“நாங்கள் மேசியாவைக் கண்டோம்”!
“அவன் [அந்திரேயா] முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; (மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்).”—யோவான் 1:41.
1. நாசரேத்திலிருந்து வந்த இயேசுவைக் குறித்து முழுக்காட்டுபவனாகிய யோவான் என்ன சாட்சிகொடுத்தார், அவரைக் குறித்து அந்திரேயா என்ன முடிவுக்கு வந்தார்?
அந்திரேயா, நாசரேத்திலிருந்து வந்த இயேசு என்றழைக்கப்பட்ட யூத மனிதரை நீண்ட நேரம் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு ராஜாவின் அல்லது ஒரு ஞானியின் அல்லது ஒரு ரபியின் தோற்றமிருக்கவில்லை. அவருக்கு அரச குடும்பத்துக்குரிய ஆடை அணிகலனோ, நரைத்த மயிரோ அல்லது மென்மையான கரங்களோ செம்மேனியோ இருக்கவில்லை. இயேசு இளைஞராக—சுமார் 30 வயதினராக—உழைப்பாளியின் காய்ப்பேறிய கைகளோடும் பழுப்புநிற மேனியோடும் இருந்தார். ஆகவே அவர் ஒரு தச்சனாக இருந்தார் என்பதை அந்திரேயா அறிந்துகொண்டபோது அவர் ஆச்சரியமடைந்திருக்கமாட்டார். இருந்தபோதிலும், முழுக்காட்டுபவனாகிய யோவான் இந்த மனிதனைக் குறித்து, “இதோ, தேவ ஆட்டுக்குட்டி,” என்று சொன்னார். இதற்கு முந்தின தினம் யோவான் இதைக்காட்டிலும் அதிக வியப்பூட்டுவதாய் இருந்த ஏதோவொன்றைச் சொல்லியிருந்தார்: “இவரே தேவனுடைய குமாரன்.” இது உண்மையாக இருக்கக்கூடுமா? அன்றையத்தினம் அந்திரேயா இயேசு பேசியதைக் கேட்டுக்கொண்டிருப்பதில் கொஞ்ச நேரம் செலவழித்திருந்தார். இயேசு என்ன சொன்னார் என்பது நமக்குத் தெரியாது; அவருடைய வார்த்தைகள் அந்திரேயாவின் வாழ்க்கையை மாற்றியது என்பது நமக்குத் தெரியும். அவர் தன் சகோதரன் சீமோனைக் காண விரைந்து சென்று, “மேசியாவைக் கண்டோம்,” என்று உணர்ச்சிப் பொங்கக் கூறினார்!—யோவான் 1:34-41.
2. இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக இருந்தாரா என்பதற்குரிய அத்தாட்சியை சிந்திப்பது ஏன் முக்கியமாக இருக்கிறது?
2 அந்திரேயாவும், சீமோனும் (இயேசுவால் பேதுரு என்று மறுபெயரிடப்பட்டவர்) பின்னால் இயேசுவின் அப்போஸ்தலர்களானார்கள். இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அவருடைய சீஷராக இருந்த பின்னர், பேதுரு இயேசுவிடம், “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து [மேசியா]” என்றார். (மத்தேயு 16:16) உண்மையுள்ள அப்போஸ்தலர்களும் சீஷர்களும் அந்த நம்பிக்கைக்காக இறுதியில் மரிக்கவும் மனமுள்ளவர்களாக நிரூபித்தனர். இன்று லட்சக்கணக்கான உண்மை மனதுள்ளோர் அதேப் போன்ற பற்றுறுதியுள்ளவர்களாக இருக்கின்றனர். ஆனால் என்ன அத்தாட்சியின் அடிப்படையில்? எப்படியிருந்தாலும் அத்தாட்சி என்பது, விசுவாசத்துக்கும் வெறுமனே எளிதில் நம்பிவிடுவதற்குமிடையே வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது. (எபிரெயர் 11:1 பார்க்கவும்.) ஆகவே இயேசு உண்மையிலேயே மேசியா என்பதை நிரூபிக்கும் மூன்று பொதுவான அத்தாட்சி குறிப்புகளை நாம் சிந்திப்போமாக.
இயேசுவின் வம்சாவழி
3. மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷங்கள் இயேசுவின் வம்சாவழி குறித்து விவரமாக குறிப்பிடுவது என்ன?
