வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஒன்று கொரிந்தியர் 14:37-ல் காணப்படும் “ஆவியின் வரம்பெற்றவன்” என்ற சொற்றொடர், அபிஷேகம்செய்யப்பட்ட விதத்தில் பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒரு நபரை அர்த்தப்படுத்துகிறதா அல்லது ஆவியினால் ஓர் அற்புத வரத்தை அவர் பெற்றிருக்கிறார் என்பதை அர்த்தப்படுத்துகிறதா?
பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பில் (New World Translation of the Holy Scriptures) வசனம் இவ்வாறு வாசிக்கிறது: “யாரேனும் தன்னை தீர்க்கதரிசி என்றோ அல்லது ஆவியினால் வரம் பெற்றவன் என்றோ நினைத்தால், நான் உங்களுக்கு எழுதும் காரியங்களை ஏற்றுக்கொள்ளக்கடவன். ஏனென்றால் அவை கர்த்தருடைய கட்டளைகளாய் இருக்கின்றன.”—1 கொரிந்தியர் 14:37.
வாசகர் ஒருவர் ஒருவேளை “ஆவியின் வரம்பெற்றவன்” என்ற சொற்றொடரை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஆவியினால் பிறப்பிக்கப்பட்டு கடவுளுடைய ஆவிக்குரிய குமாரர்களாக ஆனார்கள் என்ற உண்மையோடு தொடர்புடையதாக கருதலாம். அல்லது அந்தச் சொற்றொடர் பரிசுத்த ஆவியின் விசேஷித்த வரத்தைப் பெற்ற ஒருவருக்குப் பொருந்துகிறது என்று ஒருவேளை புரிந்துகொள்ளப்படலாம். பின்னணி காண்பிக்கிறப் பிரகாரம் இந்த இரண்டாம் அர்த்தம் பெரும்பாலும் சரியாக இருக்கலாம்.
இங்கு அப்போஸ்தலன் பவுல் பினுமேட்டிக்காஸ் (pneu·ma·ti·kosʹ) என்ற கிரேக்க சொல்லைப் பயன்படுத்தினார். இது “ஆவி சம்பந்தமானதை, ஆவிக்குரியதை” அடிப்படை அர்த்தமாகக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட வடிவங்கள்தான் “ஆவிக்குரிய சரீரம்,” “ஆவிக்குரிய ஆசீர்வாதம்,” “ஆவிக்குரிய புரிந்துகொள்தல்,” “ஆவிக்குரிய வீடு” போன்ற வார்த்தைகளில் பயன்படுத்தப்படுகின்றன.—1 கொரிந்தியர் 15:44; எபேசியர் 1:3; கொலோசெயர் 1:9; 1 பேதுரு 2:5.
அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், (சரீரம், ஆசீர்வாதம், புரிந்துகொள்தல், வீடு) ‘ஆவிக்குரிய’ என்பதை விளக்கும் பொருள்களை பைபிள் நிர்ணயிக்கிறது. ஆனால் மற்ற சந்தர்ப்பங்களில், ‘ஆவிக்குரிய’ என்பதை மொழிபெயர்க்கும்போது அர்த்தமும் பொருத்தமான விளக்கமும் இடத்திற்கேற்றபடி தீர்மானிக்கப்படவேண்டும். உதாரணமாக, 1 கொரிந்தியர் 2:14, 15 மாம்சப்பிரகாரமான மனிதனுடைய மனநிலையிலிருந்து ஹோ பினுமேட்டிக்காஸ் (ho pneu·ma·ti·kosʹ) மனிதனுடைய மனநிலையை வேறுபடுத்திக் காண்பிக்கிறது, இது நியாயமாகவே “அந்த ஆவிக்குரிய மனிதனை” அர்த்தப்படுத்துகிறது.
ஒன்று கொரிந்தியர் அதிகாரங்கள் 12 முதல் 14 பரிசுத்த ஆவியின் அற்புதகரமான வரங்களுக்கு கவனம்செலுத்துகின்றன. இவற்றைக் கடவுள் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் சிலருக்குக் கொடுத்தார்; அதன்மூலம் அவர் இனிமேலும் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரைப் பயன்படுத்துவதில்லை என்றும் ஆனால் கிறிஸ்தவ ‘தேவனுடைய இஸ்ரவேலை’ இப்போது ஆசீர்வதிக்கிறார் என்பதையும் எடுத்துக்காட்டினார். (கலாத்தியர் 6:16) இப்படிப்பட்ட வரங்களைப் பற்றி பவுல் எழுதினார்: “வரங்களில் பல வகையுண்டு, ஆவியோ ஒன்றே.” (1 கொரிந்தியர் 12:4, NW) தீர்க்கதரிசனம் சொல்தல், அந்நியபாஷை பேசுதல், அந்நியபாஷை பேச்சுக்கு அர்த்தம் சொல்தல் போன்றவற்றைப் போலவே விசேஷித்த ஞானம், அறிவு, விசுவாசம் ஆகியவை ஆவியின் வரங்களாக இருந்தன.—1 கொரிந்தியர் 12:8-11.
