காத்திருக்க கற்றுக்கொள்வதன் பிரச்னை
நாம் விரும்பும் காரியங்களுக்காகக் காத்திருக்க கற்றுக்கொள்வது, மனிதர்களாக நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ளவேண்டிய கடினமான பாடங்களில் ஒன்றாக இருக்கக்கூடும். சிறு பிள்ளைகள் இயற்கையாகவே பொறுமையற்று இருப்பார்கள். அவர்கள் தங்கள் கண்களுக்குத் தென்படும் அனைத்தையும் அடைய அடம்பிடிப்பர். இப்பொழுதே வேண்டும் என்பர்! ஆனால் அனுபவத்திலிருந்து நீங்கள் அறிந்திருக்கிற பிரகாரம், எல்லாமே வற்புறுத்திக் கேட்கப்படுவதால் அடையப்பட முடியாது என்பது வாழ்வின் உண்மை நிலையாக இருக்கிறது. சரியான ஆசைகளைத் திருப்திப்படுத்தவும்கூட சரியான சமயம் வரும்வரைக் காத்திருக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். இதை அநேகர் கற்றுக்கொள்கின்றனர்; மற்றவர்கள் ஒருபோதும் கற்றுக்கொள்வதில்லை.
தெய்வீக அங்கீகாரத்தைப் பெற விரும்பும் மக்களுக்கு, காத்திருக்க கற்றுக்கொள்வதற்கு விசேஷித்த காரணங்கள் இருக்கின்றன. கிறிஸ்தவத்துக்கு முந்தி வாழ்ந்த, யெகோவாவின் ஊழியக்காரர் எரேமியா இதை வலியுறுத்திக் கூறினார்: “யெகோவாவின் இரட்சிப்புக்கு அமைதியாய்க் காத்திருத்தல் நல்லது.” பின்பு கிறிஸ்தவச் சீஷனாகிய யாக்கோபு சொன்னார்: “இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள்.”—புலம்பல் 3:26, NW; யாக்கோபு 5:7.
யெகோவா, தெய்வீக நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு, தமக்குச் சொந்தமான கால அட்டவணையை வைத்திருக்கிறார். சில காரியங்களைச் செய்வதற்கு அவருடைய ஏற்ற காலம் வரும்வரை நாம் காத்திருக்க முடியவில்லையென்றால், நாம் திருப்தியற்றவர்களாகவும் மன அமைதியற்றவர்களாகவும் ஆகிவிடுவோம்; இது சந்தோஷத்தைக் கெடுத்துவிடும். சந்தோஷமில்லாமல், கடவுளின் ஊழியன் ஆவிக்குரிய வகையில் பலவீனமடைந்துபோவான்; இது நெகேமியா தன்னுடைய தேசத்தாரிடம் சொன்னதுபோல் இருக்கும்: “கர்த்தருக்குள் மகிழ்வதே உங்கள் பெலன்.”—நெகேமியா 8:10, தி நியூ இங்கிலிஷ் பைபிள்.
காத்திருக்க கற்றுக்கொள்வதன் ஞானம்
விவாகமாகாதவர்கள் விவாகம்செய்ய விரும்புவதும், குழந்தைகளற்ற தம்பதிகள் குழந்தைகளைக் கொண்டிருக்க விரும்புவதும் இயற்கையானதே. மேலும், தகுந்த பொருளாதார தேவைகளை அல்லது ஆசைகளைத் திருப்திப்படுத்த ஆசைப்படுவதில் எந்தவித தவறும் இல்லை. ஆனாலும், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் நாள்கள் சீக்கிரத்தில் முடிவடைந்துவிடும் என்றும், வரப்போகிற புதிய ஒழுங்குமுறையில் கடவுள் ‘தம்முடைய கையைத் திறந்து, சகல பிராணிகளின் [உயிருள்ள ஒவ்வொன்றின், NW] வாஞ்சையையும் திருப்தியாக்குவார்’ என்றும் நம்புவதினால், பல கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட ஆசைகளில் சிலவற்றை இன்னும் அதிகப் பொருத்தமான காலத்திலே நிறைவேற்றும்படி காத்திருக்க தீர்மானித்திருக்கின்றனர்.—சங்கீதம் 145:16.
