விக்கிரகாராதனைக்கு எதிராக ஏன் காத்துக்கொள்ளவேண்டும்?
“பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக.” —1 யோவான் 5:21.
1. யெகோவாவின் வணக்கம் ஏன் விக்கிரகாராதனையிலிருந்து விடுபட்டதாக இருக்கிறது?
யெகோவா உலோகம், மரம், அல்லது கல்லினாலான ஒரு விக்கிரகம் இல்லை. பூமியிலுள்ள ஓர் ஆலயத்தில் அவரைத் தங்கவைக்க முடியாது. அவர் மனிதர்களால் காணமுடியாத சர்வவல்லமையுள்ள ஆவியாக இருப்பதன் காரணமாக, அவருக்கு ஒரு விக்கிரகத்தை உண்டுபண்ணுவது கூடாத காரியம். ஆகவே, யெகோவாவின் தூய்மையான வணக்கம் முற்றிலுமாக விக்கிரகங்களிலிருந்து விடுபட்டதாக இருக்கவேண்டும்.—யாத்திராகமம் 33:20; அப்போஸ்தலர் 17:24; 2 கொரிந்தியர் 3:17.
2. என்ன கேள்விகள் சிந்திப்பதற்கு தகுதியுள்ளதாய் இருக்கின்றன?
2 நீங்கள் யெகோவாவின் ஒரு வணக்கத்தாராக இருந்தால், அப்போது ‘விக்கிரகாராதனை என்பது என்ன? யெகோவாவின் ஊழியர்களால் எவ்விதமாக அதைக் கடந்த காலங்களில் தவிர்க்க முடிந்திருக்கிறது? மேலும், ஏன் இன்று விக்கிரகாராதனைக்கு எதிராக காத்துக்கொள்ளவேண்டும்?’ என்று ஒருவேளை சரியாகவே கேட்கலாம்.
விக்கிரகாராதனை என்பது என்ன
3, 4. விக்கிரகாராதனை எவ்விதமாக தொகுத்துரைக்கப்படலாம்?
3 பொதுவாக, விக்கிரகாராதனை ஓர் ஆசாரத்தை அல்லது ஒரு சடங்கை உட்படுத்துகிறது. விக்கிரகாராதனை என்பது ஒரு விக்கிரகத்தை வழிபடுவது, அன்புசெலுத்துவது, வணங்குவது அல்லது பூஜிப்பதாகும். ஒரு விக்கிரகம் என்பது என்ன? அது ஓர் உருவமாக, ஏதோ ஒன்றின் உருவமைப்பாக அல்லது பக்திக்குரிய ஒரு பொருளாக இருக்கும் சின்னமாக இருக்கிறது. பொதுவாக விக்கிரகாராதனை உயிருடன் இருப்பதாக (ஒரு மனிதன், ஒரு விலங்கு அல்லது ஓர் அமைப்பு) விசுவாசிக்கப்படும் உண்மையான அல்லது நம்பப்பட்ட மேலான ஒரு சக்தியை கருத்தில் கொண்டு செய்யப்படுகிறது. ஆனால் விக்கிரகாராதனை உயிரில்லா பொருட்களின் சம்பந்தமாகவும்கூட (இயற்கையின் ஒரு சக்தி அல்லது உயிரற்றப் பொருள்) அப்பியாசிக்கப்படலாம்.
4 வேதாகமத்தில், விக்கிரகங்களைக் குறிப்பிடும் எபிரெய வார்த்தைகள் அநேகமாக பயனின்மையை வலியுறுத்துவதாகவோ அல்லது வெறுப்புக்குரிய பதங்களாகவோ இருக்கின்றன. இவற்றில், “உருவாக்கப்பட்ட அல்லது செதுக்கப்பட்ட சொரூபம்” (நேர்பொருள், உருவாக்கப்பட்ட ஒன்று); “வார்ப்பிக்கப்பட்ட சிலை, சொரூபம் அல்லது விக்கிரகம்” (அச்சில் வார்க்கப்பட்ட அல்லது ஊற்றப்பட்ட ஏதோஒன்று); “அருவருப்பான விக்கிரகம்”; “வீணான விக்கிரகங்கள்” (நேர்பொருள், பயனின்மை); “நரகலான விக்கிரகங்கள்” என்பவை மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சில வார்த்தைகளாகும். கிரேக்க வார்த்தை ஈடோலோன் “விக்கிரகம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
5. எல்லா சொரூபங்களுமே விக்கிரகங்கள் அல்ல என்று ஏன் சொல்லப்படலாம்?
