வாழ்க்கை சரிதை
சந்தோஷமாகச் சேவை செய்தேன்!
1958-ல் என்னுடைய பெத்தேல் சேவையை ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 18 வயது. என்னுடைய முதல் வேலை, அச்சக வேலை நடந்துகொண்டிருந்த கட்டிடத்தைப் பெருக்கி சுத்தமாக வைத்துக்கொள்வதுதான். கொஞ்ச நாள் கழித்து, அச்சிடப்பட்ட பிரசுரங்களின் ஓரங்களைக் கத்தரிக்கும் மெஷினில் வேலை செய்தேன். பெத்தேலில் இருப்பதே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது!
தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்தில் புதிதாக வாங்கியிருக்கிற பிரிண்டிங் மெஷினில் வேலை செய்வதற்கு வாலண்டியர்கள் தேவை என்று 1959-ல் பெத்தேலில் ஒரு அறிவிப்பு செய்தார்கள். நான் என் பெயரைக் கொடுத்திருந்தேன். என்னைத் தேர்ந்தெடுத்தபோது பயங்கர சந்தோஷமாக இருந்தது. என்னுடன் சேர்ந்து இன்னும் மூன்று சகோதரர்களையும் தேர்ந்தெடுத்திருந்தார்கள். டென்னிஸ் லீச், பில் மெக்லெலன், கென் நார்டின்தான் அந்த மூன்று பேர். நாங்கள் எல்லாருமே ரொம்ப நாளைக்கு தென் ஆப்பிரிக்காவில் இருக்க வேண்டியிருக்கும் என்று எங்களிடம் சொன்னார்கள்.
நான் உடனே அம்மாவுக்கு போன் பண்ணி, “அம்மா நான் தென் ஆப்பிரிக்காவுக்கு போறேன்!” என்று சொன்னேன். பொதுவாக, அம்மா அதிகமாகப் பேச மாட்டார். ஆனால், அவருக்குப் பலமான விசுவாசம் இருந்தது. யெகோவாவிடம் ஒரு நல்ல பந்தம் இருந்தது. நான் ஆப்பிரிக்காவுக்குப் போவதைப் பற்றிச் சொன்னபோது, அவர் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவருடைய ஆதரவு எனக்கு இருந்தது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவரை விட்டு ரொம்ப தூரம் நான் போவதை நினைத்து அவர் கவலைப்பட்டாலும் அம்மாவும் சரி, அப்பாவும் சரி, என்னைத் தடுக்கவில்லை.
தென் ஆப்பிரிக்காவுக்குப் போனோம்
டென்னிஸ் லீச்சும் கென் நார்டினும் பில் மெக்லெலனும் நானும் 1959-ல் கேப் டவுனிலிருந்து ஜோஹெனஸ்பர்க்குக்கு ரயிலில் போய்க்கொண்டிருக்கிறோம்
நாங்கள் நான்கு பேரும் தென் ஆப்பிரிக்காவில் காலடி எடுத்து வைத்த வருஷத்திலிருந்து 60 வருஷங்கள் கழித்து, அதாவது 2019-ல், தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்தில் கூடிவந்தோம்
புருக்லின் பெத்தேலில் எங்கள் நான்கு பேருக்கும் மூன்று மாதம் பயிற்சி கொடுத்தார்கள். ஒரு விதமான அச்சு வேலையைச் செய்வது எப்படி என்பதைப் பற்றி அதில் சொல்லிக் கொடுத்தார்கள். (ஹாட்-லெட் டைப்ஸெட்டிங்) அதற்கு அப்புறம், தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற கேப் டவுனுக்கு கப்பலில் போனோம். அப்போது எனக்கு இருபது வயது. அங்கிருந்து ஜோஹெனஸ்பர்க்குக்கு போவதற்காக ரயில் ஏறினோம். நாங்கள் சாயங்காலத்தில் கிளம்பினோம். விடியற்காலையில் கரூ என்ற ஒரு இடத்தில் ரயில் நின்றது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது ஒரே புழுதியாக... சூடாக... இருந்தது. அந்த ஊர் பார்ப்பதற்குப் பாலைவனம் மாதிரி இருந்தது. ‘இந்த இடம் என்ன இப்படி இருக்கு?’ என்று நாங்கள் நான்கு பேரும் யோசித்தோம். ‘நாம போற இடம் எப்படி இருக்குமோ?’ என்று நினைத்து கவலைப்பட்டோம். ஆனால், கொஞ்ச வருஷங்களுக்கு அப்புறம் இந்த இடங்களுக்குப் போய் பார்த்தபோது இதெல்லாம் எவ்வளவு அழகான... அமைதியான... இடங்கள் என்பதைப் புரிந்துகொண்டோம்.