எனினும், இப்படிப்பட்ட நல்ல-அஸ்திவாரமுள்ள கிறிஸ்தவ நம்பிக்கையை உடையவர்களாக இல்லாத மக்கள், தள்ளிப்போடுவதற்கு சிறிதளவே காரணத்தைக் காண்பர். “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்” கொடுக்கிறவராகிய யெகோவாவின்மீது தங்களுடைய விசுவாசத்தை இழந்து, அவர்கள் எதிர்காலத்திற்கு காலம் தாழ்த்தும் ஞானத்தைக் கேள்வியிட்டு, அப்படியொன்று வருமா என்பதையே சந்தேகிக்கிறார்கள். அவர்கள் இந்தக் கொள்கையின்படி வாழ்கின்றனர்: “புசிப்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்.”—யாக்கோபு 1:17; 1 கொரிந்தியர் 15:32; ஏசாயா 22:13.
முன்னேற்றமடைந்துள்ள தேசங்களில் விளம்பர தொழில் உடனே திருப்தியைத் தேடும் தெளிவான மனப்போக்கை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. மக்கள் தங்களைத்தாங்களே திருப்திப்படுத்தும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். நவீனகால ஆடம்பரங்களும் வசதிகளும் தவிர்க்க முடியாத தேவைகள் என வர்த்தகம் நம்மை நம்பச்செய்திருக்கிறது. விசேஷமாக பற்று அட்டைகள் (கிரெடிட் கார்டுகள்), தவணை திட்டங்கள், மேலும் “இன்று வாங்கி—நாளை பணம்கொடு” திட்டங்கள் ஆகியவை, விரும்பிய எல்லாவற்றையும் இப்பொழுதேயும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைக் கொடுக்கும்போது, அது இல்லாமலா என்று வாதாடுவது சரியா? அதற்கும் மேலாக, ‘மிகச் சிறந்தது உங்களுக்கே; உங்களிடம் தயவாக நடந்துகொள்ளுங்கள்! இப்போதே அனுபவியுங்கள், அல்லது எப்போதும் ஒருவேளை அனுபவிக்க மாட்டீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்!’ என்று பிரபலமான விளம்பர வாசகங்கள் உரிமைபாராட்டுகின்றன.
இதற்கிடையில், வளர்ந்து வரும் நாடுகளில் அடிப்படை தேவைகளுக்கு—அல்லது அதுவும்கூட இல்லாமல்—கோடிக்கணக்கான மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். மனித அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளின் அபூரணத்தையும் அநீதியையும் இதைவிட வேறு எதுவும் அதிக தத்ரூபமாகச் சித்தரித்துக் காட்டமுடியுமா?
காத்திருக்க விரும்பாமல் அல்லது குறைந்தபட்சம் அவ்விதமாகச் செய்வதற்கு எந்த காரணத்தையும் காணாமல், உடனடியான ஆசைகளைத் திருப்திசெய்துகொள்ள பெருங்கடனுக்குட்பட்டிருக்கும் லட்சக்கணக்கானோரைக் காண்கையில் காத்திருக்க கற்றுக்கொள்வதன் ஞானத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. வியாதி அல்லது வேலையில்லாமை போன்ற எதிர்பாராத சூழ்நிலைகள் கடுந்துன்பத்தை அர்த்தப்படுத்தலாம். பிராங்ஃபர்ட்டர் ஆல்ஜிமைனா ஸைட்டங் என்ற ஜெர்மன் செய்தித்தாள், ஜெர்மனியிலுள்ள அறிக்கைசெய்யப்பட்ட 10 லட்சம் பேர் ஏன் வீடில்லாமல் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி விளக்கியது: “சான்றுகள் காண்பிப்பதுபோலவே, வீடில்லாமை பெரும்பாலும் வேலையில்லாமை அல்லது அளவுக்கதிகமான கடன்களினால் விளைவடைகிறது.”
