“ஒளி கொண்டுசெல்வோர்” மாவட்ட மாநாடுகளில் நிறைவான ஆசீர்வாதங்கள்
சுமார் 2,700 ஆண்டுகளுக்கு முன்பாக, ஏசாயா தீர்க்கதரிசி இவ்விதமாக எழுதினார்: “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்.” (ஏசாயா 60:2) இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையாக நிரூபித்திருக்கின்றன! என்றபோதிலும், நம்பிக்கை இருக்கிறது, ஏனென்றால் யெகோவா ஒளியைப் பிரகாசிக்கும்படி செய்திருக்கிறார். கடந்த ஆண்டு, கடவுளுடைய ஒளியை நேசிப்பவர்கள் “ஒளி கொண்டுசெல்வோர்” மாவட்ட மாநாட்டில் ஆஜராயிருக்க அனலோடு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
மாநாட்டு நிகழ்ச்சிநிரல் முதலாவதாக ஜுன் மாதம் வட அமெரிக்காவில் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த மாதங்களில், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய ஐரோப்பா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் சமுத்திரங்களின் தீவுகளில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆஜராயிருந்தவர்கள் எண்ணிக்கையில் லட்சக்கணக்கானோராக இருந்தனர். என்னே நிறைவான ஓர் ஆவிக்குரிய விருந்தை அவர்கள் அனுபவித்திருக்கிறார்கள்!
“ஒளி கொண்டுசெல்வோராகிய உங்கள் அனைவருக்கும் நல்வரவு!”
பெரும்பாலான இடங்களில் மாநாடு வெள்ளிக்கிழமைத் துவங்கி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முடிவடைந்தது. மாநாட்டுப் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமைக் காலை தங்கள் இருக்கைகளில் வந்து அமர்ந்தபோது, யெகோவாவின் ஒளி எக்காலத்தையும்விட இந்தக் கடைசிநாட்களில் அதிகமதிகமாக பிரகாசித்திருக்கும் விதத்தைப்பற்றிய ஒரு சுருக்கமான விமர்சனத்தைக் கேட்டு மகிழும் வாய்ப்பைப் பெற்றனர். பின்னர் மாநாடு அக்கிராசனர் மேடைக்கு வந்துபேசினார். உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒளி கொண்டுசெல்வோராக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் கனிவாகச் சொன்னார்: “ஒளி கொண்டுசெல்வோராகிய உங்கள் அனைவருக்கும் நல்வரவு!” மாநாட்டு நிகழ்ச்சிநிரல், தொடர்ந்து யெகோவாவின் ஒளியை பிரதிபலித்துக்கொண்டிருக்க பிரதிநிதிகளுக்கு உதவிசெய்யும்.
முக்கியப் பேச்சு முழு மாநாட்டின் பொதுயியல்பை நிலைநாட்டியது. இந்தப் பேச்சாளர், மனிதவர்க்கத்துக்கிருந்த ஒளி ஏதேன் தோட்டத்தில் அணைக்கப்பட்டு போனதை மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு நினைப்பூட்டினார். அப்போது முதற்கொண்டு, சாத்தான் சத்தியத்தின் ஒளிக்கு மனிதர்களை குருடாக்கிவந்திருக்கிறான். (2 கொரிந்தியர் 4:4) இருப்பினும், இயேசு “ஜாதிகளுக்கு ஒளி”யாக வந்தார். (ஏசாயா 42:1-7) அவர் மதசம்பந்தமான பொய்களை வெளிப்படுத்தினார், அந்தகாரத்தின் கிரியைகளை அடையாளங்காட்டினார், யெகோவாவின் அரசுரிமையை ஆதரித்தார், ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். இயேசுவைப் பின்பற்றினவர்கள் அதையே செய்தார்கள்—இன்னும் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்! (மத்தேயு 28:19, 20) பேச்சாளர் உணர்ச்சியைத் தூண்டும்விதமாக சொன்னதாவது: ‘இயேசுவைப்போல, நாம் ஒளி கொண்டுசெல்வோராக இருக்கமுடியும். நம்முடைய நாளில் இதைவிட அதிக முக்கியத்துவமுள்ள வேலை வேறு எதுவுமில்லை. இதைவிட பெரிய சிலாக்கியமும் எதுவுமில்லை.’
