அன்புக்கும் விசுவாசத்துக்கும் கீழ்ப்படிதலுக்கும் ஓர் அத்தாட்சி
நியு யார்க், உவால்கில்லில் மே 16, 2005 காலை வேளையில், குளுகுளுவென தென்றல் வீச, கதிரவனின் முகமலர்ச்சியில் இதமாக இருந்தது உவாட்ச்டவர் பண்ணை. சீராக கத்திரிக்கப்பட்ட பசும் புல்தரைகளும் மலர் மஞ்சம் பாவிய நிலப்பரப்புகளும் உதயத்திற்கு முன் உதிர்ந்த மழைத் துளியில் நனைந்து பொலிவுடன் காட்சியளித்தன. அங்குள்ள சிறுகுளத்தின் கரையோரத்தில், சலனமற்ற நீர்பரப்பில், தாயும் எட்டு சேய் வாத்துகளும் மென்மையாக துடுப்புப்போட்டு போய்க் கொண்டிருந்தன. இந்த அழகைக் கண்டு பார்வையாளர்கள் அசந்துபோனார்கள்! சாந்தம் தவழ்ந்த காலைப்பொழுதின் அமைதியைக் குலைக்க விரும்பாதது போல், அவர்கள் மெதுவாக பேசிக் கொண்டார்கள்.
யெகோவாவின் சாட்சிகளே இந்தப் பார்வையாளர்கள், அவர்கள் 48 நாடுகளிலிருந்து வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் இந்த இயற்கை காட்சியைக் கண்டுகளிப்பதற்கு வரவில்லை. பரந்த செங்கல் கட்டடத்திற்கு உள்ளே நடைபெறும் வேலையை பார்ப்பதிலேயே ஆர்வமாக இருந்தார்கள்; இது உவால்கில் பெத்தேல் வளாகத்தோடு மிகச் சமீபத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடமாகும். அந்தக் கட்டடத்திற்கு உள்ளே பார்த்தபோது, அவர்கள் மீண்டும் அசந்துபோனார்கள், ஆனால் அங்கு அவர்கள் கண்ட காட்சியோ அமைதலாகவும் இல்லை, சாந்தம் தவழ்வதாகவும் இல்லை.
சிக்கலான அமைப்புகளைக் கொண்ட மெஷின்களை பால்கனியிலிருந்து அந்தப் பார்வையாளர்கள் உற்று நோக்குகிறார்கள். ஆறு பெரிய கால்பந்தாட்ட களத்தைவிட பெரிய தரையை, பாலிஷ் செய்யப்பட்ட கான்கிரீட் தரையை, மாபெரும் ஐந்து பிரெஸ்கள் ஆக்கிரமித்திருந்தன. இங்குதான் பைபிள்கள், புத்தகங்கள், பத்திரிகைகள் அச்சிடப்படுகின்றன. 1,700 கிலோகிராம் எடையுள்ள பெரிய பேப்பர் ரோல்கள் ஒவ்வொன்றும் வேகமாக செல்லும் ‘டிரக் வீல்’களைப் போல் உருளுகின்றன. 23 கிலோமீட்டர் நீளமுடைய ஒவ்வொரு பேப்பர் ரோலும் இருபத்தைந்தே நிமிடத்தில் பிரெஸ்ஸில் நுழைந்து தீர்ந்துவிடுகிறது. அந்தச் சமயத்தில், ‘பிரஸ்’ பேப்பரில் அச்சிட்டு அவற்றை பத்திரிகைகளாக மடிப்பதற்கு வசதியாக குளிர வைத்துவிடுகிறது. பத்திரிகைகள், தலைக்கு மேலே இருக்கும் ‘கன்வேயர்’ மூலம் வேகமாக செல்கின்றன, பின்பு அவை அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு சபைகளுக்கு அனுப்ப தயார் செய்யப்படுகின்றன. மற்ற பிரெஸ்கள் புத்தகத்திற்குரிய பக்கங்களை அச்சடிப்பதில் ‘பிஸி’யாக இருக்கின்றன; இவையெல்லாம் ‘பைன்டரி’க்கு அனுப்பப்படும்வரை, தரையிலிருந்து கூரைவரை உயரமுடைய ‘ஸ்டோரேஜ்’ பகுதிக்கு மிக வேகமாக மாற்றப்படுகின்றன. இவையெல்லாம் கம்ப்யூட்டரால் மிகத் துல்லியமாக இயக்கப்படுகின்றன.
