“தற்காலிகக் குடிகள்” உண்மை வழிபாட்டில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்
“அந்நியர்கள் உங்கள் பண்ணையாட்களும், உங்கள் திராட்சத்தோட்டக்காரருமாய் இருப்பார்கள். நீங்களோ யெகோவாவுக்கு குருத்துவ பணி செய்யும் குருமார்கள் என்று சொல்லப்படுவீர்கள்.” —ஏசா. 61:5, 6, NW.
1. அந்நியரைச் சிலர் எவ்வாறு கருதுகிறார்கள்? அப்படி நினைப்பது ஏன் சரியல்ல?
மு ந்தின கட்டுரையில் பார்த்த விதமாக, சிலருக்கு வேறு நாட்டிலிருந்து வந்த அந்நியரைக் கண்டாலே பிடிக்காது. தங்களைவிட தாழ்ந்தவர்கள் என நினைப்பார்கள். அப்படி நினைப்பது அன்பற்ற செயல். சொல்லப்போனால், மனிதர்களில் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று யாருமில்லை. மனித இனங்கள் என்ற ஆங்கில புத்தகம் இப்படிச் சொல்கிறது: “மனித இனங்களை சகோதரர்கள் என்று பைபிள் அழைக்கிறது.” சகோதரர்களுக்கிடையே வித்தியாசங்கள் இருக்கலாம், ஆனாலும் அவர்கள் சகோதரர்கள்தான்.
2, 3. அந்நியர்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
2 நாம் எங்கு வாழ்ந்தாலும், நம் மத்தியில் அந்நியர்கள் இருப்பார்கள். திருச்சட்ட ஒப்பந்தத்தின்படி யெகோவாவோடு விசேஷ பந்தத்தை அனுபவித்த பூர்வ இஸ்ரவேலர்கள் மத்தியிலும் அந்நியர்கள் இருந்தார்கள். அந்த அந்நியர்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், இஸ்ரவேலர்கள் அவர்களை மரியாதையோடும் அன்போடும் நடத்த வேண்டியிருந்தது. பின்பற்ற ஒரு நல்ல முன்மாதிரி! உண்மை கிறிஸ்தவர்கள் மத்தியில் எந்த பாரபட்சத்திற்கோ பாகுபாட்டிற்கோ இடமில்லை. ஏன்? அப்போஸ்தலன் பேதுரு சொல்கிறார்: “கடவுள் பாரபட்சம் காட்டாதவர், அவருக்குப் பயந்து நீதியின்படி நடக்கிறவன் எவனோ அவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதை இப்போது நான் தெளிவாகவே காண்கிறேன்.”—அப். 10:34, 35.
3 இஸ்ரவேலரோடு வாழ்ந்த அந்நியர்கள் அவர்களோடு நெருங்கிய சகவாசம் வைத்திருந்ததால் நன்மையடைந்தார்கள். அந்நியர்களை யெகோவா எப்படி கருதுகிறார் என்பதை இது படம் பிடித்து காட்டியது. பிற்பாடு, யெகோவாவைப் பற்றி பவுல் இப்படிச் சொன்னார்: “கடவுள் யூதர்களுக்கு மட்டுமா கடவுள்? புறதேசத்தாருக்கும் கடவுள் அல்லவா? ஆம், கடவுள் ஒருவர் என்பதால் புறதேசத்தாருக்கும் அவர்தான் கடவுள்.”—ரோ. 3:29; யோவே. 2:32.
4. “கடவுளுடைய இஸ்ரவேலர்” மத்தியில் அந்நியர்கள் இல்லை என எப்படிச் சொல்லலாம்?
4 புதிய ஒப்பந்தத்தின் மூலம், இஸ்ரவேலருக்கு பதிலாக பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களின் சபையை யெகோவா தேர்ந்தெடுத்தார். அவர்கள் “கடவுளுடைய இஸ்ரவேலர்” என்று அழைக்கப்படுகிறார்கள். (கலா. 6:16) பவுல் சொன்ன விதமாக, அந்த ஆன்மீக இஸ்ரவேலர் மத்தியில் “கிரேக்கர் என்றோ, யூதர் என்றோ, விருத்தசேதனம் செய்துகொண்டவர் என்றோ, விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர் என்றோ, அந்நியர் என்றோ, சீத்தியர் என்றோ, அடிமை என்றோ, சுதந்திரர் என்றோ பாகுபாடு இல்லை; கிறிஸ்துவே எல்லாருக்குள்ளும் எல்லாமுமாக இருக்கிறார்.” (கொலோ. 3:11) அப்படியானால், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களின் சபைக்குள் அந்நியர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
5, 6. (அ) ஏசாயா 61:5, 6-ஐ வாசிக்கும்போது என்ன கேள்வி எழும்பலாம்? (ஆ) “யெகோவாவுக்கு குருத்துவ பணி செய்யும் குருமார்கள்” யார், “அந்நியர்கள்” யார்? (இ) இந்த இரண்டு தொகுதியினரும் எந்த விஷயத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்?
