சகலவித விக்கிரகாராதனைக்கும் எதிராக காத்துக்கொள்ளுங்கள்
“தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?” —2 கொரிந்தியர் 6:16.
1. இஸ்ரவேலரின் வாசஸ்தலமும் ஆலயங்களும் எதற்கு மாதிரியாக இருந்தன?
யெகோவா விக்கிரகங்களுக்கு இடமளிக்காத ஓர் ஆலயத்தை உடையவராக இருக்கிறார். மோசே உண்டுபண்ணின இஸ்ரவேலரின் வாசஸ்தலமும் பின்னால் எருசலேமில் கட்டப்பட்ட ஆலயங்களும் அதற்கு மாதிரியாக இருந்தன. அந்தக் கட்டட அமைப்புகள் “மெய்யான கூடார”மாகிய யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயத்தை பிரதிநிதித்துவம் செய்தன. (எபிரெயர் 8:1-5) இயேசு கிறிஸ்துவின் கிருபாதார பலியின் அடிப்படையில் வணக்கத்தில் கடவுளை அணுகுவதற்கான ஏற்பாடே அந்த ஆலயமாகும்.—எபிரெயர் 9:2-10, 23.
2. கடவுளின் பெரிய ஆவிக்குரிய ஆலயத்தில் தூண்களாவது யார், திரள் கூட்டத்தினர் அனுபவிக்கும் ஸ்தானம் என்ன?
2 ஒவ்வொரு அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவனும் “தேவனுடைய ஆலயத்தில் தூணா”கிப் பரலோகத்தில் ஓரிடத்தைப் பெற்றுக்கொள்கிறான். யெகோவாவின் மற்ற வணக்கத்தாராகிய “திரள் கூட்டமான ஜனங்கள்” ஏரோது திரும்பக் கட்டின ஆலயத்தில் புறஜாதிகளின் பிரகாரம் பிரதிநிதித்துவம் செய்த இடத்தில் “[தேவனுக்கு] பரிசுத்த சேவை” [NW] செய்கிறார்கள். இயேசுவினுடைய பலியில் விசுவாசத்தின் காரணமாக இவர்கள் “மிகுந்த உபத்திரவத்”தினூடே பாதுகாக்கப்படுவதில் விளைவடையும் நீதியான நிலைநிற்கையை கொண்டிருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 3:12; 7:9-15.
3, 4. பூமியின்மீதிருக்கும் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் சபை யாருக்கு ஒப்பிட்டுக்கூறப்படுகிறது, அது எந்தக் கறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாயிருக்க வேண்டும்?
3 பூமியின்மீதிருக்கும் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையும்கூட விக்கிரகாராதனையிலிருந்து விடுபட்ட மற்றொரு ஆலயத்துக்கு அடையாள அர்த்தத்தில் ஒப்பிட்டுக்கூறப்படுகிறது. ‘பரிசுத்த ஆவியால் முத்திரைப் போடப்பட்ட’ இப்படிப்பட்டவர்களுக்கு பவுல் அப்போஸ்தலன் எழுதினார்: “அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.” (எபேசியர் 1:13; 2:20-22) முத்திரிக்கப்பட்ட இந்த 1,44,000 பேர் “பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவரும்” “ஜீவனுள்ள கற்”களாக இருக்கின்றனர்.—1 பேதுரு 2:5; வெளிப்படுத்துதல் 7:4; 14:1.
4 இந்தத் துணை ஆசாரியர்கள் “தேவனுடைய மாளிகை”யாக இருப்பதன் காரணமாக இந்த ஆலயம் கறைப்படுவதை அவர் அனுமதிப்பதில்லை. (1 கொரிந்தியர் 3:9, 16, 17) “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக,” என்பதாக பவுல் எச்சரித்தார். “நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?” ‘சர்வவல்லமையுள்ள கர்த்தருடையவர்களாக’ [யெகோவாவுடையவர்களாக, NW] இருக்கும் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் விக்கிரகாராதனைக்கு விலகியோட வேண்டும். (2 கொரிந்தியர் 6:14-18) திரள்கூட்டத்தைச் சேர்ந்தவர்களும்கூட சகலவிதமான விக்கிரகாராதனையையும் தவிர்க்கவேண்டும்.
