பாவமில்லாத ஓர் உலகம்—எப்படி?
டோக்கியோவின் ஓர் அமைதியான சுற்றுவட்டாரத்தில் ஒரு குளிர்க்கால அதிகாலைப்பொழுதின் ஆழ்ந்த அமைதி, உதவிக்காகக் கிரீச்சிடும் கதறல்களால் குலைந்தது. மீண்டும் மீண்டும் கத்தியால் குத்தப்பட்டு விரட்டப்பட்டுக்கொண்டிருந்த செய்தித்தாள் விநியோகித்துக்கொண்டுசெல்லும் ஒரு பெண்ணின் நம்பிக்கையிழந்த கூக்குரலை ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்கு ஒரு டஜன் நபர்கள் கேட்டனர். ஒருவர்கூட என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் கண்டறியும் அளவுக்கு அக்கறையுடையவராயில்லை. அளவுக்கு அதிகமான இரத்த இழப்பால் அவள் மரித்தாள். “அவள் கூக்குரலிடுவதை அவர்கள் கேட்டவுடன் இவர்களில் ஒருவர் அந்நிகழ்ச்சியை போலீசுக்குத் தெரிவித்திருந்தால், அவள் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்,” என்பதாக விசாரணைசெய்த ஒருவர் கூறினார்.
மரித்துக்கொண்டிருந்த பெண்ணின் கூக்குரலை கேட்டவர்கள் அவளை வெறுமனே புறக்கணித்ததைத் தவிர மோசமாய் வேறெதையும் செய்யாவிடினும், தாங்கள் குற்றமற்றவர்கள் எனச் சரியாக அவர்களால் உரிமைபாராட்ட முடியுமா? “கொலையைப்பற்றி நான் அறிந்த பின்பு, என் மனச்சாட்சி வெள்ளிக்கிழமை முழுவதும் என்னை வதைத்துக்கொண்டிருந்தது,” என அவள் கதறல்களைக் கேட்ட ஒருவர் கூறினார். இது உண்மையில் பாவம் என்பது என்ன? என்று நம்மை யோசிக்கச்செய்கிறது.
பாவம் என்றால் என்ன?
ஜப்பானில், டோக்கியோவின் ஹோஸி பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற இலக்கிய திறனாய்வாளர் மற்றும் பேராசிரியர் ஹிடியோ ஓடகிரி, ஆஷி ஷிம்பன் செய்தித்தாளில் மேற்கோள் காட்டப்பட்டபடி, பாவத்தைப் பற்றிய உணர்வைச் சுட்டிக்காட்டுபவராய் கூறினார்: “ஒரு பிள்ளையிடம் இருக்கும் அருவருப்பான தற்பெருமை, வெட்கக்கேடான பொறாமை, ஒருவரைப் பின்னால் காட்டிக்கொடுத்தல் ஆகியவைப் போன்ற எனக்கிருக்கும் பாவங்களைப் பற்றிய உணர்வுகளின் தெளிவான நினைவுகளை என்னால் அகற்றிவிட முடியவில்லை. நான் துவக்கப் பள்ளியில் இருக்கும்போது இந்த உணர்வு என் மனதில் பதியவைக்கப்பட்டது, அது இன்னும் என்னை வதைத்துக்கொண்டிருக்கிறது.” நீங்கள் எப்போதாவது இத்தகைய உணர்ச்சிகளை அனுபவித்திருக்கிறீர்களா? தவறு என நீங்கள் அறிந்திருக்கும் ஏதோவொன்றை நீங்கள் செய்தால், உங்களைக் குற்றப்படுத்தும் ஓர் உட்குரலை நீங்கள் உடையவர்களாக இருக்கிறீர்களா? ஒருவேளை ஒரு குற்றச்செயலும் செய்யப்படாமலிருக்கலாம். ஆனால் ஓர் அசெளகரியமான உணர்வு நீடித்திருந்து உங்கள் மனதை அதிகமாக அழுத்துகிறது. இது உங்கள் மனச்சாட்சி வேலைசெய்வதாகும். பைபிள் அதைப் பின்வரும் பகுதியில் குறிப்பிடுகிறது: “நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.” (ரோமர் 2:14, 15) ஆம், இயல்பாகவே, அநேகர் வேசித்தனம், திருடுதல் மற்றும் பொய் சொல்லுதல் போன்ற செயல்களால் கலக்கமுற்றவர்களாய் உணர்கின்றனர். அவர்கள் மனச்சாட்சி பாவத்தை உறுதிப்படுத்துகிறது.
