மனமுறிவை நீங்கள் எதிர்த்துச் சமாளிக்க முடியும்!
இருபத்துமூன்று வயதான ஒருவரின் வருத்தந்தோய்ந்த நிலைமையைக் கவனியுங்கள். அவன் மட்டுப்பட்ட கல்வியே பெற்றிருந்து மிகக் குறைந்த சம்பளத்துக்கு வேலைசெய்கிறான். மணம் செய்து மனத்திருப்தியான வாழ்க்கை நடத்தும் எண்ணங்கள் அவனுக்குச் சாத்தியமில்லாதவையாகத் தோன்றுகின்றன. “அவன் மிக மீறிய துயரமும் மனமுறிவும் அடைந்திருக்கிறான்” என்று அவனுடைய தாய் சொல்வது எதிர்பார்க்கத்தக்கதே. இந்த வாலிபனின் காரியம், லட்சக்கணக்கான மற்ற ஆட்கள் இருக்கும் நிலையின் ஒரு மாதிரி எடுத்துக்காட்டேயாகும். வாழ்க்கையின் எல்லா படிநிலையிலுமுள்ள ஆட்கள், ஒன்றோ மற்றொன்றோ ஏதாயினும் காரணத்தினிமித்தம் மனமுறிவுற்றிருக்கின்றனர்.
மனமுறிவு என்பது, “விருப்பங்கள் கெடுக்கப்படுவது, மனப்போராட்டங்கள், அல்லது தீர்க்கப்படாத மற்றப் பிரச்னைகளிலிருந்து எழும்பும் நிலையற்றத்தன்மை, ஏமாற்றம், மற்றும் குறைநிறைவேற்றப்படாமையின் உள் ஆழத்திலுள்ள நீடித்த உணர்வு அல்லது நிலைமையாகும்.” உவெப்ஸ்டரின் மூன்றாவது புதிய சர்வதேச அகராதி (Webster’s Third New International Dictionary) ஏதோவொன்றை நிறைவேற்ற நாம் வெகு கடினமாக முயற்சிசெய்தும் வெற்றிகாண்கிறதில்லையெனில் மனமுறிவை அனுபவிக்கிறோம். ஒரு கற்சுவரில் நம் தலையை மோதிக்கொண்டிருப்பது போல், வெற்றிகாண்பதற்கு வாய்ப்பே இராமல் ஒவ்வொரு திருப்பத்திலும் நாம் தடுக்கப்படுவதாக உணருகிறோம். இத்தகைய உணர்ச்சியை நாம் எல்லாரும் அறிந்திருக்கிறோம்.
மனத்திருப்தி அளிக்காதவைபோல் தோன்றும் வேலைகளிலுள்ள உழைப்பாளர்கள், பயனற்றதே என்ற உணர்ச்சிகளை உடையோராக இருக்கலாம். அன்றாட கவலைகள் மற்றும் களைப்பூட்டும் கடமைகளுடன் அயராமல் பாடுபட்டுக்கொண்டிருக்கும் மனைவிமார் அல்லது தாய்மார், தங்கள் உழைப்பை ஒருவரும் கவனியாமலோ நன்றியுணராமலோ இருந்தால் நிறைவேற்றமில்லாததாக, மதித்துணரப்படாததாக உணரலாம். பள்ளியில் இக்கட்டுகளை எதிர்ப்படும் இளைஞர் கல்விபெறுவதற்கு எடுக்கும் முயற்சிகளில் மனமுறிவுற்றோராக உணரலாம். தாழ்ந்தவராகக் கருதப்படும் சிறுபான்மையரான தொகுதிகளின் உறுப்பினர், தாங்கள் அநீதியாக வேறுபடுத்தி நடத்தப்படுவதற்கு ஆளானதைக் குறித்து மன அமைதி குலைந்து வருத்தமடையலாம். நல்ல தரமான பொருட்களை அல்லது சேவைகளை அளிக்க நேர்மையுடன் முயற்சி செய்யும் வியாபாரிகளின் பணவருமானத்தை, தீமைசெய்யத் தயங்காத நேர்மையற்ற போட்டியாளர்கள் ஒருவேளை