5 எல்லா சொரூபங்களுமே விக்கிரகங்கள் அல்ல. உடன்படிக்கை பெட்டிக்காக பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்யும்படியாகவும், வாசஸ்தலத்துக்காக பத்து மூடுதிரைகளின் உள்உறையிலும், பரிசுத்த ஸ்தலத்தையும் மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் திரைச் சீலையிலும் இப்படிப்பட்ட ஆவி சிருஷ்டிகளின் உருவமைப்பை தைக்கும்படியாகவும் கடவுள்தாமே இஸ்ரவேலர்களிடம் சொன்னார். (யாத்திராகமம் 25:1, 18; 26:1, 31-33) பலிபீட ஊழியம் செய்யும் ஆசாரியர்கள் மாத்திரமே அடிப்படையில் பரலோக கேருபீன்களுக்கு அடையாளச்சின்னமாக இருந்த இந்த உருவமைப்புகளைப் பார்த்தனர். (எபிரெயர் 9:24, 25 ஒப்பிடவும்.) கேருபீன்களின் வாசஸ்தல உருவமைப்புகள் வழிபடுவதற்காக இல்லை என்பது தெளிவாக இருக்கிறது. ஏனென்றால் நீதியுள்ள தூதர்கள்தாமே வணக்கத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.—கொலோசெயர் 2:19; வெளிப்படுத்துதல் 19:10; 22:8, 9.
விக்கிரகாராதனைப்பற்றிய யெகோவாவின் கருத்து
6. விக்கிரகாராதனைப்பற்றிய யெகோவாவின் கருத்து என்ன?
6 யெகோவாவின் ஊழியர்கள் விக்கிரகாராதனைக்கு எதிராக காத்துக்கொள்கிறார்கள், ஏனென்றால் அவர் சகல விக்கிரகாராதனைக்குரிய பழக்கவழக்கங்களையும் எதிர்க்கிறார். வழிபாட்டுக்குரிய பொருட்களாக சொரூபங்களை உருவாக்கி அவற்றை வணங்கவேண்டாம் என்று இஸ்ரவேலருக்கு கடவுள் கட்டளையிட்டிருந்தார். பத்துக் கற்பனைகளில் இந்த வார்த்தைகளைக் காணமுடியும்: “மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீர்களிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள [தனிப்பட்ட பக்தியை விரும்புகிற, NW] தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.”—யாத்திராகமம் 20:4-6.
7. யெகோவா ஏன் சகல விக்கிரகாராதனையையும் எதிர்க்கிறார்?
7 ஏன் யெகோவா சகல விக்கிரகாராதனையையும் எதிர்க்கிறார்? பத்து கற்பனைகளில் இரண்டாவது, மேலே காண்பிக்கப்பட்டிருக்கிறபடி, முக்கியமாக அவர் தனிப்பட்ட பக்தியை வலியுறுத்துவதன் காரணமாகவே. மேலுமாக, அவர் தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின்மூலம் இவ்விதமாகச் சொல்லியிருந்தார்: “நான் கர்த்தர், [யெகோவா, NW] இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.” (ஏசாயா 42:8) ஒரு சமயம் இஸ்ரவேலர் அந்த அளவுக்கு விக்கிரகாராதனைக் கண்ணியில் சிக்கிய காரணத்தால் அவர்கள் “தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.” (சங்கீதம் 106:36, 37) விக்கிரகாராதனைக்காரர் யெகோவாவே மெய்க்கடவுள் என்பதை மறுதலிப்பது மட்டுமல்லாமல், அவருடைய பிரதான சத்துருவாகிய சாத்தானின் அக்கறைகளையும்கூட பிசாசுகளோடு சேர்ந்து சேவிக்கிறார்கள்.
சோதனையின்கீழ் உண்மைத்தவறாமை
8. மூன்று எபிரெயர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ன சோதனையை எதிர்ப்பட்டார்கள்?