தங்கள் செலவுகளைச் சமாளிக்க முடியாதவர்களாக, இப்படிப்பட்ட பல துர்பாக்கியவாதிகள், வீட்டையும் ஆஸ்திகளையும் இழந்துவிடும் அவல நிலையில் துயரப்படுகின்றனர். பெரும்பாலும் அதிகரிக்கப்பட்ட மன அழுத்தம் குடும்பப் பிரச்னைகளைக் கொண்டுவருகிறது. உறுதியற்ற திருமணங்கள் சிதைந்துவிட ஆரம்பிக்கின்றன. மன இறுக்க காலங்களும் மற்ற உடல்நலப் பிரச்னைகளும் சர்வசாதாரணமாகி விடுகின்றன. கிறிஸ்தவர்களின் விஷயத்தில், ஆவிக்குரிய தன்மை பாதிக்கப்படலாம்; தவறான சிந்தனைக்கும் நேர்மையற்ற நடத்தைக்கும் வழிநடத்தலாம். ஞானமற்ற முறையில் அனைத்தையும் பெற விரும்பி முயற்சிசெய்த மக்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் இழந்தநிலையில் இருக்கிறார்கள்.
பலருக்கு, ஒரு புதிய சவால்
‘உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப் போடாதபடி’ நாம் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும் என்று இயேசு தெளிவாகச் சொன்னார். (மாற்கு 4:19) எந்த அரசியல் அமைப்பும் கவலைகளை, இயேசு பேசின பொருளாதார கவலைகள் உட்பட எதையும் நீக்கவில்லை என்பதை நாம் மனதில் வைக்கவேண்டும்.
கிழக்கு ஐரோப்பிய தேசங்கள் இப்பொழுது நிராகரித்துவிட்டிருக்கும் கம்யூனிஸம், அரசு-கட்டுப்படுத்தும் பொருளாதார அமைப்பு முறைமூலம் பொதுவுடைமையை அமலுக்குக் கொண்டுவர முயற்சிசெய்தது; சுதந்திர அமைப்பு முறைக்கு முரண்பாடாக, முதலாளித்துவம் பெரும்பாலும் கொடுக்க முடியாத ஒருவித பொருளாதார பாதுகாப்புணர்வைக் கம்யூனிஸ்டு ஆட்சியின் கீழிருந்த பொருளாதார அமைப்பு முறை அந்தத் தேசத்திலிருந்த தனிப்பட்டவர்களுக்குக் கொடுத்தது. ஆனாலும், இயேசு பேசிய கவலைகள், நுகர்வோர் பொருள்கள் பற்றாக் குறைவு, மற்றும் தனிப்பட்ட சுதந்திரக் குறைவு வடிவில் இருந்தன.
இப்போது, அந்தத் தேசங்களில் பல மார்க்கெட் பொருளாதார முறைகளை அறிமுகப்படுத்திவருகின்றன, இதன்மூலமாகத் தங்களுடைய குடிமக்களுக்கு ஒரு புதிய சவாலைக் கொடுத்திருக்கின்றன. சமீப கால அறிக்கை ஒன்று சொல்கிறது: “எளிமைப்படுத்துதல், பயன்படுத்தி தீர்த்தலில் மேற்கத்திய தராதரத்தை விரைவில் பெறும் ஆசையுடன் செயல்படுகிறது.” இதை அடைவதற்காக, “கிழக்கு ஜெர்மனியிலுள்ள புதிய லென்டேரில் (Länder) எண்ணிக்கையில் அதிகமாகும் மக்கள் கடன் நீர்ச்சுழலில் இழுத்துச்செல்லப்படுகின்றனர்.” அந்த அறிக்கை மேலுமாகச் சொல்கிறது: “புதிய பொருளாதார சுதந்திரங்களைப் பற்றி ஆரம்பத்தில் இருந்த நல்ல நம்பிக்கைக்குப் பின்பு இப்போது பயமும் நம்பிக்கை இழப்பும் பரவுகின்றன.” இப்போது கம்யூனிஸத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு அமைப்புமுறை மாற்றப்பட்டிருந்தாலும் கவலைகள் தொடர்ந்து இருக்கின்றன.
