளவாடங்களிலிருந்து விடுதலையாகியிருப்பது மனிதவர்க்கத்துக்கும் இந்தப் பூமிக்கும் எத்தகைய ஆசீர்வாதமாயிருக்கும்! முந்தின போர்களில் பயன்படுத்தப்பட்ட போர்த்தளவாடங்கள், தற்போதுள்ள காலத்தில், இன்னும் ஆட்களை அழித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டில், ஃபிரான்ஸில், 1945 முதற்கொண்டு, முந்தின போர்களிலிருந்து மீந்த வெடிகுண்டுகளை ஒழித்துக்கொண்டிருக்கையில், வெடிகுண்டுகளை ஒழிப்பதில் திறமை வாய்ந்த 600-க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அங்கேயுள்ள, வெடிகுண்டுகளை ஒழிக்கும் நிறுவனத்தின் தலைவர் பின்வருமாறு கூறினார்: “1870-ன் ஃபிரான்கோ-பிரஷியன் போரிலிருந்து மீந்த உயிரியக்கமுள்ள பீரங்கி குண்டுகளை நாங்கள் இன்னும் காண்கிறோம். முதல் உலகப் போரிலிருந்து மீந்த நச்சியல்பான எறிகுண்டுகள் நிரம்பிய ஏரிகள் இருக்கின்றன. இயந்திரக் கலப்பையை ஓட்டும் விவசாயி, இரண்டாம் உலகப் போரிலிருந்து மீந்த எதிர்-டாங்க்கு சுரங்கவெடியின்மீது, எப்போதாவது சக்கரங்களை உருளச் செய்துவிடுகையில், அது வெடித்து அவன் மாள்கிறான். இவை எங்கும் இருக்கின்றன.” இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டது: “இரண்டாம் உலகப் போரின் முடிவு முதற்கொண்ட இந்த 45 ஆண்டுகளில், [வெடிகுண்டுகளை ஒழிக்கும் தொகுதிகள், ஃபிரென்ச்] நிலத்திலிருந்து 1 கோடி 60 லட்சம் பீரங்கி குண்டுகளையும், 4,90,000 வெடிகுண்டுகளையும், 6,00,000 நீர் சுரங்கவெடிகளையும் நீக்கியுள்ளன. . . . லட்சக்கணக்கான ஏக்கர்கள் சுற்றிவேலியிட்டு அடைக்கப்பட்டவையாக இன்னுமிருக்கின்றன, முழங்கால் அளவு ஆழத்துக்கு போர்க்கலங்கள் நிறைந்துள்ளன மற்றும்: ‘தொடாதே. அது கொல்லுகிறது!’ என்று எச்சரிக்கும் விளம்பரத்தட்டிகளால் சூழப்பட்டுள்ளன.”
11 புதிய உலகம் எவ்வளவு வேறுபட்டதாய் இருக்கும்! எல்லாருக்கும் நல்ல வீட்டுவசதியும், ஏராளமான உணவும், முழு பூமியையும் பரதீஸாக மாற்றும் பயனுள்ள, சமாதானமான வேலையும் இருக்கும். (சங்கீதம் 72:16; ஏசாயா 25:6; 65:17-25) இனி ஒருபோதும் ஜனங்களும், இந்தப் பூமியும், லட்சக்கணக்கான வெடிவீச்சுக் கருவிகளைக்கொண்டு வெடிகுண்டுகளால் தீவிரமாய்த் தாக்கப்படுவதில்லை. இயேசு, தம்மில் விசுவாசங் காட்டின ஒருவனிடம் பின்வருமாறு சொன்னபோது இத்தகைய ஒரு புதிய உலகத்தையே மனதில் கொண்டிருந்தார்: “நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்.”—லூக்கா 23:43, NW.
ஜீவனுக்கென்று உலகளாவிய கல்வி
12, 13. என்ன உலகளாவிய கல்வி புகட்டும் வேலையை இயேசுவும் ஏசாயாவும் நம்முடைய காலத்துக்கு முன்னறிவித்தார்கள்?
