சோதனைகளை நாம் எப்படி கருத வேண்டும்?
சோதனைகள்! அனைவருமே சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. கருத்து வேறுபாடுகள், பணக் கஷ்டம், சுகவீனம், சபலம், தவறு செய்வதற்கு நண்பர்களின் தூண்டுதல், துன்புறுத்துதல், நடுநிலை வகிப்பதால் அல்லது விக்கிரகாராதனையில் ஈடுபடாததால் எழும் எதிர்ப்பு என எத்தனை எத்தனையோ சோதனைகள் வரலாம். அவை எந்த ரூபத்தில் வந்தாலும்சரி பெரும்பாலும் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன. அவற்றை எப்படி வெற்றிகரமாக சமாளிக்கலாம்? அவற்றால் நமக்கு பயனேதும் உண்டா?
ஈடிணையற்ற துணை
பூர்வத்தில் வாழ்ந்த தாவீது ராஜாவின் வாழ்க்கை சோதனைமயமானதாக இருந்தது; ஆனாலும் அவர் கடைசி வரை உண்மையுள்ளவராக இருந்தார். அவரால் எப்படி சகித்திருக்க முடிந்தது? “யெகோவா என் மேய்ப்பர், எனக்கு ஒன்றும் குறைவில்லை” என்று சொல்லி தன் பலத்தின் இரகசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். அதன்பின், “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாங்குக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடுகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” என்று சொன்னார். (சங்கீதம் 23:1, 4, திருத்திய மொழிபெயர்ப்பு) ஆம், யெகோவா ஈடிணையற்ற துணையாக திகழ்கிறார். தாவீது கடும் துன்பத்தை அனுபவித்த சமயங்களில் மேய்ப்பரைப் போல யெகோவா அவரை வழிநடத்தினார்; தேவைப்பட்டால் நம்மையும் அப்படி வழிநடத்த தயாராக இருக்கிறார்.
யெகோவாவின் துணையை நாம் எப்படி பெறலாம்? அதற்கான வழியை சுட்டிக்காட்டும் விதத்தில், “யெகோவா நல்லவர் என்று ருசித்தறியுங்கள்” என பைபிள் குறிப்பிடுகிறது. (சங்கீதம் 34:8, தி.மொ.) அது அன்பான ஓர் அழைப்பு, ஆனால் அது எதை அர்த்தப்படுத்துகிறது? அது யெகோவாவை சேவிக்கவும், அவரது சித்தத்திற்கு இசைவாக நம் வாழ்க்கையை முழுமையாக மாற்றியமைக்கவும் நம்மை உற்சாகப்படுத்துகிறது. அதற்கு சில விஷயங்களில் நம் சுதந்திரத்தை விட்டுக்கொடுத்து தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும். துன்புறுத்துதல், துன்பம் என்ற வடிவில் வரும் சோதனைகளைக்கூட சிலசமயங்களில் அனுபவிக்க வேண்டியிருக்கலாம். ஆனாலும் யெகோவாவின் அழைப்பை மனதார ஏற்றிருப்பவர்கள், அதற்காக வருத்தப்படவே வேண்டியதில்லை. யெகோவா அவர்களை கண்ணுக்கு கண்ணாக பார்த்துக்கொள்வார். ஆவிக்குரிய விதத்தில் அவர்களுக்கு வழிநடத்துதலை அளித்து, கரிசனையோடு கவனித்துக்கொள்வார். அவர் தமது வார்த்தை, பரிசுத்த ஆவி, கிறிஸ்தவ சபை ஆகியவற்றின் மூலம் அவர்களை சோதனைகளிலிருந்து காப்பார். இறுதியில் நித்திய ஜீவன் என்ற பரிசை அளிப்பார்.—சங்கீதம் 23:6; 25:9; ஏசாயா 30:21; ரோமர் 15:6.
யெகோவாவை சேவிப்பது சம்பந்தமாக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் தீர்மானத்தை எடுத்து அதில் உறுதியாக இருப்பவர்கள் அவர் தமது வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதைக் கண்கூடாக பார்க்கிறார்கள். யோசுவாவின் தலைமையில் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்த இஸ்ரவேலரின் அனுபவமும் அதுவே. அவர்கள் யோர்தானைக் கடந்தவுடன், சோதனைகளை சகிக்கவும், போர்கள் புரியவும், கசப்பான விதத்தில் பாடங்களை கற்றுக்கொள்ளவும் வேண்டியிருந்தது. ஆனால் அந்த சந்ததியினர், எகிப்திலிருந்து வெளியேறி வனாந்தரத்தில் இறந்துபோன தங்கள் முன்னோர்களைவிட அதிக விசுவாசமுள்ளவர்களாக இருந்தார்கள். ஆகவே அப்படிப்பட்ட உண்மையுள்ளவர்களுக்கு யெகோவா பக்கபலமாக இருந்தார்; யோசுவாவின் நாட்கள் முடியும் தறுவாயில் அந்த உண்மையுள்ளவர்களின் நிலையை இப்படியாக பைபிள் விவரிக்கிறது: “கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் இளைப்பாறப்பண்ணினார்; . . . கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.” (யோசுவா 21:44, 45) சோதனை காலத்திலும்சரி மற்ற சமயங்களிலும்சரி, யெகோவாவை முழுமையாக சார்ந்திருக்கையில் நாமும் அதே அனுபவத்தைப் பெறுவோம்.
