தடையுத்தரவின்கீழ் இருக்கையில் பைபிள் பிரசுரங்களை அச்சடித்தல்
மால்கம் வேல் G. கூறியது
“பிள்ளைகள் (Children) புத்தகத்தை அச்சிடுங்கள்.” இரண்டாம் உலகப் போரின்போது, ஆகஸ்ட் 10, 1941-ல், அ.ஐ.மா.-களின் மிஸ்ஸெளரியிலுள்ள செயின்ட் லூயீயில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டதற்கு சிறிது காலத்திற்குப்பின், ஆஸ்திரேலியாவின் கிளையலுவலகக் கண்காணியிடமிருந்து இந்த ஆச்சரியமூட்டும் கட்டளையை நான் பெற்றேன். இந்தக் கட்டளை ஏன் ஆச்சரியமூட்டுவதாய் இருந்தது?
நம்முடைய பிரசங்க வேலை ஜனவரி 1941-ல் தடைசெய்யப்பட்டிருந்தது; ஆகவே குறைந்த அளவில் தொடர்ந்து அச்சடிப்பதுங்கூட ஒரு சவாலாக இருந்தது. மட்டுமன்றி, பிள்ளைகள் முழுவதும் வண்ணப்படங்களை உடைய ஒரு 384 பக்க புத்தகமாக இருந்தது. எங்களுடைய அச்சடிக்கும் இயந்திரத்தின் திறம் உயர்த்தப்படவேண்டியதாயும், காகிதத் தட்டுப்பாடும் இருந்தது; பணியாளர்கள் பவுண்ட் புத்தகங்களை உற்பத்தி செய்ய பயிற்றுவிக்கப்படாதவர்களாய் இருந்தனர்.
தடையுத்தரவின்கீழ் இருக்கையில் அச்சிடுவதில் நாங்கள் எவ்வாறு வெற்றியடைந்தோம் என்பதை விவரிக்கும் முன்னர், அச்சு இயக்குமுறைகளின் கண்காணியாக நான் ஆஸ்திரேலியா கிளையலுவலகத்தின் தொடர்பாக எவ்வாறு சேவிக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன்.
ஆரம்ப பின்னணி
விக்டோரியாவிலுள்ள பாலெரட் என்ற செழிப்பான நகரத்தில் என் தந்தை ஓர் அச்சுத் தொழிலைச் சொந்தமாகக் கொண்டிருந்தார்; அங்குதான் நான் 1914-ல் பிறந்தேன். ஆகையால், நான் அப்பாவின் அச்சாலையில் வேலை செய்வதன்மூலம் அச்சுத்தொழிலைக் கற்றுக்கொண்டேன். சர்ச்சின் பாடகர் குழுவில் பாடிக்கொண்டு சர்ச் மணிகளை அடித்துக்கொண்டு, சர்ச் ஆஃப் இங்லன்டின் நடவடிக்கைகளிலும் நான் ஈடுபட்டிருந்தேன். சன்டே ஸ்கூலில் போதிக்கும் எதிர்நோக்கும் எனக்கு இருந்தது; ஆனால் நான் இதை விரும்பவில்லை.
காரணம் என்னவென்றால், குறிப்பிட்ட சர்ச் போதனைகளைக்குறித்து எனக்குப் பலமான கேள்விகள் இருந்தன. இவை திரித்துவம், நரக அக்கினி, மனித ஆத்துமா அழியாமை ஆகியவற்றை உட்படுத்தின; ஒருவரும் திருப்தியளிக்கும் பதில்களைத் தரவில்லை. அவ்வப்போது, எங்கள் ஊழியர், யெகோவாவின் சாட்சிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட ஒரு சிறிய மதத் தொகுதியினரைப்பற்றி கோபத்துடன் பேசுவது எனக்குப் புதிராக இருந்தது. ஏன் 40,000 மக்களை உடைய ஒரு நகரத்தில் அப்படி ஒரு குறிப்பிடத்தக்கதாக இல்லாத தொகுதி அவ்வளவு அக்கறைக்குரியதாக இருக்கவேண்டும் என்று நான் யோசித்தேன்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, மாலை ஆராதனைக்குப்பின் நான் சர்ச்சுக்கு வெளியே நின்றுகொண்டிருக்கையில், அருகிலுள்ள மெதடிஸ்ட் சர்ச்சிலிருந்து ஒரு கூட்டமான பெண்கள் நடந்து சென்றனர். அவர்களில் ஒருத்தியிடம் நான் நட்பு கொள்ள துவங்கினேன். அவள் பெயர் லூஸி; காலப்போக்கில், அவளுடைய பெற்றோரைச் சந்திக்கும்படி என்னை அவளுடைய வீட்டிற்கு அழைத்தாள். அவளுடைய தாய், விரா க்ளோகன், யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தி என்பதை அறிந்ததும் என்னுடைய வியப்பை எண்ணி பாருங்கள். நாங்கள் ஊக்கமான பைபிள் கலந்தாலோசிப்புகளைக் கொண்டிருந்தோம்; மேலும் அவள் சொன்னது உண்மையிலே நியாயமானதாகத் தோன்றிற்று.