8 யெகோவாவுக்கு உண்மைத்தவறாமையும்கூட விக்கிரகாராதனைக்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்ளச் செய்கிறது. தானியேல் அதிகாரம் 3-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவம் இதை விளக்குகிறது. பாபிலோன் அரசனாகிய நேபுகாத்நேச்சார் தான் நிறுத்தியிருந்த பெரிய பொற்சிலையை பிரதிஷ்டைசெய்வதற்காக தேசத்திலுள்ள அதிகாரிகளை கூட்டிச்சேர்த்தார். அவருடைய ஆணையில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ—பாபிலோன் மாகாணத்தின் மூன்று எபிரெய நிர்வாகிகளும் அடங்கியிருந்தார்கள். குறிப்பிட்ட இசைக் கருவிகளின் சத்தத்தைக் கேட்கையில் அங்குள்ள அனைவரும் சிலைக்கு முன்பாக பணிந்துகொள்ளும்படி கட்டளையிடப்பட்டார்கள். இது பாபிலோனிய பேரரசை பிரதிநிதித்துவம் செய்த சிலைக்கு முன்பாக மூன்று எபிரெயர்களை தலைவணங்கச் செய்விப்பதற்கு, பாபிலோனின் உண்மையான கடவுளாகிய சாத்தானின் ஒரு முயற்சியாக இருந்தது. நீங்கள் அங்கு இருப்பதை கற்பனைச்செய்து பாருங்கள்.
9, 10. (எ) மூன்று எபிரெயர்கள் என்ன நிலைநிற்கையை எடுத்தனர்? அவர்கள் எவ்விதமாக பலனளிக்கப்பட்டனர்? (பி) மூன்று எபிரெயர்களின் போக்கிலிருந்து யெகோவாவின் சாட்சிகள் என்ன ஊக்குவிப்பைப் பெற்றுக்கொள்ளலாம்?
9 அதோ! மூன்று எபிரெயர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். விக்கிரகங்கள் அல்லது வார்க்கப்பட்ட சொரூபங்களை உண்டுபண்ணுவதற்கும் அவற்றைச் சேவிப்பதற்கும் எதிராக கடவுளுடைய சட்டம் அவர்கள் நினைவுக்கு வருகிறது. நேபுகாத்நேச்சார் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை தருகிறார்—வணங்குங்கள் அல்லது மடிந்துபோங்கள்! ஆனால் யெகோவாவுக்கு உண்மைத்தவறாதவர்களாக அவர்கள் சொல்லுகிறார்கள்: “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது.”—தானியேல் 3:16-18.
10 கடவுளின் இந்த உண்மைத்தவறாக ஊழியர்கள் மிகவும் சூடாக்கப்பட்ட சூளையில் போடப்படுகிறார்கள். நான்கு மனிதர்கள் அக்கினிச்சூளையின் நடுவிலே நடப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்து நேபுகாத்நேச்சார் மூன்று எபிரெயர்களை வெளியேவரும்படி அழைக்கிறார், அவர்கள் சேதம் எதுவுமின்றி வெளியே வருகிறார்கள். அப்பொழுது ராஜா வியந்து கூறுகிறார்: “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப்பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால் அவர் தமது தூதனை [அக்கினிசூளையில் நான்காவது நபர்] அனுப்பி தம்முடைய தாசரை விடுவித்தார். . . . இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை.” (தானியேல் 3:28, 29) அந்த மூன்று எபிரெயர்கள் உத்தமத்தைக் காத்துக்கொண்டது, கடவுளுக்கு உண்மைத்தவறாமலிருக்கவும், உலகத்தினிடமாக நடுநிலைமையைக் காத்துக்கொள்ளவும், விக்கிரகாராதனையைத் தவிர்க்கவும் யெகோவாவின் நவீன-நாளைய சாட்சிகளுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.—யோவான் 17:16.
விக்கிரகங்கள் வழக்குமன்றத்தில் தோல்வியடைகின்றன
11, 12. (எ) யெகோவாவையும் விக்கிரக தேவர்களையும் உட்படுத்திய என்ன பதிவை ஏசாயா எழுதினார்? (பி) யெகோவா சவாலுக்கு அழைத்தபோது தேசங்களின் கடவுட்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்?
