சுய-தியாக ஆவியுடன் யெகோவாவைச் சேவித்தல்
“ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் சொந்தம் கைவிட்டு, தன் வாதனையின் கழுமரத்தை எடுத்துக்கொண்டு, தொடர்ந்து என்னைப் பின்பற்றக்கடவன்.” —மத்தேயு 16:24, NW.
1. தமக்கு வரவிருக்கும் மரணத்தைக்குறித்து இயேசு தம்முடைய சீஷர்களுக்கு எவ்வாறு தெரியப்படுத்தினார்?
பனிமூடிய முகட்டினையுடைய எர்மோன் மலைக்கு அருகாமையில், இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மைல்கல்லை அடைகிறார். வாழ்வதற்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தை அவர் கொண்டிருக்கிறார். அவருக்கு அது தெரியும்; அவருடைய சீஷர்களுக்குத் தெரியாது. இப்பொழுது அவர்களும் தெரிந்துகொள்வதற்கான சமயம் வந்துவிட்டது. வரவிருக்கும் அவருடைய மரணத்தைப்பற்றி முன்னரே இயேசு குறிப்பிட்டிருந்தது உண்மை என்றாலும், அவர் அதைப்பற்றி வெளிப்படையாகச் சொல்லும் முதல்முறை இதுதான். (மத்தேயு 9:15; 12:40) மத்தேயுவின் பதிவு வாசிக்கிறது: “அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்.”—மத்தேயு 16:21; மாற்கு 8:31, 32.
2. தமக்கு வரவிருந்த துன்பத்தைப்பற்றிய இயேசுவின் வார்த்தைகளுக்கு பேதுருவின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது, அதற்கு இயேசு எவ்வாறு பதிலளித்தார்?
2 இயேசுவின் நாட்கள் எண்ணப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், பேதுரு மனச்சோர்வைத் தருவதைப்போல் தோன்றிய அத்தகைய ஓர் எண்ணத்திற்குக் கோபத்துடன் பிரதிபலிக்கிறார். மேசியா உண்மையில் கொல்லப்படுவார் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகவே, பேதுரு தன் எஜமானைக் கடிந்துகொள்ள துணிகிறார். மிகச் சிறந்த உள்நோக்கங்களால் உந்துவிக்கப்பட்டவராய், அவர் தீவிரமாகத் தூண்டுவிக்கிறார்: “ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை.” ஆனால் எப்படி ஒருவர் ஒரு விஷ பாம்பின் தலையைக் கட்டாயமாக நசுக்குவாரோ அதேபோல, இயேசு உடனடியாக பேதுருவின் தவறான இடத்தில் வைக்கப்பட்ட தயவை நிராகரித்தார். “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்.”—மத்தேயு 16:22, 23.
3. (அ) பேதுரு எவ்வாறு தன்னை அறியாமலேயே தன்னைப் பிசாசின் ஒரு பிரதிநிதியாக ஆக்கிக்கொண்டான்? (ஆ) ஒரு சுய-தியாகமான போக்கிற்கு பேதுரு எவ்வாறு ஒரு தடைக்கல்லாக இருந்தார்?
3 பேதுரு தன்னை அறியாமலேயே சாத்தானின் ஒரு பிரதிநிதியாகத் தன்னை ஆக்கிக்கொண்டார். இயேசுவின் கடுமையான பதில், அவர் வனாந்தரத்தில் சாத்தானிடம் பதிலளித்ததுபோலவே தீர்வானதாக இருந்தது. அங்குப் பிசாசு ஓர் எளிய முறையான வாழ்க்கையை, துன்பமின்றி ஓர் அரசபதவியை வைத்து இயேசுவைத் சோதித்தான். (மத்தேயு 4:1-10) இப்பொழுது அவர் தன்னோடு கடுமையாக இல்லாமல் கனிவுடன் நடந்துகொள்ளும்படி பேதுரு உற்சாகப்படுத்தினார். இது அவருடைய தந்தையின் சித்தம் அல்ல என்பதை இயேசு அறிந்திருந்தார். அவருடைய வாழ்க்கை சுய-தியாகத்திற்குரிய ஒன்றாக இருக்கவேண்டும், சுயவிருப்பத்தை நிறைவேற்றுவதற்குரிய ஒன்றாக அல்ல. (மத்தேயு 20:28) பேதுரு அத்தகைய ஒரு போக்கிற்குத் தடைக்கல்லாக இருந்தார்; அவருடைய நல்நோக்கமுள்ள அனுதாபம் ஒரு கண்ணியாகி விடுகிறது.a தியாகத்திலிருந்து விடுபட்ட ஒரு வாழ்க்கையைப்பற்றிய எந்த எண்ணத்தையாவது அவர் வளர்த்துக்கொண்டிருந்தால், ஒரு சாத்தானிய கண்ணியின் மரண பிடியில் அகப்படுவதன்மூலம் அவர் கடவுளுடைய தயவிலிருந்து விழுந்துவிடுவார் என்று இயேசு தெளிவாகக் காண்கிறார்.