இருப்பினும், மனச்சாட்சியின் குரல் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படும்போது, அது இனிமேலும் ஒரு பாதுகாப்பான வழிகாட்டியாகச் செயல்படுவதில்லை. அது உணர்ச்சியற்றதாயும் கறைப்பட்டதாயும் ஆகிவிடமுடியும். (தீத்து 1:15) கெட்டவற்றைக் குறித்த ஒரு கூருணர்வு இழக்கப்படுகிறது. உண்மையில் இன்று பாவத்தைப் பொருத்தவரையில் அநேகரின் மனச்சாட்சி மரித்துவிட்டிருக்கிறது.
பாவத்தின் ஒரே அளவு மனச்சாட்சியா அல்லது பாவத்தை எது உண்டுபண்ணுகிறது மற்றும் எது உண்டுபண்ணுவதில்லை என்பதற்கான முழுமையான தராதரமாய் ஏதோவொன்று செயல்படமுடியுமா? மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக, கடவுள் தமது தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்துக்கு ஒரு சட்டத்தொகுப்பைக் கொடுத்தார். இச்சட்டத்தின் மூலமாக, பாவம், “பாவம் என அறிந்துணரப்படலானது.” (ரோமர் 7:13, நியூ இன்டர்நேஷனல் வெர்ஷன்) முன்பு ஒருவாறு ஒப்புக்கொள்ளத்தக்கதாய் இருந்த நடத்தைகூட, இப்போது என்னவாயிருக்கிறதென்பது வெளிப்படுத்தப்பட்டது—பாவம். கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாகிய இஸ்ரவேலர்கள் பாவிகள் என வெளிப்படுத்தப்பட்டு அதனால் ஆக்கினைத்தீர்ப்பின் கீழ் இருந்தனர்.
நமது மனச்சாட்சி நமக்கு உணர்த்துகிறதும், மற்றும் மோசேயின் நியாயப்பிரமாணம் குறித்துக்காட்டி பட்டியலிட்டதுமான இந்தப் பாவங்கள் எவை? இந்தச் சொல்லின் பைபிள் சார்ந்த உபயோகத்தின்படி பாவம் என்பது சிருஷ்டிகரின் சம்பந்தமாக குறியைத் தவறவிடுவது ஆகும். அவரது குணயியல்பு, தராதரங்கள், வழிகள் மற்றும் சித்தம் ஆகியவற்றிற்கு இசைவற்றிருக்கும் எதுவும் பாவமாகும். அவர் ஏற்படுத்தியிருக்கும் குறியைத் தவறும் எந்தச் சிருஷ்டிக்கும் தொடர்ந்த வாழ்வை அவர் அளிக்கமுடியாது. எனவே முதல் நூற்றாண்டில் ஒரு சட்ட நிபுணர் எபிரெய கிறிஸ்தவர்களை எச்சரித்தார்: “சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.” (எபிரெயர் 3:12) ஆம், சிருஷ்டிகர்மீது விசுவாசமின்மை ஒரு பெரிய பாவமாக இருக்கிறது. எனவே, வழக்கமாக பாவமாகக் கருதப்படுவதைவிட, பைபிளில் விவரிக்கப்பட்டபடி, பாவத்தின் பரப்பு அதிக விரிவாயிருக்கிறது. “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களா”னார்கள், எனக் குறிப்பிடுமளவுக்கு பைபிள் செல்கிறது.—ரோமர் 3:23.
பாவத்தின் ஆரம்பம்
அது, மனிதன் பாவியாக உண்டாக்கப்பட்டான் என அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. மனித உயிரை உருவாக்கியவர், யெகோவா தேவன், முதல் மனிதனை ஒரு பரிபூரண சிருஷ்டியாக உருவாக்கினார். (ஆதியாகமம் 1:26, 27; உபாகமம் 32:4) இருப்பினும், கடவுள் விதித்த ஒரே தடையை அவர்கள் மீறி, விலக்கப்பட்ட “நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தி”லிருந்து புசித்தபோது, முதல் மனித தம்பதி குறியைத் தவறினர். (ஆதியாகமம் 2:17) அவர்கள் பரிபூரணமாகப் படைக்கப்பட்டபோதிலும், இப்போது அவர்கள் தங்கள் தகப்பனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்திருக்கும் குறியைத் தவறவிட்டனர், பாவிகளானார்கள், மற்றும் அதற்கேற்ப மரிப்பதற்கென தீர்க்கப்பட்டனர்.