5. யெகோவா தனிப்பட்ட பக்திக்குப் பாத்திரராய் இருப்பதை உணர்ந்தவர்களாய், மெய்க் கிறிஸ்தவர்கள் என்ன செய்கிறார்கள்?
5 நேரடியானது மற்றும் தந்திரமானது என்று இரண்டுவிதமான விக்கிரகாராதனை இருக்கின்றன. இல்லை, விக்கிரகாராதனை பொய் தேவர்கள் அல்லது தேவதைகள் வணக்கத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. அது யெகோவாவைத் தவிர வேறு ஏதோ ஒன்றை அல்லது எவரோ ஒருவரை வணங்குவதாக இருக்கிறது. சர்வலோக பேரரசராக, அவர் சரியாகவே தனிப்பட்ட பக்தியை தேவைப்படுத்துகிறவராயும் அதற்குப் பாத்திரராயும் இருக்கிறார். (உபாகமம் 4:24) இதை அறிந்தவர்களாய், மெய்க் கிறிஸ்தவர்கள் எல்லா விக்கிரகாராதனைக்கும் எதிராக உள்ள வேதப்பூர்வமான எச்சரிப்புகளுக்குச் செவிசாய்க்கிறார்கள். (1 கொரிந்தியர் 10:7) யெகோவாவின் ஊழியர்கள் தவிர்க்கவேண்டிய ஒருசில விதமான விக்கிரகாராதனையைச் சிந்திப்போமாக.
கிறிஸ்தவமண்டலத்தின் விக்கிரகாராதனை முன்நிழலாக காண்பிக்கப்பட்டது
6. எசேக்கியேல் என்ன அருவருப்பான காரியங்களைத் தரிசனத்தில் பார்த்தார்?
6 பொ.ச.மு. 612-ல் பாபிலோனிய சிறையிருப்பில் இருக்கையில், எசேக்கியேல் தீர்க்கதரிசி எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்தில் விசுவாசத்துரோக யூதர்கள் அப்பியாசித்துவந்த அருவருப்பான காரியங்களைப்பற்றிய தரிசனத்தைப் பெற்றார். எசேக்கியேல் “எரிச்சலுண்டாக்குகிற விக்கிரக”த்தைப் பார்த்தார். எழுபது மூப்பர்கள் ஆலயத்தில் தூபவர்க்கம் காட்டுவதை கவனிக்கிறார். பெண்கள் ஒரு பொய் கடவுளுக்காக புலம்பிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். மேலும் 25 புருஷர்கள் சூரியனை நமஸ்கரித்துக்கொண்டிருந்தார்கள். இந்த விசுவாசத்துரோகச் செயல்கள் என்ன முக்கியத்துவமுடையதாக இருந்தன?
7, 8. “பொறாமையின் விக்கிரகம்” என்னவாக இருந்திருக்கலாம், அது ஏன் யெகோவாவுக்கு எரிச்சலைமூட்டியது?
7 எசேக்கியேல் தரிசனத்தில் கண்ட அருவருப்பான காரியங்கள் கிறிஸ்தவமண்டல விக்கிரகாராதனைக்கு முன்நிழலாக இருந்தன. உதாரணமாக அவர் சொன்னார்: “இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது. அவர் [யெகோவா தேவன்] என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா?”—எசேக்கியேல் 8:1-6.
8 கடவுளுடைய ஆலயத்தில் எரிச்சலின் அந்த விக்கிரக சின்னம் [பொறாமையின் சின்னம், NW] கானானியர்கள் தங்கள் கடவுள் பாகாலின் மனைவியாக கருதிய பொய் தேவதையை பிரதிநிதித்துவம் செய்த பரிசுத்த தோப்பாக இருந்திருக்கலாம். விக்கிரகம் என்னவாக இருந்தாலும், அது அவருடைய பின்வரும் இந்தக் கற்பனைகளின் மீறுதலாக இஸ்ரவேலின் தனிப்பட்ட பக்தியை பிரித்துவிட்ட காரணத்தால் அது யெகோவாவுக்கு எரிச்சலைமூட்டியது: “உன் தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] நானே. . . . என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயி” [தனிப்பட்ட பக்தியை வற்புறுத்துகிற தேவன், NW] ருக்கிறேன்.—யாத்திராகமம் 20:2-5.