சிறிது காலத்தில், லூஸியும் நானும் மணந்துகொண்டோம், 1939-ன்போது விக்டோரியாவின் தலைநகரான மெல்போர்னில் வாழ்ந்து வந்தோம். லூஸி ஒரு யெகோவாவின் சாட்சியாகி இருந்தாலும், நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. எப்படியோ, அந்த வருடத்தின் செப்டம்பரில் இரண்டாம் உலக யுத்தம் ஏற்பட்டது; நான் வேத எழுத்துக்களில் கற்றுக்கொண்டிருந்தவற்றைக் கவனமாகச் சிந்தித்துப் பார்க்கத் துவங்கினேன். யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை ஜனவரி 1941-ல் தடைவிதிக்கப்பட்டது, நான் என் மனதில் ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு உண்மையில் உதவியது. நான் என் வாழ்க்கையை யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு, பின்னர் சீக்கிரத்தில் முழுக்காட்டப்பட்டேன்.
எங்களுடைய வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள்
அந்தச் சமயத்தில் நாங்கள் மெல்போர்னில் ஒரு வசதியான வாடகை வீட்டில் இருந்தோம். சீக்கிரத்தில், மற்ற பல சாட்சிகளுடன் இருக்கும்படியாக ஒரு வீட்டிற்குக் குடிபெயர்ந்துசெல்ல அழைக்கப்பட்டோம். எங்களுடைய படுக்கையறை சாமான்கள் தவிர மற்ற தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுவிட்டு, பயனியர் வீடு என்று அழைக்கப்பட்டதற்குச் சென்றோம். தொடர்ந்து ஓர் அச்சடிப்பாளராக வேலை செய்து, வீட்டை நடத்துவதற்குத் தேவையான செலவுகளை என்னால் கவனிக்க முடிந்தது. மற்ற கணவன்மாரும் அதையே செய்தனர். அதன் விளைவாக, எங்களுடைய மனைவிமார் முழுநேரமாகப் பிரசங்கவேலையில் ஈடுபட முடிந்தது; ஆண்களாகிய நாங்கள் மாலைவேளைகளிலும் வார இறுதிகளிலும் பிரசங்க வேலையிலும் கிறிஸ்தவக் கூட்டங்களிலும் அவர்களைச் சேர்ந்துகொண்டோம்.
அதற்குக் கொஞ்சகாலத்திற்குப்பின், உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளையலுவலகத்திலிருந்து சிட்னிக்கு வரும்படியாக என் மனைவியும் நானும் ஓர் அழைப்புக் கடிதத்தைப் பெற்றோம். எங்களுடைய படுக்கையறை சாமான்களை விற்று, எங்களுக்கிருந்த சில கடன்களை அடைத்துவிட்டோம்; ஆனால் சிட்னி செல்வதற்காக ரயில் பயண கட்டணத்திற்கு லூஸியின் நிச்சயதார்த்த மோதிரத்தை விற்கவேண்டியதாயிற்று!
போர்க்கால கட்டுப்பாடுகள் மற்றும் சமீப தடையுத்தரவு சட்டம் காரணமாக பைபிள்களோ பைபிள் பிரசுரங்களோ கடல்கடந்து இறக்குமதி செய்யப்படக்கூடாததாய் இருந்தது. இந்தக் காரணத்திற்காக, ஆவிக்குரிய உணவைத் தொடர்ந்து பெறும்படியாக ஆஸ்திரேலியக் கிளை ஒரு தலைமறைவான அச்சு இயக்கத்தை நிறுவ தீர்மானித்தது; இந்த வேலையைக் கண்காணிக்கும்படி நான் அழைக்கப்பட்டேன். ஆஸ்திரேலியக் கிளை அச்சாலையில் சுமார் 60 வருடங்கள் சேவித்த, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் கிப் என்பவருடன் சேர்ந்து வேலைசெய்யும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது.a அப்போதுதான் நான் இந்தக் கட்டளையைப் பெற்றேன்: “பிள்ளைகள் (Children) புத்தகத்தை அச்சிடுங்கள்.”