3 இயேசுவின் மேசியானிய அந்தஸ்துக்குக் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் அளிக்கும் முதல் அத்தாட்சி அவருடைய வம்சாவழியாகும். மேசியா, தாவீது ராஜாவின் குடும்ப வம்சத்தில் வருவார் என்பதாக பைபிள் முன்னறிவித்திருந்தது. (சங்கீதம் 132:11, 12; ஏசாயா 11:1, 10) மத்தேயுவின் சுவிசேஷம் இவ்வாறு ஆரம்பிக்கிறது: “ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய வம்சவரலாறு.” இயேசுவின் வம்சாவழியை அவருடைய வளர்ப்புத் தகப்பனாகிய யோசேப்பின் வம்சத்தில் தேடிக்கண்டுபிடிப்பதன் மூலம் மத்தேயு துணிச்சலான அறிக்கைக்கு ஆதாரத்தைக் கொடுக்கிறார். (மத்தேயு 1:1-16) லூக்காவின் சுவிசேஷம் இயேசுவின் வம்சாவழியை அவருடைய சொந்த தாய் மரியாளின் மூலமாக தாவீதுக்கும் ஆபிரகாமுக்கும் பின்னர் ஆதாம் வரையாகவும் பின்தொடர்ந்து செல்கிறது. (லூக்கா 3:23-38)a இவ்விதமாக சுவிசேஷ எழுத்தாளர்கள் இயேசு சட்டப்படியும் இயற்கையான ஒரு கருத்திலும் தாவீதின் வாரிசு என்ற தங்கள் அறிக்கைக்கு முழுமையாக ஆதார சான்றளிக்கிறார்கள்.
4, 5. (எ) இயேசுவோடு சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் அவர் தாவீதின் பரம்பரையில் வந்தவர் என்பதை மறுத்துக்கூறினரா, இது ஏன் முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறது? (பி) பைபிளுக்கு வெளியேயுள்ள குறிப்புரைகள் எவ்விதமாக இயேசுவின் வம்சாவழியை ஆதரிக்கின்றன?
4 இயேசுவின் மேசியானிய அந்தஸ்தின் அதிக ஐயுறவாதியான எதிரியும்கூட, தாவீதின் குமாரன் என்ற இயேசுவின் அறிக்கையை மறுதலிக்க முடியாது. ஏன்? இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒரு காரணம், எருசலேம் நகரம் பொ.ச. 70-ல் அழிக்கப்படுவதற்கு முன்பாக பல பத்தாண்டுகளாக அந்த அறிக்கை மிகப்பரவலாக திரும்பத் திரும்ப செய்யப்பட்டு வந்தது. (மத்தேயு 21:9; அப்போஸ்தலர் 4:27; 5:27, 28 ஒப்பிடவும்.) அறிக்கை தவறாக இருந்தால், இயேசுவின் எதிரிகளில் எவரும்—அவருக்கு அநேகர் இருந்தனர்—பொது சுவடிக்கூடங்களிலுள்ள வம்சவரலாறுகளில் அவருடைய வம்சாவழியை சரிபார்ப்பதன் மூலம் இயேசுவைப் போலியானவர் என்பதாக நிரூபித்திருக்கக்கூடும்.b ஆனால் இயேசு தாவீது ராஜாவின் பரம்பரையில் வந்தவர் என்பதை எவரும் சந்தேகித்ததாக சரித்திரத்தில் எந்தப் பதிவும் இல்லை. தெளிவாகவே அறிக்கை மறுத்துக்கூற முடியாதிருந்தது. மத்தேயுவும் லூக்காவும் தங்களுடைய பதிவுகளில் அவருடைய பரம்பரையை நிரூபிக்கத் தேவையாயிருந்த பெயர்களைப் பொது பதிவுகளிலிருந்து நேரடியாகப் பார்த்து எழுதியிருக்கவேண்டும் என்பதில் சந்தேகமேதுமில்லை.
5 இரண்டாவதாக பைபிளுக்கு வெளியேயுள்ள ஆதார ஏடுகள் இயேசுவின் வம்சாவழி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்கின்றன. உதாரணமாக, நான்காவது நூற்றாண்டைச் சேர்ந்த ரபி ஒருவர் ‘தச்சர்களோடு வேசித்தனம் பண்ணினதற்காக,’ இயேசுவின் தாயாகிய மரியாளை மிகவும் கொச்சையாகத் தாக்குவதாக தால்முட் பதிவு செய்கிறது. ஆனால் அதே பகுதி “அவள் இளவரசர்கள் மற்றும் அரசர்களின் வழியில் தோன்றியவள்,” என்பதாக ஒத்துக்கொள்கிறது. இதற்கு முன்னதாக ஓர் உதாரணம் இரண்டாவது நூற்றாண்டு வரலாற்றாசிரியர் ஹெஜஸிபஸ் ஆகும். ரோம இராயன் டாமிஷன் தாவீதின் வழியில் தோன்றிய எவரையும் நிர்மூலமாக்கிவிடவேண்டும் என்று விரும்பியபோது, பூர்வ கிறிஸ்தவர்களின் சில எதிரிகள் இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யூதாவின் பேரனை “தாவீதின் குடும்பத்தானாக இருந்ததற்காக” வெளிப்படையாகக் கண்டனம் செய்தார்கள் என அவர் விவரித்தார். யூதா தாவீதின் வழியில் தோன்றியவராக அறியப்பட்டிருந்தால், இயேசுவும் அவ்வாறே அறியப்பட்டிருப்பார் அல்லவா? மறுக்க முடியாத விதமாக!—கலாத்தியர் 1:19; யூதா 1.