9. கிறிஸ்தவமண்டலம் கடவுளுக்கு எவ்விதமாக எரிச்சலூட்டியிருக்கிறது?
9 பொறாமையின் விக்கிரகத்தை கடவுளுடைய ஆலயத்தில் வணங்கினது, விசுவாசத்துரோக இஸ்ரவேலர் செய்த மிகப்பெரிய அருவருப்பான காரியங்களில் ஒன்றாக இருந்தது. அதேவிதமாகவே, கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் தாங்கள் சேவிப்பதாக உரிமைபாராட்டுபவருக்கு கொடுக்கும் தனிப்பட்ட பக்தியை பிரித்திடும் அல்லது கடவுளை கனவீனப்படுத்தும் சின்னங்கள் மற்றும் விக்கிரகங்களால் கறைப்பட்டிருக்கின்றன. மதகுருமார் மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கையாக கடவுளுடைய ராஜ்யத்தை நிராகரித்து நிற்கக்கூடாத இடமாகிய ‘பரிசுத்த ஸ்தலத்திலே நின்றுகொண்டிருக்கும் அருவருப்பான காரிய’மாகிய ஐக்கிய நாடுகளை வழிபடுவதன் காரணமாகவும்கூட கடவுள் எரிச்சலூட்டப்படுகிறார்.—மத்தேயு 24:15, 16; மாற்கு 13:14.
10. எசேக்கியேல் ஆலயத்திற்குள் என்ன பார்த்தார், இது எவ்வாறு கிறிஸ்தவமண்டலத்தில் கவனிக்கப்படுவதோடு ஒப்பிடப்படுகிறது?
10 ஆலயத்திற்குள் பிரவேசித்து எசேக்கியேல் அறிவிக்கிறார்: “நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீட்டப்பட்டிருந்தன. இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும், . . . அவைகளுக்கு முன்பாக நின்றார்கள்; தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழுப்பிற்று.” சற்று எண்ணிப்பாருங்கள்! அருவருப்பான சுவர் சித்திரங்களால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட பொய் கடவுட்களுக்கு யெகோவாவின் ஆலயத்திலுள்ள இஸ்ரவேல மூப்பர்கள் தூபவர்க்கம் போடுகிறார்கள். (எசேக்கியேல் 8:10-12) ஒப்பிடக்கூடியவகையில், பறவைகளும், காட்டு மிருகங்களும், மக்கள் பக்தியை கொடுக்கும் அந்தக் கிறிஸ்தவமண்டல தேசங்களை அடையாளப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. மேலுமாக, மெய்யான பைபிள் பதிவாகிய யெகோவா தேவனின் சிருஷ்டிப்பை ஆதரிப்பதற்கு பதிலாக, மனிதனுக்குக் கீழான விலங்கு உயிர்வகைகளிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்ற தவறான கோட்பாட்டை ஆதரிப்பதன்மூலம் மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கு உதவியதற்காக அநேக குருமார் குற்றமுள்ளவர்களாக இருக்கின்றனர்.—அப்போஸ்தலர் 17:24-28.
11 யெகோவாவின் ஆலயத்து வாயிலில், விசுவாசத்துரோக இஸ்ரவேல பெண்கள் தம்மூசுக்காக அழுதுகொண்டிருப்பதை எசேக்கியேல் பார்த்தார். (எசேக்கியேல் 8:13, 14) பாபிலோனியர்களும் சீரியர்களும் தம்மூசை மழைக்காலத்தில் வளர்ந்து, வறட்சியான காலத்தில் வாடிப்போகும் தாவரக்கடவுளாக கருதினார்கள். தாவர அழிவு தம்மூசின் மரணத்துக்குப் படமாக இருந்தது. ஆண்டுதோறும் மிகுதியான உஷ்ண காலத்தில் அவனுடைய வணக்கத்தார் இதற்காகப் புலம்பினார்கள். மழைக்காலத்தின்போது தாவரங்கள் மீண்டும் தோன்றுகையில் தம்மூசு கீழுலகத்திலிருந்து திரும்பிவந்துவிட்டதாகக் கருதப்பட்டது. அவன் அவனுடைய பெயரின் முதல் எழுத்தால், பிரதிநிதித்துவம் செய்யப்பட்டான், சிலுவையின் உருவாகிய பூர்வ டா. இது கிறிஸ்தவமண்டலம் சிலுவைக்குக் கொடுக்கும் விக்கிரகாராதனைக்குரிய பயபக்தியை நமக்கு நினைப்பூட்டக்கூடும்.
