யோபு—சகிப்புத்தன்மைக்கும் உத்தமத்தன்மைக்கும் முன்னுதாரணம்
“என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை.”—யோபு 1:8.
1, 2. (அ) எதிர்பாராத என்னென்ன கஷ்டங்கள் யோபுவுக்குச் சம்பவித்தன? (ஆ) கஷ்டங்கள் வருவதற்கு முன் யோபுவின் வாழ்க்கை எப்படி இருந்தது?
கஷ்டத்தின் வாசனையே தெரியாமல் வாழ்ந்து வந்தார் ஒருவர். அவருடைய அந்தஸ்தென்ன, ஆஸ்தியென்ன, ஆரோக்கியமென்ன, ஆனந்தமான குடும்பமென்ன! மொத்தத்தில் அவர் குறையேதுமின்றி சகலமும் பெற்றுச் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரது வாழ்வில் கஷ்டங்கள் அடுத்தடுத்து மூன்றுமுறை இடிபோல் இறங்கின. ஒரே நாளில் தன் சொத்துபத்துக்களை எல்லாம் இழந்து வீதிக்கு வந்துவிட்டார். திடீரென்று வீசிய பெருங்காற்று அவருடைய பிள்ளைகளின் உயிரைப் பறித்தது. விரைவிலேயே, அவரை ஒரு கொடிய நோய் தாக்கியது. விளைவு? அவரது உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை கொப்புளங்கள்! அதனால் வலி பொறுக்கமுடியாமல் துடித்தார். அவர் யாரென்று தெரிகிறதா? அவர்தான் யோபு, பைபிளிலுள்ள யோபு புத்தகத்தின் முக்கிய கதாபாத்திரம்.—யோபு 1, 2 அதிகாரங்கள்.
2 ‘சென்றுபோன மாதங்களில் . . . எனக்கு உண்டாயிருந்த சீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்’ என்று யோபு புலம்பினார். (யோபு 3:3; 29:2) கஷ்டப்படும்போது, கவலையின்றி வாழ்ந்த கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பது இயல்புதானே? யோபு நேர்மையாகத்தான் வாழ்ந்தார், அதனால் எந்தக் கஷ்டமும் அவரை அண்டாது என்றே தோன்றியது. உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்கள்கூட அவரிடம் அதிக மரியாதை வைத்திருந்தார்கள், அதனால் அவரிடம் ஆலோசனை கேட்டு வந்தார்கள். (யோபு 29:5-11) அவர் செல்வந்தராக இருந்தபோதிலும் பணத்தின் மீதே தன் நம்பிக்கை முழுவதையும் வைத்துவிடவில்லை. (யோபு 31:24, 25, 28) ஏழை விதவைகளுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் உதவிக்கரம் நீட்டினார். (யோபு 29:12-16) தன் மனைவிக்கு உண்மையாக நடந்துகொண்டார்.—யோபு 31:1, 9, 11.
3. யோபுவை எப்படிப்பட்டவராக யெகோவா கருதினார்?
3 யோபுவுக்குக் கடவுள்பக்தி இருந்ததால் நேர்மையுடன் வாழ்ந்து வந்தார். “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை” என்று அவரைக் குறித்து யெகோவா சொன்னார். (யோபு 1:1, 8) யோபு, நெறிமுறை பிறழாமல் வாழ்ந்தபோதிலும், பயங்கரமான கஷ்டங்கள் அவருடைய வசதியான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தன. தான் உழைத்து சம்பாதித்த எல்லாவற்றையும் இழந்தார். அதுமட்டுமல்ல, உடல் வேதனையும் மன வேதனையும் விரக்தியும் சேர்ந்து அவருடைய சுபாவத்தையே சோதித்துவிட்டன.
4. யோபு சந்தித்த சோதனையைச் சிந்தித்துப் பார்ப்பது ஏன் நமக்கு உதவியாக இருக்கும்?
