குடிமகனாயினும் அந்நியனாயினும், கடவுள் உம்மை வரவேற்கிறார்!
“மனுஷஜாதியான சகல தேசத்தாரையும் அவர் ஒரே மனுஷனிலிருந்து தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்தார்.”—அப்போஸ்தலர் 17:26, NW.
1. அந்நிய கலாச்சாரத்திலிருந்து வரும் ஆட்களை ஏற்றுக்கொள்வதன் சம்பந்தமாக இன்று அநேக இடங்களில் என்ன இக்கட்டான நிலை இருந்துவருகிறது?
அநேக தேசங்களில் அந்நியர்கள், குடியேறினவர்கள் மற்றும் அகதிகள் பற்றிய கவலை வளர்ந்துவருவதை செய்தி அறிக்கைகள் காண்பிக்கின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காசின் ஒரு சில பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேற போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் மிகமோசமான வறுமை, உள்நாட்டுப் போர் அல்லது துன்புறுத்தலிலிருந்து விடுதலைப் பெற வகைதேடுகிறார்கள். ஆனால் வேறு இடங்களில் அவர்கள் வரவேற்கப்படுகிறார்களா? டைம் பத்திரிகை சொன்னதாவது: “ஐரோப்பாவின் இனக்கலப்புகள் மாறுதலடைய ஆரம்பிக்கையில், ஒரு சில தேசங்கள், ஒரு சமயம் தாங்கள் நினைத்தது போன்று அந்நிய கலாச்சாரத்தை அவ்வளவு சகித்துக்கொள்ள முடியாதிருப்பதைக் காண்கின்றன.” “வேண்டப்படாத” 1,80,00,000 அகதிகளைக் குறித்து டைம் சொன்னது: “ஸ்திரமுள்ள தேசங்களுக்கு அவை அளிக்கும் சவால் தடமில்லாமல் போய்விடாது.”
2, 3. (எ) ஏற்றுக்கொள்ளப்படுவதன் சம்பந்தமாக பைபிள் என்ன புத்துயிரளிக்கும் உறுதியை கொடுக்கிறது? (பி) மக்களோடு கடவுளுடைய செயல்தொடர்புபற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை ஆராய்வதால் நாம் ஏன் பயனடையலாம்?
2 இதன் சம்பந்தமாக என்ன அபிவிருத்தியடைந்தாலும், சகல ஜனங்களையும்—பிறப்புரிமைப்படி குடிமகனோ, குடியேறியவனோ அல்லது ஓர் அகதியோ—கடவுள் வரவேற்கிறார் என்பதை பைபிள் காண்பிக்கிறது. (அப்போஸ்தலர் 10:34, 35) ‘என்றபோதிலும்,’ சிலர் ‘நீங்கள் எவ்விதமாக அப்படி சொல்லமுடியும்? கடவுள் மற்றவர்களைத் தவிர்த்து பூர்வ இஸ்ரவேலரை மாத்திரமே தம்முடைய ஜனமாக தெரிந்துகொள்ளவில்லையா?’ என்று கேட்கலாம்.
3 சரி, பண்டைய மக்களோடு கடவுள் எவ்வாறு செயல்தொடர்பு கொண்டார் என்பதை நாம் பார்க்கலாம். இன்று மெய்வணக்கத்தாருக்கு கிடைக்கின்ற சிலாக்கியங்களோடு சம்பந்தப்பட்ட ஒரு சில தீர்க்கதரிசனங்களையும்கூட நாம் ஆராய்ந்து பார்க்கலாம். இந்தத் தீர்க்கதரிசன தகவலை விமர்சிப்பது, நீங்கள் அதிக உற்சாகமூட்டுவதாகக் காணக்கூடிய ஒரு முழுமையான புரிந்துகொள்ளுதலை வெளிப்படுத்தக்கூடும். மகா உபத்திரவத்தைத் தொடர்ந்து “சகல தேசங்களிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலும்” இருந்து வரும் தனிநபர்களோடு கடவுள் எவ்விதமாக செயல்தொடர்புகொள்வார் என்பதையும்கூட அது தெரிவிக்கிறது.—வெளிப்படுத்துதல் 7:9, 14-17, NW.
‘எல்லா தேசங்களும் தங்களை ஆசீர்வதித்துக்கொள்வார்கள்’
4. தேசீய பிரச்னை எவ்விதமாக வளர்ச்சியடைந்தது? ஆனால் கடவுள் என்ன நடவடிக்கைகளை எடுத்தார்?
