செலவைக் கணக்கிட்டுப் பார்த்துவிட்டீர்களா?
“என்ன! இத்தகைய அதிசயமான அளிப்பை நீ வேண்டாமென தள்ளிவிடுகிறாயே?” அந்த மேற்பார்வையாளர் தான் அப்போதுதான் கேட்டதை நம்பமுடியவில்லை. அவளுடைய கீழ்ப்பணியாளரான, ஒரு பெண் அவளுடைய தனித்திறமைக்காகவும் நல்நடத்தைக்காகவும் மதிக்கப்பட்டவள், அந்த வாணிக சங்கத்தின் செலவில் வெளிநாட்டுக்குச் சென்று படிக்கும்படி அவளுக்கு அளித்த அளிப்பை அப்போதுதான் மறுத்துவிட்டிருந்தாள். அவள் ஏன் அவ்வாறு செய்தாள்?
அந்தப் பெண் விளக்கினதாவது, அந்த அளிப்பை ஏற்பது, அவள் தன் கணவரிடமிருந்தும் இரண்டு பிள்ளைகளிடமிருந்தும் இரண்டு ஆண்டுகள் பிரிந்திருப்பதைக் குறிக்கும். அவள் அவர்களை நினைத்து மிகவும் வருந்துவாள். அதற்கும் அதிக முக்கியமாக, மனைவியாகவும் தாயாகவும் தனக்குக் கடவுள் கொடுத்தக் கடமைகளை செய்யத் தவறுபவளாயும் இருப்பாள். உணர்ச்சிக்குரிய மற்றும் ஆவிக்குரிய பிரகாரமான செலவு செலுத்துவதற்கு மீறிய உயர்வான விலையாயிருக்கும். இவ்வாறு, செலவைக் கணக்கிட்டுப் பார்த்தப்பின், அவள் அந்த அளிப்பை வேண்டாமென தள்ளிவிடத் தீர்மானித்தாள்.
அவளுடைய இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? இந்தக் கிறிஸ்தவப் பெண் செய்த அந்தத் தீர்மானத்தை சரியென எல்லாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது வெளிப்படையாயிருக்கிறது. அவளுடைய உடன் வேலையாளர்கள் போன்றவர்கள், அவள் தன் வாழ்க்கைப்பணியின் முன்னேற்றத்திற்கான நல்வாய்ப்பை வீணில் விட்டுவிட்டாள் என உணரலாம். மற்றவர்கள், இரண்டு ஆண்டுகள் விரைவில் சென்றுவிட்டிருக்கும், அவள் தன் குடும்பத்தின் எதிர்காலத்தைப்பற்றிச் சிந்திக்கவில்லையென அவளைக் குற்றப்படுத்தவும் கூடும். எனினும், அவளுடையது திடீர் உணர்ச்சி அல்லது உணர்ச்சிக்கனிவு காரணமான தீர்மானமல்ல. அது நேர்மைவாய்ந்த நியாயமான சிந்தனையின்பேரிலும் வருங்கால கூர்நோக்குடைய நியமங்களின்பேரிலும் அடிப்படைகொண்டிருந்தது. இவை யாவை?
பொது அறிவைப்பார்க்கிலும் அதிகம்
பூமியின்மீது நடந்த எவரையும் பார்க்கிலும் மிக அதிக ஞானமுள்ள மனிதரான இயேசு கிறிஸ்து, தம் உவமைகள் ஒன்றில் வழிநடத்தும் நியமத்தை அளித்தார். “உங்களில் கோபுரங்கட்ட விரும்பும் எந்த மனிதன் முதலாவது உட்கார்ந்து செலவைக் கணக்கிட்டு அதைக் கட்டிமுடிப்பதற்குப் போதுமான பொருள் உண்டா என்று பாராமலிருப்பான்?” என்று இயேசு கேட்டார். “அஸ்திபாரமிட்டபின் கட்டிமுடிக்க வகையற்றுப்போனால் அதைக் காண்கிறவர்கள் எல்லாரும் பரியாசஞ் செய்யத்தொடங்கி: இவன் கட்ட ஆரம்பித்தான், முடிக்கவோ வகையற்றுப் போனானென்று பேசுவார்களே,” என்றார்.—லூக்கா 14:28-30, தி.மொ.