4. ஏன் ஒரு சுயவிருப்பத்துக்குரிய சொகுசான வாழ்க்கை இயேசுவுக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் உரியதல்ல?
4 ஆகவே, பேதுருவின் சிந்தனையில் சரிப்படுத்தல் தேவைப்பட்டது. இயேசுவிடமான அவருடைய வார்த்தைகள் ஒரு மனிதனுடைய கருத்தைப் பிரதிபலித்தது, கடவுளுடையதை அல்ல. கட்டுப்பாடற்ற சுயவிருப்பத்துக்குரிய சொகுசான வாழ்க்கையும் துன்பத்திலிருந்து வெளிவர ஓர் எளிதான வழியும் இயேசுவுக்குரியதல்ல; அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் உரியதல்ல, ஏனென்றால் இயேசு அடுத்ததாக பேதுருவிடமும் மற்ற சீஷர்களிடமும் சொல்கிறார்: “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் சொந்தம் கைவிட்டு, தன் வாதனையின் கழுமரத்தை எடுத்துக்கொண்டு, தொடர்ந்து என்னைப் பின்பற்றக்கடவன்.”—மத்தேயு 16:24, NW.
5. (அ) கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதன் சவால் என்ன? (ஆ) ஒரு கிறிஸ்தவன் என்ன மூன்று அவசியமான காரியங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்?
5 மறுபடியும் மறுபடியுமாக இயேசு இந்த முக்கிய பொருளுக்குத் திரும்புகிறார்: கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கான சவால். இயேசுவைப் பின்பற்றுபவர்களாக இருப்பதற்கு, கிறிஸ்தவர்கள் தங்களுடைய தலைவரைப் போலவே யெகோவாவைச் சுய-தியாக ஆவியுடன் சேவிக்க வேண்டும். (மத்தேயு 10:37-39) இவ்வாறு, ஒரு கிறிஸ்தவன் செய்ய தயாராக இருக்கவேண்டிய மூன்று தேவையான காரியங்களை அவர் வரிசைப்படுத்துகிறார்: (1) தன்னைத்தான் சொந்தம் கைவிடுதல், (2) தன் வாதனையின் கழுமரத்தை எடுத்துக்கொள்ளுதல், மேலும் (3) தொடர்ந்து அவரைப் பின்பற்றுதல்.
“ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால்”
6. (அ) ஒருவர் எவ்வாறு தன்னைத்தானே சொந்தம் கைவிடுகிறார்? (ஆ) நாம் நம்மைவிட யாரை அதிகமாகப் பிரியப்படுத்தவேண்டும்?
6 ஒருவர் தன்னைத்தான் சொந்தம் கைவிடுவதன் அர்த்தம் என்ன? ஒருவர் தன்னை முழுமையாக மறுக்க வேண்டும், தான் என்பதற்கு, ஒரு வகையான மரணம் என்று அது பொருள்படுகிறது. “சொந்தம் கைவிட்டு” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அடிப்படை அர்த்தம், “இல்லை என்று சொல்லுதல்”; “முற்றிலுமாக மறுத்தல்” என்று பொருள்படுகிறது. ஆகவே, நீங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் சவாலை ஏற்றுக்கொண்டால், உங்களுடைய சொந்த இலட்சியங்கள், வசதிகள், ஆசைகள், மகிழ்ச்சி, இன்பங்களை மனமுவந்து விட்டுக்கொடுப்பீர்கள். மொத்தத்தில், நீங்கள் உங்கள் முழு வாழ்க்கையையும், அது உட்படுத்தும் எல்லாவற்றையும், யெகோவா தேவனுக்காக எல்லா காலத்துக்கும் கொடுப்பீர்கள். தன்னைத்தான் சொந்தம் கைவிடுவது என்பது, அவ்வப்போது ஒருவர் தனக்குத்தானே ஒருசில இன்பங்களை மறுப்பதைவிட அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. மாறாக, ஒருவர், தான் தனக்குரியவர் அல்லர் என சொந்தம் கைவிட்டு அந்த உரிமையை யெகோவாவிடம் ஒப்படைக்க வேண்டும். (1 கொரிந்தியர் 6:19, 20) தன்னைத்தான் சொந்தம் கைவிட்ட ஒருவர் தன்னை அல்ல, ஆனால் கடவுளைப் பிரியப்படுத்தும்படி வாழ்கிறார். (ரோமர் 14:8; 15:3) தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும், தன்னுடைய தன்னல ஆசைகளுக்கு இல்லை என்றும் யெகோவாவுக்கு ஆம் என்றும் சொல்வதை அது அர்த்தப்படுத்துகிறது.
