பல பாஷைகள் பேசும் வரம் உண்மையான கிறிஸ்தவத்தின் பாகமா?
“அவர் பல பாஷைகளில் ஜெபிப்பதை நான் செவிகொடுத்துக் கேட்டபோது, காற்றில் மின் அதிர்வுக்கு உள்ளாக்கும் செறிவு இருந்ததுபோல் உணர்ந்தேன்” என்று பில், தானும் மற்ற ஆறு பேரும் சர்ச் பலிபீடத்துக்கு அருகில் போதகர் முன் கூடினபின் கூறினார். அத்தகைய அனுபவங்கள் முதல்-நூற்றாண்டில் பரிசுத்த ஆவி செயல்பட்டதன்படி மறுபடியும் செயல்பட செய்கிறதா? இவை பைபிளின் மதத்தை அடையாளங்காட்டுகின்றனவா? வேத எழுத்துக்களைக் கவனமாய் ஆராய்வதன்மூலம் மனத்திருப்திதரும் பதில்களை நாம் கண்டடையலாம்.
ஆவியின் அற்புதமான வரம் ஏதாயினும் கடத்தப்படுகையில் 12 அப்போஸ்தலர்களில் ஒருவராவது அப்போஸ்தலன் பவுலாவது அங்கிருந்தனரென பைபிள் பதிவு வெளிப்படுத்துகிறது. பல பாஷைகளில் பேசினதைப்பற்றி பதிவுசெய்துள்ள மூன்று சந்தர்ப்பங்களில் முதலாவதானது, பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே அன்று எருசலேமில் கூடியிருந்த இயேசுவின் 120 சீஷர்கள் மத்தியில் நடந்தேறியது. (அப்போஸ்தலர் 2:1-4) மூன்றரை ஆண்டுகளுக்குப்பின், விருத்தசேதனஞ்செய்யப்படாத இத்தாலியரான ஒரு தொகுதி பேதுரு பிரசங்கித்ததைச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர்கள் ஆவியைப் பெற்று ‘பல பாஷைகளைப் பேசி, தேவனைப் புகழத்’ தொடங்கினர். (அப்போஸ்தலர் 10:44-48) அந்தப் பெந்தெகொஸ்தேக்கு 19 ஆண்டுகளுக்குப் பின், பெரும்பாலும் பொ.ச. 52-ல், பவுல் எபேசுவில் ஒரு கூட்டத்தினிடம் பேசி 12 சீஷர்கள்மீது தன் கைகளை வைத்தார். அவர்களும் “அந்நிய பாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.”—அப்போஸ்தலர் 19:6.
பல பாஷைகள் பேசும் வரம் ஏன் கொடுக்கப்பட்டது?
தாம் பரலோகத்துக்கு ஏறிப்போவதற்கு முன்புதானே, இயேசு தம்மைப் பின்பற்றினோருக்குப் பின்வருமாறு கூறினார்: “பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போதோ நீங்கள் வல்லமை பெற்று எருசலேமிலும் . . . பூமியின் கடைசிபரியந்தமும் என் சாட்சிகளாயிருப்பீர்கள்.” (அப்போஸ்தலர் 1:8, தி.மொ.) இவ்வாறு அவர் இந்த மாபெரும் சாட்சி வேலை எவ்வாறு நிறைவேற்றப்படும்—பரிசுத்த ஆவியின் உதவியால் நிறைவேற்றப்படும்—என்பதைக் குறிப்பாகத் தெரிவித்தாரெனக் கவனியுங்கள்.