முக்கியமான எதையும் செய்யத் தீர்மானிப்பதற்கு முன்பாகச் செலவைக் கணக்கிட்டுப் பார்ப்பது ஞானமும் நடைமுறையுமானதென எல்லாரும் ஒப்புக்கொள்வார்கள். உதாரணமாக, ஒருவர் ஒரு வீட்டை வாங்க விரும்பினால், அதன் விலையையுங்கூட கண்டுபிடிக்காமல், மேலும் அந்த விலையைச் செலுத்தித் தீர்க்கத் தனக்குப் போதிய பணவருமான திறமை உண்டாவெனவும் நிச்சயப்படுத்திக்கொள்ளாமல் அவசரப்பட்டு ஓர் ஒப்பந்தத்துக்குக் கையெழுத்திடுவானா? அத்தகைய ஒரு காரியத்தை அவன் செய்தால் நிச்சயமாகவே முட்டாளெனக் கருதப்படுவான். ஆம், ஒருவர் ஒரு பொறுப்பேற்பைத் தொடங்குவதற்கு முன்பாகச் செலவைக் கணக்கிட்டுப் பார்ப்பது நல்லறிவாகும்.
எனினும், இந்த உவமையைக்கொண்டு என்ன குறிப்பை இயேசு உண்மையில் விளக்கிக்கொண்டிருந்தார்? இந்த உவமையைக் குறிப்பிடுவதற்கு முன்பு, அவர் சொன்னதாவது: “தனக்குரிய சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்க முடியாது.” (லூக்கா 14:27, தி.மொ.) இவ்வாறு, இயேசு, நம்முடைய சாதாரணமான, அன்றாட பொறுப்பேற்புகள் சம்பந்தமாக ஏதோ நல்லறிவு ஆலோசனையைக் கொடுத்துக்கொண்டில்லையென சூழமைவு காட்டுகிறது. மாறாக, அவருடைய சீஷராவதன் சம்பந்தமாகச் செலவைக் கணக்கிட்டுப் பார்ப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.
தம்முடைய சீஷராவது மாற்றங்களையும் தியாகங்களையும் உட்படுத்துகிறதென இயேசு குறிப்பிட்டுக் காட்டினார். ஏன்? ஏனெனில் தற்போதைய காரிய ஒழுங்குமுறை பொருளின்பேரில் அழுத்தம் வைக்கிறது, தன்னல அக்கறையால் தூண்டப்படுகிறது. பெரும்பான்மையர் தங்கள் மாம்ச இச்சைகளைத் திருப்தி செய்வதிலேயே முக்கியமாய் அக்கறை கொண்டுள்ளனர், தங்கள் ஆவிக்குரிய தேவைகளுக்கு அல்லது கடவுளுடன் தங்கள் உறவுக்குச் சிறிதே கவனஞ்செலுத்துகின்றனர் அல்லது கவனம் செலுத்துவதே இல்லை. (2 தீமோத்தேயு 3:1-4) எனினும், இந்த மனப்பான்மை, அல்லது ஆவி, இயேசு கிறிஸ்து காட்டினதற்கு நேர் மாறாக உள்ளது. “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” என்று அவர் சொன்னார். அவர் பின்வருமாறு சொன்னபோது பொருள் சம்பந்த காரியங்களின்பேரில் அல்ல, ஆவிக்குரிய காரியங்களின்பேரிலேயே மிக உயர்ந்த மதிப்பை வைத்தார்: “ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது.”—மத்தேயு 20:28; யோவான் 6:63.
ஆதலால், செலவைக் கணக்கிட்டுப் பார்க்கும்படி, இயேசு தம்முடைய சீஷராக விரும்பினவர்களுக்குச் சொன்னபோது, அவர் முதன்மையாக, பொருள் விலைமதிப்புகளைப் பற்றியல்ல, ஆவிக்குரியவைகளைப் பற்றியே பேசினார். அவர்களுக்கு எது அதிக முக்கியமானது, உலகம் அளிக்க முன்வரும் பொருள் அனுகூலங்களா அல்லது சீஷராயிருக்கும் நிலை அளிக்கும் ஆவிக்குரிய நன்மைகளா? இதனிமித்தமே இந்த உவமையையும் அதோடு சம்பந்தப்பட்ட ஒன்றையும் சொன்னபின், அவர் முடிவாகப் பின்வருமாறு கூறினார்: “அப்படியே, உங்களில் தனக்கு உண்டானவைகளையெல்லாம் விட்டுவிடாத எவனும் எனக்குச் சீஷனாயிருக்க முடியாது.” (லூக்கா 14:33, தி.மொ.) அவரைப் பின்பற்றவிருப்பவன் இத்தகைய தியாகத்தைச் செய்ய மனமுள்ளவனாயும் ஆயத்தமாயும் இருப்பானா, அல்லது இது செலுத்துவதற்கு மீறிய உயர்ந்த விலையா?