7. கிறிஸ்தவனின் வாதனையின் கழுமரம் எது, அவன் அதை எப்படி எடுத்துக்கொண்டுச்செல்கிறான்?
7 ஆக, உங்கள் வாதனையின் கழுமரத்தை எடுத்துக்கொள்ளுதலில் முக்கியமான காரியங்கள் உட்பட்டிருக்கின்றன. கழுமரத்தை எடுத்துக்கொண்டுச்செல்லுதல் ஒரு சுமையாகவும் மரணத்தின் ஓர் அடையாளமாகவும் இருக்கிறது. ஒரு கிறிஸ்தவன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவனாக இருப்பதால், தேவைப்பட்டால் துன்பப்பட அல்லது அவமானப்பட அல்லது சித்திரவதைப்பட அல்லது மரணத்திற்கு உட்படுத்தப்படவுங்கூட மனமுள்ளவராக இருக்கிறார். இயேசு சொன்னார்: “தன் சிலுவையை [வாதனையின் கழுமரத்தை, NW] எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.” (மத்தேயு 10:38) துன்பப்படுகிற எல்லாரும் வாதனையின் கழுமரத்தை எடுத்துக்கொண்டில்லை. துன்மார்க்கர் அநேக “வேதனை”களைக் கொண்டிருக்கின்றனர், ஆனால் வாதனையின் கழுமரத்தைக் கொண்டில்லை. (சங்கீதம் 32:10) இருந்தாலும், கிறிஸ்தவனுடைய வாழ்க்கை வாதனையின் கழுமரத்தை எடுத்துக்கொண்டுச்செல்லும் யெகோவாவிடமான ஒரு தியாகத்திற்குரிய சேவையாக இருக்கிறது.
8. இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு என்ன வாழ்க்கை மாதிரியை வைத்துச் சென்றார்?
8 இயேசு குறிப்பிட்ட கடைசி நிபந்தனை என்னவென்றால், நாம் தொடர்ந்து அவரைப் பின்பற்றவேண்டும் என்பதாகும். இயேசு தாம் கற்பித்தவற்றை நாம் ஏற்றுக்கொண்டு நம்பவேண்டும் என்று மட்டுமல்லாமல், நம்முடைய வாழ்க்கை முழுவதும் அவர் வைத்துச்சென்ற மாதிரியைத் தொடர்ந்து பின்பற்றுவதும் தேவை என்கிறார். அவருடைய வாழ்க்கை மாதிரியில் காணப்படும் சில மேம்பட்ட அம்சங்கள் யாவை? அவரைப் பின்பற்றியவர்களுக்குத் தம்முடைய கடைசி கட்டளையைக் கொடுத்தபோது, அவர் சொன்னார்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், . . . சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) இயேசு, ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியை பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் செய்தார். அவருக்கு நெருங்கிய சீஷர்களும், உண்மையில் ஆரம்ப கிறிஸ்தவ சபையினர் எல்லாரும் அவ்வாறே செய்தனர். அவர்கள் உலகத்தின் பாகமாய் இல்லாதிருப்பதோடுகூட, இந்த வைராக்கியமான நடவடிக்கை, உலகத்தின் வெறுப்பையும் எதிர்ப்பையும் அவர்கள்மேல் கொண்டுவந்தது; இது எடுத்துக்கொண்டுச்செல்வதற்கு பாரமானதாகவுங்கூட இருக்கும் வாதனையின் கழுமரத்தில் விளைவடைந்தது.—யோவான் 15:19, 20; அப்போஸ்தலர் 8:4.
9. இயேசு எவ்வாறு மற்ற மக்களை நடத்தினார்?