12. எசேக்கியேல், 25 விசுவாசத்துரோக இஸ்ரவேலர் என்ன செய்வதைப் பார்த்தார், அதேப்போன்ற என்ன செயல் கிறிஸ்தவமண்டலத்தில் நடைபெறுகிறது?
12 ஆலயத்தின் உட்பிரகாரத்தில், எசேக்கியேல் அடுத்து 25 விசுவாசத்துரோக இஸ்ரவேலர்கள் சூரியனை நமஸ்கரிப்பதை—இப்படிப்பட்ட விக்கிரகாராதனைக்கு விரோதமான யெகோவாவின் கட்டளையை மீறுவதை—பார்த்தார். (உபாகமம் 4:15-19) அந்த விக்கிரகாராதனைக்காரர் ஒருவேளை ஓர் ஆணின் பாலுறுப்பை பிரதிநிதித்துவம்செய்யும் திராட்சக்கிளையையும்கூட கடவுளுடைய நாசிக்கு முன்பாகப் பிடித்திருந்தார்கள். கடவுள் அவர்களுடைய ஜெபங்களுக்கு செவிகொடுக்காமலிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. கிறிஸ்தவமண்டலமும்கூட “மிகுந்த உபத்திரவத்தின்”போது அவருடைய உதவியை நாடும், ஆனால் அது வீணாயிருக்கும். (மத்தேயு 24:21) விசுவாசத்துரோக இஸ்ரவேலர் யெகோவாவின் ஆலயத்துக்கு தங்கள் முதுகைத் திருப்பி, ஒளி-கொடுக்கும் சூரியனை வணங்கியது போலவே, கிறிஸ்தவமண்டலம் கடவுளிடமிருந்துவரும் ஒளியை அசட்டைசெய்து, பொய் போதனைகளைக் கற்பித்து, உலக ஞானத்தை பெரிதும் போற்றி, ஒழுக்கயீனத்தை கவனியாமல் விட்டுவிடுகிறது.—எசேக்கியேல் 8:15-18.
13. எசேக்கியேல் தரிசனத்தில் கண்டவிதமான விக்கிரகாராதனையை என்ன விதங்களில் யெகோவாவின் சாட்சிகள் தவிர்க்கிறார்கள்?
13 எசேக்கியேலால் முன்காணப்பட்டபடி, கிறிஸ்தவமண்டலம் அல்லது மாதிரிபடிவ எருசலேமில் அப்பியாசிக்கப்படும் வகையான விக்கிரகாராதனையையும் யெகோவாவின் சாட்சிகள் தவிர்க்கிறார்கள். கடவுளை அவமதிக்கும் அடையாளச்சின்னங்களை நாம் வழிபடுவதில்லை. அரசாங்க “மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு” நாம் மரியாதை காட்டினபோதிலும், அவர்களுக்கு நம்முடைய கீழ்ப்படிதல் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. (ரோமர் 13:1-7; மாற்கு 12:17; அப்போஸ்தலர் 5:29) நம்முடைய இருதய பக்தி கடவுளுக்கும் அவருடைய ராஜ்யத்துக்கும் கொடுக்கப்படுகிறது. சிருஷ்டிகருக்கும் அவருடைய சிருஷ்டிப்புக்கும் பதிலாக நாம் பரிணாமக் கோட்பாட்டை மாற்றீடுசெய்வதில்லை. (வெளிப்படுத்துதல் 4:11) நாம் ஒருபோதும் சிலுவையை பூஜிப்பதோ ஆய்வறிவுக்கோட்பாடு, தத்துவம் அல்லது மற்ற வகையான உலக ஞானத்தை வழிபடுவதோ கிடையாது. (1 தீமோத்தேயு 6:20, 21) மற்ற சகலவிதமான விக்கிரகாராதனைக்கு எதிராகவும்கூட நாம் நம்மைக் காத்துக்கொள்கிறோம். இவற்றில் சில யாவை?