12 ஒருவர் கடவுளுடைய புதிய உலகத்தைப்பற்றிக் கற்றுக்கொள்கையில், நம்முடைய நாளில், உண்மையான வணக்கத்துக்காக அமைக்கப்பட்ட உலகளாவிய ஒரு சபையை யெகோவா உண்டுபண்ணியிருக்கிறார் எனவும் கற்றறிந்துகொள்கிறார். இது அந்தப் புதிய உலகத்தின் மையக் கருமூலமாக இருக்கும், கடவுள் இதை இப்பொழுது மற்றவர்களுக்குத் தம்முடைய நோக்கங்களைப்பற்றிப் போதிப்பதற்குப் பயன்படுத்துகிறார். இந்தக் கிறிஸ்தவ அமைப்பு, முன்னொருபோதும் கண்டிராத இயல்பான மற்றும் அளவான உலகளாவிய கல்விபுகட்டும் ஊழியத்தை நடப்பித்து வருகிறது. இது செய்யப்படுமென இயேசு முன்னறிவித்தார். அவர் சொன்னதாவது: “ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”—மத்தேயு 24:14, NW.
13 ஏசாயாவும் இந்த உலகளாவிய கல்விபுகட்டும் வேலையைப்பற்றிப் பேசினான்: “கடைசி நாட்களில் [நம்முடைய காலத்தில்] யெகோவாவின் ஆலயமுள்ள பர்வதம் [அவருடைய உயர்த்தப்பட்ட உண்மையான வணக்கம்] ஸ்தாபிக்கப்படும் . . . எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். பல ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் பர்வதத்துக்கு . . . போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.”—ஏசாயா 2:2, 3, தி.மொ.
14. இன்று கடவுளுடைய ஜனத்தை நாம் எவ்வாறு அடையாளங் கண்டுகொள்ளலாம்?
14 ஆகையால், கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி சாட்சிபகரும் இந்த உலகளாவிய வேலை, நாம் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவுக்கு அருகில் இருக்கிறோம் என்பதற்கும் உண்மையான சுயாதீனம் சமீபித்திருக்கிறது என்பதற்கும் உறுதியான அத்தாட்சியாக உள்ளது. கடவுளுடைய புதிய உலகத்தைப்பற்றிய நம்பிக்கை நிறைந்த செய்தியை ஜனங்களுக்குக் கொண்டுசென்று அறிவிப்பவர்கள் அப்போஸ்தலர் 15:14-ல் “தமது [கடவுளுடைய] நாமத்திற்காக ஒரு ஜனம்,” என விவரிக்கப்பட்டிருக்கின்றனர். யார் யெகோவாவின் பெயரைத் தரித்து, யெகோவாவையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றி உலகளாவிய சாட்சி கொடுக்கின்றனர்? யெகோவாவின் சாட்சிகள் மாத்திரமே என, இந்த 20-ம் நூற்றாண்டின் சரித்திர பதிவு பதிலளிக்கிறது. இன்று இவர்கள் உலகமுழுவதிலும் 66,000-க்கும் மேற்பட்ட சபைகளில் நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையானோராக இருக்கின்றனர்.—ஏசாயா 43:10-12, தி.மொ.; அப்போஸ்தலர் 2:21.
15. அரசியல் விவகாரங்களைக் குறித்தவற்றில், கடவுளுடைய உண்மையான ஊழியர்களை நாம் எவ்வாறு அடையாளங் கண்டுகொள்ளலாம்?
15 இந்த ராஜ்ய பிரசங்க வேலையைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை யெகோவாவின் சாட்சிகள் நிறைவேற்றுகிறார்கள் என்பதற்கு மற்றொரு அத்தாட்சி ஏசாயா 2:4-ல் குறிப்பிடப்பட்டுள்ளது: “அவர்கள் தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தம் கற்பதுமில்லை.” ஆகையால் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியைப்பற்றிய உலகளாவிய பிரசங்க வேலையைச் செய்பவர்கள் ‘இனிமேலும் யுத்தம் கற்கக்’ கூடாது. அவர்கள் ‘இந்த உலகத்தின் பாகமாக’ இருக்கக்கூடாதென இயேசு சொன்னார். (யோவான் 17:16, NW) இது அவர்கள் அரசியல் விவகாரங்களில் நடுநிலை வகிப்போராக இருக்க வேண்டுமெனவும், தேசங்களின் சச்சரவுகளிலும் போர்களிலும் ஏதோவொரு சார்பை ஆதரிப்போராய் இருக்கக்கூடாதெனவும் குறிக்கிறது. உலகத்தின் பாகமாக இராமலும், இனிமேலும் போர் கற்காமலும் இருப்போர் யாவர்? யெகோவாவின் சாட்சிகள் மாத்திரமே, என 20-வது நூற்றாண்டின் சரித்திர பதிவு சாட்சிபகருகிறது.