4 ஜலப்பிரளயத்துக்குப் பின்பு, நோவாவின் நெருங்கிய குடும்பமே எல்லா மனிதகுலத்தையும் உண்டுபண்ணியது, மேலும் அனைவரும் மெய் வணக்கத்தாராக இருந்தனர். ஆனால் அந்த ஐக்கியம் சீக்கிரத்தில் மாறியது. விரைவிலேயே, சில ஆட்கள், கடவுளுடைய சித்தத்தை அசட்டை செய்து ஒரு கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தனர். இது மனிதகுலம் மொழிவாரியான தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, சிதறிப்போன ஜனமாகவும் தேசங்களாகவும் ஆவதற்கு வழிநடத்தியது. (ஆதியாகமம் 11:1-9) இருந்தபோதிலும், மெய்வணக்கம் ஆபிரகாமுக்கு வழிநடத்திய வம்சத்தில் தொடர்ந்து இருந்தது. கடவுள் உண்மையுள்ள ஆபிரகாமை ஆசீர்வதித்து, அவருடைய சந்ததி ஒரு பெரிய தேசமாகும் என்பதாக வாக்குக்கொடுத்தார். (ஆதியாகமம் 12:1-3) அந்தத் தேசமே பூர்வ இஸ்ரவேலாகும்.
5. ஆபிரகாமோடு கடவுளுடைய செயல்தொடர்புகளிலிருந்து ஏன் நாம் அனைவருமே உற்சாகம் பெறலாம்?
5 என்றபோதிலும், யெகோவா இஸ்ரவேல் அல்லாத மற்ற ஜனங்களைத் தவிர்த்துக் கொண்டில்லை, ஏனென்றால் அவருடைய நோக்கம் எல்லா மனிதகுலத்தையும் உள்ளடக்க விரிவுபடுத்தப்பட்டிருந்தது. கடவுள் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கில் இதை நாம் தெளிவாக காண்கிறோம்: “நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் (தேசங்களும், NW) ஆசீர்வதிக்கப்படும்.” (ஆதியாகமம் 22:18) ஆனால், பல நூற்றாண்டுகளாக, கடவுள் இஸ்ரவேலுக்கு தேசீய சட்டத்தொகுப்பு ஒன்றைக் கொடுத்து, ஆலயத்தில் பலிகளைச் செலுத்துவதற்காக ஆசாரியர்களை ஏற்பாடு செய்து, வாசம் செய்வதற்கு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அளித்து விசேஷித்த முறையில் அவர்களோடு தொடர்பு கொண்டார்.
6. இஸ்ரவேலோடு கடவுளுடைய ஏற்பாடுகள் எவ்விதமாக அனைவருக்கும் நன்மையாக இருக்கும்?
6 மனிதர்களுடைய பாவத்தன்மையை தெளிவாக்கி, மனித பாவத்தை முடிவாக மூடுவதற்கு ஒரு பரிபூரண பலியின் அவசியத்தை காண்பித்தபடியால் இஸ்ரவேலுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய நியாயப்பிரமாணம் எல்லா தேசங்களிலுள்ள மக்களுக்கும் நல்லதாக இருந்தது. (கலாத்தியர் 3:19; எபிரெயர் 7:26-28; 9:9; 10:1-12) என்றபோதிலும், ஆபிரகாமிய வித்து—சகல தேசத்தாரும் தங்களை ஆசீர்வதித்துக்கொள்வதற்கு வழியாக இருக்கப்போகும் வித்து—வரும் என்பதற்கும் தகுதிகளைப் பூர்த்திசெய்யும் என்பதற்கும் என்ன நம்பிக்கை இருந்தது? இஸ்ரவேலின் நியாயப்பிரமாணம் இங்கும்கூட உதவிசெய்தது. அது பிள்ளைகளை உயிரோடே எரிக்கும் பழக்கம் போன்ற ஒழுக்கங்கெட்ட பழக்கவழக்கங்களுக்கும் சடங்குகளுக்கும் பேர்போனவர்களாக இருந்த மக்களாகிய கானானியரோடு கலப்பு திருமணத்தை தடைசெய்தது. (லேவியராகமம் 18:6-24; 20:2, 3; உபாகமம் 12:29-31; 18:9-12) அவர்களும் அவர்களுடைய பழக்கவழக்கங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டார். அது பரதேசி உட்பட அனைவருடைய நீண்ட-கால நன்மைக்காக இருந்தது, ஏனென்றால் வித்தின் வம்சாவழி கறைப்பட்டுபோவதிலிருந்து பாதுகாக்க அது உதவியாக இருக்கும்.—லேவியராகமம் 18:24-28; உபாகமம் 7:1-5; 9:5; 20:15-18.