சில வருஷங்களுக்கு நான் லினோடைப் மெஷினில் வேலை செய்தேன். அதன் அமைப்பு கொஞ்சம் சிக்கலாக இருக்கும். ஆனால், அருமையாக வேலை செய்யும். காவற்கோபுர பத்திரிகைகளையும் விழித்தெழு! பத்திரிகைகளையும் அச்சடிப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய சில வேலைகளை அந்த மெஷினில் செய்தோம். தென் ஆப்பிரிக்காவில் இருந்த மொழிகளில் மட்டுமல்ல, ஆப்பிரிக்காவில் பேசப்பட்ட மற்ற மொழிகளிலும் பிரசுரங்களை அச்சடித்தோம். எந்த மெஷினில் வேலை செய்வதற்காக கனடாவில் இருந்து இங்கே வந்தோமோ அந்த மெஷினை ரொம்ப நன்றாகவே பயன்படுத்தினோம்.
அதற்கு அப்புறம், நான் அலுவலகத்தில் வேலை செய்தேன். பிரசுரங்களை அச்சிடுவது... சபைகளுக்கு அனுப்பி வைப்பது... மொழிபெயர்ப்பு வேலை... இவற்றையெல்லாம் மேற்பார்வை செய்கிற வேலை அந்த அலுவலகத்தில் நடந்துகொண்டிருந்தது. வாழ்க்கை ரொம்ப பிஸியாக இருந்தது, திருப்தியாகவும் இருந்தது.
கல்யாணமும், புதிய நியமிப்பும்
1968-ல் லாராவும் நானும் விசேஷ பயனியர்களாகச் சேவை செய்துகொண்டிருந்தபோது
1968-ல் லாரா பொவனை நான் கல்யாணம் செய்தேன். அவள் பயனியர் சேவை செய்துகொண்டிருந்தாள். அவளுடைய வீடு பெத்தேலுக்குப் பக்கத்தில் இருந்தது. மொழிபெயர்ப்பு இலாகாவில் டைப்பிஸ்ட்டாகவும் சேவை செய்துகொண்டிருந்தாள். அப்போதெல்லாம் புதிதாக கல்யாணம் ஆனவர்கள் பெத்தேலில் தங்க முடியாது. அதனால், எங்களை விசேஷ பயனியர்களாக நியமித்தார்கள். பத்து வருஷம் நான் பெத்தேலில் இருந்ததால் சாப்பாட்டைப் பற்றியோ தங்குகிற இடத்தைப் பற்றியோ கவலைப்பட்டதே இல்லை. ஆனால், இப்போது விசேஷ பயனியர்களுக்காக கொடுக்கப்படுகிற உதவித் தொகையை வைத்து, இதை எல்லாம் எப்படிச் சமாளிப்பது என்று நினைத்து கவலைப்பட்டேன். அப்போதெல்லாம் விசேஷ பயனியர்கள் எடுக்க வேண்டிய மணிநேரத்தையும், செய்ய வேண்டிய மறுசந்திப்புகளையும், கொடுக்க வேண்டிய பிரசுரங்களையும் கொடுத்தால்தான் உதவித் தொகையே கிடைக்கும். அந்தச் சமயத்தில், விசேஷ பயனியர்களுக்கு 25 ரேன்ட் உதவித் தொகையாக கிடைத்தது. (அன்றைக்கு அதன் மதிப்பு 35 அமெரிக்க டாலர்கள்.) இந்தப் பணத்தை வைத்துதான் நாங்கள் வாடகை கொடுக்க வேண்டியிருந்தது. சாப்பாட்டு செலவு, போக்குவரத்து செலவு, மருத்துவ செலவு இன்னும் மற்ற செலவுகளை எல்லாம் கவனிக்க வேண்டியிருந்தது.