பல மொழிகளில் பூமியெங்கும் செய்திகளை அனுப்ப நமக்கு உதவும் நவீன போக்குவரத்து தொழில் நுணுக்கத் துறை அக்காலத்தில் இருக்கவில்லை. நற்செய்தி முக்கியமாய் வாயின் வார்த்தையின்மூலமே பரவச் செய்யப்பட வேண்டியிருந்தது, இதில் அந்நிய மொழிகளில் பேசும் இந்த அற்புதமான வரம் வெகு உதவியாய் நிரூபிக்கும். பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளன்று முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எருசலேமிலிருந்த யூதருக்கும் யூத மதத்துக்கு மாறியவர்களுக்கும் பிரசங்கித்தபோது நிலைமை இவ்வாறே இருந்தது. பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், கிரேத்தரும், அரபியரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியாவின் மாகாணம் ஆகியவற்றின் குடிமக்களும், மேலும் அங்கு சஞ்சரித்த ரோமாபுரியாரும் “தேவனுடைய மகத்துவங்களைத்” தங்கள் சொந்த பாஷைகளில் கேட்டு சொல்லப்பட்டவற்றை விளங்கிக்கொண்டார்கள். மூவாயிரம் பேர் விரைவில் விசுவாசிகளானார்கள்.—அப்போஸ்தலர் 2:5-11, 41.
பல பாஷைகளில் பேசுவது, அப்போஸ்தலன் பவுல் கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்குத் தான் எழுதின நிருபத்தில் குறிப்பிட்ட, பரிசுத்த ஆவியின் ஒன்பது செயல்களில் ஒன்று மட்டுமே என்பது அடிக்கடி கவனிக்கத்தவறும் உண்மையாயிருக்கிறது. பல பாஷைகளில் பேசுவதை பெரிதல்லாத வரமாகப் பவுல் கருதினபோதிலும், கடவுளுடைய பரலோக ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியைப் பரவச் செய்வதில் அது பூர்வ சபைக்கு பயனுள்ளதாயிருந்தது. அது குழந்தைப்பருவ நிலையிலிருந்த அந்தக் கிறிஸ்தவ சபையை எண்ணிக்கையில் வளரச் செய்வதற்கும் கட்டியெழுப்புவதற்கும் உதவிசெய்த “வரங்களில்” ஒன்றாக இருந்தது.—1 கொரிந்தியர் 12:7-11; 14:24-26.
பல பாஷைகளில் பேசுவது உட்பட, முதல் நூற்றாண்டில் பரிசுத்த ஆவியின் பல்வேறு செயல்கள், கடவுள், 1,500 ஆண்டுகள் வயதாகியிருந்த அந்த இஸ்ரவேலின் சபையைத் தம்முடைய தனிப்பட்ட ஜனமாக அதற்கு மேலும் பயன்படுத்தவில்லை என்பதற்கும் ஒரு காணக்கூடிய அத்தாட்சியாயிருந்தது. சந்தேகமில்லாமல், இப்பொழுது அவருடைய அங்கீகாரம், தம்முடைய ஒரேபேறான குமாரன் ஸ்தாபித்த அந்தப் புதிய கிறிஸ்தவ சபைமீதே தங்கியிருந்தது.—எபிரெயர் 2:2-4-ஐ ஒத்துப்பாருங்கள்.
ஆவியின் இந்த வெளிக்காட்டுகள் அந்த இளம் கிறிஸ்தவ சபையை நிலைநாட்டி அதை வாலிபப் பருவத்துக்கு வளர உதவிசெய்வதற்கு மூலக் கட்டிடப் பாளங்களாக இருந்தன. இந்த அற்புத வரங்கள் தங்கள் நோக்கத்தைச் சேவித்து முடித்தப்பின் நின்றுபோம் என பவுல் விளக்கினார்: “தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம்.”—1 கொரிந்தியர் 13:8.
ஆம், பல பாஷைகள் பேசும் வரம் ஓய்ந்துபோம் என பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் எப்பொழுது? “அப்போஸ்தலர் தங்கள் கைகளை . . . வைப்பதினால்” ஆவியின் வரங்களைப் பெற்றார்களென அப்போஸ்தலர் 8:18 வெளிப்படுத்துகிறது. அவ்வாறெனில், கடைசி அப்போஸ்தலனின் மரணத்தோடு,—பல பாஷைகள் பேசுதல் உட்பட—ஆவியின் வரங்களைக் கடத்துதல் நின்றுபோம். ஆகையால், இந்த வரங்களை அப்போஸ்தலரிடமிருந்து பெற்றுக்கொண்டவர்களும் பூமிக்குரிய காட்சியிலிருந்து கடந்துவிட்டபின், இந்த அற்புத வரம் ஓய்ந்துபோகும். அதற்குள்ளாகக் கிறிஸ்தவ சபை நன்றாய் நிலைநாட்டப்பட்டதாவதற்குக் காலமிருந்திருக்கும் பல நாடுகளுக்குப் பரவியுமிருந்திருக்கும்.