7. அந்நியர்களை கடவுள் வரவேற்றார் என்பது முற்காலத்தில் எவ்விதமாக தெரிவிக்கப்பட்டது?
7 நியாயப்பிரமாணம் அமுலில் இருந்தபோதிலும் கடவுள் இஸ்ரவேலரை விசேஷித்தவர்களாக நோக்கியபோதிலும், இஸ்ரவேல் அல்லாதவர்களுக்கு அவர் இரக்கம் காண்பித்தார். அவ்விதமாகச் செய்ய அவர் மனமுள்ளவராக இருந்தது, இஸ்ரவேல் மக்கள் எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து தங்கள் சொந்த தேசத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும் போதே காண்பிக்கப்பட்டது. “அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனா”ர்கள். (யாத்திராகமம் 12:38) பேராசிரியர் C. F. கீல் அவர்களை “அந்நியரின் ஒரு தொகுதி . . . பலதிறப்பட்ட ஒரு மக்கள் கும்பல், அல்லது பல்வேறு தேசங்களைச் சேர்ந்த ஒரு மக்கள் கூட்டம்” என்று அடையாளங்காட்டுகிறார். (லேவியராகமம் 24:10; எண்ணாகமம் 11:4) பெரும்பாலும் அவர்கள் மெய்க்கடவுளை ஏற்றுக்கொண்ட எகிப்தியர்களாக இருந்தார்கள்.
அந்நியருக்கு வரவேற்பு
8. கிபியோனியர் எவ்விதமாக கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் ஓரிடத்தை கண்டடைந்தார்கள்?
8 இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்த நடத்தைக்கெட்ட ஜாதிகளை நிர்மூலமாக்கும்படியாக கடவுள் கொடுத்த கட்டளையை நிறைவேற்றும்போது, அவர் எருசலேமுக்கு வடக்கே வாழ்ந்து வந்த கிபியோனியர் என்ற ஓர் அந்நிய ஜாதியான தொகுதியை பாதுகாத்தார். அவர்கள் சமாதானம் நாடி மாறுவேடத்தில் ஸ்தானாபதிகளை யோசுவாவிடத்தில் அனுப்பி அதில் வெற்றிபெற்றார்கள். அவர்களுடைய தந்திரமான உபாயம் கண்டுபிடிக்கப்பட்ட போது, கிபியோனியர் “சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள்” என்று யோசுவா கட்டளையிட்டார். (யோசுவா 9:3-27, NW) இன்று குடியேறியிருக்கும் அநேகரும்கூட புதிய ஒரு ஜனத்தின் பாகமாகும் பொருட்டு தாழ்மையான வேலை வாய்ப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.
9. இஸ்ரவேலில் அந்நியர் சம்பந்தமாக ராகாப் மற்றும் அவளுடைய குடும்பத்தாரின் உதாரணம் எவ்வாறு உற்சாகமளிப்பதாக இருக்கிறது?
9 அந்நியரை கடவுள் வரவேற்றது அக்காலங்களில் மட்டுமே அல்ல என்பதை அறிந்துகொள்வது உங்களுக்கு உற்சாகமூட்டக்கூடும்; தனிமையில் இருந்த நபர்களும்கூட வரவேற்கப்பட்டார்கள். இன்று சில தேசங்கள் சமுதாய அந்தஸ்தை, முதலீடு செய்ய செல்வத்தை அல்லது உயர் கல்வியுடைய குடியேறுகிறவர்களை மாத்திரமே வரவேற்கின்றன. கிபியோனியருக்கு ஏற்பட்ட அனுபவத்துக்குச் சற்று முன்பாக நிகழ்ந்த ஒரு சம்பவத்திலிருந்து யெகோவா அவ்விதமாக இல்லை என்பதை நாம் காண்கிறோம். இது உயர்ந்த ஒரு சமுதாய அந்தஸ்தில் இல்லாத கானானிய பெண்ணை உட்படுத்தியது. பைபிள் அவளை “ராகாப் என்னும் வேசி” என்று அழைக்கிறது. மெய்க்கடவுளில் அவளுடைய விசுவாசத்தின் காரணமாக, எரிகோ விழுந்தபோது அவளும் அவளுடைய குடும்பமும் விடுவிக்கப்பட்டார்கள். ராகாப் அந்நிய ஜாதியை சேர்ந்தவளாக இருந்தபோதிலும் இஸ்ரவேலர் அவளை ஏற்றுக்கொண்டனர். நாம் பின்பற்ற தகுதியுள்ள விசுவாசத்தின் ஒரு மாதிரியாக அவள் இருந்தாள். (எபிரெயர் 11:30, 31, 39, 40; யோசுவா 2:1-21; 6:1-25) அவள் மேசியாவின் முன்னோளாகவும்கூட ஆனாள்.—மத்தேயு 1:5, 16.