16. கடவுளுடைய உலகளாவிய கல்விபுகட்டும் வேலை எவ்வளவு முழுமையான முறையில் செய்யப்பட்டிருக்கும்?
16 கடவுள் இந்தத் தற்போதைய பொல்லாத உலகத்தை அதன் முடிவுக்குக் கொண்டுவந்தப் பின்பும் யெகோவாவின் சாட்சிகளின் இந்த உலகளாவிய கல்வி புகட்டும் வேலை தொடரும். “உன் பிள்ளைகளெல்லாரும் யெகோவாவால் போதிக்கப்படுவார்கள்,” என்று ஏசாயா 54:13 கூறுகிறது. இந்தக் கற்பிப்பு அவ்வளவு முழுமைவாய்ந்ததாக இருக்குமாதலால் ஏசாயா 11:9 பின்வருமாறு முன்னறிவிக்கிறது: “சமுத்திரத்திலே தண்ணீர் நிறைந்திருப்பதுபோல் பூமியிலே யெகோவாவை அறிகிற அறிவு நிறைந்திருக்கும்.” (தி.மொ.) இந்தப் பழைய உலகத்தின் முடிவைத் தப்பிப்பிழைத்திருப்போருக்கும் அந்தப் புதிய உலகத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கும் மாத்திரமல்ல, உயிர்த்தெழுதலில் உயிருக்குத் திரும்ப வரும் கோடிக்கணக்கானோருக்குங்கூட தொடர்ந்த கற்பிப்பு தேவைப்படும். முடிவில், பூமியில் வாழும் ஒவ்வொரு ஆளும் தன் தெரிவு சுயாதீனத்தைக் கடவுளுடைய சட்டங்களின் வரம்புகளுக்குள் சரியான முறையில் பயன்படுத்துவதற்குக் கற்பிக்கப்படுவான். இதன் பலன்? “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.
இப்பொழுதே மிகுந்த சுயாதீனங்கள்
17. கடவுளுடைய பூர்வ ஜனங்களுக்கு மோசே என்ன செய்யும்படி சொன்னான்?
17 பூர்வ இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் வாயிலில் இருக்கையில், மோசே அவர்களிடம் பேசி பின்வருமாறு கூறினான்: “என் கடவுளாகிய யெகோவா எனக்குக் கட்டளையிட்டபடியே கட்டளைகளையும் தீர்ப்புகளையும், இதோ, உங்களுக்குப் போதித்தேன்; நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளும்படி பிரவேசிக்கப்போகிற தேசத்திலே நீங்கள் அவற்றின்படி செய்யவென்றே போதித்துவிட்டேன்; நீங்கள் அவைகளைக் கைக்கொண்டு அவற்றின்படி செய்யுங்கள். மற்ற ஜாதியாரின் பார்வையில் இதுவே உங்களுக்கு விவேகமும் அறிவுமாகும்; அவர்கள் இந்த நியமங்களையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜனமே விவேகமும் அறிவுமுள்ள ஜாதி என்பார்கள். நமது கடவுளாகிய யெகோவாவை நோக்கி நாம் கூப்பிடும்போதெல்லாம் அவர் நம்மைக் கிட்டிவருகிறார். அதுபோலவே கடவுள் கிட்டிச்சேருகிற வேறு எந்தப் பெரிய ஜாதியுமுண்டோ?”—உபாகமம் 4:5-7, தி.மொ.
18. கடவுளைச் சேவிப்போருக்கு இப்பொழுதே என்ன பெரும் விடுதலைகள் கிடைக்கின்றன?
