ஆன்மீக மதிப்பீடுகளை நாடி நன்மை பெறுவீர்!
“பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப் பெருக்கினால் திருப்தியடைவதில்லை.”—பிரசங்கி 5:10.
நேரம்காலம் பார்க்காமல் இராப்பகலாய் வேலை செய்வது கடைசியில் மனஉளைச்சலில் கொண்டுபோய் விடலாம்; மனஉளைச்சலோ உடல்நல உபாதைகள் பலவற்றை உண்டாக்கலாம், சிலசமயத்தில் அது உயிருக்கே உலை வைத்துவிடலாம். பல்வேறு நாடுகளில், விவாகரத்தால் குடும்பங்கள் சின்னாபின்னமாக ஆகிவருகின்றன. சொத்து சேர்ப்பதில் குறியாக இருப்பதே பெரும்பாலும் இத்தகைய அவலங்களுக்கு காரணம். இருப்பதை வைத்து இன்பம் காண்பதற்குப் பதிலாக, பொருட்களை சேர்ப்பதில் குறியாக இருப்பவர் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டுமென சதா அவற்றையே தேடிக் கொண்டிருப்பார்; தன் உடல்நலம் பற்றியும் துளிகூட கவலைப்பட மாட்டார். சுயஉதவிப் புத்தகம் ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது: “அடுத்த வீட்டுக்காரர் என்னவெல்லாம் வைத்திருக்கிறாரோ அவற்றையெல்லாம் வாங்க வேண்டும் என்பதே இன்றைக்கு அநேகருடைய பொழுதுபோக்காக இருக்கிறது. அடுத்த வீட்டுக்காரர் சதா வேலை வேலையென்று உழைத்து கடைசியில் நாற்பத்து மூன்று வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் நிலைக்கு சென்றாலும் அவர்கள் உணருவதே இல்லை.”
வேண்டும் வேண்டுமென்ற வேட்கை கடைசியில் வெறியாக மாறி, ஒருவர் அனுபவிக்க முடிந்த எல்லா சுகத்தையும் பறித்துவிடுகிறது. இந்த மனித பலவீனத்தை வலிமைமிக்க ஒன்று சுரண்டிப் பிழைக்கிறது, அதுதான் விளம்பரம்! டெலிவிஷனை ‘ஆன்’ செய்தால் போதும், விளம்பரங்கள் வெள்ளம் போல் பெருக்கெடுத்து வருவதைக் காணலாம்; உங்களுக்கு ஒருவேளை தேவையில்லாத பொருட்களாக இருக்கலாம், ஒருவேளை அவற்றை வாங்க பணவசதியும் இல்லாதிருக்கலாம், இருந்தாலும் அவற்றையெல்லாம் வாங்கும்படி விளம்பரங்கள் உங்கள் கண்ணைப் பறித்துக் கொண்டே இருக்கின்றன. இவையனைத்தும் பெரும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
கட்டுப்படுத்தப்படாத ஆசைகள் எளிதில் இனம் கண்டுகொள்ள முடியாதவையாக இருக்கலாம், ஆனால் அவை உடல் ரீதியிலும் மனோ ரீதியிலும் நமக்கு பயங்கர பாதிப்பை உண்டாக்கலாம். உதாரணமாக, ஞானியான சாலொமோன் ராஜா இவ்வாறு கூறினார்: “மன அமைதி உடல் நலம் தரும்.” (நீதிமொழிகள் 14:30, பொது மொழிபெயர்ப்பு) ஆனால், மிதமிஞ்சி வேலை செய்வது, கவலைக் கடலில் மூழ்கிவிடுவது, செல்வத்தைக் குவிக்க வேண்டுமென்று வெறி பிடித்து அலைவது போன்றவை நமது ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் குழிதோண்டி புதைத்துவிடும். பொருள் சேர்க்க வேண்டுமென்ற குறிக்கோள்கள் நம் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும்போது உறவுகளிலும்கூட விரிசல் ஏற்பட ஆரம்பிக்கின்றன. ஒருவருடைய குடும்ப மற்றும் சமூக வாழ்க்கை சீரழிகையில், அவருடைய வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படுகிறது.
