மனக்கசப்புற்ற நிலையில் நம்பிக்கையைக் கண்டடைவது எப்படி
பின்வரும் அனுபவங்களில் உங்களை கற்பனைசெய்து பாருங்கள்: உங்கள் பொருளுடைமைகள் எல்லாம் அழிக்கப்பட்டு, நீங்கள் கைவிடப்பட்டவராக இருக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகள்—உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியாக இருந்தவர்கள்—இறந்துபோய்விட்டனர். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்குத் தைரியமூட்டும் எந்த ஆதரவையும் அளிக்கிறதில்லை. உங்கள் உடல்நலம் உண்மையிலேயே தளர்ந்துபோய்விட்டது. ஒவ்வொரு நாளும் மனவேதனைக்குரியதாக உள்ளது.
இந்தச் சூழ்நிலையே உங்கள் வாழ்க்கையை ஆட்கொண்டுவிட்டால், தொடர்ந்து வாழ்வதற்கானக் காரணத்தை நீங்கள் காண முடியுமா? அல்லது மனக்கசப்பில் ஆழ்ந்துவிடுவீர்களா?
இப்போது விவரித்த விசனகரமான நெருக்கடிநிலை, பைபிள் காலங்களில் வாழ்ந்த ஒரு மனிதராகிய யோபினுடைய மெய்யான வாழ்க்கை அனுபவமாக இருந்தது. (யோபு, அதிகாரங்கள் 1, 2) மிக ஆழ்ந்த மனக்கசப்புற்ற நிலையில், யோபு: “என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது” என்று புலம்பினார். துயர்த்தீர்ப்புக்கு பரிகாரமாக மரணத்தை அவர் ஆவலோடு வரவேற்றியிருப்பார். (யோபு 10:1; 14:13) எனினும், கொடிய துன்ப நிலையிலும், யோபு, கடவுளிடமாகத் தன் உத்தமத்தைக் காத்துவந்தார். ஆகையால், யெகோவா, “யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்.” இவ்வாறு அவர் ‘நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவராய்’ சமாதானமாக இறந்தார்.’—யோபு 42:12, 17.
சகிப்புத்தன்மையில் ஒரு முன்மாதிரியை யோபு வைத்தார்; அது இந்நாள்வரையில் பாராட்டப்படுகிறது. அவருடைய இக்கட்டுகள் அவருடைய பண்பியல்பை மேம்படுத்தி, மற்றவர்களை நற்கிரியைகளுக்குத் தூண்டி ஊக்குவித்தன. (யாக்கோபு 5:10, 11) எல்லாவற்றிலும் மிக முக்கியமாக, யோபின் பழுதற்ற உத்தமம் யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்தினது. (நீதிமொழிகள் 27:11) இவ்வாறு, கடும் துயரார்ந்த வேதனை, முடிவில் தேவபக்தியிலும், விசுவாசத்திலும், உத்தமத்திலும் மிகப் பெரும் வெற்றியடைந்து, யோபுவுக்கும் அவருடைய முன்மாதிரியால் தூண்டுவிக்கப்பட்ட எல்லாருக்கும் ஆசீர்வாதங்களைக் கொண்டுவந்தது.
பல்வேறு துன்பங்களின் மத்தியிலும் நம்பிக்கை
யோபு அனுபவித்ததைப்போன்ற துன்பங்களை நீங்கள் ஒருவேளை அனுபவிக்கலாம். நீங்கள் மிகவும் நேசித்த ஒருவரை இழந்தது, உங்களை உணர்ச்சி சம்பந்தமாக வெகுவாய் பாதித்திருக்கலாம். கடுமையான நோய், உங்கள் வாழ்க்கையை வேதனை நிறைந்த அனுபவமாக ஆக்கலாம். இருதயத்தைப் பிளக்கும் விவாகரத்துவின் காரணமாக, உங்கள் வாழ்க்கை முழுவதும் சிதைவுற்றதாகத் தோன்றலாம். பொருளாதார நெருக்கடிகள் உங்களைக் கைவிடப்பட்டவராக உணரச்செய்திருக்கலாம். மெய்வணக்கத்தைப் பகைத்து எதிர்ப்போரால் கொடிய துன்புறுத்தலுக்கு ஆளாகியவர்களாக நீங்கள் ஒருவேளை இருக்கலாம். உங்கள் துன்பங்களைத் தாங்கி சமாளிப்பதற்கான போராட்டம், உங்கள் எதிர்காலம் நம்பிக்கையற்றதென்று நீங்கள் உணரும்படி செய்திருக்கலாம்.—1 பேதுரு 1:6.