மாநாட்டின் முதல் நிகழ்ச்சி முடிவுக்கு வருகையில், அங்கே திடீர் வியப்பு ஏற்படுத்திய ஒன்று நிகழ்ந்தது. மாநாட்டு அக்கிராசனர் மேடைக்குத் திரும்பிவந்து நான்கு புதிய துண்டுப்பிரதிகளில் முதலாவதானதை வெளியீட்டார். உற்சாகமான பலத்த கைத்தட்டல்மூலம் இந்நிகழ்ச்சிக்கு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது. துண்டுப்பிரதியின் ஒவ்வொரு பிரதி ஆஜராயிருந்த ஒவ்வொரு பிரதிநிதிக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை பிற்பகல், மாநாட்டு நிகழ்ச்சிநிரல் ஒளி கொண்டுசெல்லும் கிறிஸ்தவர்களுக்கு அடிப்படையான அறிவுரைகளைப்பற்றி சிந்தித்தது. முதல் இரண்டு பேச்சுகள், உலகின் அந்தகாரத்தினால் கறைப்பட்டிருப்பதை எவ்விதமாக தவிர்ப்பது என்பதன் பேரில் சிறந்த ஆலோசனைகளை வழங்கின. சாத்தான் ஒளியின் தூதனைப்போல தோன்றக்கூடுமாதலால், உலகினுடைய அசுத்தமான காரியங்கள் நம்மைத் தவறான வழியில் தூண்டிடாதபடிக்கு ஆவிக்குரிய மனநிலையைக் காத்துக்கொள்வது இன்றியமையாததாகும். (2 கொரிந்தியர் 11:14) பவுல் புத்திமதி கூறினார்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (ரோமர் 12:2) மறுரூபமாகுதல் ஒரு கிறிஸ்தவனுக்கு தொடர்ச்சியான ஒரு செயல் என்பதை மாநாட்டு பிரதிநிதிகள் கேட்டனர். நாம் கடவுளுடைய வார்த்தையைப் படித்து கற்பவற்றை பொருத்தும்போது நம்முடைய மனங்கள் தொடர்ச்சியாக தூய்மையாக்கப்பட்டு நெறிப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, அதிகமதிகமாக “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்” இருந்த இயேசுவைப் போல நாம் ஆகிறோம்.—யோவான் 1:14.
ஒளி கொண்டுசெல்லும் இளைஞர்
வெள்ளிக்கிழமை பிற்பகலின் இரண்டாவது பகுதி இளைஞரைக் கருத்தில்கொண்டு பேசப்பட்டது. முதல் பேச்சு (“இளைஞரே—நீங்கள் எதை நாடிச் செல்கிறீர்கள்?”) உண்மைத்தன்மைக்கு இத்தகைய நல்ல முன்மாதிரியாக இருக்கும் இளம் கிறிஸ்தவர்களைப் பாராட்டியது. ஆனால் அவர்கள் சாத்தானின் விசேஷமான இலக்காக இருப்பதை அது அவர்களுக்கு நினைப்பூட்டியது. நன்கு-பயிற்றுவிக்கப்பட்ட விளையாட்டு வீரனுக்கும்கூட ஒரு பயிற்சியாளர் தேவை. அதேவிதமாகவே, ஒளியில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் பொருட்டு இளைஞருக்கு அவர்களுடைய பெற்றோர் மற்றும் சபையின் உதவி தேவையாக இருக்கிறது.
வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிநிரலை நிறைவுசெய்த யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தல் என்ற மிக நேர்த்தியான நாடகம் இதை வலியுறுத்தியது. யோசியா அரசனின் முன்மாதிரி உயர்த்திக் காண்பிக்கப்பட்டது. ஒரு சிறு பையனாககூட, அவர் யெகோவாவை சேவிக்கத் தீர்மானமாயிருந்தார். அவரைச் சுற்றி கெட்ட செல்வாக்குகள் இருந்தன, ஆனால் பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவின் வழிநடத்தலோடும், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை அவர் நேசித்த காரணத்தாலும், யோசியா யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தார். இளம் கிறிஸ்தவர்கள் இன்று அவ்விதமாகவே நடந்துகொள்வார்களாக.