ஆன்மீக மதிப்பீடுகளின் மதிப்பு
‘இந்த உலகத்தின் போக்கின்படி செல்லாதீர்கள்’ என நூற்றாண்டுகளுக்கு முன்னரே அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கூறினார். (ரோமர் [உரோமையர்] 12:2, பொ.மொ.) இந்த உலகத்தின் மதிப்பீடுகளை, அதாவது நெறிமுறைகளை ஏற்றுக்கொள்கிற ஆட்களை இவ்வுலகம் இருகரம் கொண்டு தழுவுகிறது. (யோவான் 15:19) ஐம்புலன்களுக்கு—பார்வை, தொடுவுணர்வு, சுவையுணர்வு, முகர்வுணர்வு, செவியுணர்வு ஆகியவற்றிற்கு—கவர்ச்சியூட்டவே இந்த உலகம் முயலுகிறது; ஆம், பொருட்களை சேர்ப்பதை வாழ்க்கை பாணியாக ஏற்றுக்கொள்ளவே உங்களைத் தூண்டுகிறது. நீங்களும் மற்றவர்களும் பொருளுடைமைகளை நாடும்படி “கண்களின் இச்சை”க்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.—1 யோவான் 2:15-17.
ஆனால் பணம், புகழ், செல்வம் ஆகியவற்றைவிட மிகவும் மேம்பட்ட மதிப்பீடுகள், அதாவது நெறிமுறைகள் இருக்கின்றன. நூற்றாண்டுகளுக்கு முன்பே சாலொமோன் ராஜா இந்த உலகம் தரும் அனைத்து செல்வங்களையும் திரட்டினார். மாடமாளிகைகளைக் கட்டினார், இன்பந்தரும் தோட்டங்களை அமைத்தார், செழித்தோங்கும் பழத்தோட்டங்களை நாட்டினார், வேலைக்காரர்களையும் பாடகர் பாடகிகளையும் அமர்த்தினார்; ஆடுமாடுகள் வைத்திருந்தார், பொன்னும் வெள்ளியும் சேர்த்தார். தனக்கு முன்பு வாழ்ந்த எவரையும்விட அதிகமான செல்வங்களை சாலொமோன் குவித்தார். வெறுமனே செல்வந்தர் என்று சொன்னால் அவரை குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கும். ஆசைப்பட்டதெல்லாம் வைத்திருந்தார் என்றே சொல்லலாம். இருந்தாலும், தனது சாதனைகளைக் கண்ணோக்கிப் பார்த்து, ‘அவை யாவும் வீண், அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானது’ என்று கூறினார்.—பிரசங்கி [சபை உரையாளர்] 2:1-11, பொ.மொ.
ஆன்மீக மதிப்பீடுகளை நாடுவதிலேயே அதிக திருப்தி கிடைக்கிறது என்பதை யெகோவா தந்த மிக உயர்ந்த ஞானத்தால் சாலொமோன் உணர்ந்து கொண்டார். “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” என அவர் எழுதினார்.—பிரசங்கி 12:13.
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் உள்ள பொக்கிஷங்களே பொன்னையும் வெள்ளியையும்விட அதிக விலையேறப் பெற்றவை. (நீதிமொழிகள் 16:16) மணிக்கற்களைப் போல், நீங்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்கு ஆழமான சத்தியங்கள் அதில் பொதிந்துள்ளன. அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க நீங்கள் முயலுவீர்களா? (நீதிமொழிகள் 2:1-6) அவ்வாறு செய்யும்படி உண்மையான மதிப்பீடுகளின் ஊற்றுமூலரான நமது படைப்பாளர் உந்துவிக்கிறார், அதற்கு அவர் உதவி செய்வார். எப்படி?
யெகோவா தமது வார்த்தை, பரிசுத்த ஆவி, அமைப்பு ஆகியவற்றின் வாயிலாக சத்தியம் எனும் மணிக்கற்களைத் தருகிறார். (சங்கீதம் 1:1-3; ஏசாயா 48:17, 18; மத்தேயு 24:45-47; 1 கொரிந்தியர் 2:10) மதிப்புமிக்க இந்த அரிய செல்வங்களை ஆராய்வது மிகச் சிறந்த வாழ்க்கை முறையை, அதிக பலன்தரும் வாழ்க்கை முறையை அறிவுப்பூர்வமாக தேர்ந்தெடுக்க உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. அதை தேர்ந்தெடுப்பது கடினமல்ல, ஏனென்றால் உண்மையான மகிழ்ச்சிக்கு எது தேவை என்பதை நமது படைப்பாளரான யெகோவா அறிந்திருக்கிறார்.