மேசியானிய தீர்க்கதரிசனங்கள்
6. எபிரெய வேதாகமத்தில் மேசியானிய தீர்க்கதரிசனங்கள் எவ்வளவு ஏராளமாக இருக்கின்றன?
6 இயேசு மேசியாவாக இருந்தார் என்பதற்கு மற்றொரு அத்தாட்சி குறிப்பு நிறைவேற்றமடைந்த தீர்க்கதரிசனமாகும். மேசியாவுக்கு பொருந்துகின்ற தீர்க்கதரிசனங்கள் எபிரெய வேதாகமத்தில் ஏராளமாக இருக்கின்றன. மேசியாவாகிய இயேசுவின் வாழ்க்கையும் காலங்களும் (The Life and Times of Jesus the Messiah) என்ற தன்னுடைய புத்தகத்தில் ஆல்பிரட் எடர்ஷிம், பண்டையக் கால ரபீக்கள், மேசியாவுக்குரியதாக கருதிய 456 பகுதிகளை மொத்தமாக எபிரெய வேதாகமத்தில் கணக்கிடுகிறார்கள். இருப்பினும் ரபீக்கள் மேசியாவைக் குறித்து அநேக தவறான கருத்துக்களைக் கொண்டிருந்தனர்; அவர்கள் சுட்டிக்காண்பித்த அநேக பகுதிகள் மேசியாவுக்குரியதாக இருக்கவில்லை. இருந்தபோதிலும், மிகக் குறைத்துச் சொன்னாலும் இயேசுவை மேசியாவாக அடையாளங்காட்டும் தீர்க்கதரிசனங்கள் மிகப் பல உண்டு.—வெளிப்படுத்துதல் 19:10 ஒப்பிடவும்.
7. பூமியின்மீது தங்கியிருந்தபோது, இயேசு நிறைவேற்றிய சில தீர்க்கதரிசனங்கள் யாவை?
7 அவற்றில்: அவருடைய பிறப்பின் பட்டணம் (மீகா 5:2; லூக்கா 2:4-11); அவருடைய பிறப்புக்குப் பின் சம்பவித்த குழந்தைகளின் படுகொலை (எரேமியா 31:15; மத்தேயு 2:16-18); எகிப்திலிருந்து அவர் வரவழைக்கப்படுவார் (ஓசியா 11:1; மத்தேயு 2:15); பூமியின் ராஜாக்கள் அவரை அழிக்க ஒன்றுசேருவார்கள் (சங்கீதம் 2:1, 2; அப்போஸ்தலர் 4:25-28); அவர் 30 வெள்ளிக்காசுகளுக்குக் காட்டிக்கொடுக்கப்படுவார் (சகரியா 11:12; மத்தேயு 26:15); அவர் மரிக்கப் போகும் விதமும்கூட.—சங்கீதம் 22:16, NW, அடிக்குறிப்பு; யோவான் 19:18, 23; 20:25, 27.c
அவருடைய வருகை முன்னறிவிக்கப்பட்டுள்ளது
8. (எ) மேசியா எப்போது வருவார் என்பதை எந்தத் தீர்க்கதரிசனம் மிக நுட்பமாக குறிப்பிடுகிறது? (பி) இந்தத் தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொள்ளும் பொருட்டு என்ன இரண்டு காரியங்கள் அறியப்பட்டிருக்க வேண்டும்?
8 ஒரே ஒரு தீர்க்கதரிசனத்தின்மீது நாம் கவனத்தை ஒருமுகப்படுத்தலாம். தானியேல் 9:25-ல் மேசியா எப்போது வருவார் என்பது யூதர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது. அது வாசிக்கிறதாவது: “இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதல் பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும் அறுபத்திரண்டு வாரமும் செல்லும்.” முதல் பார்வையில் இந்தத் தீர்க்கதரிசனம் புதிராகத் தோன்றக்கூடும். ஆனால் விரிவான ஒரு கருத்தில் இரண்டு செய்திகளை மட்டுமே கண்டுபிடிக்கும்படியாக அது நம்மைக் கேட்கிறது: ஆரம்பமும் கால அளவும். இதை விளக்க, “நகரின் பூங்காவிலுள்ள கிணற்றுக்கு கிழக்கே 50 கோல்கள் தொலைவில்” புதைந்துகிடக்கும் ஒரு புதையலைச் சுட்டிக்காட்டும் ஒரு நிலப்படம் உங்களிடம் இருக்குமானால், கட்டளைகள் குழப்புவதாக நீங்கள் உணரக்கூடும்—விசேஷமாக இந்தக் கிணறு எங்கே இருக்கிறது என்பது அல்லது ஒரு ‘கோல்’ என்பது எவ்வளவு தூரம் என்பதும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தால். புதையலை நீங்கள் கண்டுபிடிக்கும் பொருட்டு அந்த இரண்டு உண்மைகளை நீங்கள் தேடி கண்டுபிடிக்கமாட்டீர்களா? ஆம், ஆரம்பத்தை அடையாளங்கண்டுகொண்டு அதைத் தொடர்ந்து வரும் காலப்பகுதியை நாம் அளவிடுகிறோம் என்பதைத் தவிர தானியேல் தீர்க்கதரிசனம் அதே மாதிரியாகவே இருக்கிறது.