இந்தியப் பெருங்கடல் ஓரத்தில் இருக்கிற டர்பன் நகரத்துக்குப் பக்கத்தில் ஒரு சின்ன தொகுதி இருந்தது. அங்கே எங்களை நியமித்தார்கள். அந்தப் பகுதியில், இந்தியாவிலிருந்து வந்திருந்த நிறைய மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களில் நிறைய பேர் கிட்டத்தட்ட 1875-ல் கரும்பு தோட்டத்தில் வேலை செய்வதற்கு வந்த ஒப்பந்த தொழிலாளர்களுடைய வம்சத்தில் வந்தவர்கள். ஆனால், இப்போது அவர்கள் எல்லாரும் வெவ்வேறு வேலை செய்கிறார்கள். ஆனாலும், அவர்களுடைய கலாச்சாரமும் உணவுப் பழக்கவழக்கங்களும் அப்படியேதான் இருக்கின்றன. அவர்கள் சமைக்கிற உணவு வகைகள் எல்லாம் ரொம்ப ருசியாக இருக்கும். அதோடு, அவர்கள் ஆங்கிலம் பேசினார்கள். அது எங்களுக்கு ரொம்ப வசதியாக இருந்தது.
அந்தக் காலத்தில், விசேஷ பயனியர்கள் ஒவ்வொரு மாதமும் 150 மணிநேரம் ஊழியம் செய்ய வேண்டியிருந்தது. அதனால், நாங்கள் ஊழியத்துக்குப் போன முதல் நாளில் ஆறு மணிநேரம் ஊழியம் செய்யலாம் என்று முடிவு எடுத்தோம். அன்றைக்குப் பயங்கர சூடாக இருந்தது. எங்களுக்கு மறுசந்திப்புகளோ பைபிள் படிப்புகளோ இல்லாததால் அந்த ஆறு மணிநேரத்தையும் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துதான் எடுக்க வேண்டியிருந்தது. கொஞ்ச நேரம் கழித்து நான் என் கடிகாரத்தைப் பார்த்தேன். வெறும் 40 நிமிஷம்தான் ஆகியிருந்தது! உண்மையிலேயே நாங்கள் விசேஷ பயனியர் சேவை செய்ய முடியுமா என்று யோசித்தேன்.
ஒவ்வொரு நாளும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டம் போட்டு அதன்படி செய்வதற்குச் சீக்கிரத்திலேயே பழகிக்கொண்டோம். தினமும் நாங்கள் ரொட்டி எடுத்துக்கொள்வோம். ப்ளாஸ்கில் சூப்போ காபியோ எடுத்துக்கொள்வோம். எங்களுக்கு எப்போது ஓய்வு தேவை என்று தோன்றுகிறதோ அப்போது எங்கள் காரை மரத்துக்கு அடியில் நிறுத்திவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுப்போம். அப்படிச் செய்யும்போது சில சமயங்களில் அங்கிருந்த இந்திய மக்களுடைய குழந்தைகள் எங்களைச் சுற்றி நின்றுகொண்டு எங்களையே ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள்! கொஞ்ச நாட்களிலேயே இரண்டு, மூன்று மணிநேரம் ஊழியம் செய்ததற்கு அப்புறம் மீதி மணிநேரம் போவதே எங்களுக்குத் தெரியவில்லை.