யெகோவாவின் மீதுள்ள நம் நம்பிக்கையை எது பலவீனப்படுத்தலாம்? இயேசு ஒரு விஷயத்தை இப்படி சுட்டிக்காட்டினார்: “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; . . . தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது.” (மத்தேயு 6:24) உலகில் பெரும்பாலோர் பாதுகாப்பிற்காக பொன்னையும் பொருளையும் தேடிச் செல்கிறார்கள்; நாம் யெகோவாவை நம்பினால் அவ்வாறு செய்ய மாட்டோம். “முதலாவது தேவனுடைய, ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் [தேவையான பொருளெல்லாம்] உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என இயேசு தம்மை பின்பற்றியவர்களுக்கு அறிவுரை வழங்கினார். (மத்தேயு 6:33) பொருட்செல்வத்தை அதற்குரிய இடத்தில் வைத்து, கடவுளுடைய ராஜ்யத்திற்கு முதலிடம் கொடுக்கும் கிறிஸ்தவர் வாழ்க்கையில் சரியானதைச் செய்கிறார். (பிரசங்கி 7:12) அதற்காக அவர் சிலவற்றை இழக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பொருளாதார ரீதியில் அவர் சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தாலும் அவர் அநேக பலன்களைப் பெறுவார். யெகோவா அவருக்கு துணையாக இருப்பார்.—ஏசாயா 48:17, 18.
சோதனைகள் புகட்டும் பாடம்
‘யெகோவா நல்லவர் என்பதை ருசித்தறிய’ தீர்மானித்தால், வாழ்க்கையில் எதிர்பாரா நிகழ்வுகளே தலைதூக்காது என அர்த்தமில்லை; சாத்தானும் அவனது மானிட கைப்பாவைகளும் கொண்டுவரும் தாக்குதல்களிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் எனவும் அர்த்தமில்லை. (பிரசங்கி 9:11, NW) இதனால் ஒரு கிறிஸ்தவரின் உண்மைத்தன்மையும் உறுதியும் சோதிக்கப்படலாம். யெகோவா ஏன் தம் வணக்கத்தார் அப்படிப்பட்ட சோதனைகளை சந்திக்க அனுமதிக்கிறார்? அதற்குரிய ஒரு காரணத்தை அப்போஸ்தலன் பேதுரு சொன்னார்: “துன்பப்பட வேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.” (1 பேதுரு 1:6, 7) ஆம், நாம் விசுவாசம் உள்ளவர்களாகவும் யெகோவாவிடம் அன்புள்ளவர்களாகவும் எந்தளவுக்கு இருக்கிறோம் என்பதை வெளிக்காட்ட சோதனைகள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன. மேலும் பிசாசாகிய சாத்தானின் நிந்தைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க அவை உதவுகின்றன.—நீதிமொழிகள் 27:11; வெளிப்படுத்துதல் 12:10.
மற்ற கிறிஸ்தவ குணங்களை வளர்த்துக்கொள்ளவும் சோதனைகள் உதவுகின்றன. உதாரணத்திற்கு சங்கீதக்காரனின் இந்த வார்த்தைகளை கவனியுங்கள்: “தாழ்மையுள்ளவனை [யெகோவா] நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.” (சங்கீதம் 138:6) நம்மில் அநேகர் இயல்பாகவே மனத்தாழ்மை உள்ளவர்கள் அல்ல, ஆனால் அவசியமான அந்தக் குணத்தை வளர்த்துக்கொள்ள சோதனைகள் உதவும். மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர் சிலர் வாரக்கணக்கிலும் மாதக்கணக்கிலும் மன்னாவை சாப்பிடுவதற்கு சலித்துக்கொண்ட சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள். மன்னா ஓர் அற்புத உணவாக இருந்தபோதிலும் அது அவர்களுக்கு ஒரு சோதனையாக அமைந்ததாக தெரிகிறது. ஏன் அந்த சோதனை? “உங்களைப் பணிவாக்கவும் சோதிக்கவும் . . . வனாந்தரத்தில் [யெகோவா] உங்களுக்கு மன்னாவை அளித்து போஷித்தார்” என மோசே அவர்களிடம் கூறினார்.—உபாகமம் 8:16, NW.