9, 10. (எ) எதிலிருந்து 69 வாரங்கள் கணக்கிடப்படுகிறது (பி) எவ்வளவு நீண்ட காலமாக 69 வாரங்கள் இருந்தது, இது நமக்கு எப்படித் தெரியும்?
9 முதலாவது, ‘எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்பட்ட’ தேதியாகிய நம்முடைய ஆரம்பம் நமக்கு அவசியம். அடுத்து, அந்தக் கட்டத்திலிருந்து கால அளவை இந்த 69 (7 கூட்டல் 62) வாரங்கள் எவ்வளவு நீண்டகாலமாக இருந்தது என்பதை நாம் அறிவது அவசியம். இந்தத் தகவல்களில் எதுவுமே பெற்றுக்கொள்ள கடினமாயில்லை. எருசலேமைச் சுற்றியுள்ள மதிலைத் திரும்ப எடுத்துக் கட்டுவதற்கான கட்டளை, “அர்த்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம்,” வெளிப்பட்டு இவ்விதமாக அது கடைசியாக திரும்ப நிலைநாட்டப்பட்ட ஒரு நகரமாகியது என்பதாக நெகேமியா மிகத் தெளிவாக நமக்குச் சொல்கிறார். (நெகேமியா 2:1, 5, 7, 8) அது நம்முடைய ஆரம்பத்தை பொ.ச.மு. 455 ஆக வைக்கிறது.d
10 இந்த 69 வாரங்களைப் பொருத்த வரையில், அவை ஏழு நாட்களடங்கிய சொல்லர்த்தமான வாரங்களாக இருக்க முடியுமா? இல்லை. ஏனென்றால் மேசியா, பொ.ச.மு. 455-க்கு பின் ஒரு வருடத்துக்கும் சற்று மேலாக ஆன பின்பு தோன்றவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான பைபிள் கல்விமான்களும் எண்ணற்ற மொழிபெயர்ப்பாளர்களும் (இந்த வசனத்துக்கு ஓர் அடிக்குறிப்பில் யூத தானக் உட்பட) இவை வார “வருடங்கள்” என்பதை ஒப்புக்கொள்கின்றனர். இந்த ‘வார வருடம்,’ அல்லது ஓர் ஏழு-ஆண்டு சுழற்சி என்ற கருத்து பூர்வ யூதர்களுக்குப் பழக்கப்பட்டதாக இருந்தது. ஒவ்வொரு ஏழாவது நாளும் அவர்கள் ஓர் ஓய்வுநாளை ஆசரித்தது போலவே, அவர்கள் ஒவ்வொரு ஏழாவது வருடமும் ஓர் ஓய்வு வருடத்தை ஆசரித்தார்கள். (யாத்திராகமம் 20:8-11; 23:10, 11) ஆகவே 69 வார வருடங்கள், 7 வருடங்கள் 69 தடவைகளுக்கு, அல்லது மொத்தம் 483 வருடங்களாக இருக்கும். கணக்கிடுவது மட்டுமே நாம் செய்யவேண்டும். பொ.ச.மு. 455-லிருந்து 483 ஆண்டுகளை கணக்கிடுவது நம்மை பொ.ச. 29-ம் ஆண்டுக்குக் கொண்டுவருகிறது!—இயேசு முழுக்காட்டப்பட்டு மேசியாக் (ma·shiʹach), மேசியாவான அதே வருடம்!—வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை, புத்தகம் 2, பக்கம் 899-ல் “எழுபது வாரங்கள்,” பார்க்கவும்.
11. தானியேல் தீர்க்கதரிசனத்துக்கு அர்த்தஞ்சொல்ல இது ஒரு நவீன முறையாகவே இருக்கிறது என்பதாகச் சொல்பவர்களுக்கு நாம் எவ்விதமாக பதிலளிக்கலாம்?