4 கடவுளுடைய ஊழியர்களில் கஷ்டங்களை அனுபவித்தவர் யோபு மட்டுமே அல்ல, இன்றுள்ள அநேக கிறிஸ்தவர்களும் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். ஆகவே, பின்வரும் இந்த இரண்டு கேள்விகளை இப்போது சிந்திப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது: கஷ்டங்களை எதிர்ப்படுகையில், யோபு சந்தித்த சோதனைகளைச் சிந்தித்துப் பார்ப்பது நமக்கு எவ்வாறு உதவும்? கஷ்டப்படுகிற ஒருவரின் உணர்ச்சிகளை நாம் நன்றாகப் புரிந்து நடந்துகொள்ள அது எவ்வாறு உதவும்?
உண்மைத்தன்மை பற்றிய விவாதம், உத்தமத்தன்மைக்கு வந்த சோதனை
5. யோபு என்ன நோக்கத்துடன் கடவுளைச் சேவிப்பதாக சாத்தான் குற்றஞ்சாட்டினான்?
5 யோபுவின் விஷயமே தனி. கடவுளை அவர் என்ன நோக்கத்துடன் சேவிக்கிறார் என்பதை சாத்தான் கேள்விக்கிடமாக்கியது யோபுவுக்குத் தெரியவே தெரியாது. பரலோகத்தில் தேவதூதர்கள் எல்லாரும் கூடிவந்திருந்த சமயத்தில் யோபுவின் தலைசிறந்த குணங்களை யெகோவா புகழ்ந்து பேசினார். அப்போது சாத்தான், “நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ?” என்றான். இப்படிச் சொன்னதன் மூலம் யோபு சுயநல எண்ணத்துடனேயே கடவுளைச் சேவிக்கிறான் என்று சாத்தான் குற்றஞ்சாட்டினான். யோபு மட்டுமல்ல, எல்லா மனிதர்களுமே அப்படித்தான் என்பதாக சாத்தான் மறைமுகமாகக் கூறினான். “உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்” என்று யெகோவாவிடம் சவால்விட்டான்.—யோபு 1:8-11.
6. என்ன முக்கிய பிரச்சினையை சாத்தான் எழுப்பினான்?
6 இது முக்கியமான ஒரு பிரச்சினை. கடவுள் அரசாளும் விதத்தை சாத்தான் கேள்விக்கிடமாக்கியதால் பின்வரும் கேள்விகள் எழுந்தன: கடவுள் இந்த சர்வலோகத்தையும் அன்போடு ஆட்சிசெய்ய முடியுமா? அல்லது சாத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டதுபோல், மனிதர்கள் சுயநலத்திற்காகவே கடவுளைச் சேவிக்கிறார்கள் என்பது உண்மையாகிவிடுமா? இந்தக் கேள்விகளுக்கு விடை அளிப்பதற்காக யோபுவைச் சோதிக்க யெகோவா சாத்தானை அனுமதித்தார். அப்படியென்றால், தம்முடைய ஊழியக்காரனான யோபுவின் உத்தமத்தன்மையிலும் உண்மைத்தன்மையிலும் யெகோவாவுக்கு எந்தளவு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்! ஆக, யோபுவுக்கு அடுத்தடுத்து வந்த கஷ்டங்களுக்குக் காரணம் சாத்தானே. சாத்தானின் ஆரம்பகட்ட தாக்குதல்கள் பலிக்கவில்லை. அதனால் பயங்கரமான வலியுண்டாக்கும் வியாதியால் யோபுவை வதைத்தான். “தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான்” என்று அவன் வாதிட்டான்.—யோபு 2:4.
7. யோபு எதிர்ப்பட்ட சோதனைகளுக்கு ஒத்த என்ன சோதனைகளை கடவுளுடைய ஊழியர்கள் இன்று எதிர்ப்படுகிறார்கள்?
7 இன்றிருக்கும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் யோபுவின் அளவுக்குக் கஷ்டப்படுவதில்லை என்பது உண்மையே; என்றாலும், பல்வேறு விதமான கஷ்டங்கள் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கின்றன. பெரும்பாலோர் துன்புறுத்தலையோ குடும்பத்தில் பிரச்சினைகளையோ எதிர்ப்படுகிறார்கள். பொருளாதார நெருக்கடிகளாலோ மோசமான உடல்நிலையாலோகூட அநேகர் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் உயிரையே இழந்திருக்கிறார்கள். என்றபோதிலும், நாம் படுகிற ஒவ்வொரு கஷ்டத்திற்கும் சாத்தான்தான் காரணம் என்று நினைத்துவிடக்கூடாது. சொல்லப்போனால், நம்முடைய தவறுகளாலேயே சில சமயங்களில் நாம் கஷ்டப்படலாம், அல்லது பரம்பரையாக வரும் குறைபாட்டினால் கஷ்டப்படலாம். (கலாத்தியர் 6:7) நாம் யாருமே முதுமையால் வரும் உபாதைகளில் இருந்தும் இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் தப்பிக்க முடியாது. இதுபோன்ற துன்பங்களிலிருந்து யெகோவா தம் ஊழியர்களை இப்போதைக்கு அற்புதமாகப் பாதுகாப்பதில்லை என பைபிள் தெளிவாகச் சொல்கிறது.—பிரசங்கி 9:11, NW.