அச்சு இயந்திரத்தை மறுபடியும் இயங்கச்செய்தல்
அந்தச் சம்பவங்கள் நிறைந்த போர் வருடங்களில், பல கிளர்ச்சியூட்டும், சிலநேரங்கள் மயிர்சிலிர்க்கவைக்கும் அனுபவங்களை நாங்கள் கொண்டிருந்தோம். உதாரணமாக, அச்சு நடிவடிக்கைகளைத் துவங்குவதற்கு எங்களுக்கு இயந்திரம் தேவைப்பட்டது. போருக்கு முன்னான வருடங்களில் குறைந்தளவு அச்சிடுவதற்காக நாங்கள் பயன்படுத்தியது அரசாங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது; இப்போது சங்கத்தின் சிறிய அச்சாலையும் பூட்டி, காக்கப்பட்டது. தலைமறைவாக அச்சடிக்கும் இடங்களுக்கு எப்படி இயந்திரத்தைக் கொண்டுச்செல்ல முடியும்?
ஆயுதம் தாங்கிய காவலர்கள், ஆள்முறையை மாற்றி, சங்கத்தின் சொத்தை ஒரு நாளின் 24 மணிநேரமும் காவல் காத்தனர். இருப்பினும், பின் சுவர்களில் ஒன்று அரிதாக பயன்படுத்தப்பட்ட ஒரு ரயில்பாதையின் எல்லையோரமாக அமைந்திருந்தது. ஆகவே, இரவில், எசேக்கியேல் 12:5-7-லுள்ள பழையகாரியங்களை நினைப்பூட்டும் முறைகளைப் பயன்படுத்தி, சில துணிந்த பெத்தேல் ஊழியர்கள் சில செங்கல் அடுக்குகளை அகற்றிவிட்டு சுவர் வழியாக நுழைந்தனர். உள்ளே வந்தவுடன், கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக அந்தத் தனி செங்கற்களை சுவரில் திரும்ப வைத்தனர். சுமார் இரண்டு வாரத்திற்கு மேற்பட்ட இந்த இரவுநேர தாக்குதல்கள்மூலம், அவர்கள் ஒரு சிறிய அச்சு இயந்திரத்தையும், ஒரு வரி உருக்கச்சு பொறியையும், ஒருசில மற்ற இயந்திரங்களையும் கவனமாக அக்கு அக்காகக் கழற்றினர். பின்னர் அந்தப் பாகங்களை, காவலரின் பார்வையின்கீழ் இருந்துகொண்டே அமைதியாக வெளியே கடத்தினர்!
காலப்போக்கில், மற்ற மூலங்களிலிருந்து கூடுதலான இயந்திரத்தைப் பெற்றோம்; சீக்கிரத்தில் சிட்னியின் பல்வேறு இடங்களில் அச்சு இயக்கங்கள் தலைமறைவாக முழுமூச்சுடன் செயல்பட்டன. இவ்வாறு, பிள்ளைகள் புத்தகத்தை மட்டுமல்லாமல், முழு அளவு புத்தகங்களாகிய புதிய உலகம், “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்,” ராஜ்யம் அருகாமையில் இருக்கிறது, இன்னும் 1942, 1943, 1944, மற்றும் 1945-ன் யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகங்கள் ஆகியவற்றையும் அச்சிட்டு, கட்டி அமைத்தோம். இதோடுகூட, அந்தப் போர் வருடங்களின் தடையுத்தரவு காலத்தில், ஆஸ்திரேலியா முழுவதும் தி உவாட்ச்டவர்-ன் ஒரு வெளியீடுகூட தவறவில்லை. இது யெகோவாவின் கை ஒருபோதும் குறுகியதாக இல்லை என்று எங்களுக்கு மிகவும் தனிப்பட்ட விதத்தில் உறுதியளித்தது.—ஏசாயா 59:1.