மற்றவிதமான விக்கிரகாராதனை
14. வெளிப்படுத்துதல் 13:1-லுள்ள “மூர்க்க மிருகம்” சம்பந்தமாக யெகோவாவின் ஊழியர்கள் என்ன நிலைநிற்கை எடுக்கிறார்கள்?
14 கிறிஸ்தவர்கள் அடையாளப்பூர்வமான “மூர்க்க மிருக”த்தை வழிபடுவதில் மனிதவர்க்கத்தோடு பங்கேற்பதில்லை. அப்போஸ்தலனாகிய யோவான் சொன்னார்: “சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின் மேல் பத்து முடிகளும் . . . இருந்தன. பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.” (வெளிப்படுத்துதல் 13:1, 8) மிருகங்கள் “ராஜாக்கள்” அல்லது அரசியல் வல்லரசுகளை அடையாளப்படுத்தக்கூடும். (தானியேல் 7:17; 8:3-8, 20-25) ஆகவே அடையாளமான மூர்க்க மிருகத்தின் ஏழுத் தலைகள் உலக வல்லரசுகளைக் குறிக்கின்றன—எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரீஸ், ரோம் மற்றும் பிரிட்டனும் அமெரிக்க ஐக்கிய மாகாணமும் சேர்ந்த ஆங்கிலோ அமெரிக்க கூட்டரசு. கிறிஸ்தவமண்டல பாதிரிமார் “இந்த உலகத்தின் அதிபதி,” சாத்தானுடைய அரசியல் அமைப்பை வழிபடுவதில் மனிதவர்க்கத்தை வழிநடத்திச் செல்வதன்மூலம் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் பெரும் அவமதிப்பை காண்பிக்கிறார்கள். (யோவான் 12:31) என்றபோதிலும் கிறிஸ்தவ நடுநிலையாளர்களும் ராஜ்ய ஆதரவாளர்களுமாக, யெகோவாவின் ஊழியர்கள் இப்படிப்பட்ட விக்கிரகாராதனையை நிராகரித்துவிடுகிறார்கள்.—யாக்கோபு 1:27.
15. யெகோவாவின் ஜனங்கள் உலக நட்சத்திரங்களை எவ்வாறு கருதுகிறார்கள், இதன் சம்பந்தமாக ஒரு சாட்சி என்ன சொன்னார்?
15 கடவுளுடைய ஜனங்கள் உலகின் பொழுதுபோக்கு மற்றும் போட்டிவிளையாட்டு நட்சத்திரங்களை வழிபடுவதிலிருந்தும்கூட விலகியிருக்கிறார்கள். யெகோவாவுக்கு ஒரு சாட்சியாக ஆனபின்பு ஓர் இசைக்கலைஞர் இவ்வாறு சொன்னார்: “பொழுதுபோக்குக்கும் நடனத்துக்குமான இசை தவறான ஆசைகளைத் தூண்டிவிடக்கூடும் . . . இதில் பங்கேற்பவர், கேட்போரில் பலர் தங்கள் விவாகத்துணைவரில் குறைவுபடுவதாக நினைக்கக்கூடிய மகிழ்ச்சியையும் மென்மையையும்பற்றி பாடுகிறார். இந்தக் கலைஞர் அநேகமாக அவர் பாடும் விஷயத்தோடு அடையாளப்படுத்தப்படுகிறார். எனக்குத் தெரிந்த, இசை மற்றும் பாட்டுத் துறையில் தேர்ச்சிப்பெற்ற ஒரு சிலர், இந்தக் காரணத்துக்காகவே பெண்கள் மத்தியில் உண்மையில் பிரபலமாக இருக்கின்றனர். இந்தக் கற்பனை உலகில் ஒருவர் மூழ்கிவிடுவாரேயானால், அவர் பங்கேற்பவரை வழிபடுவதற்கு இது வழிநடத்தக்கூடும். இது ஒரு நபர் நினைவுப்பொருளாக ஆட்டோகிராஃப் கேட்பதன் மூலம் மிகவும் தீங்கற்ற வகையில் ஆரம்பிக்கலாம். ஆனால் சிலர் கலைஞரை தங்கள் இலட்சியவாதியாக கருதவும், தகுதிக்கு மிஞ்சி உயர்வான மதிப்பைக் கொடுப்பதன் மூலம் அவரை வழிபாட்டுக்குரிய ஒரு தெய்வ உருவாகவும் ஆக்கிவிடுகிறார்கள். அவர்கள் நட்சத்திரத்தின் படத்தை சுவரில் மாட்டி அவர் செய்வதைப் போன்றே உடுத்தவும் தலைசீவவும் ஆரம்பிக்கலாம். வழிபாடு கடவுளுக்கு மட்டுமே உரியது என்பதை கிறிஸ்தவர்கள் மனதில் கொள்வது அவசியமாகும்.”
