மனிதவர்க்கத்துக்கு உண்மையில் ஒரு மேசியா தேவையா?
“உலகிற்கு ஒரு மேசியா தேவை, என்கிறார் அதிகாரி”
அந்தத் தலைப்புச்செய்தி 1980-ல் கானடாவிலுள்ள டாரோன்டோவின் தி பைனான்ஷியல் போஸ்ட்-ல் காணப்பட்டது. இப்படியாகச் சொன்ன அதிகாரி க்ளப் ஆப் ரோம் என்பதாக அழைக்கப்படும் பிரபலமான ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஸ்தாபகருமான ஆரில்யோ பெக்காய் என்பவராவார். போஸ்ட்-ன் பிரகாரம், “பொதுமக்களை வசீகரிக்கக்கூடிய ஒரு தலைவரே—அறிவியல், அரசியல் அல்லது மதத்தலைவரே—நாகரிகத்தை அழித்துவிடுவதாக அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சமுதாய மற்றும் பொருளாதார கிளர்ச்சியிலிருந்து உலகிற்கு ஒரே விமோச்சனமாக இருப்பார்.” நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மனிதவர்க்கத்துக்கு ஒரு மேசியா தேவைப்படும் அளவுக்கு இந்த உலகம் உண்மையிலேயே பயங்கர இக்கட்டான ஒரு நிலையில் இருக்கிறதா? இந்த உலகம் எதிர்ப்படும் பிரச்னைகளில் ஒன்றைப் பற்றி மாத்திரமே சிந்தித்துப்பாருங்கள்—பசி.
இரண்டு பெரிய பழுப்புநிற கண்கள், ஒரு செய்தித்தாள் அல்லது பத்திரிகையிலுள்ள ஒரு படத்திலிருந்து உங்களை உற்றுப்பார்க்கிறது. அவை ஒரு குழந்தையின், ஐந்து வயதும்கூட பூர்த்தியாகாத ஒரு சிறுமியின் கண்கள். ஆனால் இந்தக் கண்கள் உங்களை புன்முறுவல் செய்ய வைப்பதில்லை. பிள்ளைகளுக்கே உரிய பளபளப்போ, ஆச்சரியத்தின் ஆனந்த உணர்வோ, அப்பாவித்தனமான நம்பிக்கையோ அவற்றிற்கு இல்லை. மாறாக அவை புரியாத ஒரு வேதனை, சலிப்புத்தரும் நோவு மற்றும் தீராத பசியால் நிரம்பியிருக்கின்றன. அந்தப் பிள்ளை பசியால் வாடிக்கொண்டிருக்கிறது. அவள் அறிந்ததெல்லாம் வேதனையும் பசியுமே.
ஒருவேளை அநேகரைப் போலவே நீங்கள் இப்படிப்பட்ட படங்களை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருக்க விரும்பாமல் வேகமாக பக்கத்தை திருப்பிவிடலாம். உங்களுக்கு அக்கறை இல்லை என்பதால் இல்லை, ஆனால் இந்தப் பெண்ணுக்கு மிகவும் பிந்திவிட்டது என்று நீங்கள் சந்தேகிப்பதால் நம்பிக்கையில்லாமல் நீங்கள் உணருகிறீர்கள். மெலிந்த கைகால்களும் உப்பிய வயிறும், அவளுடைய சரீரம் ஏற்கெனவே அழிய ஆரம்பித்துவிட்டது என்பதற்கு அறிகுறியாக இருக்கிறது. அவள் படத்தை நீங்கள் பார்க்கும் சமயத்தில் ஒருவேளை அவள் ஏற்கெனவே மரித்துவிட்டிருக்கக்கூடும். இன்னும் மோசமாக, அவளுடைய நிலை, ஏதோவொரு இடத்தில் எப்போதாவது ஏற்படும் ஒன்று கிடையவே கிடையாது என்பது உங்களுக்குத் தெரியும்.