11 சரித்திரத்துக்குப் பொருந்துவதற்காகத் தீர்க்கதரிசனத்துக்கு அர்த்தஞ்சொல்லும் நவீன முறையாகவே இது இருக்கிறது என்பதாக சிலர் ஒருவேளை ஆட்சேபிக்கக்கூடும். அப்படியானால், இயேசுவின் நாளில் இருந்த மக்கள், ஏன் அந்தச் சமயத்தில் மேசியா தோன்றுவதை எதிர்பார்த்திருந்தனர்? கிறிஸ்தவ சரித்திராசிரியன் லூக்கா, ரோம வரலாற்றாசிரியர்கள் டாசிட்டஸ் மற்றும் சூட்டோனியஸ், யூத சரித்திராசிரியன் ஜோஸிபஸ், யூத தத்துவஞானி ஃபில்லோ ஆகிய அனைவரும் ஏறக்குறைய இந்தச் சமயத்தில் வாழ்ந்து வந்தவர்களாக இந்த எதிர்பார்ப்பு நிலையைக் குறித்து சாட்சிப் பகர்ந்திருக்கின்றனர். (லூக்கா 3:15) சில கல்விமான்கள் இன்று, ரோம ஒடுக்குதல்தானே அந்த நாட்களில் யூதர்களை மேசியாவுக்காக ஏங்கவும் எதிர்பார்க்கவும் செய்வித்தது என்பதாக அழுத்தமாக கூறுகிறார்கள். ஆனால் இதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இரக்கமற்ற கிரேக்க துன்புறுத்தலின் சமயத்தில் இல்லாமல், அப்போது ஏன் யூதர்கள் மேசியாவை எதிர்பார்த்தார்கள்? “மறைபொருளாக இருந்த தீர்க்கதரிசனங்களே” யூதேயாவிலிருந்து வலிமைமிக்க அரசர்கள் வந்து “உலகளாவிய பேரரசை முயன்று” பெறும்படியாக எதிர்பார்த்திருக்க யூதர்களை வழிநடத்தியது என்பதாக டாசிட்டஸ் ஏன் சொன்னார்? அப ஹெல்லெல் சில்வர் எ ஹிஸ்டோரி ஆப் மேசியானிக் ஸ்பெக்குலேஷன் இன் இஸ்ரேல் என்ற தன் புத்தகத்தில், ரோமர்களின் துன்புறுத்தலின் காரணமாக இல்லாமல், பகுதியளவில் தானியேல் புத்தகத்திலிருந்து பெறப்பட்ட “அந்த நாளின் பிரபலமான கால கிரம அட்டவணையின்” காரணமாக “பொ.ச. முதல் நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியில் மேசியா எதிர்பார்க்கப்பட்டார்,” என்பதாக ஒப்புக்கொள்கிறார்.
பரத்திலிருந்து அடையாளங் காட்டப்பட்டார்
12. யெகோவா எவ்விதமாக இயேசுவை மேசியாவாக அடையாளங்காட்டினார்?
12 இயேசுவின் மேசியானிய அந்தஸ்துக்கு மூன்றாவது வகையான அத்தாட்சி கடவுளுடைய சாட்சியே ஆகும். லூக்கா 3:21, 22-க்கு இசைவாக இயேசு முழுக்காட்டப்பட்டபின்பு, அவர் யெகோவா தேவனின் சொந்த பரிசுத்த ஆவியாகிய, சர்வலோகத்திலும் மிகப் பரிசுத்தமானதும் வல்லமையுமான சக்தியினால் அபிஷேகம்பண்ணப்பட்டார். தம்முடைய சொந்த குரலில் யெகோவா தம் குமாரனாகிய இயேசுவை அங்கீகரித்திருப்பதை ஒப்புக்கொண்டார். வேறு இரண்டு சந்தர்ப்பங்களில், யெகோவா பரலோகத்திலிருந்து இயேசுவிடம் நேரடியாகப் பேசி, அதன் மூலமாக தம்முடைய அங்கீகாரத்தைக் காண்பித்தார்: ஒருசமயம் இயேசுவினுடைய அப்போஸ்தலர்களில் மூவருக்கு முன்பாகவும் மற்றொரு சமயம் பார்வையாளர்களின் ஒரு கூட்டத்துக்கு முன்பாகவும் அவ்விதமாகச் செய்தார். (மத்தேயு 17:1-5; யோவான் 12:28, 29) மேலுமாக, கிறிஸ்து அல்லது மேசியாவாக இயேசுவின் அந்தஸ்தை உறுதிசெய்ய தேவதூதர்கள் பரத்திலிருந்து அனுப்பப்பட்டார்கள்.—லூக்கா 2:10, 11.
13, 14. மேசியாவாக இயேசுவை தாம் அங்கீகரிப்பதை யெகோவா எவ்விதமாக வெளிப்படுத்தினார்?
13 பெரிய கிரியைகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரமளிப்பதன் மூலம் யெகோவா தம்முடைய அபிஷேகம்பண்ணப்பட்டவரை அங்கீகரிப்பதைக் காண்பித்தார். உதாரணமாக, இயேசு முன்கூட்டியே சரித்திரத்தை விரித்துரைத்த தீர்க்கதரிசனங்களை—நம்முடைய சொந்த நாள் வரையாகவும்கூட நீண்டிருக்கும் தீர்க்கதரிசனங்களை—உரைத்தார்.e பசியாயிருந்த ஜனக்கூட்டத்தாருக்கு உணவளிப்பது, வியாதியஸ்தரை குணப்படுத்துவது போன்ற அற்புதங்களையும்கூட அவர் செய்தார். அவர் மரித்தோரையும்கூட உயிர்த்தெழுப்பினார். அவரைப் பின்பற்றியவர்கள் உண்மைக்கு இசைவாக இந்த வல்லமையான செயல்களைப் பற்றி வெறுமனே கதைகளைக் கண்டுபிடித்தனரா? சரி, இயேசு தம்முடைய அற்புதங்களில் பலவற்றை நேரில் கண்கண்ட சாட்சிகளுக்கு முன், சில சமயங்களில், ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான ஆட்களுக்கு முன் நடப்பித்தார். இயேசுவின் விரோதிகளும்கூட, அவர் உண்மையில் இந்தக் காரியங்களைச் செய்ததை மறுதலிக்க முடியாதவர்களாக இருந்தனர். (மாற்கு 6:2; யோவான் 11:47) தவிர, இயேசுவை பின்பற்றியவர்களுக்கு இத்தகையப் பதிவுகளைக் கற்பனையாக உருவாக்கும் மனச்சாய்வு இருந்திருக்குமேயானால் தங்களுடைய சொந்த குறைபாடுகளுக்கு வருகையில் அவர்கள் ஏன் அத்தனை ஒளிவுமறைவின்றி இருப்பார்கள்? உண்மையில், தாங்கள் தனிப்பட்ட வகையில் கற்பனையாக உருவாக்கியிருந்த வெறும் கட்டுக்கதைகளை ஆதாரமாகக் கொண்ட ஒரு விசுவாசத்துக்காக அவர்கள் மரிக்க மனமுள்ளவர்களாக இருந்திருப்பார்களா? இல்லை. இயேசுவின் அற்புதங்கள் வரலாற்று உண்மைகளாகும்.