கூடுதலான அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரம், பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறந்து வைத்திருக்கின்றன. எனவே, பலர் தங்களுக்கே சொந்தமான ஒரு வர்த்தகத்தை ஆரம்பிக்கும் எண்ணத்தில் மும்முரமாக ஈடுபட நினைப்பதற்கு அல்லது வேலை வாய்ப்பு அதிகம் இருக்கும் வேறொரு நாட்டிற்குச் செல்வதற்கு தூண்டப்படக்கூடும்.
இப்படிப்பட்ட தீர்மானங்கள் அவரவருடைய சொந்த விஷயங்கள். ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையை அபிவிருத்தி செய்வதற்காக விரும்புவது தவறல்ல. “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்,” என்பதை அவர் மனதில்கொண்டு, தன்னுடைய குடும்பத்தைப் பராமரிக்கவேண்டும் என்ற எண்ணத்தினால் உந்துவிக்கப்பட்டிருக்கலாம்.—1 தீமோத்தேயு 5:8.
எனவே, மற்றவர்கள் செய்யும் தீர்மானங்களைக் குறைகூறுவது பொருத்தமற்றது. அதே சமயத்தில், கிறிஸ்தவர்கள் தங்களைக் கண்ணியில் அகப்படச்செய்யும் அதிகமான கடனை வாங்குவதன்மூலம் பொருளாதார பிரச்னைகளிலிருந்து விடுதலையைப் பெற தேடுவது ஞானமற்றது என்பதை நினைவில் வைக்கவேண்டும். இதைப்போலவே, ஆவிக்குரிய கடமைகளையும் அக்கறைகளையும் புறக்கணித்துவிடுவதை உட்படுத்தும் வகையில் பொருளாதார விடுதலையை நாடுவது தவறாகும்.
மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்தல்
இரண்டாம் உலக யுத்தத்தைப் பின்தொடர்ந்த வருஷங்களில், ஆயிரக்கணக்கான ஜெர்மானியர்கள் யுத்தத்தினால் சின்னாபின்னமாயிருந்த ஐரோப்பாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு, முக்கியமாக ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று குடியேறினர். இதனால் பலர் தங்களுடைய பொருளாதார நிலையை அபிவிருத்திசெய்ய முடிந்தது, ஆனால் யாருமே இயேசு பேசின பொருளாதார கவலைகளிலிருந்து விடுபடமுடியவில்லை. பொருளாதார பிரச்னைகளைத் தீர்க்க முயற்சிசெய்தது சில சமயங்களில் புதிய பிரச்னைகள்—தாயக ஏக்கம், ஒரு புதுவிதமான மொழி, புதிய உணவு வகைகளுக்குப் பழக்கப்படுதல், வேறுபட்ட பழக்கவழக்கங்கள், புதிய நண்பர்களோடு சகித்துபோதல், அல்லது வித்தியாசமான மனநிலைகளைச் சமாளித்தல்—ஆகியவற்றை உருவாக்கியது.
இப்படிக் குடியேறினவர்களில் சிலர் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தனர். போற்றத்தக்கவிதத்தில், அவர்களில் பலர் குடியேறுதலின் விசேஷித்த பிரச்னைகள் தங்களுடைய ஆவிக்குரிய தன்மையை நெருக்கிப்போட அனுமதிப்பதற்கு மறுத்தனர். ஆனால் விதிவிலக்குகள் இருந்தன. சிலர் ஐசுவரியத்தின் வசீகரச் சக்திக்குப் பலியானார்கள். அவர்களுடைய தேவராஜ்யத்திற்குரிய வளர்ச்சி அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தோடு சேர்ந்து செயல்பட தவறியது.
நிச்சயமாகவே இது, ஒருவேளை ஞானமற்றதைப் போல் இருக்கும் தீர்மானங்களை எடுப்பதற்கு முன் நம்முடைய நிலையை ஜாக்கிரதையாய் ஆராய்ந்து பார்க்கும் ஞானத்தை தெளிவுபடுத்திக் காண்பிக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள என்றுமே-திரும்பச்செய்யப்படாத சீஷராக்கும் வேலையிலுள்ள நம்முடைய உற்சாகத்தை, பொருள் சார்ந்த மனச்சாய்வுகள் குறைத்துவிடும். நாம் எங்கு வாழ்ந்தாலும் இது பொருந்தும்; ஏனென்றால் பொருளாதார கவலைகள் இல்லாத குடிமக்களை உடைய நாடு எதுவுமே இல்லை.
