தீமையை நன்மை வெல்லும் விதம்
தாவீது ராஜா ஒரு நல்ல மனிதர். அவர் கடவுளை அதிகமாக நேசித்தார், நீதியை மிகவும் விரும்பினார், எளியோரை அன்புடன் கவனித்தார். இருந்தாலும், இந்த நல்ல ராஜா தனது நம்பகமான ஆட்களில் ஒருவனுடைய மனைவியுடன் விபச்சாரம் செய்தார். பத்சேபாள் என்ற அந்தப் பெண் கர்ப்பமாகிவிட்டதை அறிந்தபோது அவளுடைய கணவனைக் கொல்வதற்கு ஏற்பாடு செய்தார். அதன்பின் அக்குற்றங்களை மறைக்க அவளை மணமுடித்தார்.—2 சாமுவேல் 11:1-27.
மற்றவர்களுக்கு மிகுந்த நன்மைகளைச் செய்வதற்கான திறன் மனிதர்களுக்கு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அப்படியானால், சொல்ல முடியாதளவு நடைபெறுகிற தீமைக்கு அவர்கள் காரணமாயிருப்பதேன்? இதற்கான அடிப்படை காரணங்கள் பலவற்றை பைபிள் குறிப்பிட்டுக் காட்டுகிறது. அதோடு, கிறிஸ்து இயேசு மூலமாக கடவுள் தீமையை அடியோடு ஒழிக்கப்போவதைப் பற்றியும் அது தெரிவிக்கிறது.
கெட்டதைச் செய்வதற்கான மனச்சாய்வு
தீய செயல்களுக்கான ஒரு காரணத்தை தாவீது ராஜாவே குறிப்பிட்டார். தன்னுடைய குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தபோது, அவற்றிற்கு தானே முழு உத்தரவாதி என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்” என்று மனம்வருந்தி எழுதினார். (சங்கீதம் 51:5) பாவஞ்செய்கிற பிள்ளைகளைத் தாய்மார் கர்ப்பந்தரிக்க வேண்டுமென்பது கடவுளுடைய நோக்கமே அல்ல. ஆனால், முதலில் ஏவாளும் பிறகு ஆதாமும் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்யத் தெரிவு செய்தபோது, பாவமற்ற குழந்தைகளைப் பெற்றெடுக்க அவர்களால் முடியாமற்போனது. (ரோமர் 5:12) அபூரண மனிதர்கள் பூமியில் அதிகமதிகமாகப் பெருக ஆரம்பித்தபோது, கெட்டதைச் செய்வதற்கான அவர்களுடைய மனச்சாய்வு தெளிவாகத் தெரிந்தது. ஏனெனில் ஆதியாகமம் 8:21 இவ்வாறு சொல்கிறது: “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது.”—ஆதியாகமம் 8:21.
கெட்டதைச் செய்வதற்கான இந்த மனச்சாய்வு கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், அது “விபசாரம், . . . பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள்” ஆகியவற்றிலும் “மாம்சத்தின் கிரியைகள்” என பைபிள் விவரிக்கும் பிற தீய செயல்களிலும் முடிவடையும். (கலாத்தியர் 5:19-21) உதாரணமாக, தாவீது ராஜா மாம்ச பலவீனத்திற்கு அடிபணிந்து விபச்சாரம் செய்தார்; அதனால் அவருடைய வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழுந்தன. (2 சாமுவேல் 12:1-12) ஒழுக்கங்கெட்ட மனச்சாய்வை அவரால் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அதற்குப் பதிலாக, பத்சேபாளின் மீது இச்சையை வளர்த்துக்கொண்டு பாவம் செய்தார்; ஆம், வெகு காலத்திற்குப் பின் சீஷனாகிய யாக்கோபு விவரித்த வழியில் அவர் சென்றார்: “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.”—யாக்கோபு 1:14, 15.
முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பெருமளவிலான கொலைகள், கற்பழிப்புகள், கொள்ளையடிப்புகள் எல்லாமே, மனிதன் கெட்ட ஆசைகளுக்கு அடிபணிகையில் ஏற்படும் பயங்கர விளைவுகளுக்கு உதாரணங்கள் ஆகும்.