16. நீதியுள்ள தேவதூதர் விக்கிரகாராதனையை நிராகரிப்பதை எது காட்டுகிறது?
16 ஆம், கடவுள் மாத்திரமே வழிபாடு அல்லது வணக்கத்துக்குப் பாத்திராக இருக்கிறார். யோவான் தனக்கு அதிசயமான காரியங்களைக் காண்பித்த “தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழு”ந்தபோது அந்த ஆவி சிருஷ்டி எவ்வகையிலும் வழிபாட்டுக்குரியவராக ஆக மறுத்து, ஆனால் இவ்விதமாகச் சொன்னார்: “நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும் இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள்.” (வெளிப்படுத்துதல் 22:8, 9) யெகோவாவுக்கு பயம் அல்லது அவரிடமாக ஆழ்ந்த மரியாதை, அவரை மாத்திரமே வணங்கும்படி நம்மைச் செய்விக்கிறது. (வெளிப்படுத்துதல் 14:7) இவ்விதமாக, மெய்யான தேவபக்தி விக்கிரகாராதனையிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.—1 தீமோத்தேயு 4:8.
17. விக்கிரகாராதனையான பாலுறவு ஒழுக்கக்கேட்டுக்கு எதிராக நாம் எவ்வாறு காத்துக்கொள்ளலாம்?
17 பாலுறவு ஒழுக்கக்கேடு யெகோவாவின் ஊழியர்கள் நிராகரித்த மற்றொரு விதமான விக்கிரகாராதனையாகும். “விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்குரிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லை,” என்பதை அவர்கள் அறிவார்கள். (எபேசியர் 5:5) விக்கிரகாராதனை உட்பட்டிருக்கிறது, ஏனென்றால் கள்ளத்தனமான இன்பத்துக்கான ஏக்கம் பக்திக்குரிய ஒரு பொருளாகிவிடுகிறது. தவறான பாலுறவு ஆசைகளால் தெய்வீக குணங்கள் ஆபத்துக்குள்ளாக்கப்படுகின்றன. ஆபாசஇலக்கியங்களுக்குக் கண்களையும் காதுகளையும் சாய்ப்பதன்மூலம், ஒரு நபர் பரிசுத்த கடவுளாகிய யெகோவாவோடு கொண்டுள்ள எந்த உறவையும் ஆபத்திற்குள்ளாக்குகிறார். (ஏசாயா 6:3) அப்படியென்றால் இப்படிப்பட்ட விக்கிரகாராதனைக்கு எதிராக காத்துக்கொள்வதற்கு கடவுளுடைய ஊழியர்கள் ஆபாச இலக்கியத்தையும் ஒழுக்கங்கெடுக்கும் இசையையும் கட்டாயமாகவே தவிர்க்கவேண்டும். அவர்கள் வேதாகமத்தின் அடிப்படையில் பலமான ஆவிக்குரிய மதிப்பீடுகளை உறுதியாகப் பற்றிக்கொண்டு, “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்”டேயிருப்பது அவசியமாகும்.—எபேசியர் 4:22-24.
பேராசையையும் பொருளாசையையும் தவிர்த்திடுங்கள்
18, 19. (எ) பேராசை மற்றும் பொருளாசை என்பது என்ன? (பி) விக்கிரகாராதனையான பேராசைக்கும் பொருளாசைக்கும் எதிராக நம்மை எவ்வாறு காத்துக்கொள்ளலாம்?