இப்பொழுது பார்வையாளர்கள் பிரெஸ் அறையைவிட்டு பைன்டரியைப் பார்வையிடச் செல்கிறார்கள். இங்குள்ள மெஷின்கள் ‘ஹார்டுகவர்’ புத்தகங்களையும் டீலக்ஸ் பைபிள்களையும் ஒரு நாளைக்கு 50,000 பிரதிகள் என்ற வீதத்தில் தயாரிக்கின்றன. புத்தகத்தின் பக்கங்கள் வரிசையாக அடுக்கப்பட்டு, பைன்டு செய்யப்பட்டு, ‘டிரிம்’ செய்யப்படுகின்றன. பிறகு அட்டைகள் இணைக்கப்படுகின்றன. இப்பொழுது இவை அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்படுகின்றன. அட்டைப் பெட்டிகளெல்லாம் தானாகவே ‘சீல்’ இடப்பட்டு, ‘லேபில்’ போடப்பட்டு, ‘பேலட்’களில் அடுக்கி வைக்கப்படுகின்றன. அதோடு, ‘ஸாஃப்ட் கவர் புக் லைன்’ ஒரு நாளைக்கு 1,00,000 புத்தகங்களை ‘அசெம்பிள்’ செய்து ‘பேக்’ செய்கிறது. இதுவும்கூட எண்ணற்ற மோட்டார்கள், கன்வேயர்கள், கியர்கள், வீல்கள், மற்றும் பெல்ட்கள் என அநேக மெஷின்களின் சங்கமம் ஆகும். இவையனைத்தும் பைபிள் பிரசுரங்களைத் தயாரிப்பதற்கு வியத்தகு வேகத்தில் பயணம் செய்கின்றன.
துல்லியமாக இயங்கும் கடிகாரத்தைப் போல செயல்படும் ‘ஹைஸ்பீடு’ பிரின்டரி, ‘ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட்’ மெஷினரி, நவீன தொழில்நுட்பத்தின் சாதனைகளாகும். நாம் பார்க்கப்போகிறபடி, கடவுளுடைய மக்களின் அன்புக்கும் விசுவாசத்துக்கும் கீழ்ப்படிதலுக்கும் இது ஓர் அத்தாட்சியாகும். ஆனால், பிரின்டிங் வேலைகளெல்லாம் ஏன் நியு யார்க் புரூக்ளினிலிருந்து உவால்கில்லுக்கு மாற்றப்பட்டன?
முக்கிய காரணம் என்னவென்றால், வேலைகளை ஒரே இடத்திலிருந்து செய்வதன் மூலம் பிரின்டிங் மற்றும் ஷிப்பிங் வேலைகளை எளிமையாக்குவதே. பல ஆண்டுகளாக, புரூக்ளினிலிருந்து புத்தகங்களும் உவால்கில்லிலிருந்து பத்திரிகைகளும் அச்சிடப்பட்டு அனுப்பப்பட்டன. இரண்டு வேலைகளையும் ஒரே இடத்தில் செய்கையில் ஆட்களின் எண்ணிக்கையைக் குறைத்து, கடவுளுடைய சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட பணத்தை இன்னும் நன்றாகப் பயன்படுத்த முடியும். அதோடு, புரூக்ளினிலிருந்த பிரெஸ்கள் பழையதாகிவிட்டதால், ஜெர்மனியிலிருந்து இரண்டு ‘மேன் ரோலன்ட் லித்தோமேன்’ பிரின்டிங் பிரெஸ்கள் தருவிக்கப்பட்டன. இவை மிகவும் பெரியதாக இருந்ததால் இவற்றை புரூக்ளின் பிரின்டரியில் நிறுவ முடியாது.