8. நாம் படும் கஷ்டங்களை சாத்தான் எவ்வாறு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்?
8 நாம் படுகிற ஒவ்வொரு கஷ்டத்திற்கும் சாத்தான் காரணமாக இல்லாவிட்டாலும் அவற்றைப் பயன்படுத்தி நம் விசுவாசத்தைப் பலவீனப்படுத்த அவன் முயற்சி செய்யலாம். அப்போஸ்தலன் பவுலை, அவருடைய ‘மாம்சத்தில் இருந்த ஒரு முள்’ தொடர்ந்து வேதனைப்படுத்தியது. அது தன்னை “குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது” என்றார் அவர். (2 கொரிந்தியர் 12:7) ஒருவேளை அது மங்கிய கண்பார்வை போன்ற சரீரக் கோளாறாகவோ வேறு ஏதாவது பிரச்சினையாகவோ இருந்திருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் சரி, அவருக்கு இருந்த பிரச்சினையையும் அதனால் ஏற்பட்ட விரக்தியையும் சாத்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அவரது மகிழ்ச்சியைப் பறிக்கலாம் அல்லது உத்தமத்தன்மையைக் குலைக்கலாம் என்பதை பவுல் புரிந்துகொண்டார். (நீதிமொழிகள் 24:10) இன்றும்கூட, கடவுளுடைய ஊழியர்களை ஏதாவது ஒரு விதத்தில் துன்புறுத்த குடும்ப அங்கத்தினர்களையோ, சகமாணவர்களையோ, சர்வாதிகார அரசாங்கங்களையோ சாத்தான் பயன்படுத்தலாம்.
9. பிரச்சினைகளையோ துன்புறுத்தல்களையோ கண்டு நாம் ஏன் ஆச்சரியப்படத் தேவையில்லை?
9 இந்தப் பிரச்சினைகளையெல்லாம் நாம் எவ்வாறு வெற்றிகரமாகச் சமாளிக்கலாம்? யெகோவாமீது நாம் வைத்திருக்கும் அன்பும் அவருடைய பேரரசாட்சிக்கு நாம் காண்பிக்கும் கீழ்ப்படிதலும் என்றைக்கும் மாறாது என்பதை நிரூபிக்க அப்படிப்பட்ட சவால்களைச் சிறந்த சந்தர்ப்பமாகக் கருதினால் நாம் அவற்றைச் சமாளித்து வெற்றிகாணலாம். (யாக்கோபு 1:2-4) நம்முடைய பிரச்சினைக்கான காரணம் எதுவாக இருந்தாலும் சரி, கடவுளுக்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்வது நம் ஆன்மீக சமநிலையைக் காத்துக்கொள்ள உதவும். அப்போஸ்தலன் பேதுரு கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: ‘பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாதிருங்கள்.’ (1 பேதுரு 4:12) பவுலும்கூட, “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்று கூறினார். (2 தீமோத்தேயு 3:12) யோபுவின் விஷயத்தில் செய்ததுபோலவே இன்றும் யெகோவாவின் சாட்சிகளது உண்மைத்தன்மைக்கு எதிராக சாத்தான் கேள்வி எழுப்புகிறான். சொல்லப்போனால், இந்தக் கடைசி நாட்களில் கடவுளுடைய மக்களை சாத்தான் இன்னும் அதிகமாகத் தாக்குகிறான் என்று பைபிள் குறிப்பிடுகிறது.—வெளிப்படுத்துதல் 12:9, 17.