18 கிறிஸ்தவர்கள் விக்கிரகாராதனையோடு நெருக்கமாக சம்பந்தப்பட்ட பேராசைக்கும் பொருளாசைக்கும் எதிராகவும்கூட காத்துக்கொள்கிறார்கள். பேராசை என்பது மட்டுமீறிய அல்லது பேரளவான ஆசையாகவும் பொருளாசை என்பது வேறொருவருக்கு சொந்தமான ஏதோ ஒன்றிற்காக பேராசைப்படுவதாகவும் இருக்கிறது. இயேசு பொருளாசைக்கு எதிராக எச்சரித்து, மரணத்தின்போது தன் செல்வத்திலிருந்து பயனடைய முடியாமலும், “தேவனிடத்தில் ஐசுவரியவானாய்” இல்லாததால் பரிதாபமான நிலையிலும் இருந்த ஒரு பொருளாசையுள்ள ஐசுவரியவானைப்பற்றி பேசினார். (லூக்கா 12:15-21) பவுல் பொருத்தமாகவே உடன்விசுவாசிகளுக்கு இவ்வாறு புத்திமதி கூறினார்: “விக்கிரகாராதனையான பொருளாசை[யை] . . . பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.”—கொலோசெயர் 3:5.
19 பணத்துக்கான ஆசை, உணவு மற்றும் பானத்துக்கான பேரளவான ஆசை அல்லது அதிகாரத்துக்கான பேராவலால் அலைக்கழிக்கப்படுகிறவர்கள் இப்படிப்பட்ட ஆசைகளை தங்கள் விக்கிரகங்களாக்கிக் கொள்கின்றனர். பவுல் சுட்டிக்காண்பித்தவிதமாகவே, பேராசையுள்ள ஆள் ஒரு விக்கிரகாராதனைக்காரனாக இருக்கிறான், அவன் கடவுளுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை. (1 கொரிந்தியர் 6:9, 10; எபேசியர் 5:5) ஆகவே, பேராசையுள்ள ஆட்களாக விக்கிரகாராதனையை அப்பியாசிக்கும் முழுக்காட்டப்பட்ட தனிநபர்கள் கிறிஸ்தவ சபையிலிருந்து சபை நீக்கம் செய்யப்படலாம். என்றபோதிலும், வேதாகமத்தைப் பொருத்தி உள்ளார்வத்தோடு ஜெபிப்பதன்மூலம் நாம் பேராசையைத் தவிர்த்திடலாம். நீதிமொழிகள் 30:7-9 சொல்கிறது: “இரண்டு மனு உம்மிடத்தில் [யெகோவா தேவனிடத்தில்] கேட்கிறேன்; நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். மாயையையும் பொய் வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும் என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.” இப்படிப்பட்ட ஆவி, விக்கிரகாராதனையான பேராசைக்கும் பொருளாசைக்கும் எதிராக காத்துக்கொள்ள நமக்கு உதவிசெய்யும்.
சுய-விக்கிரகாராதனைக்கு எதிராக காத்துக்கொள்ளுங்கள்
20, 21. யெகோவாவின் மக்கள் எவ்விதமாக சுய-விக்கிரகாராதனைக்கு எதிராக காத்துக்கொள்கிறார்கள்?
20 யெகோவாவின் மக்கள் சுய-விக்கிரகாராதனைக்கு எதிராகவும்கூட காத்துக்கொள்கிறார்கள். இந்த உலகில் தன்னைத்தானேயும் தன்னுடைய சொந்த விருப்பத்தையும் வழிபடுவது சர்வசாதாரணமாகும். புகழுக்கும் மகிமைக்குமான ஆசை அநேகரை தவறான முறைகளில் செயல்பட செய்விக்கிறது. அவர்கள் கடவுளுடையது அல்ல, தங்களுடைய சொந்த விருப்பங்கள் செய்யப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் நம்முடைய சொந்த விருப்பத்தை வலியுறுத்த தவறாக நாடி மற்றவர்கள்மீது இறுமாப்பாய் அதிகாரம் செலுத்த முயற்சிசெய்வதன்மூலம் சுய-விக்கிரகாராதனைக்கு உடன்பட்டுவிடுவோமானால், கடவுளோடு நமக்கு எந்த உறவும் இருக்கமுடியாது. (நீதிமொழிகள் 3:32; மத்தேயு 20:20-28; 1 பேதுரு 5:2, 3) கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாக, நாம் உலகின் நயவஞ்சகமான காரியங்களைத் தள்ளிவிட்டிருக்கிறோம்.—2 கொரிந்தியர் 4:1, 2.