இந்த வேலையை யெகோவா ஆதரிக்கிறார்
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதே பிரசுரங்களை அச்சிடுவதன் நோக்கமாகும். இந்த வேலையில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருப்பது ஆரம்பம் முதற்கொண்டே தெள்ளத் தெளிவாக இருந்திருக்கிறது. 1879 முதல் 1922 வரை, தனியார் நிறுவனங்கள் வாயிலாக புத்தகங்கள் அச்சிடப்பட்டன. 1922-ல், புரூக்ளினில் 18 கன்கார்டு தெருவில் உள்ள ஆறுமாடிக் கட்டடம் வாடகைக்கு அமர்த்தப்பட்டு, புத்தகங்களை அச்சிடுவதற்குக் கருவிகள் வாங்கப்பட்டன. அந்தச் சமயத்தில், இந்த வேலையை சகோதரர்கள் கையாள முடியுமா என சிலர் சந்தேகித்தார்கள்.
நமக்காக பெரும்பாலான புத்தகங்களை அச்சடித்துக் கொடுத்த ஒரு கம்பெனியின் தலைவர் அப்படி சந்தேகப்பட்டவர்களில் ஒருவர். கன்கார்டு தெருவுக்கு விஜயம் செய்தபோது, அவர் இவ்வாறு கூறினார்: “உங்களிடம் முதல் தரமான அச்சகம் இருக்கிறது, ஆனால் அதை எப்படி இயக்குவதென தெரிந்தவர்கள் யாரும் இல்லையே. இன்னும் ஆறு மாதத்தில் இந்த மெஷின்களெல்லாம் கெட்டுவிடும்; இதுவரை உங்களுக்கு அச்சடித்துக் கொடுத்தவர்கள்தான் பிரின்டிங்கில் ‘புரொஃபஷனல்கள்’ என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.”
அப்பொழுது அச்சக கண்காணியாக இருந்த ராபர்ட் ஜே. மார்ட்டின் என்பவர் இவ்வாறு கூறினார்: “அவர் சொன்னது நியாயமானது போல் தோன்றியது, ஆனால் நம்மோடு ஆண்டவர் இருப்பதை அவர் மறந்துவிட்டார்; ஆண்டவர் எப்பொழுதும் நம்முடன் இருந்திருக்கிறார். . . . சீக்கிரத்திலேயே, நாங்கள் புத்தகங்களைத் தயாரித்தோம்.” அடுத்த 80 ஆண்டுகளில், யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சொந்த பிரின்டிங் பிரெஸ்களைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான பிரதிகளை அச்சிட்டு வந்திருக்கிறார்கள்.
பிறகு அக்டோபர் 5, 2002-ல், உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் வருடாந்தர கூட்டத்தில், ஐக்கிய மாகாண கிளை அலுவலகத்தின் பிரின்டிங் வேலைகளை உவால்கில்லுக்கு மாற்றுவதற்கு ஆளும் குழு அங்கீகாரம் அளித்திருக்கிறது என அறிவிக்கப்பட்டது. இரண்டு புதிய பிரெஸ்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தன, அது அனுப்பப்படும் தேதி பிப்ரவரி 2004. புதிய பிரெஸ்களை நிறுவுவதற்கு பதினைந்தே மாதங்களில் சகோதரர்கள் அச்சகத்தை வடிவமைத்து, விரிவாக்கி, தயாராக வைக்க வேண்டியிருந்தது. அதற்குப்பின், இன்னும் 9 மாதங்களில் புதிய பைன்டரியை நிறுவி, ஷிப்பிங் வேலைகளை செய்துமுடிக்க வேண்டியிருந்தது. அட்டவணையிடப்பட்ட தேதியைக் கேள்விப்பட்டபோது சிலர் சந்தேகித்திருக்கலாம்—அந்த வேலை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவே தோன்றியது. என்றாலும், யெகோவாவின் ஆசீர்வாதத்தால் செய்துமுடிக்க முடியும் என்பதை சகோதரர்கள் அறிந்திருந்தார்கள்.