11 விக்கிரகாராதனைக்கு எதிராக காத்துக்கொள்வதற்கு மற்றொரு காரணம், விக்கிரக வழிபாடு பயனற்றதாகும். மனிதன் உண்டுபண்ணும் சில விக்கிரகங்கள் உயிருள்ளவை போன்று—அநேகமாக ஒரு வாய், கண்கள் மற்றும் காதுகளோடு—தோன்றினாலும், அவற்றால் பேசவும், பார்க்கவும் அல்லது கேட்கவும் முடியாது, அவை தங்கள் பக்தர்களுக்கு எதையும் செய்ய இயலாது. (சங்கீதம் 135:15-18) இது பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் காட்டப்பட்டது, அது கடவுளுடைய தீர்க்கதரிசி உண்மையில் யெகோவாவுக்கும் விக்கிரக கடவுட்களுக்குமிடையே ஒரு வழக்கை ஏசாயா 43:8-28-ல் பதிவுசெய்த சமயமாக இருந்தது. அதில் கடவுளுடைய ஜனமாகிய இஸ்ரவேலர் ஒரு பக்கத்திலும் உலக தேசங்கள் அடுத்தப் பக்கத்திலும் இருந்தனர். யெகோவா தேசங்களின் கடவுட்களை “முந்தி சம்பவிப்பவைகளை” தெரிவிக்கமுடியுமா, திருத்தமாக தீர்க்கதரிசனமுரைக்க முடியுமா என்று சவாலுக்கு அழைக்கிறார். ஒருவராலும் முடியாது. தம்முடைய ஜனங்களிடமாக திரும்பி யெகோவா சொன்னார்: “நீங்கள் எனக்குச் சாட்சிகள் . . . நானே கர்த்தர்.” தேசங்கள் தங்களுடைய கடவுட்கள், யெகோவாவுக்கு முன்பிருந்தே இருப்பதையோ அல்லது அவை தீர்க்கதரிசனமுரைக்க முடியுமென்றோ நிரூபிக்கமுடியாது. ஆனால் யெகோவா பாபிலோனின் பாழ்க்கடிப்பையும் அவருடைய சிறைப்பட்ட ஜனத்தின் விடுதலையையும் முன்னுரைத்தார்.
12 மேலுமாக, விடுவிக்கப்படும் கடவுளுடைய ஊழியர்கள் ஏசாயா 44:1-8 விவரிக்கிறபடி, “நான் கர்த்தருடையவன் [யெகோவாவுடையவன்]” என்பதாகச் சொல்வார்கள். அவர்தாமே சொல்லியிருக்கிறார்: “நான் முந்தினவரும் நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிரத் தேவன் இல்லை.” இதற்கு விக்கிரக-தேவர்களிடமிருந்து எந்த மறுப்பும் வரவில்லை. “நீங்களே என் சாட்சிகள்” என்பதாக யெகோவா மறுபடியும் தம்முடைய ஜனங்களைப்பற்றி சொல்லி, “என்னைத் தவிரத் தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே” என்று கூடுதலாக உரைத்தார்.
13. விக்கிரகாராதனை விக்கிரகாராதனைக்காரனைப்பற்றி எதை வெளிப்படுத்துகிறது?
13 விக்கிரகாராதனையில் ஈடுபடுவது ஞானம் குறைவுபடுவதைச் சுட்டிக்காண்பிப்பதாலும்கூட நாம் அதற்கு எதிராக காத்துக்கொள்கிறோம். விக்கிரகாராதனைக்காரன் தான் தெரிந்துகொள்ளும் மரத்தின் ஒரு பாகத்தைக் கொண்டு வணங்குவதற்கு ஒரு கடவுளை உண்டாக்கி, மற்றொரு பாகத்தைக்கொண்டு தன் உணவை சமைக்க நெருப்பை மூட்டுகிறான். (ஏசாயா 44:9-17) எத்தனை முட்டாள்தனம்! விக்கிரக-தேவர்களை உண்டுபண்ணுகிறவனும் பக்தனும் அவற்றின் தேவத்துவத்தை நிரூபிக்க நம்பத்தக்க சாட்சி கொடுக்கமுடியாமல் இருப்பதாலும்கூட அவமானத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால் யெகோவாவின் தேவத்துவம் மறுக்கமுடியாததாகும். ஏனென்றால் அவர் பாபிலோனிலிருந்து தம்முடைய ஜனங்களின் விடுதலையை முன்னறிவித்ததோடு மட்டுமல்லாமல், அதை நிகழவும் செய்தார். எருசலேம் மறுபடியும் குடியேற்றப்பட்டது, யூதா நகரங்கள் மீண்டும் கட்டப்பட்டன, பாபிலோனின் “ஆழமான தண்ணீர்கள்” [NW]—ஐபிராத்து நதி—இனிமேலும் பாதுகாப்பின் ஊற்றுமூலமாக இல்லாமல் போனது. (ஏசாயா 44:18-27) கடவுள் முன்னறிவித்தது போலவே, பெர்சியனான கோரேசு பாபிலோனைக் கைப்பற்றினான்.—ஏசாயா 44:28–45:6.
