உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 2/15 பக். 4-7
  • “மேசியாவைக் கண்டோம்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “மேசியாவைக் கண்டோம்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மேசியாவுக்குரிய சான்றுகள்
  • பல விவரங்கள் அடங்கிய சித்தரிப்பு
  • வம்சாவளியும் மேசியாவின் அடையாளமும்
  • தற்செயலாக இயேசுவில் நிறைவேறினவா?
  • மேசியாவின் “வருகை”
  • மேசியா! மீட்புக்கான கடவுளின் வழி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • “நாங்கள் மேசியாவைக் கண்டோம்”!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • மேசியாவுக்காக அவர்கள் காத்திருந்தார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • இயேசு கிறிஸ்து தேவனை அறியும் அறிவின் திறவுகோல்
    நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 2/15 பக். 4-7

“மேசியாவைக் கண்டோம்”

“மேசியாவைக் கண்டோம்.” “நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்.” இப்படித்தான், முதல் நூற்றாண்டிலிருந்த தேவபக்திமிக்க யூதர் இருவர் மிகுந்த வியப்புடன் சொன்னார்கள். மிக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட மேசியா கடைசியில் வந்திருந்தார். ஆம், அவர் வந்திருந்ததை அவர்கள் முழுமையாக நம்பினார்கள்!​—⁠யோவான் 1:35-45.

அக்காலத்தின் சரித்திர, மதப் பின்னணியைச் சிந்தித்துப் பார்த்தால், அப்படி அவர்கள் நம்பியது மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதை உணருவீர்கள். ஏனெனில், இரட்சகர்களென சொல்லிக்கொண்ட ஏராளமானோர் பகட்டான விதத்தில் தோன்றியிருந்தார்கள், நிறைய வாக்குறுதிகளையும் அளித்திருந்தார்கள்; ஆனால், அந்த ஆட்கள் ரோம நுகத்திலிருந்து யூதர்களை விடுவிக்காததால் ஜனங்களுடைய அனைத்து எதிர்பார்ப்புகளும் தவிடுபொடியாயின.​—⁠அப்போஸ்தலர் 5:34-37.

என்றாலும், உண்மையான மேசியாவைக் கண்டுபிடித்துவிட்டதைக் குறித்து அந்திரேயா, பிலிப்பு என்ற அந்த இரு யூதர்களுக்குத் துளிகூட சந்தேகம் இருக்கவில்லை. சொல்லப்போனால், அடுத்துவந்த வருடங்களின்போது, அவர்களுடைய நம்பிக்கை அதிகரிக்கவே செய்தது; ஆம், மேசியாவைப் பற்றி முன்னறிவிக்கப்பட்ட அனைத்தையும், அந்த நபருடைய வலிமைமிக்க செயல்களில் கண்கூடாகப் பார்த்ததால் அவர்களுடைய நம்பிக்கை அதிகரித்தது.

இவ்விருவரும், வேறு பலரும் அவர்மீது ஏன் நம்பிக்கை வைத்தார்கள்? அவர் ஒரு போலி மேசியாவோ மோசடிக்காரரோ அல்ல என்பதை அவர்கள் ஏன் மிக உறுதியாக நம்பினார்கள்? அவர்தான் உண்மையான மேசியா என்பதற்கு என்ன சான்றுகள் இருந்தன?

நாசரேத்தைச் சேர்ந்த தச்சனான இயேசுதான் வெகு காலமாய் மக்கள் எதிர்பார்த்திருந்த மேசியா என்பதை அந்திரேயாவும் பிலிப்புவும் கண்டுகொண்டார்கள்; ஆம், கடவுள் வாக்குறுதி அளித்திருந்த மேசியா அவரே என்பதை அவர்கள் புரிந்துகொண்டதாகச் சரித்திரப் பதிவு காண்பிக்கிறது. (யோவான் 1:45) மிகக் கவனமாய் விவரங்களைப் பதிவுசெய்த அக்கால சரித்திராசிரியரான லூக்கா, “திபேரியு ராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே” மேசியா வந்ததாகக் குறிப்பிடுகிறார். (லூக்கா 3:1, 2, 6) திபேரியுவின் 15-⁠ம் வருட ஆட்சி பொ.ச. 28 செப்டம்பரில் துவங்கி, பொ.ச. 29 செப்டம்பரில் முடிவடைந்தது. இந்தச் சமயத்தின்போது யூதர்கள் மேசியாவின் வருகைக்காக “எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்” என லூக்கா மேலும் குறிப்பிடுகிறார். (லூக்கா 3:15, பொது மொழிபெயர்ப்பு) குறிப்பிட்ட அந்தச் சமயத்தின்போது அவரை ஏன் மக்கள் எதிர்பார்த்தார்கள்? அதை இப்போது பார்க்கலாம்.

