வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
யோபு வாழ்ந்துவந்த அந்தக் காலப்பகுதியின் போது, அவர் மட்டுமே யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக இருந்த மனிதன் என்பதாக யோபு 1:8-லிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டுமா?
இல்லை. பின்வருமாறு சொல்லும் யோபு 1:8 அந்த முடிவுக்கு ஆதாரமளிப்பதில்லை. அது சொல்வதாவது:
“கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போலப் பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.” யோபு 2:3-ல் அதேவிதமான ஒரு கணிப்பையே கடவுள் அளித்து சாத்தானை இவ்விதமாகக் கேட்டார்: “அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின் மேல் கவனம்வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப்பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை.”
உண்மையுள்ளவரென்று கடவுள் ஏற்றுக்கொண்டிருந்த உயிருடன் இருந்த ஒரே மனிதராக யோபு இருக்கவில்லை என்பதை யோபு புத்தகம்தானே சுட்டிக்காண்பிக்கிறது. அதிகாரம் 32 முதல் நாம் எலிகூவைப் பற்றி வாசிக்கிறோம். வயதில் இளைஞனாயிருந்த போதிலும், எலிகூ யோபுவின் கண்ணோட்டத்தில் இருந்த பிழையைத் திருத்தி மெய்க்கடவுளை மகிமைப்படுத்தினான்.—யோபு 32:6–33:6, 31-33; 35:1–36:2.
இதன் காரணமாக ‘அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை,’ என்ற கடவுளின் குறிப்பு, சன்மார்க்கமான (நேர்மையான, NW) ஒரு மனிதனாக யோபு பிரபலமாக இருந்தான் என்பதைத்தான் அர்த்தப்படுத்த வேண்டும். யோபு எகிப்தில் யோசேப்பின் மரணத்துக்கும் கடவுளுடைய தீர்க்கதரிசியாக மோசேயினுடைய சேவையின் ஆரம்பத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். அந்தக் காலப்பகுதியில் பேரெண்ணிக்கையான இஸ்ரவேலர் எகிப்தில் வாசஞ்செய்தனர். அவர்கள் அனைவரும் உண்மையற்றவர்களாகவும் கடவுளுக்கு ஏற்கத்தகாதவர்களாகவும் இருந்தார்கள் என்று எண்ணுவதற்கு எந்தக் காரணமுமில்லை; ஒருவேளை யெகோவாவில் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் அநேகர் இருந்திருக்கலாம். (யாத்திராகமம் 2:1-10; எபிரெயர் 11:23) என்றபோதிலும் ஒருவருமே யோசேப்பைப் போன்று ஒரு முக்கியத்துவமுள்ள பங்கை வகிக்கவோ அல்லது அந்த வணக்கத்தார் இஸ்ரவேல் ஜனத்தை எகிப்திலிருந்து வழிநடத்திச் செல்லவிருந்த மோசேயைப் போன்று மெய் வணக்கத்தின் சம்பந்தமாக பிரபலமாகவோ இருக்கவில்லை.
ஆனால் வேறொரு இடத்தில் இருந்தபோதிலும், குறிப்பிடத்தக்க உத்தமமான ஒரு மனுஷன் இருந்தார். “ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.”—யோபு 1:1.
இதன் காரணமாக விசுவாசம் மற்றும் பக்திக்கு தெளிவாகத் தெரிகிற அல்லது நினைவில் வைக்கத்தக்க முன்மாதிரியாக யெகோவா யோபுவை குறிப்பிடக்கூடும். அதேவிதமாகவே, பைபிள் எழுத்தாளர்கள் எசேக்கியேலும் யாக்கோபும், பின்னோக்கிப் பார்த்து நீதிக்கும் பொறுமைக்கும் மாதிரியை வைப்பதாக யோபுவை தனிப்படுத்திக் காட்டினர்.—எசேக்கியேல் 14:14; யாக்கோபு 5:11.