14 மேசியாவாக இயேசுவைப் பற்றிய கடவுளின் சாட்சி இன்னும் ஒரு படி மேலாகச் சென்றது. இயேசுவின் மேசியானிய அந்தஸ்து பற்றிய அத்தாட்சி எழுதப்பட்டு சரித்திரம் முழுவதிலுமாக மிகப்பரவலாக மொழிபெயர்க்கப்பட்டு விநியோகிக்கப்பட்டிருக்கும் ஒரு புத்தகத்தின் பாகமாக ஆவதை அவர் பரிசுத்த ஆவியின் மூலமாக உறுதிசெய்துகொண்டார்.
யூதர்கள் ஏன் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை?
15. (எ) இயேசுவை மேசியாவாக அடையாளப்படுத்தும் அவருடைய அறிமுகச் சான்றுகள் எத்தனை விரிவாக இருக்கின்றன? (பி) யூதர்களின் என்ன எதிர்பார்ப்பு அவர்களில் அநேகரை மேசியாவாக இயேசுவை நிராகரித்துவிட வழிநடத்தியது?
15 அப்படியானால் மொத்தத்தில், இந்த மூன்று வகையான அத்தாட்சிகளிலும் நேர்பொருள் சொல்லர்த்தமாகவே இயேசுவை மேசியாவாக அடையாளங்காண்பிக்கும் நூற்றுக்கணக்கான உண்மைகள் அடங்கியிருக்கின்றன. அது போதாதா? ஓர் ஓட்டுநர் உரிமம் அல்லது கடன் அட்டை பெற விண்ணப்பித்து, மூன்று அடையாளங்கள் போதாது—நூற்றுக்கணக்கில் கொண்டுவரவேண்டும் என்று சொல்லப்படுவதாக கற்பனைசெய்துபாருங்கள். எவ்வளவு நியாயமற்றது! அப்படியென்றால் நிச்சயமாகவே இயேசு போதுமான அளவு பைபிளில் அடையாளங்காட்டப்பட்டிருக்கிறார். ஆனால் ஏன் இயேசுவின் சொந்த ஜனங்களில் அநேகர் அவரே மேசியா என்பதற்கிருந்த இந்த எல்லா அத்தாட்சியையும் மறுதலித்தனர்? ஏனென்றால் அத்தாட்சி உண்மையான விசுவாசத்துக்கு முக்கியமாக இருக்கையில் அது விசுவாசத்துக்கு உத்தரவாதமளிப்பதில்லை. விசனகரமாக, அநேக ஆட்கள் ஏராளமான அத்தாட்சியின் மத்தியிலும்கூட தாங்கள் நம்ப விரும்புவதையே நம்புகிறார்கள். மேசியாவைக் குறித்ததில் பெரும்பாலான யூதர்கள் அவர்கள் என்ன விரும்பினார்கள் என்பதைப் பற்றி மிகவும் திட்டவட்டமான அபிப்பிராயங்களைக் கொண்டிருந்தனர். அவர்கள் ரோமரின் ஒடுக்குதலை முடிவுக்குக் கொண்டுவந்து பொருளாதார விதத்தில் சாலொமோன் நாட்களில் இருந்த மகிமைக்கு ஒத்த மகிமையை இஸ்ரவேலுக்கு திருப்பிக்கொடுக்கக்கூடிய ஓர் அரசியல் மேசியாவை அவர்கள் விரும்பினார்கள். அப்படியென்றால் எவ்விதமாக ஒரு தச்சனின் இந்தத் தாழ்மையான குமாரனை, அரசியலிலோ ஐசுவரியத்திலோ எந்த நாட்டத்தையும் காண்பிக்காத இந்த நசரேயனை அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியும்? விசேஷமாக ஒரு கழுமரத்தில் பாடுபட்டு அவமானமாக மரித்தப் பின்பு அவர் எவ்விதமாக மேசியாவாக இருக்க முடியும்?