மேசியாவுக்குரிய சான்றுகள்

மேசியா வகிக்கும் பங்கு மிக முக்கியமானது என்பதால், அவரை அடையாளம் கண்டுகொள்வதற்குத் தெளிவான அத்தாட்சிகள் தேவை; விழிப்புடனும் உண்மையுடனும் இருக்கிறவர்களுக்கு அத்தகைய அத்தாட்சிகளைப் படைப்பாளரான யெகோவா கொடுப்பார் என்பதை நாம் நியாயமாகவே எதிர்பார்க்கலாம். ஏன்? அப்போதுதான், அப்படிப்பட்ட விழிப்புள்ளவர்கள் மற்ற ஏராளமானோரைப் போல் வஞ்சகர்களால் ஏமாற்றப்பட மாட்டார்கள்.

ஒரு நாட்டின் தூதர் வேறொரு நாட்டின் அரசாங்க அதிகாரிகளைச் சந்திப்பதற்கு முன், தான் ஒரு தூதர் என்பதற்குரிய முக்கியமான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. அதைப்போலவே, மேசியாவுக்குரிய தகுதிகளையெல்லாம் யெகோவா வெகு காலத்திற்கு முன்பாகவே பதிவுசெய்து வைத்துவிட்டதால், “முக்கியப் பிரதிநிதியான” அவர் வரும்போது, அந்தச் சான்றுகளோடு வருவதுபோல் இருக்கும்.​—⁠எபிரெயர் 12:1, 2 NW.

அவருக்குரிய அந்தச் சான்றுகள் என்னென்ன என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அநேக பைபிள் தீர்க்கதரிசனங்கள் குறிப்பிட்டன. மேசியா வருகிற விதம், அவர் ஊழியம் செய்கிற விதம், அவர் அனுபவிக்கும் பாடுகள், அவர் மரிக்கும் விதம் ஆகியவற்றைப் பற்றிய நுணுக்கமான விவரங்கள் அவற்றில் முன்னறிவிக்கப்பட்டன. அதுமட்டுமல்ல, நம்பகமான அந்தத் தீர்க்கதரிசனங்கள் மேசியாவுடைய உயிர்த்தெழுதல் பற்றியும், கடவுளுடைய வலது பாரிசத்தில் அவர் உயர்த்தப்படுவது பற்றியும், அவருடைய எதிர்கால ஆட்சியின் ஆசீர்வாதங்கள் பற்றியும்கூட முன்னறிவித்தன. இவ்வாறு, ஒரேவொரு நபருக்கு மட்டுமே பொருந்தும் பிரத்தியேகமான கைரேகை போல், மேசியாவுக்கு மட்டுமே பொருந்தும் பிரத்தியேகமான அடையாளங்களை பைபிள் தீர்க்கதரிசனங்கள் அளித்தன.

உண்மைதான், பொ.ச. 29-⁠ல் இயேசு தோன்றியபோதே அனைத்து மேசியானிய தீர்க்கதரிசனங்களும் நிறைவேறவில்லை. உதாரணத்திற்கு, அவர் அப்போதே கொல்லப்பட்டு உயிர்த்தெழுப்பப்படவில்லை. என்றாலும், அந்திரேயா, பிலிப்பு போன்ற இன்னும் பலர் இயேசுவில் நம்பிக்கை வைத்தார்கள்; அவர் போதித்த காரியங்களிலும், நடப்பித்த காரியங்களிலும், அவரே மேசியா என்பதற்குரிய ஏராளமான ஆதாரங்களை அவர்கள் கண்கூடாகப் பார்த்ததே அதற்குக் காரணம். நீங்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்தீர்கள் என்றால், பரந்த மனப்பான்மையோடு அதற்கான அத்தாட்சிகளை நேரடியாகக் கவனித்திருந்தீர்கள் என்றால், இயேசுதான் மேசியா என்ற உறுதியான முடிவுக்கு நீங்களும்கூட வந்திருப்பீர்கள்.