மனக்கசப்புக்கு இடமளிப்பதைப் பார்க்கிலும், ‘நான் ஏன் துன்பப்படுகிறேன்?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பிசாசான சாத்தானாகிய ‘பொல்லாங்கனின் அதிகாரத்தில் கிடக்கிற’ ஓர் உலகத்தில் நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதனால் துன்பப்படுகிறீர்கள். (1 யோவான் 5:19, NW) இதன் விளைவாக, எல்லாருமே துன்பப்படுகிறார்கள். பிசாசால் தூண்டப்பட்டு, ராஜ்ய செய்திக்குப் பகைமை காட்டுவது, மற்றவர்களின் அன்பற்ற வார்த்தைகள், அல்லது இந்தக் “கொடிய காலங்களில்” அவ்வளவு சர்வ சாதாரணமாக காணப்படுகிற தேவபக்தியற்ற நடத்தையின் பயங்கர செயல்கள் ஆகியவற்றால் நாம் எல்லாரும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறோம்.—2 தீமோத்தேயு 3:1-5, NW.
பெரும் வருத்தம் தருகிற ஏதோவொன்று உங்கள் வாழ்க்கையில் நேரிட்டிருந்தால், “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” ஆனதற்கு உங்களை இரையாக்கி இருக்கலாம். (பிரசங்கி 9:11, NW) மறுபட்சத்தில், நாம் சுதந்தரித்துள்ள நம் சொந்த பாவத்தன்மையின் காரணமாக, வாழ்க்கையில் காரியங்கள் சிலசமயங்களில் தவறாகச் செல்கின்றன. (ரோமர் 5:12) நீங்கள் வினைமையான தவறு செய்திருந்தாலுங்கூட, மனந்திரும்பி ஆவிக்குரிய உதவியை நாடியிருப்பீர்களானால், கடவுளால் கைவிடப்பட்டிருப்பதாக உணராதீர்கள். (சங்கீதம் 103:10-14; யாக்கோபு 5:13-15) வேறு எவரைப் பார்க்கிலும் அதிகமாக, அவர் நமக்காகக் கவலைப்படுகிறார். (1 பேதுரு 5:6, 7) “உடைந்த இருதயமுள்ளவர்களுக்கு யெகோவா சமீபம், நைந்த ஆவியுள்ளவர்களை ரட்சிக்கிறார்” என்று நீங்கள் திடநம்பிக்கையுள்ளவர்களாக இருக்கலாம். (சங்கீதம் 34:18, தி.மொ.) உங்கள் துன்பம் எவ்வளவு துயரார்ந்ததாக அல்லது கடுமையானதாக இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை; அதை மேற்கொள்வதற்குத் தேவைப்படும் ஞானத்தை யெகோவா உங்களுக்குக் கொடுக்க முடியும். (யாக்கோபு 1:5-8) எல்லா காயங்களையும் யெகோவா ஆற்ற முடியும் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். அவருடைய தயவு உங்களுக்கு இருக்கையில், ஜீவனாகிய பரிசை அடைவதிலிருந்து உங்களை எதுவும் தடுக்க முடியாது.—ரோமர் 8:38, 39.
துன்பங்களிலிருந்து ஏதாவது நன்மை உண்டாகுமா?
‘ஒவ்வொரு மேகமும் ஒரு வெள்ளி உள்வரியைக் கொண்டுள்ளது,’ என்ற ஒரு பழமொழி உள்ளது. காரியங்கள் எவ்வளவு மோசமாகிக்கொண்டு போனாலும், நம்பிக்கைக்குரிய காரணத்தை நீங்கள் எப்போதும் காண முடியும் என்று சொல்வதற்கு அது ஒரு எளிய முறையேயாகும். கடவுளுடைய வார்த்தையில் எழுதப்பட்டுள்ள எல்லாவற்றிற்கும் பின்னாலுள்ள நோக்கம், ‘நம்பிக்கையை நாம் அடைய’ வேண்டும் என்பதேயாகும். (ரோமர் 15:4, தி.மொ.) உங்கள் நெருக்கடிநிலை எவ்வளவு கடுமையாக இருந்தாலும், பைபிளிலுள்ள வாக்குகளும் நியமங்களும் உங்களுக்குப் புத்துயிரளிக்கும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொண்டுவரும்.