இந்தப் பண்டைய வரலாறு இப்போது பாவத்துடன் என்ன தொடர்பைக் கொண்டிருக்கிறது? பைபிள் விளக்குகிறது: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” (ரோமர் 5:12) விதிவிலக்கின்றி நாமனைவரும் சுதந்தரித்துக்கொண்டதன்படி பாவிகளாயிருக்கிறோம்; ஆகவே மரணத்தீர்ப்பிற்குள் வந்திருக்கிறோம்.—பிரசங்கி 7:20.
பாவத்தை அகற்ற மனித முயற்சிகள்
ஆதாம் பாவத்தைத் தன் பின்சந்ததியாருக்குக் கடத்தினான், ஆனால் அவன் கடவுள் கொடுத்த திறனாகிய மனச்சாட்சியையும்கூட கடத்தினான். பாவம் ஓர் அசெளகரியமான உணர்வைத் தோற்றுவிக்கக்கூடும். முன்கூறப்பட்டபடி இத்தகைய உணர்ச்சிகளை அகற்ற மனிதர் பல்வகைமுறைகளைத் தோற்றுவித்துள்ளனர். ஆனால், அவை உண்மையிலேயே பயனுள்ளவையா?
கிழக்கிலும் மேற்கிலும், மக்கள் தங்களது தராதரங்களை மாற்றுவதன் மூலம் அல்லது பாவம் இருப்பதையே மறுப்பதன் மூலம் பாவத்தின் விளைவைக் கையாள முயன்றிருக்கின்றனர். (1 தீமோத்தேயு 4:1, 2) ஜுரத்தைக்கொண்ட ஒரு நோயாளிக்கு மனிதவர்க்கத்தின் பாவம்நிறைந்த நிலைமை ஒப்பிடப்படலாம். நோய்க்குறிகளைத் தோற்றுவிக்கும் வைரஸுக்கு பாவம் ஒப்பிடப்படலாம். அப்படியிருக்க, கலக்கமுற்ற மனச்சாட்சி அசெளகரியமான ஜுரத்துக்கு ஒப்பிடப்படலாம். வெப்பமானியை உடைப்பது, அந்த நோயாளி அதிக ஜுரத்தைக் கொண்டுள்ளார் என்னும் உண்மையை மாற்றுவதில்லை. கிறிஸ்தவமண்டலத்தில் அநேகர் செய்திருப்பதைப்போன்று, ஒழுக்க தராதரங்களை விட்டெறிவது மற்றும் ஒருவரது சொந்த மனச்சாட்சியின் அத்தாட்சியைப் புறக்கணிப்பது ஆகியவை பாவத்தைத்தானே அகற்றிப்போட எவ்வித உதவியுமளிப்பதில்லை.
ஒருவர் தனது ஜுரத்தைத் தணிக்க ஒரு பனிக்கட்டிப் பையைப் பயன்படுத்தலாம். அது மனச்சாட்சியின் உறுத்தலைத் தணிக்க ஷின்டோ சுத்திகரிப்பு ஆசார சடங்குகளுக்கு உட்படுவதைப் போலிருக்கிறது. பனிக்கட்டிப் பை, ஜுரமுடையவரை தற்காலிகமாகக் குளிர்விக்கலாம். ஆனால் அது ஜுரத்திற்கான காரணத்தை அகற்றுவதில்லை. எரேமியாவின் நாளில், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும் அந்நாளிலிருந்த இஸ்ரவேலருக்கு இதேபோன்ற ஒரு குணப்படுத்துதலைச் செய்ய முயன்றனர். “எல்லாம் நன்றாயிருக்கிறது, எல்லாம் நன்றாயிருக்கிறது” எனக் கூறி அவர்கள் மக்களின் ஆவிக்குரிய மற்றும் ஒழுக்கக் காயங்களை “மேற்பூச்சாய்” குணமாக்கினர். (எரேமியா 6:14; 8:11, ஓர் அமெரிக்க மொழிபெயர்ப்பு) வெறுமனே மதசம்பந்தப்பட்ட சடங்குகளுக்குட்படுவதும், “எல்லாம் நன்றாயிருக்கிறது” போன்ற ஏதோவொன்றை உச்சரிப்பதும் கடவுளுடைய ஜனங்களின் ஒழுக்கச் சீர்குலைவைக் குணப்படுத்தவில்லை. மேலும், இன்று சுத்திகரிக்கும் சடங்குகள் ஜனங்களின் ஒழுக்கத்தரத்தை மாற்றுவதில்லை.
