அன்புள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு:
“தேவனே [“தொடர்ந்து,” NW] விளையச் செய்தார்.” (1 கொ. 3:6) இந்தியாவில் தேவராஜ்ய வளர்ச்சியைக் காண்பது எவ்வளவாய் மெய்சிலிர்க்க வைக்கிறது! 2003 ஊழிய ஆண்டில் பைபிள் படிப்புகளில் புதிய உச்சநிலையை அடைந்திருக்கிறோம்; 17,000-ற்கும் அதிகமான பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இது பாராட்டத்தக்கது. நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கையிலும் புதிய உச்சநிலையை எட்டியிருக்கிறோம்; அன்று 56,856 பேர் ஆஜராகியிருந்தனர். கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சிக்கு ஆஜராகியிருந்தவர்களைவிட 2,226 பேர் அதிகம்; அத்துடன், இந்தியாவிலுள்ள மொத்த பிரஸ்தாபிகளைவிட கிட்டத்தட்ட 33,000 பேர் அதிகம். எதிர்காலத்தில் சிறந்த அதிகரிப்புக்கு வாய்ப்பு இருப்பதை இது காட்டுகிறது.
இப்போது இந்திய மொழிகள் அனைத்திலும் பிரசுரங்களை அச்சிடும் வேலையை நம்முடைய கிளை அலுவலகம் மட்டுமே கவனிக்கிறது. அவை 25-ற்கும் அதிகமான நாடுகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இதனால் பத்திரிகை உற்பத்தியில் 65% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் வேலை, குறைந்தளவான ஆட்களைக் கொண்டே செய்யப்பட்டு வருகிறது. இந்த மாபெரும் தேவைக்கு ஈடுகொடுக்க, இன்னொரு நான்கு வண்ண அச்சு இயந்திரம் நிறுவப்பட்டது. இந்த அச்சு இயந்திரங்கள் ஒரு நிமிடத்தில் 60 பத்திரிகைகளை அச்சிடுகின்றன. உலகளாவிய பிராந்தியத்திற்கு அனுப்பி வைக்கப்படும் இந்தப் பத்திரிகைகள் மற்றும் பிரசுரங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக உயர்தர காகிதம் பயன்படுத்தப்படுகிறது.
2004 ஊழிய ஆண்டில் அடியெடுத்து வைக்கையில், பெங்களூரில் டிசம்பர் 7, 2003 அன்று நடைபெறவிருக்கும் கிளை அலுவலக பிரதிஷ்டையை நாம் எதிர்நோக்குகிறோம். அதற்கென வருபவர்களுக்கு மிகச் சிறந்த ஆவிக்குரிய விருந்தளிப்பதிலும் யெகோவாவிற்கு துதியின் முழக்கத்தை உண்டுபண்ணுவதிலும் அது இனிய சந்தர்ப்பமாக அமைய வேண்டுமென்பதே எங்கள் ஜெபம். ஆம், ‘தொடர்ந்து விளையச் செய்வதில்’ இந்த புதிய கிளை அலுவலகத்தை யெகோவா தொடர்ந்து பயன்படுத்துவார் என நாங்கள் நிச்சயமாய் இருக்கிறோம்.
உங்கள் சகோதரர்கள்,
இந்திய கிளை அலுவலகம்