9 இயேசுவின் வாழ்க்கையில் மற்றொரு பிரபல மாதிரி, அவர் மற்ற மக்களை நடத்திய விதத்தில் காணப்படுகிறது. அவர் தயவுள்ளவராகவும், “சாந்தமும் மனத்தாழ்மையுமாய்” இருந்தார். இவ்வாறாக, அவருக்குச் செவிகொடுப்பவர்கள் ஆவியில் புதுப்பிக்கப்பட்டவர்களாய் உணர்ந்து அவருடன் இருக்கையில் உற்சாகமடைந்தனர். (மத்தேயு 11:29) அவர்கள் தம்மைப் பின்பற்றும்படியாக அவர்களை அதட்டி அடக்க அல்லது அவர்கள் எப்படி அவ்வாறு செய்யவேண்டும் என்பதற்காக சட்டத்திற்கு மேல் சட்டத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கவில்லை; அவர்களை தம்முடைய சீஷர்களாவதற்கு வற்புறுத்தும்படியாக அவர்களுக்குள் குற்றவுணர்ச்சிகளைப் புகுத்தவுமில்லை. அவர்களுடைய சுய-தியாக வாழ்க்கையின் மத்தியிலும் அவர்கள் உண்மையான சந்தோஷத்தைப் பிரதிபலித்தனர். ‘கடைசி நாட்களை’ குறிக்கும் உலகின் சுயவிருப்பத்தை நிறைவேற்றும் ஆவியைக் கொண்டிருப்பவர்களோடு ஒப்பிடுகையில் என்னே ஒரு தெளிவான வேறுபாடு!—2 தீமோத்தேயு 3:1-4.
இயேசுவின் சுய-தியாக ஆவியை வளர்த்துக் காத்துக்கொள்ளுங்கள்
10. (அ) பிலிப்பியர் 2:5-8-ன்படி, கிறிஸ்து எவ்வாறு தன்னைத்தானே சொந்தம் கைவிட்டார்? (ஆ) நாம் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களானால், என்ன மனநிலையை வெளிக்காட்ட வேண்டும்?
10 தன்னைத்தான் சொந்தம் கைவிடுவதில் இயேசு முன்மாதிரி வகித்தார். அவர் தம்முடைய வாதனையின் கழுமரத்தை எடுத்துக்கொண்டு, தம்முடைய தகப்பனின் சித்தத்தைச் செய்வதன்மூலம் அதைத் தொடர்ந்து கொண்டுச்சென்றார். பவுல் பிலிப்பியிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதினார்: “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் [வாதனையின் கழுமரத்தின், NW] மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.” (பிலிப்பியர் 2:5-8) அதைவிட முழுமையாகத் தன்னைத்தானே ஒருவர் எப்படி சொந்தம் கைவிட முடியும்? நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்கு சொந்தமானவராயும் அவரைப் பின்பற்றுபவர்களில் ஒருவராயும் இருந்தால், இதே மனநிலையைக் கொண்டிருக்கவேண்டும்.
11. சுய-தியாக வாழ்க்கையை வாழ்வது யாருடைய சித்தத்திற்காக வாழ்வதை அர்த்தப்படுத்துகிறது?
11 இயேசு துன்பப்பட்டு நமக்காக மரித்ததால், கிறிஸ்தவர்கள் நன்கு தயாரிக்கப்பட்ட போர்வீரர்களைப்போல, கிறிஸ்து கொண்டிருந்த அதே ஆவியை தாங்கள் ஆயுதமாகத் தரித்துக்கொள்ள வேண்டும் என்று இன்னொரு அப்போஸ்தலனாகிய பேதுரு சொல்கிறார். அவர் எழுதுகிறார்: “இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம் வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.” (1 பேதுரு 3:18; 4:1, 2) இயேசுவின் சுய-தியாகப் போக்கு, அவர் அதைக்குறித்து எப்படி உணர்ந்தார் என்பதைத் தெளிவாகக் காண்பித்தது. அவர் தம்முடைய பக்தியில் ஒரே நோக்கமுடையவராய் இருந்து, ஓர் அவமானமான மரணம் வரையாகக்கூட எப்போதும் தம்முடைய பிதாவின் சித்தத்தைத் தம்முடையதற்கு மேலாகக் கொண்டிருந்தார்.—மத்தேயு 6:10; லூக்கா 22:42.
12. சுய-தியாக வாழ்க்கை இயேசுவுக்கு விரும்பத்தகாததாக இருந்ததா? விளக்குங்கள்.