அங்கு வாழ்ந்த இந்திய மக்கள் நன்றாக உபசரிப்பார்கள்... மரியாதையாகப் பேசுவார்கள்... அன்பாக நடந்துகொள்வார்கள்... அவர்களுக்குக் கடவுள் பயம் இருந்தது. அவர்களுக்கு நல்ல செய்தியைச் சொல்வதற்கு நாங்கள் ரொம்ப சந்தோஷப்பட்டோம்! இந்து மக்களில் நிறைய பேர் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். யெகோவாவைப் பற்றியும்... இயேசுவைப் பற்றியும்... பைபிளைப் பற்றியும்... புதிய உலகத்தை பற்றியும்... உயிர்த்தெழுதலைப் பற்றியும்... தெரிந்துகொள்வதற்கு அவர்களுக்கு ரொம்ப ஆசை இருந்தது. ஒரு வருஷத்திற்குள் எங்களுக்கு 20 பைபிள் படிப்புகள் இருந்தன. ஒவ்வொரு நாளும் எங்களுடைய பைபிள் படிப்புகளோடு சேர்ந்து மத்தியான சாப்பாடு சாப்பிட்டோம். நாங்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தோம்.
சீக்கிரத்திலேயே எங்களை வட்டார சேவைக்கு நியமித்தார்கள். அழகான இந்தியப் பெருங்கடல் ஓரத்தில் இருந்த பகுதிகள்தான் எங்களுடைய வட்டாரம். ஒவ்வொரு வாரமும் நாங்கள் சகோதர சகோதரிகளுடைய வீட்டில் தங்கினோம். அவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்தோம். சபையில் இருக்கிற எல்லாரையும் உற்சாகப்படுத்தினோம். அவர்களுடைய குடும்பத்தில் ஒருவராகவே நாங்கள் ஆகிவிட்டோம். அவர்களுடைய குழந்தைகளையும் செல்லப் பிராணிகளையும் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இப்படியே இரண்டு வருஷங்கள் ஓடிவிட்டன. ஒருநாள் திடீரென்று கிளை அலுவலகத்தில் இருந்து ஒரு போன் வந்தது. “மறுபடியும் உங்கள பெத்தேலுக்கே கூப்பிடுறத பத்தி நாங்க யோசிச்சிட்டிருக்கோம்” என்று சொன்னார்கள். “இந்த சேவையே எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கே” என்று நான் சொன்னேன். ஆனால், எங்களுக்கு என்ன நியமிப்பு கிடைத்தாலும் அதைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இருந்தோம்.
மறுபடியும் பெத்தேலுக்கு
பெத்தேலுக்குப் போனதற்கு அப்புறம் ஊழிய இலாகாவில் எனக்கு வேலை கொடுத்தார்கள். முதிர்ச்சியும் அனுபவமும் இருந்த நிறைய சகோதரர்களுடன் சேர்ந்து வேலை செய்கிற பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்போதெல்லாம் வட்டாரக் கண்காணியின் சந்திப்பு முடிந்தவுடனே, கிளை அலுவலகத்துக்கு அவர்கள் அறிக்கைகளை அனுப்புவார்கள். அந்த அறிக்கைகளை அடிப்படையாக வைத்து ஊழிய இலாகா திரும்பவும் சபைகளுக்குக் கடிதம் எழுதுவார்கள். அந்தக் கடிதங்களில், சபையில் இருப்பவர்களுக்குத் தேவையான உற்சாகமும் வழிநடத்துதலும் இருக்கும். வட்டாரக் கண்காணிகள் அறிக்கைகளை அனுப்பும்போது ஸோஸா, ஸூலு, இன்னும் மற்ற ஆப்பிரிக்க மொழிகளில் அனுப்புவார்கள். அந்த அறிக்கையை அங்கே இருக்கிற செக்ரெட்டரிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்கள். ஊழிய இலாகா சபைகளுக்கு எழுதும் கடிதத்தை மறுபடியும் ஆப்பிரிக்க மொழிகளில் மொழிபெயர்ப்பார்கள். இப்படி, செக்ரெட்டரிகள் ஏகப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. அதை எல்லாம் நான் ரொம்ப உயர்வாக மதித்தேன். ஆப்பிரிக்காவில் இருக்கிற கறுப்பினத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் அனுபவிக்கிற பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும் இவர்கள் எனக்கு உதவினார்கள்.
