“சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்”
1 எல்லா கிறிஸ்தவர்களும் சோதனைகளைச் சந்திக்கவேண்டும். (2 தீ. 3:12) சோதனைகள் பல ரூபங்களில் நம்மைத் தாக்கலாம்; வியாதியாகவோ பண கஷ்டமாகவோ சபலமாகவோ துன்புறுத்தலின் வடிவிலோ நம்மைத் தாக்கலாம். சாத்தான் கொண்டுவரும் சோதனைகள் கிறிஸ்தவ ஊழியத்திலிருந்து நம்மைக் கொஞ்சங் கொஞ்சமாக பின்வாங்கச் செய்யலாம்; ஊழியத்தை முழுமையாக புறக்கணிக்கச் செய்யலாம்; இல்லையென்றால் ஒரேடியாக கடவுளைச் சேவிப்பதை விட்டுவிடச் செய்யலாம். (யோபு 1:9-11) சோதனைகளைப் பொறுமையாக சகிப்பது எப்படிச் சந்தோஷத்திற்கு வழிவகுக்கும்?— 2 பே. 2:9.
2 சோதனைகளைச் சந்திக்க தயாராய் இருங்கள்: யெகோவா நமக்கு தம்முடைய சத்திய வார்த்தையாகிய பைபிளைத் தந்திருக்கிறார். அதில் இயேசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் பதிவு செய்திருக்கிறார். இயேசு சொன்ன விஷயங்களைக் கேட்டு அதன்படி நடக்கும்போது நம்மால் பலமான அஸ்திபாரத்தைப் போட முடிகிறது. அதனால் சோதனைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க முடிகிறது. (லூக். 6:47-49) அதோடு, நம்மைப் பலப்படுத்துவதற்கு மற்ற உதவிகளும் கிடைக்கின்றன. கிறிஸ்தவ சகோதர சகோதரிகள், சபை கூட்டங்கள், உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் மூலமாய் கிடைக்கும் பைபிள் சார்ந்த பிரசுரங்கள் ஆகியவை அவற்றில் அடங்கும். கடவுள் நமக்கு தந்திருக்கும் பரிசு ஜெபம். இதன்மூலம் நாம் அவரை எத்தனை முறை வேண்டுமானாலும் தாராளமாக அணுகமுடிகிறது.—மத். 6:13.
3 யெகோவா நமக்கு ஒரு நம்பிக்கையையும் அளித்திருக்கிறார். யெகோவாவின் வாக்குறுதிகளில் நாம் அசைக்க முடியாத விசுவாசத்தை வளர்க்கும்போது நம்முடைய நம்பிக்கை “நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான, உறுதியான நங்கூரம் போன்று” இருக்கிறது. (எபி. 6:19, பொது மொழிபெயர்ப்பு) பைபிள் காலங்களில், சீதோஷ்ண நிலை எவ்வளவு நன்றாக இருந்தாலும் சரி துறைமுகத்திலிருந்து புறப்படும் கப்பல்கள் நங்கூரமின்றி புறப்படாது. திடீரென்று புயல் தாக்கும்போது கப்பலிலிருக்கும் நங்கூரத்தைக் கீழே விடுவார்கள். அதனால் கப்பல் கடற்கரையோரங்களிலுள்ள பாறைகளில் முட்டி மோதி சேதமடையாமலிருக்கும். அதேபோல், இப்போதே நாம் கடவுளுடைய வாக்குறுதிகளில் உறுதியான விசுவாசத்தை வைக்கையில் கடும் புயல்போன்ற பிரச்சினைகள் நம்மைத் தாக்கினாலும், நம்மால் உறுதியாக நிலைத்திருக்க முடியும். கஷ்டங்கள் நாம் எதிர்பார்க்காத சமயத்தில் திடீரென்று வரலாம். லிஸ்திராவில் பவுலும் பர்னபாவும் ஊழியம் செய்தபோது ஆரம்பத்தில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், அவர்களை எதிர்த்த யூதர்கள் அங்கு வந்தபோது நிலைமை சட்டென்று தலைகீழாக மாறியது.—அப். 14:8-19.
4 சகிப்புத்தன்மை சந்தோஷத்தை அளிக்கும்: எதிர்ப்பின் மத்தியிலும் ஊழியத்தில் உறுதியாக நிலைத்திருப்பது நமக்கு மன நிம்மதியைத் தருகிறது. கிறிஸ்துவுக்காக அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்படும்போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம். (அப். 5:40, 41) சோதனைகளைச் சகிப்பது மனத்தாழ்மை, கீழ்ப்படிதல், சகிப்புத்தன்மை ஆகிய குணங்களை இன்னும் முழுமையாக வளர்க்க உதவுகிறது. (உபா. 8:15, 16; எபி. 5:8; யாக். 1:2, 3) அதோடு யெகோவாமீது சார்ந்திருக்கவும், அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்கவும், அவரையே அடைக்கலமாக கொண்டிருக்கவும் நமக்கு கற்பிக்கிறது.—நீதி. 18:10.
5 சோதனைகளெல்லாம் சொற்ப காலத்துக்குத்தான் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (2 கொ. 4:17, 18) நாம் யெகோவாவை எந்தளவுக்கு ஆழமாக நேசிக்கிறோம் என்பதை வெளிகாட்ட சோதனைகள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன. நாம் அவற்றைச் சகிக்கும்போது சாத்தானின் குற்றசாட்டிற்கு பதிலளிக்க முடிகிறது. எனவே, நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் இருப்போம்! “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு . . . ஜீவகிரீடத்தைப் பெறுவான்.”—யாக். 1:12.