கெடுத்துப்போடலாம். இவையும் இவற்றைப்போன்ற அனுபவங்களும் மனமுறிவை உண்டுபண்ணி நம்பிக்கையற்ற உணர்ச்சிகளுடன் பலரை விடுகின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு ஞானி தன் மனமுறிவுகளை நாம் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கூற முடிந்தது. இஸ்ரவேலின் அரசன் சாலொமோன் பின்வருமாறு சொன்னார்: “என் கைகள் செய்த சகல வேலைகளையும் நான் பட்ட எல்லா பிரயாசத்தையும் பார்த்தபோதோ, இதோ, எல்லாம் மாயையே, காற்றை வேட்டையாடுவதே சூரியன்கீழ் பலன் ஒன்றுமில்லை. மனுஷன் சூரியன்கீழ் படுகிற சகல பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எத்தனங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? அவன் நாட்களெல்லாம் சஞ்சலம்; அவன் பிரயாசம் கடு வருத்தம், இரவிலும் மனதுக்கு ஓய்வில்லை; இதுவும் மாயையே.” (பிரசங்கி 2:11, 22, 23) பயனுள்ள வாழ்க்கையைக் கெடுத்துப்போடும் மனமுறிவுகளை எதிர்த்துச் சமாளிக்க முயற்சி செய்வதில் மிகப் பலர் உணரும் மனக்கசப்பை சாலொமோனின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.
மனமுறிவுற்ற ஆட்கள் முரட்டுத் துணிச்சலுள்ளோராயும் ஆகியுள்ளனர். கடுமைவாய்ந்த நிலைகளில் சிலர் போராடி நிலைநிற்பதை விட்டுவிட்டு, பொதுவழக்கமுறைக்கு மாறான ஒரு வாழ்க்கை நடைமுறையில் வாழும்படி சமுதாயத்தைவிட்டு விலகிச் செல்கின்றனர். தங்களுக்கு உரிமையுள்ளதென உணருவதை அடைவதற்கு, சிலர் குற்றச் செயல்களையும் வன்முறையையும் வகைதுறையாக மேற்கொண்டுள்ளனர். இடைவிடாத மனவேதனைகள் மண இணைப்புகளையும் குடும்ப உறவுகளையும் சீர்கேடடையச் செய்திருக்கின்றன.
மனமுறிவை எதிர்த்துச் சமாளிக்க வழிகளைத் தேடுவதில் நம்மில் பலர் பெரும் முயற்சி எடுத்திருக்கலாம். நாம் என்ன செய்தபோதிலும், காரியங்கள் மோசமாகிக்கொண்டே போவதாகத் தோன்றலாம். நீதிமொழிகள் 13:12 (தி.மொ.) பின்வருமாறு சொல்லுகிறது: “நெடுநாட் காத்திருப்பது இதயச் சோர்பு உண்டாக்கும்.” நம்முடைய மாம்சப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய நலம் ஆபத்தில் இருக்கலாம். நிலைமை நம்பிக்கையற்றதாக இருக்கிறதா? நம்முடைய குறைபாடுகளுக்கு அல்லது தவறுகளுக்குத் தண்டனையாக நாம் இடைவிடாத மனமுறிவுடன் வாழவேண்டுமா? மேலுமதிக மனத்திருப்திதரும் வாழ்க்கையை அனுபவிக்கும்படி மனமுறிவை எதிர்த்து சமாளிப்பதற்கு நடைமுறையில் பயனுள்ள படிகள் ஏதாயினும் எடுக்க முடியுமா? நாம் பார்க்கலாம்.