“தெரியாத பாஷைகளும்” அவற்றின் பொருள்விளக்கமும்
பல பாஷைகளில் பேசுவதன் இந்நாளைய புத்தெழுச்சி, “உறுதியில்லாத ஆட்கள் தங்களிடம் கவனத்தைக் கவர்ந்திழுப்பதற்காக மட்டுக்குமீறிய முறையில் உணர்ச்சிவசப்படும் நடத்தையென சிலரால் கருதப்படுகிறது. அதேசமயத்தில் மற்றவர்கள் அதை அப்போஸ்தலரின் நாட்களில் பல பாஷைகளில் பேசின நிகழ்ச்சிக்கு ஒப்பானதெனக் கருதுகின்றனர்.” “தெரியாத பாஷைகளில்” பேசுவது நடக்கும் தற்கால சர்ச் கூட்டங்களில், அது வழக்கமாய் மெய்மறந்த மகிழ்ச்சிவெறியில் புரிந்துகொள்ளமுடியாத திடீர்கூச்சல் ஒலிகள் வெளிப்பட செய்வது உட்பட்டதாயுள்ளது. இதற்கிசைய, ஒருவர் பின்வருமாறு அறிக்கையிட்டார்: “பல பாஷைகள் பேசும் என் வரத்தை நான் பெரும்பாலும் என் சொந்த தியானத்துக்காகத் தனிமையிலிருக்கையில் பயன்படுத்துகிறேன். . . . மற்ற ஆட்கள் முன்னிலையில் நான் சிறிது சங்கட உணர்ச்சியடைகிறேன்.” மற்றொருவர் கூறினதாவது: “நான் என் சொந்த வார்த்தைகளைக் கேட்கிறேன், அவற்றை நான் புரிந்துகொள்கிறதில்லை, ஆனால் என் நாவு பேசும்படி வற்புறுத்தி உந்தப்படுவதை நான் தொடர்ந்து உணருகிறேன்.”
அத்தகைய தெரியாத பாஷைகளில் உண்மையில் பயன்மதிப்புள்ள என்ன தகவல் அளிக்கப்படுகிறது, பொருள்விளக்கத்தைப் பற்றியதென்ன? இந்தப் பேச்சின் உட்பொருளை மொழிபெயர்த்துக் கூறுவதாகப் பாராட்டுவோர் அதே விளங்காதக் கூற்றுகளுக்கு வெவ்வேறுபட்ட விளக்கங்களை அளித்திருக்கின்றனர். ஏன் வேறுபடுகின்றன? “கடவுள் ஓர் ஆளுக்கு அந்தப் பேச்சுக்குரிய ஒரு விளக்கத்தையும் மற்றொரு ஆளுக்கு மற்றொரு விளக்கத்தையும் கொடுத்தார்” என அந்த வேறுபாட்டுக்குப் போலிவிளக்கங்கூறி மழுப்புகின்றனர். ஒருவர் பின்வருமாறு ஒப்புக்கொண்டார்: “பொருள்விளக்கம் திருத்தமான வகையானதாக இல்லாத சந்தர்ப்பங்களை நான் கவனித்தேன்.” பல பாஷைகள் பேசும் வரம் என்ற தன் புத்தகத்தில் D. A. ஹேய்ஸ், ஒரு மனிதன், தெரியாத பாஷையில் பேசின ஒரு பெண்ணின் பேச்சை மொழிபெயர்த்துக்கூற மறுத்துவிட்டான் ஏனெனில் “அந்தப் பேச்சு மிக ஆபாசத்துக்கும் மேலாகப் படு ஆபாசமானதாயிருந்தது” என்ற ஓர் உதாரணத்தை எடுத்துக் குறிப்பிட்டார். அது, முதல் நூற்றாண்டில் இருந்துவந்த மற்றும் சபையை உண்மையில் கட்டியெழுப்பின பல பாஷைகளில் பேசினதற்கு எவ்வளவு முரணாக உள்ளது!—1 கொரிந்தியர் 14:4-6, 12, 18.