எதிர்பாராத சந்திப்புகளைச் சமாளித்தல்
போர்க்கால கடுமையான தணிக்கையின்போது, வியாபாரரீதியிலான அச்சாலைகளில் என்ன அச்சடிக்கப்படுகிறது என்பதைப் பரிசோதிப்பதற்காக அடிக்கடி அரசாங்க அதிகாரிகள் எதிர்பாராத விதத்தில் சந்திப்புகளைச் செய்தனர். ஆகவே நம்முடைய இரகசிய அச்சாலைகளில் ஒன்றில், வரவேற்பாளருக்கு எளிதில் எட்டக்கூடிய ஓர் எச்சரிப்பு இயந்திரம், அதாவது தரையில் ஒரு பட்டன், பொருத்தப்பட்டிருந்தது. அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத ஒருவர் அல்லது ஒரு சோதனையாளர் என்று அவள் சந்தேகிக்கும் ஒருவர் எப்போதெல்லாம் மாடிக்கு வந்தாரோ, அவள் அந்தப் பட்டனை அழுத்திவிடுவாள்.
அந்தப் பட்டன் அழுத்தப்பட்டதும், சகோதரர்கள் எல்லா திசைகளிலிருந்தும் ஜன்னல் வழியாகச் சென்று தப்பித்துக்கொள்வது ஒரு கண்கொள்ளா காட்சியாகும்! வேலையாட்களாகப் பதிவுசெய்யப்பட்ட பணியாளர்கள், அப்போது வேலை செய்யப்பட்டுவரும் உவாட்ச்டவர் பத்திரிகைகள் அல்லது மற்ற பைபிள் பிரசுரங்களின் அச்சடிக்கப்பட்ட தாள்களைச் சீக்கிரமாக மறைத்து வைப்பதற்காக அங்கு இருப்பர். இதைச் செய்வதற்கு, அவர்கள் வியாபாரரீதியிலான வாடிக்கையாளர்களுக்கு தயாரிக்கும் மற்ற பிரசுரங்களின் அதே அளவாலான அச்சடிக்கப்பட்ட தாள்களைப் பயன்படுத்துவர்.
அப்படிப்பட்ட ஒரு சந்திப்பின்போது, இன்னும் பெரிய அளவு தாள்களாக வேடிக்கை புத்தகங்களுக்காகத் (comic books) தயாரிக்கப்பட்ட தாள்களின்மீது இரண்டு சோதனையாளர்கள் உட்கார்ந்தனர்; ஆனால் அவற்றிற்கு அடியில், முந்தின இரவு அச்சடிக்கப்பட்ட உவாட்ச்டவர் பத்திரிகைகளின் தாள்கள் இருந்தன. நகரத்தின் மற்றொரு பாகத்திலுள்ள ஓர் அச்சாலையில், நாங்கள் பகல்நேரத்தில் வியாபாரரீதியிலான அச்சடிப்பையும் இரவுநேரங்களிலும் வார இறுதிகளிலும் உவாட்ச்டவர் பிரசுரங்களை அச்சடித்தும் வந்தோம்.
எங்களுடைய காகித தேவைகளைப் பூர்த்தி செய்தல்
அச்சடிப்பதற்காகக் காகிதத்தைப் பெறுவது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது. இருந்தாலும், போர்க்காலத்தில் குறைந்த வியாபாரத்தின் காரணமாக, அவர்களுடைய முழு காகித பங்கும் தேவைப்படாத சில பெரிய அச்சாலைகள், தங்களுக்கு அதிகமாக இருந்ததை விற்பதற்கு மனமுள்ளவர்களாய் இருந்தனர்—நிச்சயமாக, அதிகமான விலைக்குத்தான். ஒரு முறை, நாங்கள் வேறொரு மூலத்திலிருந்து காகிதத்தைப் பெற்றோம்.
ஆஸ்திரேலியாவிற்கு வரும் ஒரு சரக்குக் கப்பல், பழுப்பு நிற காகிதத்தாலான ஒரு பெரிய சரக்குத் தொகுதியைக் கொண்டிருந்தது; ஆனால் கடலில் கப்பல் சேதமடைந்து, காகிதத்தின் பெரும்பகுதியில் தண்ணீர் கசிந்தது. அந்த முழு சரக்குத் தொகுதியும் ஏலத்திற்கு விடப்பட்டது; ஆச்சரியத்திற்குரியவிதத்தில் நாங்கள் மட்டுமே விலை கோருபவர்களாய் இருந்தோம். இது மிகக் குறைவான விலைக்கு அதை வாங்க உதவியது. நாங்கள் அந்தக் காகிதத்தை வெயிலில் உலரவைத்து, அவ்வாறு அதில் பெரும்பகுதியை அழியாமல் மீட்டு, பின்னர் எங்களுடைய அச்சு ஆலைக்கு தகுந்த அளவு தாள்களாக அதைக் கத்தரித்தோம்.