கடவுளை நேசிப்போருக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள நித்திய ஆசீர்வாதங்களோடு ஒப்பிடுகையில், உபத்திரவம் ‘கணப்பொழுதே நிற்கும் . . . இலேசான உபத்திரவம்’ என்று வேதவசனங்கள் காட்டுகின்றன. (2 கொரிந்தியர் 4:16-18, தி.மொ.) துன்பங்களின் மத்தியில் வளர்த்த தேவபக்திக்குரிய பண்புகள், கீர்த்தியையும் பொருளாதார செல்வத்தையும் பார்க்கிலும் மிகப் பெரும் மதிப்பு வாய்ந்தவை என்றும் பைபிள் காட்டுகிறது. (1 யோவான் 2:15-17) இவ்வாறு, துன்பமும்கூட நன்மைகளைக் கொண்டுவர முடியும். (எபிரெயர் 5:8) உண்மையில், துன்பங்கள் உண்டாகியிருக்கையில் கற்றுக்கொண்டதைப் பொருத்திப் பயன்படுத்துவது எதிர்பாராத ஆசீர்வாதங்களை உங்களுக்குக் கொண்டுவரும்.
ஒரு கடினமான துன்ப அனுபவம் உங்களை மேலும் கனிவுள்ளவர்களாக ஆக்கலாம். சென்றக்காலத்தில், மற்றவர்களுக்கு எரிச்சலூட்டினதும், உங்கள் ஆவிக்குரிய முன்னேற்றத்தையுங்கூட தடை செய்ததுமான தனிப்பட்ட குணம் உங்களுக்கு இருந்ததென்று நீங்கள் ஒப்புக்கொள்ளலாம். அது ஒருவேளை மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையாக இருந்திருக்கலாம். ஏதோ கடுந்துயரத்தால் தாக்கப்பட்ட பின்பு, நீங்கள் எவ்வளவு பலவீனராக இருக்கிறீர்களென்றும் மற்றவர்கள் உங்களுக்கு எவ்வளவாய்த் தேவைப்படுகிறார்கள் என்றும் நீங்கள் திடீரென்று உணரக்கூடும். அந்தப் பாடத்தை உங்கள் துன்பத்திலிருந்து கற்றுக்கொண்டு, தேவைப்பட்ட மாற்றங்களை நீங்கள் செய்திருந்தால், அது உங்களுக்கு நன்மை செய்துள்ளது.
சென்ற காலத்தில், உங்களுடைய கோபத்தை அடக்குவது உங்களுக்குக் கடினமாக இருந்ததனால், உங்களோடு காரியங்களை கையாளுவது, மற்றவர்களுக்கு கடினமாக இருந்திருந்தால் என்ன செய்வது? இது, உங்கள் உடலாரோக்கியம் சம்பந்தமாகவும் உங்களுக்கு ஏதாவது இக்கட்டை உண்டாக்கியிருக்கலாம். (நீதிமொழிகள் 14:29, 30) எனினும், இப்போது, தன்னடக்கத்தைக் காட்டும்படி உங்களுக்கு உதவிசெய்வதற்கு கடவுளுடைய ஆவியின்மீது நீங்கள் சார்ந்திருப்பதால் நிலைமை மேம்பட்டதாகியிருக்கலாம்.—கலாத்தியர் 5:22, 23.
தவறு செய்வோரிடம் இரக்கம் காட்டாமல், நீங்களும் ஒரு காலத்தில், மற்றவர்களைப்போல் பரிவிரக்கமற்றவர்களாக இருந்திருக்கலாம். ஆனால், நீங்கள்தாமே ஒரு சந்தர்ப்ப நிலைமைக்குள் இடறிவிழுந்து, இரக்கத்திற்காக தவித்திருந்தால், இப்போது, மற்றவர்களிடம் இரக்கமுள்ளவர்களாக இருப்பதற்கு மேலும் அதிகமாய் மனமுடையவராக நீங்கள் இருக்கலாம். உங்களுக்குக் காட்டப்பட்ட, இருதயத்தை ஆறுதல்படுத்தும் பரிவும், அக்கறையும், இரக்கமும், தவறுசெய்து மனந்திரும்பியிருக்கும் மற்றவர்களிடமாக, அவற்றைப்போன்ற பண்புகளை நீங்களும் காட்டவேண்டுமென்று உணரும்படி உங்களைச் செய்வித்திருக்கின்றன. உங்களிலுள்ள இந்தப் பலவீனங்களைத் திருத்திக் கொள்வதற்கு உங்கள் மனவேதனை உங்களைத் தூண்டி செய்வித்திருந்தால், உங்கள் அனுபவத்திலிருந்து நீங்கள் அடைந்த ஒரு நன்மையாக இது இருக்கிறது. “நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்” என்பதை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள்.—யாக்கோபு 2:13; மத்தேயு 5:7.
