நன்மைக்கு எதிராக தீமை—ஒரு நீண்டகால போராட்டம்
கடந்தகால திரைப்படங்களில், “நல்லவர்” எப்போதுமே தீய சக்திகளைத் தோல்வி அடையச் செய்வார். ஆனால் உண்மை ஒருபோதும் அவ்வளவு எளிதானதாக இருந்ததில்லை. நிஜ உலகில் பெரும்பாலும், தீமையே மேலோங்கி நிற்பதாய் தோன்றுகிறது.
தீயச் செயல்களைப்பற்றிய திகிலடையச் செய்யும் செய்தி அறிக்கைகள் கோரக்காட்சிகள், இரவுநேர செய்தி ஒலிபரப்பின் வழக்கமான அம்சங்களாக இருக்கின்றன. ஐக்கிய மாகாணங்களின் வடக்குப் பகுதியில், ஒரு மில்வாக்கிய மனிதன் 11 பேரை கொலைசெய்து, அவர்களுடைய உருக்குலைந்த உடல்களின் மீதங்களை அவனுடைய உறைநிலைபெட்டியில் குவித்துவைக்கிறான். தெற்குத் தொலைவில், யாரோ ஒருவன் ஒரு டெக்ஸாஸ் சிற்றுண்டிச்சாலைக்குள் திடீரென்று நுழைந்து, பத்து நிமிடங்களுக்கு கண்மூடித்தனமாக சுட்டு, தன்னையும் சேர்த்து 23 பேரை கொன்றான். கொரியாவில் குறைகூறிக்கொண்டிருந்த எதிர்ப்பவர் ஒருவர், யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றத்திற்கு தீ வைத்து, 14 வணக்கத்தாரைக் கொன்றுவிட்டார்.
இந்த இங்குமங்கும் நிகழ்கிற தீமையின் திடீர் வெளிக்காட்டுகள் மட்டுமல்ல, ஆனால் உலகத்தைப் பாதிக்கிற மற்றொரு பயங்கரமான தீச்செயலும் உள்ளது—இனஅழிவு. இந்த நூற்றாண்டில் மட்டும், பத்து லட்ச ஆர்மீனியர்கள், அறுபது லட்ச யூதர்கள், மற்றும் பத்து லட்சத்திற்கதிகமான கம்போடியர்கள் இன மற்றும் அரசியல் ஒழித்துக்கட்டுதல்களில் பூண்டோடு அழிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இனத்தூய்மையாக்கல் என்றழைக்கப்படுவது, முன்னாள் யுகோஸ்லாவியாவிலுள்ள பலரை இன்னலுக்குட்படுத்தி இருக்கிறது. உலகைச் சுற்றிலும் எத்தனை லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்று எவருக்கும் தெரியாது.
இவைபோன்ற அவலங்கள், ஏன் மக்கள் அவ்விதமாக நடந்துகொள்கிறார்கள் என்ற அமைதியைக் குலைக்கும் கேள்வியை நாம் எதிர்ப்பட கட்டாயப்படுத்துகின்றன. சில மூளைகுழம்பிய மனங்களின் விளைவாக எண்ணி இந்த அட்டூழியங்களை நாம் விட்டுவிட முடியாது. நம்முடைய நூற்றாண்டில் செய்யப்படும் தீமையின் விரிவான அளவே அத்தகைய ஒரு விளக்கத்தைப் பொய்யென நிரூபிக்கிறது.
ஒரு தீச்செயல் ஒழுக்கநெறிபடி தவறானது என்பதாக விளக்கப்படுகிறது. அது நன்மையை மற்றும் தீமையைச் செய்வதற்கு மத்தியில் தெரிவு செய்யத்தக்க ஒருவரால் செய்யப்படும் ஒரு குற்றச்செயலாகும். எப்படியோ அவருடைய ஒழுக்க நிதானம் புரட்டப்பட்டு தீமை வென்றுவிடுகிறது. ஆனால் ஏன் மற்றும் எப்படி இது ஏற்படுகிறது?
தீமைக்கான மதசார்பான விளக்கங்கள் பெரும்பாலும் திருப்தியற்றவையாக இருக்கின்றன. “கடவுள் எந்த ஒரு தீமையையும் நிலைத்திருக்க அனுமதிக்காதிருந்தால், அநேக நன்மையான காரியங்கள் எடுக்கப்பட்டுவிடும்,” என்பதாக கத்தோலிக்க தத்துவ அறிஞர் தாமஸ் அக்குவின்னாஸ் வாதாடினார். அநேக புராட்டஸ்டன்ட் தத்துவ அறிஞர்களும் அதுபோன்ற கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, தி என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்காவில் குறிப்பிட்டுள்ளபடி, “வேறுபாடுகளை முனைப்பாய் எடுத்துக்காட்டுவதன் மூலமாக உலகிலுள்ள நன்மைகளை அதிகப்படுத்திக்காட்டும் வெறும் ஒரு சரியான எதிரீடாக” காட்ஃபிரீட் லைப்னிட்ஸ் தீமையைக் கருதினார். அதாவது, நன்மைக்குப் போற்றுதல் காண்பிப்பதற்காக நாம் தீமையைக் கொண்டிருக்கவேண்டும் என்பதாக அவர் நம்பினார். அத்தகைய வாதம், ஒரு புற்றுநோயையுடைய நோயாளியிடம், அவர் அந்த நோயைக் கொண்டிருப்பதுதானே மற்றொருவரை உண்மையில் உயிருடனும் நலமாகவும் இருப்பதாக உணரச்செய்வதற்குத் தேவையானதாக இருக்கிறது என்று சொல்வதைப்போல் இருக்கும்.