“மகிழ்ச்சியோடு ஒத்துழைக்கும் மனநிலை”
யெகோவாவின் மக்கள் தங்களை மனப்பூர்வமாக அளிப்பார்கள் என்பதை அறிந்து, சகோதரர்கள் இத்திட்டத்தை ஆரம்பித்தார்கள். (சங்கீதம் 110:3) பெத்தேல் கட்டுமான இலாகாவில் இருப்பவர்களைவிட அதிகமான வேலையாட்கள் தேவைப்படும் ஒரு பிரமாண்டமான வேலை அது. தற்காலிக வாலண்டியர் திட்டத்தின் பாகமாக ஒரு வாரம்முதல் மூன்று மாதங்கள்வரை சேவை செய்வதற்கு ஐக்கிய மாகாணங்களிலிருந்தும் கனடாவிலிருந்தும் கட்டட வேலையில் திறமைகள் உள்ள 1,000-க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் முன்வந்தார்கள். இத்திட்டத்தில் பங்குகொள்வதற்குச் சர்வதேச ஊழியர் மற்றும் வாலண்டியர் திட்டங்களில் சேவை செய்யும் மற்றவர்களும் அழைக்கப்பட்டார்கள். மண்டல கட்டடக் குழுவினர்களும்கூட பேருதவி அளித்தார்கள்.
உவால்கில் திட்டத்தில் வாலண்டியராக சேவை செய்ய பயணத்திற்கு மட்டுமே பலர் நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தது, வேலையிலிருந்து விடுப்பும் எடுக்க வேண்டியிருந்தது. என்றாலும், இந்தத் தியாகங்களை அவர்கள் சந்தோஷமாய் செய்தார்கள். இந்தக் கூடுதலான வாலண்டியர்களுக்கு இட வசதியும் உணவு வசதியும் செய்து கொடுப்பதற்கு கடினமாக வேலை செய்யும் வாய்ப்பு பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களுக்கும் கிடைத்தது. புரூக்லின், பேட்டர்ஸன், மற்றும் உவால்கில்லைச் சேர்ந்த 535-க்கும் அதிகமான பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் வாரநாட்களில் தாங்கள் செய்யும் வழக்கமான வேலைகளோடுகூட, சனிக்கிழமைகளில் இத்திட்டத்தில் வேலை செய்ய முன்வந்தார்கள். யெகோவா இத்திட்டத்திற்கு துணை செய்ததாலேயே சரித்திர புகழ்மிக்க இத்திட்டத்திற்கு கடவுளுடைய மக்கள் வியத்தகு ஆதரவு அளித்தார்கள்.
மற்றவர்கள் நிதியுதவி அளித்தார்கள். உதாரணமாக, அபி என்ற ஒன்பது வயது சிறுமியிடமிருந்து சகோதரர்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அவள் இவ்வாறு எழுதினாள்: “நீங்கள் செய்யும் எல்லா வேலைக்கும்—நல்ல நல்ல புத்தகங்களை தயாரிப்பதற்கும்—மிக்க நன்றி. ஒருவேளை விரைவில் உங்களை சந்திப்பேன். அடுத்த வருஷம் போகலாம் என்று என்னுடைய அப்பா சொல்லிவிட்டார்! நான் பேட்ஜ் அணிந்திருப்பேன், ஆகையால் நீங்கள் என்னை கண்டுபிடித்துவிடலாம். புதிய பிரின்டிங் பிரெஸுக்காக இத்துடன் 20 டாலர் அனுப்புகிறேன்! இது எனக்குக் கிடைத்த ‘பாக்கட் மணி,’ ஆனால் இதை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்.”
ஒரு சகோதரி இவ்வாறு எழுதினாள்: “என்னுடைய கரங்களால் பின்னிய தொப்பிகளை நன்கொடையாக ஏற்றுக்கொள்ளுங்கள். உவால்கில் புராஜெக்டில் வேலை செய்பவர்களுக்கு இந்தத் தொப்பிகளைக் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். குளிர் பயங்கரமாக இருக்குமென வானிலை பற்றிய புத்தகம் ஒன்று கூறியது. அவர்கள் சொல்வது சரியா தவறா என்று எனக்குத் தெரியாது. ஆனால், உவால்கில்லில் செய்யப்படும் பெரும்பாலான வேலைகள் வெளியில்தான் செய்யப்படும் என்பதை அறிந்திருக்கிறேன். ஆகவே என்னுடைய சகோதர சகோதரிகளுடைய தலை கதகதப்பாக இருக்க விரும்புகிறேன். சகோதரர்கள் எதிர்பார்க்கும் திறமைகள் எதுவும் என்னிடம் இல்லை, ஆனால் எனக்கு பின்னல் வேலை தெரியும், ஆகவே இந்தத் திறமையைப் பயன்படுத்தி நன்கொடை அளிக்க தீர்மானித்தேன்.” அவர் 106 தொப்பிகள் அனுப்பியிருந்தார்!