அந்தப் பழுப்பு நிற காகிதத்தை நாங்கள் எப்படிப் பயன்படுத்துவோம்? வேடிக்கை புத்தகங்களை வாசிப்பவர்கள் நிறமடைந்த காகிதத்திலும் தங்கள் வேடிக்கைகளை அனுபவித்துக் களிப்பர் என்று நாங்கள் சரியாகவே கணித்தோம். இவ்வாறு, வேடிக்கை புத்தகங்களுக்காக எங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வெள்ளை காகிதத்தை தி உவாட்ச்டவர், இன்னும் சங்கத்தின் மற்ற பிரசுரங்களுக்குப் பயன்படுத்தினோம்.
பெண்களின் முக்கியமான பங்கு
போர் வருடங்களின்போது, ஆஸ்திரேலியாவிலுள்ள அநேக கிறிஸ்தவப் பெண்கள் புத்தகம் கட்டும் முறைகளைக் கற்றுக்கொண்டனர். மிகவும் உஷ்ணமாக இருந்த ஒரு கோடைக்கால மதியம், சிட்னியின் ஒரு புறநகர் பகுதியிலுள்ள சந்தில் நாங்கள் வாடகைக்குக் கொண்டிருந்த வண்டிக் கொட்டில் ஒன்றில் அவர்களில் சிலர் தனியாக வேலை செய்து கொண்டிருந்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக, அவர்கள் ஒவ்வொரு ஜன்னலையும் கதவையும் அடைத்து வைத்திருந்தனர். பசை பானைகள், சூடான, நாற்றமெடுக்கும் புகைகளை வெளியேற்றிக்கொண்டிருந்தன; வெப்பம் தாங்க முடியாததாக இருந்தது. ஆகவே அவர்கள் தங்கள் உள்ளாடைகளை மட்டும் அணிந்துகொண்டிருந்தனர்.
திடீரென்று, கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. வந்திருப்பது யார் என்று அந்தக் கிறிஸ்தவ சகோதரிகள் கேட்டனர்; அரசாங்க தொழிலாளர் அதிகாரி ஒருவர் பதிலளித்தார். தொழிலாளர் தேவைப்படும் எந்தப் பகுதிக்கும் ஆட்களை அனுப்பக்கூடிய போர்க்கால அதிகாரங்களைக் கொண்டிருந்த ஒரு துறையிலிருந்து அவர் வந்திருந்தார். உஷ்ணத்தின் காரணமாக அவர்கள் தங்கள் உள்ளாடைகளில் இருந்துகொண்டு வேலைசெய்வதால் அப்போதுதானே அவரை உள்ளே வரவிட முடியாது என்று அவர்கள் சத்தமாகப் பதிலளித்தனர்.
அந்த அதிகாரி சற்று நேரம் மெளனமாக இருந்தார்; பின்னர் அதே பகுதியில், தான் மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று உரக்க கூறினார். தன்னுடைய பரிசோதனையைச் செய்வதற்கு அடுத்தநாள் திரும்ப வருவதாகச் சொன்னார். உடனடியாக, இந்தக் கிறிஸ்தவப் பெண்கள் எங்களுக்குப் ஃபோன் செய்தார்கள்; நாங்கள் ஒரு டிரக்கை அனுப்பி அப்போது எவற்றிலெல்லாம் புத்தகக் கட்டுவேலை நடந்துகொண்டிருந்ததோ அவற்றையெல்லாம் எடுத்து, மற்றொரு இடத்துக்கு மாற்றினோம்.