மிகவுயர்ந்த மதிப்பீடுகளை பைபிள் ஊக்கப்படுத்துகிறது
பைபிளில் கிடைக்கும் சிறந்த அறிவுரைகள் நடைமுறையானவை, ஈடிணையற்றவை. அது பரிந்துரைக்கும் ஒழுக்கநெறிகள் ஒப்பற்றவை. அதிலுள்ள அறிவுரைகள் எப்பொழுதும் பயனுள்ளவை. அது காலத்தின் பரீட்சையை வென்றிருக்கிறது. கடினமாக உழைத்தல், நேர்மையாக நடத்தல், பணத்தை ஞானமாக பயன்படுத்துதல், சோம்பேறித்தனத்தை ஒழித்தல் ஆகியவை பைபிள் தரும் அறிவுரைகளுக்கு சில உதாரணங்களாகும்.—நீதிமொழிகள் 6:6-8; 20:23; 31:16.
இதற்கு இசைவாக, இயேசு இவ்வாறு கூறினார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.”—மத்தேயு 6:19, 20.
காலத்திற்கேற்ற இந்தப் புத்திமதி 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு நடைமுறையாக இருந்ததோ அதைப் போலவே இன்றும் நடைமுறையாக இருக்கிறது. செல்வத்தைத் தேடுவதிலேயே மூழ்கியிருப்பதற்குப் பதிலாக, மேம்பட்ட வாழ்க்கை முறையைத் தேடுவதன் மூலம் நாம் இப்பொழுது பயனடையலாம். இதற்கு முக்கிய வழி ஆன்மீக பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதே, இது உண்மையான மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரும். அவற்றை நாம் எவ்வாறு சேர்த்து வைக்கலாம்? கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை வாசித்து அதன் போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலமே.
ஆன்மீக மதிப்பீடுகள் பலன் தருகின்றன
ஆன்மீக மதிப்பீடுகளை தகுந்த முறையில் பயன்படுத்தும்போது அவை நமக்கு உடல் ரீதியிலும் மனோ ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் நன்மை தருகின்றன. பூமிக்கு மேலுள்ள ஓசோன் படலம் சூரியனின் தீங்கிழைக்கிற கதிர்களிலிருந்து நம்மை பாதுகாப்பது போலவே சிறந்த ஒழுக்க நெறிகள் பொருளாசையால் வரும் ஆபத்தான விளைவுகளை உணர்த்துவதன் மூலம் நம்மை பாதுகாக்கின்றன. கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9, 10.
பண ஆசை இன்னும் அதிக செல்வத்தையும் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் நாடுவதற்கு மக்களை கவர்ந்திழுக்கிறது. இந்த இலக்குகளை அடைய பெரும்பாலும் தந்திரமான வழிகளும் நேர்மையற்ற வழிகளுமே பயன்படுத்தப்படுகின்றன. பொருளுடைமைகளை நாடுவது ஒருவருடைய நேரம், சக்தி, திறமைகள் அனைத்தையும் உறிஞ்சிவிடலாம். நல்ல தூக்கத்தையும் பறித்துவிடலாம். (பிரசங்கி 5:12) வேண்டும் வேண்டுமென்ற வேட்கை ஆன்மீக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. பூமியில் வாழ்ந்தவர்களிலேயே மாபெரும் மனிதரான இயேசு கிறிஸ்து மிகச் சிறந்த வழியைத் தெளிவாக காட்டினார்; “ஆன்மீக தேவையைக் குறித்து உணர்வுடையவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்” என்றார். (மத்தேயு 5:3, NW) ஆன்மீக செல்வங்கள் நிரந்தர பலன்களைத் தரும் என்பதையும், நிலையற்ற ஐசுவரியத்தைவிட மிகவும் முக்கியமானவை என்பதையும் அவர் அறிந்திருந்தார்.—லூக்கா 12:13-31.