சமநிலையான நோக்கு
பொருளாதாரங்கள் அதிகம் கவனிக்கத்தக்க மற்றும் உடனடியான நன்மைகளைக் கொண்டுவருபவையாகத் தோன்றினாலும், ஆவிக்குரிய ஈடுபாடுகளிலிருந்து வரும் நன்மைகள் அவற்றைப் பார்க்கிலும் மிக அதிக நிலையானவையும் திருப்தி தருபவையுமாக இருக்கின்றன. இயேசு பின்வருமாறு நியாயமெடுத்துக் காட்டினார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.” (மத்தேயு 6:19, 20) நம்முடைய காலத்தில், பணவீக்கம், சரக்கு வாணிப நலிவு, வங்கி செயலொழிவுகள், முதலியவை, பொருட்செல்வங்களில் மட்டிலுமே தங்கள் நம்பிக்கையை வைத்திருப்போர் பலருக்குப் படுவீழ்ச்சியை உண்டுபண்ணியிருக்கின்றன. எனினும் அப்போஸ்தலன் பவுல், “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்”கும்படியும், “ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” எனவும் நம்மை ஊக்கப்படுத்துகிறார். (2 கொரிந்தியர் 4:17, 18) எனினும், இத்தகைய நோக்குநிலையை நாம் எவ்வாறு வளர்க்கலாம்?
நம்முடைய மாதிரிபடிவமும் முன்மாதிரியுமாயிருப்பவரான இயேசு கிறிஸ்துவைப் பார்த்துப் பின்பற்றுவதன்மூலம் நாம் அவ்வாறு செய்ய முடியும். அவர் பூமியில் இருந்தபோது துறவியாக ஒருபோதும் இருக்கவில்லை, கலியாண விருந்துகளிலும் பெருவிருந்துகளிலும் அவர் சிலசமயங்களில் பங்குகொண்ட உண்மையிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. எனினும், ஆவிக்குரிய காரியங்களை அவர் தம்முடைய முதன்மையானவையாக வைத்தார். இன்றியமையாதவை என கருதப்படுபவற்றையுங்கூட அவர் தம்முடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகத் துறந்துவிட மனமுள்ளவராயிருந்தார். ஒருசமயம் அவர் பின்வருமாறு கூறினார்: “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை.” (லூக்கா 9:58) தம்முடைய பிதாவின் சித்தத்தைச் செய்வதை அவ்வளவு இன்றியமையாததாகவும் இன்பந்தருவதாகவும் அவர் கருதினதால் இருதயப்பூர்வமான உள்ளன்புடன் பின்வருமாறு கூறினார்: “என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்து அவருடைய வேலையை முடிப்பதே என் போஜனம்.”—யோவான் 4:34.
இயேசு சாத்தானின் சோதனைகளுக்கு இடங்கொடுக்க மறுத்த முறையால் தம்முடைய மதிப்புகளின் உணர்வை மெய்ப்பித்துக் காட்டினார். கடவுள்கொடுத்த அவருடைய வல்லமையைத் தம்முடைய நன்மைக்காக, தம்முடைய உடலின் தேவைகளைத் திருப்திசெய்வதற்கும் உலகப்பிரகாரமான கீர்த்தியையும் பொதுமக்களிடையில் மதிப்பையும் பெறுவதற்கும் பயன்படுத்தும்படி இயேசுவைச் செய்விக்க பிசாசு முயற்சி செய்தான். அத்தகைய நேர்மையற்ற நன்மைகள் மிக அதிகம் உயர்ந்த விலைக்கே—கடவுளுடைய அங்கீகாரத்தை இழப்பதன்மூலமே—கிடைக்கும். அது தாம் செலுத்த மனமுள்ளதைப் பார்க்கிலும் மிக உயர்ந்த விலை என இயேசு நன்றாய் அறிந்திருந்தார், ஏனெனில் பிதாவுடன் தமக்கிருந்த நல்ல உறவை அவர் மற்ற எல்லாவற்றிற்கும் மேலான அரும்பொருளாக மதித்துப் போற்றினார். இதனிமித்தமே அவர், சாத்தான் அளிக்க முன்வந்தவற்றை சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாக, எந்தத் தாமதமுமில்லாமல் மறுத்துத் தள்ளிவிட்டார்.—மத்தேயு 4:1-10.
கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம், நம்முடைய எஜமானருக்கிருந்த அதே மதிப்புகளின் உணர்வை உடையோராக இருக்க நிச்சயமாகவே விரும்புகிறோம். சாத்தானின் ஆதிக்கத்தின்கீழுள்ள இந்தத் தற்போதைய காரிய ஒழுங்குமுறையில், சிறந்த நன்மைகளை வாக்குக்கொடுப்பவையாகத் தோன்றும் பல காரியங்கள் இருக்கின்றன, ஆனால் அவை உண்மையில் கடவுளுடன் நம்முடைய உறவை இழக்கும்படியே செய்யக்கூடியவை. உலகப்பிரகாரமான வேலையில் தொடர்ந்து உயர் பதவிகளை நாடுதல், தன் நிலையை முன்னேற்றுவிக்க உயர் கல்வியை நாடித்தொடருதல், அவிசுவாசிகளைக் காதலித்தல், அல்லது நேர்மையற்ற வாணிபத் திட்டங்களில் ஈடுபடுதல் ஆகியவை விசுவாசத்தை இழப்பதற்கும் முடிவில் யெகோவாவின் தயவிலிருந்து வீழ்ந்துபோவதற்கும் எளிதில் வழிநடத்தக்கூடும். இத்தகைய சோதனைகளை எதிர்ப்படுகையில் நாம் கவனமாய்ச் செலவைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்.
உண்மையான ஞானம் ஒரு பாதுகாப்பு
சில ஆண்டுகளுக்கு முன்னால், தூரக் கிழக்கில் ஒரு பெரிய நகரத்தில் ஒரு கிறிஸ்தவ இளைஞனுக்குத் தன் படிப்பை இன்னும் மேம்படுத்த வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தது. அவனுக்கு ஏற்கெனவே உலகப்பிரகாரமான நல்ல கல்வியும் நல்ல சம்பளமுள்ள வேலையும் இருந்தபோதிலும், இது போதுமானதல்லவென அவன் உணர்ந்தான்; வாழ்க்கையில் தன் நிலையை இன்னும் மேம்படுத்த வேண்டுமென விரும்பினான். உடன்தோழரான கிறிஸ்தவர்கள், நாம் இப்போது சிந்தித்த வேதப்பூர்வ குறிப்புகளைக்கொண்டு அவனோடு நியாயங்காட்டிப் பேச முயற்சி செய்தனர், ஆனால் அவன் பிடிவாதமாக இருந்து தன் திட்டத்தை நிறைவேற்றினான். முதன்முதல் தன் விசுவாசத்தை விடாமலிருக்க அவன் முயற்சி செய்தபோதிலும், படிப்படியாய் பைபிள் சத்தியத்துக்குரிய தன் மதித்துணர்வை அவன் இழந்தான், சந்தேகம் தோன்றத் தொடங்கினது. ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குள்ளேயே, அவன் தன் விசுவாசத்தை முற்றிலும் இழந்து அறியொணாமைக் கொள்கையினன் என உரிமைபாராட்டினான். உலகப்பிரகாரமான முன்னேற்றக் கல்வியின்மூலம் உயர்வான பட்டத்தை அடைந்தது ஓரளவான திருப்தியை அவனுக்குக் கொண்டுவந்தது உண்மைதான். ஆனால் தற்காலிகமான மகிமைக்காக, எத்தகைய பெரும் விலையை—தன் விசுவாசக் கப்பலைச் சேதப்படுத்தி நித்திய ஜீவனை இழக்கும் தீங்குக்கு ஆளாவதை—அவன் கொடுக்க வேண்டியிருந்தது!—1 தீமோத்தேயு 1:19.
மறுபட்சத்தில், கடவுளுடன் தங்கள் உறவை இடருக்கு உட்படுத்தும் எதற்கும் இடங்கொடுக்க மறுத்துவிடுவோர் யெகோவாவிடமிருந்து மிகுந்த ஆசீர்வாதங்களை அறுவடை செய்திருக்கின்றனர்.
உதாரணமாக, மேற்குறிப்பிட்ட அதே நகரத்தில், அறையின் உட்புறத்தை அலங்கரிக்கும் தொழிலைச் சொந்தமாகக் கொண்ட ஓர் இளைஞன் இருந்தான். யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்கத் தொடங்கி சில மாதங்களுக்குப் பின்புதானே, ஆவலைத்தூண்டும் ஒரு வேலையளிப்பை—30,000 டாலர் மதிப்பான புதுப்பிக்கும் வேலையை—எதிர்ப்பட்டான். எனினும், இது சட்டவிரோதமான ஏதோ கட்டிட அமைப்பைக் கட்டுவதற்கு அந்த நகர முறைப்படியான கட்டிட சட்டங்களைக் கடைப்பிடிக்காமல் தவிர்ப்பதை உட்படுத்தும். கிறிஸ்தவர்கள் சட்டத்துக்குக் கீழ்ப்படியவேண்டுமென அவன் கற்றதால் அந்த வேலையை ஏற்பது கடவுளுடைய தயவை இழப்பதைக் குறிக்கலாமென அவன் உணர்ந்தான். (ரோமர் 13:1, 2) இந்தக் காரியத்தைக் கவனமாய்ச் சீர்தூக்கிப் பார்த்தப்பின், அந்த வேலையை வேண்டாமென மறுத்துவிட்டான். இதன் பலன்? இந்த விசுவாசச் செயல், அவனுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தில் ஒரு திரும்புகட்டமாக நிரூபித்தது. ஓர் ஆண்டுக்குள், அவன் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படும் நிலைக்கு முன்னேறினான். தன் தொழிலை விற்றுவிட்டு, ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபடுவதற்கு அதிகப்படியான நேரத்தை அனுமதித்த ஒரு வேலையை ஏற்றான். அவன் இப்பொழுது யெகோவாவை மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் சேவிக்கிறான்.