ஒளி பிரகாசிக்கட்டும்
ஓரிரவு ஓய்வுக்குப் பிறகு, பிரதிநிதிகள் சனிக்கிழமை காலை கூடுதலான கட்டியெழுப்பும் வேதப்பூர்வமான புத்திமதிக்குத் தயாராக மாநாட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் ஏமாற்றமடைந்துவிடவில்லை. தினவாக்கிய கலந்தாலோசிப்பைத் தொடர்ந்து, ஒரு கிறிஸ்தவன் தன் ஒளியை பிரகாசிக்கச் செய்யக்கூடிய வித்தியாசமான வழிகளை விவரித்த தொடர்பேச்சோடு நிகழ்ச்சி தொடர்ந்தது. (மத்தேயு 5:14-16) பிரசங்கித்தல் ஓர் இன்றியமையாத வழியாகும், நல்நடத்தையும்கூட முக்கியமான ஒரு பங்கை வகிக்கிறது. பேச்சாளர் சொன்னதுபோல, “பிரசங்கிப்பது நாம் என்ன நம்புகிறோம் என்பதை மற்றவர்களுக்குச் சொல்கிறது, ஆனால் அன்பை அப்பியாசிப்பது அதை கண்கூடாக காட்டுகிறது.”
பிரசங்கிப்புக்கு இன்றியமையாத ஒரு கருவி, மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது—துண்டுப்பிரதிகள். முந்தைய நாளின் அறிவிப்புகள் இன்னும் மனதில் பசுமையாக இருக்க, பிரதிநிதிகள், இந்தச் சிறிய கருவிகள் எத்தனை சக்திவாய்ந்தவை என்பதை நிரூபிக்கும் அனுபவங்களைக் கேட்டனர். ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் ஆயத்தமாக, எல்லா சமயங்களிலும் தேவையான துண்டுப்பிரதிகளை வைத்திருக்கும்படியாக பிரதிநிதிகள் உற்சாகப்படுத்தப்பட்டனர்.
அடுத்து, ஒளி கொண்டுசெல்வதில் கடினமாக உழைக்கும் அந்த முழு நேர ராஜ்ய அறிவிப்பாளர்களான பயனியர்களுக்கு கவனம் திருப்பப்பட்டது. கடினமாக உழைக்கும் நம்முடைய பயனியர்களை நாம் எவ்வளவாக போற்றுகிறோம்! அவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அண்மையில்தானே வணக்க சுயாதீனம் வழங்கப்பட்ட நாடுகளிலும்கூட பயனியர் அணி பெரிதாக வளர்ந்துகொண்டிருக்கிறது. பயனியர்கள் அந்தச் சிலாக்கியத்தைப் போற்றி பாதுகாக்கும்படியாக ஊக்குவிக்கப்பட்டார்கள். இன்னும் பயனியராக இல்லாதவர்கள் தங்கள் சூழ்நிலையை சிந்தித்துப்பார்க்கும்படியாக துரிதப்படுத்தப்பட்டார்கள். ஒருவேளை அவர்களும்கூட, முழு-நேர ஊழியத்தில் தங்கள் ஒளியை பிரகாசிக்கச்செய்ய முடியும்.
ஒளி கொண்டுசெல்வோராக இருப்பது அநேகமாக தியாகங்களை உட்படுத்துகிறது. இதுவே “சுய-தியாக ஆவியுடனே யெகோவாவை சேவித்தல்” என்ற அடுத்து வந்த பேச்சில் உயர்த்திக்காண்பிக்கப்பட்டது. பவுல் இவ்வாறு வேண்டிக்கொண்டார்: “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க” வேண்டும். (ரோமர் 12:1) துன்புறுத்தலைச் சகித்துக்கொள்பவர்கள் சுய-தியாக ஆவியை வெளிப்படுத்துகிறார்கள். பயனியர்கள் முழுநேர ஊழியத்தில் நிலைத்திருக்கும்பொருட்டு ஒவ்வொரு நாளும் தியாகங்களைச் செய்கிறார்கள். ஆம், எல்லா உண்மைக்கிறிஸ்தவர்களுமே இந்த உலகின் தன்னலமான பொருள்பற்றுள்ள நாட்டங்களைவிடுத்து யெகோவாவின் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தியாகங்களைச் செய்கிறார்கள். இத்தகைய ஒரு போக்கு யெகோவாவிடமிருந்து நிறைவான ஆசீர்வாதங்களில் விளைவடைகிறது.