14. சர்வலோக உச்ச நீதிமன்றத்தில், எது நிரந்தரமாக நிரூபிக்கப்பட்டுவிடும்?
14 விக்கிரக-தெய்வங்கள், தேவத்துவத்தின் சம்பந்தமாக சட்டப்பூர்வமான வழக்கில் தோற்றுப்போனார்கள். பாபிலோனுக்கு நேரிட்டது, அவளுடைய நவீன நாளைய இணைப்பொருத்தமான மகா பாபிலோன், பொய் மத உலகப் பேரரசுக்கு நேரிடுவது நிச்சயம். அவளும் அவளுடைய எல்லா கடவுட்களும், மதசம்பந்தமான பரிவாரங்களும், விக்கிரகாராதனைக்குரிய பொருட்களும் வெகு சீக்கிரத்தில் என்றுமாக இல்லாமற் போகும். (வெளிப்படுத்துதல் 17:12–18:8) சர்வலோக உச்ச நீதிமன்றத்தில், அப்போது யெகோவா மாத்திரமே ஜீவனுள்ள மற்றும் மெய் கடவுள் என்பதும் அவர் தம்முடைய தீர்க்கதரிசன வார்த்தையை நிறைவேற்றுகிறார் என்பதும் நிரந்தரமாக நிரூபிக்கப்பட்டுவிடும்.
பிசாசுகளுக்குப் பலிகள்
15. பரிசுத்த ஆவியும் முதல் நூற்றாண்டு ஆளும் குழுவும் யெகோவாவின் மக்களையும் விக்கிரகாராதனையையும்பற்றி சுட்டிக்காட்டியது என்ன?
15 யெகோவாவின் மக்கள் கடவுளுடைய ஆவியினாலும் அமைப்பினாலும் வழிநடத்தப்படுவதாலும்கூட விக்கிரகாராதனைக்கு எதிராக காத்துக்கொள்கிறார்கள். யெகோவாவின் ஊழியர்களுடைய முதல் நூற்றாண்டு ஆளும் குழு உடன் கிறிஸ்தவர்களிடம் சொன்னதாவது: “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும் இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும் நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக.”—அப்போஸ்தலர் 15:28, 29.
16. விக்கிரகங்களுக்கு பலியிடப்பட்ட காரியங்களைக்குறித்து பவுல் என்ன சொன்னார் என்பதை உங்களுடைய சொந்த வார்த்தைகளில் எவ்விதமாக தெரிவிப்பீர்கள்?
16 விக்கிரகாராதனைக்கு எதிராக காத்துக்கொள்வதற்கு மற்றொரு காரணம் பிசாசுகளின் செல்வாக்கை தவிர்ப்பதற்காகும். கர்த்தருடைய இராப்போஜனத்தைப்பற்றி பவுல் அப்போஸ்தலன் கொரிந்திய கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள். . . . நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம். மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா? இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே. நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?”—1 கொரிந்தியர் 10:14-22.
17. பொ.ச. முதல் நூற்றாண்டில் என்ன சூழ்நிலைமைகளின்கீழ் ஒரு கிறிஸ்தவன் விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட இறைச்சியை சாப்பிடலாம், ஏன்?