5 சிலர், ஏசாயா 61-ஆம் அதிகாரத்தில் கிறிஸ்தவ சபையைப் பற்றி சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தைச் சுட்டிக்காட்டலாம். வசனம் 6-ல் ‘யெகோவாவுக்கு குருத்துவ பணி செய்யும் குருமார்களை’ பற்றிச் சொல்கிறது. அந்த குருமார்களுக்கு “அந்நியர்கள்” தோள்கொடுத்து உதவுவார்கள் என வசனம் 5 சொல்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?
6 “யெகோவாவுக்கு குருத்துவ பணி செய்யும் குருமார்கள்” பரலோக வாழ்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இவர்கள், ‘முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெறுகிறவர்கள்.’ “இவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் சேவை செய்கிற குருமார்களாயிருந்து, அவரோடுகூட ஆயிரம் வருடங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.” (வெளி. 20:6) இவர்களைத் தவிர, பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள அநேக உண்மை கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். பரலோகத்தில் வாழப்போகிறவர்களுக்கு அவர்கள் தோள்கொடுத்து உதவுகிறார்கள்; ஆனாலும், ஒருவிதத்தில் அந்நியர்களே. ‘யெகோவாவுக்கு குருத்துவ பணி செய்யும் குருமார்களின்’ ‘பண்ணையாட்களும், திராட்சத்தோட்டக்காரருமாய் இருந்து’ சந்தோஷமாக அவர்களுக்கு உதவுகிறார்கள். யெகோவாவின் மகிமைக்கென்று ஆன்மீக கனிகளை அறுவடை செய்ய மக்களுக்கு சத்திய நீர் ஊற்றி வளர்க்கிறார்கள். ஆம், பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் “வேறே ஆடுகளும்,” கடவுளைச் சேவிக்க விரும்புகிற நல்மனம் உள்ளவர்களைக் கண்டுபிடித்து, அன்பாக மேய்த்து வருகிறார்கள்.—யோவா. 10:16.
ஆபிரகாமைப் போன்ற “தற்காலிகக் குடிகள்”
7. இன்று கிறிஸ்தவர்கள் எப்படி ஆபிரகாமைப் போன்ற பூர்வகால உண்மையுள்ள மனிதர்களைப் போல் இருக்கிறார்கள்?
7 முந்தைய கட்டுரையில் பார்த்த விதமாக, சாத்தானின் இந்த உலகில் கிறிஸ்தவர்கள் அந்நியர்களாக, அதாவது தற்காலிகக் குடிகளாக, வாழ்கிறார்கள். ஆம், ஆபிரகாமைப் போன்ற பூர்வகால உண்மையுள்ள மனிதர்களைப்போல் வாழ்கிறார்கள். அந்த மனிதர்கள், ‘தாங்கள் குடியிருந்த தேசத்தில் அந்நியர்களாகவும், தற்காலிகக் குடிகளாகவும் இருந்தார்கள்.’ (எபி. 11:13) நம்முடைய எதிர்கால நம்பிக்கை எதுவாக இருந்தாலும்சரி, யெகோவாவோடு ஆபிரகாம் வைத்திருந்ததைப் போன்ற நல்லுறவை நாமும் அனுபவிக்க முடியும். யாக்கோபு இவ்வாறு சொன்னார்: “ஆபிரகாம் யெகோவாமீது விசுவாசம் வைத்ததால் நீதிமானாக எண்ணப்பட்டார்; . . . அவர் ‘யெகோவாவின் நண்பர்’ என்று அழைக்கப்பட்டார்.”—யாக். 2:23.
8. ஆபிரகாமுக்குக் கடவுள் என்ன வாக்குக்கொடுத்தார், அதன் நிறைவேற்றத்தைப் பற்றி அவர் என்ன நினைத்தார்?