18 இன்று யெகோவாவை வணங்கும் லட்சக்கணக்கானோருங்கூட வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின்—புதிய உலகத்தின்—வாயிலில் இருக்கின்றனர். அவர்கள் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதால், அவரைத் தங்களுக்கு அருகில் கொண்டிருப்போராய் மற்ற எல்லா ஜனங்களிலிருந்தும் தனிப்பட்டவர்களாய் தோன்றிநிற்கின்றனர். ஏற்கெனவே கடவுள் அவர்களை, பொய்மத எண்ணங்களிலிருந்தும், ஜாதிபேதங்களிலிருந்தும், சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், தேசாபிமானத்திலிருந்தும், போரிலிருந்தும், பாலுறவின்மூலம் கடத்தப்படும் பெருவாரியாய்ப் பரவும் தொத்து நோய்களிலிருந்தும் விடுதலைசெய்திருக்கிறார். மேலும் அவர், அவர்களைப் பிரிக்க முடியாத அன்புக்குரிய சகோதரத்துவத்தில் ஒற்றுமைப்படுத்தியிருக்கிறார். (யோவான் 13:35) அவர்கள் எதிர்காலத்தைப்பற்றி மனக்கலக்கமடைகிறதில்லை “நல்ல இருதய நிலைமையின் காரணமாக மகிழ்ந்து கெம்பீரிப்பார்கள்.” (ஏசாயா 65:14, NW) அரசரான கடவுளைச் சேவிப்பதன் மூலம் இப்பொழுதே எத்தகைய பெரும் சுயாதீனங்களை அவர்கள் அனுபவித்து மகிழ்கிறார்கள்!—அப்போஸ்தலர் 5:29, 32; 2 கொரிந்தியர் 4:7; 1 யோவான் 5:3.
பொய் நம்பிக்கைகளிலிருந்து மற்றவர்களை விடுவித்தல்
19, 20. மரித்தோரின் நிலைமையைப்பற்றிய பைபிள் போதகத்தால் ஆட்கள் எவ்வாறு விடுதலையாக்கப்படுகின்றனர்?
19 யெகோவாவின் சாட்சிகள் போதிக்கும் பலரும் இந்தச் சுயாதீனங்களைக் கண்டடைகின்றனர். உதாரணமாக, மூதாதையர் வணக்கத்தைக் கடைப்பிடிக்கும் நாடுகளில், யெகோவாவின் சாட்சிகள், மரித்தோர் எவ்விடத்திலும் உயிருடனில்லை, அவர்கள் உயிருள்ளோருக்குத் தீங்கு செய்ய முடியாதென மற்றவர்களுக்குத் தெரிவித்து வருகின்றனர். பிரசங்கி 9:5-ஐ சாட்சிகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர், அது சொல்வதாவது. “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” மேலும் சங்கீதம் 146:4-ஐயும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள், அது சொல்வதாவது, ஒருவன் மரிக்கையில் “அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” ஆகையால் சுகப்படுத்தல்களை நடப்பிக்க அல்லது உயிருள்ளோருக்குத் திகிலூட்ட பேய்த்தோற்றமான ஆவியோ சாவாமையுடைய ஆத்துமாவோ இல்லையென பைபிள் காட்டுகிறது. ஆகையால், பில்லி சூனிய மருத்துவர்களின் அல்லது பூஜாரிகளின் சேவைகளைப் பணத்துக்குக் கொள்வதற்கு, கடினமாய் உழைத்துச் சம்பாதித்தப் பணத்தை வீணாக்கத் தேவையில்லை.
20 இத்தகைய திருத்தமான பைபிள் அறிவு, நரக அக்கினி மற்றும் உத்தரிக்கும் ஸ்தலம் போன்ற பொய்ப் போதகங்களிலிருந்து ஆட்களை விடுதலை செய்கிறது. ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதுபோல், மரித்தோர் உணர்வற்றிருக்கின்றனர் என்ற பைபிள் சத்தியத்தை ஆட்கள் கற்றுக்கொள்கையில், மரித்தத் தங்கள் அன்பானவர்களுக்கு என்ன நடந்ததென்பதைப்பற்றி அவர்கள் அதற்குமேலும் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதில்லை. அதற்குப் பதிலாக, அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சொன்னபோது குறிப்பிட்டுப்பேசின அந்த அதிசயமான காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு.”—அப்போஸ்தலர் 24:15.
21 உயிர்த்தெழுதலில், மரித்தோர் ஆதாமால் உண்டான சுதந்தரிக்கப்பட்ட மரணத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு பூமியில் என்றென்றும் வாழ்வதற்குத் திரும்பி வருவர். மோளேகு போன்ற, கானானிய கடவுட்களுக்குப் பலிசெலுத்தப்பட்ட பிள்ளைகளும், அஸ்டெக் கடவுட்களுக்குப் பலிசெலுத்தப்பட்ட வாலிபர்களும், மற்றும் போர்க் கடவுளுக்குப் பலிசெலுத்தப்பட்ட எண்ணற்ற லட்சக்கணக்கானோரும் சந்தேகமில்லாமல் உயிர்த்தெழுப்பப்பட்டவர்களுக்குள் அடங்கியிருப்பர். முன்னாளில் பொய் நம்பிக்கைகளுக்குப் பலியான இவர்கள் எவ்வளவாய் வியப்புற்று அகமகிழ்ச்சியடைவர்! உயிர்த்தெழுப்பப்பட்ட அத்தகையோர் அப்பொழுது மகிழ்ச்சியுடன் பின்வருமாறு கூறமுடியும்: “மரணமே, உன் கொடுக்குகள் எங்கே? ஷியோலே, உன் சங்காரம் எங்கே?”—ஓசியா 13:14, NW.