இன்று சிலர் அதிசயமான கருத்து விளக்கங்களைக் கேட்டதாக வாதிடுகின்றனர், மேலும் கடவுள் “நேரடியான செய்தியை ஆட்களுக்குக் கொடுக்க விரும்பு”கையில் இந்த வரத்தைப் பயன்படுத்துகிறாரென அவர்கள் ஒருவேளை உள்ளப்பூர்வமாய் நம்பலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் நமக்கு அளிக்காத கடவுளிடமிருந்துவரும் என்ன செய்தி இன்று நமக்குத் தேவை? தானும் பரிசுத்த ஆவியை வரமாகப் பெற்றிருந்த பவுல், பின்வருமாறு கூறினார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16, 17.
உண்மை என்னவெனில், கிறிஸ்தவ சபை இனிமேலும் அதன் குழந்தைப்பருவத்தில் இல்லை, இதனால் அதன் பாகத்தை உறுதிசெய்வதற்குத் தெய்வீக வெளிப்படுத்தல்கள் அல்லது ஆவியின் அற்புத வரங்கள் இனிமேலும் தேவையில்லை. பைபிள் பின்வருமாறு எச்சரிக்கிறது: “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு [“முரண்பட்ட,” தி நியு இங்லிஷ் பைபிள்] சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.”—கலாத்தியர் 1:8.
பல பாஷைகளில் அற்புதமாய்ப் பேசுதல் இனிமேலும் தேவையில்லை, மேலும் அது உண்மையான கிறிஸ்தவத்தின் பாகமென நம்புவதற்கு பைபிள்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை. பைபிள் இப்பொழுது முழுமையாகவும் எங்கும் கிடைக்கக்கூடியதாகவும் இருப்பதால், நமக்குத் தேவைப்படுபவைக் கடவுளுடைய வார்த்தையில் இருக்கின்றன. இது நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் அறிவாகிய, யெகோவாவையும் அவருடைய குமாரனையும் பற்றிய திருத்தமான அறிவை அடைய நமக்கு இடமளிக்கிறது.—யோவான் 17:3; வெளிப்படுத்துதல் 22:18, 19.
முதல் நூற்றாண்டிலுங்கூட, பூர்வ கிறிஸ்தவர்களுக்குப் பல பாஷைகள் பேசும் வரம் கொடுக்கப்பட்டதன் காரணத்தைப் பற்றிய அவர்களுடைய கருத்தைத் திருத்துவதற்கு அப்போஸ்தலன் பவுல் கொரிந்துவிலிருந்த சபைக்கு எழுதும்படி வற்புறுத்தப்பட்டார். பல பாஷைகள் பேசும் வரத்தால் சிலர் கவர்ச்சிக்குட்பட்டு, சிறு பிள்ளைகளைப்போல், ஆவிக்குரிய முதிர்ச்சியற்றோராய் நடந்துகொண்டனரெனத் தெரிகிறது. மேலும் “பல பாஷைகள்” பேசுவதன்பேரில் மட்டுக்கு மீறிய அதிக முக்கியத்துவம் இணைக்கப்பட்டது. (1 கொரிந்தியர் 14:1-39) முதல் நூற்றாண்டிலிருந்த எல்லா கிறிஸ்தவர்களும் அற்புதமாய்ப் பல பாஷைகளில் பேசவில்லையென பவுல் அறிவுறுத்தினார். அது அவர்களுடைய இரட்சிப்புக்குத் தேவையாக இருக்கவில்லை. அது இருந்து வந்த அக்காலத்திலும், பல பாஷைகளின் வரம் அற்புதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலுக்குக் கீழ்ப்பட்டதாகவே இருந்தது. பல பாஷைகளில் பேசுவது நித்திய ஜீவனையடைய கிறிஸ்தவர்களுக்குத் தேவையாக இருக்கவுமில்லை, இருக்கிறதுமில்லை.—1 கொரிந்தியர் 12:29, 30; 14:4, 5.