மனமுறிவை எதிர்த்துச் சமாளிக்க சில வழிகள்
நமக்குப் பிரச்னை ஏற்பட்டு ஆலோசனை தேவைப்பட்டால், நாம் நம்பக்கூடிய, அறிவுமிகுந்த, அனுபவமுள்ள ஒருவரிடம் பொதுவாய்ச் செல்கிறோம். நீதிமொழிகள் 3:5, 6 (தி.மொ.) பின்வருமாறு சிபாரிசு செய்கிறது: “உன் உணர்வில் சாயாதே உன் முழு நெஞ்சோடும் [இருதயத்தோடும், NW] யெகோவாவை நம்பு. உன் எல்லா வழியிலும் அவரை நினை. அப்போதவர் உன் பாதையை நேராக்குவார்.” நடைமுறையில் பயனுள்ள ஆலோசனை கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் காணலாம். அது அளிக்கும் உட்பார்வையைப்பற்றிய சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
மனமுறிவு ஒருவேளை வாழ்க்கை நடத்துவதற்குத் தேவைப்படும் சம்பாத்தியம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். உதாரணமாக, நம்முடைய உலகப்பிரகாரமான வேலை திருப்திதருவதாக இருக்கலாம், ஆனால் குறைந்த சம்பளம் மனச்சோர்வுக்குக் காரணமாக இருக்கலாம். நாம் நம்முடைய குடும்பங்களை நேசிக்கிறோம் அவர்களுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்க விரும்புகிறோம். இருப்பினும், பணமளிக்க வேண்டிய நம்முடைய பொறுப்புகளைச் சரிசெய்வதைப்பற்றிய கவலைக்கு முடிவே இல்லாததாகத் தோன்றுகிறது. நாம் ஒருவேளை மிகைநேரம் வேலைசெய்யலாம் கூடுதலாக இன்னுமொரு வேலையையும் ஏற்கலாம். சிறிது காலத்துக்குப் பின்பு வாழ்க்கை, சாப்பிடுவதும், தூங்குவதும், உழைப்பதுமான உளச்சலிப்பூட்டும் சுழற்சியாகத் தோன்றுகிறது. எனினும், பணம் செலுத்த வேண்டியதற்கான சீட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன, கடன்கள் பெருகுகின்றன, மனமுறிவு எழும்பிக்கொண்டிருக்கிறது.
உலகப்பிரகாரமான வேலையின் முக்கிய நோக்கம் நம்முடைய தேவைகளுக்கானவற்றை அளிப்பதேயாகும். ஆனால் நமக்கு எவ்வளவு தேவை? அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினார்: “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.” மற்றவர்கள் கொண்டிருக்கும் அளவுக்கு இணையாக அல்லது மற்றவர் செய்யக்கூடியவற்றைக் காட்டிலும் அதிகத்தை அடைய நாம் முயற்சி செய்கிறோமா? அவ்வாறு செய்தால் மனமுறிவு உண்டாகும் விளைவுகளை நாம் அறுவடை செய்யக்கூடும். பவுல் எச்சரித்ததாவது: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” (1 தீமோத்தேயு 6:7-10) நாம் நாடித்தேடும் பொருட்களை நேர்மையுடன் மதிப்பிட்டுப் பார்ப்பது, நமக்கு முற்றிலும் தேவைப்படாதவற்றை காணச் செய்யலாம். சிக்கனப்படுத்துவதற்கு நியாயமான சில சரிசெய்தல்களைச் செய்வதும் மேலும் மட்டுப்படுத்தப்பட்ட எளிய வழ்க்கை நடைமுறையை நடத்துவதும் மனமுறிவைக் குறைப்பதில் வெகு உதவியாயிருக்கும்.