8 ஆபிரகாம் மற்றும் அவருடைய சந்ததி மூலம், பூமியிலுள்ள ஒரு தேசத்தார் மட்டுமல்ல, எல்லா தேசத்தாரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று கடவுள் வாக்குக்கொடுத்தார். (ஆதியாகமம் 22:15-18-ஐ வாசியுங்கள்.) அது எதிர்காலத்தில் நிறைவேறப்போகும் வாக்குறுதியாக இருந்தாலும், நிச்சயம் நிறைவேறும் என ஆபிரகாம் உறுதியாக இருந்தார். அவரும் அவருடைய குடும்பமும் அவருடைய வாழ்நாளில் பாதி காலம் ஒவ்வொரு ஊராக சுற்றித் திரிந்தார்கள். அப்போதெல்லாம் யெகோவாவின் நண்பராகவே ஆபிரகாம் நடந்துகொண்டார்.
9, 10. (அ) ஆபிரகாமின் முன்மாதிரியை நாம் எவ்வழிகளில் பின்பற்றலாம்? (ஆ) என்ன அழைப்பை நாமும் கொடுக்கலாம்?
9 தன் நம்பிக்கை நிறைவேறுவதை பார்க்க எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமென்று ஆபிரகாமுக்கு தெரியாது. அப்படியிருந்தும், யெகோவாமேல் அவர் வைத்திருந்த அன்பும் பக்தியும் சற்றும் குறையவில்லை. ஏதாவது ஒரு தேசத்தில் நிரந்தர குடிமகனாக தங்கிவிட வேண்டுமென அவர் நினைக்கவில்லை. (எபி. 11:14, 15) சொத்துபத்து, சமுதாய அந்தஸ்து, வசதியான வேலைவாய்ப்பு பற்றி அளவுக்குமீறி கவலைப்படாமல் எளிமையாக வாழ்வதில் ஆபிரகாமின் முன்மாதிரியை நாமும் பின்பற்றுவது எவ்வளவு ஞானமானது! சீக்கிரத்தில் அழியப்போகும் இந்த உலகத்தில் நாம் ஏன் மற்றவர்களைப்போல் வாழ வேண்டும்? தற்காலிகமான காரியங்களில் ஏன் அதிக ஆசை வைக்க வேண்டும்? இவற்றைவிட மிகச் சிறந்தவற்றை அடைய நாம் பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் காத்திருக்கலாமே!—ரோமர் 8:25-ஐ வாசியுங்கள்.
ஆபிரகாமைப் போல் கடவுளுடைய வாக்குறுதி நிறைவேறுவதைக் காண எப்போதும் கவனமாய் இருப்பீர்களா?
10 ஆபிரகாமின் சந்ததி மூலம் எல்லா தேசத்தாரும் நன்மையடைய யெகோவா இன்னும் மக்களை அழைத்துக்கொண்டிருக்கிறார். ‘யெகோவாவுக்கு குருத்துவ பணி செய்யும் குருமார்களும்’ வேறே ஆடுகளான ‘அந்நியர்களும்’ உலகெங்கும் 600-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த அழைப்பை விடுக்கிறார்கள்.
தேச பாகுபாட்டைத் தவிருங்கள்
11. இஸ்ரவேலர் அல்லாதவர்களுக்கு சாலொமோன் என்ன அழைப்பை விடுத்தார்?
11 கி.மு. 1026-ல் ஆலய அர்ப்பணத்தின்போது, யெகோவாவைப் புகழ்ந்து துதிப்பதற்காக எல்லா தேசத்து ஜனங்களையும் சாலொமோன் அழைத்தார். அது ஆபிரகாமுக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதியை நினைப்பூட்டுகிறது. எல்லா தேசத்து மக்களையும் யெகோவா எப்படிக் கருதுகிறார் என்பதைக் காட்டுகிறது. அவர் இருதயப்பூர்வமாக இவ்வாறு ஜெபித்தார்: “உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே. அப்படிக்கொத்த அந்நிய ஜாதியானும், உமது நாமத்தினிமித்தம் தூர தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால், உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக.”—1 இரா. 8:41-43.
12. ஏன் சிலர் யெகோவாவின் சாட்சிகளை ‘அந்நியர்களாக’ பார்க்கிறார்கள்?
12 தன்னுடைய ஊரை விட்டு வேறு ஊரில் வசிப்பவரை அல்லது வேறு ஊரிலுள்ள சமுதாயத்தினரோடு சேர்ந்து வாழ்பவரை பொதுவாக அந்நியர் என்று சொல்வார்கள். யெகோவாவின் சாட்சிகள் அந்நியர்களைப் போலவே வாழ்கிறார்கள். அவர்கள் உலகின் பல நாடுகளில் வாழ்ந்தாலும், கிறிஸ்துவால் ஆட்சி செய்யப்படும் பரலோக அரசாங்கத்திற்கே முழு ஆதரவையும் கொடுக்கிறார்கள். அதனால், சமுதாயம் அவர்களைப் பற்றி என்ன நினைத்தாலும் சரி அரசியல் விவகாரங்களில் தலையிடுவதே இல்லை.