தவறான கருத்தும், தவறான ஆலோசனையும்
10. யோபுவுக்கு என்ன விஷயம் தெரிந்திருக்கவில்லை?
10 நம்மைப் பொறுத்தவரையில் நமக்கு வருகிற கஷ்டத்திற்கான காரணத்தை அறிந்திருக்கிறோம். ஆனால் யோபுவுக்கோ தனக்கு வந்த கஷ்டங்களுக்கான காரணம் தெரிந்திருக்கவில்லை; அதனால்தான், “கர்த்தர் கொடுத்தார்” ‘கர்த்தரே எடுத்துவிட்டார்’ என்ற தவறான முடிவுக்கு அவர் வந்தார். (யோபு 1:21) ஒருவேளை சாத்தானேகூட யோபுவை அவ்வாறு நினைக்க வைத்திருக்கலாம்.
11. பிரச்சினைகள் வந்தபோது யோபு என்ன செய்தார் என்பதை விளக்குங்கள்.
11 மனைவி பேச்சைக் கேட்டு யோபு கடவுளைத் தூஷிக்கவில்லை என்றாலும், அவர் மனதளவில் உடைந்துபோயிருந்தார். (யோபு 2:9, 10) ‘கெட்ட ஜனங்கள் என்னைவிட சந்தோஷமாக இருக்கிறார்களே’ என்று கூறினார். (யோபு 21:7-9) ‘கடவுள் ஏன் என்னைத் தண்டிக்கிறார்?’ என அவர் யோசித்திருக்கக்கூடும். தனக்குச் சாவு வராதா என்றுகூட சில சமயங்களில் நினைத்தார். அதனால்தான், ‘நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து’ வையும் என்று புலம்பினார்.—யோபு 14:13.
12, 13. யோபுவின் மூன்று நண்பர்கள் அளித்த விளக்கங்கள் அவரை எவ்வாறு பாதித்தன?
12 யோபுவின் மூன்று நண்பர்கள் ‘அவருக்காகப் பரிதபிக்கவும், அவருக்கு ஆறுதல்சொல்லவும்’ வந்ததாகச் சொல்லிக்கொண்டார்கள். (யோபு 2:11) ஆனால், அவர்கள் ‘அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்களாக,’ அதாவது, உபத்திரவம் தருகிற நண்பர்களாக இருந்தார்கள். (யோபு 16:2) தன் மனதிலிருந்த பாரத்தை இறக்கி வைப்பதற்கு அந்த நண்பர்கள் உதவியிருந்தால் யோபு எவ்வளவாய் ஆறுதலடைந்திருப்பார்! ஆனால், அவர்களோ எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல், ஏற்கெனவே குழம்பிப்போயிருந்தவரை இன்னும் அதிகமாகக் குழப்பி, அவருடைய வேதனையைக் கூட்டினார்கள்.—யோபு 19:2; 26:2.
13 ‘நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏன் இந்தக் கஷ்டங்கள்?’ என்று யோபு ஒருவேளை தனக்குத்தானே கேட்டிருக்கலாம். அவருடைய நண்பர்கள் அளித்த விளக்கங்கள் முற்றிலும் தவறானவையாகவே இருந்தன. யோபு, ஏதோ ஒரு பெரிய பாவத்தைச் செய்திருந்ததால்தான் இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார் என அவர்கள் நினைத்தார்கள். அதனால்தான் எலிப்பாஸ் இவ்வாறு கேட்டார்: “குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ?” அதோடு, “நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்” என்றும் கூறினார்.—யோபு 4:7, 8.
14. ஏதோ தவறு செய்ததாலேயே கஷ்டப்படுகிறோமென நாம் ஏன் உடனடியாக முடிவு செய்துவிடக் கூடாது?