தீமைக்குத் தீமூட்டும் அறியாமை
மக்கள் தீய காரியங்களைச் செய்வதற்கான இரண்டாவது காரணத்தை அப்போஸ்தலன் பவுலின் அனுபவம் சிறப்பித்துக் காட்டுகிறது. அவர் இறக்கும் சமயத்திற்குள்ளாகவே, சாந்தமானவர், பாசமானவர் என்ற பெயர்களைச் சம்பாதித்திருந்தார். கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்காகத் தன்னலமின்றி தன்னையே அர்ப்பணித்திருந்தார். (1 தெசலோனிக்கேயர் 2:7-9) என்றாலும் ஆரம்பத்தில், அதாவது சவுல் என அழைக்கப்பட்ட சமயத்தில், இதே கிறிஸ்தவர்களை அவர் ‘பயமுறுத்திக் கொலை செய்வதற்காகச் சீறிக்கொண்டிருந்தார்.’ (அப்போஸ்தலர் 9:1, 2) ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு எதிரான தீய செயல்களை பவுல் ஏன் ஆதரித்தார், அவற்றில் ஏன் ஈடுபட்டார்? ‘அறியாமையினால்’ அப்படிச் செய்ததாக அவர் கூறுகிறார். (1 தீமோத்தேயு 1:13) ஆம், முன்னொரு சமயம் பவுலுக்கு ‘தேவனைப் பற்றிய . . . வைராக்கியம்’ இருந்தது, ‘ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமாக’ இருக்கவில்லை.—ரோமர் 10:2.
பவுலைப் போலவே, நல்மனமுள்ள அநேகர் கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றிராததால் தீய செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். உதாரணமாக, தம்மைப் பின்பற்றியவர்களை இயேசு இவ்வாறு எச்சரித்தார்: “உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.” (யோவான் 16:2) இன்று யெகோவாவின் சாட்சிகள், இயேசுவின் வார்த்தைகள் உண்மை என்பதை அனுபவத்தில் காண்கிறார்கள். அநேக நாடுகளில், கடவுளைச் சேவிப்பதாகச் சொல்லும் ஆட்களால் அவர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள், கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள். தெளிவாகவே, இப்படிப்பட்ட தவறான வைராக்கியம் மெய்க் கடவுளைப் பிரியப்படுத்துவதில்லை.—1 தெசலோனிக்கேயர் 1:6.
தீமைக்குத் தந்தை
தீய காரியங்கள் நடப்பதற்கான முக்கிய காரணத்தை இயேசு குறிப்பிட்டார். தம்மைக் கொலை செய்ய வகைதேடிய மதத் தலைவர்களைப் பற்றிப் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்.” (யோவான் 8:44) இந்த பிசாசாகிய சாத்தானே, சுயநல காரணங்களுக்காகக் கடவுளை எதிர்த்து கலகம் செய்யும்படி ஆதாம் ஏவாளை வஞ்சித்தான். இந்தக் கலகம்தான் பாவத்தையும், பிறகு மரணத்தையும் மனிதகுலத்திற்கு அறிமுகப்படுத்தியது.
யோபுவிடம் சாத்தான் நடந்துகொண்ட விதத்திலிருந்து அவனுடைய கொலைகார புத்தி இன்னுமதிக வெட்டவெளிச்சமானது. யோபுவின் உத்தமத்தன்மையைச் சோதிக்க சாத்தானுக்கு யெகோவா அனுமதி கொடுத்தபோது, யோபுவின் சொத்துசுகங்கள் அனைத்தையும் அவன் அபகரித்தான். அத்துடன் திருப்தி அடையாமல் யோபுவுடைய பத்து பிள்ளைகளின் உயிரையும் பறித்தான். (யோபு 1:9-19) கடந்த நூற்றாண்டின்போது, மனிதகுலம் பெருமளவு தீமையைச் சந்தித்திருக்கிறது; மனித அபூரணமும் அறியாமையும் அதோடு, மனித விவகாரங்களில் சாத்தான் அதிகமாகத் தலையிட்டிருப்பதும் அதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. பிசாசு ‘பூமியிலே விழத்தள்ளப்பட்டான், அவனோடேகூட அவனைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்’ என பைபிள் தெரிவிக்கிறது. சாத்தான் இப்படித் தள்ளப்பட்டிருப்பதால், ‘பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு’ பயங்கரமான ‘ஆபத்து வரும்’ என அதே தீர்க்கதரிசனம் துல்லியமாக முன்னுரைத்தது. தீய காரியங்களைச் செய்யும்படி ஆட்களைக் கட்டாயப்படுத்த சாத்தானால் முடியாதென்றாலும் ‘உலகமனைத்தையும் மோசம்போக்குவதில்’ அவன் பலே கில்லாடி.—வெளிப்படுத்துதல் 12:9, 12.