16. இயேசுவைப் பின்பற்றினவர்கள் மேசியாவைப் பற்றிய தங்களுடைய சொந்த எதிர்பார்ப்புகளை ஏன் சரிப்படுத்தவேண்டியதாக இருந்தது?
16 இயேசுவின் சொந்த சீஷர்களும்கூட அவருடைய மரணத்தினால் நிலைகுலைந்து போயிருந்தனர். அவருடைய மகிமைப்பொருந்தின உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, அவர் உடனடியாக ‘ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பார்,’ என்பதாக அவர்கள் எதிர்பார்த்தார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. (அப்போஸ்தலர் 1:6) ஆனால் தங்கள் சொந்த நம்பிக்கை கைக்கூடிவராத காரணத்தால் மட்டுமே அவர்கள் மேசியாவாக இயேசுவை நிராகரித்துவிடவில்லை. கிடைக்கக்கூடியதாக இருந்த போதுமான அத்தாட்சியின் அடிப்படையில் அவர்கள் அவரில் விசுவாசத்தை அப்பியாசித்தனர், அவர்களுடைய புரிந்துகொள்ளுதல் படிப்படியாக வளர்ந்தது; பரம இரகசியங்கள் தெளிவாயின. மேசியா இந்தப் பூமியின்மீது ஒரு மனிதனாக இருந்த அந்தக் குறுகிய காலத்தின்போது தம்மைப்பற்றிய எல்லா தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்ற கூடாதவராக இருந்ததை அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஏன், ஒரு தீர்க்கதரிசனம் கழுதைக்குட்டியின்மேல் ஏறி அவர் தாழ்ந்தவராக வருவதைப் பற்றி பேசியபோது மற்றொன்று மகிமையில் மேகங்களுடனே அவர் வருவதைப் பற்றி பேசியது! இவை இரண்டும் எவ்வாறு உண்மையாக இருக்க முடியும்? தெளிவாகவே அவர் இரண்டாவது முறை வரவேண்டும்.—தானியேல் 7:13; சகரியா 9:9.
மேசியா ஏன் மரிக்கவேண்டியதாயிருந்தது
17. மேசியா மரிக்கவேண்டும் என்பதைத் தானியேல் தீர்க்கதரிசனம் எவ்விதமாக தெளிவாக்கிற்று, என்ன காரணத்துக்காக அவர் மரிப்பார்?
17 மேலுமாக, மேசியா மரிக்க வேண்டுமென்பதை மேசியானிய தீர்க்கதரிசனங்கள் தெளிவாக்கின. உதாரணமாக, மேசியா எப்போது வருவார் என்பதை முன்னறிவித்த அதே தீர்க்கதரிசனம் அடுத்த வசனத்தில் முன்னுரைத்தது: “அந்த [ஏழு வாரங்களைப் பின்தொடர்ந்து வந்த] அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்.” (தானியேல் 9:26) இங்கே “சங்கரிக்கப்”படுவார் என்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள காரத் என்ற எபிரெய சொல், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் மரண தண்டனைக்கு பயன்படுத்தப்பட்ட அதே சொல்லாக இருக்கிறது. சந்தேகமின்றி மேசியா மரிக்கவேண்டும். ஏன்? வசனம் 24 நமக்குப் பதிலை அளிக்கிறது: “பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திப்பண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும்.” ஒரு பலி, ஒரு மரணம் மாத்திரமே அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணமுடியும் என்பதை யூதர்கள் நன்றாக அறிந்திருந்தனர்.—லேவியராகமம் 17:11; எபிரெயர் 9:22 ஒப்பிடவும்.
18. (எ) மேசியா பாடுபட்டு மரிக்கவேண்டும் என்பதை ஏசாயா அதிகாரம் 53 எவ்வாறு காட்டுகிறது? (பி) இந்தத் தீர்க்கதரிசனம் என்ன மேலீடான முரண்பாட்டை எழுப்புகிறது?
18 ஏசாயா அதிகாரம் 53, மேசியாவை மற்றவர்களுடைய பாவங்களை மூடுவதற்காகப் பாடுபட்டு மரிக்கவேண்டியவராயிருந்த யெகோவாவின் விசேஷமான ஓர் ஊழியராக பேசுகிறது. வசனம் 5 சொல்கிறது: “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.” இந்த மேசியா “குற்றநிவாரண பலியாக” மரிக்கவேண்டும் என்பதை நமக்குச் சொல்லிய பிறகு, இவரே, “நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருடைய சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்,” என்று அதே தீர்க்கதரிசனம் வெளிப்படுத்துகிறது. (வசனம் 10) அது முரண்பாடாக இல்லையா? மேசியா எவ்விதமாக மரித்து, பின்னர் “நீடித்த நாளாயிருப்பார்?” அவர் எவ்விதமாக ஒரு பலியாக செலுத்தப்பட்டு, பின்னர் ‘யெகோவாவின் சித்தத்தை வாய்க்கச் செய்வார்’? ராஜாவாக என்றுமாக ஆட்சிசெய்து முழு உலகத்துக்கும் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவருவார் என்ற அவரைப் பற்றிய அதிமுக்கியமான தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றாமல் அவர் எவ்விதமாக மரித்து, மரித்த நிலையிலேயே இருப்பார்?—ஏசாயா 9:6, 7.