12 இயேசுவின் சுய-தியாக வாழ்க்கை, பின்பற்றுவதற்கு ஒரு கடும்முயற்சியுடைய சவாலான பாதையாக இருந்தபோதிலும், அவர் அதை விருப்பமற்றதாக உணரவில்லை. மாறாக, தெய்வீக சித்தத்திற்குத் தன்னைக் கீழ்ப்படுத்துவதில் இயேசு இன்பம் கண்டார். அவருடைய தந்தையின் சித்தத்தைச் செய்வது அவருக்கு உணவைப்போல் இருந்தது. ஒருவருக்கு ஒரு நல்ல உணவிலிருந்து கிடைப்பதுபோன்ற உண்மையான திருப்தியை அவர் அதிலிருந்து பெற்றார். (மத்தேயு 4:4; யோவான் 4:34) இவ்வாறு, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உண்மையில் திருப்தியுள்ளவர்களாய் உணர வேண்டுமானால், நீங்கள் இயேசுவின் மனநிலையை வளர்த்துக்கொள்வதன்மூலம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதைவிட சிறந்த எதையும் செய்ய முடியாது.
13. சுய-தியாக ஆவிக்குப் பின்னால் அன்பு எவ்வாறு உந்துவிக்கும் சக்தியாக இருக்கிறது?
13 உண்மையில், சுய-தியாக ஆவியின் பின்னாலிருக்கும் உந்துவிக்கும் சக்தி என்ன? ஒரு வார்த்தையில் சொன்னால், அன்பு. இயேசு சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.” (மத்தேயு 22:37-39) ஒரு கிறிஸ்தவன் சுயநல நாட்டங்களைக் கொண்டிருந்து, அதே சமயத்தில், அந்த வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவும் முடியாது. முதன்முதலில் யெகோவாவுக்கான அன்பு, பின்னர் அயலாருக்கான அன்பு ஆகியவற்றால் அவருடைய சொந்த மகிழ்ச்சியும் அக்கறையும் ஆளப்படவேண்டும். அவ்வாறே இயேசு தம்முடைய வாழ்க்கையை வாழ்ந்தார்; அதைத்தான் தம்மைப் பின்பற்றுபவர்களிடம் எதிர்பார்க்கிறார்.
14. (அ) எபிரெயர் 13:15, 16 என்ன பொறுப்புகள் விவரிக்கப்படுகின்றன? (ஆ) நற்செய்தியை வைராக்கியத்துடன் பிரசங்கிக்க எது நம்மை உற்சாகப்படுத்துகிறது?
14 அப்போஸ்தலன் பவுல் இந்த அன்பின் சட்டத்தைப் புரிந்துகொண்டார். அவர் எழுதினார்: “ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (எபிரெயர் 13:15, 16) மிருகங்கள் அல்லது அவை போன்றவற்றை கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்குப் பலிகளாக அளிப்பதில்லை; எனவே, ஒரு சொல்லர்த்தமான கோயிலில், தங்கள் வணக்கத்தில் முன்னின்று நடத்தும்படி மனித ஆசாரியர்கள் அவர்களுக்குத் தேவையில்லை. கிறிஸ்து இயேசுவின் மூலமாகவே, நம்முடைய ஸ்தோத்திர பலி அளிக்கப்படுகிறது. மேலும், முக்கியமாக அந்த ஸ்தோத்திர பலியின்மூலம், அதாவது அவருடைய பெயரைப்பற்றிய வெளிப்படையான அறிக்கையின் மூலம், கடவுளுக்கான நம்முடைய அன்பைக் காண்பிக்கிறோம். குறிப்பாக, அன்பில் வேரூன்றப்பட்ட நம்முடைய சுயநலமற்ற ஆவி, நம்முடைய உதடுகளின் கனிகளைக் கடவுளுக்கு அளிப்பதற்கு எப்போதும் விருப்பார்வத்துடன் இருக்க முயன்றுகொண்டு, நற்செய்தியை வைராக்கியத்துடன் பிரசங்கிக்க உற்சாகம் அளிக்கிறது. இந்த விதத்தில் நாம் அயலாருக்கான அன்பையும் காண்பிக்கிறோம்.
சுய-தியாகம் மிகுந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது
15. சுய-தியாகத்தைப்பற்றி என்ன துருவும் கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம்?