அந்தச் சொற்பொழிவு அடுத்து வந்த முழுக்காட்டுதல் பேச்சுக்கு பொருத்தமானதொரு அறிமுகமாக அமைந்திருந்தது. “ஒளி கொண்டுசெல்வோர்” மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டப்பட்டவர்கள் இந்தப் பேச்சை நிச்சயமாகவே மறக்கமாட்டார்கள். அவர்களுடைய முழுக்காட்டுதல் எப்போதும் அவர்களுடைய வாழ்க்கையில் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கும். அவர்கள், 30 வயதாயிருக்கையில் முழுக்காட்டுதல் பெற்ற இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள் என்று நினைப்பூட்டப்பட்டார்கள். மேலுமாக, முழுக்காட்டுதல் பெற இருந்தவர்கள் தாங்கள், “அந்தகாரத்தின் கிரியைகளை தள்ளிவிட்டு,” “யெகோவாவுக்கு ஊழியஞ்செய்ய” தீர்மானித்திருப்பதை நினைவுப்படுத்திக்கொள்வதில் மகிழ்ச்சியடைந்தனர். (ரோமர் 12:11; 13:12) சந்தோஷத்தோடே அவர்கள் மாநாட்டு கூட்டத்துக்கு முன்பாக எழுந்துநின்று முழுக்காட்டப்பட செல்வதற்கு முன்பாக யாவருக்கும் கேட்கும் வண்ணம் அறிக்கை செய்தார்கள். (ரோமர் 10:10) “ஒளி கொண்டுசெல்வோர்” மாவட்ட மாநாட்டின் போது, தண்ணீர் முழுக்காட்டுதல்மூலமாக தங்கள் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தின அனைவர்மீதும் யெகோவாவின் ஆசீர்வாதமிருக்க நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.
சனிக்கிழமை பிற்பகல், சில ஒளிவுமறைவில்லாத எச்சரிப்புகள் பெறுவதற்குரிய சமயமாக இருந்தது. இவை “பேராசையின் கண்ணியைத் தவிருங்கள்,” “யாரோ ஒருவர் உங்களுடைய நல்லொழுக்கங்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறாரா?” “எல்லா வகை விக்கிரகாராதனைகளுக்கும் எதிராக காத்துக் கொள்ளுங்கள்” என்ற தலைப்புகளுள்ள பேச்சுகளின் வடிவில் வந்தன. ஒரு கிறிஸ்தவனைப் பலவீனமாக்க சாத்தான் பயன்படுத்தும் சில தந்திரங்களை இந்த மூன்று பேச்சுகளும் அடையாளங்காட்டின. யூதாஸ்காரியோத்து ஓர் அப்போஸ்தலனாக இருந்தான், ஆனால் இயேசுவை பணத்துக்காக அவன் காட்டிக்கொடுத்தான். இளம் சாமுவேல், யெகோவாவின் வணக்கத்திற்கு தேசீய மையமாக இருந்த இடத்தில் வளர்ந்துவந்தான். ஆனால் தவிர்க்கமுடியாதபடி ஒரு சில மிகக்கெட்ட கூட்டுறவுக்கு உட்படுத்தப்பட்டான். (1 சாமுவேல் 2:12, 18-20) விக்கிரகாராதனையில் பாலுறவு ஒழுக்கக்கேடும் பொருளாசையும் அடங்குகிறது. (எபேசியர் 5:5; கொலோசெயர் 3:5) ஆம், பேராசை, கெட்ட கூட்டுறவுகள் மற்றும் விக்கிரகாராதனை ஆகியவை ஆபத்தானவை, அவை தவிர்க்கப்பட வேண்டும்.
இங்கே மாநாட்டு நிகழ்ச்சிநிரல் வித்தியாசமான திசையில் சென்றது. அடுத்த பேச்சு அக்கறையூட்டும் பல பைபிள் கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு விடையளித்தது. உதாரணமாக, சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் மிகுந்த உபத்திரவத்துக்கு முன்பாக மரித்துப் போகிறவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்களா என்பதை உங்களால் விளக்கமுடியுமா? ஒரு கிறிஸ்தவரால் ஒரு பொருத்தமான விவாகத்துணையை கண்டடைய முடியாமல் போகையில் அவன் அல்லது அவள் என்ன செய்யமுடியும்? தங்கள் பைபிள் அறிவை ஆழமாக்கிக்கொள்ள, பிரதிநிதிகள், உவாட்ச் டவர் பப்பிளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ், குறிப்பாக “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு உற்சாகப்படுத்தப்பட்டனர்.