உண்மையிலேயே பலன் தருமா?
“ஆன்மீக மதிப்பீடுகளெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என என்னை நம்பவைக்க என்னுடைய அப்பா அம்மா ரொம்ப முயற்சி செய்தார்கள்” என கிரெக் கூறுகிறார். “இருந்தாலும், ஆன்மீக இலக்குகளை நாடியதால் எனக்கு நல்ல மனநிம்மதி கிடைத்திருக்கிறது, ஏனென்றால் செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அழுத்தத்திலிருந்து நான் விடுதலை அடைந்திருக்கிறேன்.”
ஆன்மீக மதிப்பீடுகள் நல்ல உறவுகளை உருவாக்குவதற்கும் பாலமாக இருக்கின்றன. நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அல்ல, ஆனால் எப்படிப்பட்ட நபராக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உண்மையான நண்பர்கள் உங்கள் பக்கம் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். “ஞானமுள்ளவர்களோடு தோழமை கொள்ளுங்கள், அப்போது நீங்களும் ஞானமுள்ளவராவீர்கள்” என பைபிள் பரிந்துரைக்கிறது. (நீதிமொழிகள் 13:20, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) அதோடு, நல்லதொரு குடும்பம் ஞானத்தினாலும் அன்பினாலும் கட்டப்படுகிறது, பொருளுடைமைகளால் அல்ல.—எபேசியர் 5:22–6:4.
நாம் யாருமே மதிப்புமிக்க அல்லது பயனுள்ள மதிப்பீடுகளுடன் பிறக்கவில்லை. நம்முடைய சகாக்களிடமிருந்தோ அல்லது கடவுளுடைய வார்த்தையிலிருந்தோ அவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். அதனால்தான் பொருளுடைமைகள் சம்பந்தமாக நம்முடைய முழு சிந்தையையும் பைபிள் அடிப்படையிலான கல்வியால் மாற்ற முடியும். “என்னுடைய வாழ்க்கையில் எது முக்கியம் என்பதை மறுபரிசீலனை செய்ய உதவி கிடைத்தது, அத்தியாவசியமான பொருட்களோடு திருப்தியாக வாழ கற்றுக் கொண்டேன்” என டான் என்ற முன்னாள் பேங்கர் கூறுகிறார்.
நிரந்தரமான ஆன்மீக செல்வங்களை நாடுங்கள்
ஆன்மீக மதிப்பீடுகள் குறுகிய கால திருப்தியை அல்ல, நீண்ட கால பலன்களைத் தருகின்றன. “காணப்படுகிறவைகள் [பொருளுடைமைகள்] அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ [ஆன்மீக காரியங்களோ] நித்தியமானவைகள்.” (2 கொரிந்தியர் 4:18) பொருளுடைமைகளை நாடுவது ஆசைகளை தற்காலிகமாக திருப்தி செய்யலாம் என்பது உண்மைதான், ஆனால் பேராசை நிரந்தர நன்மையைத் தராது. ஆன்மீக மதிப்பீடுகளே நித்தியமானவை.—நீதிமொழிகள் 11:4; 1 கொரிந்தியர் 6:9, 10.
இன்றைக்கு செல்வத்தின் மீதே கவனத்தை ஒருமுகப்படுத்துவது எங்கும் பிரபலமாக இருக்கிறது, ஆனால் பைபிள் இதை கண்டனம் செய்கிறது. நம்முடைய கண்களை தெளிவாக வைத்திருப்பதன் மூலம் இந்தச் சுயநல ஆசையை கட்டுப்படுத்தி, அதி முக்கியமான காரியங்கள் மீது, அதாவது ஆன்மீக செல்வங்கள் மீது எப்படி கவனத்தை ஒருமுகப்படுத்தலாம் என்பதை அது கற்பிக்கிறது. (பிலிப்பியர் 1:9) பேராசை உண்மையில் விக்கிரகாராதனையே என்பதை அது அம்பலப்படுத்துகிறது. கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வதைப் பின்பற்றும்போது நாம் அதிக சந்தோஷம் அடைகிறோம். வாங்குவதற்குப் பழக்கப்பட்ட நம் சிந்தை கொடுக்கும் சிந்தையாக மாறுகிறது. சுய திருப்தியை விட்டொழித்து அதற்குப் பதிலாக ஆன்மீக மதிப்பீடுகளை வளர்த்துக் கொள்வதற்கு இது எப்பேர்ப்பட்ட வலிமைமிக்க தூண்டுதலாயிருக்கிறது!