இந்த இரண்டு இளைஞரும் செலவைக் கணக்கிட்டுப் பார்த்தார்கள். அவர்களுடைய தெரிவுகளில் வேறுபாட்டை உண்டாக்கினது எது? தெய்வீக ஞானம்! எவ்வாறு? ஞானமானது அறிவைப் பொதுவாக நிலையான பயன்களைக் கொண்டுவரும் முறையில் பயன்படுத்தும் திறமையாகும், தெய்வீக ஞானம் என்பது நமக்காகக் கடவுள் கொண்டுள்ள நோக்கத்துக்கு இசைவாக அறிவைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. இந்த இரண்டு இளைஞருக்கும் ஓரளவு பைபிள் அறிவு இருந்தபோதிலும், அதை அவர்கள் பொருத்திப் பயன்படுத்தினது வெவ்வேறுபட்ட விளைவுகளுக்கு வழிநடத்தினது. நீதிமொழிகளின் புத்தகம் பின்வருமாறு கூறுகிறது: “ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி [தெளிந்துணர்வு, NW] உன்னைப் பாதுகாக்கும். அதினால் துன்மார்க்கனுடைய வழிக்கு . . . தப்புவிக்கப்படுவாய்.”—நீதிமொழிகள் 2:10-12.
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள், உண்மையான ஞானத்துக்கு ஊற்றுமூலமாகும், நீங்கள் முக்கியமான தீர்மானங்கள் செய்யவேண்டியிருக்கையில் வழிநடத்துதலுக்காக எப்பொழுதும் அதை நாடலாம். உங்கள் சொந்த கண்களில் ஞானிகளாவதைப் பார்க்கிலும், பின்வரும் அறிவுரைக்குச் செவிகொடுங்கள்: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் [யெகோவாவில், NW] நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” (நீதிமொழிகள் 3:5, 6) நாம் மனத்தாழ்மையுடனும் கற்பிக்கப்பட மனமுள்ளோராயும் இருந்து, இன்று அவ்வளவு அதிகமாய் வியாபித்துள்ள இந்த உலகத்தின் தன்பிடிகொண்ட சுதந்திர மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும்.
நாம் விதைத்ததையே அறுப்பதைத் தவிர்க்க முடியாது, மேலும் நாம் செய்யும் தீர்மானங்களும் தெரிவுகளுமானவற்றின் விளைவுகளையும் தாங்கவேண்டியது சரியும் நியாயமுமாகவே உள்ளது. (கலாத்தியர் 6:7, 8) ஆகவே எந்தப் பொறுப்பையும் ஏற்பதற்கு முன்செலவைக் கணக்கிட்டுப் பாருங்கள். அனுகூலமாகத் தோன்றும் எதுவும் உங்கள் ஆவிக்குரிய தன்மையை அல்லது யெகோவா தேவனுடன் உங்கள் உறவைக் கொள்ளைகொண்டு போக அனுமதியாதீர்கள். சரியானத் தீர்மானங்களைச் செய்வதற்கு ஞானத்துக்காகவும் நல்ல பகுத்துணர்வுக்காகவும் ஜெபியுங்கள். ஏனெனில் இப்பொழுது நீங்கள் செய்யும் தீர்மானங்கள்—நித்தியகால—உயிர் அல்லது மரணத்தைக் குறிக்கலாம்!—உபாகமம் 30:19, 20-ஐ ஒத்துப்பாருங்கள்.
[பக்கம் 28-ன் படங்கள்]
இவர் வாழ்க்கையில் உலகப்பிரகாரமான தொழிலை முதல் வைப்பாரா அல்லது ஆவிக்குரிய நடவடிக்கைகளையா?