கிறிஸ்துவின் வந்திருத்தலும் வெளிப்பாடும்
சனிக்கிழமை நிகழ்ச்சிநிரலின் முடிவான பகுதி, “கிறிஸ்துவின் வந்திருத்தல் மற்றும் வெளிப்பாட்டின் மீது ஒளியைப் பிரகாசிக்கச்செய்தல்” என்ற தலைப்பு கொண்ட தொடர்பேச்சு தீர்க்கதரிசனத்திடமாகத் திரும்பியது. இயேசு கிறிஸ்துவின் வந்திருத்தலை நிரூபிக்கும் “அடையாளத்தின்” அம்சங்கள் விமர்சிக்கப்பட்டன. (மத்தேயு 24:3) இரண்டாவது பகுதியில், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் நவீன நாளைய நடவடிக்கைகள் கலந்தாலோசிக்கப்பட்டன. (மத்தேயு 24:45-47, NW) அடிமை வகுப்பு 1919 முதற்கொண்டு உண்மையுடன் ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலையை முன்நின்று செய்துவந்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. பின்னர் யெகோவாவின் ஒளியை பிரதிபலிப்பதில் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களோடு பங்கேற்க எல்லா ஜாதிகளிலிருந்தும் ஒரு திரள் கூட்டமான ஜனங்கள் கூட்டிச்சேர்க்கப்பட்டார்கள். பேச்சாளர் முடிவாகச் சொன்னார்: “அனைவரும் தொடர்ந்து வைராக்கியமாக உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை ஆதரிப்போமாக. இதைச் செய்வதன்மூலமாக மாத்திரமே ஒருநாள் வெகு சீக்கிரத்தில் எல்லா செம்மறியாடுகளைப் போன்ற மக்களும் பின்வரும் சந்தோஷமான வார்த்தைகளைக் கேட்க முடியும்: ‘வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.’”—மத்தேயு 25:34.
இறுதி பேச்சாளர் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டின் அர்த்தத்தையும் பாதிப்புகளையும் கலந்தாலோசித்தார். (1 கொரிந்தியர் 1:7) அந்த வெளிப்பாடு என்னே ஓர் அனுபவமாக இருக்கும்! மகா பாபிலோன் அழிக்கப்பட்டுவிடும். சாத்தானுடைய உலகத்துக்கும் இயேசு மற்றும் அவருடைய தூதர்களுக்குமிடையே நடைபெறும் மகா யுத்தம் இந்த ஒழுங்குமுறையின் அழிவில் முடிவடையும். கடைசியாக, சாத்தான் தானேயும் அபிஸிற்குள் போடப்பட்டு செயலற்றவனாக்கப்படுவான். ஆனால் பரலோகத்தில் ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் மற்றும் ஒரு புதிய பூமி பிறப்பிக்கப்படுவதன் காரணமாக கடவுளுடைய மக்களுக்கு இதமான ஒரு மாற்றம் இருக்கும். கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற புதிய சிற்றேட்டை வெளியிடுவதன்மூலம் பேச்சாளர் கேட்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். நம்முடைய அக்கறையுள்ள சிருஷ்டிகரையும் நமக்காக அவருடைய நோக்கத்தையும் அறியவேண்டியவர்களாக இருக்கும் மனத்தாழ்மையுள்ள ஆட்களுக்கு அது என்னே ஒரு சிறந்த உதவியாக இருக்கும்!