பணம், காசு ஓரளவு பாதுகாப்பைத் தருவது உண்மையே. (பிரசங்கி 7:12) ஆனால் பைபிள் எதார்த்தமாக இவ்வாறு கூறுகிறது: “உங்கள் பணத்திற்கு சிறகு முளைத்தது போல், கழுகு மாதிரி கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து சென்றுவிடும்.” (நீதிமொழிகள் 23:5, TEV) பொருளாசை என்ற பலிபீடத்தில் ஆரோக்கியம், குடும்பம், சுத்தமான மனசாட்சி போன்ற மிக முக்கியமானவற்றை மக்கள் இன்றைக்கு பலி செலுத்தியிருக்கிறார்கள், அதனால் மிகவும் மோசமான விளைவுகளைப் பெற்றிருக்கிறார்கள். மறுபட்சத்தில், ஆன்மீகமோ மிக முக்கியமான தேவைகளை—அன்புக்கான தேவையை, வாழ்க்கையின் நோக்கத்திற்கான தேவையை, அன்புள்ள கடவுளான யெகோவாவை வழிபடுவதற்கான தேவையை—திருப்தி செய்கிறது. பூங்காவனம் போன்ற பரதீஸ் பூமியில் பரிபூரணமாக என்றென்றும் வாழ்வதற்குரிய வழியை—கடவுள் நமக்கு தரும் நம்பிக்கையை—அது காட்டுகிறது.
வளமாக வாழ வேண்டுமென்ற மனிதனுடைய கனவு கடவுளுடைய புதிய உலகில் முழுமையாக நனவாகும், அதுவும் விரைவில் நனவாகும். (சங்கீதம் 145:16) அந்தச் சமயத்தில் இந்த முழு பூமியும் ‘யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.’ (ஏசாயா 11:9) ஆன்மீக மதிப்பீடுகள் செழித்தோங்கும். பொருளாசையும் அதன் தீய பாதிப்புகளும் முற்றிலும் ஒழிக்கப்படும். (2 பேதுரு 3:13) அப்பொழுது, வாழ்க்கையை அதிக திருப்தியுள்ளதாக்கும் காரியங்கள், அதாவது பூரண ஆரோக்கியம், திருப்தியான வேலை, ஆரோக்கியமான பொழுதுபோக்கு, கனிவான குடும்ப உறவுகள், கடவுளுடன் நீடித்த உறவு ஆகியவை மனிதகுலத்திற்கு என்றென்றும் உண்மையான மகிழ்ச்சியைத் தரும்.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
உங்களுடைய பணத்தை ஞானமாக பயன்படுத்துங்கள்!
உங்கள் தேவைகளை அறிந்துகொள்ளுங்கள். ‘எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும்’ என ஜெபிக்கும்படி இயேசு கற்பித்தார். (லூக்கா 11:3) இன்றைய விருப்பங்கள் நாளைய தேவைகளாக மாறிவிட அனுமதிக்காதீர்கள். உங்களுடைய உயிர் நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதை சார்ந்தில்லை; இதை மறந்துவிடாதீர்கள்.—லூக்கா 12:16-21.
‘பட்ஜெட்’ போடுங்கள். உணர்ச்சிவயப்பட்டு எதையும் வாங்காதீர்கள். “திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலை செய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.” (நீதிமொழிகள் 21:5, பொது மொழிபெயர்ப்பு) எந்தவொரு திட்டம் போடுவதற்கு முன்பும் அதற்கு ஆகும் செலவை கணக்குப் பார்க்கும்படி இயேசு அறிவுரை கூறினார்.—லூக்கா 14:28-30.