10. இஸ்ரவேலில் அந்நியர் வரவேற்கப்படுவது எதைச் சார்ந்திருந்தது?
10 இஸ்ரவேல் அல்லாதவர்கள் மெய்க்கடவுளைப் பிரியப்படுத்த அவர்கள் செய்த முயற்சிக்கு இசைவாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். இஸ்ரவேலர் யெகோவாவை சேவிக்காத ஆட்களோடு விசேஷமாக மதசம்பந்தமாக, தோழமைக்கொள்ளக்கூடாது என்று சொல்லப்பட்டிருந்தார்கள். (யோசுவா 23:6, 7, 12, 13; 1 இராஜாக்கள் 11:1-8; நீதிமொழிகள் 6:23-28) இருந்தபோதிலும், புறக்குடிகளான இஸ்ரவேல் அல்லாத அநேகர் அடிப்படைச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள். மற்றவர்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்ட மதம்மாறினவர்களுமானார்கள், யெகோவா அவர்களைத் தம்முடைய சபையின் அங்கத்தினர்களாக முழுமையாக வரவேற்றார்.—லேவியராகமம் 20:2; 24:22; எண்ணாகமம் 15:14-16; அப்போஸ்தலர் 8:27.a
11, 12. (எ) இஸ்ரவேலர் அந்நிய புத்திரரான வணக்கத்தாரை எவ்விதமாக நடத்தவேண்டியவர்களாக இருந்தனர்? (பி) யெகோவாவின் முன்மாதிரியை பின்பற்றுவதில் நாம் ஏன் முன்னேறுவது அவசியமாயிருக்கிறது?
11 கடவுள் அந்நியபுத்திரரான வணக்கத்தாரிடமாக தம்முடைய மனநிலையை பின்பற்றுமாறு இஸ்ரவேலருக்கு கட்டளையிட்டார்: “உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே.” (லேவியராகமம் 19:33, 34; உபாகமம் 1:16; 10:12-19) நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லாவிட்டாலும்கூட இது நமக்கு ஒரு பாடத்தை அளிக்கிறது. வேறொரு இனம், தேசம் அல்லது கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களிடமாக தப்பெண்ணத்துக்கும் பகைமைக்கும் இடம்கொடுத்துவிடுவது சுலபமாகும். ஆகவே நாம் இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லதாக இருக்கும்: ‘யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றி இப்படிப்பட்ட தப்பெண்ணங்களிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள நான் முயற்சி செய்கிறேனா?’
12 கடவுளுடைய வரவேற்புக்கு இஸ்ரவேலர் காணக்கூடிய அத்தாட்சியைக் கொண்டிருந்தனர். சாலொமோன் ராஜா இவ்விதமாக ஜெபித்தார்: “உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உம்முடைய மகத்துவமான . . . நாமத்தினிமித்தம் தூர தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால், . . . பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் . . . உமக்குப் பயப்படும்படிக்கு . . . உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக . . . தேவரீர் செய்வீராக.”—1 இராஜாக்கள் 8:41-43; 2 நாளாகமம் 6:32, 33.
13. இஸ்ரவேலோடு தம்முடைய செயல்தொடர்புகளை மாற்றிக்கொள்வதற்கு ஏற்பாட்டை கடவுள் ஏன் செய்தார்?