பிரச்னை உண்மையில் எவ்வளவு விரிவாயுள்ளது? சரி, உங்களால் ஒரு கோடியே 40 லட்சம் பிள்ளைகளைக் கற்பனை செய்ய முடிகிறதா? நம்மில் அநேகரால் முடியாது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அப்படியென்றால் 40,000 மக்கள் அமரக்கூடிய ஓர் அரங்கத்தை கற்பனை செய்துபாருங்கள். அதில் அதன் முழுஅளவுவரை பிள்ளைகள் இருப்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்—வரிசைக்கு வரிசை, அடுக்குக்கு அடுக்கு—சமுத்திரம் போன்ற முகங்கள். அதுவும்கூட கற்பனை செய்வதற்கு கடினமாயுள்ளது. என்றபோதிலும், ஒரு கோடியே 40 லட்சமாவதற்கு இப்படிப்பட்ட 350 அரங்கங்கள் பிள்ளைகளால் நிரப்பப்பட வேண்டும். உலக நாடுகள் குழந்தைநல அவசர ஏற்பாட்டு நிதி நிறுவனத்தின்படி (UNICEF) (ஐக்கிய நாடுகள் குழந்தைநல நிதி) இது ஆண்டுதோறும் வளர்ந்துவரும் தேசங்களில் சத்துக்குறைவான ஊட்டத்தினாலும் எளிதில் தவிர்க்கப்படக்கூடிய வியாதிகளினாலும் மரித்துப்போகும் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் அதிர்ச்சிதரும் எண்ணிக்கையாகும். அது ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் ஓர் அரங்கம் முழுவதிலுமுள்ள பிள்ளைகளுக்கு சமமாக உள்ளது! இதோடு பசியாயுள்ள வயது வந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், உலகம் முழுவதிலும் தீராத சத்துக்குறைவான ஊட்டமுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் நூறு கோடியாக இருக்கிறது.
ஏன் இந்த எல்லா பசியும்?
இந்தக் கிரகம் மனிதர்கள் தற்போது நுகரக்கூடியதற்கும் அதிகமான உணவை விளைவிக்கிறது, இது இன்னும் அதிகத்தை விளைவிக்க திறமுடையதாக இருக்கிறது. இருந்தபோதிலும், ஒவ்வொரு நிமிடமும், 26 பிள்ளைகள் சத்துக்குறைவான உணவினாலும் வியாதியினாலும் மரிக்கின்றனர். அதே நிமிடத்தில் உலகம் யுத்தத்துக்கு ஆயத்தஞ்செய்வதில் சுமார் 20,00,000 டாலர்கள் செலவழிக்கிறது. அந்த எல்லா பணமும்—அல்லது அதில் ஒரு சிறிய பின்னமும்கூட—அந்த 26 பிள்ளைகளுக்கு என்ன செய்யக்கூடும் என்பதை உங்களால் கற்பனை செய்துபார்க்கமுடிகிறதா?
உலகின் பசிக்கு வெறுமனே உணவு அல்லது பண பற்றாக்குறையை காரணங்காட்ட முடியாது என்பது தெளிவாக இருக்கிறது. பிரச்னை இன்னும் ஆழமாகச் செல்கிறது. ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் ஜார்ஜ் E. ஹார்டாய் சொன்னவண்ணமாகவே, “மொத்தத்தில் உலகம் வசதி, அதிகாரம், நேரம், வளஆதாரங்கள் மற்றும் அறிவு, இவை அதிகம் தேவைப்படும் நிலையிலுள்ள மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள முடியாத தீராத குறைபாடுள்ளதாய் இருக்கிறது.” ஆம், பிரச்னை மனித வளஆதாரங்கள் பேரில் அல்ல, ஆனால் மனிதனில் தானே இருக்கிறது. பேராசையும் சுயநலமும் மனித சமுதாயத்தில் மேலோங்கியிருக்கும் சக்திகளாக இருக்கின்றன. பூமியிலுள்ள மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் மிகப்பெரிய பணக்காரர்கள் மிகவும் ஏழ்மையிலிருக்கும் ஐந்தில் ஒரு பங்கு மக்களைவிட சுமார் 60 மடங்குகள் அதிகமாக பண்டங்களையும் பணிகளையும் அனுபவித்து மகிழ்கின்றனர்.