ஜுரமுடைய ஒரு நபர் ஜுரநிவாரணிகளை உட்கொள்வதன் மூலம் தனது ஜுரத்தைக் குறைக்கலாம். ஆனால் அந்த வைரஸ் இன்னும் அவர் உடலில் இருக்கிறது. இதுவே, கல்வி மூலம் தீமையைக் கையாளும் கன்பூசிய வழிமுறையில் உண்மையாயிருக்கிறது. மேலோட்டமாக, அது தீமையினின்று மக்களைத் திருப்ப உதவலாம். ஆனால், லி-ஐ கடைப்பிடிப்பது வெறுமனே பாவம் நிறைந்த நடத்தையை மட்டுப்படுத்துகிறது. ஒரு நபரிடமிருந்து தீய நடத்தையின் அடிப்படைக் காரணமாகிய அவரது உள்ளியல்பான பாவம்நிறைந்த மனச்சாய்வை அது அகற்றுவதில்லை.—ஆதியாகமம் 8:21.
பாவம்நிறைந்த மனச்சாய்வுகளை ஒருவரிலிருந்து அகற்ற, நிர்வாணாவிற்குள் புகும் புத்தப்போதனையைப் பற்றியதென்ன? ‘அணைத்தல்’ எனப் பொருள்கூறப்படும் நிர்வாணா நிலை, எல்லா ஆசாபாசங்களையும் அணைத்துவிடுகின்ற, விவரிக்கப்பட இயலாத ஒன்றென கருதப்படுகிறது. சிலர், அது, தனிப்பட்ட வாழ்வின் முடிவென உரிமைப்பாராட்டுகின்றனர். ஜுரத்துடனிருக்கும் ஒரு வியாதிப்பட்ட மனிதனிடம் நோய்த்தணிவை அடைய மரிக்கச் சொல்வது போல அது தொனிக்கவில்லையா? மேலும், நிர்வாணா நிலையை அடைவது மிகக் கடினமானதும், முடியாதவொன்றாயும்கூட கருதப்படுகிறது. கலக்கமுற்ற மனச்சாட்சியுடைய ஒருவருக்கு இப்போதனை உதவியாயிருப்பதாய் தோன்றுகிறதா?
பாவத்திலிருந்து விடுதலை
வாழ்க்கை மற்றும் பாவம்நிறைந்த மனச்சாய்வுகள் மீதான மனித தத்துவங்கள், அதிகபட்சம், ஒருவரது மனச்சாட்சியைச் சாந்தப்படுத்த மட்டுமே இயலும் என்பது தெளிவாயிருக்கிறது. அவை பாவம்நிறைந்த நிலைமையை அகற்றுவதில்லை. (1 தீமோத்தேயு 6:20) இதைச் செய்ய ஏதேனும் வழி இருக்கிறதா? கிழக்கத்திய நாடுகளின் அருகே எழுதப்பட்ட ஒரு பண்டைய நூலாகிய பைபிளில், பாவத்திலிருந்து விடுதலைக்கு விடைக்குறிப்பைக் காண்கிறோம். “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும். . . . நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.” (ஏசாயா 1:18, 19) இங்கே யெகோவா அவரது தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாயிருந்தும், அவருக்கு உத்தமமாயிருக்கும் குறியினின்று தவறின இஸ்ரவேலரிடம் பேசிக்கொண்டிருந்தார். இருப்பினும், அதே நியமம் மனிதவர்க்கம் முழுவதற்கும் பொருந்துகிறது. சிருஷ்டிகரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க மனவிருப்பத்தைக் காட்டுதல், ஒருவரது பாவத்தைச் சுத்திகரித்து, கழுவி அகற்றுவதற்கு அடிப்படையாயிருக்கிறது.