பல விவரங்கள் அடங்கிய சித்தரிப்பு

அந்த முடிவுக்கு வர எது உங்களுக்கு உதவியிருக்கும்? மேசியாவைத் தெள்ளத்தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள உதவும் குறிப்பான விவரங்களை பைபிள் தீர்க்கதரிசிகள் காலப்போக்கில் கொடுத்துக்கொண்டே வந்தார்கள். நூற்றாண்டுகளினூடே அந்த விவரங்களை அவர்கள் அளிக்க அளிக்க, மேசியாவைப் பற்றிய சித்தரிப்பு படிப்படியாக உருப்பெற்றது. ஹென்றி எச். ஹாலி இவ்வாறு குறிப்பிட்டார்: “இதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்: வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான ஆட்கள்​—⁠ஒருவரையொருவர் பார்த்திராத, எவ்விதத்திலும் ஒருவரோடொருவர் தொடர்புகொண்டிராத ஆட்கள்​—⁠ஓர் அறைக்குள் போகிறார்கள்; ஒவ்வொருவரிடமும் செதுக்கப்பட்ட ஒரு பளிங்குத் துண்டு இருக்கிறது; அவை ஒவ்வொன்றையும் பொருத்தமாக இணைக்கிறார்கள்; அப்போது கச்சிதமான சிலையொன்று உண்டாகிறது​—⁠யாரோ ஒருவர்தான் அந்தச் சிலையை எல்லா நுணுக்கங்களுடனும் வடிவமைத்திருக்க வேண்டும், பிறகு அவரவருக்குரிய பளிங்குத் துண்டை அனுப்பி வைத்திருக்க வேண்டும்; இதைத் தவிர வேறேதாவது விளக்கம் இதற்கு இருக்க முடியுமா?” பிறகு இவ்வாறு கேட்கிறார்: “இயேசு வருவதற்குப் பல்லாண்டுகள் முன்னதாகவே, அவருடைய வாழ்க்கை, ஊழியம் ஆகியவற்றைப் பற்றிய வியக்க வைக்கும் விவரங்கள் அனைத்தையும் வெவ்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்த வெவ்வேறு எழுத்தாளர்களால் எப்படி ஒன்றுதிரட்டியிருக்க முடியும்? அந்தப் பதிவுகள் எழுதப்படுவதை மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒருவரே மேற்பார்வை செய்திருக்க வேண்டும்; இதைத் தவிர வேறெந்த விளக்கமும் இதற்குப் பொருந்தாது.” பிறகு, ஹாலி இவ்வாறு முடித்தார்: “வரலாறுகாணாத அற்புதம் இது!”

இந்த “அற்புதம்,” பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமப் புத்தகத்தில் ஆரம்பமானது. அதன் எழுத்தாளர், மேசியா வகிக்கும் பங்கைச் சுட்டிக்காட்டிய முதல் பைபிள் தீர்க்கதரிசனத்தைக் குறிப்பிட்டதோடு, ஆபிரகாமின் வம்சாவளியில்தான் மேசியா வருவார் என்ற கூடுதலான குறிப்பையும் பதிவுசெய்தார். (ஆதியாகமம் 3:15; 22:15-18) யூதா கோத்திரத்தில்தான் மேசியா வருவார் என்ற மற்றொரு அடையாளத்தையும் குறிப்பிட்டார். (ஆதியாகமம் 49:10) மேசியா, மோசேயையும்விட பெரிய பேச்சாளராகவும் மீட்பராகவும் இருப்பார் என்று இஸ்ரவேலரிடம் மோசே மூலம் கடவுள் தெரிவித்தார்.​—⁠உபாகமம் 18:18.