நம் பணிவும் சோதிக்கப்படலாம். எப்படி? அமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுகையில் நாம் எப்படி அதை ஏற்றுக்கொள்கிறோம்? (ஏசாயா 60:17) பிரசங்கிப்பதிலும் போதிப்பதிலும் நாம் முழு மனதோடு ஈடுபடுகிறோமா? (மத்தேயு 24:14; 28:19, 20) பைபிள் சத்தியத்தின் பேரில் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார” வகுப்பார் வழங்கும் விளக்கங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோமா? (மத்தேயு 24:45-47; நீதிமொழிகள் 4:18) லேட்டஸ்ட் சாதனங்களை, புதிய பாணி துணிமணிகளை, அல்லது புதிய மாடல் காரை வாங்க வேண்டுமென்ற தூண்டுதல்களை எதிர்க்கிறோமா? பணிவுள்ளவரால் இக்கேள்விகளுக்கு ஆம் என பதிலளிக்க முடியும்.—1 பேதுரு 1:14-16; 2 பேதுரு 3:11.
மற்றொரு அத்தியாவசியமான குணமாகிய சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்வதற்கும் சோதனைகள் நமக்கு உதவும். “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” என சீஷனாகிய யாக்கோபு கூறினார். (யாக்கோபு 1:2, 3) யெகோவாவின் மீது முழு நம்பிக்கை வைத்து சோதனைகளை தொடர்ந்து சகித்தால் உறுதி, உண்மைதவறாமை, உத்தமம் ஆகிய குணங்களை வளர்த்துக்கொள்வோம். கடுங்கோபம் கொண்ட இவ்வுலகின் கடவுளாகிய சாத்தானிடமிருந்து வரவிருக்கும் தாக்குதல்களை சமாளிக்க பலப்படுத்தப்படுவோம்.—1 பேதுரு 5:8-10; 1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 12:12.
சோதனைகளை சரியான கண்ணோட்டத்தில் காணுங்கள்
கடவுளுடைய பரிபூரண மகனாகிய இயேசு கிறிஸ்து பூமியிலிருந்தபோது அநேக சோதனைகளை சந்தித்தார்; அவற்றை சகித்ததால் அபரிமிதமான பலன்களையும் பெற்றார். இயேசு தாம் ‘பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்’ என பவுல் எழுதினார். (எபிரெயர் 5:8) அவர் மரணம் வரை உண்மையாக இருந்தது யெகோவாவின் பெயருக்கு துதி சேர்த்தது; அதுமட்டுமின்றி, தமது பரிபூரண மனித உயிரின் மதிப்பை மனிதகுலத்துக்கு மீட்கும்பொருளாக அளிப்பதற்கும் அது அவருக்கு வாய்ப்பளித்தது. அது, இயேசுவை விசுவாசித்தவர்கள் நித்திய ஜீவன் என்ற எதிர்பார்ப்பை பெற வழிவகுத்தது. (யோவான் 3:16) இயேசு சோதனைகளை சமாளித்து உண்மையுள்ளவராக நிலைத்திருந்ததால் இப்போது நம் பிரதான ஆசாரியராகவும் அரியணையில் அமர்த்தப்பட்ட அரசராகவும் இருக்கிறார்.—எபிரெயர் 7:26-28; 12:2.
நாமும் நன்மைகளை பெறுவோமா? பெறுவோம், சோதனைகளை சமாளித்து உண்மையாக நிலைத்திருந்தால் அவ்வாறே நாமும் பெரும் ஆசீர்வாதங்களை அனுபவிப்போம். பரலோக நம்பிக்கை உள்ளவர்களைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.” (யாக்கோபு 1:12) பூமியில் வாழும் நம்பிக்கை உள்ளவர்கள், உண்மையோடு சகித்திருந்தால் பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவனை பெறுவார்கள் என உறுதியளிக்கப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 21:3-6) எல்லாவற்றிலும் முக்கியமாக, அவர்கள் உண்மையோடு சகித்திருப்பது யெகோவாவின் பெயருக்கு துதி சேர்க்கிறது.
நாம் இயேசுவின் அடிச்சுவடுகளில் நடக்கையில் இந்த உலகில் எதிர்ப்படும் எல்லா சோதனைகளையும் வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என நம்பிக்கையோடு இருக்கலாம். (1 கொரிந்தியர் 10:13; 1 பேதுரு 2:21) எப்படி சமாளிக்க முடியும்? யெகோவாவை சார்ந்திருப்பதன் மூலமாகவே சமாளிக்க முடியும்; தம்மை அண்டி வாழ்பவர்களுக்கு அவர் “இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியை” தருகிறார். (2 கொரிந்தியர் 4:7, NW) நாம் யோபுவைப் போல் நம்பிக்கையோடு இருப்போமாக; கடும் சோதனைகளை சகித்த சமயத்திலும், “அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” என யோபு நம்பிக்கையோடு கூறினார்.—யோபு 23:10.
[பக்கம் 31-ன் படம்]
சோதனைகளை எதிர்ப்படுகையில் இயேசு உண்மையாக இருந்தது யெகோவாவின் பெயருக்கு துதி சேர்த்தது. அவ்வாறே நாமும் கடவுளுக்கு துதி சேர்க்கலாம்