கிறிஸ்தவ குடும்ப அமைப்பு
ஞாயிற்றுக்கிழமை, மாநாட்டின் கடைசி தினம் இப்பொழுது வந்துவிட்டது. என்றபோதிலும், இன்னும் அதிகம் அளிக்கப்படவிருந்தது. தினவாக்கிய கலந்தாலோசிப்புக்குப் பிறகு, “கிறிஸ்தவக் குடும்பத்தில் ஒருவர்மீது ஒருவர் அக்கறை செலுத்துதல்” என்ற தொடர்பேச்சில் கிறிஸ்தவ குடும்பத்துக்கு கவனம் செலுத்தப்பட்டது. முதல் பகுதி, வெற்றிகரமான கிறிஸ்தவ குடும்பத்தைக் கொண்டிருப்பதனுடைய இரகசியத்தை உணர்ந்துகொள்வதற்கு மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு உதவியது: ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பது. இரண்டாவது பகுதி, கூட்டங்களுக்கு ஆஜராயிருப்பது, வெளி ஊழியம், குடும்பப் படிப்பு அல்லது பொழுதுபோக்கு ஆகிய எதை அது உட்படுத்தினாலும், காரியங்களை ஒன்றாகச் சேர்ந்து செய்யும்படியாக குடும்பங்களை உற்சாகப்படுத்தியது. தொடர்பேச்சின் மூன்றாவது பகுதி, முதியோர்பேரில் அக்கறை செலுத்துவது அவர்களுடைய சிலாக்கியமாகவும் உத்தரவாதமாகவும் இருப்பதை பிரதிநிதிகளுக்கு நினைப்பூட்டியது. “நம்முடைய முதிய சகோதர சகோதரிகள் சபைக்கு ஒரு சொத்தாக இருக்கிறார்கள்,” என்று பேச்சாளர் குறிப்பிட்டார். அவர்களுடைய அனுபவத்தை பொக்கிஷமாகப் போற்றி அவர்கள் உத்தமத்தைப் பார்த்து பின்பற்றுவோமாக.
அடுத்து “தெளிந்த புத்தி” என்ற சொற்றொடரின் அர்த்தம் ஆராயப்பட்டது. (1 பேதுரு 4:7) தெளிந்த புத்தியுள்ள ஒருவர் சமநிலை, அறிவு, நியாயம், மனத்தாழ்மை, பகுத்தறிவு உடையவராக இருக்கிறார். அவரால் சரியானதற்கும் தவறானதற்குமிடையேயும், உண்மைக்கும் பொய்க்குமிடையேயும் வேறுபாட்டை காணமுடியும். மேலுமாக அவர் நல்ல ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள பாடுபடுகிறார்.
ஞாயிற்றுக்கிழமைக் காலை நிகழ்ச்சிநிரலின் கடைசி பேச்சு, கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் நமது கீழ்ப்படிதலைக் கலந்தாராய்ந்தது. “யெகோவா தேவனுக்கும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பற்றுமாறாமல் கீழ்ப்படிவதனுடைய முக்கியத்துவம் அதிகமாக வலியுறுத்தப்படாமல் இருக்கமுடியாது,” என்று பேச்சாளர் குறிப்பிட்டார். இது எவ்வாறு நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கிறது என்பதை தொடர்ந்து அவர் காண்பித்தார். தொடர்ந்து கீழ்ப்படிந்திருக்க நமக்கு எது உதவிசெய்யும்? நான்கு குணாதிசயங்கள்: அன்பு, தெய்வீக பயம், விசுவாசம் மற்றும் மனத்தாழ்மை.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்
திடீரென்று அது ஞாயிற்றுக்கிழமை பிற்பகலாகவும் மாநாட்டின் கடைசி பகுதிக்கு நேரமாகவும் இருந்தது. அநேகருக்கு மாநாடு அப்போதுதானே ஆரம்பமானது போலிருந்தது, ஏற்கெனவே அது முடியும் தருவாயை நெருங்கிக்கொண்டிருந்தது.
“உலகத்தின் ஒளியைப் பின்பற்றுங்கள்” என்பது பொதுப்பேச்சின் தலைப்பாக இருந்தது. உயிரைக் காத்துக்கொள்வதில் சொல்லர்த்தமான ஒளியின் பங்கைப்பற்றி ஒரு கருத்தைக் கவர்ந்த விளக்கத்தை ஆஜராயிருந்தவர்கள் கேட்கும் வாய்ப்பைப்பெற்றனர். பின்னர் பேச்சாளர் ஆவிக்குரிய ஒளியின் அதிகமான முக்கியத்துவத்தைக் காண்பித்தார். சொல்லர்த்தமான ஒளி ஒரு சில பத்தாண்டுகளுக்கு நம்மை உயிரோடு வைத்திருக்கிறது, ஆனால் ஆவிக்குரிய ஒளி எல்லா நித்தியத்துக்குமாக தொடர்ந்து நம்மை உயிரோடே வைத்திருக்க முடியும். இயேசுவை உலகத்தின் ஒளியாக அடையாளங்காட்டும் யோவான் 1:1-16 ஒவ்வொரு வசனமாக கலந்தாலோசிக்கப்பட்டது பேச்சின் சிறப்பு அம்சமாக இருந்தது. இன்று, இந்தப் பொல்லாத ஒழுங்கின் முடிவான வருடங்களில், இந்தக் கடமையில் இயேசுவைப் பின்பற்றுவது எக்காலத்திலுமிருந்ததைவிட அதிக அவசரமானதாகும்.