யெகோவாவின் பார்வையில் யாருமே அந்நியர்கள் அல்ல
13. (அ) “அந்நியர்” என்பதெல்லாம் நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது என்று எப்படி சொல்லலாம்? (ஆ) சக மனிதர்கள் ஒருவரையொருவர் எவ்வாறு கருத வேண்டுமென யெகோவா நோக்கம் வைத்திருந்தார்?
13 அந்நியர்களை, குறிப்பிட்ட சில அம்சங்களை வைத்து, அதாவது மொழி, பழக்கவழக்கம், தோற்றம், உடை ஆகியவற்றை வைத்து, அடையாளம் காணலாம். ஆனால், இந்த அம்சங்களைவிட, எல்லா தேசத்து மக்களிடமும் பொதுப்படையாக இருக்கும் விஷயங்கள்தான் முக்கியமானவை. ஒருவரை அந்நியர் எனச் சொல்வதற்குக் காரணம், அவர் மற்றவர்களிடமிருந்து சில விதங்களில் வித்தியாசமாக இருப்பதால்தான். இப்படிப்பட்ட சிறிய விஷயங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாதபோது அந்நியர் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. இந்தப் பூமியில் உள்ள எல்லோரும் ஒரே அரசாங்கத்தின்கீழ் இருந்தால் அந்நியர் என்று யாருமே இருக்க மாட்டார்கள். யெகோவாவின் ஆதி நோக்கமே, மனிதர்கள் எல்லோரும் ஒரே குடும்பமாக ஒரே குடையின்கீழ், ஆம், அவருடைய ஆட்சியின்கீழ் ஒன்றாக வாழ வேண்டுமென்பதுதான். பூமியிலுள்ள எல்லா தேசத்து மக்களையும் ஒன்று சேர்க்க இப்போது ஏதாவது செய்யப்பட்டு வருகிறதா?
14, 15. யெகோவாவின் சாட்சிகள் ஒரு தொகுதியாக எதைச் சாதித்திருக்கிறார்கள்?
14 தன்னலமும் தேசப்பற்றும் நிறைந்த இந்த உலகத்தில் தேச எல்லைகளையெல்லாம் தாண்டி பாகுபாடில்லாமல் வாழ்பவர்களை பார்ப்பதே பரவசம்தான். மற்றவர்கள் மீதுள்ள தப்பெண்ணங்களை தகர்த்தெறிவது கஷ்டமே. சி.என்.என். டிவி நெட்வொர்க்கின் ஸ்தாபகர், டெட் டர்னர், வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த திறமைசாலிகளோடு வேலை செய்ததைப் பற்றி சொல்கிறார்: “அவர்களைச் சந்தித்தது ஒரு அற்புதமான அனுபவம். வேறு நாட்டிலிருந்து வந்தவர்களை ‘அந்நியர்களாக’ பார்க்காமல் ஒரே உலகில் வாழும் சக குடிமக்களாகப் பார்த்தேன். அன்று முதல் ‘அந்நியர்’ என்ற வார்த்தையைத் தகாத வார்த்தையாகக் கருத ஆரம்பித்தேன். சி.என்.என். டிவியிலோ அலுவலகத்திலோ அந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று சட்டமும் போட்டேன். அதற்குப் பதிலாக ‘பன்னாட்டவர்’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டியிருந்தது.”
15 உலகெங்குமுள்ள நாடுகளில், ஒரு தொகுதியாக யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே கடவுள் சிந்திக்கும் விதமாகச் சிந்திக்கிறார்கள். அவர் பார்க்கும் விதமாகப் பார்க்க கற்றுக்கொண்டதால், தேச பாகுபாட்டை தங்கள் மனதிலிருந்து எடுத்துப்போட்டிருக்கிறார்கள். வித்தியாசப்பட்ட பின்னணியிலிருந்து வந்தவர்கள் மீதுள்ள அவநம்பிக்கை, சந்தேகம், வெறுப்பு ஆகியவற்றைத் தவிர்த்து, அவர்களிடம் இருக்கும் வித்தியாசமான குணங்களை, தனித்தனி திறமைகளை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளால் இதை எப்படி சாதிக்க முடிந்ததென யோசித்திருக்கிறீர்களா? தனிப்பட்ட விதமாக நீங்கள் இதிலிருந்து பயனடைந்திருக்கிறீர்களா?