இயல்பான ஆசைகள் நிறைவேறாமல் இருப்பது மிகுந்த மனமுறிவை உண்டுபண்ணியிருக்கின்றன. உதாரணமாக, மணம் செய்யவும் குடும்ப வாழ்க்கையோடு வரும் பாதுகாப்பையும் அன்பான பாசத்தையும் பெற்றிருக்கவும் தீவிரமான தூண்டும் அவாவை உடையவளாக இருப்பது ஓர் இளம் பெண்ணுக்கு இயல்பானதே. அவள் புதுப்பாணியான நவநாகரிக உடைகள், நகைகள் அல்லது அழகுப்பொருட்களைக் கொண்டு தன்னை மேலும் கவர்ச்சிகரமாக்க மிகுந்த நேரத்தைச் செலவிடக்கூடும், மேலும் காதலுக்கு ஏங்குகிறவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும் பத்திரிகைகளைப் பேராவலுடன் வாசிப்பவளாக ஆகக்கூடும். பொருத்தமான ஒருவரைச் சந்திக்கும் நம்பிக்கையில் அவள், ஒன்றன்பின் மற்றொன்றாகக் கூட்டுறவு பொழுதுபோக்குக் கூட்டங்கள் பலவற்றிற்கு விடாமல் சென்றுகொண்டிருக்கக்கூடும்—எல்லாம் பயனற்றுப்போகலாம். ஆண்டுகள் சென்றுகொண்டிருக்கின்றன, அந்த மனமுறிவு தாங்கக்கூடாததாகிறது. நம்பிக்கையற்றுத் துணிந்த நிலையில் பொருத்தமற்ற ஒருவரை மணம் செய்துகொள்ளும்படியான தூண்டுதல் அவளுக்கு உண்டாகலாம். இன்னும் மோசமாக, பாசத்துக்காக ஏங்கும் தன் நீடித்த ஆசையைத் திருப்திசெய்துகொள்ள, அவள் ஒழுக்கக்கேடான நடத்தைக்கு உட்படக்கூடும்.
மணம் செய்ய ஆவல்கொள்ளும் பெண்ணின் இத்தகைய காரியத்தில், பொறுமையும் நல்ல பகுத்துணர்வும் இன்றியமையாதவை. பொருத்தமற்ற ஆளை—முக்கியமாய் யெகோவாவில் விசுவாசமில்லாத ஒருவரை—மணஞ்செய்வது வினைமையானத் தவறாயிருக்கும். (1 கொரிந்தியர் 7:39; 2 கொரிந்தியர் 6:14, 15) ஒழுக்கக்கேடான நடத்தை மனவேதனைக்கும் கடும் துயரத்துக்குமே தவிர்க்கமுடியாதபடி வழிநடத்துகிறது. (நீதிமொழிகள் 6:32, 33) தன்னைத்தானே நேர்மையான மனதுடன் ஆராய்ந்து பார்ப்பதும், அதோடு காரியத்தை நல்லறிவுள்ள முறையில் கையாளுவதும் உதவிசெய்யலாம். நவநாகரிக உடைகளையோ அசாதரணமான சிங்காரிப்புப் பொருட்களையோ பார்க்கிலும் மிக மேலாக, “சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி” சரியான வகையான மணத் துணையைக் கவரக்கூடும். (1 பேதுரு 3:3, 4) உலகப்பிரகாரமான சிறப்பறிவாளர்களின் பெரும்பாலும் முன்னறிவுதிறமற்ற அல்லது அற்பத்தனமான ஆலோசனையை நம்பி சார்ந்திருப்பதற்குப் பதிலாக, நெஞ்சார நேசித்து மதிப்புக் கொடுக்கப்படுகிற மனைவியாக இருப்பதற்குத் தேவைப்படுவதை அறிந்துகொள்ள திருமணத்தைத் தொடங்கிவைத்தவரிடம் செல்வது இன்றியமையாதது. (நீதிமொழிகள், 31-ம் அதிகாரம்) மணம்செய்யாத ஆண்களும் பெண்களும் ஒரு மணத்துணைவரில் இருக்கும்படி தாங்கள் விரும்பும் பண்புகளைத் தங்களில் வெளிப்படுத்திக் காட்ட முயற்சி செய்ய வேண்டும். பைபிள் நியமங்களை மதிக்கும் ஆட்களுடன் நலந்தரும் கூட்டுறவை நாடித்தேடுவது எவ்வளவு ஞானமாக இருக்கிறது. இவற்றை நாம் வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்தினால், சந்தோஷமான மணவாழ்க்கைக்கான நம் எதிர்பார்ப்புகள் வரம்பற்ற முறையில் மேம்பட்டதாயிருக்கும். உடனடியாகத் திருமணம் ஏற்படாவிடினும், வேதவார்த்தைகளுக்கு ஒத்திசைந்து நடப்பது மகிழ்ச்சியைக் கொண்டுவந்து ஒற்றையாய் வாழும் வாழ்க்கையை மிக பலனுள்ளதாக்கும்.