எங்களுடைய தலைமறைவான அச்சு வேலையில் ஈடுபட்டிருந்தவர்களில் அநேகருக்கு அச்சுத் தொழிலில் எந்தக் கடந்தகால அனுபவமும் இருக்கவில்லை; ஆகவே அங்கு நிறைவேற்றப்பட்ட யாவற்றிற்கும் தேவையான உதவியையும் வழிநடத்தலையும் யெகோவாவின் ஆவியே கொடுத்தது என்பதில் என்னுடைய மனதில் எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை. அந்தப் புத்தக கட்டுமிடத்தில் வேலை செய்த என் மனைவி லூஸிக்கும் எனக்கும், இவை எல்லாவற்றின் பாகமாகவும் இருப்பது ஒரு பெரிய சிலாக்கியமாக இருந்தது.
அந்தச் சோதனையான காலங்களில் நம்முடைய வேலை எவ்வாறு நிர்வகிக்கப்பட்டது? சிட்னிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வெளியே இருக்கும் நகரத்தில் வாழும்படியாக, யெகோவாவின் சாட்சிகளுடைய தற்காலிக கிளையலுவலக கண்காணி அரசாங்கத்திடமிருந்து ஒரு தடை ஆணையைப் பெற்றார். அந்த ஆணை நகரத்தின் மையத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்துக்கு வெளியே செல்வதற்குத் தடையுத்தரவிட்டது. ஒரு காருக்கு ஒரு மாதத்திற்கு நான்கு லிட்டர் பெட்ரோல் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் சகோதரர்கள், வாயு உற்பத்தியாக்கி என்ற திறம்மிக்க ஒரு சாதனத்தை உண்டாக்கினர்—காரின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்ட, சுமார் அரை டன் எடையுள்ள நீள் உருளை வடிவான உலோகத்தகட்டாலான ஒரு கொள்கலம் அது. இதில் கரி எரிக்கப்பட்டு, எரிபொருளாகிய கார்பன் மோனாக்சைட் உற்பத்தியாக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரத்திலும் பல இரவுகள், அந்தக் கண்காணியை, அவர் கட்டுப்படுத்திவைக்கப்பட்டிருக்கும் நகரத்திற்கு அருகே உள்ள ஒரு காய்ந்த ஓடையில் சந்திக்கும்படி, மற்ற பொறுப்புள்ள சகோதரர்களும் நானும் இதில் பயணப்பட்டு வருவோம். இவ்வாறு, வாயு உற்பத்தியாக்கிக்கு திரும்பவும் எரிபொருளூட்டி, மீண்டுமாக விடியற்காலையில் சிட்னிக்கு ஓட்டிச்செல்லுமுன் நாங்கள் அநேகக் காரியங்களை கலாந்தாலோசிக்க முடிந்தது.
முடிவில், யெகோவாவின் சாட்சிகள் மீதான தடையுத்தரவு ஆஸ்திரேலியாவின் உச்ச நீதி மன்றத்திற்குமுன் கொண்டுவரப்பட்டது. அந்தத் தடையுத்தரவு, “கொடுங்கோன்மையான, ஏறுமாறான, அடக்கியாள்கிற ஒன்று” என்று அந்த நீதிபதி அறிவித்து, எந்த ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சி நடவடிக்கை குற்றச்சாட்டுகளிலிருந்தும் யெகோவாவின் சாட்சிகளை முழுமையாக விடுவிக்கும்படி அறிவித்தார். முழு உச்ச நீதிமன்றமும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தது; ஆகையால் நம்முடைய சட்டப்பூர்வமான ராஜ்ய செயல்களைத் தொடர்வதற்குத் தலைமறைவாக இல்லாமல் மேலெழும்பி செயல்பட முடிந்தது.
மேலுமான நியமனங்களும் ஆசீர்வாதங்களும்
நம்முடைய தலைமறைவான அச்சு இயக்கங்களில் வேலை செய்திருந்த அநேகர் போருக்குப் பின்னர் பயனியர் ஊழியத்தில் நுழைந்தனர். பின்னால், அவர்களில் சிலர் நியூ யார்க்கிலுள்ள உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளிக்குச் சென்றனர். லூஸிக்கும் எனக்கும் மனதில் அதே இலக்குதான் இருந்தது; ஆனால் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது; நான் திரும்பவும் அச்சுத் தொழிலுக்குச் செல்ல தீர்மானித்தேன். எப்போதும் ராஜ்ய அக்கறைகளை முதலில் வைப்பதற்கு யெகோவா எங்களுக்கு உதவும்படி நாங்கள் ஜெபித்தோம்; அவரும் உதவியிருக்கிறார். பின்வரும் வழியில் நான் மற்றொரு ஊழிய நியமிப்பில் ஈடுபட்டேன்.