17 மிருகத்தின் ஒரு பகுதி விக்கிரகத்துக்குப் பலியிடப்பட்டது, ஒரு பகுதி ஆசாரியருக்குச் சென்றது, வணக்கத்தான் ஒரு விருந்தளிப்பதற்காக கொஞ்சத்தைப் பெற்றுக்கொண்டான். என்றபோதிலும் இறைச்சியில் கொஞ்சம் சந்தையில் விற்கப்படலாம். ஒரு கிறிஸ்தவன் ஒரு விக்கிரக கோவிலுக்குச் சென்று சடங்கின் ஒரு பாகமாக சாப்பிடாவிட்டாலும் அங்கே இறைச்சி சாப்பிடுவது உகந்ததாயிராது, ஏனென்றால் இது மற்றவர்களை இடறலடையவோ அல்லது பொய் வணக்கத்திற்குள் அவரை இழுக்கவோ செய்யக்கூடும். (1 கொரிந்தியர் 8:1-13; வெளிப்படுத்துதல் 2:12, 14, 18, 20) ஒரு மிருகத்தை விக்கிரகத்துக்கு படைப்பது இறைச்சியை மாற்றிவிடுவது கிடையாது, ஆகவே ஒரு கிறிஸ்தவன் சந்தையில் கொஞ்சத்தை வாங்கிக்கொள்ளலாம். ஒருவருடைய வீட்டில் அவர் சாப்பிடும்போது இறைச்சி எங்கிருந்து பெறப்பட்டது என்பதைக்கூட அவர் கேட்கவேண்டியதில்லை. ஆனால், யாரோ ஒருவர் அது “விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று” சொல்வாரேயானால், எவரும் இடறலடைவதைத் தவிர்க்கும்பொருட்டு அவர் அதைச் சாப்பிடமாட்டார்.—1 கொரிந்தியர் 10:25-29.
18. ஒரு விக்கிரகத்துக்குப் பலியிடப்பட்ட ஏதோவொன்றை சாப்பிடுகிறவர்கள் எவ்விதமாக பிசாசுகளுக்கு உட்பட்டவர்களாக முடியும்?
18 பலிக்குரிய சடங்குக்குப் பின்பு, கடவுள் அந்த இறைச்சியில் இருந்ததாகவும் வணக்கத்தான் அளிக்கும் விருந்தில் சாப்பிடுகிறவர்களுடைய சரீரத்திற்குள் பிரவேசித்ததாகவும் அநேக சமயங்களில் கருதப்பட்டது. ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுகிறவர்கள் தங்களுக்கிடையில் ஒரு பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது போலவே, பலிசெலுத்தப்பட்ட மிருகங்களைச் சாப்பிடுகிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாகிறார்கள், விக்கிரகம் பிரதிநிதித்துவம் செய்த பிசாசு-கடவுளோடு தோழமைக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட விக்கிரகாராதனைமூலமாக ஒரே மெய்க்கடவுளை வணங்குவதிலிருந்து பிசாசுகள் மக்களை விலகியிருக்கச் செய்கின்றன. (எரேமியா 10:1-15) யெகோவாவின் மக்கள் விக்கிரகங்களுக்கு பலியிடப்பட்டவைகளுக்கு விலகியிருக்க வேண்டியதாக இருந்ததுகுறித்து ஆச்சரியமில்லை! கடவுளுக்கு உண்மைத்தவறாமை, அவருடைய பரிசுத்த ஆவி மற்றும் அமைப்பின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளுதல், பிசாசுகளின் செல்வாக்குக்கு உட்படுவதை தவிர்க்க தீர்மானமாயிருத்தல் ஆகியவையும்கூட இன்று விக்கிரகாராதனைக்கு எதிராக காத்துக்கொள்வதற்கு சக்திவாய்ந்த ஊக்கத்தூண்டுதல்களாக நிரூபிக்கின்றன.
விழிப்பாயிருப்பது ஏன் அவசியம்?
19. பூர்வ எபேசுவில் என்ன வகையான விக்கிரகாராதனை இருந்தது?