கடமைப்பொறுப்புகளின் கனத்த சுமை எரிச்சலடையும் நிலைக்கு நம்மைக் கொண்டுவரக்கூடும். எல்லா பக்கங்களிலிருந்தும் நெருக்கடி ஏற்படலாம். நம்முடைய குடும்பத்தின் அவசரமானத் தேவைகளைப்பற்றி நாம் கவலையுற்றிருக்கிறோம், நம்மை வேலைக்கு வைத்திருக்கும் எஜமானர் ஒருபோதும் திருப்தியடையாதவராக இருக்கலாம். நெருக்கடியுண்டாகும் ஒவ்வொரு சமயத்திலும் உறவினர்கள் தங்களுக்கு உதவிதரும்படி நம்மை எதிர்பார்க்கலாம். பல நெருக்கடிகளின் காரணமாக, கவனிக்காது விடப்பட்ட நம் சொந்தக் காரியங்களின் நீண்ட ஜாபிதா நம் கவனத்தைக் கேட்கிறது. நம்முடைய நேரமும் சக்திகளும், எல்லாம் ஒரேசமயத்தில் பன்னிரண்டு திக்குகளில் செலுத்தப்பட வேண்டியிருப்பதாகத் தோன்றலாம். மனமுறிவு எரிச்சலடைவதில் திரும்பலாம், தாங்கமுடியாமல், விட்டுவிலகிக்கொள்ளும்படி நாம் உணரலாம். ஆகவே, நாம் என்ன செய்ய வேண்டும்?
நமக்கு முதல்நிலையில் முக்கியமாக இருப்பவை எவையென திரும்ப மதிப்பிடுவது ஞானமாயிருக்கும். நாம் செய்யக்கூடியதற்கு ஒரு வரையறை இருப்பதால், மற்றவர்கள் கேட்கும் ஒவ்வொன்றுக்கும் இணங்குவது சாத்தியமல்ல. காரியங்களை நாம் ‘மிக முக்கியமானவற்றிற்குக்’ குறுக்கிக் கொள்ள வேண்டும். (பிலிப்பியர் 1:10, NW; 1:9, தமிழ் UV) “செத்த சிங்கத்திலும் உயிருள்ள நாயே சிறந்தது.” (பிரசங்கி 9:4, தி.மொ.) சில கடமைகள் இன்றியமையாத அவசரநிலையில் இருப்பவை, அவற்றை ஒதுக்கி வைக்க முடியாது, ஆனால் அவசரம் குறைந்த நிலையில் இருப்பவற்றைக் காத்திருக்க வைக்கலாம். மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய சில கடமைகளுக்கு நாம் முழு பொறுப்பையும் ஒருவேளை ஏற்றிருக்கக்கூடும். சில பொறுப்புகளை, அவை அவசியமாக இராவிடில் முழுமையாய் அகற்றிவிட வேண்டியிருக்கலாம். தொடக்கத்தில் இது ஒருவேளை தொந்தரவை உண்டுபண்ணலாம் அல்லது மற்றவர்களுக்கு மனக்கசப்பூட்டலாமென்றாலும், நாம் நம்முடைய சொந்த மாம்ச மற்றும் உணர்ச்சி சார்ந்த வரையறைகளை மதிக்க வேண்டும்.
பலவீனப்படுத்தும் ஒரு நோய் கடுவேதனைதரும் மனமுறிவைக் கொண்டு வரக்கூடும், ஏனெனில் அது ஒரேசமயத்தில் பல நாட்கள் அல்லது வாரங்கள் நோயுற்று படுக்கையில் கிடக்கும்படி செய்யக்கூடும். கடும் வேதனை நம்மை துயருரச் செய்யலாம். நோய்நீங்க மருத்துவ கவனிப்பை நாடி, நாம் ஒரு மருத்துவரிலிருந்து மற்றொருவரிடமாக மாறிமாறிச் சென்று கொண்டிருக்கக்கூடும் அல்லது ஏதாவது நன்மைசெய்யக்கூடுமென்ற நம்பிக்கையுடன் பல மருந்துகளை அல்லது வைட்டமின்களை சாப்பிடக்கூடும். எனினும், நாம் தொடர்ந்து அவதிப்பட்டுக்கொண்டிருந்து, இந்தப் போராட்டத்துக்கு வாழ்க்கை தகுந்ததாவென மனச்சங்கடப்படலாம்.
