உங்கள் அயலானுக்கு ஏன் அன்புகாட்டவேண்டும்?
நித்திய ஜீவ வாழ்க்கை, கடவுள்மீதும் அயலான்மீதும் நாம் காட்டும் அன்பைச் சார்ந்திருக்கிறது. ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் உரையாடலின்போது அந்தக் குறிப்பு சொல்லப்பட்டது.
மோசேயின் நியாயப்பிரமாணத்தை நன்கு அறிந்திருந்த ஒரு யூதர், இயேசு கிறிஸ்துவிடம் பின்வருமாறு கேட்டார்: ‘நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்?’ இயேசு மறுமொழியாக இவ்வாறு கேட்டார்: ‘நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன?’ நியாயப்பிரமாணத்தை மேற்கோள் காட்டி, அந்த மனிதன் சொன்னார்: “‘உன் கடவுளாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்புகூரவேண்டும்,’ மேலும் ‘உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல், உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக.’” இதற்கு “சரியாய் நீ பதில்சொன்னாய்,” என்று இயேசு சொன்னார். “‘அதையே தொடர்ந்து செய், அப்பொழுது ஜீவனைப் பெறுவாய்.’”—லூக்கா 10:25-28, NW.
அதற்கு இயேசுவிடம் கேள்வி எழுப்பியவர் கேட்டார்: “என் அயலான் யார்?” நேரடியாக விடையளிப்பதற்குப் பதிலாக, கொள்ளையடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டு குற்றுயிராய் விடப்பட்ட ஒரு யூத மனிதனைப் பற்றிய தெளிவுபடுத்தும் ஒரு கதையை இயேசு கூறினார். அவ்வழியாய் இரண்டு யூதர்கள் வந்தார்கள்—முதலாவது ஓர் ஆசாரியன், பின்பு ஒரு லேவியன். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சக யூதனின் நிலையைக் கண்டனர். ஆனால் அவனுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை. அடுத்ததாக, ஒரு சமாரியன் வந்தான். மனமிரங்கியவனாய், காயப்பட்ட யூதனின் காயங்களைக் கட்டி, அவனைச் சத்திரத்திற்கு கொண்டுபோய், அவனுக்குக் கூடுதலான பராமரிப்பிற்கும் ஏற்பாடு செய்தான்.
இயேசு தம்மிடம் கேள்விகேட்டவரை இவ்வாறு கேட்டார்: “கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அயலான் என்று உனக்குத் தோன்றுகிறது?” தெளிவாகவே, இரக்கம் காண்பித்த அந்தச் சமாரியன்தான். இதன்மூலம், உண்மையான அயலான் அன்பு, இன வேறுபாடுகளின் தடைகளை பொருட்படுத்துவதில்லை என்று இயேசு எடுத்துக் காண்பித்தார்.—லூக்கா 10:29-37, NW.
அயலான் அன்பில் குறைபாடு
இன்று வித்தியாசப்பட்ட இனப் பிரிவுகளின் மக்களுக்கிடையே விரோத மனப்பான்மை அதிகரித்து வருகிறது. உதாரணமாக, ஜெர்மனியிலுள்ள நாசிச கொள்கை ஆதரவாளர்கள், அண்மையில் ஒரு மனிதனைத் தரையின்மீது தூக்கி எறிந்து, தங்களுடைய தடியான பூட்ஸ்களால் அவனை மிதித்து, ஏறக்குறைய அவனுடைய எல்லா விலா எலும்புகளையும் முறித்துவிட்டனர். பின்பு அவர்கள் அதிக வெறிச் சத்துமிக்க மதுபானத்தை அவன்மேல் ஊற்றி முழுவதும் நனைத்து, அவனை தீக்கொளுத்தினர். மரிக்கும்படி விடப்பட்ட இந்த மனிதன் தாக்கப்பட்டதற்கு காரணம், அவன் யூதனாய் இருப்பானோ என்று சந்தேகிக்கப்பட்டான். ஒரு குறிப்பிடப்படாத சம்பவத்தில், ஹெம்பர்க்குக்கு அருகில் இருந்த ஒரு வீடு தீக் குண்டால் தாக்கப்பட்டதானது, துருக்கி நாட்டைச் சேர்ந்த மூன்று நபர்களை எரித்துக்கொன்றது—இவர்களில் ஒரு நபர் பத்து வயது பெண்.
இதே சமயத்தில், பால்கன்ஸ் மற்றும் தொலை கிழக்கிலும், இன வேறுபாட்டுப் போர்கள் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியது. மற்றவர்கள், வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வேறுபட்ட பின்னணிகளையுடைய மக்களுக்கு இடையே நடந்த மோதல்களில் கொல்லப்பட்டனர். மேலும் ஆப்பிரிக்காவில் குலங்களுக்கிடையேயும் இனங்களுக்கிடையேயும் போராட்டங்கள் இன்னும் அநேகரின் உயிரைச் சூறையாடியது.
இப்படிப்பட்ட வன்முறைகளைக் கண்டு அநேக மக்கள் திகைப்படைந்திருக்கின்றனர்; தங்களுடைய அயலாரைத் தொந்தரவுசெய்யும் எந்தக் காரியத்தையும் அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். ஜெர்மனியில் நடந்த பெரிய ஆர்ப்பாட்டங்கள் இன வேறுபாட்டு வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. ஆனாலும், தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது: “உலகின் ஏறக்குறைய அனைத்து கலாச்சாரங்களின் அங்கத்தினர்களும் தங்களுடைய சொந்த வாழ்க்கை வழியே, மிக நெருங்கிய தொடர்புடைய அயலாரைவிட மேலானது என்று கருதுகிறார்கள்.” இப்படிப்பட்ட கருத்துகள் அயலார் அன்பிற்கு தடையாய் இருக்கின்றன. விசேஷமாக ஜீவன் கடவுள்மீதும் அயலான்மீதும் உள்ள அன்பைச் சார்ந்திருக்கிறது என்று இயேசு சொன்னதினால், இதைப்பற்றி ஏதாவது செய்யப்பட முடியுமா?