19 கிறிஸ்தவர்கள் ஊக்கமாக விக்கிரகாராதனைக்கு எதிராக காத்துக்கொள்கிறார்கள், ஏனென்றால் அது அநேக வகைகளைக் கொண்டிருக்கிறது. ஒரே ஒரு விக்கிரகாராதனைச் செயலும்கூட அவர்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுப்பதாகிவிடும். யோவான் அப்போஸ்தலன் உடன்விசுவாசிகளிடம் சொன்னார்: “நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக.” (1 யோவான் 5:21) இந்தப் புத்திமதி அவசியமாயிருந்தது, ஏனென்றால் அநேக வகையான விக்கிரகாராதனை அவர்களைச் சூழ்ந்திருந்தது. யோவான், மாந்திரீக பழக்கவழக்கங்களிலும், பொய்க் கடவுட்களைப்பற்றிய கட்டுக்கதைகளிலும் ஊறிப்போயிருந்த நகரமாகிய எபேசுவிலிருந்து எழுதினார். உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று எபேசுவில் இருந்தது—தியானாளுடைய கோவில்—குற்றவாளிகளுக்கு ஒரு புகலிடமாகவும் ஒழுக்கங்கெட்ட சடங்குகளின் மையமாகவும் இருந்தது. எபேசுவின் தத்துவ அறிஞர் ஹெராக்கிளிட்டஸ் அந்தக் கோவிலின் பலிபீடத்துக்கு வழிநடத்திய இருண்ட நடைபாதையை, பொல்லாங்கின் இருளுக்கு ஒப்பிட்டார், கோவிலோடு சம்பந்தப்பட்ட ஆட்களின் ஒழுக்கங்களை மிருகங்களுடையதைவிட படுமோசமானதாக கருதினார். இதன் காரணமாகவே, எபேசு கிறிஸ்தவர்கள் பிசாசுகளின் செல்வாக்கு, ஒழுக்கயீனம் மற்றும் விக்கிரகாராதனைக்கு எதிராக உறுதியாக நிற்கவேண்டும்.
20. சிறிதளவு விக்கிரகாராதனையையும்கூட தவிர்ப்பது ஏன் அவசியமாயிருந்தது?
20 கிறிஸ்தவர்கள் சிறிதளவு விக்கிரகாராதனையையும்கூட தவிர்க்க உறுதியாக தீர்மானமுள்ளவர்களாயிருப்பது அவசியமாகும். ஏனென்றால் மனிதர்கள் சோதனையின்கீழ் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்க மாட்டார்கள் என்ற அவனுடைய சவாலுக்கு பிசாசுக்கு ஒரே ஒரு வணக்கச்செயல் ஆதரவுகொடுப்பதாகிவிடும். (யோபு 1:8-12) இயேசுவுக்கு “உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும்” காண்பிக்கையில், சாத்தான் இவ்வாறு சொன்னான்: “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்துகொண்டால் [ஒரு வணக்கச்செயலை செய்தால், NW] இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்.” கிறிஸ்து மறுத்ததானது, சர்வலோக அரசுரிமை விவாதத்தில் யெகோவாவின் பக்கத்தை ஆதரித்து பிசாசை பொய்யனாக நிரூபித்தது.—மத்தேயு 4:8-11; நீதிமொழிகள் 27:11.
21. ரோம பேரரசன் சம்பந்தமாக, உண்மைக் கிறிஸ்தவர்கள் எதைச் செய்ய மறுத்தார்கள்?
21 இயேசுவை ஆரம்பகாலத்தில் பின்பற்றியவர்களும்கூட விவாதத்தில் சாத்தானுடைய பக்கத்தை ஆதரித்து ஒரு வணக்கச்செயலை செய்ய மறுத்தார்கள். அரசாங்க “மேலான அதிகார”ங்களிடமாக அவர்களுக்கு சரியான மரியாதை இருந்தபோதிலும், தங்களுடைய உயிர்களை இழப்பதாக இருந்தாலும்கூட ரோம பேரரசனை கனம்பண்ணுவதற்காக தூபம் காட்டமாட்டார்கள். (ரோமர் 13:1-7) இதன் சம்பந்தமாக டேனியேல் பி. மானிக்ஸ் எழுதினார்: “அரங்கத்தில் அவர்களுடைய செளகரியத்துக்காக பொதுவாக ஒரு பலிபீடமும் அதன்மீது எரிந்துகொண்டிருக்கும் அக்கினியும் வைக்கப்பட்டிருந்தாலும் வெகு சில கிறிஸ்தவர்களே மறுதலித்தார்கள். ஒரு சிறைக்கைதி செய்யவேண்டியதெல்லாம் ஒரு துளி தூபவர்க்கத்தை எடுத்து அதை நெருப்பில் தூவவேண்டும், அப்பொழுது அவனுக்குப் பலிச் சான்றிதழ் கொடுக்கப்பட்டது, அவன் விடுதலையளிக்கப்பட்டான். அவன் பேரரசரை வணங்கிக்கொண்டில்லை, ரோம அரசின் தலைவராக வெறுமனே அவரின் தெய்வீகத்தன்மையை ஒப்புக்கொள்வதாகவே அது இருக்கிறது என்பதும்கூட அவனுக்குக் கவனமாக விளக்கப்பட்டது. இருந்தபோதிலும், பெரும்பாலும் தப்பித்துக்கொள்ள எந்தக் கிறிஸ்தவரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளவில்லை.” (மடிந்துபோக இருக்கிறவர்கள், [Those About to Die] பக்கம் 137) அதேவிதமாக சோதிக்கப்படுகையில், சகல விக்கிரகாராதனையையும் நீங்கள் முழுவதுமாக எதிர்த்து நிற்பீர்களா?