15 சற்றுநேரம் நிறுத்தி, பின்வரும் கேள்விகளின்பேரில் சிந்தியுங்கள்: என்னுடைய தற்போதைய வாழ்க்கை மாதிரி, ஒரு சுய-தியாகப் போக்கை வெளிக்காட்டுகிறதா? என்னுடைய இலக்குகள் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைச் சுட்டிக் காண்பிக்கிறதா? என்னுடைய உதாரணத்திலிருந்து என்னுடைய குடும்ப அங்கத்தினர் ஆவிக்குரிய ஆதாயங்களை அறுவடை செய்கிறார்களா? (1 தீமோத்தேயு 5:8-ஐ ஒப்பிடுங்கள்.) அநாதைகளையும் விதவைகளையும் பற்றியதென்ன? அவர்களும் என்னுடைய சுய-தியாக ஆவியிலிருந்து நன்மை அடைகிறார்களா? (யாக்கோபு 1:27) வெளிப்படையாக அறிக்கை செய்யும் ஸ்தோத்திர பலியில் நான் செலவு செய்யும் நேரத்தை விரிவாக்க முடியுமா? பயனியர், பெத்தேல், அல்லது மிஷனரி சேவையின் சிலாக்கியத்திற்கு தகுதிபெற முயற்சி செய்கிறேனா, அல்லது ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கான தேவை அதிகமாக இருக்கும் ஓர் இடத்தில் சேவிப்பதற்காக நான் செல்ல முடியுமா?
16. சுய-தியாக வாழ்க்கையை நடத்த சாமர்த்தியம் எவ்வாறு நமக்கு உதவி செய்யும்?
16 சில நேரங்களில், யெகோவாவை ஒரு சுய-தியாக ஆவியுடன் சேவிப்பதற்கான நம்முடைய முழு ஆற்றலையும் அடைவதற்கு வெறும் ஒரு சிறிதளவான சாமர்த்தியத்துடன் செயல்படுவது போதுமானதாக இருக்கிறது. உதாரணமாக, ஈக்வடாரிலுள்ள ஒழுங்கான பயனியரான ஜேனட், முழுநேர உலகப்பிரகாரமான வேலையைக் கொண்டிருந்தாள். சீக்கிரத்தில், ஒரு சந்தோஷமுள்ள ஆவியுடன் ஒழுங்கான பயனியருக்குரிய மணிநேர தேவைகளைப் பூர்த்தி செய்வதை அவளுடைய அட்டவணை அவளுக்குக் கடினமாக்கிற்று. தன்னை வேலையில் அமர்த்தியிருப்பவரிடம் பிரச்னையை விவரிக்க தீர்மானித்து, வேலை மணிநேரங்களைக் குறைப்பதற்கு வேண்டிக்கொண்டாள். அவளுடைய வேலை நேரத்தைக் குறைக்க அவர் மனமுள்ளவராய் இராததால், அடுத்து அவள், பயனியராக வேண்டும் என்பதற்காகப் பகுதிநேர வேலையைத் தேடிக்கொண்டிருந்த மரியாவையும் கூட்டிச் சென்றாள். ஒரு முழுநாள் வேலையைப் பகிர்ந்துகொண்டு, அவர்கள் ஒவ்வொருவரும் அரைநாள் வேலைசெய்ய முன்வந்தனர். இந்த ஏற்பாட்டிற்கு அந்த வேலையில் அமர்த்தியவர் ஒத்துக்கொண்டார். இப்பொழுது இரண்டு சகோதரிகளும் ஒழுங்கான பயனியர்கள். இந்த அருமையான பலனைக் கண்டு, அதே நிறுவனத்திற்கு முழுநேரமாக வேலைசெய்து களைத்துப்போய், தன்னுடைய பயனியர் மணிநேரங்களை அடைய கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த காஃபாவும், தன்னுடன் மாகாலீயைக் கொண்டுபோய் அதே யோசனையை அளித்தாள். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு, முழுநேர ஊழியத்தை விட்டுவிட இருந்த இரண்டு சகோதரிகளுக்குப் பதிலாக, நான்கு சகோதரிகளால் பயனியர் செய்ய முடிகிறது. சாமர்த்தியமும் முன்முயற்சியும் நல்ல பலன்களைக் கொடுத்தன.
17-21. எவ்வாறு ஒரு திருமண தம்பதி தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை திரும்ப மதிப்பிட்டனர், என்ன விளைவுடன்?