இது கடவுளுடைய புதிய உலகத்தில் மாத்திரமே தீர்க்கக்கூடிய ஒரு பிரச்னையாக ஒருவேளை இருக்கலாம். (2 பேதுரு 3:13; ஏசாயா 33:24-ஐ ஒத்துப்பாருங்கள்.) மனிதர் அபூரணராக இருப்பதால், மருத்துவர்களும் மருந்துகளும் ஓரளவு மாத்திரமே செய்ய முடியும். ஏதோவொரு நிலையில் நாம் நம்முடைய துன்பத்தை வாழ்க்கையின் ஒரு பாகமாக ஏற்கவேண்டியதாக இருக்கலாம். அப்போஸ்தலன் பவுல் “மாம்சத்தில் ஒரு முள்”ளை, ஒருவேளை தன் கண்களில் அல்லது உடலின் மற்றொரு பாகத்தில் ஒரு வேதனையைக் கொண்டிருந்தார், அது அவ்வளவு தொல்லை தந்ததால் அதை நீக்கும்படி கேட்டு அவர் திரும்பத்திரும்ப ஜெபித்தார். (2 கொரிந்தியர் 12:7-10, தி.மொ.) ஆனால் கடவுள் பவுலைச் சுகப்படுத்தவில்லை, ஒருவேளை இந்த அப்போஸ்தலன் தன் மரணம் வரையில் அந்த வேதனையோடு போராட வேண்டியிருந்திருக்கலாம். அவர் தன் பாடுகளோடு வாழ்ந்தார், இரக்கத்துக்காகக் கேட்கவில்லை, மேலும் தன் மகிழ்ச்சியை ஒருபோதும் இழக்கவில்லை. (2 கொரிந்தியர் 7:4) நேர்மையான மனிதனாகிய யோபு மிகுந்த துன்பத்தை அனுபவித்தபோதிலும், யெகோவாவில் வைத்திருந்த தன் விசுவாசத்தைக் காத்துக்கொண்டார், இது நிறைவான பலன்பெறும்படி அவரை வழிநடத்திற்று. (யோபு 42:12, 13) நாம் கடவுளின் ஊழியர்களாக இருந்தால், இந்த முன்மாதிரிகளை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து யெகோவாவின் உதவிக்காக ஜெபிப்பதன்மூலம் தொடர்ந்து சகித்திருப்பதற்கு பலத்தைக் கண்டடையலாம்.—சங்கீதம் 41:1-3.
மனமுறிவுகள் இருந்தும் பலமாயிருத்தல்
எத்தகைய மனமுறிவுகள் இருப்பினும் யெகோவாவின் ஜனங்கள் ஆவிக்குரியபிரகாரமாய் பலமுள்ளோராய் இருக்க முடியும். உதாரணமாக, நாம் நோயைச் சகிக்க வேண்டியிருந்தாலும், கடவுளுடைய ஆவிக்குரிய ஏற்பாடுகளை முழுமையாய்ப் பயன்படுத்திக்கொள்வதால் “விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவர்களாக” நிலைத்திருக்கலாம். (தீத்து 2:1, 2) மனமுறிவுண்டாக்கும் வகையில் நாம் பொருளாதாரத்தில் ஏழைகளாக இருந்தாலும், ஆவிக்குரிய பிரகாரம் நாம் அதிசயமான முறையில் செல்வந்தராக இருக்க முடியும்.