21 புகழை நாடுவதற்குப் பதிலாக கடவுளுடைய ஜனங்கள் பவுலின் புத்திமதிக்கு இணங்கச் செயல்படுகிறார்கள்: “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.” (1 கொரிந்தியர் 10:31) யெகோவாவின் ஊழியர்களாக, நாம் மட்டுக்கு மீறி நம்முடைய வழியை வற்புறுத்தாமல், ஆனால் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யிடமிருந்து வரும் அறிவுரையை ஏற்றுக்கொண்டு யெகோவாவின் அமைப்போடு முழுவதுமாக ஒத்துழைத்து தெய்வீக சித்தத்தை சந்தோஷத்தோடே செய்கிறோம்.—மத்தேயு 24:45-47, NW.
விழிப்பாயிருங்கள்!
22, 23. எவ்வகையில் நாம் சகலவிதமான விக்கிரகாராதனைக்கும் எதிராக நம்மைக் காத்துக்கொள்ள முடியும்?
22 யெகோவாவின் மக்களாக, நாம் சடப்பொருளாலான விக்கிரகங்களுக்கு முன்பாக தலைவணங்குவதில்லை. தந்திரமான விதமான விக்கிரகாராதனைக்கு எதிராகவும்கூட நாம் காத்துக்கொள்கிறோம். உண்மையில், நாம் சகலவித விக்கிரகாராதனையையும் தொடர்ந்து தவிர்க்க வேண்டும். ஆகவே நாம் யோவானின் புத்திமதிக்கு இணங்கச் செயலாற்றுகிறோம்: “விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக.”—1 யோவான் 5:21.
23 யெகோவாவின் ஊழியர்களில் ஒருவராக இருந்தால், பைபிளால்-பயிற்றுவிக்கப்பட்ட உங்கள் மனச்சாட்சியையும் பகுத்துணரும் ஆற்றலையும் எப்போதும் அப்பியாசியுங்கள். (எபிரெயர் 5:14) அப்போது நீங்கள் உலகின் விக்கிரகாராதனைக்குரிய ஆவியால் கறைபடாமல், ஆனால் மூன்று உண்மையுள்ள எபிரெயர்களைப் போலவும் உண்மை மாறாத பூர்வ கிறிஸ்தவர்களைப் போலவும் இருப்பீர்கள். நீங்கள் யெகோவாவுக்குத் தனிப்பட்ட பக்தியை கொடுப்பீர்கள், அவர் சகலவிதமான விக்கிரகாராதனைக்கும் எதிராக காத்துக்கொள்ள உங்களுக்கு உதவிசெய்வார்.
11. விசுவாசத்துரோக இஸ்ரவேல பெண்கள் ஏன் தம்மூசுக்காக அழுதுகொண்டிருந்தனர்?
உங்கள் கருத்துக்கள் யாவை?
◻ எசேக்கியேலின் தரிசனத்தில் காணப்பட்ட விதமான விக்கிரகாராதனையை யெகோவாவின் சாட்சிகள் எவ்விதமாக தவிர்க்கிறார்கள்?
◻ வெளிப்படுத்துதல் 13:1-ன் “மூர்க்க மிருகம்” என்பது என்ன, அதன் சம்பந்தமாக யெகோவாவின் ஊழியர்கள் என்ன நிலைநிற்கையை எடுக்கிறார்கள்?
◻ பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களை வழிபடுவதற்கு எதிராக ஏன் காத்துக்கொள்ளவேண்டும்?
◻ சுய-விக்கிரகாராதனைக்கு எதிராக நாம் எவ்வாறு நம்மைக் காத்துக்கொள்ளலாம்?
◻ ஏன் சகலவித விக்கிரகாராதனைக்கும் எதிராக நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்?
[பக்கம் 26-ன் படங்கள்]
எசேக்கியேலின் தரிசனத்தில் காணப்பட்ட அருவருப்பான காரியங்கள் எவ்விதமாக கிறிஸ்தவமண்டல விக்கிரகாராதனைக்கு முன்நிழலாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
[படத்திற்கான நன்றி]
Artwork (upper left) based on photo by Ralph Crane/Bardo Museum