உண்மைதான், சிலர் பசியாயிருப்பவர்களுக்கு உணவு கிடைக்கப்பெறச் செய்வதற்கு உண்மையாக முயற்சி செய்கின்றனர், ஆனால் அவர்களுடைய பெரும்பாலான முயற்சிகள் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணக்கூறுகளினால் பயனற்றதாகிவிடுகின்றன. பஞ்சம் பொதுவாக உள்நாட்டுப் போர் அல்லது கலகத்தால் பீடிக்கப்பட்ட தேசங்களை அடிக்கடி அல்லல்படுத்துகிறது, தேவையிலிருப்பவர்களுக்கு நிவாரண உதவி கிடைப்பதை போரிட்டுக்கொண்டிருக்கும் படைகள் தடைசெய்வது வழக்கத்துக்கு மாறாக இல்லை. இரு சாராருமே, விரோதியின் பிராந்தியத்திலுள்ள வறுமையிலிருக்கும் பொது மக்களுக்கு உணவு சென்றடைவதை அனுமதிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் விரோதிகளுக்கு உணவளித்துவிடுவார்களோ என்ற பயத்திலிருக்கின்றனர். அரசாங்கங்கள் தாமேயும்கூட வறுமையை ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகின்றன.
பரிகாரம் இல்லையா?
வருந்தத்தக்க வகையில், வறுமையில் வாடும் லட்சக்கணக்கானோரின் பிரச்னை நவீன மனிதனை அல்லல்படுத்தும் ஒரே நெருக்கடியாக இல்லை. சுற்றுப்புறச்சூழல் மட்டுமீறி அழிக்கப்படுவதும் நச்சுப்படுத்தப்படுவதும், லட்சக்கணக்கானோரின் உயிரை அழித்துவிடும் விடாது தொடர்ந்திருக்கும் போரின் தொல்லையும், எல்லா இடங்களிலும் பயத்தையும் அவநம்பிக்கையையும் பெருக்கிவரும் வன்முறையான குற்றச்செயல் வேகமாக அதிகரிப்பதும், இந்தத் தீங்குகள் பலவற்றிற்கும் காரணமாக இருப்பதாக தோன்றும் சீர்குலைந்த வண்ணமே இருக்கும் ஒழுக்கச் சூழ்நிலையும்—உலக முழுவதிலுமுள்ள இந்த எல்லா நெருக்கடிகளும் கைக்கோர்த்துக்கொண்டு, மனிதன் தன்னைத்தானே வெற்றிகரமாக ஆண்டுக்கொள்ள முடியாது என்ற மறுக்க முடியாத உண்மையை ஊர்ஜிதப்படுத்துகின்றன.
இதன் காரணமாகவே, உலகின் பிரச்னைகளுக்கு தீர்வைக் காண்பது பற்றி அநேக மக்கள் மனமுறிந்துபோயிருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை. மற்றவர்கள் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட இத்தாலிய கல்விமான் ஆரில்யோ பெக்காய் உணர்ந்தது போல உணருகிறார்கள். பரிகாரம் ஒன்று இருக்குமானால்—ஒருவேளை மனிதனுக்கு அப்பாற்பட்ட—ஊற்றுமூலத்திலிருந்து அது வரவேண்டும் என்பதாக விவாதிக்கிறார்கள். மேசியா ஒருவர் பற்றிய கருத்து சக்திவாய்ந்த கவர்ச்சியுள்ளதாக இருக்கிறது. ஆனால் ஒரு மேசியாவில் நம்பிக்கை வைப்பது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறதா? அல்லது அது வெறுமனே விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் எண்ணமா?