மனிதர்கள் ஏன் சாகிறார்கள்?
பைபிள் தரும் பதில்
நமக்கு ரொம்பவும் நெருக்கமான ஒருவர் சாகும்போது, மனிதர்கள் ஏன் சாகிறார்கள் என்ற கேள்வி நம் மனதிற்கு இயல்பாகவே வரலாம். “மரணத்தை உண்டாக்குகிற கொடுக்கு பாவம்” என்று பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 15:56.
எல்லா மனிதர்களுமே ஏன் பாவம் செய்து சாகிறார்கள்?
முதல் மனிதத் தம்பதியான ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் தங்கள் உயிரை இழந்தார்கள். (ஆதியாகமம் 3:17-19) ‘உயிரின் ஊற்றாக’ திகழ்கிற அவரை எதிர்த்துக் கலகம் செய்ததால் அவர்கள் மரண தண்டனையை அனுபவித்தே தீர வேண்டியிருந்தது.—சங்கீதம் 36:9; ஆதியாகமம் 2:17.
பாவம் என்ற குறைபாட்டை ஆதாம் தன்னுடைய சந்ததியினர் எல்லாருக்கும் கடத்தினான். “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 5:12) ஆகவே, எல்லா மனிதர்களும் பாவம் செய்வதால் அவர்கள் எல்லாருமே சாகிறார்கள்.—ரோமர் 3:23.
மரணம் எப்படி ஒழித்துக்கட்டப்படும்
சீக்கிரத்தில் கடவுள் ‘மரணத்தை அடியோடு ஒழித்துக்கட்டப்போவதாக’ வாக்குறுதி அளிக்கிறார். (ஏசாயா 25:8) மரணத்தை நீக்க வேண்டுமானால், அதற்குக் காரணமான பாவத்தை அவர் துடைத்தழிக்க வேண்டும். ‘உலகத்தின் பாவத்தைப் போக்குகிற’ இயேசு கிறிஸ்து மூலமாகக் கடவுள் அதைச் செய்யப்போகிறார்.—யோவான் 1:29; 1 யோவான் 1:7.