14 ஆன்மீக காரியங்களில் அல்லாமல் மாம்சத்திற்குரிய காரியங்களில் ஈடுபடும்போது பிரச்சினைகள் வரலாம். (கலாத்தியர் 6:7, 8) ஆனாலும், இந்தப் பொல்லாத உலகில் இருக்கும்வரை நாம் நன்மை செய்தாலும் சரி தீமை செய்தாலும் சரி, பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதோடு, நல்லவர்களுக்கு கஷ்டமே வராது என்று நாம் சொல்ல முடியாது. ‘மாசில்லாதவரும் . . . பாவிகளுக்கு விலகினவருமான’ இயேசு கிறிஸ்துவே கழுமரத்தில் பாடுபட்டு மரித்தார். அப்போஸ்தலன் யாக்கோபுவும் தியாகியாக உயிரை விட்டார். (எபிரெயர் 7:26; அப்போஸ்தலர் 12:1, 2) எலிப்பாஸும் அவருடைய இரண்டு நண்பர்களும் யோபுவுக்குத் தவறான விளக்கம் அளித்தனர்; ஆகவேதான் யோபு, தன் பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவும் தான் எந்தப் பாவமும் செய்யவில்லை என்பதை நிரூபிக்கவும் தூண்டப்பட்டார். அவரது நண்பர்களோ, யோபு தவறு செய்ததாலேயே அவருக்குக் கஷ்டம் வந்தது என்று அடித்துக் கூறினார்கள். இதனால் ஒருவேளை, கடவுளுடைய நீதியையே அவர் சந்தேகிக்க ஆரம்பித்திருக்கலாம்.—யோபு 34:5; 35:2.
துன்பத்தில் உதவி
15. கஷ்டங்களை எதிர்ப்படுகையில் எப்படிப்பட்ட மனோபாவம் நமக்குக் கைகொடுக்கும்?
15 இதில் நமக்கு ஏதாவது பாடம் இருக்கிறதா? நமக்கு வரும் கஷ்டங்களும் வியாதிகளும் துன்புறுத்தல்களும் அநியாயமானவையாகத் தோன்றலாம். அவற்றில் பெரும்பாலானவை மற்றவர்களுக்கு வராததுபோல் தோன்றலாம். (சங்கீதம் 73:3-12) சில சமயங்களில் பின்வரும் முக்கியமான கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கும்: ‘எனக்கு என்ன நேரிட்டாலும் தொடர்ந்து கடவுளைச் சேவிப்பதற்கு அவர் மீதுள்ள அன்பு என்னைத் தூண்டுகிறதா? தம்மை ‘நிந்திக்கிறவனுக்கு [யெகோவா] உத்தரவுகொடுக்கும்’ விதத்தில் நடந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேனா?’ (நீதிமொழிகள் 27:11; மத்தேயு 22:37) யோசிக்காமல்கொள்ளாமல் எதையாவது சொல்லிவிடுகிறவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு நம்முடைய பரலோகத் தந்தையை நாம் சந்தேகிக்கக் கூடாது. தீரா வியாதியினால் பல வருடங்களாக அவதிப்பட்ட ஓர் உண்மையுள்ள கிறிஸ்தவப் பெண்மணி ஒருமுறை இப்படிச் சொன்னார்: “என்னால் தாங்க முடிந்ததைத்தான் யெகோவா அனுமதிப்பாரென்று எனக்குத் தெரியும். அதைத் தாங்குவதற்கான சக்தியையும் அவர் கொடுப்பாரென்று எனக்கு நன்றாகவே தெரியும். அதை எப்போதுமே அவர் எனக்குக் கொடுத்து வந்திருக்கிறார்.”
16. கஷ்டப்படுகிறவர்களுக்கு கடவுளுடைய வார்த்தை எவ்விதத்தில் கைகொடுக்கிறது?
16 சாத்தானுடைய தந்திரங்களைப் பற்றி யோபுவைவிட நாம் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறோம். “அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.” (2 கொரிந்தியர் 2:11) அதுமட்டுமல்ல, ஏராளமான நடைமுறை ஆலோசனைகள் நம் கைவசம் உள்ளன. பல்வேறு விதமான கஷ்டங்களைச் சகித்த உண்மையுள்ள ஆண்கள் பெண்களின் உதாரணங்கள் பைபிளில் பதிவாகியுள்ளன. கிறிஸ்தவர்களில் பெரும்பாலோரைவிட அதிகமாகக் கஷ்டப்பட்ட அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோமர் 15:4) இரண்டாம் உலக யுத்தத்தின்போது விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருந்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஓர் ஐரோப்பிய சாட்சி, ஒரு பைபிளைப் பெறுவதற்காக மூன்று நாள் சாப்பாட்டைத் தியாகம் செய்தார். “அந்தத் தியாகத்தால் எத்தனை கோடி நன்மைகள்! . . . என்னுடைய வயிற்றுப் பசி தீரவில்லையென்றாலும் ஆன்மீகப் பசி தீர்ந்தது. துயரமான அந்தக் காலங்களின்போது வந்த சோதனைகளைச் சமாளிக்க எனக்கும் என்னோடுகூட இருந்தவர்களுக்கும் அந்தப் பைபிள்தான் உதவியது. அதை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.”