17 மேலும், கடந்த பத்து வருடங்களாக ஈவானால் பின்பற்றப்பட்ட சுய-தியாகப் போக்கைக் கவனியுங்கள். மே 1991-ல் உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு அவள் பின்வருபவற்றை எழுதினாள்:
18 “அக்டோபர் 1982-ல், நானும் என் குடும்பமும் புரூக்லின் பெத்தேலைச் சுற்றிக்கண்டு வந்தோம். அதைப் பார்த்தது, அங்குத் தொண்டு செய்யும் விருப்பத்தை என்னில் உண்டாக்கியது. நான் ஒரு மனுவை வாசித்தேன், அதில் ஒரு குறிப்பிடத்தக்க கேள்வி இருந்தது, ‘கடந்த ஆறு மாதங்களில் உங்களுடைய சராசரி வெளி ஊழிய மணிநேரங்கள் என்ன? சராசரி மணிநேரங்கள் பத்துக்கும் குறைவாக இருந்தால் ஏன் என்று விவரியுங்கள்.’ எந்த ஒரு நியாயமான காரணத்தையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியாததால் ஓர் இலக்கை வைத்து, ஐந்து மாதங்களில் அதை அடைந்தேன்.
19 “ஏன் பயனிர் செய்யவில்லை என்பதற்கு சில சாக்குப்போக்குகளை என்னால் நினைக்க முடிந்தாலும், 1983 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம் (1983 Yearbook of Jehovah’s Witnesses) படித்தபோது, பயனியர் செய்வதற்காக மற்றவர்கள் என்னுடையதைவிட பெரிய தடைகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்தேன். ஆகவே, ஏப்ரல் 1, 1983-ல், என்னுடைய நல்ல வருவாய்மிக்க முழுநேர வேலையை விட்டுவிட்டு துணை பயனியரானேன்; செப்டம்பர் 1, 1983-ல் ஒழுங்கான பயனியர் அணிகளில் நுழைந்தேன்.
20 “பின்னர், ஏப்ரல் 1985-ல் ஒரு நல்ல உதவி ஊழியரைத் திருமணம் செய்வதில் மகிழ்ச்சி அடைந்தேன். மூன்று வருடங்கள் கழித்து, பயனியர் சேவையைப்பற்றிய ஒரு மாவட்ட மாநாட்டின் பேச்சு, என் கணவர் என் பக்கமாக சாய்ந்துகொண்டு, ‘செப்டம்பர் 1 முதல் நான் ஏன் பயனியர் செய்ய துவங்கக்கூடாது என்பதற்கு நீ ஏதாவது காரணத்தைப் பார்க்கிறாயா?’ என்று மெல்ல கேட்கும்படி தூண்டியது. அடுத்த இரண்டு வருடங்கள் அவர் என்னுடன் இந்த வேலையில் சேர்ந்து கொண்டார்.
21 “புரூக்லின் பெத்தேலில் இரண்டு வாரங்கள் கட்டுமான பணியைச் செய்யவும் என் கணவர் மனமுவந்து சர்வதேச கட்டுதல் திட்டத்திற்காக விண்ணப்பித்தார். ஆகவே நாங்கள் மே 1989-ல் கிளை அலுவலக கட்டுதலுக்காக ஒரு மாதம் நைஜீரியா சென்றிருந்தோம். நாளை ஜெர்மனி செல்வோம். நாங்கள் போலாந்திற்குள் நுழைவதற்கான வீசாக்கள் அங்கு ஏற்பாடு செய்யப்படும். அத்தகைய ஒரு சரித்திரம்-படைக்கும் கட்டடத் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதிலும் முழுநேர ஊழியத்தின் இந்தப் புதிய அம்சத்தின் பாகமாக இருப்பதிலும் நாங்கள் கிளர்ச்சி அடைகிறோம்.”
22. (அ) எவ்வாறு நாமும், பேதுருவைப்போல நம்மை அறியாமலேயே ஒரு தடைக்கல்லாக ஆகக்கூடும்? (ஆ) ஒரு சுய-தியாக ஆவியுடன் யெகோவாவைச் சேவிப்பது எதன்பேரில் சார்ந்ததாக இல்லை?
