பல பாஷைகளில் பேசுவது—பெருகிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி
“ஒரு வல்லமை என் வாயின் கட்டுப்பாட்டை ஏற்றது, சொற்கள் நீரோட்டம்போல் சரளமாக வெளிவந்தன. அது எத்தகைய மகிழ்ச்சியாயிருந்தது! மீறிய சுத்தமாயிருக்கும் ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. அதுமுதற்கொண்டு நான் ஒருபோதும் முன்னிருந்ததைப்போல் இல்லை,” என்று “தெரியாத பாஷையில்” பேசும் அசாதாரண அனுபவத்தை அடைந்த ஒருவர் உணர்ச்சிமீதூரக் கூறினார்.
“தெரியாத பாஷையில்” பேசின தன் முதல் அனுபவத்தைப் பற்றி ஒருவர் கூறின விளக்கம் இங்கே உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ‘ஆனால் அது என்ன?’ என்று சிலர் சரியாகவே கேட்கலாம். அது, ஆண்களும் பெண்களும் தங்களுக்குத் தெரியாத அன்னிய அல்லது விளங்காத மொழிகளில் பேசும்படி கடவுளுடைய ஆவியால் தூண்டப்படுகிறார்களென உரிமைபாராட்டும் சில சர்ச்சுகளிலுள்ள பழக்கத்தை அல்லது நம்பிக்கையைக் குறிப்பிடுகிறது.
இது பெருகிக்கொண்டுவரும் மத நிகழ்ச்சியாகும். பெந்தெகொஸ்து நம்பிக்கையாளருக்கு மாத்திரமே தனிப்பட்டு நேரிடும் சம்பவமாக ஒருகாலத்தில் கருதப்பட்ட, பல பாஷைகளில் பேசுவதான இது, இப்பொழுது பாப்டிஸ்ட்டுகள், எப்பிஸ்கோப்பியர்கள், லுத்தரன் சபையினர், மெத்தடிஸ்டுகள், பிரஸ்பிட்டேரியர்கள், மற்றும் ரோமன் கத்தோலிக்கர்கள் ஆகியோரை உட்படுத்துவதாய், மரபுவழியில் ஸ்தாபிக்கப்பட்ட மதப்பிரிவுகளுக்குரிய எல்லைகளைக் கடந்து சென்று மேம்படுகிறது. இந்நிலையில் இருக்கையில் ஒருவரின் நிலைமை ஆனந்த பரவசம், தன்மறதி சீற்றம், மெய்மறதி நிலை, அறிதுயில் நிலை என விவரிக்கப்பட்டுள்ளது. சிலர் இதை இழுப்புவலிப்பு அனுபவம் எனவுங்கூட அழைக்கின்றனர். பல பாஷைகளில் பேசுவதில் அல்லது தெரியாத மொழிகளில் பேசுவதில் ஒரு மருட்சியும் கவர்ச்சிகரமான முன்னுணர்ச்சியும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அதன் வளர்ச்சி அதோடு இணைந்துள்ளதா?
பல பாஷைகள் பேசுவதற்கான ஆவல் இன்று இருப்பதேன்?
ஒருவேளை “தோல்விக்குரிய ஓர் உணர்வுக்கும், ‘பல பாஷைகள்’ பேசுவதற்கான ஆவலுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்கலாம்” என ஆவியின் பல பாஷைகள் என்ற தன் புத்தகத்தில், சிரில் G. வில்லியம்ஸ் குறிப்பாகத் தெரிவிக்கிறார். பல பாஷைகள் பேசுவதை அவர் “வலித்திழுப்பைத் தளர்த்தும் ஏதுவாக நோய்நீக்கும் தன்மையுடைய” ஒரு விடுவிப்பு நுணுக்க ஏற்பாடு எனவும் “உள்ளப் போராட்டத்தை அமைதிப்படுத்தும் ஏது” எனவும் விவரிக்கிறார். சர்ச் வேலையில் மனத்தளர்வு, உணர்ச்சிவேக நெருக்கடி, வாழ்க்கைத்தொழில் முன்னேற்றத்தில் தோல்வி, மரணத்தில் ஒருவரை இழந்தநிலை, வீட்டுத் தொல்லைகள், அல்லது குடும்பத்தில் நோய் ஆகியவை அத்தகைய மெய்மறந்த நிலையில் வெளிப்படுத்தும் பேச்சுக்குக் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
இவ்வாறே, பல பாஷைகளில் பேசும் உள இயல்பு என்பதில், ஜாண் P. கில்டால் என்பவர், “பல பாஷைகளில் பேசும் திறமையைத் தோற்றுவித்து வெளிப்பட செய்வதற்குக் கவலை ஒரு முற்படு தேவையாக இருக்கிறது,” என்று சொல்லுகிறார். “பல பாஷைகள் பேசுவோரில் 85%-க்கு மேற்பட்டவர்கள் தாங்கள் பல பாஷைகள் பேசுவதற்கு முன்னால் தெளிவாக நிர்ணயிக்கப்பட்ட கவலை நெருக்கடியை அனுபவித்திருந்தனர்” என்று நேரில் ஆட்களை ஆராய்ந்து கவனமாய்ப் பேட்டிக்கண்டதன் மூலம் கண்டறியப்பட்டது. உதாரணமாக, ஒரு தாய், புற்றுநோயால் வாதிக்கப்பட்ட தன் மகனுக்காகத் தான் ஜெபிக்கும்படி, பல பாஷைகளில் பேசும்படி விரும்பினாள். ஒரு மனிதன் தனக்கு வேலை உயர்வு அளிக்கப்பட்டதை ஏற்பதா மறுப்பதாவென தீர்மானிப்பதில் தயக்கமாயிருந்த சமயத்தின்போது பல பாஷைகளில் பேசத் தொடங்கினான். ஒரு பெண் தன் கணவன் குடிப்பழக்கத்தை விடும்படி குடிகாரருக்கு உதவிசெய்யும் அமைப்பைச் சேர்ந்துகொண்ட ஒரு வாரத்துக்குள் பல பாஷைகளில் பேசத் தொடங்கினாள்.