17. நாம் சகித்திருப்பதற்கு கடவுள் என்னென்ன உதவிகளை அளித்திருக்கிறார்?
17 பைபிள் நமக்கு ஆறுதல் அளிக்கிறது. அதோடு, பைபிள் சார்ந்த பல பிரசுரங்களும் நம் கஷ்டங்களைச் சமாளிப்பதற்கான நடைமுறை ஆலோசனைகளை அளிக்கின்றன. நீங்கள் உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸின் உதவியுடன் பிரசுரங்களை எடுத்துப் பார்த்தால், உங்களைப் போலவே கஷ்டம் அனுபவித்த இன்னொரு கிறிஸ்தவரின் அனுபவம் உங்கள் கண்ணில் படலாம். (1 பேதுரு 5:9) உங்களை நன்றாகப் புரிந்துகொள்கிற மூப்பர்களிடமோ முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவர்களிடமோ உங்களுடைய நிலைமையை எடுத்துச் சொல்வது பலன் அளிக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, ஜெபத்தின் மூலமாக யெகோவாவின் உதவியை நாடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக உங்களுக்கு உதவுவார். சாத்தானின் ‘குட்டுகளை’ பவுல் எவ்வாறு தாக்குப்பிடித்தார், தெரியுமா? கடவுளுடைய வல்லமையில் சார்ந்திருக்கக் கற்றுக்கொண்டதன் மூலமே. (2 கொரிந்தியர் 12:9, 10) “என்னைப் பெலப்படுத்துகிறவராலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” என்று அவர் எழுதினார்.—பிலிப்பியர் 4:13, NW.
18. சக கிறிஸ்தவர்கள் எவ்வாறு உற்சாக ஊற்றாகத் திகழலாம்?
18 எனவே, தேவையான உதவி கிடைப்பதால், அதைப் பெற்றுக்கொள்ள ஒருபோதும் நீங்கள் தயங்கக்கூடாது. “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” என்கிறது ஒரு நீதிமொழி. (நீதிமொழிகள் 24:10) கறையான் ஒரு மரத்தை எப்படி அரித்துவிடுமோ அதேபோல் மனதளவில் சோர்வடைவது ஒரு கிறிஸ்தவரின் உத்தமத்தன்மையை பலவீனப்படுத்திவிடும். இதைச் சமாளிப்பதற்கு சக விசுவாசிகள் மூலமாக யெகோவா நமக்கு ஆதரவு அளிக்கிறார். இயேசு கைதுசெய்யப்பட்ட அந்த இரவு ஒரு தேவதூதன் அவரைப் பலப்படுத்தினார். (லூக்கா 22:43) ரோமுக்கு பவுல் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட சமயத்தில், அப்பியுபுரம் சந்தையிலும் மூன்று சத்திரத்திலும் தனக்கு எதிர்கொண்டு வந்த சகோதரர்களைச் சந்தித்தபோது, ‘தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்.’ (அப்போஸ்தலர் 28:15) ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் இளம் சாட்சி, ராவன்ஸ்புரூக் சித்திரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டபோது பயந்துகொண்டே சென்றார்; ஆனால் என்ன நடந்தது என்பதை அவரே சொல்கிறார்: அங்கு “சென்ற உடனேயே ஒரு சகோதரி என்னை அன்போடு வரவேற்றார். . . . இன்னொரு விசுவாசமுள்ள சகோதரி என்னை நன்றாகக் கவனித்துக்கொண்டார். ஆன்மீக ரீதியில் அவர் எனக்குத் தாய்போல் இருந்தார்.” அன்று தனக்குக் கிடைத்த உதவியை அவர் இன்றும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்.
“உண்மையாயிரு”
19. சாத்தானின் தாக்குதல்களை எதிர்த்து நிற்க யோபுவுக்கு எது உதவியது?