தீய உள்நோக்கங்கள் எங்கிருந்தோ வரவேண்டும். மறைமுகமாக, கடவுள் குற்றஞ்சாட்டப்படவேண்டியவராக இருக்கிறாரா? பைபிள் பதிலளிக்கிறது: “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” கடவுள் பொறுப்பாளி இல்லை என்றால், வேறே யார்? அதைப் பின்தொடரும் வசனங்கள் பதிலளிக்கின்றன: “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும்; பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.” (யாக்கோபு 1:13-15) அவ்வாறாக, ஒரு தீய ஆசை விலக்கித்தள்ளப்படுவதற்கு மாறாக வளர்க்கப்படுவதால், ஒரு தீச்செயல் பிறக்கிறது. இருப்பினும், இதைவிட அதிகம் உட்பட்டிருக்கிறது.
மனிதவர்க்கத்தில் ஓர் அடிப்படை குறைபாடு—உள்ளியல்பான அபூரணத்தன்மை—இருப்பதால் தீய ஆசைகள் எழுகின்றன என்பதாக வேதவார்த்தைகள் விவரிக்கின்றன. அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” (ரோமர் 5:12) சுதந்தரிக்கப்பட்ட பாவத்தின் காரணமாக, சுயநலம் நம் சிந்தனையிலிருந்து தயவை ஒதுக்கிவிடக்கூடும், கொடுமை பரிவைப் புறக்கணிக்கக்கூடும்.
சந்தேகமின்றி, பெரும்பான்மையான மக்கள் இயல்புணர்வின் காரணமாக, குறிப்பிட்ட நடத்தை தவறானது என்பதை அறிந்திருக்கின்றனர். அவர்களுடைய மனச்சாட்சி—அல்லது பவுல் அழைக்கிறபடி, ‘அவர்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிற நியாயப்பிரமாணம்’—ஒரு தீயச்செயலைச் செய்வதிலிருந்து அவர்களைத் திருப்புகிறது. (ரோமர் 2:15) இருந்தாலும், ஒரு கொடுமையான சூழல் அத்தகைய உணர்ச்சிகளை அடக்கிவைக்கக்கூடும்; மீண்டும் மீண்டுமாக அசட்டைசெய்யப்பட்டால் ஒரு மனச்சாட்சி மரத்துப்போகக்கூடும்.a—1 தீமோத்தேயு 4:1-ஐ ஒப்பிடவும்.
நம்முடைய காலத்தின் கூட்டுமொத்தமான கொடுமையை மனித அபூரணம் மட்டுமே விவரிக்கமுடியுமா? சரித்திராசிரியரான ஜெஃப்ரே பர்டன் ரசல் குறிப்பிட்டார்: “நம் ஒவ்வொருவரிலும் தீமை இருக்கிறது உண்மையென்றாலும், தனி நபருடைய தீமைகளின் பெரிய அளவுகளைக் கூட்டிச்சேர்த்தாலுங்கூட ஓர் ஆஷ்விட்ஸை விவரிப்பதில்லை. . . . இந்த அளவிலான தீமை, தரத்திலும் அளவிலும் வேறுபட்டதாகத் தோன்றுகிறது.” இந்தத் தரத்திலே வேறுபட்ட தீங்கின் ஊற்றுமூலத்தை வேறுஎவரும் அல்ல, இயேசுவே சுட்டிக்காட்டினார்.
அவரைக் கொலை செய்ய திட்டமிட்டுக்கொண்டிருந்த மனிதர் தங்களுடைய சொந்த விருப்பத் துணிவாற்றலால் முழுமையாக செயல்பட்டுக்கொண்டில்லை என்பதாக இயேசு அவருடைய மரணத்திற்குச் சற்று முன்னர் விவரித்தார். ஒரு காணக்கூடாத சக்தி அவர்களை வழிநடத்திக்கொண்டிருந்தது. இயேசு அவர்களிடம் சொன்னார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; . . . அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை.” (யோவான் 8:44) இயேசு, “உலகத்தின் அதிபதி” என்று அழைத்த பிசாசு, தீமையைத் தூண்டுவிப்பதில் தெளிவாகவே ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கிறான்.—யோவான் 16:11; 1 யோவான் 5:19.
மனித அபூரணம் மற்றும் சாத்தானிய செல்வாக்கு ஆகிய இரண்டுமே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடும் துயரத்தில் விளைவடைந்திருக்கின்றன. மனிதவர்க்கத்தின்மேலான அவற்றின் பிடி தளர்ந்துவருவதாக எந்த அறிகுறியும் இல்லை. தீமை நிலைப்பதற்காக இங்கிருக்கிறதா? அல்லது முடிவில் நன்மையின் சக்திகள் தீமையை வேரோடு அழித்துவிடுமா?
[அடிக்குறிப்புகள்]
a தொலைக்காட்சியிலுள்ள வெளிப்படையான வன்முறைக்கும் இளவயதினர் குற்றச்செயல்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டிருக்கின்றனர். குற்றச்செயல்கள் அதிகமாக பரவியிருக்கும் பகுதிகளும் பிளவுபட்ட குடும்பங்களும் சமூகத்திற்குமாறான நடத்தைக்குக் காரணக் கூறுகளாயும் இருக்கின்றன. நாசி ஜெர்மனியில் தொடர்ச்சியான இனம்பற்றிய பிரச்சாரம், யூதர்கள் மற்றும் ஸ்லாவியர்களுக்கு எதிரான அட்டூழியங்களை நியாயப்படுத்தவும்—மகிமைப்படுத்தவுங்கூட—சில மக்களை வழிநடத்தியது.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Cover: U.S. Army photo
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
U.S. Army photo