கெட்டதைச் செய்வதற்கான மனச்சாய்வை அகற்றுதல்
மனித சமுதாயத்திலிருந்து தீமையை அடியோடு அகற்ற வேண்டுமானால், கெட்டதைச் செய்ய மனிதனுக்குப் பிறவியிலேயே இருக்கிற மனச்சாய்வும், அறியாமையும், சாத்தானின் செல்வாக்கும் நீக்கப்பட வேண்டும். முதலாவதாக, மனிதனுக்குப் பிறவியிலேயே இருக்கிற பாவம் செய்யும் மனச்சாய்வை அவனது இருதயத்திலிருந்து அகற்றுவது எப்படி?
எந்தவொரு டாக்டராலும், மருந்தாலும் அதை அகற்ற முடியாது. ஆனால், யெகோவா தேவன் ஒரு நிவாரணியை அளித்திருக்கிறார். அதை ஏற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அனைவரும் பரம்பரை பரம்பரையாகப் பெற்றுள்ள பாவத்திலிருந்தும் அபூரணத்திலிருந்தும் நிவாரணம் அடைவார்கள். அதைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (1 யோவான் 1:7) பரிபூரண மனிதரான இயேசு தம் ஜீவனையே மனமுவந்து அளித்தபோது, “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் [அதாவது, கழுமரத்தின்மேல்] சுமந்தார்.” (1 பேதுரு 2:24) இயேசுவின் தியாக மரணம், ஆதாம் செய்த தீய செயலின் விளைவுகளை அகற்றிவிடும். இயேசு கிறிஸ்து ‘எல்லாருக்கும் மீட்கும்பொருளானார்’ என பவுல் குறிப்பிடுகிறார். (1 தீமோத்தேயு 2:6) ஆம், கிறிஸ்துவின் மரணம் ஆதாம் இழந்த பரிபூரண ஜீவனை மனிதகுலம் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுத்தது.
அப்படியானால், நீங்கள் ஒருவேளை இவ்வாறு கேட்கலாம்: ‘சுமார் 2,000 வருஷங்களுக்கு முன்பு இயேசு மரித்ததன் மூலம் மீண்டுமாக மனிதகுலம் பரிபூரணத்தைப் பெறுவது சாத்தியமாகியிருக்கிறது என்றால், தீமையும் மரணமும் ஏன் இன்னமும் இருக்கின்றன?’ இக்கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிப்பது, தீமைக்கான இரண்டாவது காரணத்தை, அதாவது கடவுளுடைய நோக்கங்களைக் குறித்த மனிதனுடைய அறியாமையை, போக்குவதற்கு உதவும்.
திருத்தமான அறிவு நற்குணத்தை வளர்க்கிறது
தீமையை ஒழிப்பதற்கு யெகோவாவும் இயேசுவும் இப்போது செய்துவருகிற காரியங்களைப் பற்றித் திருத்தமாக அறிந்துகொள்வது, தெரியாத்தனமாகத் தீய காரியங்களுக்கு உடன்படாதவாறு நல்மனமுள்ள ஒருவரைத் தடுக்கலாம், ஏன், “தேவனோடே போர் செய்கிறவராய்” ஆகிவிடாதவாறும் தடுக்கலாம். (அப்போஸ்தலர் 5:38, 39) முன்பு நாம் அறியாமையினால் செய்த தவறுகளை யெகோவா தேவன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட தயாராய் இருக்கிறார். அத்தேனே பட்டணத்தாரிடம் பேசுகையில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்.”—அப்போஸ்தலர் 17:30, 31.
இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதை பவுல் அனுபவத்தில் கண்டார்; எப்படியெனில், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுதாமே பவுலிடம் பேசி, அன்றிருந்த கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதிலிருந்து அவரைத் தடுத்தார். (அப்போஸ்தலர் 9:3-7) கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றதுமே பவுல் மனம் மாறினார், கிறிஸ்துவின் மிகச் சிறந்த சீஷரானார். (1 கொரிந்தியர் 11:1; கொலோசெயர் 3:9, 10) அதுமட்டுமல்ல, ‘ராஜ்யத்தினுடைய சுவிசேஷத்தை’ பக்திவைராக்கியத்தோடு பிரசங்கித்தார். (மத்தேயு 24:14) இயேசு மரித்து, உயிர்த்தெழுப்பப்பட்டு சுமார் 2,000 வருடங்களாக, தம்மோடு ஆட்சி செய்ய மனிதகுலத்திலிருந்து பவுலைப் போன்ற சிலரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 5:9, 10.
“நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்” என்று இயேசு கொடுத்த கட்டளையை யெகோவாவின் சாட்சிகள் கடந்த நூற்றாண்டு முழுவதிலும் பக்திவைராக்கியத்தோடு நிறைவேற்றியிருக்கிறார்கள், இன்றுவரையாகவும் நிறைவேற்றி வருகிறார்கள். (மத்தேயு 28:19, 20) இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு கிறிஸ்துவின் பரலோக அரசாங்கத்தின் கீழ் பூமியில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பு உள்ளது. “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என இயேசு சொன்னார். (யோவான் 17:3) இந்த அறிவை அடைய பிறருக்கு உதவுவதைவிட மிகப் பெரிய நன்மையான காரியம் வேறெதுவும் இல்லை.
ராஜ்யத்தின் இந்த நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்கள், தங்களைச் சுற்றி நடக்கிற எல்லாத் தீய காரியங்களின் மத்தியிலும் “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” போன்ற பண்புகளை வெளிக்காட்டுகிறார்கள். (கலாத்தியர் 5:22, 23) இயேசுவைப் போலவே அவர்களும் ‘ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருக்கிறார்கள்.’ (ரோமர் 12:17) ‘தீமையை நன்மையினால் வெல்ல’ அவர்கள் ஒவ்வொருவரும் பிரயாசப்படுகிறார்கள்.—ரோமர் 12:21; மத்தேயு 5:44.
தீமை கடைசியாக வெல்லப்படும்
தீமைக்கு மூல காரணனான பிசாசாகிய சாத்தானை மனிதர்களால் ஒருபோதும் வெல்ல முடியாதென்றாலும், யெகோவா சீக்கிரத்திலேயே இயேசுவைப் பயன்படுத்தி சாத்தானின் தலையை நசுக்கிப்போடுவார். (ஆதியாகமம் 3:15; ரோமர் 16:20) அனைத்து அரசியல் அமைப்புகளையும்கூட ‘நொறுக்கி நிர்மூலமாக்க’ கிறிஸ்து இயேசுவுக்கு யெகோவா கட்டளையிடுவார்; இந்த அமைப்புகள் சரித்திரம் முழுவதிலும் கணக்குவழக்கில்லா தீய காரியங்களைச் செய்திருக்கின்றன. (தானியேல் 2:44; பிரசங்கி 8:9) வரவிருக்கும் நியாயத்தீர்ப்பு நாளில், ‘இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் . . . நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.’—2 தெசலோனிக்கேயர் 1:7, 10; செப்பனியா 1:14-18.
சாத்தானும் அவனுடைய ஆதரவாளர்களும் ஒழிக்கப்பட்ட பிறகு, இந்தப் பூமியை மீண்டும் புதுப்பிக்க பரலோகத்திலிருந்து இயேசு தப்பிப்பிழைப்பவர்களுக்கு உதவுவார். அதோடு, புதுப்பிக்கப்பட்ட பூமியில் வாழ தகுதிபெற்ற அனைவரையும் உயிர்த்தெழுப்பவும் செய்வார். (லூக்கா 23:32, 39-43; யோவான் 5:26-29) இவ்வாறு, மனிதகுலம் அனுபவித்த தீமையின் பாதிப்புகளுக்கு அவர் முடிவுகட்டுவார்.
இயேசுவைப் பற்றிய நற்செய்திக்குக் கீழ்ப்படியும்படி ஆட்களை யெகோவா கட்டாயப்படுத்துவதில்லை. என்றாலும், ஜீவன் அளிக்கும் அறிவைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு தருகிறார். இந்த வாய்ப்பை நீங்கள் இப்போதே பயன்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியம்! (செப்பனியா 2:2, 3) இப்படிச் செய்வீர்களானால், உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கிற எந்தத் தீங்கையும் சமாளிக்கக் கற்றுக்கொள்வீர்கள். கடைசியாக, தீமைக்கு கிறிஸ்து எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார் என்பதையும் நீங்கள் காண்பீர்கள்.—வெளிப்படுத்துதல் 19:11-16; 20:1-3, 10; 21:3, 4.
[பக்கம் 5-ன் படம்]
திருத்தமான அறிவு இல்லாததாலேயே தீய காரியங்களுக்கு சவுல் துணைநின்றார்
[பக்கம் 7-ன் படம்]
கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய பிறருக்கு உதவுவதைவிட மிகப் பெரிய நன்மையான காரியம் வேறெதுவும் இல்லை