இன்று தெரியாத பாஷைகள் பேசுவதற்குப் பின்னாலுள்ள சக்தி
இன்று பல பாஷைகள் பேசுவோருக்குப் பின்னாலுள்ள உந்தியியக்கும் சக்தி, இந்தத் திறமையை அடையும்படி தங்கள் மந்தையின் உறுப்பினரைத் தூண்டும் காரிஸ்மாட்டிக் சர்ச் தலைவர்களேயென சிலர் நம்புகின்றனர். சிலருடைய காரியங்களில் இது மீறிய உணர்ச்சிவசப்போக்காலும் சமநிலையற்றிருப்பதாலும் கொண்டுவரப்படுகிறது. ஆவியின் பல பாஷைகள் என்பதில் சிரில் G. வில்லியம்ஸ் சொல்வதாவது, “பல சந்தர்ப்பங்களில், அந்தத் தொகுதிக்குள் உயர்ந்தோராயிருப்பதற்குரிய ஓர் அடையாள”மாகி, ஒருவருக்கு “அந்தத் தொகுதியின் பார்வையிலும் தங்கள் சொந்தக் கண்களிலுங்கூட உயர்த்தியையும் அதிகாரத்தையும்” அளிக்கிறது. ஆகையால், உள்நோக்கமானது, மிக உயர்நிலையான தெரியாத பாஷைத் தொகுதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டுமென்ற ஆவலாக இருக்கலாம்.
“பல பாஷைகள் பேசுவது உணர்ச்சியிழுப்பு அனுபவமாக, அல்லது, சிலர் சொல்வதன்படி, பேய்த்தனமான ஒன்றாக இருக்கக்கூடும்” என்று டானல்ட் P. மெரிஃபீல்ட், லாயலா பல்கலைக்கழகத் தலைவராக இருந்தபோது குறிப்பிட்டார். பாதிரியார் டாட் H. ஃபாஸ்ட் சொன்னதாவது: “பல பாஷைகள் பேசுவது கருத்து மாறுபாட்டுக்குரியது. நம்மைத் தாக்குவதற்குப் பிசாசு பல வழிகளை வைத்திருக்கிறான்.” சாத்தானும் அவனுடைய பேய்களும் ஆட்கள்மீது செல்வாக்கு செலுத்தி அவர்களுடைய பேச்சை அடக்கியாள முடியுமென பைபிள்தானே எச்சரிக்கிறது. (அப்போஸ்தலர் 16:17, 18) ஒரு மனிதனைக் கத்தவும் தரையில் விழவும் செய்வித்த ஒரு பேய்-ஆவிக்கு எதிராக இயேசு நடவடிக்கை எடுத்தார். (லூக்கா 4:33-35) ‘சாத்தான் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வான்’ என பவுல் எச்சரித்தார். (2 கொரிந்தியர் 11:14) கடவுள் இனிமேலும் தம்முடைய ஜனங்கள்மீது பொழியாத பல பாஷைகளைப் பேசும் வரத்தை இன்று நாடித்தேடுவோர், சாத்தானின் வஞ்சனைக்கு ஆளாவதற்கே தங்களை உண்மையில் உட்படுத்துகின்றனர், அவன், ‘சகல வல்லமையையும் பொய்யான அடையாளங்களையும் அற்புதங்களையும்’ பயன்படுத்துவான் என நாம் எச்சரிக்கப்படுகிறோம்.—2 தெசலோனிக்கேயர் 2:9, 10.