விக்கிரகாராதனைக்கு எதிராக நீங்கள் காத்துக்கொள்வீர்களா?
22, 23. விக்கிரகாராதனைக்கு எதிராக நீங்கள் ஏன் காத்துக்கொள்ளவேண்டும்?
22 கிறிஸ்தவர்கள் சகல விதமான விக்கிரகாராதனைக்கு எதிராகவும் காத்துக்கொள்ள வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. யெகோவா தனிப்பட்ட பக்தியை வற்புறுத்துகிறார். மூன்று உண்மையுள்ள எபிரெயர்களும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் ஏற்படுத்தி வைத்த பெரிய சிலையை வழிபட மறுப்பதில் நேர்த்தியான முன்மாதிரியை வைத்தார்கள். ஏசாயா தீர்க்கதரிசி பதிவு செய்திருக்கும் சர்வலோக நீதிமன்ற வழக்கில், யெகோவா மாத்திரமே மெய்யான மற்றும் ஜீவனுள்ள கடவுளாக காண்பிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய ஆரம்பகால கிறிஸ்தவ சாட்சிகள் விக்கிரகங்களுக்கு பலியிடப்பட்ட காரியங்களிலிருந்து தொடர்ந்து விலகியிருக்க வேண்டியவர்களாக இருந்தனர். அவர்கள் மத்தியில் இருந்த அநேக உண்மையுள்ளவர்கள் யெகோவாவை மறுதலிப்பதாக இருக்கும் விக்கிரகாராதனைக்குரிய ஒரு செயலையும்கூட நடப்பிக்கும்படி அழுத்தத்துக்கு விட்டுக்கொடுத்துவிடவில்லை.
23 அப்படியென்றால், விக்கிரகாராதனைக்கு எதிராக தனிப்பட்ட விதமாக நீங்கள் காத்துக்கொள்கிறீர்களா? கடவுளுக்கு நீங்கள் தனிப்பட்ட பக்தியைக் கொடுக்கிறீர்களா? நீங்கள் யெகோவாவின் அரசுரிமையை ஆதரித்து மெய்யான மற்றும் ஜீவனுள்ள கடவுளாக அவரை உயர்த்துகிறீர்களா? அப்படியானால், விக்கிரகாராதனைக்குரிய பழக்கங்களுக்கு எதிராக காத்துக்கொள்ள தொடர்ந்து உறுதியாக நிற்பது உங்கள் தீர்மானமாக இருக்கவேண்டும். ஆனால் மேலுமான என்ன வேதப்பூர்வமான குறிப்புகள் சகல விதமான விக்கிரகாராதனைக்கு எதிராகவும் காத்துக்கொள்ள உங்களுக்கு உதவக்கூடும்?
உங்கள் கருத்துகள் யாவை?
◻ விக்கிரகாராதனை என்பது என்ன?
◻ யெகோவா ஏன் சகலவித விக்கிரகாராதனையையும் எதிர்க்கிறார்?
◻ விக்கிரகாராதனையின் சம்பந்தமாக மூன்று எபிரெயர்கள் என்ன நிலைநிற்கையை எடுத்தார்கள்?
◻ விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்டவைகளைச் சாப்பிடுகிறவர்கள் எவ்விதமாக பிசாசுகளுக்கு உட்பட்டவர்களாக ஆகமுடியும்?
◻ நாம் ஏன் விக்கிரகாராதனைக்கு எதிராக காத்துக்கொள்ள வேண்டும்?
[பக்கம் 23-ன் படம்]
அவர்களுடைய உயிர்கள் அச்சுறுத்தப்பட்டபோதிலும், மூன்று எபிரெயர்கள் விக்கிரகாராதனையில் ஈடுபடமாட்டார்கள்