19 யோபு “உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறான்” என்று யெகோவா கூறினார். (யோபு 2:3) யோபு ரொம்பவே நொந்துபோயிருந்தார். தான் கஷ்டப்படுவதற்கான காரணத்தையும் அவர் அறிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும், யெகோவாவுக்கு உத்தமமாக இருக்க வேண்டுமென்பதில் அவர் தீர்மானமாக இருந்திருந்தார். சோதனை வந்தபோதும் அதை விட்டுக்கொடுக்க அவர் தயாராக இருக்கவில்லை. “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்” என்று உறுதியாகக் கூறினார்.—யோபு 27:5.
20. கஷ்டங்களைச் சகிப்பது ஏன் பிரயோஜனமானது?
20 யோபுவுக்கு இருந்த அதே மன உறுதி நமக்கும் இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் நாம் யெகோவாவுக்கு உத்தமமாயிருக்க அது உதவி செய்யும். சோதனைகளோ, எதிர்ப்புகளோ, கஷ்டங்களோ எது வந்தாலும் சரி, நம் உத்தமத்தை விட்டு வழுவாமல் இருக்க அது நிச்சயம் உதவி செய்யும். சிமிர்னா சபைக்கு இயேசு இவ்வாறு கூறினார்: “நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில்போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள் (சோதனைகளையோ, எதிர்ப்புகளையோ, கஷ்டங்களையோ எதிர்ப்படுவீர்கள்). ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.”—வெளிப்படுத்துதல் 2:10.
21, 22. உபத்திரவ காலங்களில் எதை மனதில் வைத்திருப்பது நமக்கு ஆறுதல் தரும்?
21 சாத்தானுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கிற இந்த உலகில் நம்முடைய சகிப்புத்தன்மையும் உத்தமத்தன்மையும் சோதிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும், நமக்கு எதிர்கால நம்பிக்கை இருப்பதால் இன்று நமக்கிருக்கும் எந்தக் கஷ்டத்தைக் குறித்தும் நாம் பயப்பட வேண்டியதில்லை என்பதாக இயேசு உறுதி அளிக்கிறார். யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும், அதுதான் முக்கியம். “நம்முடைய உபத்திரவம் அதிசீக்கிரத்தில் நீங்கும்” என்று பவுல் சொன்னார். யெகோவா நமக்கு வாக்குறுதி அளித்திருக்கும் ‘மகிமையோ’ [அதாவது, பரிசோ] ‘நித்திய கனமகிமையாக’ இருக்கிறது என்றார். (2 கொரிந்தியர் 4:17, 18) யோபுவுக்கு வந்த கஷ்டத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி, அவர் சந்தோஷமாக இருந்த காலங்களுடன் ஒப்பிடும்போது அவருடைய உபத்திரவ காலம் மிகக் குறைவாகவே இருந்தது.—யோபு 42:16.
22 இருந்தாலும், சில சமயங்களில் கஷ்டங்கள் நம்மை ஓட ஓட விரட்டுவதுபோல் தோன்றலாம், இனிமேலும் நம்மால் பொறுக்க முடியாததுபோல் தோன்றலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சகித்திருப்பதற்கு யோபுவின் உதாரணம் நமக்கு எப்படி உதவும் என்பதைப் பின்வரும் கட்டுரையில் சிந்திப்போம். கஷ்டத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு நாம் எவ்வாறு பக்கபலமாக இருக்கலாம் என்பதையும் சிந்திப்போம்.
உங்களால் விளக்க முடியுமா?
• யோபுவின் உத்தமத்தன்மையைக் குறித்து என்ன முக்கிய விவாதத்தை சாத்தான் எழுப்பினான்?
• கஷ்டங்களைக் கண்டு நாம் ஏன் ஆச்சரியப்படத் தேவையில்லை?
• சகித்திருப்பதற்கு யெகோவா நமக்கு எப்படி உதவுகிறார்?
[பக்கம் 23-ன் படங்கள்]
ஆராய்ச்சி செய்வதும், முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்களிடம் பேசுவதும், ஜெபத்தில் யெகோவாவிடம் மனம்விட்டுப் பேசுவதும் நாம் சகித்திருக்க உதவும்