அட்டவணை போடப்பட்டபடி பிரின்டரி வேலைகள் முடிக்கப்பட்டன. பிரின்டரி கண்காணி ஜான் லார்ஸன் இவ்வாறு கூறினார்: “சந்தோஷத்தோடு ஒத்துழைக்கும் மனநிலை எல்லாரிடமும் இருந்தது. இந்த வேலையை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை யார்தான் சந்தேகிப்பார்? வேலைகளெல்லாம் மிக வேகமாய் நடைபெற்றன. 2003-ம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள், சகோதரர்கள் இந்தக் கட்டடத்திற்கு அஸ்திவாரம் போடுவதை மண்ணில் நின்றுகொண்டு நான் பார்த்துக்கொண்டிருந்தது என் நினைவுக்கு வருகிறது. ஒரு வருடம்கூட ஆகவில்லை, அதே இடத்தில் பிரின்டிங் பிரெஸ் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.”
பிரதிஷ்டை நிகழ்ச்சி
புதிய அச்சகம் மற்றும் மூன்று குடியிருப்பு கட்டடங்களின் பிரதிஷ்டை நிகழ்ச்சி, மே 16, 2005 திங்கட்கிழமை அன்று உவால்கில்லில் நடைபெற்றது. பேட்டர்ஸனிலும் புரூக்லினிலும் உள்ள பெத்தேல் கட்டடங்களும் கனடா பெத்தேலும் வீடியோ லைன் மூலம் இணைக்கப்பட்டன. மொத்தமாக, 6,049 பேர் இந்நிகழ்ச்சியை அனுபவித்து மகிழ்ந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினரான தியோடர் ஜாரக்ஸ் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்; அப்பொழுது, இந்த அச்சக வேலையின் சரித்திரத்தைப் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார். பேட்டிகள் மற்றும் வீடியோ காட்சிகள் வாயிலாக, ஐக்கிய மாகாணங்களில் உள்ள கட்டுமான திட்டத்தையும் பிரின்டிங் வேலைகளையும் பற்றி கிளை அலுவலகக் குழு அங்கத்தினர்களான ஜான் லார்ஸனும் ஜான் கிக்காட்டும் சொன்னார்கள். ஆளும் குழுவைச் சேர்ந்த ஜான் பார் இறுதி சொற்பொழிவாற்றி, புதிய அச்சகத்தையும் மூன்று குடியிருப்பு கட்டடங்களையும் யெகோவா தேவனுக்கு அர்ப்பணம் செய்தார்.
அதற்குப்பின் வந்த வாரத்தில், புதிய கட்டடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு பேட்டர்ஸன் மற்றும் புரூக்லின் பெத்தேல் ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. மொத்தமாக, 5,920 பேர் அந்தச் சமயத்தில் விஜயம் செய்தார்கள்.
இந்த அச்சகத்தை நாம் எப்படி கருதுகிறோம்?
பிரின்டிங் பிரெஸ் பார்ப்பதற்குப் பிரமாண்டமாக இருந்தாலும், அங்குள்ள இயந்திரங்களுக்கு அல்ல, ஆனால் மக்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது; ஏனென்றால் நாம் அச்சடிக்கும் பிரசுரங்கள் மக்கள்மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை பிரதிஷ்டை சொற்பொழிவில் கூட்டத்தாருக்கு சகோதரர் பார் நினைப்பூட்டினார்.