19. இயேசுவின் உயிர்த்தெழுதல் எவ்வாறு மேசியாவைப் பற்றிய முரண்பாடாகத் தோன்றும் தீர்க்கதரிசனங்களை இணக்கமுள்ளதாக்குகிறது?
19 மேலீடாகத் தோன்றும் இந்த முரண்பாடு ஒரே ஒரு பிரமிப்புண்டாக்கின அற்புதத்தினால் தீர்க்கப்பட்டது. இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார். நூற்றுக்கணக்கான நேர்மை இருதயமுள்ள யூதர்கள் இந்த மகிமைப்பொருந்தின மெய்ம்மையை நேரில் கண்ட சாட்சிகளானார்கள். (1 கொரிந்தியர் 15:6) அப்போஸ்தலனாகிய பவுல் பின்னால் எழுதினார்: “இவரோ, [இயேசு கிறிஸ்துவோ] பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.” (எபிரெயர் 10:10, 12, 13) ஆம் இயேசு பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டப் பின்பும், “காத்துக்கொண்டிருக்கும்” ஒரு காலப்பகுதிக்குப் பின்பும்தானே அவர் கடைசியாக ராஜாவாக சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டு, தம்முடைய தகப்பனாகிய யெகோவாவின் சத்துருக்களுக்கு விரோதமாக செயல்படுவார். பரலோக ராஜாவாக தம்முடைய பங்கில், மேசியாவாகிய இயேசு இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு நபரின் வாழ்க்கையின்மீதும் செல்வாக்குச் செலுத்துகிறார். என்ன விதத்தில்? எமது அடுத்த கட்டுரை இதைச் சிந்திக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a ஏலி மரியாளின் சொந்த தகப்பனாக இருந்தபடியால், லூக்கா 3:23, “அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்,” என்று சொல்கிறபோது “மருமகன்” என்ற கருத்தில் அது மகனாக கருதப்படவேண்டும்.—வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை (Insight on the Scriptures), புத்தகம் 1, பக்கங்கள் 913-17.
b யூத சரித்திராசிரியன் ஜோஸிபஸ் தன் சொந்த வம்சாவழியை அளிக்கையில் இப்படிப்பட்ட பதிவுகள் பொ.ச. 70-க்கு முன் கிடைக்கக்கூடியவையாக இருந்தன என்பதைத் தெளிவுபடுத்துகிறார். இந்தப் பதிவுகள் எருசலேம் நகரத்தோடு சேர்ந்து அழிந்துபோயிருக்கவேண்டும். பிற்காலத்தில் மேசியா அந்தஸ்துக்கு எந்த உரிமைப்பாராட்டலையும் நிரூபிக்கப்பட முடியாதபடி செய்திருக்கவேண்டும்.
c வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை, புத்தகம் 2, பக்கம் 387 பார்க்கவும்.
d அர்த்தசஷ்டா ஆட்சிசெய்ய ஆரம்பித்த முதல் வருடம் பொ.ச.மு. 474 ஆக இருந்தது என்பதை சுட்டிக்காட்டும் பூர்வ கிரேக்க, பாபிலோனிய மற்றும் பெர்சிய ஆதார ஏடுகளில் நம்பத்தக்க அத்தாட்சி இருக்கின்றது. வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை புத்தகம் 2, பக்கங்கள் 614-16, 900 பார்க்கவும்.
e இப்படிப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தில், பொய் மேசியாக்கள் அவருடைய நாள் முதற்கொண்டு எழும்புவார்கள் என்று அவர் முன்னுரைத்தார். (மத்தேயு 24:23-26) முந்தையக் கட்டுரை பார்க்கவும்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவா என்பதற்குரிய அத்தாட்சியை ஏன் ஆராயவேண்டும்?
◻ இயேசுவின் வம்சாவழி எவ்விதமாக அவருடைய மேசியானிய அந்தஸ்தை ஆதரிக்கிறது?
◻ பைபிள் தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு இயேசுவே மேசியாவாக இருந்தார் என்பதை நிரூபிக்க உதவிசெய்கிறது?
◻ என்ன விதங்களில் யெகோவா தனிப்பட்டவிதமாக மேசியாவாக இயேசுவின் அடையாளத்தை உறுதிசெய்தார்?
◻ ஏன் இத்தனை அநேக யூதர்கள் மேசியாவாக இயேசுவை நிராகரித்துவிட்டனர், இந்தக் காரணங்கள் ஏன் நியாயமற்றதாக இருந்தன?
[பக்கம் 12-ன் படம்]
இயேசுவின் மிகப் பல அற்புதங்களில் ஒவ்வொன்றும், அவருடைய மேசியானிய அந்தஸ்துக்கு கூடுதலான சான்றுகளை அளித்தது