கிறிஸ்தவ சபையால் நீங்கள் சிட்சிக்கப்பட்டது, அருமையாய்க் கருதப்பட்ட சிலாக்கியங்களையும், உங்கள்பேரில் மற்றவர்களுக்கு இருந்த மதிப்பையும் இழக்கும்படி செய்திருந்தால் என்ன செய்வது? மனக்கசப்படையாதீர்கள். சிட்சைக்குரிய நடவடிக்கை, சபையைச் சுத்தமாக வைப்பதற்கு உதவிசெய்கிறது; ஆனால், தவறுசெய்தவரை ஆவிக்குரியப்பிரகாரமாய்த் திரும்ப சீர்ப்படுத்துவதும் அதன் நோக்கங்களில் அடங்கியுள்ளது. மறுப்புக்கிடமின்றி, ‘எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷகரமாய்க் காணாமல் துக்ககரமாய்க் காணும்; பிற்காலத்திலோ அதில் பயிற்றப்பட்டவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத்தரும்.’ (எபிரெயர் 12:11, தி.மொ.) சிட்சை, துக்க உணர்ச்சியில் ஆழ்த்துவதாக இருந்தாலும், மனத்தாழ்மையுடன் மனந்திரும்புகிற நபரை, நம்பிக்கையில்லாமல் அது விடுகிறதில்லை. பூர்வ இஸ்ரவேலின் அரசனாகிய தாவீது, தவறுசெய்ததற்காகக் கடுமையாய்ச் சிட்சிக்கப்பட்டார். ஆனால், அவர் மனந்திரும்பினார்; முடிவில் மேம்பட்ட விசுவாசத்தையுடைய ஒரு மனிதனாகத் தனிப்பட்ட பாராட்டுதலைப் பெற்றார்.—2 சாமுவேல் 12:7-12; சங்கீதம் 32:5; எபிரெயர் 11:32-34.
ஒரு துன்பம், உங்கள் மனப்பான்மையை மிக ஆழ்ந்த முறையில் பாதிக்கலாம். சென்ற காலத்தில், இந்த உலகத்தில் உங்களுக்கு உயர்வான மதிப்பையும் சமுதாய புகழ்ச்சியையும் அளித்த பொருளாதார இலக்குகளிலும் சாதனைகளிலும் உங்கள் கவனம் ஊன்றியிருந்திருக்கலாம். பண இழப்போ அல்லது பொருளாதார இழப்புகளோ சம்பந்தப்பட்ட ஒரு துன்பம், உங்கள் எண்ணங்களை அதிமுக்கியமான காரியங்களில் ஊன்றவைக்கும்படி செய்திருக்கலாம். (ஒப்பிடுக: பிலிப்பியர் 1:10, NW.) இப்போதோ, பரிசுத்த சேவையில் ஆவிக்குரிய மதிப்புகளும் இலக்குகளுமே, உண்மையான மகிழ்ச்சியையும் நிலையான மனத்திருப்தியையும் கொண்டுவருகிற காரியங்கள் என்பதை நீங்கள் தெளிவாக உணருகிறீர்கள்.
யெகோவாவில் நம்பிக்கை வையுங்கள்
யெகோவாவுக்கு பரிசுத்த சேவை செய்வது, உங்கள் கிறிஸ்தவ நம்பிக்கைகளை எதிர்ப்போரின் கைகளில் துன்புறுத்தலையும் பாடுபடுதலையும் அனுபவிப்பதில் விளைவடையலாம். இந்தத் துன்பத்தின் காரணமாக நீங்கள் நொறுக்கப்படுவோராக உணரலாம், எனினும் அதிலிருந்து நன்மை உண்டாக முடியும். இந்தக் கடுஞ்சோதனை உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தக்கூடும். மேலும், துன்புறுத்தலை அனுபவிக்கும் மற்றவர்கள், நீங்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவதைக் காண்பதால் ஊக்குவிக்கப்பட்டு பலப்படுத்தப்படலாம். உங்கள் சிறந்த நடத்தையை நேரில் காண்போர், கடவுளுக்கு மகிமை செலுத்தும்படி தூண்டப்படலாம். உங்கள் எதிரிகளுங்கூட வெட்கமடைந்து, உங்கள் நற்கிரியைகளை ஒப்புக்கொள்ளலாம்.—1 பேதுரு 2:12; 3:16.