யெகோவாவைத் தேடுங்கள்
22. கடவுளுடைய புதிய உலகத்தில் வாழ நாம் விரும்பினால், எதை மனதில் வைக்க வேண்டும்?
22 உண்மையான சுயாதீனம் இருக்கப்போகும், கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகத்தில் வாழ நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால், 2 நாளாகமம் 15:2-ல் (தி.மொ.) உள்ள பின்வரும் வார்த்தைகளை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்: “நீங்கள் யெகோவாவோடிருப்பீர்களானால் அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடுவீர்களானால் அவர் உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டுவிடுவீர்களேயானால் அவர் உங்களை விட்டுவிடுவார்.” கடவுளைப்பற்றிக் கற்றறிந்துகொள்ளவும் அவரைப் பிரியப்படுத்தவும் எடுக்கும் உங்கள் உள்ளப்பூர்வமான பிரயாசங்கள் கவனிக்கப்படாமற் போகாதென்பதை மனதில் வையுங்கள். கடவுள் “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்,” என்று எபிரெயர் 11:6 சொல்லுகிறது. மேலும், “அவரில் விசுவாசம் வைக்கிற எவனும் வெட்கமடையான்,” என்று ரோமர் 10:11 சொல்லுகிறது.
23. கடவுளுடைய சுயாதீன புதிய உலகத்தை நாம் ஏன் வாழ்த்தி வரவேற்க வேண்டும்?
23 உண்மையான சுயாதீனத்தையுடைய கடவுளுடைய புதிய உலகம் அருகில் அடிவானத்தில்தானே தோன்றிவிட்டது. அங்கே “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.” “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.” (ரோமர் 8:21; வெளிப்படுத்துதல் 21:4) அப்பொழுது யெகோவாவின் ஊழியர்கள் எல்லாரும் தங்கள் தலைகளை உயர்த்தி, ‘கடைசியாக உண்மையான சுயாதீனத்துக்காக, யெகோவாவே, உமக்கு நன்றி!’ என உணர்ச்சிமீதூரக் கூறி, கடவுளுடைய சுயாதீன புதிய உலகத்தை பெருமகிழ்ச்சியுடன் வாழ்த்தி வரவேற்பார்கள்.
21. உயிர்த்தெழுப்பப்படுவோருக்குள் சந்தேகமில்லாமல் எவரும் அடங்கியிருப்பர்? அவர்களுடைய பிரதிபலிப்பு பெரும்பாலும் எவ்வாறு இருக்கும்?
யெகோவா, தம்மை வணங்கினோரை விடுவித்து, எகிப்தின் பொய்க் கடவுட்களின்மேல் தம்முடைய உயர்மேன்மையைக் காட்டினார்
இன்று, கடவுளுடைய உண்மையான ஊழியர்கள் அவருடைய உலகளாவிய கல்விபுகட்டும் வேலையை நிறைவேற்றுவதன் மூலமும் அவருடைய பெயரைத் தரித்திருப்பதன் மூலமும் அடையாளங் கண்டுகொள்ளப்படுகின்றனர்
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻யெகோவா தம்முடைய ஜனத்தை விடுவிப்பதற்கான தம்முடைய ஆற்றலை எவ்வாறு மெய்ப்பித்துக் காட்டினார்?
◻கடவுளுடைய புதிய உலகத்தில் எத்தகைய அதிசயமான சுயாதீனங்கள் இருக்கும்?
◻ஜீவனடைவதற்காக, யெகோவா தம்முடைய ஜனத்துக்கு எவ்வாறு கல்வி பயிற்றுவிக்கிறார்?
◻யெகோவாவைச் சேவிப்பதனால் இப்பொழுதே கடவுளுடைய ஜனம் அனுபவித்துக் களிக்கும் சுயாதீனங்கள் சில யாவை?