தென் ஆப்பிரிக்காவில் அப்போதெல்லாம் ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்தவர்களும் வாழ்வதற்குத் தனித்தனி இடங்களை அரசாங்கம் ஒதுக்கியிருந்தது. அதனால், வெவ்வேறு இனத்தவர்கள் ஒருவருக்கொருவர் பழகுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. கறுப்பினத்தைச் சேர்ந்த நம்முடைய சகோதரர்களுக்கு என்று தனி மொழிகள் இருந்தன. அவர்கள் மொழிகளில் அவர்கள் பிரசங்கித்தார்கள், அவர்கள் மொழிகளில் நடக்கிற கூட்டங்களில் கலந்துகொண்டார்கள்.
பெத்தேலுக்கு வருவதற்கு முன்பு, ஆங்கில மொழி பேசும் சபைகளில்தான் நான் இருந்தேன். அதனால், கறுப்பின சகோதர சகோதரிகளைப் பற்றி என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், இப்போது அவர்களுடைய கலாச்சாரத்தையும் பழக்கவழக்கங்களையும் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. சடங்கு சம்பிரதாயங்களையும் பொய் மத பழக்கவழக்கங்களையும் செய்யாமல் இருப்பதற்கு அவர்கள் எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்று தெரிந்துகொண்டேன். பைபிளுக்கு விரோதமாக இருந்த சடங்கு சம்பிரதாயங்களை அவர்கள் தைரியமாக விட்டுவிட்டு வந்தார்கள். ஆவி உலகத் தொடர்பு சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களை செய்யச் சொல்லி குடும்பத்தில் இருப்பவர்களும் கிராமத்தில் இருப்பவர்களும் கட்டாயப்படுத்தியபோது அதையும் தைரியமாக எதிர்த்து நின்றார்கள். கிராமப்புறங்களில் இருந்தவர்கள் ரொம்ப ஏழைகளாக இருந்தார்கள். அடிப்படை கல்விகூட அவர்களுக்கு இல்லை. ஆனால், பைபிள்மேல் ரொம்ப மதிப்பு வைத்திருந்தார்கள்.
கடவுளை வணங்குவதற்கு நமக்கு இருக்கிற சுதந்திரம்... நம்முடைய நடுநிலைமை... இது சம்பந்தப்பட்ட சில வழக்குகளில் வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பள்ளியில் கடவுள் வாழ்த்து பாடாததால் நம்முடைய பிள்ளைகள் சிலரை பள்ளியில் இருந்து நீக்கிவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் யெகோவாவுக்கு உண்மையாகவும் தைரியமாகவும் இருந்தார்கள். இதையெல்லாம் கவனித்தபோது, என்னுடைய விசுவாசம் பலமானது.
ஆப்பிரிக்காவில் ஸ்வாஸிலாந்து என்று ஒரு நாடு இருந்தது; இப்போது அதன் பெயர் எஸ்வாடினி. அங்கிருந்த சகோதரர்கள் வேறு விதமான பிரச்சினையை அனுபவித்தார்கள். அந்த நாட்டின் ராஜா இரண்டாம் ஸோபூஸா இறந்தபோது, அங்கே இருப்பவர்கள் எல்லாருமே துக்கம் விசாரிக்க வேண்டும் என்று கட்டளை போடப்பட்டது. ஆண்கள் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும் என்றும் பெண்கள் தலைமுடியை ஓட்ட வெட்டிக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. முன்னோர்களை வழிபடுகிற பழக்கத்தோடு இது சம்பந்தப்பட்டதால் சகோதர சகோதரிகள் அதைச் செய்ய மறுத்துவிட்டார்கள். அதனால், அவர்களில் நிறைய பேர் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் உண்மையாக இருந்ததைப் பார்த்து யெகோவா ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பார்! அவர்களுடைய விசுவாசத்தையும் பொறுமையையும் பார்த்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். எங்களுடைய விசுவாசமும் பலமானது.