ஞானத்தையும் பலத்தையும் கடவுள் கொடுப்பாரென நம்பிக்கை வைத்திருப்பதால், குடும்ப சூழ்நிலைமைகளில் ஏற்படக்கூடிய மனமுறிவுகளை நாம் எதிர்த்துச் சமாளிக்க முடியும். உதாரணமாக, நாபாலின் மனைவி, அபிகாயிலைக் கவனியுங்கள். அவன் தன் பழக்க நடவடிக்கைகளில் ‘முரடனும், கேடுகெட்டவனுமாக’ இருந்தான், அவனுடைய பெயரோ “பகுத்தறிவற்றவன், முட்டாள்” என பொருள்படுகிறது. அத்தகைய மனிதனோடு வாழ்வது எவ்வளவு மனமுறிவு தருவதாக இருந்திருக்கும்! எனினும், அபிகாயில் “விவேகத்தில் மேம்பட்டவளாக” இருந்தாள், மனக்கசப்படையவில்லை. நிச்சயமாகவே, தீர்வுகட்ட நிலையிலிருந்த சமயத்தின்போது அவளுடைய வார்த்தைகளும் செயல்களும் அவ்வளவு விவேகமானவையாக இருந்ததால், தாவீது, யெகோவாவில் நம்பிக்கை வைக்கத் தவறி, நாபாலின் நிந்தைகளையும் நன்றிக்கேட்டையும் இரத்தஞ்சிந்துதலால் பழித்தீர்க்காதபடி, அவன் மனதை உறுத்தி தடுத்து வைத்தாள்.—1 சாமுவேல் 25:2-38, NW.
கிறிஸ்தவ சபையிலுள்ள ஒருவர் உட்பட்ட பிரச்னை நமக்கு மனமுறிவை உண்டுபண்ணிக் கொண்டிருந்தாலுங்கூட, யெகோவா அருளும் பலத்தில் நாம் சகிக்க முடியும். இது, மனமுறிவை உண்டாக்கக்கூடியதாயிருந்த தியோத்திரேப்புவின் நடத்தை, தேவபக்தியுள்ள காயுவை, நன்மைசெய்து அவ்வாறு சந்தோஷத்தையும் ஆவிக்குரிய நிறைவான பலன்களையும் அடைவதிலிருந்து நிறுத்திவைக்கவில்லை என்ற அனுபவத்தால் காட்டப்படுகிறது.—அப்போஸ்தலர் 20:35; 3 யோவான் 1-10.
சபையிலுள்ள நம் உடன் விசுவாசிகளுக்குச் சேவை செய்ய நாம் விரும்புகிறோம், ஆனால் மற்றவர்கள் மூப்பர்களாக அல்லது உதவி ஊழியர்களாக நியமிக்கப்படுகையில் நாம் கவனிக்கப்படாமல் விடப்பட்டால் மனமுறிவு ஏற்படலாம். ஏமாற்றம் நம் மன அமைதியைக் கெடுக்க அனுமதிப்பதைப் பார்க்கிலும், நாம் நம்மை ஆவிக்குரிய பிரகாரம் பலப்படுத்திக்கொள்ளவும் கடவுளுடைய ஆவி அதன் நல்ல கனிகளை நம்மில் மேலுமதிகமான அளவில் பெருகச் செய்யவும் விட நாடித்தேடுவோம். (கலாத்தியர் 5:22, 23) மீதியானில் மோசே செலவிட்ட 40 ஆண்டுகளின்போது, பின்னால் இஸ்ரவேலை வழிநடத்துபவராக அவர் எதிர்ப்படவிருந்த இன்னல்களையும் மனமுறிவுகளையும் எதிர்த்துச் சமாளிப்பதற்குத் தேவைப்பட்ட சாந்தம், பொறுமை, இன்னும் மற்ற பண்புகளை மேலும் உயர்ந்த அளவுக்குக் கடவுள் அவரில் பெருகச் செய்தார். அவ்வாறே, நாம் ஆவிக்குரியப்பிரகாரம் பலமாயும் மனமுறிவுக்கு விட்டுக்கொடாமலும் இருந்தால், எதிர்காலத்தில் நாம் பெறவிருக்கும் ஊழிய சிலாக்கியங்களுக்காக யெகோவா நம்மை ஆயத்தஞ் செய்துகொண்டிருக்கலாம்.
மனமுறிவிலிருந்து விடுதலை—சீக்கிரத்தில்!
