தொடர்ந்து இயேசுவை பின்பற்றுங்கள்
1 ஒருமுறை இயேசு இவ்வாறு சொன்னார்: “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் துறந்து, தன் வாதனையின் கழுமரத்தை சுமந்துகொண்டு என்னைத் தொடர்ந்து பின்பற்றட்டும்.” (மத். 16:24, NW) நிச்சயமாகவே, இயேசுவின் வார்த்தைகளுக்கு நாம் சாதகமாக பிரதிபலிக்க விரும்புகிறோம். அவரது அழைப்பின் ஒவ்வொரு சொற்றொடரிலும் என்ன உட்பட்டிருக்கிறது என்பதை நாம் ஆராய்வோமாக.
2 “தன்னைத்தான் துறந்து”: நம் வாழ்க்கையை யெகோவாவிற்கு ஒப்புக்கொடுக்கும்போது நம்மைநாமே துறக்கிறோம். “துறந்து” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையின் அடிப்படை அர்த்தமானது “வேண்டாம் என சொல்லுதல்” ஆகும். அப்படியென்றால் நமது சொந்த இலட்சியங்கள், ஆசைகள், சுகபோகங்கள், தன்னல இன்பங்கள் ஆகியவற்றை நாம் மனமுவந்து விட்டுக்கொடுத்து, நித்திய காலமெல்லாம் யெகோவாவைப் பிரியப்படுத்த தீர்மானமாயிருப்பதை இது அர்த்தப்படுத்துகிறது.—ரோ. 14:8; 15:3.
3 “தன் வாதனையின் கழுமரத்தை சுமந்துகொண்டு”: ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கை, யெகோவாவிற்கான சுயதியாக சேவையின் கழுமரத்தை சுமந்துகொண்டு செல்லும் ஒரு வாழ்க்கையாகும். சுயதியாக ஆவியை காண்பிப்பதற்கான ஒரு வழி ஊழியத்தில் பிரயாசப்படுவதாகும். இந்த வருடத்தில் இதுவரை அநேக பிரஸ்தாபிகள் துணைப் பயனியர் ஊழியம் செய்து மகிழ்ச்சியைக் கண்டிருக்கின்றனர். ஒருவேளை நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கலாம், இதற்காக நீங்கள் செய்யும் தியாகங்களுக்குத்தக்க ஆசீர்வாதங்களைக் காட்டிலும் அதிகத்தை பெறுவதை நீங்கள் உறுதியாக சொல்வீர்கள். துணைப் பயனியர்களாக சேவிக்க இயலாதவர்கள் சபை பிரஸ்தாபிகளாக பிரசங்க ஊழியத்தில் அதிக நேரத்தை செலவிட அடிக்கடி ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதை மனதில் கொண்டவர்களாய், சில சபைகள் வெளி ஊழியத்திற்கான தங்கள் கூட்டங்களின் நேரத்தை முன்பிருந்ததற்கு ஒருசில நிமிடங்கள் முன்னதாக மாற்றிவைக்கின்றன. முக்கியமாக கோடைக்காலத்தில், சீக்கிரமாய் ஆரம்பித்து, அதிக நேரம் ஊழியம் செய்வதை அநேக பிரஸ்தாபிகள் போற்றுகின்றனர். சிலர் ‘இன்னும் ஒரேவொரு வீடு’ அல்லது ‘இன்னும் கொஞ்ச நேரம்’ ஊழியம் செய்ய தீர்மானித்தபோது அருமையான பலன்களைப் பெற்றிருக்கின்றனர்.
4 சுயதியாக ஆவியைக் காண்பிப்பதற்கான மற்றொரு வழி, தனிப்பட்ட இலக்குகளை வைப்பதாகும். கவனமாக திட்டமிடுவதன் மூலமாகவும் தங்களது அட்டவணையை மாற்றியமைப்பதன் மூலமாகவும் சிலர் ஒழுங்கான பயனியர் ஊழியத்தை ஆரம்பித்திருக்கின்றனர். மற்றும் சிலர், தங்கள் வேலைகளையெல்லாம் சரிசெய்துகொண்டு பெத்தேல் ஊழியத்திற்கோ மிஷினரி ஊழியத்திற்கோ தயாராகியிருக்கின்றனர். ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு அதிக தேவையிருக்கும் பகுதிக்கு சிலர் இடமாற்றம் செய்திருக்கின்றனர்.
5 “என்னைத் தொடர்ந்து பின்பற்றட்டும்”: இயேசுவின் சீஷர்கள் அநேக சோதனைகளை எதிர்ப்பட்டபோதிலும், ஊழியத்தில் இயேசு காண்பித்த வைராக்கியத்தாலும் சகிப்புத்தன்மையாலும் உற்சாகமூட்டப்பட்டனர். (யோவான் 4:34) அவர் அவர்களோடிருந்ததாலும், அவர் சொன்ன செய்தியாலும் சீஷர்கள் புத்துயிரூட்டப்பட்டனர். அதனால்தான் அவரைப் பின்பற்றியவர்கள் உண்மையான சந்தோஷத்தால் பிரகாசித்தனர். (மத். 11:29) அதேபோல் நாமும் அதிமுக்கியமான ராஜ்ய பிரசங்கிப்பு வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் சகித்திருப்பதற்கு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவோமாக.
6 நாம் அனைவரும் சுயதியாக ஆவியை வளர்த்துக்கொள்வதன் மூலம், தம்மைத் தொடர்ந்து பின்பற்றும்படி இயேசு விடுத்திருக்கும் அழைப்பிற்கு சாதகமாக பிரதிபலிப்போமாக. அவ்வாறு செய்யும்போது, இப்போதே நாம் அதிக சந்தோஷத்தைப் பெறுவோம், எதிர்காலத்தில் இன்னுமதிக ஆசீர்வாதங்களுக்காக எதிர்நோக்கி இருக்கலாம்.