அந்த வாரத்துக்கு நியமிக்கப்பட்டிருந்த காவற்கோபுரம் படிப்பு கட்டுரையின் சுருக்கத்துக்குப் பின்பு, முடிவான பேச்சுக்கு நேரமாகிவிட்டது. மகிழ்ச்சிகரமாக, முன்னாலிருக்கும் நாட்களில் எதிர்நோக்கியிருப்பதற்கு அநேக காரியங்கள் இருப்பதைப் பேச்சாளர் காண்பித்தார். உதாரணமாக, அவர் கடவுளுடைய சித்தத்தை வைராக்கியத்தோடு செய்தல் நாடகத்தின் புதிய ஆடியோ காஸட்டை அறிவிப்பு செய்தார். அது மாத்திரமே அல்ல. பைபிள்—உண்மை மற்றும் தீர்க்கதரிசன புத்தகம் என்ற தலைப்பில் புதிய தொடர் வீடியோ காஸட்டுகள் வர இருக்கின்றன, முதலாவது பைபிள்—திருத்தமான சரித்திரம், நம்பத்தக்க தீர்க்கதரிசனம் என்ற பொருளுடையதாக இருக்கும்.
கடைசியாக, பேச்சாளர் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவில் விசேஷித்த சர்வதேச கூட்டங்கள் உட்பட 1993-ல் நான்கு-நாள் மாவட்ட மாநாடுகள் நடைபெறும் என்று அறிவித்தார். “ஒளி கொண்டுசெல்வோர்” மாவட்ட மாநாடு முடிந்துகொண்டிருந்தபோதிலும், பிரதிநிதிகள் அடுத்த வருடத்துக்காக திட்டங்கள் போட ஆரம்பிக்க முடியும்.
பின்னர் மாநாடு பிரதிநிதிகள் வீட்டுக்குச் செல்ல நேரமாயிருந்தது. நிச்சயமாகவே இந்த இருண்ட உலகில் அவர்கள் தொடர்ந்து ஒளியைப் பிரகாசித்துக்கொண்டிருக்க எக்காலத்திலுமிருந்ததைவிட அதிக தீர்மானமாயிருந்தார்கள். ஆவிக்குரிய நல்ல காரியங்கள் நிறைந்த மூன்று நாட்களுக்குப் பின், முடிவான பேச்சில் மேற்கோள் காட்டப்பட்ட கடைசி வசனத்தின் வார்த்தைகள் அதிக முக்கியத்துவமேற்றது: “கர்த்தர் [யெகோவா, NW] நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; . . . கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.”—சங்கீதம் 118:27, 29.
[பக்கம் 15-ன் படம்]
ரஷ்ய மொழியில் மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
ஆளும்குழுவின் அங்கத்தினர்கள் பல மாநாடுகளில் பேசினார்கள்
ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் கூடிவந்தவர்கள் மத்தியில் ஜப்பானிய பிரதிநிதிகள் இருந்தனர்
யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்வதற்கான தேவையை வலியுறுத்திய கிளர்ச்சியூட்டும் ஒரு பைபிள் நாடகம்
புதிய ஒளி கொண்டுசெல்வோர் முழுக்காட்டப்படுவதன்மூலம் யெகோவாவுக்குத் தங்கள் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தினார்கள்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் நிகழ்ச்சிநிரலில் ஆழ்ந்துவிட்டிருக்கிறார்கள்
[பக்கம் 18-ன் படம்]
“கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?” புதிய சிற்றேட்டை பெற்றுக்கொள்வதில் பிரதிநிதிகள் கிளர்ச்சியடைந்தனர்