துன்புறுத்தப்படுகையில் மனக்கசப்பைத் தவிர்ப்பதற்கு, நீங்கள் யெகோவாவில் நம்பிக்கை வைக்க வேண்டும். துன்பத்திலிருந்து விடுதலை நிச்சயமாக வருமென்று அவருடைய வார்த்தை காட்டுகிறது. ஆனால், நீங்கள் விரும்புகிறபடி அவ்வளவு சீக்கிரத்தில் அது ஒருவேளை வராது. இதற்கிடையில், “நன்மைசெய்வதிலே சோர்ந்துபோகாதிருங்கள்.” (2 தெசலோனிக்கேயர் 3:13) துன்பங்களைச் சமாளித்து சகித்திருப்பதற்கான வழிகளுக்காகத் தொடர்ந்து தேடிக்கொண்டிருங்கள். காரியங்கள் நம்பிக்கையளிக்காதவையாகத் தோன்றினாலும், “யெகோவாவின்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங்கீதம் 55:22, தி.மொ.) தன்னிரக்கத்தில் நீங்கள் மூழ்கிவிடுவதைப் பார்க்கிலும், யெகோவாவை அறிவதிலும், அவருடைய ஜனங்களுக்குள் ஒருவராக இருப்பதிலும், முடிவற்ற வாழ்க்கையின் நம்பிக்கையை உடையோராக இருப்பதிலும் நீங்கள் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.—யோவான் 3:16, 36.
முக்கியமானவற்றின்மீது உங்கள் மனதை தொடர்ந்து ஊன்றியிருக்கச் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் ஜெபத்தில் யெகோவாவை அணுகி, சகித்து நிலைத்திருப்பதற்கு பலத்தை தரும்படி கேளுங்கள். (பிலிப்பியர் 4:6, 7, 13, NW) உங்களுக்குத் துன்பத்தை உண்டாக்குகிறவர்களுக்கு எதிராகப் பழிக்குப்பழி வாங்கவேண்டுமென்னும் எண்ணத்தை அறவே அகற்றுங்கள். காரியங்களை யெகோவாவின் கைகளில் விட்டுவிடுங்கள். (ரோமர் 12:19) கிறிஸ்தவ பண்புகளை வளர்த்து, உங்கள் குண இயல்பை மேம்படுத்துவதற்கான வழிகளுக்காகத் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருங்கள். (2 பேதுரு 1:5-8) உங்கள் ஆவிக்குரிய தேவைகளை அன்புடன் பராமரித்து வருகிற மூப்பர்கள் உட்பட, மற்றவர்கள் உங்களுக்காகச் செய்யும் எல்லாவற்றையும் நன்றியோடு மதித்துணருங்கள். (எபிரெயர் 13:7, 17) கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருங்கள், ஜீவனின் பரிசின்பேரில் உங்கள் கண்கள் தொடர்ந்து ஊன்றியிருக்கும்படி செய்யுங்கள், மரணமும்கூட அதை உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள முடியாதென்று திடநம்பிக்கையுடன் இருங்கள்.—யோவான் 5:28, 29; 17:3.
பெரும் வருத்தத்தை அல்லது கடும் துன்பங்களை இப்போது நீங்கள் அனுபவித்துக்கொண்டிருந்தால், ‘உங்கள் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கை வையுங்கள்,’ முடிவில் மிகுதியான மகிழ்ச்சி, உங்கள் துயரத்தையும் இக்கட்டையும் நீக்கி அவற்றின் இடத்தை நிரப்பும். (நீதிமொழிகள் 3:5, 6, தி.மொ.; யோவான் 16:20) யோபுவை கடவுள் ஆசீர்வதித்ததைப்போல், உங்களையும் அவர் ஆசீர்வதிக்கையில் மனவேதனை நீங்கி அதனிடத்தைச் சந்தோஷம் நிரப்பும். நீங்கள் பெறவிருக்கும் நற்பலனோடு ஒப்பிட, இன்றைய துன்பங்கள் அற்பமானவையாக உள்ளன. (ஒப்பிடுக: ரோமர் 8:18.) நீங்கள் உண்மையுடன் சகித்துநிலைத்திருப்பது மற்றவர்களுக்கும் ஊக்கமூட்டலாம்; ‘புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டதனால்’ வரும் அழகிய கிறிஸ்தவ பண்புகளை வளர்க்க உங்களுக்கும் உதவிசெய்யலாம். (எபேசியர் 4:23, 24; கொலோசெயர் 3:10, 12-14) ஆகையால், அப்போஸ்தலன் பேதுருவின் இந்த ஞானமான அறிவுரையிலிருந்து தைரியங்கொள்ளுங்கள்: “தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.”—1 பேதுரு 4:19.
[பக்கம் 23-ன் படம்]
யோபைப்போல் இருங்கள். ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள்
[பக்கம் 24-ன் படம்]
உங்கள் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கை வையுங்கள்