இப்பொழுது நியூ யார்க்கிலுள்ள புரூக்லினில், யெகோவாவின் சாட்சிகளின் நிர்வாகக் குழுவின் அங்கத்தினராக சேவிக்கும் லாயிட் பேரியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்றேன். அந்தச் சமயத்தில் அவர் சிட்னியில் பயணக்கண்காணியாக இருந்தார். அடுத்த அசெம்பிளியின் தேதியை நான் அறிந்திருந்தேனா என்று கேட்டார். நான் அறிந்திருந்ததாகப் பதிலளித்தபோது அவர் சொன்னார்: “நீங்கள் உணவு ஏற்பாடுகளைக் கவனித்துக்கொள்ளும்படி நாங்கள் விரும்புகிறோம்.”
சற்று நேரத்திற்கு ஆச்சரியமுற்றவனாய், நான் தாழ்வான குரலில் சொன்னேன்: “ஆனால் நான் அதுபோன்ற எதையும் என் வாழ்க்கையில் செய்ததில்லை.”
ஓரளவு குறும்புடன் அவர் பதிலளித்தார், “சகோதரரே, நீங்கள் அதைக் கற்றுக்கொள்வதற்கு இதுவே பொருத்தமான நேரம்!” நானும் கற்றுக்கொண்டேன், 40 வருடங்களுக்கும் மேலாக, பெரிய மாநாடுகளில்கூட, உணவு சேவையைக் கண்காணிக்கும் சிலாக்கியத்தைத் தொடர்ந்து பெற்றேன்.
வருடங்களினூடே, எங்களுடைய வியாபார அச்சு நிறுவனம் விரிவடைந்தது; இது கடல்கடந்து பல நாடுகளுக்குத் தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களைத் தேவைப்படுத்தியது. நியூ யார்க் நகரில் அல்லது ஐக்கிய மாகாணங்களில் எங்காவது நடக்கும் சர்வதேச மாநாட்டுச் சமயத்தில் இந்தப் பயணங்கள் அமையும்படி நான் திட்டமைத்துக்கொண்டேன். மாநாட்டின் பல்வேறு துறைகளில், குறிப்பாக, உணவு சேவையைக் கண்காணிப்பு செய்பவர்களிடம் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பை இது எனக்குத் தந்தது. இவ்வாறு, திரும்ப ஆஸ்திரேலியாவில், மாநாட்டுத் தேவைகளை நல்ல முறையில் கவனிக்க முடிந்தது.
எங்களுக்கு வயதாகிக்கொண்டே போகையில், நாங்கள் இன்னும் சற்று பின்னர் பிறந்திருந்தால் அதிகத்தை நிறைவேற்றியிருக்க முடியுமோ என்று லூஸியும் நானும் அவ்வப்போது சிந்திப்பது உண்டு. மறுபட்சத்தில், நாங்கள் முறையே 1916-லும் 1914-லும் பிறந்ததால், பைபிள் தீர்க்கதரிசனங்கள் எங்கள் கண்கள் முன்பாகப் படிப்படியாக நிறைவேறுவதைக் கண்டிருப்பதை ஒரு மகத்தான சிலாக்கியமாகக் கருதுகிறோம். மேலும், அநேக மக்களுடன் படித்து அவர்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள உதவிசெய்து, இப்போது அவர்கள் முழுக்காட்டப்பட்ட ஊழியராக சேவிப்பதைப் பார்க்கும் ஆசீர்வாதத்தை அடைந்ததற்காக நாங்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லுகிறோம். எப்பொழுதும் அவரைப் பிரபஞ்சத்தின் மகா உன்னத பேரரசராக ஏற்று, நித்தியகாலமாய் அவரைத் தொடர்ந்து சேவிக்க வேண்டும் என்பதே எங்களுடைய ஜெபமாக இருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a தி உவாட்ச்டவர், செப்டம்பர் 15, 1978, பக்கங்கள் 24-7-ஐ பாருங்கள்.
[பக்கம் 29-ன் படங்கள்]
ஸ்டிராத்ஃபீல்ட், பெத்தேலிலுள்ள அச்சு நிறுவனம், 1929-73
பின்பக்க சுவர் வழியாக அச்சாலையிலிருந்து எடுக்கப்பட்ட அச்சியந்திரங்களில் ஒன்றின் அருகே ஜார்ஜ் கிப் நிற்கிறார்