அநாவசியமாக கடன் வாங்குவதைத் தவிருங்கள். சாத்தியமான போதெல்லாம், எந்தவொரு பொருளையும் ‘கிரெடிட்’டில் வாங்குவதற்குப் பதிலாக பணத்தைச் சேர்த்து வைத்து வாங்குங்கள். “கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை” என நீதிமொழிகள் கூறுகிறது. (நீதிமொழிகள் 22:7) சுயக் கட்டுப்பாட்டுடன் இருப்பதன் மூலமும் உங்களுடைய வரவுக்குள் செலவு செய்வதன் மூலமும் பெரிய பெரிய பொருட்களையும் நீங்கள் சுலபமாக வாங்கலாம்.
வீணாக்குவதை தவிருங்கள். நீங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் பொருட்களை நன்றாக பராமரிப்பதன் மூலம் அவற்றை நெடுநாள் பயன்படுத்துங்கள், இவ்வாறு வீணாக்குவதைத் தவிருங்கள். இயேசு தாம் உபயோகித்தவற்றை விரயமாக்காதிருப்பதில் தகுந்த கவனம் செலுத்தினார்.—யோவான் 6:10-13.
முக்கியமானவற்றிற்கு முதலிடம் கொடுங்கள். அதிமுக்கியமான இலக்குகளை நாடுவதற்கு ஞானமுள்ள ஒருவர் ‘நேரத்தை வாங்குவார்.’—எபேசியர் 5:15, 16, NW.
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
அனுபவ பாடத்தைவிட சிறந்த வழி
சொந்த அனுபவங்கள்—அது இன்பமோ துன்பமோ—அருமையான பாடங்களை நமக்கு கற்றுத் தரலாம். ஆனால் அனுபவ பாடம் எப்போதும் சிறந்த வழிகாட்டியாக இருக்க முடியுமா? முடியாது, அதைவிட சிறந்த வழிகாட்டி ஒன்று உள்ளது. அதை அடையாளம் கண்டுகொண்ட சங்கீதக்காரன் ஜெபத்தில் இவ்வாறு சொன்னார்: ‘உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.’—சங்கீதம் 119:105.
அனுபவ பாடத்திலிருந்து கற்றுக்கொள்வதைவிட தெய்வீக போதனையிலிருந்து கற்றுக்கொள்வது ஏன் பன்மடங்கு சிறந்தது? ஒரு காரணம் என்னவென்றால், அனுபவத்திலிருந்து மட்டுமே கற்றுக்கொள்வது, அதாவது அடிபட்டு தெரிந்துகொள்வது, அதிக இழப்பையும் வேதனையையும் ஏற்படுத்தலாம். மேலும், அது அநாவசியமானதும்கூட. பூர்வ இஸ்ரவேலரிடம் கடவுள் இவ்வாறு சொன்னார்: “ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப் போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப் போலும் இருக்கும்.”—ஏசாயா 48:18.
போதனை வழங்குவதில் கடவுளுடைய வார்த்தை தலைசிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன? மனித அனுபவங்களைப் பற்றிய பழமையான பதிவுகளும் மிக மிகத் துல்லியமான பதிவுகளும் அதில் இருப்பது ஒரு காரணமாகும். மற்றவர்கள் செய்த அதே தவறை நாமும் செய்து கஷ்டப்பட்டு கற்றுக்கொள்வதைவிட அவர்களுடைய வெற்றி தோல்விகளிலிருந்து நோகாமல் கற்றுக்கொள்வதே மேல் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். (1 கொரிந்தியர் 10:6-11) அதைவிட முக்கியமானது என்னவென்றால், பைபிளிலுள்ள அருமையான சட்டங்களும் நியமங்களும் கடவுளே நமக்காக தந்தவை. அவை நம்பகமானவை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ‘கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் . . . கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.’ (சங்கீதம் 19:7) ஆகவே, நமது அன்பான படைப்பாளரின் ஞானத்திலிருந்து கற்றுக்கொள்வதே சாலச் சிறந்தது.
[பக்கம் 4-ன் படங்கள்]
பொருளாசைமிக்க அதன் வாழ்க்கை பாணியை ஏற்கும்படி இந்த உலகம் உங்களைத் தூண்டுகிறது
[பக்கம் 5-ன் படம்]
பொன்னையோ வெள்ளியையோவிட அதிக மதிப்புமிக்க பொக்கிஷத்தை பைபிளில் காணலாம்