சகிப்புத்தன்மைக்குப் பலனுண்டு
1 “உங்கள் பொறுமையினால் [“சகிப்புத்தன்மையினால்,” NW] உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.” (லூக். 21:19) “உலகத்தின் முடிவு” பற்றி இயேசு தீர்க்கதரிசனமாக கூறிய அம்சங்களில் இதுவும் ஒன்று; நம் உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்ளும்போது அநேக உபத்திரவங்களை சந்திக்க நாம் தயாராய் இருக்க வேண்டும் என்பதையே இக்கூற்று தெளிவாக காட்டுகிறது. என்றாலும், யெகோவா தரும் பலத்தால் நாம் ஒவ்வொருவருமே ‘முடிவுபரியந்தம் நிலைநின்று’ ‘இரட்சிப்படைய’ முடியும்.—மத். 24:3, 13; பிலி. 4:13, NW.
2 துன்புறுத்தல், உடல்நலப் பிரச்சினை, பணக் கஷ்டம், உணர்ச்சிக் குமுறல் ஆகியவற்றால் ஒவ்வொரு நாளும் நாம் அல்லாட வேண்டியிருக்கலாம். எனினும், யெகோவாவுக்கு நாம் உத்தமர்களாய் இராதபடி செய்ய சாத்தான் முயன்று வருகிறான் என்பதை நாம் மறந்துவிடவே கூடாது. நம்முடைய பிதாவுக்கு நாம் உத்தமமாக இருக்கும் ஒவ்வொரு நாளும், அவரை நிந்திப்பவனின் சவாலுக்கு பதிலடி கொடுக்கிற மற்றொரு நாளாக அமைகிறது. சோதனையை சந்திக்கையில் நாம் சிந்தும் ‘கண்ணீர்’ மறக்கப்படுவதில்லை என்பதை அறிவது மனதிற்கு எவ்வளவாய் ஆறுதலளிக்கிறது! அது யெகோவாவின் கண்களில் அருமையானதாக இருக்கிறது, அத்துடன் நாம் காட்டும் உத்தமத்தன்மை அவரது இருதயத்தையும் மகிழ்விக்கிறது!—சங். 56:8; நீதி. 27:11.
3 உபத்திரவத்தால் புடமிடப்படுதல்: நாம் சோதனைகளை எதிர்ப்படும்போது, நம் விசுவாசத்தில் ஏதாவது குறைபாடு இருந்தால் அது தென்பட்டு விடும்; அல்லது நம்மிடமுள்ள பெருமை, பொறுமையின்மை போன்ற குறைபாடுகளும் அச்சமயத்தில் தலைகாட்டி விடும். சோதனைகளிலிருந்து தப்பிக்கவோ அவற்றை முறியடிக்கவோ வேதப்பூர்வமற்ற வழிகளில் முயலுவதற்கு மாறாக, கடவுளுடைய வார்த்தை தரும் ஆலோசனைக்கு நாம் செவிகொடுக்க வேண்டும்; “பொறுமையானது,” அதாவது சகிப்புத்தன்மையானது, “பூரண கிரியை செய்யக்கடவது” என்பதே அந்த ஆலோசனை. இந்த ஆலோசனைக்கு ஏன் செவிகொடுக்க வேண்டும்? ஏனெனில் சோதனைகளை உண்மையுடன் சகிப்பது நாம் “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இரு”ப்பதற்கு உதவும். (யாக். 1:2-4) இவ்வாறு சகிப்புத்தன்மையைக் காட்டுவது, நியாயத்தன்மை, ஒத்துணர்வு, இரக்கம் போன்ற அருமையான குணங்களை வளர்க்க நமக்கு உதவி செய்யும்.—ரோ. 12:15.
4 புடமிடப்பட்ட விசுவாசம்: நாம் சோதனைகளை சகிக்கையில், நம் விசுவாசம் புடமிடப்பட்டுவிடுகிறது; இந்த விசுவாசமே கடவுளின் பார்வையில் அதிக விலையேறப் பெற்றதாகிறது. (1 பே. 1:6, 7) இப்படிப்பட்ட விசுவாசம் எதிர்காலத்தில் நாம் சந்திக்கவிருக்கும் சோதனைகளின்போது உறுதியாயிருக்க நம்மை தயார்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, கடவுளின் அங்கீகாரத்தை நம்மால் உணர முடிகிறது; இது நமது நம்பிக்கைக்கு வலுவூட்டுகிறது, அதை இன்னும் நிஜமானதாகவும் ஆக்குகிறது.—ரோ. 5:3-5; NW.
5 நாம் காண்பிக்கும் சகிப்புத்தன்மைக்கு கிடைக்கும் உச்சக்கட்ட பலன் யாக்கோபு 1:12-ல் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கின பின்பு . . . ஜீவகிரீடத்தைப் பெறுவான்.” எனவே யெகோவாவுக்கு காண்பிக்கும் பக்தியில் நாம் உறுதியாய் நிலைத்திருப்போமாக; “தம்மிடத்தில் [“தொடர்ந்து,” NW] அன்புகூருகிறவர்களுக்கு” யெகோவா மிகுந்த பலன் தருவார் என்ற நம்பிக்கையுடன் அவ்வாறு நிலைத்திருப்போமாக.