தாவீதின் சிங்காசனத்தில் மேசியா அமரப்போகிறார் என்றும், அவருடைய ராஜ்யம் “என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்” என்றும் தாவீது ராஜாவின் நாளிலே மற்றொரு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. (2 சாமுவேல் 7:13-16) தாவீதின் நகரமான பெத்லகேமில் மேசியா பிறப்பார் என்பதை மீகா புத்தகம் வெளிப்படுத்தியது. (மீகா 5:2) ஒரு கன்னி வயிற்றில் அவர் பிறப்பார் என ஏசாயா முன்னறிவித்தார். (ஏசாயா 7:14) எலியாவைப் போன்ற ஒருவர் மேசியாவின் வருகையைப் பிரகடனம் செய்வார் என்பதை மல்கியா தீர்க்கதரிசி முன்கூட்டியே அறிவித்தார்.​—⁠மல்கியா 4:5, 6.

மேசியாவைப் பற்றிய மற்றுமொரு திட்டவட்டமான விவரம் தானியேல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டது. மேசியா தோன்றவிருந்த வருடத்தைச் சுட்டிக்காட்டி அந்தத் தீர்க்கதரிசனம் இவ்வாறு தெரிவித்தது: ‘இப்போதும் நீ அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.’​—⁠தானியேல் 9:25.

எருசலேமைப் புதுப்பித்து, திரும்பக் கட்டுவதற்கான ‘கட்டளையை’ பெர்சிய ராஜாவான அர்த்தசஷ்டா தன்னுடைய ஆட்சிக் காலத்தின் 20-⁠ம் வருடத்திலே கொடுத்தார். அவருடைய ஆட்சி பொ.ச.மு. 474-⁠ல் தொடங்கியது, அப்படியானால் அவருடைய ஆட்சிக் காலத்தின் 20-⁠ம் வருடம் பொ.ச.மு. 455 ஆகும். (நெகேமியா 2:1-8) எனவே, எருசலேமைப் புதுப்பித்து, திரும்பக் கட்டும் கட்டளை பிறப்பிக்கப்பட்டதிலிருந்து 69 (7+62) தீர்க்கதரிசன வாரங்கள் கடந்துசென்ற பிறகே மேசியா வருவார். சாதாரணமாக, அறுபத்தொன்பது வாரங்கள் என்றால் வெறுமனே 483 நாட்களைத்தான், அதாவது இரண்டுக்கும் குறைவான வருடங்களைத்தான் குறிக்கும். ஆனால், ‘ஒரு நாளுக்குப் பதிலாக ஒரு வருஷம்’ என்ற தீர்க்கதரிசன நியதியைப் பொருத்தும்போது, 483 வருடங்களுக்குப் பிறகு, அதாவது பொ.ச. 29-⁠ல்தான் மேசியா தோன்றுவார் என்ற விஷயம் தெளிவாகிறது.​—⁠எசேக்கியேல் 4:6, NW.a

தாங்களே மேசியா என உரிமைகொண்டாடிய ஏராளமான ஆட்கள் வெவ்வேறு வருடங்களில் தோன்றினாலும், நாசரேத்தைச் சேர்ந்த இயேசு மாத்திரமே பொ.ச. 29-⁠ம் வருடத்தில் தோன்றினார். (லூக்கா 3:1, 2) அதே வருடத்தில்தான் இயேசு, முழுக்காட்டுபவனாகிய யோவானிடம் சென்று, தண்ணீரில் முழுக்காட்டுதல் பெற்றார். அப்போது இயேசு பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு மேசியாவாக ஆனார். எலியா போன்ற முன்னோடி என முன்னறிவிக்கப்பட்டிருந்த யோவான், பிற்பாடு அந்திரேயாவிடமும் மற்றொரு சீஷரிடமும் இயேசுவைச் சுட்டிக்காட்டி, “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அவரை அறிமுகப்படுத்தினார்.​—⁠யோவான் 1:29; லூக்கா 1:13-17; 3:21-23.

வம்சாவளியும் மேசியாவின் அடையாளமும்

கடவுளால் ஏவப்பட்ட தீர்க்கதரிசனங்கள், குறிப்பிட்ட சில யூத குடும்பங்களின் வம்சத்தில் மேசியா வருவார் என்பதைக் காட்டின. ஆகவே, எல்லாம் அறிந்த படைப்பாளர், அந்த வம்சாவளி பதிவுகள் கிடைத்த காலத்தின்போதுதான் மேசியாவை அனுப்ப ஏற்பாடு செய்திருப்பார் என நாம் நியாயமாகவே எதிர்பார்க்கலாம்; ஏனெனில், அவற்றை வைத்துத்தான் மேசியா எந்தப் பரம்பரையில் வந்தார் என்பதை உறுதிசெய்ய முடியும்.