13 யெகோவா தம்முடைய ஜனமாக இஸ்ரவேல் தேசத்தை இன்னும் உபயோகித்துக்கொண்டும் இவ்விதமாக மேசியாவின் வம்சாவழியைப் பாதுகாத்துக்கொண்டுமிருக்கும் போதே கடவுள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்னுரைத்தார். இதற்கு முன்னால், இஸ்ரவேலர் நியாயப்பிரமாண உடன்படிக்கையில் இருக்க ஒப்புக்கொண்ட போது, அவர்கள் “ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய்” இருப்பார்கள் என்று கடவுளால் சொல்லப்பட்டார்கள். (யாத்திராகமம் 19:5, 6) ஆனால் பல நூற்றாண்டுகளாக இஸ்ரவேலர் உண்மையற்றவர்களாகக் காண்பித்தார்கள். ஆகவே யெகோவா தாம் ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தப்போவதாகவும், இந்த “இஸ்ரவேல் குடும்பத்தை” உண்டுபண்ணுகிறவர்களுடைய பிழைகளும் பாவங்களும் மன்னிக்கப்பட்டிருக்கும் என்றும் முன்னுரைத்தார். (எரேமியா 31:33, 34) அந்தப் புதிய உடன்படிக்கை மேசியாவுக்காக காத்திருந்தது, இவருடைய பலியே உண்மையில் அநேகரை பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப் போவதாக இருந்தது.—ஏசாயா 53:5-7, 10-12.
பரலோகத்தில் இஸ்ரவேலர்
14. எந்தப் புதிய “இஸ்ரவேலை” யெகோவா ஏற்றுக்கொண்டார்? எவ்விதமாக?
14 இவை அனைத்தும் எவ்விதமாக நிறைவேற்றப்பட்டது என்பதை புரிந்துகொள்ள கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் நமக்கு உதவிசெய்கிறது. இயேசு மேசியாவாக இருந்தார். இவருடைய மரணமே நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி முழுமையான பாவ மன்னிப்புக்காக ஆதாரத்தைப் போட்டது. அந்த நன்மையை பெற்றுக்கொள்ள, ஒருவர் மாம்சத்தில் விருத்தசேதனம் பண்ணப்பட்ட ஒரு யூதனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இல்லை. புதிய உடன்படிக்கையில், “உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (ரோமர் 2:28, 29; 7:6) இயேசுவின் பலியை விசுவாசித்தவர்கள் மன்னிப்பை பெற்றுக்கொண்டனர், கடவுள் அவர்களை ‘ஆவியின்படி யூதராக’ அங்கீகரித்தார், இவர்களே “தேவனுடைய இஸ்ரவேலர்” என்றழைக்கப்பட்ட ஆவிக்குரிய தேசத்தை உண்டுபண்ணுகிறார்கள்.—கலாத்தியர் 6:16.
15. ஆவிக்குரிய இஸ்ரவேலின் ஒரு பாகமாக இருப்பதற்கு மாம்சப்பிரகாரமான தேசீயத்தன்மை ஏன் ஒரு காரணக்கூறாக இல்லை?
15 ஆம், ஆவிக்குரிய இஸ்ரவேலுக்குள் ஏற்றுக்கொள்ளப்படுவது, குறிப்பிட்ட ஒரு தேசீய அல்லது இன பின்னணியின் மீது சார்ந்திருக்கவில்லை. இயேசுவின் அப்போஸ்தலர்கள் போன்ற சிலர் இயற்கையான யூதர்களாக இருந்தனர். ரோம நூற்றுக்கு அதிபதி கொர்நேலியு போன்ற மற்றவர்கள் விருத்தசேதனம் பண்ணப்படாத புறஜாதிகளாக இருந்தனர். (அப்போஸ்தலர் 10:34, 35, 44-48) ஆவிக்குரிய இஸ்ரவேலைக் குறித்து பவுல் சரியாகவே இவ்விதமாகச் சொன்னார்: “கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை.” (கொலோசெயர் 3:11) கடவுளுடைய ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்” ஆனார்கள்.—1 பேதுரு 2:9; யாத்திராகமம் 19:5, 6 ஒப்பிடவும்.
16, 17. (எ) கடவுளுடைய நோக்கத்தில் ஆவிக்குரிய இஸ்ரவேலர் என்ன பங்கை உடையவர்களாக இருக்கின்றனர்? (பி) தேவனுடைய இஸ்ரவேல் அல்லாதவர்களைப் பற்றி சிந்திப்பது ஏன் பொருத்தமாக உள்ளது?