புதிய பிரெஸ்கள் ஒவ்வொன்றும் ஏறக்குறைய மணிக்கு பத்து லட்சம் துண்டுப்பிரதிகளை அச்சடிக்க முடியும். என்றாலும், ஒரேவொரு துண்டுப்பிரதி ஒருவருடைய வாழ்க்கையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும். உதாரணமாக, 1921-ல், தென் ஆப்பிரிக்காவில், ஒரு குழுவினர் ரயில் பாதை பராமரிப்பில் பணிபுரிந்து வந்தார்கள். கிறிஸ்டியான் என்பவர் ரயில் பாதையில் ஒரு துண்டுக் காகிதம் சிக்கியிருப்பதைப் பார்த்தார். அது நம்முடைய துண்டுப்பிரதிகளில் ஒன்று. கிறிஸ்டியான் அதை மிகுந்த ஆர்வத்துடன் படித்தார். அவர் தனது மருமகனிடம் ஓடிச்சென்று, உணர்ச்சி பொங்க இவ்வாறு கூறினார்: “நான் இன்றைக்கு சத்தியத்தை கண்டுபிடித்துவிட்டேன்!” சில காலத்திற்குப் பிறகு, கூடுதலான தகவல் கேட்டு அவர்கள் எழுதினார்கள். தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகம் கூடுதலான பைபிள் பிரசுரங்களை அனுப்பி வைத்தது. அவர்கள் இருவரும் படித்து, முழுக்காட்டுதல் பெற்றார்கள், அதோடு பைபிள் சத்தியத்தை மற்றவர்களுக்கும் சொன்னார்கள். அதன் விளைவாக, அநேகர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். சொல்லப்போனால், 1990-களின் ஆரம்பத்தில், அவர்களுடைய சந்ததியாரில் நூற்றுக்கும் அதிகமானோர் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தார்கள்—இதெல்லாம் ஒரேவொரு துண்டுப்பிரதியை ரயில் பாதையில் அந்த மனிதர் கண்டுபிடித்ததன் விளைவே!
நாம் அச்சிடும் பிரசுரங்கள் மக்களை சத்தியத்திற்குள் கொண்டுவருகின்றன, சத்தியத்தில் தொடர்ந்திருக்கச் செய்கின்றன, மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட உந்துவிக்கின்றன, சகோதர ஐக்கியத்தில் ஒன்றுசேர்க்கின்றன என சகோதரர் பார் கூறினார். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் அனைவரும் வினியோகிக்கும் இந்தப் பிரசுரங்கள் நமது தேவனாகிய யெகோவாவை மகிமைப்படுத்துகின்றன!
அச்சகத்தை யெகோவா எப்படிக் கருதுகிறார்?
அச்சகத்தை யெகோவா எப்படி கருதுகிறார் என்பதை பார்வையாளர்கள் சிந்தித்துப் பார்க்கும்படியும் சகோதரர் பார் கேட்டுக்கொண்டார். யெகோவா அதன்மீது கொஞ்சமும் சார்ந்தில்லை. கற்களே நற்செய்தியை பிரசங்கிக்கும்படி அவரால் செய்ய முடியும்! (லூக்கா 19:40) அதோடு, இயந்திரத்தின் நுணுக்கம், அளவு, வேகம் போன்ற எந்தத் திறமைகளாலும் அவர் கவரப்படுவதில்லை. ஏன், இந்த அண்டத்தையே படைத்தவர் அவர் ஆயிற்றே! (சங்கீதம் 147:10, 11) பிரசுரங்களைத் தயாரிப்பதற்கு அதி நவீன முறைகளை, மனிதரால் உருவாக்கப்படாத அல்லது கற்பனை செய்யப்படாத முறைகளை, யெகோவா அறிந்திருக்கிறார். ஆகவே, எதை உண்மையிலேயே விலையேறப்பெற்ற ஒன்றாக யெகோவா பார்க்கிறார்? அவருடைய மக்களின் அருமையான பண்புகளை—அன்பு, விசுவாசம், கீழ்ப்படிதல் போன்ற பண்புகளை—இந்த அச்சகத்தில் பார்க்கிறார்.
அன்பு எப்படி உட்பட்டுள்ளது என்பதை உதாரணத்துடன் அவர் விளக்கினார். பெற்றோர்களுக்காக ஒரு சிறுமி கேக் தயாரிக்கிறாள். அதைப் பார்த்து அவர்கள் சந்தோஷமடைவார்கள். ஆம், அந்தக் கேக் எப்படி வந்தாலும்சரி, பெற்றோர்களுடைய இருதயத்தைத் தொடுவது அவர்களுடைய பிள்ளையின் அன்புதான்; அதை தாராளமான செயலால் அவள் காண்பித்தாள். அது போலவே, இந்தப் புதிய அச்சகத்தை யெகோவா பார்க்கும்போது, வெறுமனே இந்தக் கட்டடங்களையும் இயந்திரங்களையும் அவர் பார்க்கவில்லை. மிக முக்கியமாக, தமது பெயருக்குக் காண்பித்த அன்பின் வெளிக்காட்டாக அதைக் கருதுகிறார்.—எபிரெயர் 6:10.