மெக்லின்டாக் மற்றும் ஸ்ட்ராங் என்பவர்களின் சைக்ளோப்பீடியா இவ்வாறு குறிப்பிடுகிறது: “யூத கோத்திரங்களையும் குடும்பங்களையும் பற்றிய வம்சாவளி பதிவுகள் [பொ.ச. 70-⁠ல்] எருசலேம் அழிக்கப்பட்டபோதுதான் மறைந்துபோயின, அதற்கு முன்னர் அல்ல என்பதில் சந்தேகமே இல்லை.” மத்தேயுவும் லூக்காவும் தங்களுடைய சுவிசேஷங்களை பொ.ச. 70-⁠க்கு முன்னரே எழுதினார்கள் என்பதற்குத் தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன. ஆக, இயேசுவின் மூதாதையர் யார்யார் என்ற விவரங்களைத் தொகுப்பதற்கு அந்த வம்சாவளி பதிவுகளை அவர்கள் ஆராய்ந்திருக்கலாம். (மத்தேயு 1:1-16; லூக்கா 3:23-38) அதுவும் இயேசுவின் மூதாதையர் யார் எனத் தெரிந்துகொள்வது மிக முக்கியமான விஷயமென்பதால் அவர்களுடைய காலத்தைச் சேர்ந்த அநேகர், கண்டிப்பாக அதைத் தாங்களே பதிவுகளில் பார்த்து உறுதிசெய்துகொள்ள விரும்பியிருப்பார்கள்.

தற்செயலாக இயேசுவில் நிறைவேறினவா?

என்றாலும், மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் தற்செயலாகத்தான் இயேசுவில் நிறைவேறின என்று சொல்ல முடியுமா? ஒரு பேட்டியின்போது, அறிஞர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “அது சாத்தியமே இல்லை. அவ்வாறு நிகழ்வதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்பதால் அப்பேச்சுக்கே இடமில்லை. வெறும் எட்டு தீர்க்கதரிசனங்கள் ஒரு நபரில் நிறைவேற வேண்டுமென்றாலே, அதற்கான சாத்தியம் ஆயிரம் கோடி கோடிகளில் ஒன்றுதான் என ஒருவர் கணக்கிட்டுக் கண்டுபிடித்திருக்கிறார்.” அந்த வாய்ப்பு மிகமிகக் குறைவு என்பதை அவர் இவ்வாறு உதாரணம் கொடுத்தும் விளக்கினார்: “அதே எண்ணிக்கையான [அதாவது, ஆயிரம் கோடி கோடிகள்] வெள்ளி டாலர் காசுகளை எடுத்துக்கொண்டீர்களானால், டெக்ஸஸ் மாகாண நிலப்பரப்பு முழுவதையும் [அதாவது, 6,90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை] இரண்டடிக்கு மூடிவிடலாம். அவற்றில் ஒரேவொரு வெள்ளி டாலர் காசில் மட்டும் ஓர் அடையாளக் குறியிடுகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்; பிறகு ஒரு நபருடைய கண்ணைக் கட்டிவிட்டு, குறியிடப்பட்ட அந்தக் காசை மட்டும் பொறுக்கியெடுத்து வரச் சொல்லி, அந்த மாகாணம் முழுவதிலும் அவரை அலையவிடுகிறீர்கள்; குறியிடப்பட்ட அதே காசை அவர் கண்டுபிடிப்பதற்கு எந்தளவு வாய்ப்பு இருக்கும்?” இப்படிக் கேட்டுவிட்டு, “சரித்திரத்தில் யாராவது வெறும் எட்டு [மேசியானிய] தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியிருப்பதற்கும்கூட அதே அளவு வாய்ப்புதான் இருக்கிறது” என்றார் அவர்.