16 கடவுளுடைய நோக்கத்தில் ஆவிக்குரிய இஸ்ரவேலர் என்ன எதிர்காலத்தையுடையவர்களாக இருக்கின்றனர்? இயேசு பதிலளித்தார்: “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.” (லூக்கா 12:32) ‘பரலோகத்தில் குடியிருப்பைக் கொண்ட’ அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடுகூட ராஜ்ய ஆட்சியில் உடன் சுதந்தரவாளிகளாக இருப்பார்கள். (பிலிப்பியர் 3:20; யோவான் 14:2, 3; வெளிப்படுத்துதல் 5:9, 10) இவர்கள் ‘இஸ்ரவேல் புத்திரரிலிருந்து முத்திரைபோடப்பட்டவர்கள்’ என்றும் “மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்” என்றும் பைபிள் காண்பிக்கிறது. இவர்களுடைய எண்ணிக்கை 1,44,000 ஆகும். என்றபோதிலும் முத்திரைப்போடப்பட்ட இந்த எண்ணிக்கையைப் பற்றிய பதிவைக் கொடுத்த பிறகு, யோவான் வித்தியாசமான ஒரு தொகுதியை அறிமுகப்படுத்துகிறார்—“சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டம்.”—வெளிப்படுத்துதல் 7:4, 9; 14:1-4.
17 சிலர் இவ்வாறு யோசிக்கலாம்: ‘மகா உபத்திரவத்தை கடந்துவரக்கூடிய ஆவிக்குரிய இஸ்ரவேலின் பாகமாக இல்லாத அந்தத் திரள்கூட்டத்தைப் போன்ற லட்சக்கணக்கானோரைப் பற்றி என்ன? இன்றுள்ள ஆவிக்குரிய இஸ்ரவேலின் மிகச் சில மீதியானோரோடு ஒப்பிட அவர்களுக்கு என்ன பங்கு இருக்கிறது?’b
தீர்க்கதரிசனத்தில் அந்நியர்
18. பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேல் திரும்பிவர வழிநடத்தியது என்ன?
18 இஸ்ரவேலர் நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழிருந்தும் ஆனால் அதற்கு உண்மையற்றவர்களாக இருந்த அந்தச் சமயத்தை பின்னோக்கிப் பார்க்கையில், பாபிலோனியர்கள் இஸ்ரவேலை பாழ்க்கடிக்கும்படி அனுமதிக்க கடவுள் தீர்மானித்தார். பொ.ச.மு. 607-ல் இஸ்ரவேலர் 70 ஆண்டுகளுக்கு சிறைப்பிடித்துக்கொண்டு போகப்பட்டார்கள். பின்னர் கடவுள் தேசத்தை மீட்டுக்கொண்டார். தலைவரான செருபாபேலின் தலைமையின் கீழ், இயற்கையான யூதர்களில் ஒரு மீதியானோர் தங்கள் தேசத்துக்குத் திரும்பினார்கள். பாபிலோனை கவிழ்த்துவிட்டிருந்த மேதிய மற்றும் பெர்சிய அரசர்கள் திரும்பிவந்து கொண்டிருந்த சிறைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆகாரங்கள் கொடுத்து உதவியும்கூட செய்தார்கள். இந்த முன்னேற்றங்களைக் குறித்து, ஏசாயாவின் புத்தகம் முன்னறிவித்தது. (ஏசாயா 1:1-9; 3:1-26; 14:1-5; 44:21-28; 47:1-4) எஸ்றா அந்தத் திரும்பிவருதலைப்பற்றி சரித்திரப்பூர்வ விவரங்களை நமக்குத் தருகிறார்.—எஸ்றா 1:1-11; 2:1, 2.
19. இஸ்ரவேல் திரும்பி வருவதன் சம்பந்தமாக, அந்நியர் உட்படுத்தப்படுவார்கள் என்பதற்கு என்ன தீர்க்கதரிசன குறிப்பு இருந்தது?
19 இன்னும், கடவுளுடைய மக்கள் மீட்டுக்கொள்ளப்படுவதையும் திரும்ப வருதலையும் முன்னறிவிக்கையில், ஏசாயா திடுக்கிடச் செய்யும் இந்தத் தீர்க்கதரிசனத்தை உரைத்தார்: “உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், (தேசங்களும், NW) உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.” (ஏசாயா 59:20; 60:3) இது, சாலொமோனின் ஜெபத்துக்கு இசைவாக, அந்நியரான தனிநபர்கள் வரவேற்கப்படுவதைக் காட்டிலும் அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. ஏசாயா அந்தஸ்தில் அசாதாரணமான ஒரு மாற்றத்தைச் சுட்டிக்காண்பித்துக் கொண்டிருந்தார். “ஜாதிகள்” இஸ்ரவேல் புத்திரரோடு சேவிப்பார்கள்: “அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்.”—ஏசாயா 60:10.