நம்முடைய மனமுறிவுகளின் இயல்பு என்னவாயிருந்தாலும் அவை என்றாவது முடிவடையுமா? நமக்கு, நம்முடைய நிலைமை நம்பிக்கையற்றதாகத் தோன்றலாம் ஆனால் நம்முடைய சிருஷ்டிகர், யெகோவா தேவனுக்கு அவ்வாறில்லை. அவர் மனமுறிவுக்கு ஆளாவதில்லை. தீர்க்கதரிசி ஏசாயாவின் மூலம், கடவுள் பின்வருமாறு சொன்னார்: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” (ஏசாயா 55:11) யெகோவாவுக்குச் சர்வ வல்லமையும் அதிகாரமும் இருப்பதால், எதுவும் அவருக்குக் கூடாததாக இல்லை. (மாற்கு 10:27) தம்முடைய ஜனங்களுக்கு முடிவற்ற ஆசீர்வாதங்களைக் கொண்டுரப்போவதாகக் கூறின அவருடைய வாக்குத்தத்தங்கள் நிச்சயமாக நிறைவேறும்.—யோசுவா 21:45.
சந்தேகமும் நிச்சயமில்லாமையும் மனமுறிவில் பெரிய அம்சங்களாக இருக்கின்றன. எனினும், எதிர்மாறாக, “விசுவாசம் நம்பப்படும் காரியங்களின் நிச்சயிக்கப்பட்ட எதிர்பார்ப்பு” ஆகும். (எபிரெயர் 11:1, NW) கடவுளில் விசுவாசம் வைப்பது, பைபிளில் ஆதாரங்கொண்ட நம் நம்பிக்கைகள் யாவும் முழுமையாக நிறைவேறும் என்ற உறுதியளிக்கிறது. பைபிள் முழுவதின் பொதுவான பொருள், ராஜ்ய ஆட்சியைப்பற்றிய யெகோவாவின் வாக்கை முக்கியப்படுத்திக் காட்டுகிறது, அதன்கீழ் இந்தப் பூமி ஒரு பரிபூரண பரதீஸாகும், அதில் நீதிமான்கள் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். (சங்கீதம் 37:11, 29) தீமையான எல்லாம்—மனமுறிவு உட்பட—ஒழிந்துபோம், எப்படியெனில் கடவுள் ‘உயிருள்ள ஒவ்வொன்றின் வாஞ்சையையும் திருப்தியாக்குவார்.’—சங்கீதம் 145:16.
அந்த ஆசீர்வாதங்கள் மெய்யாக நிறைவேறும் வரையில், நாம் எல்லாரும் மனமுறிவுக்குரிய நம்முடைய பங்கை உடையோராக இருப்போம். ஆனால் வேதப்பூர்வ நம்பிக்கை விடாமுயற்சியுடன் முன்னேற தைரியத்தையும் மனவுரத்தையும் நமக்குக் கொடுக்க முடியும். பைபிளில் நாம் காணும் நேர்மைவாய்ந்த அறிவுரை, நம்முடைய வாழ்க்கைக்குத் திடநிலையையும் நம்முடைய இருதயத்துக்கு சமாதானத்தையும் கொண்டுவரும் வகையில் நல்ல பகுத்துணர்வையும் நியாயமானத் தன்மையையும் பயன்படுத்துவது எவ்வாறென நமக்குக் காட்ட முடியும். நம்முடைய சங்கட ஏமாற்ற நிலைகளின் மத்தியிலும், “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை” நாம் அனுபவிக்க முடியும். (பிலிப்பியர் 4:6, 7) ஆகவே மனமுறிவுக்கு எதிராகச் செய்யும் போராட்டம் நம்பிக்கையற்றதாக இல்லை. யெகோவாவின் உதவியுடன் நாம் தற்போது அதை எதிர்த்துச் சமாளித்து எதிர்காலத்தில் அதை வெல்ல முடியும்.
[பக்கம் 31-ன் சிறு குறிப்பு]
கடவுள், யோபுக்கும், மோசேக்கும், அபிகாயிலுக்கும், பவுலுக்கும் உதவிசெய்ததைப்போலவே, மனமுறிவை எதிர்த்துச் சமாளிக்க அவர் உங்களுக்கும் உதவி செய்ய முடியும்