நல்ல போராட்டத்தைப் போராடுதல்
பவுல் தீமோத்தேயுவுக்கு இவ்வாறு எச்சரித்தார்: “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்.” கொரிந்து கிறிஸ்தவர்களுக்கு அவர் சொன்னார்: “உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாகவும் இருப்பீர்களாக.”—1 தீமோத்தேயு 6:11, 12; 1 கொரிந்தியர் 15:58.
இந்த நல்ல புத்திமதியைப் பின்பற்றுவது, பொருளாசையை வெற்றிகரமாக எதிர்ப்பதற்கு சிறந்த வழியாகும். மேலும் ஒரு கிறிஸ்தவன் செய்யவேண்டிய காரியங்கள் நிச்சயமாகவே அநேகம் இருக்கின்றன! இராஜ்ய பிரசங்கிகள் அதிகமாக இல்லாத சில தேசங்களில், திரளான மக்கள் வெறும் சிறிதளவே சத்தியத்தை அறியும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். இயேசு மிகச் சரியாகவே முன்னுரைத்திருந்தார்: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்.”—மத்தேயு 9:37.
இந்தத் தேசங்களிலுள்ள பொருளாதார கவலைகள் செய்யவேண்டிய ஆவிக்குரிய வேலையிலிருந்து தங்களை திசைத்திருப்பிவிட அனுமதிப்பதற்கு பதிலாக, யெகோவாவின் சாட்சிகள் தற்போது இருக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்துவதன்மூலம் சூழ்நிலையை நன்கு பிரயோஜனப்படுத்திக் கொள்கின்றனர். தற்காலிகமாக வேலையற்று இருக்கும்போது, அவர்களில் பலர் தங்களுடைய பிரசங்க வேலையை விரிவாக்குகின்றனர். யெகோவாவைத் துதிக்கும் கெம்பீர சத்தத்தை அதிகரிப்பதோடு அவர்களுடைய ஊழியம், அவர்களுக்கே உரிய பொருளாதார பிரச்னைகளைச் சமாளிப்பதற்கு தேவையான மகிழ்ச்சியை அவர்களுக்குத் தருகிறது.
இந்தச் சாட்சிகள் பிரசங்க வேலைக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். பொருளாதார கஷ்டங்களை இரண்டாம் இடத்திற்கு ஒதுக்கி வைத்துவிடுகின்றனர். இந்த நடவடிக்கை, அவர்கள் தங்களைக் கவனித்துக்கொள்வதற்கு முழுக்கமுழுக்க யெகோவாவையே நம்பியிருக்கின்றனர் என்பதைச் சர்வலோக சகோதரத்துவத்துக்குக் காண்பிக்கிறது. அவருடைய வாக்குறுதியாக இது இருக்கிறது: “முதலாவது ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடிக்கொண்டே இருங்கள், மற்றவை உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:33, NW.
உண்மை வணக்கம் 1919-ல் மீண்டும் நிலைநாட்டப்பட்டதிலிருந்து யெகோவா தம்முடைய மக்கள் திக்குமுக்காடும்படி அனுமதிக்கவில்லை. கடுமையான துன்புறுத்தல்களின் மத்தியிலும், சில இடங்களில் பல பத்தாண்டுகளாக இரகசியமாக செய்யப்பட்டுவரும் பிரசங்கவேலையிலும் அவர்களைப் பாதுகாத்துவந்திருக்கிறார். சாத்தான் துன்புறுத்துதலினால் அடையத் தவறியதை அதிகச் சூழ்ச்சியான பொருளாசையின்மூலம் அடைய முடியாது என்று யெகோவாவின் சாட்சிகள் திடதீர்மானத்தோடு இருக்கின்றனர்!