20 அநேக அம்சங்களில், இஸ்ரவேலர் சிறையிருப்புக்குள் போவதும் திரும்பிவருவதும் நவீன காலங்களில் ஆவிக்குரிய இஸ்ரவேலரில் இணைப்பொருத்தங்களைக் கொண்டிருக்கின்றது. முதல் உலகப் போருக்கு முன்பு, அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களில் மீதியானோர் கடவுளுடைய சித்தத்துக்கு முழுமையாக இசைவாக இருக்கவில்லை; அவர்கள் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளிலிருந்து கொண்டு வந்த ஒரு சில கருத்துகளையும் பழக்கவழக்கங்களையும் பற்றிக்கொண்டிருந்தார்கள். பின்னர், போர் கால ஹிஸ்டீரியாவின் போதும் ஓரளவு பாதிரிமாரின் தூண்டுதலினாலும் ஆவிக்குரிய இஸ்ரவேலில் இருந்த பிரதானமானவர்கள் அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டனர். போர் முடிந்த பின்பு, பொ.ச. 1919-ல் சொல்லர்த்தமான சிறையிலிருந்த அந்த அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு குற்றமற்றவர்களென அறிவிக்கப்பட்டனர். இது கடவுளுடைய மக்கள் பொய் மத உலக பேரரசாகிய மகா பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு அத்தாட்சியாக இருந்தது. அவருடைய மக்கள் ஆவிக்குரிய ஒரு பரதீஸைக் கட்டுவதற்கும் குடியிருப்பதற்கும் புறப்பட்டுச் சென்றார்கள்.—ஏசாயா 35:1-7; 65:13, 14.
20, 21. (எ) சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேலர் திரும்பி வந்ததற்கு நவீன காலங்களில் நாம் என்ன இணைப்பொருத்தத்தைக் காண்கிறோம்? (பி) அதற்குப் பின் ‘குமாரரும் குமாரத்திகளும்’ எவ்விதமாக ஆவிக்குரிய இஸ்ரவேலோடு சேர்க்கப்பட்டார்கள்?
21 இது ஏசாயாவின் வருணனையில் காண்பிக்கப்பட்டிருந்தது: “அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள். அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.” (ஏசாயா 60:4, 5) தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில், ‘குமாரரும் குமாரத்திகளும்’ ஆவிக்குரிய இஸ்ரவேலின் கடைசியான இடங்களை நிரப்புவதற்காக ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாய் வந்துகொண்டேயிருந்தார்கள்.
22. எவ்விதமாக ஆவிக்குரிய இஸ்ரவேலோடு “அந்நியர்கள்” வேலை செய்ய வந்திருக்கிறார்கள்?
22 ‘உன் மதில்களைக் கட்டும் அந்நியர்களைப்’ பற்றி என்ன? இதுவும் கூட நம்முடைய நாளில் சம்பவித்திருக்கிறது. 1,44,000 பேரின் அழைப்பு முடிவுக்கு வந்துகொண்டிருக்கையில், எல்லா தேசங்களிலுமிருந்து வந்த திரளான ஒரு கூட்டம் தொழுதுகொள்வதற்காக ஆவிக்குரிய இஸ்ரவேலோடுகூட திரண்டு வர ஆரம்பித்தனர். இந்தப் புதியவர்கள் பரதீஸிய பூமியின் மீது நித்திய ஜீவனடையும் பைபிள்-ஆதாரமுள்ள எதிர்பார்ப்பையுடையவர்களாக இருக்கின்றனர். இவர்கள் கடைசியாக உண்மையுடன் சேவிக்கப்போகும் இடமானது வித்தியாசமாக இருந்தாலும், இவர்கள் ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதில் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோருக்கு உதவிசெய்ய சந்தோஷமுள்ளவர்களாக இருந்தனர்.—மத்தேயு 24:14.
23. எந்த அளவுக்கு “அந்நியர்கள்” அபிஷேகம்பண்ணப்பட்டவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்?