மறுபடியும் அச்சக இலாகாவுக்கு
கம்ப்யூட்டரை பயன்படுத்தி அச்சடிக்கிற முறைகளில் எப்படி எல்லாம் முன்னேற்றம் செய்யலாம் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்கள். அதனால், 1981-ல், அந்த வேலைகளில் உதவுவதற்காக என்னை நியமித்தார்கள். நான் மறுபடியும் அச்சக இலாகாவுக்குப் போனேன். அது உண்மையிலேயே சுவாரஸ்யமான ஓர் அனுபவம். அந்தச் சமயத்தில் அச்சகத் துறையில் நிறைய முன்னேற்றங்கள் நடந்துகொண்டிருந்தன. நாங்கள் இருந்த இடத்தில், போட்டோடைப்செட்டர் மெஷினை விற்கிற ஒருவர் இருந்தார். அந்த மெஷினில் நாங்கள் வேலை செய்து பார்ப்பதற்காக அவர் எங்களுக்கு அதை இலவசமாக கொடுத்தார். அது நன்றாக வேலை செய்ததால், எங்களிடம் இருந்த ஒன்பது லினோடைப் மெஷினை எடுத்துவிட்டு, ஐந்து போட்டோடைப்செட்டர்ஸை வாங்கினோம். புதிதாக ஒரு ஆப்செட் பிரிண்டிங் மெஷினையும் வாங்கினோம். அதற்கு அப்புறம் அச்சடிக்கிற வேலை சூடுபிடிக்க ஆரம்பித்தது!
ஒவ்வொரு பக்கத்திலும் வார்த்தைகளை அமைப்பதற்கு புது முறை கண்டுபிடிக்கப்பட்டது. மெப்ஸ் என்ற கம்ப்யூட்டர் புரோகிராமைப் பயன்படுத்தி அது செய்யப்பட்டது. நாங்கள் நான்கு பேரும் கனடா பெத்தேலில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு வந்தபோது இருந்ததைவிட அப்போது தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறி இருந்தது. (ஏசா. 60:17) அந்தச் சமயத்தில் எங்கள் நான்கு பேருக்கும் கல்யாணம் ஆகி இருந்தது. யெகோவாவுக்குச் சுறுசுறுப்பாக ஊழியம் செய்துகொண்டிருந்த பயனியர் சகோதரிகளை நாங்கள் கல்யாணம் பண்ணிக்கொண்டோம். பில்லும் நானும் பெத்தேலில் சேவை செய்துகொண்டிருந்தோம். கென்னும் டென்னிஸும் பெத்தேலுக்குப் பக்கத்தில் குடியிருந்தார்கள். அவர்களுக்குக் குழந்தைகளும் பிறந்தன.
கிளை அலுவலகத்தில் நடந்துவந்த வேலைகள் அதிகமாகிக்கொண்டே போனது. நிறைய மொழிகளில் பிரசுரங்களை மொழிபெயர்த்து அதை அச்சடித்தோம். மற்ற கிளை அலுவலகங்களுக்குத் தேவையான பிரசுரங்களையும் அச்சடித்து அனுப்பி வைத்தோம். இப்போது, பெத்தேலுக்கு ஒரு புது கட்டிடம் தேவைப்பட்டது. அதனால், ஜோஹெனஸ்பர்க்கின் மேற்குப் பகுதியில் ஒரு அழகான இடத்தில் ஒரு புது கட்டிடத்தைக் கட்டினோம், 1987-ல் அதை அர்ப்பணித்தோம். இந்த வளர்ச்சியைப் பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகக் குழுவிலும் நான் பல வருஷங்களாகச் சேவை செய்தேன்.
புதிய நியமிப்பு
2001-ல் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அமெரிக்க கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்வதற்கு எனக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. தென் ஆப்பிரிக்காவில் நடந்துகொண்டிருந்த வேலைகளையும் நண்பர்களையும் விட்டுவிட்டு போவது கஷ்டமாக இருந்தாலும், அமெரிக்க பெத்தேல் குடும்பத்தில் எங்களுடைய புது வாழ்க்கையை ஆரம்பிப்பதை நினைத்து நாங்கள் ரொம்ப சந்தோஷப்பட்டோம்.