“அந்நியர்கள்” இல்லா உலகம்
16, 17. வெளிப்படுத்துதல் 16:16 மற்றும் தானியேல் 2:44-ன் நிறைவேற்றத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
16 கடவுளுடைய ஆட்சிக்கு எதிராக நிற்கும் இன்றைய உலக அரசாங்கங்கள் சீக்கிரத்தில் நடக்கவிருக்கும் கடைசி போரில் இயேசுவையும் அவருடைய படைவீரர்களையும் சந்திக்கும். அந்தப் போர் ‘எபிரெய மொழியில் அர்மகெதோன் என்றழைக்கப்படுகிறது.’ (வெளி. 16:14, 16; 19:11-16) கடவுளுடைய நோக்கத்திற்கு எதிராகச் செயல்படும் மனித அரசாங்கங்களுக்கு என்ன நடக்கும் என்பதை 2,500 வருடங்களுக்கு முன்பே தானியேல் தீர்க்கதரிசி கடவுளுடைய சக்தியின் உதவியால் முன்னறிவித்தார்: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானி. 2:44.
17 அது நிறைவேறும்போது எப்படியிருக்கும் என்பதை உங்களால் கற்பனைசெய்து பார்க்க முடிகிறதா? மனிதர்களை அந்நியர்கள் என வித்தியாசப்படுத்தும் தேசிய எல்லைகள் இருக்கவே இருக்காது. மனிதர்களுக்கிடையே தோற்றத்தில், உடல் அமைப்பில் இருக்கும் வித்தியாசங்கள் கடவுளுடைய விதவிதமான அற்புத படைப்பிற்கு சாட்சியாக மிளிரும். இதை நினைத்து பார்க்கையில், நம்மால் முடிந்த அளவுக்கு நம் படைப்பாளராகிய யெகோவாவை எப்போதும் துதிக்கவும் போற்றவும் ஊக்கம் பெறுகிறோம், அல்லவா?
தேசிய எல்லைகளே இல்லாத, “அந்நியர்” என்ற வார்த்தையே கேட்க முடியாத காலத்தை நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறீர்களா?
18. “அந்நியர்” என்ற கருத்து தூக்கியெறியப்பட்டதை சமீபத்தில் நடந்த என்ன மாற்றங்கள் காட்டுகின்றன?
18 மற்றவர்களை அந்நியர்களாக பார்க்காத காலம் வருமா? கண்டிப்பாக! இப்போதும்கூட யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களை அந்நியர்களாக நினைப்பதில்லை. உதாரணமாக, மேற்பார்வை வேலையை சுலபமாக்கவும், பிரசங்க வேலையை திறம்பட செய்யவும் சமீபத்தில், அவர்களுடைய சிறிய கிளை அலுவலகங்கள் பல ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றன. (மத். 24:14) உள்நாட்டு சட்டங்கள் தடையாக இல்லாதவரையில் இந்தத் தீர்மானங்கள் தேச பாகுபாடின்றி எடுக்கப்பட்டன. யெகோவாவால் நியமிக்கப்பட்ட அரசரான இயேசு கிறிஸ்து மனித தடைகளைத் தகர்த்தெறிகிறார், சீக்கிரத்தில் ‘ஜெயித்து முடிப்பார்’ என்பதற்கு இதுவும் தெளிவான அத்தாட்சி!—வெளி. 6:2.
19. சத்தியம் என்னும் சுத்தமான பாஷை எதைச் சாத்தியமாக்கியிருக்கிறது?
19 பல தேசங்களைச் சேர்ந்த, பல பாஷைகளைப் பேசுகிற யெகோவாவின் சாட்சிகள் சத்தியமென்னும் சுத்தமான பாஷையைப் பேசுகிறார்கள். இது, அவர்களிடையே முறிக்க முடியாத ஒன்றுபட்ட பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. (செப்பனியா 3:9-ஐ வாசியுங்கள்.) இந்தச் சர்வதேச குடும்பம், இந்தப் பொல்லாத உலகத்தில் வாழ்ந்தாலும் அதைவிட்டு பிரிந்து தனித்து நிற்கிறார்கள். இவர்களைப் பார்க்கும்போது, விரைவில் வரப்போகும் அந்நியர்களே இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்பதை மனத்திரையில் பார்க்க முடிகிறது. அப்போது வாழும் எல்லோரும் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட புத்தகம் சொன்ன விஷயத்தை சந்தோஷமாக ஒத்துக்கொள்வார்கள்: “மனித இனங்களை சகோதரர்கள் என்று பைபிள் அழைக்கிறது.”—மனித இனங்கள்.