23 இன்று 40,00,000 மேலான ‘அந்நியர்கள்,’ ‘பரலோகத்தில் குடியிருப்பைக்’ கொண்ட மீதியானோரோடு சேர்ந்து யெகோவாவுக்குத் தங்கள் பக்தியை நிரூபித்து வருகிறார்கள். அவர்களில் அநேகர், ஆண்களும் பெண்களும், இளைஞரும் வயதானவர்களும், பயனியர்களாக முழு-நேர ஊழியத்தில் சேவைசெய்கிறார்கள். 66,000-க்கும் மேற்பட்ட சபைகளில் பெரும்பாலானவற்றில் இப்படிப்பட்ட அந்நியர்களே மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் பொறுப்புகளை நிறைவேற்றிவருகிறார்கள். ஏசாயாவின் வார்த்தைகளின் நிறைவேற்றத்தைக் கண்டு மீதியானோர் இதில் களிகூருகிறார்கள்: “மறுஜாதியார் நின்றுகொண்டு உங்கள் மந்தைகளை மேய்த்து, அந்நிய புத்திரர் உங்கள் பண்ணையாட்களும், உங்கள் திராட்சத்தோட்டக்காரருமாயிருப்பார்கள்.”—ஏசாயா 61:5.
24. கடந்தக் காலங்களில் இஸ்ரவேலோடும் மற்றவர்களோடும் கடவுளின் செயல்தொடர்புகளினால் நாம் ஏன் உற்சாகப்படுத்தப்படலாம்?
24 ஆகவே நீங்கள் எந்தத் தேசத்தின் குடிமகனாக இருந்தாலும், குடியேறியவராக, அல்லது ஓர் அகதியாக இருந்தாலும், சர்வவல்லமையுள்ளவர் மனதார வரவேற்கும் ஓர் ஆவிக்குரிய அந்நியராக ஆகும் மகத்தான சிலாக்கியம் உங்களுக்கிருக்கிறது. அவருடைய வரவேற்பு இப்பொழுதும் நித்திய எதிர்காலத்துக்குள்ளும் அவருடைய சேவையில் சிலாக்கியங்களை அனுபவித்துக் களிக்கும் சாத்தியங்களை உட்படுத்துகிறது. (w92 4/15)
[அடிக்குறிப்புகள்]
a “பரதேசி,” “புறக்குடிகள்,” “அந்நியர்,” மற்றும் “அந்நிய புத்திரர்” ஆகியவற்றிற்கிடையேயுள்ள வித்தியாசத்துக்கு உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டி வெளியிட்டுள்ள வேதாகமத்தின் பேரில் உட்பார்வை ஆங்கில புத்தகத்தில், புத்தகம் 1, பக்கங்கள் 72-5, 849-51 பார்க்கவும்.
b 1991-ல் யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்பட்ட கர்த்தருடைய இராப்போஜனத்தின் வருடாந்தர ஞாபகார்த்த நாளுக்கு 1,06,00,000-க்கும் மேலானவர்கள் வந்திருந்தனர், ஆனால் ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதியானோராக உரிமைப்பாராட்டியவர்கள் 8,850 மட்டுமே.
இந்தக் குறிப்புகளைக் கவனித்தீர்களா?
◻ எல்லா தேசங்களின் மக்களும் அவரால் ஏற்றுக்கொள்ளப்படுவர் என்ற நம்பிக்கையை கடவுள் எவ்வாறு அளித்தார்?
◻ கடவுளுடைய விசேஷித்த ஜனமாகிய இஸ்ரவேலர் மட்டுமல்லாமல் மக்கள் அவரை அணுக முடியும் என்பதை எது காட்டுகிறது?
◻ அந்நியர்கள் இஸ்ரவேலோடு தங்களை இணைத்துக்கொள்வார்கள் என்பதை தீர்க்கதரிசனத்தில் கடவுள் எவ்விதமாக சுட்டிக்காட்டினார்?
◻ பாபிலோன் சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேலர் திரும்பி வந்ததற்கு எது இணைப்பொருத்தமாக இருந்தது? “அந்நியர்” எவ்விதமாக உட்பட்டவர்களானார்கள்?
[பக்கம் 9-ன் படம்]
சாலொமோன் ராஜா யெகோவாவை வணங்க வரும் அந்நியர்களுக்காக ஜெபித்தார்