பவுல் எழுதின கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்கள், கடவுளுடைய பரிசுத்த ஆவியினாலே அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தார்கள். பவுல் சொன்னார்: “ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.” (1 கொரிந்தியர் 6:11; 12:13) ஆம், “வரவேண்டியதாக இருந்த ஆவியின் அச்சாரத்தை” அனைவருமே பெற்றார்கள். (2 கொரிந்தியர் 5:5) ஆனாலும், பரிசுத்த ஆவியின்மூலம் விசேஷித்த வரத்தை அனைவருமே பெறவில்லை. மேலுமாக, பலர் அந்நியபாஷை பேசுவதில் கவர்ந்திழுக்கப்பட்டு, அந்த வரத்திற்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்ததுபோல் தெரிகிறது. பவுல் அவர்களின் சிந்தனைப்போக்கைச் சரிசெய்வதற்காக எழுதி, அந்நியபாஷை பேசுதல் தீர்க்கதரிசனம் சொல்வதுபோல் அநேகருக்குப் பிரயோஜனமாய் இருக்காது என்று சுட்டிக்காட்டினார். அதிகாரம் 12-ன் இறுதியில், கொரிந்தியருக்கு பவுல் இவ்வாறு ஆலோசனை கொடுத்தார்: “முக்கியமான வரங்களை நாடுங்கள்.”—1 கொரிந்தியர் 12:28-31.
பின்பு, அதிகாரம் 14-ன் ஆரம்பத்தில், அவர் இவ்வாறு உத்வேகப்படுத்தினார்: “அன்பை நாடுங்கள்; [டா பினுமேட்டிக்கா (ta pneu·ma·ti·kaʹ)]-வையும் நாடுங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.” எதை நாடவேண்டும்? அவர்கள் ஆவியில் அபிஷேகம் செய்யப்படுவதை நாடவேண்டிய தேவையில்லை, ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே அதைப் பெற்றிருந்தனர். நியாயமாகவே, பவுல் 12-ம் அதிகாரத்தின் இறுதியில் நாடும்படி தூண்டிய ஆவியின் “வரங்களை” அர்த்தப்படுத்தி இருக்கவேண்டும். எனவே, பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation of the Holy Scriptures) 1 கொரிந்தியர் 14:1-ஐ இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “ஆவிக்குரிய வரங்களை உற்சாகத்தோடே தொடர்ந்து நாடக்கடவன்.” மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகள் டா பினுமேட்டிக்கா-வை “அந்த ஆவிக்குரிய வரங்கள்” அல்லது “அந்த ஆவியின் வரங்கள்” என்று மொழிபெயர்க்கின்றன.
அந்தப் பின்னணியில், 14-ம் அதிகாரத்தின் முடிவில் பவுல் தீர்க்கதரிசனம் சொல்லுதலையும் பினுமேட்டிக்காஸ்-ஐயும் தொடர்புபடுத்திக் காண்பிக்கிறார் என்பதை நாம் கவனிக்கிறோம். வசனம் 1-ல் இருப்பதுபோலவே, சூழமைவு அவர் ஆவியினால் வரம் கொடுக்கப்படுவதை அர்த்தப்படுத்தினார் என்று தெரிவிக்கிறது. R. F. வேமத் என்பவரால் எழுதப்பட்ட தி நியூ டெஸ்டமென்ட் இன் மாடர்ன் ஸ்பீச் இந்த மொழிபெயர்த்தலை பயன்படுத்துகிறது: “ஒருவன் தான் தீர்க்கதரிசி என்று நினைத்தால் அல்லது ஆவிக்குரிய வரங்கள் உடைய ஒரு மனிதன் என்று நினைத்தால், அவன் நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கிறதை கர்த்தரின் கட்டளை என்று புரிந்துகொள்வானாக.”
ஆம், எல்லா கிறிஸ்தவர்களும், தீர்க்கதரிசன வரமானாலுஞ்சரி அல்லது ஆவியின் மற்ற எந்த வரமானாலுஞ்சரி எதை அவர்கள் பெற்றிருந்தாலும், சபையில் காரியங்கள் எப்படி நிறைவேற்றப்படவேண்டும் என்பதைப் பற்றி பவுல் எழுதின ஆலோசனையை ஏற்று, பின்பற்றவேண்டிய தேவையிருக்கிறது.