ஆனாலும், லாராவின் அம்மாவுக்கு வயதாகிக்கொண்டே போனதால் அவர்களை யார் கவனித்துக்கொள்வது என்று நினைத்து கவலைப்பட்டோம். ஏனென்றால், நாங்கள் நியு யார்க்கில் இருந்துகொண்டு பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது. ஆனால், லாராவின் மூன்று தங்கச்சிகளும் அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்வதாகவும், அவர்களுடைய செலவுகளைக் கவனித்துக்கொள்வதாகவும் சொன்னார்கள். “எங்களாலதான் முழுநேர சேவை செய்ய முடியல. நீங்க சந்தோஷமா செய்யுங்க, அம்மாவ நாங்க பாத்துக்கறோம்” என்று சொன்னார்கள். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை.
லாராவின் தங்கச்சிகள் மாதிரிதான் என்னுடைய அண்ணனும் அண்ணியும். கனடாவில் இருக்கிற டொரன்டோவில் அவர்கள் இருந்தார்கள். அந்தச் சமயத்தில் என்னுடைய அப்பா உயிரோடு இல்லை. அம்மாவை கிட்டத்தட்ட 20 வருஷங்கள் அவர்கள் நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். நாங்கள் நியு யார்க்குக்குப் போன கொஞ்ச நாட்களிலேயே அம்மா இறந்துவிட்டார். அவர் இறக்கும் வரைக்கும் அண்ணனும் அண்ணியும் அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். நாங்கள் முழுநேர சேவை செய்வதற்காக எங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்கள் சில மாற்றங்களைச் செய்தார்கள். சில சமயங்களில், அது அவர்களுக்குக் கஷ்டமாக இருந்தாலும் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். இது உண்மையிலேயே யெகோவாவிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதம்!
அமெரிக்க பெத்தேலில் கொஞ்ச வருஷங்களாக நான் அச்சக இலாகாவில் வேலை செய்தேன். இப்போதெல்லாம் நிறைய தொழில்நுட்பம் அதில் வந்துவிட்டது, வேலையும் எளிமை ஆகிவிட்டது. சமீப வருஷத்தில் நான் பர்ச்சேஸிங் டிபார்ட்மென்ட்டில் இருக்கிறேன். அமெரிக்க பெத்தேல் குடும்பத்தில் கிட்டத்தட்ட 5,000 பேர் இருக்கிறார்கள். 2,000 கம்யூட்டர்களும் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய கிளை அலுவலகத்தில் கடந்த 20 வருஷங்களாக வேலை செய்வதை நினைத்து நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன்.
நான் இந்தளவுக்குச் சேவை செய்வேன் என்று 60 வருஷங்களுக்கு முன்பு கொஞ்சம்கூட நினைத்து பார்த்தது இல்லை. இவ்வளவு வருஷங்களாக லாரா எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறாள். எனக்கு உண்மையிலேயே ஓர் அருமையான வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்! நான் நிறைய நியமிப்புகளைச் செய்திருக்கிறேன். அருமையான சகோதர சகோதரிகளோடு சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நிறைய நாடுகளில் இருக்கிற கிளை அலுவலகங்களைப் போய் சந்திக்கும் நியமிப்பும் எனக்குக் கொடுத்தார்கள். இப்போது எனக்கு 80 வயதுக்குமேல் ஆகிவிட்டது. வேலைகளை கவனித்துக்கொள்ள திறமையான இளம் சகோதரர்கள் நிறைய பேர் இருப்பதால் இப்போது எனக்கு வேலைகளைக் குறைத்து கொடுத்திருக்கிறார்கள்.
“யெகோவாவைக் கடவுளாகக் கொண்ட தேசம் சந்தோஷமானது” என்று சங்கீதக்காரர் எழுதினார். (சங். 33:12) அது எவ்வளவு உண்மை! யெகோவாவைச் சந்தோஷமாக வணங்குகிற ஜனங்களோடு சேர்ந்து அவரை வணங்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன்.