22 நீங்கள்தானே ஒரு பயனியராக முடியாவிட்டாலும், முழுநேர சேவையில் இருப்பவர்கள் தங்கள் சிலாக்கியத்தைப் பற்றிக்கொண்டிருப்பதற்கு உற்சாகப்படுத்தவும் மேலும் அவ்வாறு செய்வதற்கு உதவியாகவாவது இருக்கிறீர்களா? அல்லது அது எப்படி ஒரு தடைக்கல்லாக இருக்கும் என்று உணராமல், தன்னிடம் தயவாக நடந்துகொள்ளச் சொன்ன பேதுருவைப் போலிருந்து, ஒரு முழுநேர ஊழியரை எளிதாக எடுத்துக்கொண்டு சொகுசாக வாழும்படி சொல்லும் ஒருசில நலன் கருதும் குடும்ப அங்கத்தினர்களாக அல்லது நண்பர்களாக இருப்பீர்களா? ஒரு பயனியரின் உடல்நலம் மிக ஆபத்தில் இருக்கிறது அல்லது அவர் கிறிஸ்தவக் கடமைகளை புறக்கணிக்கிறார் என்று இருந்தால், அவர் முழுநேர சேவையை சிறிது காலத்திற்கு விட்டுவிட வேண்டியிருக்கக்கூடும் என்பது உண்மைதான். ஒரு சுய-தியாக ஆவியுடன் யெகோவாவைச் சேவிப்பது என்பது பயனியர், பெத்தேல் ஊழியர், அல்லது வேறு ஏதோவொன்று என்ற ஓர் அடையாளப்பெயரைச் சார்ந்தில்லை. மாறாக, அது நாம் ஆட்களாக என்னவாக இருக்கிறோம்—எப்படி சிந்திக்கிறோம், என்ன செய்கிறோம், மற்றவர்களை எப்படி நடத்துகிறோம், நம்முடைய வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம்—என்பதைச் சார்ந்திருக்கிறது.
23. (அ) கடவுளோடு உடன் வேலையாளாக இருப்பதன் சந்தோஷத்தை நாம் எப்படி தொடர்ந்து கொண்டிருக்க முடியும்? (ஆ) எபிரெயர் 6:10-12-ல் நாம் என்ன உறுதியளிப்பைக் காண்கிறோம்?
23 நாம் உண்மையிலே சுய-தியாக ஆவியைக் கொண்டிருந்தால், கடவுளின் உடன் வேலையாட்களாக இருக்கும் சந்தோஷத்தைக் கொண்டிருப்போம். (1 கொரிந்தியர் 3:9) யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துகிறோம் என்று அறிந்திருப்பதன் திருப்தியைக் கொண்டிருப்போம். (நீதிமொழிகள் 27:11) மேலும் நாம் அவருக்கு உண்மையாக நிலைத்திருக்கும் வரையில் யெகோவா நம்மை மறக்கவோ, கைவிடவோ மாட்டார் என்ற உறுதியளிப்பை நாம் கொண்டிருக்கிறோம்.—எபிரெயர் 6:10-12.
[அடிக்குறிப்புகள்]
a கிரேக்கில், “தடைக்கல்” (σκάνδαλον, ஸ்கேன்டலான்) என்பது ஆரம்பத்தில் “சூழ்ச்சிப் பொறியில் இரை பொருத்தப்பட்டிருக்கும் பாகத்தின் பெயராக இருப்பதால், அந்தப் பொறி அல்லது கண்ணியாகவே” இருந்தது.—வைன்ஸ் எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷனரி ஆப் ஓல்ட் அன்ட் நியூ டெஸ்டமன்ட் வர்ட்ஸ்.
உங்கள் கருத்துக்கள் யாவை?
◻ ஒரு சுய-தியாகபோக்கிற்கு பேதுரு எவ்வாறு தன்னை அறியாமலேயே ஒரு தடைக்கல்லாக ஆனார்?
◻ தன்னைத்தானே சொந்தம் கைவிடுதல் என்றால் என்ன?
◻ ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு தன் வாதனையின் கழுமரத்தை எடுத்துக்கொண்டுச் செல்கிறார்?
◻ நாம் எவ்வாறு ஒரு சுய-தியாக ஆவியை வளர்த்துக் காத்துக்கொள்ள முடியும்?
◻ சுய-தியாக ஆவிக்குப் பின்னாலிருக்கும் உந்துவிக்கும் சக்தி எது?
[பக்கம் 10-ன் படங்கள்]
உங்களையே சொந்தம் கைவிட்டு, உங்கள் வாதனையின் கழுமரத்தை எடுத்துக்கொண்டு, தொடர்ந்து இயேசுவைப் பின்பற்ற நீங்கள் மனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?