ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
அவள் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கண்டடைந்தாள்
இயேசு தம்முடைய ஆடுகளை அறிந்திருப்பதாகக் கூறுகிறார். (யோவான் 10:14) ஓர் ஆள் நல்ல இருதயத்தையும் சமாதானத்திற்கும் நீதிக்குமான அன்பையும் கொண்டிருந்தால், அப்படிப்பட்ட ஒருவர் இயேசுவைப் பின்பற்றுபவர்களிடமாக இழுக்கப்படுவார். அத்தகைய ஒருவர், பெல்ஜியத்திலுள்ள ஒரு பெண்ணைப்போலவே வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கண்டடைவார். இதுவே அவளுடைய கதை:
“யெகோவாவின் சாட்சிகள் என்னுடைய கதவைத் தட்டியபோது நான் மிகவும் மனச்சோர்வுற்றவளாகவும் என் வாழ்க்கையை முடித்துக்கொள்வதைக்குறித்துச் சிந்தித்துக்கொண்டும் இருந்தேன். இந்த நோயுற்ற உலகின் பிரச்னைகளின் தீர்வைக் குறித்து அவர்கள் கூறியதை நான் விரும்பினேன்; ஆனால் அதில் கடவுள் ஒரு பங்கைக் கொண்டிருக்கிறார் என்ற கருத்து எனக்குப் பிடிக்கவில்லை. சர்ச்சில் நான் பார்த்த மாய்மாலத்தை வெறுத்ததால், எட்டு வருடங்களுக்கு முன்பு அங்கு செல்வதை நான் நிறுத்திவிட்டிருந்தேன். ஆனாலும் சாட்சிகளிடம் சத்தியத்தின் தொனி இருப்பதைக் கண்டறிந்து, கடைசியில், கடவுளின்றி வாழ்வது கடினமானது என்பதையும் உணர்ந்தேன்.
“கவலைக்குரியவிதமாக, ஒருசில சந்திப்புகளுக்குப்பின், சாட்சிகளோடுள்ள தொடர்பு இழக்கப்பட்டது. நான் துயரமிக்கவளாக உணர்ந்தேன். ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட்டுகளைப் புகைத்தேன்; போதைப்பொருட்களைப் பயன்படுத்தக்கூட துவங்கினேன். இறந்துபோன என்னுடைய தாத்தாவுடன் தொடர்புகொள்ளும்படியாக, ஆவுயுலகக் காரியங்களிலும் விளையாட ஆரம்பித்தேன். அதன் விளைவாக, இரவில் நான் தனியாக இருக்கும்போது பேய்த்தாக்குதல்களை அனுபவிப்பது எவ்வளவு பயமாக இருந்தது! இது மாதக்கணக்கில் நீடித்தது. ஒவ்வொரு மாலையும் நான் தனியாக இருப்பதை நினைக்கையில் திகிலடைந்தேன்.
“பின்னர், ஒரு நாள், நான் எப்போதும் செல்லும் பாதையைவிட்டு, வேறு வழியாக உலாவச் சென்றேன்; அப்போது ஒரு பெரிய கட்டிடம் கட்டுமிடத்திற்கு வந்தேன். ஆச்சரியத்திற்குரியவிதமாக அங்கு ஒரு பெரிய கூட்டத்தைப் பார்த்தேன். அருகே வந்தபோது, ராஜ்ய மன்றத்தைக் கட்டும் பணியில் யெகோவாவின் சாட்சிகள் அங்கிருப்பதைக் கண்டேன். சாட்சிகள் என்னுடைய வீட்டிற்கு வந்த நேரங்கள் நினைவிற்கு வந்தது; இந்த மக்களைப் போலவே முழு உலகமும் வாழ முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் யோசித்துப் பார்த்தேன்.
“என்னுடைய வீட்டிற்குச் சாட்சிகள் திரும்பவும் வரவேண்டும் என்று நான் உண்மையில் விரும்பினேன்; ஆகவே அந்த மன்றத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் சிலருடன் பேசினேன். நான் கடவுளிடம் ஜெபித்தேன்; பத்து நாட்கள் கழித்து, என்னை முதலில் சந்தித்த அந்த மனிதன் என் கதவருகே வந்தார். பைபிள் படிப்பைத் தொடரும்படி அவர் ஆலோசனை கூறினார்; நான் சந்தோஷமாக ஒத்துக்கொண்டேன். ராஜ்ய மன்றத்திலுள்ள கூட்டங்களுக்கு வரும்படியாக அவர் உடனடியாக அழைப்பு விடுத்தார். நான் ஏற்றுக்கொண்டேன். அத்தகைய ஒரு காட்சியை நான் ஒருபோதும் கண்டதில்லை! ஒருவரையொருவர் நேசித்து, மகிழ்ச்சியாக இருக்கும் மக்களை நான் பல காலங்களாகத் தேடிக்கொண்டிருந்தேன். கடைசியில், அவர்கள் இங்கே இருக்கிறார்கள்!
“அதன்பிறகு, நான் எல்லா கூட்டங்களுக்கும் சென்றேன். சுமார் மூன்று வாரங்களுக்குப்பின், நான் புகைக்கும் கெட்ட பழக்கத்தை நிறுத்தினேன். சோதிடம் சம்பந்தப்பட்ட என்னுடைய புத்தகங்களையும், சாத்தானிய இசையை உடைய என்னுடைய ரெக்கார்டுகளையும் தூக்கியெறிந்துவிட்டேன்; பேய்கள் என்மீது கொண்டிருந்த பிடியை இழப்பதை என்னால் உணர முடிந்தது. என்னுடைய வாழ்க்கையை யெகோவாவின் பைபிள் தராதரங்களின்படி ஒழுங்கமைத்துக்கொண்டேன்; பின்னர் மூன்று மாதங்களுக்குப்பின் நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆரம்பித்தேன். ஆறு மாதங்களுக்குப்பின் முழுக்காட்டப்பட்டேன். என்னுடைய முழுக்காட்டுதலுக்கு இரண்டு நாட்களுக்குப்பின், நான் துணைப் பயனியர் செய்யத் துவங்கினேன்.
“யெகோவா எனக்குச் செய்திருக்கும் எல்லா நல்ல காரியங்களுக்காகவும் நான் அவருக்கு நன்றி சொல்லுகிறேன். கடைசியாக, என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. ஆம், யெகோவாவின் பெயர் ஒரு பலத்த துருகம்; நான் அதனுள் அடைக்கலத்தையும் பாதுகாப்பையும் கண்டேன். (நீதிமொழிகள் 18:10) சங்கீதம் 84:10-ஐ எழுதியபோது சங்கீதக்காரன் உணர்ந்தவிதமாகவே நான் உண்மையில் உணருகிறேன்: ‘ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.’”
இந்தச் சாந்தமான இருதயமுள்ள பெண், வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கண்டடைந்தாள். அதேவிதமாகவே, ஒரு நல்ல இருதயத்துடன் யெகோவாவைத் தேடும் எவரும் கண்டடைய முடியும்.