மனிதவர்க்கத்தின் பாவங்கள் கழுவப்படுவதைப் பற்றி கடவுளின் வார்த்தை நமக்கு என்ன சொல்கிறது? ஒரு மனிதனின் பாவத்தின் மூலமாக எல்லா மனிதவர்க்கமும் பாவிகளானதைப்போன்று, இன்னொரு மனிதனின், கடவுளுக்குப் பரிபூரண கீழ்ப்படிதலின் மூலம், கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் தங்களது துயரத்தினின்று விடுவிக்கப்படும் என பைபிள் கூறுகிறது. (ரோமர் 5:18, 19) எப்படி? “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” (ரோமர் 5:8) பரிபூரண மற்றும் பாவமற்ற மனிதனாகப் பிறந்தவரும், பாவம் செய்ததற்கு முன்னான முதல் ஆதாமுக்கு நிகரானவருமான இயேசு கிறிஸ்து மனிதவர்க்கத்தின் பாவங்களைச் சுமந்துசெல்லும் தகுதியுடையவராய் இருந்தார். (ஏசாயா 53:12; யோவான் 1:14; 1 பேதுரு 2:24) வாதனை மரத்தில் ஒரு குற்றவாளியைப் போல கொலைசெய்யப்பட்டதன் மூலம், இயேசு, மனிதவர்க்கத்தை பாவம் மற்றும் மரணத்தின் கட்டுகளினின்று விடுவித்தார். ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்குப் பவுல் விவரித்தார்: “நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். . . . பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையான நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.”—ரோமர் 5:6, 21.
முழு மனிதவர்க்கத்திற்கென கிறிஸ்து மரித்து ஆதாமால் நிலைகுலைக்கப்பட்ட தராசை சமநிலைப்படுத்துவது “மீட்கும் பொருள்” ஏற்பாடென அழைக்கப்படுகிறது. (மத்தேயு 20:28) அது ஜுரத்தை உண்டாக்கும் வைரஸை எதிர்த்து வேலைசெய்யும் ஒரு மருந்திற்கு ஒப்பிடப்படலாம். மனிதவர்க்கத்திற்கு இயேசுவின் மீட்கும்பொருளின் விலைமதிப்பைப் பொருத்துவதன் மூலம் பாவத்தால் விளைந்த, மரணத்தையே உட்படுத்தும் மனிதவர்க்கத்தின் வியாதிப்பட்ட நிலை குணப்படுத்தப்படமுடியும். இந்தக் குணப்படுத்தப்படும் நடவடிக்கை பைபிளின் இறுதிப் புத்தகத்தில் அடையாளமாக விளக்கப்படுகிறது: “நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.” (வெளிப்படுத்துதல் 22:2) கற்பனை செய்துபாருங்கள்! மனிதவர்க்கத்தின் ஆரோக்கியமடைதலுக்காகவே இருக்கும் இலைகளைக் கொண்ட ஜீவவிருட்சங்களின் நடுவே ஓடும் ஓர் அடையாளமான ஜீவநீருள்ள நதி. இந்தத் தெய்வீக ஏவப்பட்ட அடையாளங்கள் இயேசுவின் மீட்கும் பலியின் அடிப்படையில், மனிதவர்க்கத்தைப் பரிபூரணத்திற்கு மீண்டும் கொண்டுவரும் கடவுளின் ஏற்பாட்டை பிரதிநிதித்துவம் செய்கிறது.
வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் தீர்க்கதரிசனக் காட்சிகள் விரைவிலேயே உண்மையாகும். (வெளிப்படுத்துதல் 22:6, 7) அப்போது இயேசுவின் மீட்கும் பலியின் விலைமதிப்பு மனிதவர்க்கத்துக்கு முழுமையாகப் பொருத்தப்பட்டு, எல்லா நேர்மை இருதயங்கொண்டவர்களும் பரிபூரணராகி, “அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்”வர். (ரோமர் 8:20) பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் இந்த மகிமையான விடுதலை அருகிலிருக்கிறதெனச் சுட்டிக்காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 6:1-8) விரைவில் கடவுள் இந்தக் கோளத்தினின்று தீமையை அகற்றிப்போடுவார், பரதீஸான பூமியில் மனிதர் நித்திய வாழ்க்கையை அனுபவிப்பர். (யோவான் 3:16) அது உண்மையிலேயே பாவமில்லா ஓர் உலகமாயிருக்கும்!
[பக்கம் 7-ன் படம்]
இயேசுவின் மீட்கும்பலி இதுபோன்ற குடும்பங்கள் நித்திய மகிழ்ச்சியை அனுபவித்துக்களிக்க உதவிசெய்யும்