ஒருவர் அனுபவிப்பதென்ன?
முதல் தடவையாகப் பல பாஷைகளில் பேசின மற்றொருவர் அறிவித்ததாவது: “நான் என் உடல் முழுவதும் எரியும் உணர்ச்சியையும், கடுங்குளிரையும், பெருந்துளிகளில் வியர்வையும், ஒரு நடுக்கத்தையும் என் கைகால்களில் ஒருவகையான பலவீனத்தையும் உணர்ந்தேன்.” பல பாஷைகளில் பேசும் அனுபவத்தோடு சேர்ந்து அசாதாரணமான நடத்தை அடிக்கடி உண்டாகிறது, இதைப் பலர் தொல்லை கொடுப்பதாய்க் காண்கின்றனர். உதாரணமாக, “ஒரு பெண் ஒரு நாற்காலியின் சாய்மானத்தில் அவள் கழுத்து தங்கியிருக்க, அவள் குதிங்கால்கள் தரையிலும், அவளுடைய கால்கள் விறைத்துப்போயும், நீண்டு படுக்கையில் தன் சொந்த உமிழ்நீரில் பெரும்பாலும் திணரடித்துப்போனாள்.” ஒரு சபைக் கூட்டத்தின்போது “ஒரு மனிதன் சர்ச்சின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை குட்டிக்கரணமிட்டுக்கொண்டிருந்தான்.”
பேராசிரியர் உவில்லியம் J. சாமாரின் பின்வருமாறு எழுதுகிறார்: “சில ஆட்களுக்கு, பல பாஷைகளில் பேசுவது பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்றதற்கு இன்றியமையாத்தேவையாக உள்ளது. அதில்லாமல், அவர்கள் “சிறிது பூரணமற்றவர்களாக உணரச் செய்யப்படுகின்றனர்.” அது “ஜெபத்துக்கு விடையாகவும், கடவுளுடைய அன்புக்கும் ஏற்புக்கும் ஓர் உறுதிப்பாடாகவும்” கருதப்படுகிறது. மற்றவர்கள், அது தங்களை ஓர் உள்ளான இசைவு, மகிழ்ச்சி, மற்றும் சமாதான உணர்ச்சியுடனும், “மேலும் அதிகப்பட்ட வல்லமை உணர்ச்சி”யுடனும் “மேலும் உறுதியாய் அடையாளங்கண்டுகொள்ளும் உணர்ச்சி”யுடனும் விடுகிறதென சொல்லியிருக்கின்றனர்.
மெய்மறந்த நிலையில் வெளியாகும் பேச்சு உண்மையில் பரிசுத்த ஆவி செயல்படுவதன் அத்தாட்சியாகுமா? இந்த அனுபவம் ஒருவரை உண்மையான கிறிஸ்தவராக வேறுபடுத்திக் காட்டுகிறதா? பல பாஷைகளில் பேசுவது இன்று ஏற்கத்தக்க வணக்கத்தின் பாகமாயுள்ளதா? இந்தக் கேள்விகள் மேலீடான அல்ல, ஆழமாய் ஆராய்ந்த பதிலுக்குத் தகுதியாயுள்ளன. ஏன்? ஏனெனில் நம்முடைய வணக்கம் கடவுளுடைய அங்கீகாரத்தையும் ஆசீர்வாதத்தையும் உடையதாக இருக்கும்படி நாம் விரும்புகிறோம்.