என்றாலும் இயேசு, தம்முடைய மூன்றரை வருட ஊழியத்தின்போது வெறும் எட்டு தீர்க்கதரிசனங்களை மட்டுமல்ல, ஏராளமான பைபிள் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார். இத்தகைய ஏராளமான அத்தாட்சிகளை மனதில் வைத்து, அந்த அறிஞர் இவ்வாறு முடித்தார்: “இயேசுவால்​—⁠ஆம், சரித்திரத்திலேயே இயேசுவால் மட்டும்தான்​—⁠அப்படி ஏராளமான தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற முடிந்திருக்கிறது.”

மேசியாவின் “வருகை”

ஆக, பொ.ச. 29-⁠ல், நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவாக மேசியா வந்தார் என்பது தெள்ளத்தெளிவாகிறது. அவர் ஒரு சாதாரண நபராக, பாடு அனுபவிக்கிற மீட்பராக வந்தார். பெரும்பாலான யூதர்களும், ஏன் அவருடைய சீஷர்களும்கூட எதிர்பார்த்திருந்ததைப் போல, சகலத்தையும் வெல்கிற ராஜாவாக ரோமர்களின் கொடிய நுகத்தை உடைத்தெறிவதற்கு அவர் வரவில்லை. (ஏசாயா, அதிகாரம் 53, சகரியா 9:9; அப்போஸ்தலர் 1:6-8) என்றாலும் எதிர்காலத்தில், வல்லமையோடும் மாபெரும் அதிகாரத்தோடும் அவர் வரப்போவதாக முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது.​—⁠தானியேல் 2:44; 7:13, 14.

உலகெங்குமுள்ள சிந்திக்கும் மக்கள் பைபிள் தீர்க்கதரிசனங்களைக் கவனமாக ஆராய்ந்த பிறகு, முதல் நூற்றாண்டிலேயே மேசியா வந்துவிட்டதையும், மீண்டும் அவர் வரவிருந்ததையும் குறித்து முழு நம்பிக்கை பெற்றுள்ளார்கள். முன்னறிவிக்கப்பட்டபடி அவருடைய வருகையின், அதாவது அவருடைய ‘பிரசன்னத்தின்’ ஆரம்பம், 1914-⁠ல் நடந்தேறியது என்பதை அத்தாட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.b (மத்தேயு 24:3-14; NW) அந்த வருடத்தின்போது, காணக்கூடாத விதத்தில், கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக இயேசு பரலோகத்தில் முடிசூட்டப்பட்டார். ஏதேன் தோட்டத்தில் நடந்த கலகத்தின் மோசமான பாதிப்புகளைப் பூமியிலிருந்து நீக்குவதற்கு அவர் சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்கப் போகிறார். அவர்தான் வாக்குப்பண்ணப்பட்ட வித்து என்றும், மேசியா என்றும், “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றும் முழுமையாக நம்புகிறவர்கள், வரவிருக்கும் அவருடைய ஆயிரவருட ஆட்சியில் ஏராளமான ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள்.​—⁠யோவான் 1:29; வெளிப்படுத்துதல் 21:3, 4.

அந்த அத்தாட்சிகளைப் பற்றி உங்களிடம் கலந்துபேசுவதற்கும், மேசியாவின் ஆட்சி உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் என்ன செய்யப்போகிறதென பைபிளிலிருந்து எடுத்துக்காட்டுவதற்கும் யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷப்படுவார்கள்.

[அடிக்குறிப்புகள்]

a தானியேல் 9:25 பற்றிய கூடுதலான விவரங்களுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) புத்தகத்தின் தொகுதி 2-⁠ல், பக்கங்கள் 899-904-ஐக் காண்க.

b கூடுதலான விபரங்களுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் அதிகாரங்கள் 10, 11-ஐக் காண்க.

[பக்கம் 6, 7-ன் படங்கள்]

பொ.ச.மு. 455, “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை” வெளிப்படுதல்

பொ.ச. 29, மேசியாவின் வருகை

483 வருடங்கள் (69 தீர்க்கதரிசன வாரங்கள்)​—⁠தானியேல் 9:25

1914, பரலோகத்தில் மேசியா முடிசூட்டப்பட்டார்

மேசியா சீக்கிரத்தில் பொல்லாப்பை நீக்கி, பூமியைப் பரதீஸ் ஆக்குவார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்