பேழையை நோவாவுடைய விசுவாசத்தின் வெளிக்காட்டாக யெகோவா கருதியது போல், இந்த அச்சகத்தையும் நம்முடைய விசுவாசத்திற்கு காணக்கூடிய அத்தாட்சியாக அவர் கருதுகிறார். எதில் விசுவாசம்? யெகோவா முன்னறிவித்தது நிச்சயம் நிறைவேறுமென நோவா விசுவாசம் வைத்திருந்தார். நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்றும், பூமியில் மிக முக்கியமாக அறிவிக்கப்பட வேண்டியது நற்செய்தி என்றும், அதை மக்கள் செவிகொடுத்துக் கேட்பது இன்றியமையாதது என்றும் நாம் விசுவாசிக்கிறோம். பைபிள் தரும் செய்தி உயிர்களைக் காக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.—ரோமர் 10:13, 14.
இந்த அச்சகத்தை நம்முடைய கீழ்ப்படிதலுக்கு அத்தாட்சியாகவும் யெகோவா கருதுகிறார் என்பதில் சந்தேகமில்லை. நாம் அறிந்திருக்கிறபடி, முடிவு வருவதற்கு முன்பு நற்செய்தி உலகெங்கிலும் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய சித்தம். (மத்தேயு 24:14) இந்த அச்சகமும், உலகில் வேறு பகுதிகளில் உள்ள அச்சகங்களும், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
ஆம், இந்தக் கட்டடத்தைக் கட்டுவதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதிலும் கட்டுமான பணியிலும், அதை இயக்குவதிலும் காட்டப்பட்ட அன்பும் விசுவாசமும் கீழ்ப்படிதலும் யெகோவாவின் மக்கள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சத்தியத்தை வைராக்கியமாய் அறிவிப்பதிலும் காட்டப்படுகிறது.
[பக்கம் 11-ன் பெட்டி/படங்கள்]
ஐக்கிய மாகாண அச்சகத்தின் விரிவாக்கம்
1920: முதன்முதல் ரோட்டரி பிரெஸ்ஸில் பத்திரிகைகள் அச்சிடப்பட்டன, 35 மிர்டில் அவன்யு, புரூக்ளின்.
1922: 18 கான்கார்டு தெருவிலுள்ள ஆறுமாடிக் கட்டடத்திற்கு அச்சகம் மாற்றப்பட்டது. அதுமுதல் புத்தகங்கள் அச்சிடப்பட்டன.
1927: 117 ஆடம்ஸ் தெருவிலுள்ள புதிய கட்டடத்திற்கு அச்சகம் மாற்றப்பட்டது.
1949: கூடுதலான ஒன்பது மாடிக் கட்டடத்தால் அச்சகத்தின் அளவு இரட்டிப்பாக ஆனது.
1956: 77 சான்ட்ஸ் தெருவில் புதிய கட்டடம் கட்டப்பட்டபோது ஆடம்ஸ் தெரு அச்சகம் மீண்டும் இரட்டிப்பாக ஆனது.
1967: பத்துமாடிக் கட்டடம் கட்டப்பட்டது, இதனால் பழைய கட்டடத்தைவிட பத்து மடங்கு பெரிய, ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட அச்சகம் உருவானது.
1973: உவால்கில்லில் துணை அச்சகம் கட்டப்பட்டது, முக்கியமாக பத்திரிகை உற்பத்தி செய்வதற்கு.
2004: ஐக்கிய மாகாணங்களில் செய்யப்படும் பிரின்டிங், பைன்டிங், ஷிப்பிங் வேலைகள் அனைத்தும் உவால்கில்லில் ஒருங்கிணைப்பு செய்யப்படுகின்றன.