பல பாஷைகளும்—உண்மையான கிறிஸ்தவமும்
பல பாஷைகளைப் பேசும் வரத்தைப் பெற்ற முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அதைக் கடவுளுடைய மகத்துவங்களை விளக்கிக் கூறுவதற்குப் பயன்படுத்தினார்கள். பல பாஷைகளில் அளிக்கப்பட்ட செய்தியை, எல்லாரும் புரிந்துகொள்ளக்கூடும்படியும், பலர் பக்திவிருத்திக்கேதுவாக அறிவுறுத்தப்படுவதில் பலனடையவும் அதற்குத் தெளிவாகப் பொருள்விளக்கம் அளிக்கும்படியானத் தேவையின்பேரில் அழுத்தம் வைக்கப்பட்டது. (1 கொரிந்தியர் 14:26-33) பவுல் பின்வருமாறு அறிவுரை கூறினார்: “நீங்களுந் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசினது இன்னதென எப்படித்தெரியும்? ஆகாயத்தை நோக்கிப் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.”—1 கொரிந்தியர் 14:9, தி.மொ.
கடவுளுடைய ஆவி பல பாஷைகளைப் பேசும் வரத்தைப் பூர்வ கிறிஸ்தவர்களுக்கு அளித்தபோதிலும், விளங்கிக்கொள்ள முடியாத அல்லது மொழிபெயர்த்துக் கூறமுடியாத பிதற்றலைப் பேசும்படி அது அவர்களைச் செய்விக்கவில்லை. பவுலின் அறிவுரைக்கு இசைய, நற்செய்தி மேலும் அதிக விரைவாய் “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவரு”வதில் பலனடைந்த பேச்சைப் பரிசுத்த ஆவி அருளியது.—கொலோசெயர் 1:23.
தற்போதைய காரிய ஒழுங்குமுறையின் இந்தக் கடைசி நாட்களைக் குறித்து கிறிஸ்து பின்வருமாறு கட்டளையிட்டார்: “சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் [ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தின் நற்செய்தி] முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.” (மாற்கு 13:10) முதல் நூற்றாண்டில் இருந்ததுபோல், சகல சிருஷ்டியும் ராஜ்யத்தின் இந்தச் செய்தியைக் கேட்கவேண்டும். பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ, பெரும்பாலும் 2,000 மொழிகளில் இப்பொழுது மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் இது கூடியதாயுள்ளது. பயமில்லாமலும் தைரியமாயும் பேசும்படி பூர்வ கிறிஸ்தவர்களைத் தூண்டிச் செயல்பட செய்த அதே ஆவி இப்பொழுது யெகோவாவின் சாட்சிகளின் தற்கால சபையின் மாபெரும் மற்றும் அதிசயமான பிரசங்க வேலையை ஆதரிக்கிறது. வாயின் வார்த்தையினாலும் வேதப்பூர்வ சத்தியத்தை அச்சடித்த பக்கத்தில் கிடைக்கக்கூடியதாக்குவதற்கு நவீன அச்சடிக்கும் விஞ்ஞான நுணுக்க முறையைப் பயன்படுத்துவதாலும், அவர்கள் “சுத்தமான பாஷையைப்” பேசுகிறார்கள். இந்தச் செய்தி 200-க்கு மேற்பட்ட நாடுகளுக்கும் சமுத்திரத் தீவுகளுக்கும் சென்றுகொண்டிருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள், கடவுளுடைய மகத்துவங்களைச் சகலருக்கும் தெரிவிக்கச் செய்யும்படி கடவுளுடைய ஆவியால் தூண்டிநடத்தப்படுகிற ஜனங்களாகத் தனித்து நிற்கின்றனர்.—செப்பனியா 3:9; 2 தீமோத்தேயு 1:13.
[பக்கம் 7-ன் படங்கள்]
ஜப்பானில் வீடுவீடாகச் சாட்சிகொடுத்தல்
செனீகலில் கப்பல்கப்பலாகச் சாட்சிகொடுத்தல்
கீழே: பொலிவியாவில் பைபிள் படிப்பு நடத்துதல்
அடியில்: நெதர்லாண்ட்ஸ் கிராமப்புறத்தில் சாட்சிகொடுத்தல்