ஒவ்வொரு அம்சத்திலும் காத்திருக்க கற்றுக்கொள்வது
பெரிய ராஜ்ய மன்றங்கள், அதிக விலையுயர்ந்த ஒலிக் கருவிகள், அசெம்பிளி மன்றங்கள், கண்ணைக் கவரும் பெத்தேல் வீடுகள் ஆகியவை கடவுளுக்கு மகிமையைத் தருகின்றன. மேலும் அவை அவர் தம்முடைய மக்களை ஆசீர்வதிக்கிறார் என்று மெளன சாட்சி கொடுக்கின்றன. இந்த விஷயத்தில் மற்ற நாடுகளைப் போல ஆவதற்கு ஒரு பெரிய வேலை செய்யப்படவேண்டும் என்று பிரசங்க வேலை நீண்ட நாள்களாகத் தடைசெய்யப்பட்டிருந்த நாடுகளில் வாழும் யெகோவாவின் சாட்சிகள் ஒருவேளை நினைக்கலாம். ஆனால் முக்கியமானது என்னவென்றால், அவர்கள் ஆவிக்குரிய வளர்ச்சியை அடைவதாகும். பொருள் சம்பந்தமான முறையில் கடவுளுடைய ஆசீர்வாதத்தின் வெளிப்புற தோற்றங்கள் தகுந்த நேரத்தில் பின்தொடரும்.
யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்கள் சொந்த நாட்டங்களைக் குறித்து மிகக் கவனமாயிருக்கவேண்டும்; இனிமேலும் ஒருவித பொருள் சம்பந்தமான விஷயங்களில் இழப்பை அவர்கள் விரும்புவதில்லை. பொருளாதார மற்றும் சமூக உயர்வுதாழ்வுகளிலிருந்து விடுபட ஏங்குவது புரிந்துகொள்ளப்படத்தக்கதே. ஆனால் கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் விடுபடுவதற்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யெகோவாவின் மக்கள் அறிந்திருக்கிறார்கள். குருடர்கள் பார்க்க ஏங்குகிறார்கள், நாள்பட்ட நோயாளிகள் உடல் ஆரோக்கியத்துக்கு ஏங்குகிறார்கள், மனச் சோர்வடைந்தவர்கள் மன மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கு ஏங்குகிறார்கள், பறிகொடுத்தவர்கள் மரணத்தில் இழந்த தம்முடைய அன்பானவர்களுக்காக ஏங்குகிறார்கள்.
சூழ்நிலையின் காரணமாக, ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஏதோவொரு வகையில் அவருடைய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு யெகோவாவின் புதிய உலகத்திற்காகக் காத்திருக்கும்படி வற்புறுத்தப்படுகிறார். இது நம்மை நாமே இவ்வாறு கேட்கச்செய்யும்படி தூண்டவேண்டும், ‘எனக்கு வாழ்க்கைத் தேவைகளும் உடையும் இருந்தால், அவற்றால் நான் போதுமென்கிற மனதுடனே இருக்கவேண்டுமல்லவா, மேலும் பொருளாதார பிரச்னைகளுக்குப் பரிகாரம் வரும் வரை காத்திருக்க மனமுள்ளவனாக இருக்கவேண்டுமல்லவா?’—1 தீமோத்தேயு 6:8.
யெகோவாவில் முழு நம்பிக்கையாய் இருக்கும் கிறிஸ்தவர்கள் வெறுமனே காத்திருக்க விருப்பமுள்ளவர்களாக இருந்தார்கள் என்றால் அவர்களுடைய எல்லா சரியான விருப்பங்களும் தேவைகளும் சீக்கிரத்தில் திருப்திப்படுத்தப்படும் என்று உறுதியளிக்கப்படலாம். எவருமே வீணாகக் காத்திருந்திருக்கப்போவதில்லை. நாங்கள் பவுலின் வார்த்தைகளைத் திரும்பச்சொல்கிறோம்: “கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.”—1 கொரிந்தியர் 15:58.
எனவே, காத்திருக்க கற்றுக்கொள்வது உண்மையில் அவ்வளவு பெரிய பிரச்னையாக இருக்கவேண்டுமாயென்ன?
[பக்கம் 10-ன் படம்]
காத்திருக்க கற்றுக்கொள்வது உங்களுடைய உயிரைப் பாதுகாக்கலாம்